பக்கங்கள்

வியாழன், 20 டிசம்பர், 2018

திராவிட இயக்கம், தமிழுக்கு என்ன செய்தது?

நீதிக்கட்சி 102 ஆம் ஆண்டு விழாவில் பேராசிரியர் அ.இராமசாமி உரை

நீதிக்கட்சி என்ற ஒன்று மட்டும் இல்லாமல் இருந்தி ருந்தால், இன்றைக்கு நாம், நாமாக இருந்திருக்க மாட்டோம். இதைச் சொன்னால், சிலர் கேட்கின்றார்கள், திராவிட இயக்கங்கள் என்ன செய்தது என்று? குறிப்பாக திராவிட இயக்கம், தமிழுக்கு என்ன செய்தது? என்று கேட்கிறார்கள்.

மணிப்பிரவாள நடை என்ற


ஒரு மரணக்குழியில்...


நீதிக்கட்சி தொடங்கப்பட்ட காலத்தில், மணிப்பிர வாள நடை என்ற ஒரு மரணக்குழியில் தமிழ் தள்ளப் பட்டு இருந்தது. கொஞ்சம் ஏமாந்திருந்தால், மலை யாளத்தைப் போல் மாறி, தமிழ் மறைந்து போயிருக்கும். அதை மீட்டெடுத்தது திராவிட இயக்கம்தான்.

அந்த அளவிற்கு, சமஸ்கிருதம் ஆதிக்கம் செலுத் திக் கொண்டிருந்த காலகட்டம் அது. கொடுமை என்ன வென்றால், சென்னை பல்கலைக் கழகத்தில் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் எல்லாம் சமஸ்கிருதம் படிக்க வேண்டும் என்று சொன்னார்கள்.

எனக்குத் தெரியவில்லை, சுக்கலாம் பரவரம், சசிவர்ணம், சதுர்புஜம், பிரசன்ன வதம் என்று சமஸ்கிருத சுலோகம் சொல்லி, ஆபரேசன் செய்தால்தான், நோயாளி பிழைப்பானா? என்று எனக்குத் தெரியவில்லை.

சமஸ்கிருதம் படிக்கவேண்டும் என்கிற கொடுமையை நீக்கியது நீதிக்கட்சி


அந்தக் கொடுமையை, மருத்துவ மாணவர்கள் சமஸ்கிருதம் படிக்கவேண்டும் என்கிற கொடுமையை நீக்கியது நீதிக்கட்சிதான்.

அதுமட்டுமல்ல, தமிழ் வளர்ச்சிக்கு என்று தனியாக ஒரு பல்கலைக் கழகம் தொடங்குவதற்கு ஊக்கமளித்தது, அண்ணாமலைப் பல்கலைக் கழகம் தொடங்குவதற்கு ஊக்கமளித்தது நீதிக்கட்சிதான்.

தமிழுக்குத் தனித் துறையும்,


தமிழ்ப் பாடத்தையும்...


சென்னை பல்கலைக் கழகத்தில், தமிழ்த் துறையே கிடையாது. கீழ்த்திசை மொழிகள் என்ற துறையில், நான்கோடு ஒன்றாக, தமிழ் மொழியும் சேர்க்கப்பட்டு இருந்தது. தமிழுக்குத் தனித் துறையும், தமிழ்ப் பாடத் தையும் சென்னை பல்கலைக் கழகத்தில் ஏற்படுத்தித் தந்தது நீதிக்கட்சிதான்.

வீரமாமுனிவர் எழுத்துச் சீர்திருத்தத்தைத் தந்தார்; அவருக்குப் பிறகு தமிழிலே எழுத்துச் சீர்திருத்தத்தைத் தந்தவர் தந்தை பெரியார் அவர்கள்தான்.

