பக்கங்கள்

ஞாயிறு, 3 ஜூலை, 2016

தை முதல் நாளே தமிழாண்டு

தை முதல் நாளே தமிழாண்டுத் தொடக்கம் எனும் கருத்துக்கு ஒப்புரவளிக்கும் வள்ளலார்


தை முதல் நாளே தமிழாண்டுத் தொடக்கம் எனும் கருத்துக்கு ஒப்புரவளிக்கும் வள்ளலார்
ஓர் ஆண்டினை வடபுலம், தென்புலம் என இரண்டு மண்டலங் களாகப் பிரித்துள்ளனர்.
வடபுலம் (உத்தாரயணம்) - தை முதல் ஆறு மாதங்கள் பகற் பொழுது அதிகம்.
தென்புலம் (தட்சிணாயணம் -  ஆடி முதல் ஆறு மாதங்கள் இராப் பொழுது அதிகம்.
இதனை ஒளிப்பக்கம், இருட்பக்கம் என்பர். ஒளி -_ அறிவுடைமை, ஞானம்; இருள் _ அறியாமை, அஞ்ஞானம் -ஒளி _ சுவர்க்கம்; இருள் _ நரகம்.
இருளினின்றும் நாம் ஒளிக்குச் செல்ல வேண்டும். அஞ்ஞானத் தினின்றும் ஞானத்திற்குச் செல்ல வேண்டும். அஞ்ஞானம் நீங்கி ஞானம் உதிக்க வேண்டும். அறியாமை அகன்று அறிவுடைமை வரவேண்டும். எனவே, அறிவுடைமைக்குச் சான்றாக விளங்கும் ஒளிப்பக்கத் தொடக்க நாள், தை மாதத் தொடக்க நாளே!
இதனை வலியுறுத்தியவர் வள்ளலார். புரட்சித் துறவி வள்ளலார் எனும் நூலில் இக்கருத்து விளக்கப்பட்டுள்ளது.

தை முதல் நாளே தமிழாண்டுத் தொடக்கம் உலகப் பரிந்துரை மாநாடு, கோலாலம்பூர்




இலக்கியத்தில் - தை மாதத்தின் சிறப்பு


பொங்கல் விழா நாளையே தமிழர்கள் புத்தாண்டுத் தொடக்கமாகப் பல்லாண்டுக் காலமாகக் கொண்டாடி வந்துள்ளனர் என்பதற்கு ஈராயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட கழக இலக்கியங்களில் சான்றுகள் உள.
தைஇத் திங்கள் தண்கயம் படியும் -_ நற்றிணை
தைஇத் திங்கள் தண்ணிய தரினும் _- குறுந்தொகை
தைஇத் திங்கள் தண்கயம் போல் _ புறநானூறு
தைஇத் திங்கள் தண்கயம் போல _ ஐங்குறுநூறு
தையல் நீராடி தவம் தலைப்படுவாயோ _ கலித்தொகை
தமிழ்ப் புத்தாண்டைப் பற்றிய குறிப்புகள் _ மு. மணிவெள்ளையன்
தீய்ந்த தீபாவளி வந்தாலென்ன? காய்ந்த கார்த்திகை வந்தாலென்ன? மகராசன் பொங்கல்  வரவேண்டும் என்பது நாட்டுப் புற நடைமுறை மொழி வழக்கு.
பண்டைத் தமிழர் பொங்கல் விழா கொண்டாடும் வெற்றியைப் பற்றிப் புறநானூற்றிலே ஒரு பாடல் உண்டு. தொன்மையுடைய பொங்கலைப் பற்றிக் கருவூர் கந்தப்பிள்ளை சாத்தனார் என்ற புலவர் பாடியுள்ளார். பாடல் 168.
தைப் பிறந்தால் வழி பிறக்கும் தை மழை; நெய் மழை -_ என்பன போன்ற பழமொழிகள் தமிழர் புத்தாண்டு வரவேற்பை உறுதிப் படுத்துவனவாகும்.

- கலைஞர் கடிதம்
சித்திரையல்ல தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் - தை முதல் நாளே தமிழ்ப் புத் தாண்டின் தொடக்கம் என்று தந்தை பெரியார் மற்றும் தமிழ்க் கடல் மறைமலை அடிகளார் உள்ளிட்ட புலவர் பெரும் மக்களின் உணர்வை ஆரியம் மதிக்குமா? மிதிக்குமா என்று கலைஞர் அவர்கள் முரசொலியில் இன்று (9.4.2012) எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அக்கடிதம் வருமாறு:
உடன்பிறப்பே,
நான் நேற்றையதினம் எழுதிய  கடிதத்தில்,  மறைமலை அடிகளார் தலைமையில்  தமிழ்ப் புலவர்கள் 500 பேர் கூடி முடிவெடுத்த தைத் திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு  என்பதை ஏற்க மறுத்து ஆரியமாயைக்கு கைலாகு கொடுத்து விட்டார் ஜெயலலிதா!  - விரைவில் வருகின்ற சித்திரை முதல் நாளை சிறப்பாகக் கொண்டாட வேண்டுமென்று அரசிடமிருந்து வாய்மொழி ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறதாம் என்று எழுதியிருந்தேன். ஆனால் நேற்று மாலையிலேயே  ஏடு களில் வந்த செய்தி,  வாய்மொழி ஆணையாக அல்ல, அதிகாரப்பூர்வமாக வெளிவந்துள்ள செய்தி,  சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு தினமாகும்  என்றும் அந்த நாளை மிகமிகக் கோலாகலமாக விமரிசையாகக் கொண்டாட வேண்டுமென்றும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என்றும்;  தமிழ் வளர்ச்சித் துறை சார்பில்  ஏப்ரல் 13ஆம் தேதியன்று இதற்காக நடத்தப்போகும் விழாவில் முதல் அமைச்சரே பங்கேற்று விருதுகளை வழங்கப் போகிறார் என்றும் சொல்லப்பட்டுள்ளன.
தி.மு.க.வின் முக்கிய திட்டங்களுக்கு முற்றுப் புள்ளியா?
