பக்கங்கள்

வெள்ளி, 4 நவம்பர், 2022

திருக்குறளில் உள்ள #கடவுள்_வாழ்த்து எனும் அதிகாரம் #திருவள்ளுவர்_எழுதியது_இல்லை !

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02smZkmpF9EXEKZ4B8Jizi2BF2EncLLinYsapZjNRM5XuFwMVqFNBYvTacnxj8BQ6ul&id=100000324268158
திருக்குறளில் உள்ள #கடவுள்_வாழ்த்து எனும் அதிகாரம் #திருவள்ளுவர்_எழுதியது_இல்லை !

இப்படி சொல்பவர் பெரியாரோ அல்லது கடவுள் நம்பிக்கை இல்லாத அறிஞர் ஒருவரோ அல்ல.

திருக்குறளை ஆய்வு செய்து திருக்குறளில் உள்ள இடைச்செருகல்களை ஆதாரங்களுடன் நிறுவியவர் #வ_உ_சி அவர்கள்.ஆம் இந்திய சுதந்திர போராட்ட தியாகி என புகழப்படும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களேதான். வ.உ.சி.கடவுள் நம்பிக்கை அதிகம் உள்ளவர் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

திருக்குறளில் #கடவுள்_வாழ்த்து எனும் அதிகாரம் மட்டுமல்ல,#வான்_சிறப்பு, #நீத்தார்_பெருமை ஆகிய அதிகாரங்களும் திருவள்ளுவர் எழுதியவை அல்ல.அவை #இடைச்செருகல்களே என்று ஆய்வு செய்து கூறுகிறார் வ.உ.சி.“அவை திருவள்ளுவர் காலத்திற்குப் பிற்காலமும் முந்திய உரையாசிரியர்கள் காலத்திற்கு முற்காலமுமாகிய இடைக் காலத்துப் புலவர் ஒருவரால் பாடிச் சேர்க்கப் பட்டவையென்றும் யான் கருதுகிறேன்” என்று கூறுகிறார்.

பரிமேலழகர் என்பவர் எழுதிய திருக்குறள் உரை ஆரிய சார்பானதாக இருப்பதை ஏற்க மறுத்து (அப்போது சுயமரியாதை இயக்கமோ,பகுத்தறிவு கருத்துக்களோ வீரியமாக பேசப்படாத காலம் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.) ஏற்கும்படி இருக்கும் மணிகுடவர் எழுதிய திருக்குறள் உரையிலிருந்து திருக்குறள் அறத்துப்பால் மணிக்குடவர் பதிப்பு எனும் தலைப்பில் 140 பக்கங்கள் கொண்ட நூலை 1917  ஆம் ஆண்டு பதிப்பித்தார் வ.உ.சி.

1930 - 1932 களில் வெளிவந்த ''தமிழ்ப் பொழில்'' (துணர் 5/மலர் 6) எனும் இதழில் பாயிர ஆராய்ச்சி எனும் தலைப்பில் (பக்கம்: 232-237)எழுதியுள்ள கட்டுரையில் வ.உ.சி.அவர்கள் இந்த ஆய்வுகளை தொடராக எழுதியுள்ளார்.

பாயிர ஆராய்ச்சி எனும் ஆய்வு கட்டுரையில் வ.உ.சி அவர்கள் திருக்குறளின் இடைச்செருகல்கள் குறித்து எழுதியுள்ள கருத்துக்களின் சாரம் :

திருக்குறளின் இம்மூன்று அதிகாரங்களும் தற்காலத்தில் மிகவும் புகழ் பெற்றவை. கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை ஆகிய இம் மூன்று அதிகாரங்களிலுள்ள முப்பது குறட்பாக்களையும் திருவள்ளுவர் எழுதியிருக்க முடியாது என்பதற்கு காரணங்களை முன் வைக்கிறார் வ.உ.சி.

1.            கடவுள் வாழ்த்து,வான் சிறப்பு, நீத்தார் பெருமை பாடல்களில் பிற பாடல்களைப்போலச் சொற்செறிவும் பொருட்செறிவும் இல்லை.