கணினி கண்டுபிடிப்பதற்கு முன்பே


எழுத்துச் சீர்திருத்தத்தை கண்டுபிடித்தவர்தான் தந்தை பெரியார்


அதில் ஒன்றை நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும் - இன்றைக்கு கணினியில் பயன்படுத்தக் கூடிய எழுத்துச் சீர்திருத்தத்தை, கணினி கண்டுபிடிப்பதற்கு முன்பே கண்டுபிடித்தவர்தான் தந்தை பெரியார் அவர் கள். எந்த அளவிற்குத் தொலைநோக்கு சிந்தனை யோடு அவர் செயல்பட்டார் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக வந்த பிறகுதான், அரசு பணிகளில் தமிழ் மொழி பவனிவரத் தொடங்கியது.

‘சத்யமேவ ஜெயதே' மாறி,


வாய்மையே வெல்லும் என்று வந்தது


தலைமைச் செயலகம் வந்தது - சத்யமேவ ஜெயதே மாறி, வாய்மையே வெல்லும் என்று வந்தது என்று இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். ஏன், இன்றைக்கு நாம் புழங்கிக் கொண்டிருக்கின்றோமே, இந்தத் தமிழ்நாடு என்ற பெயரே அறிஞர் அண்ணா அவர்கள் தந்ததுதான்.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச் சராக வந்த பிறகுதான், கடவுள் வாழ்த்து போய், தமிழ்த்தாய் வாழ்த்து வந்தது. உயர்கல்வியில், பயிற்று மொழியாக தமிழ் ஊக்குவிக்கப்பட்டது. கோவில்களில், தமிழில் அர்ச்சனை செய்ய உரிமை வழங்கப்பட்டது. உயர்நீதிமன்றம் தமிழில் செயல்பட சட்டப்பேரவையில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழுக்குச் செம்மொழி என்ற தகுதி வழங்கப்பட்டது என்று தமிழுக்கு இப்படி ஏராளமாக நிறைய செய்து வைத்திருக்கிறோம்.

-உரையின் ஒரு பகுதி

- விடுதலை நாளேடு, 15.12.18

செவ்வாய், 18 டிசம்பர், 2018

தலைமைச் செயலகத்திலேயே தமிழ் கிடையாதா

*"விடுதலை" நாளிதழ் தலைப்புரை (18.12.2018)*
-------------------------------------------------------
*"தலைமைச் செயலகத்திலேயே தமிழ் கிடையாதா?"*

தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள், தமிழில் இடம்பெற வேண்டும். தேவையானால், தமிழின் எழுத்து அளவை விட சிறிதாக, ஆங்கிலத்தில் பெயர் இடம்பெறலாம் என, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து, பல ஆண்டுகள் ஆகி விட்டன.

ஆனால் அதை, தனியார் நிறுவனங்கள் மீறி வந்த நிலையில், தற்போது தமிழக அரசு செயல்படும் தலைமைச் செயலகத்திலேயே, தமிழ் புறக்கணிக்கப் படும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளதை, அறிய முடிகிறது. சென்னை, தமிழக அரசின் தலைமைச் செயலக வளாகத்தில் அமைந்துள்ளது, நாமக்கல் மாளிகை. இங்கு, அரசு துறை செயலர்களுக்கான அலுவலகங்கள் உள்ளன. 10 மாடி கட்டடத்தில், எங்கும் தமிழ் சொற்களே இல்லை எனும் அளவிற்கு, அனைத்திலும் ஆங்கிலமே இடம் பெற்று உள்ளது.

இதுகுறித்து, தமிழ் அறிஞர்கள் கூறியதாவது:

தமிழகத்தில், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டம், 1947 - 15 மற்றும், 1958ஆம் ஆண்டு, தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் சட்டம், 42 பி ஆகியவற்றின் படி, நிறுவனத்தின் பெயர் பலகைகள், தமிழில் இருக்க வேண்டும்.ஆங்கிலத்திலோ, பிற மொழியிலோ, பெயர்ப்பலகை எழுதும் அவசியம் ஏற்பட்டால், தமிழ், ஆங்கிலம், பிறமொழி என, முறையே, 5 : 3 : 2 என்ற அளவில், எழுத்து அளவு இருக்க வேண்டும் என, விதி உள்ளது. இதை, தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை கண்டுகொள்வதில்லை. இதனால், தமிழகத்தில் உள்ள, 50 சதவீத வணிக நிறுவனங்களில், ஆங்கிலம் மட்டுமே இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து, தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநரிடம், நாங்கள் புகார் அளித்தோம். இந்நிலையில், தமிழக அரசு செயல்படும் தலைமைச் செயலகத்திலேயே, ஆங்கிலம் மட்டுமே இடம்பெற்றுள்ளது, அதிர்ச்சியை அளிக்கிறது. மேலும், அங்கிருந்து அனுப்பப்படும் அறிக்கை மற்றும் கடிதங்களும், ஆங்கிலத்திலேயே உள்ளன. நம் தாய் மொழியை புறக்கணித்து, பிற மொழிக்கு, நம் அரசு அக்கறை காட்டுகிறதோ... என, சந்தேகம் எழுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது குறித்து, தலைமைச் செயலக அதிகாரிகள் கூறியதாவது:

தமிழ் வளர்ச்சித் துறையின் துணை இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர்கள், அவர்களின் பகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கடை உரிமையாளர்களிடம், சட்டத்தை எடுத்துக் கூறி, ஒரு மாதத்திற்குள், தமிழில் பெயர்ப்பலகை வைக்க வேண்டும் என, வலியுறுத்தி உள்ளனர்.

தமிழில், பெயர்ப்பலகை வைத்த கடை உரிமை யாளருக்கு, பாராட்டுப் பத்திரங்களை வழங்கி வருகிறோம்.

தலைமைச் செயலகத்தில், தற்போது புதிய பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. விரைவில், தமிழிலும் பெயர் பலகை வைக்க, நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

- (தினமலர், 06.12.2018)

தினமலரிலேயே இப்படியொரு செய்தி வெளி வந்துள்ளது.

தமிழ்மொழியை செம்மொழியாக்க சட்டம் கொண்டு வந்தால் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக் கெடுத்து ஓடும்; ஏழை நெசவாளர் வீட்டுத்தறி நிற்காமல் இயங்கும்; ஒரு வேளை கஞ்சிக்கே வழி இல்லாதவர்களுக்கு மூன்று வேளை மட்டன் பிரியாணி கிடைக்கும் ('தினமலர்' வார மலர் 13.6.2004) என்று கேலி செய்த தினமலரே சுட்டிக் காட்டும் அளவுக்குத் தமிழ் நாட்டில், அதுவும் அரசின் தலைமைச் செயலகத்தில் தமிழைக் காண முடியவில்லை என்று எழுதுகிறது என்றால் இந்த நிலை மிகவும் தலையிறக்கம் தான்! தமிழ் வளர்ச்சித்துறை என்ன செய்கிறது? செய்தி விளம்பரத்துறை என்னதான் செய்து கொண்டுள்ளது? நம் மக்களிடம் பெரும்பாலும் சி.பி.எஸ்.இ. மனப் பான்மைதான் கோலோச்சுகிறது!

தமிழ் வளர்ச்சிக்கென்று ஓர் அமைச்சர் இருக்கிறாரே - 'தினமலர்' செய்தி அவர் கவனத்துக்கு வரவில்லையா?

எது எதற்குத்தான் போராடுவது என்று தெரிய வில்லை....

ஒவ்வொன்றுக் காகவுமா போராட முடியும்? ஒட்டு மொத்த ஆட்சி மாற்றமே நிலையான தீர்வு.

*நன்றி : "விடுதலை" நாளிதழ் தலைப்புரை 18.12.2018*

ஞாயிறு, 16 டிசம்பர், 2018

பெயர் பலகைகளில் தமிழில் எழுதுவதை ஊக்குவிக்க வேண்டும்: ஆட்சியர்

கிருஷ்ணகிரி, டிச.9  கிருஷ்ணகிரியில் ஆட்சியர் அலுவல கத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஆட்சி மொழி கருத்தரங்கு நிறைவு விழா நடந்தது. இதற்கு ஆட்சியர் பிரபாகர் தலைமை தாங்கினார். அகரமுதலி திட்ட இயக்குனர் செழியன், தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் ஜெயஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கலெக்டர் பிரபாகர் பேசியதாவது:-