நான் நேற்றையதினம் எழுதியிருந்ததைப் போல கடந்த மே திங்களில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றுப் பொறுப்புக்கு வந்தது முதல், அதுவே நிரந்தர மான  வெற்றி - இனி தோல்வி என்பதே இல்லை என்ற இறுமாப்பில்;  தி.மு.கழக ஆட்சியில் நடைபெற்ற முக்கியத் திட்டங்களுக் கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதை தமிழ் நாட்டு மக்கள் நன்கறிவார்கள்.    23-1-2008 அன்று தமிழகச் சட்டப் பேரவையில்  மேதகு ஆளுநர் அவர்கள் தனது உரையிலே செய்த அறிவிப்பில், பெரும்புலவரும், தனித்தமிழ் இயக்கத் தைத் தோற்றுவித்தவருமான மறைமலை அடிகளார் தலைமையில்  அய்நூறுக்கும் மேற்பட்ட  புலவர் பெரு மக்கள்,  1921ஆம் ஆண்டு  சென்னை, பச்சை யப்பன் கல்லுரியில் ஒன்றுகூடி,  தமிழர்களுக்கென்று ஒரு தனி ஆண்டு  தேவை என்று கருதி, அய்யன் திருவள்ளுவர் பெயரில்  தொடர் ஆண்டு ஒன்றி னைப் பின்பற்றுவதென்றும்,  அதையே தமிழ் ஆண்டு  எனக் கொள்வதென்றும்,  திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கி.மு.31 என்றும் முடிவெடுத்தார்கள்.  அந்தக் கருத்தினை, 37 ஆண்டுகளுக்கு முன்பே,  மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ஏற்றுக் கொண்டு,  1971ஆம் ஆண்டு முதல்  தமிழ் நாடு அரசு நாட்குறிப்பிலும்,  1972ஆம் ஆண்டு முதல்  தமிழ்நாடு அரசிதழிலும்  நடைமுறைப்படுத்திட ஆணை பிறப்பித்தார்.   திருவள்ளுவர் ஆண்டு  பிறக்கும் தைத் திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்பது, ஒட்டுமொத்த மாக  எல்லாத் தமிழ் அறிஞர்களும்  ஒப்புக் கொண் டுள்ள உண்மை என்பதால்;  தைத் திங்கள்  முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம்  என அறிவித்து நடைமுறைப்படுத்திட  இந்த அரசு முடிவு செய்துள்ளது. எனவே, பொங்கல் திருநாளைத் தமிழர் திருநாளாகக் கொண்டாடி வரும் தமிழ் நாட்டு மக்கள்;  இனி -  தமிழ்ப் புத்தாண்டு பிறந்த நாளாகவும் இணைத்து இந்நாளை இரட்டிப்பு  மகிழ்ச்சியுடன்  கொண்டாடும் வகையில்,  வாழை, மா, பலா என முக்கனித் தருக்களை நாட்டி; வண்ண வண்ணக் கோலங்களிட்டு; வரிசை விளக்குகளால் ஒளியுமிழ் இல்லங்கள் புது எழில் காட்டிட;  புத் தாடை புனைந்து  தமிழ்மானம், தன்மானம் போற் றிப் பாடியும், ஆடியும்;  சமத்துவ உணர்வு பரப் பியும்;  தமிழ்ப் புத்தாண்டு இதுவெனத் துள்ளும் மகிழ்ச்சியால் அன்பை அள்ளிப் பொழிவர் என பலத்த கைதட்டலுக்கிடையில் அறிவித்தார்.   தி.மு. கழக ஆட்சியில் செந்தமிழரெல்லாம் பெருமகிழ்ச் சியும், பெருமிதமும்  கொள்ளத்தக்க வகையில் செய்யப்பட்ட அறிவிப்பு இது என்ற ஒன்று போதாதா ஜெயலலிதாவுக்கு!   உடனே அதற்கு எதிர் நடவடிக்கையைத் தொடங்கி விட்டார்.
தமிழர்களின் முடிவு
மறைமலை அடிகள் தலைமையில்  தமிழ்த் தென்றல் திரு.வி. கல்யாணசுந்தரனார்,  தமிழ்க் காவலர்  கா. சுப்பிரமணியப்பிள்ளை,  சைவப் பெரி யார்  சச்சி தானந்தப் பிள்ளை,  நாவலர் ந.மு.  வெங் கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம்  உள் ளிட்ட அறிஞர்  பெருமக்கள் எல்லாம் கலந்து கொண்ட  அந்தக் கூட்டத்தில் அவர்கள் எடுத்த முடிவுகள் மூன்று :-
1.    திருவள்ளுவர் பெயரில்  தொடர் ஆண்டா கப் பின்பற்றுவது;
2.    அதனையே  தமிழாண்டு  எனக் கொண்டாடுவது;
3.    வழக்கத்தில்  திருவள்ளுவர் காலம் கி.மு. 31ஐக் கூட்டினால் திருவள்ளுவராண்டு வரும் என்பதனை மேற்கொள்வது  என்பனவாகும்.
தந்தை பெரியார் பங்கேற்ற மாநாட்டில்....
அதன் பிறகு 1939ஆம் ஆண்டு  திருச்சியில் அகில இந்தியத் தமிழர் மாநாடு  நாவலர் சோமசுந்தர பாரதியார்  தலைமையில் கூடியது.  அதில்,  தந்தை பெரியார், கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் உமா மகேசுவரனார்,  பேராசிரியர் கா.சுப்பிரமணியம், தெ.பொ. மீனாட்சிசுந்தரனார்,  திரு.வி.க., மறைமலை அடிகளார்,  பி.டி. இராஜன், ஆற்காடு ராமசாமி முதலியார்,  புரட்சிக் கவிஞர்  பாரதிதாசன்,  பட்டுக் கோட்டை அழகிரி உட்பட பலரும் பங்கேற்றனர். அந்த மாநாடும்  தை முதல் நாளே  தமிழ்ப் புத்தாண்டு என்றும்,  பொங்கல் திருநாளே  தமிழர் திருநாள் என்றும் கூறியது. திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர், இளவல் வீரமணி அவர்களோ  தைத் திங்கள் முதல் நாளே  தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்ற நமது நீண்ட நாள் கோரிக்கைக்கு  வெற்றி கிடைத்துள்ளது.