2.            கடவுள் வாழ்த்து,வான் சிறப்பு, நீத்தார் பெருமை ஆகிய பாடல்களின் பொருள்கள் பல தடைகளுக்கு இடம் கொடுக்கின்றன.

3.            மெய்யுணர்தல், துறவு என்ற தலைப்புகளில் நூலின் உள்ளே அதிகாரங்கள் இருப்பதால் இதற்கு முரணான தலைப்புகளான கடவுள் வாழ்த்து, நீத்தார் பெருமை ஆகியவற்றை நூலின் தொடக்கத்தில் அதாவது பாயிரத்தில் வைத்திருப்பது பொருத்தமானதல்ல.

4. மெய்யுணர்தல் எனும் தலைப்பிலுள்ள அதிகாரத்தில் கடவுளுக்குக் கூறியுள்ள இலக்கணங்களைக் கொண்டு பார்க்கும்போது அவற்றையும் இம்மூன்று அதிகாரங்களையும் ஒருவரே எழுதியிருக்க முடியாது. (வ.உ.சியின் இக்கருத்து விரிவான ஆய்வுக்குரியது).

5.            துறவு மற்றும் நீத்தார் பெருமை ஆகிய அதிகாரங்களில் உள்ள பாடல்களை ஒப்பிட்டுப் பார்த்தால், இரண்டையும் ஒருவரே இயற்றியிருக்க முடியாது.

6.            மழையைச் ‘சிறப்பிற்றணிப்பாருமில்லை, வறப்பிற்றரிவாருமில்லை.” எனவே, ‘வான் சிறப்’பைக் கூறுவதால் பயன் ஒன்றுமில்லை.

7.  திருக்குறள் 10 என எண்ணிக்கையில் இருக்கும் போது 10ன் மடங்குகளாக 130 அதிகாரமும் 1300 குறள்கள் மட்டுமே இருந்திருக்க வேண்டும்.

---------------------------------------------------------------------------------

திருவள்ளுவரே கடவுள் வாழ்த்தை எழுதி இருக்கிறார் கடவுள் இருப்பதை ஏற்றுக்கொண்டார் என ஏமாற்றி வந்தவர்கள் இப்போது திருவள்ளுவருக்கு காவிச்சாயம் பூச முயலும் அயோக்கியத்தனமான முயற்சியில் இறங்கியிருக்கும் இவ்வேளையில் கடவுள் வாழ்த்து,வான் சிறப்பு, நீத்தார் பெருமை ஆகியவை திருக்குறளே அல்ல.அவை திருவள்ளுவர் எழுதியவையும் அல்ல.இந்த 3 அதிகாரங்களும் இடச்செருகல்களே என்கிற வ.உ.சி.அவர்களின் ஆய்வுக்கட்டுரையை நாம் மீள வாசிக்க வேண்டியதும் அதனை பரப்புவதும் அவசியமாகும்.
- பரிமள ராஜன் முகநூல் பக்கத்திலிருந்து.... ஆண்டு 2019

2 ஆயிரம் ஆண்டு பழைமையான தமிழ் எழுத்துகள் பொறித்த பானை ஓடுகள் கண்டுபிடிப்பு

புதன், 12 அக்டோபர், 2022

சிலப்பதிகாரம் என்பது #கற்பனைக்கதையல்ல..என்பதனை அறிவீரா???

#சிலப்பதிகாரம் என்பது #கற்பனைக்கதையல்ல..என்பதனை அறிவீரா???

சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல வரலாற்று நிகழ்வு என்பதனை உலகிற்கு உணர்த்தியவர், தஞ்சாவூர் கரந்தை தமிழ்ச் சங்கத்தின்,கரந்தை புலவர் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய, மறைந்த மரியாதைக்குரிய ஆய்வறிஞர் பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்கள்.

சிலப்பதிகாரத்தைத்  திறம்பட கற்றவர், சிலப்பதிகாரத்தில் ஊறித் திளைத்தவர். அவரி்ன் மனதில் நீண்ட நாட்களாகவே ஒர் ஆசை,ஏக்கம்,கனவு.சிலப்பதிகாரத்தில் கண்ணகி பயணம் செய்த பாதை வழியாகவே ஒரு பயணம் செய்தால் என்ன என்ற தணியாத தாகம்.எண்ணி துணிந்து இறங்கினார்.