தமிழகத்தில் ஆட்சி மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என தமிழ் அறிஞர்களும், தலைவர்களும், பல போராட்டங்ளை நடத்தி 1956ஆம் ஆண்டு தமிழ் ஆட்சி மொழி சட்டம் இயற்றப்பட்டது. அதிக அளவில் மக்களுக்கும், அரசிற்கும் இடையே நிர்வாக நடைமுறைகள் ஒளிவுமறைவின்றி நடைபெறவும், பல்வேறு அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தமிழில் மட்டுமே கையொப்பம் இட வேண்டும் என 1978ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டுள்ளது. எனவே அரசு துறையில் பணியாற்றும் அலுவலர்கள் பணி யாளர்கள், தமிழில் மட்டுமே கை யொப்பம் இட வேண்டும்.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள், உணவகங்கள், வணிக நிறுவனங்கள், பெயர் பலகைகளில் தமிழில் எழுதுவதை ஊக்குவிக்க வேண்டும். அலுவலர்கள் கோப்புகளை பராமரிக்கும் போது தவறு இல்லாமல் அலுவலக குறிப்பு கடித போக்குவரத்து பதிவேடுகள், சிறப்பாக கையாண்டு புதிதாக உள்ள சொற்களை தமிழில் சிறப்பாக எழுதி கோப்புகளை கையாள வேண்டும். மொழியின் வாழ்வும் வளர்ச்சியும், பயன்பாட்டை பொருத்தே அமையும் என்பதால் எங்கும், எதிலும் தமிழ்மொழியை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தொடர்ந்து அலுவலக கோப்புகளை தமிழில் சிறப்பாக கையாண்ட மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கருக்கு கலெக்டர் பிரபாகர் கேடயம் வழங்கி பாராட்டினார்.


-  விடுதலை நாளேடு, 9.12.18

மறைமலை அடிகளால்...தமிழ் மொழியின் மறுமலர்ச்சி, 1916ஆம் ஆண்டிலிருந்து, பல் லவபுரத்தைச் சேர்ந்த மறைந்த மறைமலை அடிகளால் தொடங் கப்பட்டது. தமது வாழ்நாளில் மிகச்சிறந்த தமிழ்க் காப்பா ளராக விளங்கிய அடிகள், ஆரியர் வருகைக்கு முன்பிருந்த தமிழை, தூய்மை யான தமிழை, மறுபடியும் அரங் கேற்றத் தொடங்கினார்.


மயக்கமும், அய்யப்பாடு களும் மறைந்தொழிய, தமிழை, தற்காலப் புதிய சிந்தனைகளை வெளிப் படுத்தப் பயன்படுத்தினார். கருத்தாழம் கொண்ட தமது வளமையான பல்வேறு இலக்கியப் படைப்புகளை தனித்தமிழால் மட்டுமே எழுதி, தமிழின் தகுதியை உயர்த்தினார். மறைமலை அடிகளாரின் தனித்தமிழ் இயக்கம், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், திணிவு வேகத் தைக் கொடுத்தாலும், அரசு அம்முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்காததால், இணைக்கமான தாங்கு பயன் கிடைக்கவில்லை. உண்மையான முரண்கள் என்னவெனில், சூழ்நிலைகள், தமிழுக்கு எதிரானவையாகவே மாறின.


குறிப்பாக, இந்திய விடு தலைக்குப் பின் முரண்பட்ட சிந்தனையுள்ள தமிழறிஞர்கள், தொல் மரபுகளை மீறி மேல்நிலை பெற்றனர். இதன் வெளிப்பாடு, கோலாலம்பூரில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் மெய்யானது. அம்மாநாட்டை நடத்தியவர்கள், மறைமலையடிகளின் தனித்தமிழ்ப் பற்றாளர்கள், அம்மாநாட்டில் பங்கேற்க விடாமல், தடுத்து விட்டனர்.

மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணரின் The Primary Classical Language of the World  உலகின் முதல் செம்மொழி தமிழில் டாக்டர் ம.சோ.விக்டர், யாத்திசைப் பதிப்பகம், அரியலூர்-621713.

- க.பழநிசாமி, தெ.புதுப்பட்டி

-  விடுதலை ஞாயிறுமலர், 24.11.18

திங்கள், 10 டிசம்பர், 2018

தமிழில் பெயர் பலகை வைக்கும் அரசாணையை அமல்படுத்தாததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முதன்மை செயலருக்கு தாக்கீது

மதுரை, டிச.10  தமிழில் பெயர் பலகை வைக்கும் அரசாணையை அமல்படுத்தாததால், தொடரப் பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அரசு முதன்மை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றக் கிளை உத்தர விட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், மோர்பண்ணையை சேர்ந்த வழக் குரைஞர் திருமுருகன், உயர்நீதி மன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்திலுள்ள பெரும்பாலான வணிக நிறுவ னங்கள், பன்னாட்டு நிறுவனங் கள் தங்களின் நிறுவன பெயர் பலகைகளை தமிழில் வைக் காமல் ஆங்கிலத்தில் மட்டுமே வைத்துள்ளன.

கருநாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் பெயர் பலகைகள் அனைத்தும் அந்த மாநில மொழியிலேயே வைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் 1987 அரசாணைப் படி ஆட்சி மொழியான தமிழ் மொழியை, அனைத்து அரசு அலுவலகங்கள், தனியார் கடைகள் மற்றும் நிறுவனங்களில் முதல் மொழியாக பயன்படுத்த வேண்டும். ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழிகளை பயன்படுத்து வதாக இருந்தால் தமிழ் மொழி யின் கீழ் 5:3:2 என்ற விகிதத்தில் பயன்படுத்த வேண்டும்.

ஆனால், இந்த அரசாணையை தமிழகத்தில் யாரும் பின்பற்ற வில்லை. இது தமிழ் மொழியை அவமதிக்கும் செயல். எனவே, அரசாணையை பின்பற்றி பெயர் பலகைகளை உரிய விகிதப்படி தமிழ் மொழியில் வைக்க உத்தர விடக்கோரி ஏற்கெனவே மனு செய்திருந்தேன். அதில், அர சாணையை முறையாக அமல் படுத்த தமிழ் பண்பாடு மற்றும் கலாசாரத்துறை முதன்மை செயலர் 4 மாதத்திற்குள் நட வடிக்கை எடுக்க கடந்தாண்டு ஜூலையில் உத்தரவிடப்பட்டது.

ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இதற்கு காரணமான அதிகாரி மீது நீதிமன்ற அவமதிப் பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.  இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமி நாதன் ஆகியோர், மனு குறித்து தமிழ் மொழி மற்றும் கலாச் சாரத் துறை முதன்மை செயலர் வெங்க டேசனுக்கு தாக்கீது அனுப்ப உத் தரவிட்டு, விசாரணையை டிச.19க்கு தள்ளி வைத்தனர்.

-  விடுதலை நாளேடு, 10.12.18

வெள்ளி, 30 நவம்பர், 2018

தந்தை பெரியார் எழுத்து சீர்திருத்தம் தினமலர்' ஒப்புதல்

ஆர்.நூருல்லா, தலைமை நிருபர், தினமலர் (பணி நிறைவு), சென்னையிலிருந்து எழுதுகிறார்: 'தமிழ் நாளிதழ்களில் முதல்முறையாக, ஈ.வெ.ரா.,வின் எழுத்து சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தியவர், அய்ராவதம் மகாதேவன்' என, தமிழ் நாளிதழ் ஒன்றில், ஒருவர் கட்டுரை எழுதி இருந்தார்; அது, தவறான கருத்து!


நான், 'தினமலர்' நாளிதழில், பல ஆண்டுகள் நிருபராக பணியாற்றி ஓய்வு பெற்றவன். அதன் ஆசிரியர், டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தியுடன் பழகியவன் என்ற அடிப்படையில், வாசகர்களுடன் சில கருத்துகளை பகிர்ந்து கொள்ள விரும்பு கிறேன்...