தமிழர் பண்பாட்டு வரலாற்றுத் திசையில்  புதியதோர் மறுமலர்ச்சி அத்தியாயம் இது.  பாராட்டுகிறோம், மகிழ்ச்சி அடைகிறோம்  என்று  குறிப்பிட்டிருந்தார்.
ஆளுநரின் அறிவிப்பு வெளிவந்த மறுநாளே  தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்கள் விடுத்த அறிக்கையில்  தொன்மைக் காலம் தொட்டே சமயம் சார்ந்தும், இயற்கை வாழ்வு சார்ந்தும், மண்ணும் மனிதர்களும் சார்ந்தும்,  விவசாய வாழ்வு சார்ந்தும்  தைத் திங்கள் முதல் திருநாளே  தமிழர் வாழ்வு சார்ந்த எழுச்சியும் மகிழ்ச் சியும் ஊட்டுகின்ற திருநாளாகும்.  மறைமலை அடிகளார்  போன்ற மூத்த தனிப்பெரும் தமிழ் அறி ஞர்கள்  தைத் திங்கள் முதல் நாளைத் தொடக் கமாய்க் கொண்டு அய்யன் திருவள்ளுவர் பெயரில்  தமிழ்ப் புத்தாண்டாய் அறிவித்ததை நடை முறைப் படுத்த உள்ள முத்தமிழறிஞர் முதல்வர் கலைஞர் அவர்களுக்கு நன்றி, பாராட்டுக்கள் என்று தெரிவித்திருந்தார்.
கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் விடுத்த அறிக்கையில், தைத்திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டின்  தொடக்க நாள் என்று ஆளுநர் உரையில் கலைஞர் அரசு அறிவித் திருப்பது கண்டு உணர்வுமிக்க  தமிழர்கள் கொண்டாடிக் கூத்தாடு கிறார்கள். எல்லா தேசிய இனங் களுக்கும் அழிக்க முடியாத சில அடை யாளங்கள் உண்டு.   தமிழர் களுக்கு  நில அடையாளம் இருக்கிறது;  இன அடை யாளம் இருக்கிறது;  ஆனால் கால அடையாளம் மட்டும்  குழப்பத்தில் இருந்தது.   அந்தக் குழப்ப இருள் உடைந்து விடிந்து இன்று வெளிச்சம் வந்திருக் கிறது.
அய்யன் திருவள்ளுவரை கருத்துல கத்தின் அளவுகோலாய்க் காட்டியது  திராவிட இயக்கம்.   இன்று காலத்தின்  அளவுகோலா கவும் திருவள்ளுவரைக் கருதச் செய்திருக் கிறது கலைஞர்  அரசு.  இது சரித்திரத்தைச் சரி செய்யும் சரித்திரமாகும்  என்று எழுதி யிருந்தார்.
மலேசியா நாட்டில்  தமிழர்கள் தற்போது தை முதல் நாளையே புத்தாண்டாகக் கொண்டாடி வருகிறார்கள். டாக்டர் மு.வரதராசனார் அவர்கள், முன் காலத்தில்  வருடப் பிறப்பு  சித்திரை முதல் நாளாக இருந்ததில்லை.  தை முதல் நாளைத்தான் வருடப் பிறப்பாகப் பெரியோர்கள்  கொண்டாடி னார்கள்.   அந்த நாளில் புதிய ஆடைகளை வாங்கி உடுப்பார்கள்.  தெருவில் புது மண் போட்டு, செம்மண் இட்டு, ஒழுங்கு செய் வார்கள்.  ஊரெல் லாம் திருவிழா நடத்துவார்கள்.   இப்படி நகரங் களில் புத்தாண்டு பிறப்பாகப் பொங்கல் கொண் டாடுகிறார்கள்  என்று விளக்கியுள்ளார்.
ஆதாரம் இல்லையா?
ஆனால் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா 23-8-2011 அன்று பேரவையில் கூறும்போது, தமிழ்ப் புத்தாண்டை தை மாதம் தொடங்க எந்த ஆதார மும் இல்லை. ஆனால் சித்திரையில் தொடங்குவ தற்கு பல ஆதாரங்கள் உள்ளன.  கருணாநிதி தன் சுய விளம்பரத்துக்காக, மக்கள் மனஉணர்வை புண் படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்ட சட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டது என்றார். கழக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட இந்த நல்ல முயற்சியில் நஞ்சைக் கலந்து நசுக்குவதைப்போல்,  தற்போது ஒரு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.   தமிழ்நாட்டுச் சரித்திரத்திலே  தமிழையே பகைத்துக் கொள்கிற  -  செம்மொழி என்றாலே வெறுக்கிற  -  ஒதுக்குகிற  - புறக்கணிக்கிற  பெரும் பிற்போக் குத் தனமான ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.   அந்தக் காலத்திலும் இப்படி  தமிழையே வெறுக் கின்ற புலவர்கள் ஓரிருவர் இருந்திருக் கிறார்கள்.  அதைப் பற்றி நான் அப்போதே ஒரு கதையின் மூலம் விளக்கியிருக்கிறேன்.
தமிழக அரசின் அறிவிப்பு வந்த அந்த நேரத்திலேயே  மிகச் சிறந்த  தமிழ்க் கல்வெட்டு  ஆய்வாளரும் அறிஞருமான   ஐராவதம் மகாதேவன் அவர்கள்,  இன்றைய  பஞ்சாங்கங்களை  வான நூல், பருவங்களின் சுழற்சி ஆகிய வற்றின்  தற்கால நிலையை அறிவியல்  கண்ணோட்டத்துடன் -  ஆராய்ந்து திருத்திக்கொள்ள நமக்குத் துணிவு இல்லையெனில்,  அறுவடை நாளாகிய  பொங்கல்  திருவிழாவைப் புத்தாண்டு  என்று  கொண்டாடு வதில் என்ன தவறு? என்றார்.