1945 ஆம் ஆண்டு கண்ணகி பயணித்த பாதை வழியாகவே இவரும் நடந்தே சென்றார்.தன் ஊதியத்தைச் செலவிட்டு நடந்தார்.பின் தன் உடமைகள் ஒவ்வொன்றையும் வி்ற்று விற்று காசாக்கிக் கொண்டே 17 ஆண்டுகள் நடந்து முடிவில் சிலப்பதிகாரம் கற்பனைக் கதையல்ல வரலாற்று நிகழ்வு என்பதை உலகிற்கு உணர்த்தினார்.

1945 ம் ஆண்டு மயிலாடுதுறை அருகில் கடற்கரையில் மீனவர்களின் ஒரு சில குடிசைகளுடன் மணற் பரப்பும்,மணல் மேடுகளும்,கள்ளியுடன் காரைச் செடிகளும் செறிந்த புதர்களும்,சவுக்கு தோப்புகளும்,புனங்காடுகளும் சூழ்ந்திருந்த பட்டணம் என்று,அன்று அழைக்கப்பட்ட பகுதியே,பண்டைய புகார் நகரம் இருந்த இடம் என்பதைக் கண்டு பிடித்தார்.கடலடி ஆய்வு செய்து கடற்கோளினால் அளிந்து கடலடியில் மறைந்து நிற்கும் நிலப்பரப்பே,காவேரிப் பூம்பட்டிணம் கண்ணகி பிறந்த இடம் என்பதை உறுதி செய்தார்.

1945 ஆம் ஆண்டு பூம்புகாரில் ஆய்வினைத் தொடங்கிய இவருக்கு,கால் நடையாக ஆராய்ந்து,ஆராய்ந்து, நடந்து,நடந்து,மதுரை வரை செல்வதற்கே பன்னிரண்டு ஆண்டுகள் தேவைப்பட்டன.

மதுரையில் கோவலனை இழந்த கண்ணகி,சேரநாடு நோக்கிச்  சென்ற வழியில்,இளங்கோ அடிகள் தந்த குறிப்புகளின் உதவியுடன் நகரத் தொடங்கினார்.

1945 ஆம் ஆண்டு தொடங்கிய பயணம் 1963 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் நாள் மலையினுள் மறைந்து கிடந்த கோயிலைக் காணும் அந்த இனிய நிகழ்வில் நெகிழ்ந்துள்ளார்.

கடந்த 2012 டிசம்பரில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தொல்காப்பியர் விருது வழங்கி சிறப்பித்தார்.

கண்ணகி கோட்டத்தைக் கண்டுபிடித்தது எவ்வாறு? என்பது குறித்து தினமணி நாளிதழுக்கு சில வருடங்களுக்கு முன் திரு.கோவிந்தராசனார் அளித்த பேட்டி..

’’சிலப்பதிகாரத்தை முழுமையாகப் படித்தேன். அதில் எல்லாம் தெளிவாக கூறப்பட்டுள்ளது. சோழ நாட்டின் தலைநகரமான பூம்புகாரில் இருந்து கோவலனும் கண்ணகியும் நடந்து சென்ற பாதையாக அதில் கூறப்பட்டுள்ள இடங்களுக்கெல்லாம் நடந்தே சென்றேன். மதுரையில் கண்ணகி பாண்டிய மன்னனிடம் நீதி கேட்டு அது கிடைக்காததால் நகரை எரித்துவிட்டு தலைவிரி கோலமாய் மேற்கு நோக்கிச் செல்கிறாள். சேர நாட்டின் மலைப் பகுதியான முருகவேல் குன்றத்துக்கு (இன்றைய மங்களதேவி மலை) சென்று அங்கு வானுலகில் இருந்து ரதத்தில் வந்திறங்கிய கோவலனுடன் இணைந்து கண்ணகி விண்ணுலகம் சென்றதாக சிலப்பதிகாரம் கூறுகிறது.

