தமிழ் வருஷப் பிறப்பு என்ற பெயரில் தேநீர் விருந்து உபச்சாரம் தடபுடல் ஏன்?
தமிழ்ப் பெருமக்களே, இந்தப் பனிப்போர் மூட்டத்தைப் புரிந்துகொள்ளுங்கள்!
அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை சமத்துவ நாளாகக் கொண்டாடிட அரசு அறிவிப்பு - தமிழ் வருஷப் பிறப்புக்குத் தேநீர் விருந்து உபச்சாரம் தடபுடல் ஏன்? தமிழ்ப் பெருமக்களே, இந்தப் பனிப்போர் மூட்டத்தைப் புரிந்துகொள்ளுங்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு.
இன்று (14.4.2022) - தமிழ் வருஷப் பிறப்பாம்!
இந்த வருஷத்திற்கு - அது ஆண்டு அல்ல - பெயரே வடமொழி, ஆரிய, சமஸ்கிருதச் சொல், ‘சுபகிருது' வருஷமாம்!
‘‘தமிழ்(?) வருஷப் பிறப்புக்கான புராணக் கதை - அதன் மூலம் (Origin) தெரியுமா?
இதோ ‘அபிதான சிந்தாமணி' என்ற அக்கால தமிழ்க் கலைக்களஞ்சியத்தினைப் பாருங்கள்:
‘‘வருஷம் ஒரு முறை நாரத முனிவர் கிருஷ்ணமூர்த் தியை நீர் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக் கிறீரே எனக்கு ஒரு கன்னிகை தரலாகாதா என்று கேட்க,
அதற்குக் கண்ணன் நான் இல்லாப் பெண்ணை வரிக்க என் உடன்பட்டுத்தான் (60,000) வீடுகளிலும் பார்த்து, கண்ணன் இல்லா வீடு கிடைக்காததினால், கண் ணனிடம் வந்து அவர் திருமேனியில் மய்யல் கொண்டு, அவரை நோக்கி நான் தேவரீரிடம் பெண் ணாய் இருந்து ரமிக்க எண்ணங் கொண்டேன் என்றனர்.
கண்ணன் யமுனையில் நாரதரை ஸ்நானஞ் செய்ய ஏவ, முனிவர் அவ்வகை செய்து ஒரு அழகுள்ள பெண்ணாயினர்.
இவளுடன் (நாரத முனிவர்) கண்ணன் அறுபது வருஷம் கிரீடித்து அறுபது குமாரரைப் பெற்றனர். அவர்கள் பெயர் பிரபவ முதல் அக்ஷய இறுதியான வர்களாம். இவர்கள் வருஷமாம் பதம் பெற்றனர்.
பிரபவ, விபவ, சுக்கில, பிரமோதூத, பிரசோத்பத்தி, ஆங்கீரச, ஸ்ரீமுக, பவ, யுவ, தாது, ஈசுவர, வெகுதானிய, பிரமாதி, விக்ரம, விஷு, சித்திரபானு, சுபானு, தாரண, பார்த்திப, விய இவ்விருபதும் உத்தம வருஷங்கள்.
சர்வஜித்த, சர்வதாரி, விரோதி, விகிர்தி, கர, நந்தன, விஜய, ஜய, மன்மத, துன்முகி, ஏவிளம்பி, விளம்பி, விகாரி, சார்வரி, பிலவ, சுபகிருது, சோபகிருது, குரோதி, விஸ்வாவசு, பராபவ இவ்விருபதும் மத்திம வரு ஷங்கள்,
பிலவங்க, கீலக, சவுமிய, சாதாரண, விரோதி கிருது, பரிதாபி, பிரமாதீச, ஆனந்த, இராக்ஷஸ, நள, பீங்கள, காளயுக்தி, சித்தார்த்தி, ரவுத்ரி, துன்மதி, துந்துபி, உருத்ரோத்காரி, இரத்தாக்ஷி, குரோதன், அக்ஷய இவ்விருபதும் அதம வருடங்களாம்.''
(ஆண் கடவுள் கிருஷ்ணனுக்கும், ஆண் முனிவர் நாரதருக்கும் பிறந்த அறுபது பிள்ளைகளின் பெயர் தான் இவை.)
(ஆதாரம்: ‘அபிதான சிந்தாமணி' பக்கம் 1392).
‘‘தமிழ்'' வருஷங்கள் மொத்தம் 60 தானாம்! அவை யாவையும் கிருஷ்ணனும், நாரதரும் பெற்றெடுத்த பிள்ளைகளாம்!
60 வருஷங்களுக்குமேல் வாழ்பவர்கள் வயது கணக் கிலும் பல ஆண்டுகளுக்குப் பின் குழப்பமே மிஞ்சும்.
தமிழ் வருஷப் பிறப்பு என்பது சித்திரை அல்ல - புரட்சிக்கவிஞர் இடித்துச் சொன்னார்.
“நித்திரையில் இருக்கும் தமிழா
சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு
அண்டிப் பிழைக்க வந்த ஆரியர் கூட்டம் காட்டியதே
அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழருக்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!”
பண்பாட்டுப் படையெடுப்பினால் ஏற்பட்ட விளைவு இது!
இந்த ‘வருஷம்' இந்தப் பண்பாட்டுப் படையெடுப்புக்குப் புத்தாக்கம் தரும் வகையில் - இதற்குமுன் எப்போதும் இல்லாத கொண்டாட்டம் ஆளுநர் மாளிகையில் - ராஜ் பவனில்! அழைப்பிதழ் அனுப்பிக் கொண்டாடும் சனாதன மீட்டுருவாக்க பண்டிகைக் கொண்டாட்டமா?
செம்மொழி தமிழுக்குக் காட்டாத ஆர்வம், ‘‘தமிழ் வருஷப் பிறப்பு'' என்று கூறி, தேநீர் விருந்து உபச்சாரம் தடபுடல் ஏன்?
ஆரிய மாயை அங்கே ஆட்சி செலுத்தும் இப்போதைய நிலையால்!
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதலமைச்சர்; அவரது ஆட்சி அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை சமத்துவ நாளாகக் கொண்டாடிட அரசு அறிவிப்பு - உறுதிமொழி ஏற்பு.
ஆனால், அதே நாளில், அங்கே சனாதனச் சங்கமம்!
இரண்டு பண்பாட்டுக் கத்திகள் ஒரே உறையில்.
தமிழ்ப் பெருமக்களே, இந்தப் பனிப்போர் மூட்டத்தைப் புரிந்துகொள்ளுங்கள்!
சென்னை
14.4.2022