தந்தை பெரியார், கி.வீரமணியின் கண்டனம்
தி.மு.கழக ஆட்சியில் ஆளுநர் உரையிலே செய்யப்பட்ட அறிவிப்பினைத் தொடர்ந்து அதே ஆண்டில் 29-1-2008 அன்று  2008ஆம் ஆண்டு தமிழ்நாடு  தமிழ்ப்புத்தாண்டு  சட்டமுன் வடிவை பேரவை முன் நான் அறிமுகம் செய்தேன்.
1-2-2008 அன்று  இச்சட்ட மசோதா  மீதான விவாதம் நடை பெற்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஈ.எஸ்.எஸ். ராமனும், பா.ம.க. சார்பில்  கி.ஆறுமுகமும்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் என். நன்மாறனும்,  இந்தியக் கம்யூனிஸ்ட் சார்பில்  வை.சிவபுண்ணிய மும், ம.தி.மு.க. சார்பில் அப்போது அங்கேயிருந்த  மு.கண்ணப்பனும்,  விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கு.செல்வமும்  அந்த மசோதாவினை வரவேற்றுப் பேசி  அது நிறைவேறியது. இப்படி யெல்லாம் போற்றப்பட்ட, பாராட்டப் பட்ட ஒரு முடிவு நடைமுறைப்படுத்தப்பட  தி.மு. கழக  ஆட்சியிலே  சட்டமாகக்கொண்டு வரப்பட்டு  2008 ஆம் ஆண்டு முதல் செயல் பட்டுவந்தது.   தி.மு.கழக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது என்றால் அது அப்படியே உயிரோடு  இருக்கலாமா  என்று  எப்போதும் எண்ணுகின்ற அம்மையார் ஜெய லலிதா ஆட்சியிலே அது மாற்றப்பட்டுவிட்டது.   அவரது அந்த அறிவிப்பினை   பா.ஜ.க. அப்போதே  அவசர அவசரமாக  வரவேற்றது.   அதிலிருந்தே   இந்தத் தீர்மானத்தின் உள்நோக்கத்தைப் புரிந்து கொள்ளலாம்.  அ.தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா வினால் கொண்டுவரப்பட்ட அந்த   மசோதாவை அவையிலே இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும்  எதிர்த்தன  என்ற தகவலை செய்தியாளர்கள் என்னிடம் தெரிவித்து அதுபற்றி கருத்துக் கேட்ட போது அவர்களின் தமிழ் உணர்வுக்குத் தலைவணங் குகிறேன் என்று அப்போதே பதில் கூறினேன்.   அதன் பின்னர்,  பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில்; அ.தி.மு.க. அரசின் அந்த முடிவு  தமிழ் உணர்வாளர்களை வேத னைப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்றும்  திடீரென்று  தமிழ்ப் புத்தாண்டை  மீண்டும் சித் திரை மாதத்துக்கு மாற்றுவது முறையல்ல என்றும்  அது  மிகப் பெரிய வரலாற்றுப் பிழையாக அமைந்து விடும் என்றும் தெரிவித்தார்.
தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களும் இந்த முடிவினை வன்மை யாகக் கண்டித்து செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்திருக்கிறார். அவர்களுடைய  இந்தத் தமிழ் உணர்வுக்கு நான் அப்போதே நன்றி தெரிவித்திருக் கிறேன்.
நித்திரையில் இருக்கும் தமிழா!
இன்னும் சொல்ல வேண்டுமேயானால்  புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களே, நித்திரையில் இருக்கும் தமிழா!  சித்திரையல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு அண்டிப் பிழைக்க வந்த ஆரியர் கூட்டம் காட்டியதே  அறிவுக் கொவ்வாத அறுபது  ஆண்டுகள் தரணியாண்ட தமிழருக்கு  தைம்முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!
என்று பாடியதையும் நினைவு கூர விரும்புகிறேன்.   ஆனால்  தமிழ்நாட்டு மக்கள் சற்று ஒரு கணம் எண்ணிப் பார்க்காமல்   செய்த தவறின் காரணமாக எப்படியெல்லாம் கேடுகள் தமிழுக்கும், தமிழகத் திற்கும் நேர்ந்து வருகின்றன
என்பதைக் காணும் போது  நெஞ்சம் விம்முகிறது! மறைமலை அடிகளா வது மண்ணாங் கட்டியாவது! பாரதிதாசனாவது பலநூறு புலவர்களாவது! இவர்களையெல்லாம் மதிக்க வேண்டுமென்று என்ன இருக்கிறது! ஆரியம், இவர்களையும் இவர்களது கொள்கை களையும் தமிழ் உணர்வுகளையும் காலில் போட்டு மிதிக்குமே தவிர மதிக்கவே மதிக்காது என்பதற்கு தமிழக அரசு இப்போது எடுத்துள்ள இந்த நிலைதான் உதாரணம்! புத்தியுள்ள தமிழா; இதை நீ புரிந்துகொண்டால் சரி!
அன்புள்ள,
மு.க.
-விடுதலை,9.4.12

சிந்துவெளியில் மலர்ந்த தமிழ்! 


மொழியியல் வல்லுநர் சாத்தூர் சேகரன், பல எம்.ஏ. பட்டங்கள் பெற்றவர். சிந்துவெளியில் மலர்ந்த தமிழ்பற்றிஅவர் சொல்லும் அரிய தகவல்கள் இதோ:
சான்று:
“1923-_24இல் ரெயில் பாதை போடுவதற்காக ஆங்கில கம்பெனியார், மொகஞ்சதரோ பகுதியில் வேலை செய்தபொழுது, அதிக நீள - அகல - உயரமான கனத்த செங்கல்களை பழைய கட்டட இடிபாடுகளில் கண்டனர். சதுப்பு நிலங்களில் பதித்திட அவை உதவும் என்று அறிந்தனர். பின்னர்தான் அவர்களுக்கே தெரிய வந்தது. இவை அழிந்துபோன சிந்துவெளி நாகரிகத் தின் இடிபாடுகள் என்று! இதற்குள் இந்திய அகழ்வாய்வுத் துறைக்கு செய்தி பறந்தது. இதன் பயனாக அரசு இதற்கான அகழ்வாய்வுத் துறையை வலுப்படுத்தியது.