கண்ணகி நடந்து சென்றதாக கூறப்பட்ட பாதை வழியாக நானும் இரவு, பகல் பாராமல் நடந்தேன். மதுரையில் இருந்து 90 மைல் தொலைவில் உள்ள மங்களதேவி மலையை அடைந்தேன். 40 மைல் சுற்றளவில் கண்ணகி கோட்டத்தை தேடி அலைந்தேன். இறுதியில் அந்த கோட்டத்தைக் கண்டுபிடித்தேன்.’’

கண்ணகி கோட்டத்திற்கு அப்படி என்ன சிறப்பு?

’’வானுலகில் இருந்து ரதத்தில் இறங்கி வந்த கோவலனுடன் கண்ணகியும் விண்ணுலகம் சென்றதை நேரில் கண்ட மலைவாழ் மக்கள் அந்த செய்தியை மன்னன் சேரன் செங்குட்டுவனிடம் கூறுகிறார்கள். மன்னனின் மனைவி அந்த இடத்தில் பத்தினித் தெய்வமான கண்ணகிக்கு ஒரு கோயில் கட்ட வேண்டும் என எண்ணுகிறாள். அதன் பின்பு வடபுலத்து அரசர்களை வெற்றி கண்டு இமயமலையில் கல்லெடுத்து அதை கங்கையில் நீராட்டி தலைச்சுமையாக இங்கு கொண்டு வந்து அந்தக் கல்லில் கண்ணகிக்கு சிலை வடித்து முருகவேல் குன்றத்தில் நிறுவி நாள்தோறும் வழிபாடும், விழாக்களும் நடத்தி வந்தான் மன்னன். அத்தகைய சிறப்பு மிக்க கண்ணகி கோட்டம் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக குறிப்புகள் உள்ளன.’’

அது கண்ணகி கோட்டம்தான் என்பதை எப்படி உறுதி செய்தீர்கள்?

’’மண்டிக்கிடந்த புதருக்குள் சிறிய கோட்டைச் சுவர் போன்ற கல் கட்டடத்திற்குள் கண்ணகி சிலை இருந்தது. அந்த கற்களில் தமிழ் வட்டெழுத்தும், முற்கால பாண்டியர் காலத்து தமிழ் எழுத்துகளும் காணப்பட்டன. அங்கு சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள பழங்கால மலைவாழ் மக்கள் மட்டும் இல்லையே தவிர, எஞ்சிய வன விலங்குகள், இயற்கை காட்சிகள், வேங்கை மரங்கள் என அத்தனை அடையாளங்களும் ஒருங்கே காணப்பட்டன.
மேலும், அங்கிருந்த கண்ணகி சிலை, இமயமலை கல்லில் செதுக்கப்பட்டது என்பதால், அந்த கல்லை ஆய்வுக்கு உட்படுத்தினேன். அது மாதிரியான கல் அருகில் உள்ள மலைகளிலோ அல்லது தமிழ்நாட்டில் உள்ள மலைகளிலோ இல்லை. இறுதியில் இமயமலை கல்லுடன் ஒப்பிட்டுப் பார்த்து உறுதி செய்தேன். தலையில் சுமந்து வரும் எடையளவில் இருந்த கல்லில் செதுக்கப்பட்டுள்ளது கண்ணகி சிலை. அந்தச் சிலையைப் பாதுகாக்கும் வகையில் எனது வீட்டில் வைத்திருந்தேன். தகவலை அறிந்த அப்போதைய தமிழக முதல்வர் மு. கருணாநிதி என்னை அழைத்து கண்ணகி சிலையைக் கேட்டார். அவர் கேட்டபடி அரசிடம் ஒப்படைத்து விட்டேன்.

தமிழர்களின் வரலாற்றை செப்பம் செய்ய வேண்டும் என்ற நோக்கில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் கண்ணகி கோட்டம் கண்டேன். அதற்காக உழைத்தேன். பேர், புகழ், பதவி, பட்டம், விருது வரும் என நினைத்ததில்லை; ஆனால் அதெல்லாம்தான் இப்போது நடக்கிறது.’’