இதன்பின் இரண்டாம் உலகப் போர் தொடங்கியதால், ஆய்வுப் பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. ஆங்கிலேய அரசு போரில்தன் கவனத்தைச் செலுத்தியது. எனவே, கி.பி. 1936 முதல் 1945 முடிய பெரிய பணிகள் எதுவும் நடக்கவில்லை.
இந்தத் தேக்க நிலை, இரண்டாம் உலகப் போர் நின்றதுவும் முடியத் தொடங்கியது. இந்தியா -_ பாகிஸ்தான் இரு நாடுகளும் 1947இல் விடுதலை பெற்றன என்ற போதிலும் மக்களின் அறியாமையாலும், மதவெறியாலும் மூண்ட சில்லறைச் சண் டைகள் 1948_49 முடிய நடை பெற்று வந்தன.
பாகப் பிரிவினையில் - _ பாகிஸ்தான் வசம் 40 அகழ்வாய்வுக் களங்களும், இந்தியப் பகுதியில் வெறும் 10 அகழ்வாய்வுக் களங்கள் மட்டுமே இருந்தன. ஆனால், தொன்மையான நாடு இந்தியா என்ற காரணத் தால், இதற்குத் தொன்மை யான அகழ்வாய்வுக் களங்கள் கிட்டும் என்று அன்றைய பிரதமர் நேரு முதல் அகழ்வாய்வு அதிகாரிகள் அனைவரும் நம்பினர்.
2008_2009 ஆண்டளவில் இந்தியப் பகுதியில் தோண்டிய மொத்த அகழ் வாய்வுக் களங்கள் 1,000-க்கும் மேல் ஆகும். உலக நாகரிகங்களில் முதல் நாகரிகம் இந்திய (தமிழ்) நாகரிகம் என்ற கருத்துக்கு ஒவ்வொரு அகழ்வாய்வுக் குழிகளும் சான்றுகளைத் தந்து கொண்டே இருந்தன.
தொன்மை
மொகஞ்சதரோ, ஹரப்பா ஊர்களில் இருந்து 1,000_1,500 கிலோ மீட்டருக்கு அப்பாலும் சிந்துவெளி நாகரிகத்தை யொத்த பல அகழ்வாய்வுக் களங்கள் கிடைத்தன. அவற்றைச் சுற்றியுள்ள பல ஊர்களும் ஊர், பூர், புரி, புரம், கோட்டை, நகர், பாடி போன்ற தமிழ்ப் பாணிகளைக் கொண்டுள்ளன. எனவே, அகழ்வாய்வுக் களங்கள் மட்டுமின்றி சுற்றியுள்ள ஊர்களிலும் தமிழர்களே வாழ்ந்திருக்க வேண்டும் என்பதற்கு அசைக்க முடியாத சான்றுகளாக இவை திகழ்கின்றன.
தமிழகத்து அனைத்து நகர்களிலும் பெரிய தெப்பக் குளங்கள் உண்டு. வடக்கே செல்லச் செல்ல அவை சிறிய அளவாகி உள்ளன. சிந்துவெளி நாகரி கம் மட்டும்தான் உலகில் தொன்மை யான நாகரிகமாகிறது. சிந்துவெளி மட்டுமின்றி அகன்ற இந்தியாவிலும் 1,000 இடங்களில் நாகரிக நகர்களை அமைத்துள்ளான் தமிழன் என்ற செய்தி வெளியாகி உள்ளது.
வட இந்தியாவில் 2005-_2006 காலக் கட்டத்தில் 10க்கு மேற்பட்ட தோண் டப்பட்ட அகழ்வாய்வுகள் ஒரு பிரள யத்தையே தோற்றுவித்துவிட்டன. இங்கு கிடைத்த பல பொருட்களைச் சோதனை யிட்ட பொழுது - இங்கு நாகரிகம் தோன்றி 30 ஆயிரம் ஆண்டுகளைக் குறித்தன.  வேறு சில இடங்களில் நாக ரிகத் தொன்மை 33 ஆயிரம் ஆண்டு களுக்கும் அதிகமாக செல்கிறது.
பண்டைத் தமிழ்ச் சான்றோர் குமரிக் கண்ட காலம் கி.மு. 50 ஆயிரம் ஆண்டு களுக்கு முன் என்பர். தமிழர்கள் குமரிக்கண்ட மேரு மலைக் கடவுளை வணங்கினர். அது அழிந்த பின், இமய மலையை மேரு மலை  என்றனர். சிந்து வெளி நாகரிக மக்கள் சுமேரியப் பகுதியில் குடியேறியபொழுது - தம் சொந்த கடவுள் மலை நினைவாக அப்பகுதியைச் ‘சு-_மேரு’ என்று அழைத்தனர். அது ‘சுமேரியா’ ஆயிற்று. தமிழுக்கும், சுமேரிய மொழிக்கும் பல ஒற்றுமை உண்டு என்கிறார் அறிஞர் சதாசிவம். ஆம்..  சிந்துவெளி நாகரிகத்துத் தமிழர்களே சுமேரிய நாகரிகத்தைப் படைத்தனர்.
“சிந்து சமவெளி நாகரிகத்தை உருவாக்கியவர் யார்? என்பது தொன்று தொட்டு கேட்கப்படும் கேள்வியாகும். ஆனால், அங்கு சுக்கூர், மோகூர், ஜம்பு, பாலகோட், காந்தகோட், மூலைத்தானம், மான்கரை, ராஜன் நகர், மலைகண்டு, கண்டலாறு, கலாமாக்கம், மண்டி, சந்திரமான் போன்ற ஊர்ப் பெயர்களும் ஈதன், அணங்க மன்னன், அறவன், அந்தன், கோவன், திங்களன், நத்தன், உதயன், அதிகன், கூத்தன், மாசானன், சேயன், காளத்தி என மக்கள் பெயர் களும் உண்டு. இனியேனும் சிந்துவெளி நாகரிகம் தமிழருடையது என்று எவ்வித ஐயமும் இல்லாமல் உலகம் ஏற்றுக் கொள்ளும் என்று நம்பலாம்’’
நன்றி: ‘ராணி’ 14.11.2010
-விடுதலை,

திருக்குறளும் - பார்ப்பனர்களும்!



திருக்குறளை பிதற்றல் நூல் என்று சொன்னவர்களும் உண்டு. அவர்கள் யார்? எத்தகையவர்? என்பதை விளக்குவதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.
திருக்குறளின் பெருமை
திருக்குறள் நூல் உலகத்தார் அனைவ ராலும் போற்றிப் புகழப்படுகிறது. பல மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு உலா வருகிறது. நடுவு நிலையாக நீதிகளைக் கூறுகிறது. தவறான பழக்க வழக் கங்களைக் கண்டிக்கிறது. உலகத்திற்கே பொதுவான நீதிகளைக் கூறுவதன்றி ஒரு நாட்டுக்கோ, ஒரு மொழிக்கோ, ஒரு பிரி வினர்க்கோ தனித்து நீதி கூறப்படுவ தில்லை.
உலகு என்னும் சொல் சுமார் அய்ம்பது இடங்களுக்கு மேல் இந்நூலில் கையாளப்படுகிறது. தமிழ் என்றோ தமிழ்நாடு என்றோ சொல்லப்படுவதாக இந்நூலில் எங்கும் காணமுடியாது.
திருக்குறள் ஆட்சி
திருக்குறளை எடுத்தாளாத புலவர் களே இல்லை எனக்கூறலாம். புறநானூறு, கலித்தொகை, சிலப்பதிகாரம், மணி மேகலை முதலிய பண்டைய நூல்களில் திருக்குறளைப் பொன்னே போல் எடுத்துப் பொதிந்து வைத்துள்ளனர் -மணிமேகலையில்.
“தெய்வந்தொழா அள் கொழுநற்
றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழையெனப்
பொய்யில் புலவர் பொருளுரை தேறாய்”
எனத் திருக்குறளை எடுத்தாளுவதோடு வள்ளுவரைப் பொய்யில் புலவர் என்றும், பொருள் பொதித்த உரை என்றும் போற்றப்பட்டுள்ளமை காண்க.
கம்பர் சுமார் 500 குறட்பாக்களைத் தம் நூலில் அமைத்துப் பாடியுள்ளார். சில இடங்களில் குறளுக்கு புத்துரையும் கூறியுள்ளார். மகாவித்துவான் ச.தண்ட பாணி தேசிகர் அவர்களால் இது தனி நூலாக வெளிவந்துள்ளது.
இடைக்காலத்தார் செய்த கேடு
இவ்வளவு பெருமை வாய்ந்த குறள் நூலுக்கு இடைக்காலத்தார் சிலர் பல கேடுகளைப் புரிந்துள்ளனர். அவர்களுள் பரிமேலழகரும் ஒருவர். பரிமேலழகரை யான் மதித்து வருகிறேன். அவர் உரை போன்று எழுதுவது அரிது. இருப்பினும் பரிமேலழகர் வட மொழியாளருக்கு அடிமையாகி ஒரு பத்து விழுக்காடு குறளுக்கு மாறான கருத்துகளைத் தெரிவித்துள்ளார். தாம் எழுதும் நூல் அவதாரி கையில் அறத்திற்கு விளக்கம் கூற வந்தவர்.
“அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும் விலக்கியன ஒழித் தலுமாம்’’ என எழுதியுள்ளார், மனு என்ன யாவ ருக்கும் பொதுவான நூலா? பார்ப்பனர் களுக்கு மட்டும் சாதகமான நூலாகும். நெருப்பில் பொசுக்கப்பட வேண்டிய நூலாகும். அதனாலன்றோ மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை அவர்கள்.
“வள்ளுவர் செய்திருக்குறளை மறுவற நன்குணர்ந்தோர் உள்ளுவரோ, மனுவாதி ஒரு குலத்துக்கொரு நீதி?’’ என்று கூறினார், மனுநூலைப் படிப்பார்களோ என்னாமல் நினைப்பார்களோ என வினவினார். நினைத்தாலே மனம் கெட்டுப்போகும் எனக்குறிப்பிட்டார். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் - என்னும் குறளுக்கும் உரை எழுதிய பரிமேலழகர் எப்படித்தான் மனுநூலை ஏற்றுக்கொண்டாரோ தெரியவில்லை. மேலும் வள்ளுவர் வடநூல் முறையை உட்கொண்டு இவ்வாறு கூறினார் எனப் பலவிடங்களில் குறிப்பிடுகிறார்.
கீழ்க்காணும் எண்கள் உள்ள குறட்பாக் களின் உரையை நோக்குக. 434, 501, 648, 924, 993 காமத்துப்பால் அவதாரிகை, 1330 ஆக 7 இடங்கள்.
சில இடங்களில், அரசன் புரோகிதர் களைத் துணையாகக் கொள்ள வேண்டும் - என எழுதுகிறார். புரோகிதர்கள் தெய்வத்தால் வரும் குற்றங்களைத் தீர்த்து வைப்பவர்களாம். இதுவும் தேவையற்ற உரையாகும். கீழ்க்காணும் எண்கள் உள்ள குறட்பா உரைகளைக் காண்க.
442, 45 அதி - அவதாரிகை, 501
“முதலில் புரோகிதர்களை நாட்டை விட்டு ஒழியுங்கள், அவர்களால் நாடு கெட்டது போதும்’’   - விவேகானந்தர் வாக்கு.
இவை போன்ற இடங்களை ஒதுக்கித் தள்ளிவிட்டுப் பிற குறட்பாக்களுக்குப் பரிமேலழகர் எழுதிய உரையைக் கற்போமானால் திருவள்ளுவருடைய உள்ளக் கிடக்கையை உணர்ந்து கொள்ள முடியும்.