குறிப்பு;அய்யா அவர்கள் விண்ணுலகு அடைந்து விட்டார்கள்...

- சித்தர்கள் சித்தர் அறிவியல் முகநூல் பக்கம்

வெள்ளி, 2 செப்டம்பர், 2022

பல்கலைக் கழகங்களில் தமிழ் கட்டாயப் பாடம்

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2022

வரலாற்றுச் சுவடு : தமிழ்த்தாய் வாழ்த்து கலைஞர் தந்த விளக்கம்!


ஜனவரி 1-15,2022 உண்மை

சிறந்த தமிழ்ப் படம், சிறந்த தமிழ்ப்பட இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த எழுத்தாளர், பாடலாசிரியர் என்று பல முனைகளில் திரைப்படத்துறையில் ஒவ்வொர் ஆண்டும் தேர்ந்தெடுக்கப்படுகிறவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் பரிசுகள் வழங்குகிற நிகழ்ச்சியை அண்ணா அவர்கள் உருவாக்கியதை-யொட்டி 1970-ஆம் ஆண்டு மார்ச் திங்கள் நடைபெற்ற அந்தப் பரிசளிப்பு விழாவின்போது, இனித் தமிழ்நாடு அரசு நிகழ்ச்சிகளில் தொடக்கத்தில் இறை வணக்கம் என்பது தமிழ்த்தாய் வாழ்த்தாக இருக்கு-0மென்றும், “நீராருங் கடலுடுத்த’’ எனும் மனோன்மணீயம் சுந்தரனார் இயற்றிய அந்தப் பாடலே அந்த வாழ்த்தாக அமையுமென்றும் அறிவித்தேன்.

வாழ்த்துப் பாடலுக்கு ஏற்றவகையில் அந்தப் பாட்டை ஓரளவு குறைத்துக்கொள்ள வேண்டியதாயிற்று. மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை எழுதிய அந்தப் பாடலில், சமஸ்கிருத மொழி உலக வழக்கு ஒழிந்த மொழி என்பதை, “ஆரியம் போல் உலக வழக்கு அழிந்தொழிந்து சிதையா உன்சீரிளமைத் திறம் வியந்து’’ என்று குறித்துத் தமிழ்மொழியைப் புகழ்ந்திருந்தார். அரசு நிகழ்ச்சியில் _- அதுவும் தமிழ்த்தாய் வாழ்த்தில் மற்றொரு மொழியைக் குறைத்தும் பழித்தும் கூறுதல் வேண்டாமென்பதற்காகவும் -”அழிந்து, ஒழிந்து” என்ற சொற்களை ஒரு பகுதியினர் அமங்கலச் சொற்கள் எனக் கருதி முகஞ்சுளிப்பர் என்பதற்காகவும்; அந்த வரியையே அகற்றி விட்டு இசையமைக்குமாறு கேட்டுக்கொண்டேன்.

“நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக்கெழிலொழுகும்

சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்

தெக்கணமும் அதிற் சிறந்த திராவிடநல் திருநாடும்

தக்க சிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே

அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற

எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே    

உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!’’

இவ்வாறு இசைக்கேற்பப் பாடல் ஒழுங்குபடுத்தப்பட்டது.

மெல்லிசை மன்னர் எனப் போற்றப்படும் விசுவநாதன் இசையமைக்க – பின்னணி இசைப்புகழ் மணிகளான சவுந்திரராசன், திருமதி. சுசிலா ஆகியோர் பாடிய அந்த வாழ்த்து இசைத் தட்டுகளாக வெளியிடப்பட்டு, தமிழ்நாடு அரசு விழாக்களில் பயன்-படுத்தப்பட்டன.

அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து என நான் அறிவித்தவுடனே அதற்கும் எதிர்ப்பு கிளம்பிடத் தவறவில்லை!

“ஆனந்த விகடன்’’ இதழில் கருத்துரை தீட்டிய பிரபல எழுத்தாளர் திரு.கி.வா. ஜெகந்நாதன் அவர்கள், தமிழ் ஒரு குட்டி தேவதை என்றும், மொழிவாழ்த்துப் பாடலைக் கடவுள் வாழ்த்துப் பாடலாக மாற்றியது பொருத்தமற்றது என்றும் அதற்குப் பதிலாக “அங்கிங் கெனாதபடி’’ எனத் தொடங்கும் தாயுமானவர் பாடலைப் பாடலாமென்றும் குறிப்பிட்டிருந்தார்.  ‘மெயில்’ போன்ற வேறு சில ஏடுகளிலும் மறுப்புக் கருத்துகள் வெளிவந்தன.

அப்போது பன்மொழிப்புலவர் கா.அப்பாத்துரையார் அவர்கள் தமிழ்நாடு அரசு எடுத்த முடிவை வரவேற்று விடுத்த அறிக்கையில், எதிர்க் கருத்தாளர்களுக்குத் தக்க பதில் அளித்திருந்தார். அந்த அறிக்கை மிக முக்கியமானது என்பதால் இங்கே அதனைக் குறிப்பிடுவது பயனுள்ள ஒன்றாகும்.

“தமிழ் இனத்தின் கடவுள் வணக்கப் பாடலாக பேராசிரியர் சுந்தரனாரின் “மனோன்மணீய’’ வணக்கப் பாடலையே பாட வேண்டுமென்ற கருத்து பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டுப் புலவர் குழுவில் தீர்மானமாக வந்தது. அந்தப் பாடலில் சமஸ்கிருதத்தைவிட தமிழுக்கு உயர்வு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதனால் சமஸ்கிருதப் பற்றாளர் சிலர் எதிர்த்தனர்.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் போன்றோர் புலவர் குழுவிலிருந்து விலகுவதற்கு இதுவே வழிவகுத்தது. தாயுமானவர் பாடலைப் பாடலாமென்றும் திருக்குறள் முதல் அதிகாரத்தைப் பாடலாமென்றும் இதன்பின் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தாயுமானவர் பாடல், இந்து மதத்தைப் பெரிதும் சார்ந்தது எனப் பிறமதத்தினர் எதிர்த்தனர். திருக்குறள் முதல் அதிகாரத்துக்குக்கூட அது ”தாள்’’ “அடி’’ என்று கூறுவதால் உருவ வணக்கத்தின் சாயலுடையது என்று கிறித்துவ, இஸ்லாமியப் புலவர்கள் சிலர் குறைப்பட்டனர்.

மனோன்மணீயம் ஆசிரியர் சுந்தரம் பிள்ளையைவிட இந்து மதத்தைக் கரைத்துக் குடித்தவர், வேதாந்த ஆராய்ச்சியில், கடவுள் ஆராய்ச்சியில் கரைகண்டவர் மிகச் சிலரே இருக்க முடியும்.

அத்தகையவர் இந்து மதத்தையோ, வேறு எந்த மதத்தையோ புண்படுத்தாமல் எல்லா மதத்தினரும் ஒப்புக் கொள்ளத்தக்க விதத்தில் தமிழ் மொழி உருவாகவே பாடிய தேசியக் கடவுள் பாடல்தான் “நீராருங் கடலுடுத்த’’ என்ற பாடலாகும்.  அந்த வாழ்த்துப் பாடலைத் தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் தேர்ந்தெடுத்தார் என்றால், அது அவர் கலைப் பண்புக்கு, தமிழன்புக்கு சீரிய சான்றாகும்.’’

பன்மொழிப் புலவர் அப்பாத்துரையாரின் இந்தக் கருத்தினையொட்டி சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களும் அறிக்கையொன்றினை விடுத்தார்.

“நீராருங் கடலுடுத்த” – என்று தொடங்கும் பாடல் அரசு விழாக்களிலும், அமைச்சர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளிலும் பாடப்பட வேண்டுமென்று கலைஞர் கொடுத்த அறிவிப்பு, தமிழ் மொழிப் பற்றுடைய அனைவர்க்கும் கரும்பாக இனித்திடும்போது -ஏனோ ஆனந்த விகடனுக்கு மட்டும் வேம்பாகக் கசக்கிறது! அரசு விழாக்களில் தமிழைத் தெய்வமாக வழிபடுவோம் எனக் கலைஞர் கூறியிருக்கிறார்.