முற்காலத்தில் நூலுக்கு அரங்கேற்றம் என வைத்துப் பல புலவர்கள் முன்னி லையில் நூலை எடுத்துக் கூற வேண்டும். அவைப் புலவோர் குற்றம் கண்டு கூறு வாராயின் நூலாசிரியர் அவற்றைத் திருத் திக் கொள்ளுதல் வேண்டும் இல்லையேல் சமாதானம் கூற வேண்டும் அதன் பின்னரே நூல் வெளிவரும். அதுபோன்று உரைக்கும் அரங்கேற்றம் வைத்திருப்பார் களானால் மேற்சொல்லப்பட்ட குறை களெல்லாம் நீக்கப்பட்டிருக்கும். ஏனோ அவ்வாறு செய்தார்களில்லை.
வைணவ மதத்து ஆழ்வார்கள் பன்னிரு வரில் திருமங்கையாழ்வார் என்பவர் ஒருவர். இவர் ஆறு நூல்கள் இயற்றியுள்ளார். அவையாவன:
பெரிய திருமொழி, திருவெழுக் கூற்றி ருக்கை, திருநெடுந்தாண்டகம், திருக்குறுந் தாண்டகம் சிறிய திருமடல் பெரிய திருமடல் - என்பன வாம்.
இவற்றுள்  இறுதியிலுள்ள இரு நூல் களும் அகப்பொருள் நூலாகும். மட லேறுதல் அகப்பொருள் நூலுள் ஒரு துறையாகும்.
அஃதாவது, தலைவியைக் களவுப் புணர்ச்சியில் புணர்ந்து பிரிந்த தலைமகன் தோழியை இரந்தும் தன்குறை நிறைவேறப் பெறாமல் சேட்படுக்கப் பட்டான். பிரிவுத்துயரால் ஆற்றாமை விஞ்சியது. அதனால் நாணம் முதலிய வற்றை விட்டு தலைவியின் வடிவையும், ஊரையும் பேரையும், தனது ஊரையும் பேரையும் ஒரு படத்தில் எழுதி, அச்சித் திரப் படத்தைக் கையிற்கொண்டு, பனை மடலினால் ஒரு குதிரை உருவம் செய் வித்து, அதன்மீதுதான் ஏறிக்கொண்டு, அதனைப்பிறரால் இழுக்கச் செய்து வீதிவழியே பலருங்கூடும் பொது இடங்களில் சுற்றி வருவான்.
இக்கடுந்தொழிலைக் கண்ட உற்றார் உறவினர் மனமிரங்கி அத்தலைவியை தலைவனுக்கு மணம் செய்து கொடுப்பர்.
ஆடவர்கள் இவ்வாறு மடலேறலாமே யன்றி, பெண்கள் எவ்வளவு காமம் மீதூர்ந்தாலும் மடலேறுதல் கூடாது என தமிழிலக்கணம் விதித்துக் கூறுகிறது.
“எத்திசை மருங்கினும் மகடூஉ மடன் மேற் பொற்புடை நெறிமை இன்மையான”                           (தொல் - 981)
“எண்ணில் காமம் எரிப்பினும் மடல் மேற் செலாப் பெண்ணின் மிக்கது பெண்ணலது இல்லையே”   (சீவகசிந்தாமணி)
மேற்கண்ட கருத்தை ஒட்டியே திரு வள்ளுவரும்
கடலன்ன காமம் உழந்தும் மடலே றாப் பெண்ணின் பெருந்தக்க தில்    (குறள் - 1137)
கடல்போலக் கரையற்ற காம நோயினை அனுபவித்தும் மடலூர் தலைச் செய்யாது ஆற்றியிருக்கும் பெண் பிறப்புப்போல, மிக்க தகுதியினையுடைய பிறப்பு உலகத்து இல்லை.
(பரிமேலழகர்)
இக்குறட்பாவின் கருத்தைத் திருமங்கை  ஆழ்வார் தமது பெரிய திருமடல் என்னும் நூலில் பொன்னே போல் போற் றிப்பதிய வைத்துள்ளார். அப்பகுதி யாவது,
“மானோக்கின் அன்ன நடையார் அலரேச ஆடவர்போல் மன்னும் மடலூ ரார்” என்பதோர் வாசகமும் தென்னு ரையில் கேட்டறிவ துண்டு (கண்ணி - 38, 39)
தென்னுரையில் கேட்டறிவதுண்டு - என்பதற்கு என்ன பொருள்? தென்னாட்டுத் தமிழ் மொழியின் கண் திருவள்ளுவர் கூறியிருப்பதைக் கேட்டு அறிந்ததுண்டு என்பதாம். பெரிய திருமடலில் கூறப் படும் தலைவி வடமொழி கற்ற தலைவி யாவாள். அதனால் கற்றறிந்ததுண்டு எனக் கூறாமல் கேட்டறிவதுண்டு எனக் கூறினாள்.
நாலாயிர திவ்யப் பிரபந்தத்திற்கு பலர் உரை எழுதியுள்ளனர். முழுதும் மணிப் பிரவாள நடையே. மணியும் முத்தும் கலந்ததுபோலத் தமிழும் வடமொழியும் கலந்து எழுதிய நடையே மணிப்பிரவாள நடையாம். இக்கலப்பு நடையைப் பரிதிமாற் கலைஞர் ஆபாச நடை என ஒதுக்குவார்.
பெரியவாச்சான் பிள்ளை உரை
பெரியவாச்சான் பிள்ளை என்பவர் ஒரு வைணவப் பார்ப்பனர் (அய்யங்கார்) நாலாயிரம் பாடல்களுக்கும் மணிப்பிர வாள நடையில் இவர் ஒருவரே உரையெழுதியவர். மற்றையோர் சில சில பகுதிகளுக்கே உரை எழுதினர். சோழ நாட்டில் திருப்பனந்தாளுக்கு அண்மை யில் உள்ள சேய்ஞலூர் என்னும் ஊரில் பிறந்தவர். பிள்ளை என்பது அவருக்குக் கொடுத்த பட்டம் போலும்.