மொழியைத் தெய்வமாக வழிபடுவது பிழையெனில், இந்தப் பிழையை முதலில் செய்த பெருமை, வடமொழியாளர்க்கே உரிமை! மொழி வாழ்த்தையே கடவுள் வாழ்த்தாகப் பாடுவது பொருத்தமற்றது என்கிறார் கி.வா.ஜ.! “ஓம்” என்ற எழுத்து வடிவம்தான் ஒலி வடிவமாக _- இறை வடிவமாக _- பிரணவ மந்திரமாக வழிபடப்படுகிறது என்பதை அவர் மறந்தார் போலும்!’’

திரு. ம.பொ.சி. அவர்களைத் தொடர்ந்து தமிழ்அறிஞர் டாக்டர் மு.வரதராசனார் அவர்கள் “நாடும் மொழியும் ஒருங்கே போற்றப்படும் சிறப்புக்குரிய அந்தப் பாடல் தமிழ்நாட்டு மக்கள் ஏற்கத்தக்க வாழ்த்துப் பாடல்’’ என்று அறிவித்தார்.

தமிழ்த்தாய் வாழ்த்து இன்றைக்கு தமிழ்நாடு அரசு நிகழ்ச்சிகளில் பாடப்படும்பொழுது, அந்தப் பாடல் எத்துணை எதிர்ப்புகளைச் சமாளித்து வெளிவந்துள்ளது என்ற கடந்த காலச் சரித்திரம் பலருக்குத் தெரியாமலே கூட இருக்கலாம்; அதனால்தான் நினைவூட்டினேன்!

– கலைஞரின் ‘நெஞ்சுக்கு நீதி’ இரண்டாம் பாகம்

– ‘முரசொலி’, 21.12.2021 பக்.10)

புதன், 27 ஜூலை, 2022

திருவில்லிப்புத்தூர் அருகே பெருங்கற்காலத்தை சேர்ந்த இரும்பு உருக்காலை தடயம் கண்டுபிடிப்பு

தமிழர்களின் இரும்புக்காலம்

செவ்வாய், 17 மே, 2022

தமிழ்நாட்டின் தொல்லியல் துறை கண்டுபிடிப்புகள் கொந்தகை தளத்தில் முதுமக்கள் தாழிகள்

ஞாயிறு, 17 ஏப்ரல், 2022

அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை 'சமத்துவ நாளாக'க் கொண்டாடிட தமிழ்நாடு அரசு அறிவிப்பு

ஞாயிறு, 6 பிப்ரவரி, 2022

உலகின் சிறந்த அறிவியல் ஆய்வாளர்கள் பட்டியலில் தமிழர்கள் அதிகம்

ஞாயிறு, 30 ஜனவரி, 2022

திருக்குறள் குறித்த தந்தை பெரியாரின் கருத்துகள்

தை மாதத்தை ஆண்டின் முதல் மாதமாக குறிப்பிடும் பழங்கால கல்வெட்டு


தை மாதத்தை வருடத்தின் முதல் மாத மாக குறிப்பிடும் பழங்கால கல்வெட்டு கண்டு பிடிப்பு கீழக்கரையில் தை மாதத்தை வருடத்தின் முதல்மாதமாக குறிப்பிடும் பழங்கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுஉள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் வள்ளல் சீதக்காதி சாலையில் உள்ள ஜும்மா பள்ளிவாசலில் காலச்சக்கர பழங்கால கல் வெட்டு ஒன்று உள்ளது. அந்த கல்வெட்டில் தை மாதத்தை தமிழ் ஆண்டு ஆரம்ப மாதமாக குறிக்கப்பட்டு உள்ளது. அதாவது சூரியன் உத்ராயணத்தில் பிரவேசிக்கும் மாதமாகிய தை மாதத்தில் ஆரம்பித்து ஆனியில் முடி வுற்று பின் அங்கிருந்து தட்சனாயனத்தில் பிரவேசிக்கும் மாதமாகிய ஆடியில் ஆரம் பித்து மார்கழியில் முடிவடைகிறது.

முற்காலத்தில் கோள்களின் சுழற்சியை அடிப்படையாக கொண்டே காலத்தை கணித்துள்ளார்கள். பூமியின் சுழற்சியால் சூரியன் பூமியின் தென்பகுதியில் இருந்து வடபகுதியின் கடைசிக்கும், வடபகுதியில் இருந்து தென்பகுதியின் கடைசிக்கும் செல்ல முறையே 6 மாத காலங்கள் எடுத்துக்கொள் கிறது. இதற்கு முறையே உத்தராயனம் என் றும் தட்சனாயணம் என்றும் கூறப்படுகிறது. ஒரு ஆண்டை 12 ராசிகளாக பிரித்துள்ளார் கள். ஒவ்வொரு ராசியிலும் சூரியன் பிரவே சிக்கும் நாட்களே அந்த மாதத்தின் மொத்த நாட்களாக கணக்கிட்டுள்ளனர். சூரியன் உத்ராயனத்தில் பிரவேசிக்க தொடங்கும் முதல் மாதமே ஆண்டின் முதல் மாதம் என்றும் அதுவே தை மாதம் எனவும், சூரியன் உச்சம் பெரும் மாதம் சித்திரை என்றும், அவ்வாறு சூரியன் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி உத்தராயனத்தில் (மகர ராசியில்) பிரவேசிக்கும் காலமே சிறந்த உத்தம காலம் என்றும் ஜோதிட வல்லுனர்களின் கணிப்பாக உள்ளது.

தை மாதத்தில் அதிக வெப்பம் மற்றும் அதிக குளிர் இல்லாமல் இதமான சூழல் இருக்கும். தைப்பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழிக்கு ஏற்ப சுப காரியங்கள் இந்த மாதத்தில் ஆரம்பிப்பதும், செயல் படுத்துவதும் சிறப்படையும் என்ற நம்பிக்கை மக்களிடம் உண்டு. மார்கழியில் அறுவடை முடித்து புது அரிசி கொண்டு சூரியனுக்கு பொங்கலிட்டு உழவர்கள் தை மாதத்தை வரவேற்கின்றனர். இந்த வழக்கம் பண்டைய காலத்தில் இருந்தே தொடர்கிறது என்பதை இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. ராஜராஜ சோழன் தன் களஞ்சியத்தில் உள்ள பழைய தானியங்களை எடுத்து தர்மம் செய்துவிட்டு புதிய தானியங்களை கொள்முதல் செய்து விடுவாராம். இதுபோன்ற பல சிறப்புகள் தை மாதத்திற்கு இருந்து வருகிறது.

இதன்படி 2006-2011ஆம் காலத்திலிருந்த தமிழக அரசு தை மாத பிறப்பை தமிழ் புத் தாண்டாக அறிவித்தது. இந்த அறிவிப்பிற்கு ஏற்பும், சிலரின் எதிர்ப்பும் இருந்து வந்தது. இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் இந்த அறிவிப்பை நீக்கி மீண்டும் சித்திரை மாதத்தின் முதல் தேதியே தமிழ் புத்தாண்டு பிறப்பாக அறிவிக்கப்பட்டது. தற்போது காணப்பட்டுள்ள முன்னோர்களின் பழங்கால கல்வெட்டு தை மாதத்தை தமிழ் மாதத்தின் தொடக்க மாதமாக ஆரம்பித்துள்ளதை நிரூபித்துள்ளது. 300 ஆண்டுகளுக்கு முன்பு தை மாதத்தை தமிழ் வருடத்தின் முதல் மாதமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக் கலாம் என்பதற்கு சான்றாக இந்த பழங்கால கல்வெட்டு உள்ளது. இந்த தகவலை கீழக் கரை வரலாற்று தொல்லியல் ஆய்வாளர் விஜயராமு தெரிவித்தார்.

பொங்கல்

பார்ப்பனர்கள் பொங்கல் விழாவைக் கொண்டாடுகிறார்களா?