இவர் மேற்கண்ட பெரிய திருமடல் கண்ணிக்கு உரை கூறும் போது,
“தென்னுரையில் கேட்டறிவதுண்டு” - என்பதற்கு மிலேச்சசாதி பிதற்றும் தமிழின் கண் கேட்டறிவதுண்டு - என எழுதியுள்ளார். என்னே கொடுமை! இதை எப்படித் தாங்கிக்கொள்வது!
தமிழ்மொழி மிலேச்ச சாதி மொழி யாம். திருக்குறள் மிலேச்ச சாதி நூலாம். மடலேறுதல் பெண்களுக்கு வழக்க மில்லை என விதி வகுத்த தொல்காப்பியர் மொழி மிலேச்ச சாதி பிதற்றும் தமிழாகிறது. திருக்குறளின்மீது இவர்களுக்கு ஏன் காழ்ப்பு உணர்ச்சி தோன்றுகிறது? மனு நீதி போலத்திருக்குறள் அவர்களுக்குச் சார் பாக நீதி கூறவில்லை. பல குறட் பாக்களில் அவர்களுக்கு எதிர்ப்பாகவும் கூறுகிறது.
“அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத்து உண்ணாமை நன்று”                          
(குறள் - 249)
இக்குறட்பாவை அவர்கள் ஏற் பார்களா? பிறர் பொருளால் கேள்வி செய்தே தம் வயிற்றை வளர்ப்பவர்கள் எப்படி ஏற்பார்கள்? இதனுடைய சூதினை அறியாத நம் பண்டைய அரசர்களும் ஏமாந்து பல வேள்விகளைச் செய்து பெயர் பெற்றார்கள் என அறி கிறோம். பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி, இராச சூயம் வேட்ட பெருநற்கிள்ளி என்னும் பெயர்களைக் காண்க.
மணிப்பிரவாள நடையில் உரையெழு தும்போது, பல இடங்களில் வேதத்திலி ருந்தும், கீதையிலிருந்தும் மேற்கோள் காட்டி - இவ்வாறு விசேட தருமம் கூறு கிறது எனவும் அடுத்துத் திருக்குறளில் இருந்து மேற்கோள் காட்டி - இவ்வாறு சாமானிய தருமம் கூறுகிறது எனவும் எழுதியுள்ளார்கள். வேதம், கீதை தெய்வம் கூறியதாம்.
வேதத்தைப்பற்றி வள்ளலார் கூறி யதைக் கீழ்க் காண்க.
“வேதாந்தம் என்று வீண் வாதம் ஆடுகின்றீர் வேதாந்தத்தின் விளைவு அறியீர் - சூதாகச் சொன்னவலால் உண்மை நெறிதோன்றவிலை என்ன பயனோ இவை”.
கீதையைப் பற்றி சிவஞான சித்தியார் கூறுவதைக் கீழ்க்காண்க.
பார்த்தனார் இரதமேறிப் படைதனைப் பார்த்துச் சார்பைக் கூர்த்த அம்பாலே எய்து கொன்றரசாளேன் என்ன தேர்த் தனிலிருந்து மாயை செய்து மால்கொல்லச் செப்பும் வார்த்தை நூலாக்கிக் கொண்டாய்...
(அருணந்தி சிவாச்சாரியார்)
வைணவர்களில் தமிழராகப் பிறந்தவர்களும், இச்சூதுவாதினைப் புரிந்து கொள்ளாமல் தம் மொழியை விட வடமொழி மேலானது எனவும், வட மொழியாளர் தெய் வப்பிறப்பினர் எனவும் நம்பி அடிமைப்பட்டுக் கிடக்கின்றனர். நம்மையும் நமது நூலையும் இகழ்ந்து பேசியும் எழுதியும் வருபவர்களைப் புகழ்ந்து பேசியும் எழுதியும் வருகிறார்கள்.
“என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்‘’’ என்று கூறிய பாரதியார் பாவடியை நோக்குக.
திருவள்ளுவரும், புகழ் இன்றால் புத்தேள் நாட்டு உய்யாதால் என்மற்று
இகழ்வார்பின் சென்று நிலை (குறள் - 966)
என்று கூறினார். மானம் இல்லாதவரே தம்மை இகழ்வார் பின் சென்று அடிமை களாயிருப்பர். அதனால் புகழும் உண் டாகாது எனக்கூறினார். புரட்சிக்கவிஞரும்,
அறையுமிவை பெருந்தமிழர் ஆழ்ந்த நெடும் தூக்கத்தின் பயனே அன்றோ? எனக்கூறி வருந்தினார். இனியாவது யாருக்கும் அடிமை யாகாமல் விழிப்பு நிலையோடு வாழ முயல்வோமாக.
பெரியாரும் திருக்குறளும்
திருக்குறள் நெடுங்காலமாக புலவர்கள் மத்தியிலேயே வழங்கி வந்தது.  பாமரர்கள் மத்தியிலும் அந்நூல் சென்று சேரவேண்டும் என்னும் எண்ணம் முதன்முதலில் பெரியார் அவர்களுக்கே உதித்தது. அதற்காகப் பல மாநாடுகள் கூட்டித் திருக்குறளை எங்கும் பரவச் செய்தார். குறளுக்குப் பண்டையோர் தவறான பொருள் செய்திருப்பரேல் அவற்றையெல்லாம் மாற்றி உண்மைப் பொருளைக்கூறி தமிழர்கள் மனத்தில் பதியவைத்தார். இன்றைய தினம் இரண்டாம் வகுப்புப் படிக்கும் சிறு குழந்தைகளிடம் கேட்டாலும்  இரண்டு திருக்குறளாவது சொல்லும், இவ்வாறு திருக்குறள் நூல் பட்டிதொட்டியெங்கும் பரவி வருவது தமிழ்ப் பகைவர்களுக்குப் பிடிக்குமா? அதனால் அந்நூலுக்கு மறைமுகமாக பல மாசுகளை உண்டாக்கி வந்தனர்.
ஆகவே திருக்குறள் எங்கும் பரவுவதற்கு முதற்காரணமாய் இருந்த பெரியார் அவர் களை நாம் என்றும் மறவாது நினைவு கூர்வோமாக!
-விடுதலை,14.1.16