தமிழக முதல்வராக, எம்.ஜி.ஆர்., இருந்தபோது, 1977 இல், ஈ.வெ.ரா.,வின் எழுத்து சீர்திருத்தத்தை, முதன் முதலில், தினமலர் நாளிதழில் அறிமுகப்படுத்தியவர், இரா.கிருஷ்ணமூர்த்திதான். அப்போது, நான், 'தினமலர்' நாளிதழின் நிருபராக பணிபுரிந்தேன்.


ஆனால், வரலாற்று உண்மை தெரியாமல், 'அய்ராவதம் மகாதேவன்' என தவறாக, அந்த கட்டுரையாளர் கூறியுள்ளார். அய்ராவதம் மகாதேவன், தொல்லியல் துறையிலும், தமிழ் வளர்ச்சித் துறையிலும் சாதித்தவர் என்பதில் மாற்று கருத்து கிடையாது.


ஆனால், தமிழில் முதன்முதலாக, ஈ.வெ.ரா.,வின் எழுத்து சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தியது, 'தினமலர்' நாளிதழ்தான். அதை, பத்திரிகை வாயிலாக அறிமுகப்படுத்திய பெருமை, அதன் ஆசிரியர், இரா.கிருஷ்ணமூர்த்தியை சாரும் என்பதை, பெருமிதத்துடன் கூற விரும்புகிறேன்.


தமிழ் எழுத்து சீர்திருத்தம் தொடர்பாக, அந்த கட்டுரையாளர் கூறிய கருத்து, வரலாற்று பிழையாக கருதுகிறேன்!


(தினமலரில் (30.11.2018) வெளிவந்த கடிதம்)
-  விடுதலை நாளேடு, 30.11.18
குறிப்பு:-

தந்தை பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தை, 'தமிழக அரசின் ஆணைக்கு பின் முதலாவதாக இதழில் அறிமுகப்படுத்தியது தினமணி தான் என்று எழுதி இருந்தால் கூட பரவாயில்லை; ஆனால் தந்தை பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தை அய்ராவதம் மகாதேவன் தான் கண்டுபிடித்தார் என்று கூறுவது மகா மகா அயோக்கியத்தனம்.

தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்திற்கு யார் முன்னோடி?

தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்திற்கு யார் முன்னோடி?
தினமணி' ஆசிரியர் அய்ராவதம் மகாதேவன் அவர்கள் கல்வெட்டு ஆய்வாளர் - தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்திலும் ஆர்வம் கொண்டவர் என்பதற்காக அவர்தான் பெரியாருக்கு முன்பாகவே தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தின் முன்னோடி என்று தினமணி' (27.11.2018) தலையங்கத்தில் எழுதியிருப்பது எத்தகைய மோசடி!

இன்று பரவலாகப் பெரியார் எழுத்து' என்று அழைக்கப்படும் எழுத்துச் சீர்திருத்தம் உண்மையில் அய்ராவதம் மகாதேவன் ஏற்படுத்திய இதழியல் சீர்திருத்தம், தமிழகத்தில் முதன்முதலில் எழுத்துச் சீர்திருத்தத்தை தினமணி' நாளிதழில் அன்றைய ஆசிரியராக இருந்த அய்ராவதம் மகாதேவன் தான் அறிமுகப்படுத்தினார். அதைத் தொடர்ந்துதான் அனைத்து இதழ்களும், எழுத்துச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்தின என்பது உண்மை வரலாறு'' என்று இந்த 2018-லும் தினமணி' தலையங்கத்தில் தீட்டப்படுகிறது என்றால், இந்தப் பார்ப்பனர்கள் பொய்யென்று தெரிந்திருந்தும் கொஞ்சம்கூடக் கூச்ச நாச்சமில்லாமல் இப்படி ஒரு அண்டப் புளுகை, ஆகாயப் புளுகை அவிழ்த்துக் கொட்டும் கேடு கெட்ட தனத்தை என்னவென்று சொல்லுவது! தந்தை  பெரியார் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை செயல்படுத்தியது 1935 ஆம் ஆண்டிலேயே - இதோ ஆதாரம்:

உண்மை இவ்வாறு இருக்க, அய்ராவதம் மகாதேவன் தினமணி' ஆசிரியராகப் பணியாற்றியது 1987 ஆம் ஆண்டுமுதல் 1991 ஆம் ஆண்டுவரை நான்காண்டுகள்!தினமணி'யின் கணக்கில் 1935 ஆம் ஆண்டு என்பது 1987-க்குப் பிந்தியதோ!

நமது காலத்தில் நம் கண்முன் நடைபெற்றதையே இப்படி மோசடியாகத் திரித்து வெளியிடுகிறார்கள் என்றால், கடந்த காலத்தில் எப்படியெல்லாம் தில்லுமுல்லு திருகு தாளத்தில் ஈடுபட்டு இருப்பார்கள்.

இந்த வெட்கக்கேட்டில் அய்ராவதம் மகாதேவன்தான் முதன் முதலில் தினமணி'யின் எழுத்துச் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தது வரலாற்று உண்மையாம்.  பரவலாக பெரியார் எழுத்து' என்று அழைக்கப்படுகிறதாம். இப்படி எழுதுவதற்கு வெட்கப்பட வேண்டாமா தினமணி?

உடனடியாகத் திருத்தம் வெளியிடுவதுதான் ஆரோக்கியமானது.

அய்ராவதம் மகாதேவன் அவர்களுக்கு எவ்வளவோ சிறப்புகள் உண்டு. அவர் உடல்மீது பொய்யில் தொடுத்த ஒரு அழுக்கு மாலையைச் சூட்டுவது கூட மரணம் அடைந்த அவரைச் சிறுமைப்படுத்துவதாகும்.

-  விடுதலை நாளேடு, 30.11.18

வியாழன், 29 நவம்பர், 2018

பெரியார் எழுத்துச் சீர்திருத்தம் - வைத்தியநாத அய்யருக்கு பைத்தியமா?

வைத்தியநாத அய்யருக்கு பைத்தியமா?
பெரியார் எழுத்துச் சீர்திருத்தம் உண்மையில் அய்ராவதம் மகாதேவன் ஏற்படுத்தியதாம்!
இதைவிட வரலாற்று மோசடி வேறு உண்டா?
=============================================
- மஞ்சை வசந்தன்
-----------------------------------------------------------------------------
திருக்குறளே மனுதர்மத்திலிருந்து வந்தது என்ற திரித்துக் கூறும் ஆரிய கூட்டமல்லவா? இப்போது பெரியார் எழுத்துச் சீர்திருத்தத்தையும் அவருக்கு உரியதல்ல என்று கூறிவிட்டது!
தினமணி 27.11.2018 இதழில் தலையங்கத்தில் (ஆசிரியர் உரையில்) அதன் ஆசிரியர் வைத்தியநாதன், இன்று பரவலாகப் பெரியார் எழுத்து என்று அழைக்கப்படும் எழுத்துச் சீர்திருத்தம், உண்மையில் ஐராவதம் மகாதேவன் ஏற்படுத்திய இதழியல் சீர்திருத்தம்.

தமிழகத்தில் முதன்முதலில் எழுத்துச் சீர்திருத்தத்தை தினமணி நாளிதழில் அன்றைய ஆசிரியராக இருந்த ஐராவதும் மகாதேவன்தான் அறிமுகப்படுத்தினார். அதைத் தொடர்ந்துதான் அனைத்து இதழ்களும் எழுச்துச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்தின என்பது வரலாற்று உண்மை என்று எழுதியுள்ளார்.

பெரியார் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டு வந்தது 1935இல். அதுகுறித்த அறிவிப்பை  06.01.1935

பகுத்தறிவு இதழில் அறிவித்தார். அப்பகுதி இதோ:

க், ங், ச், க்ஷர்க்ஷ், ர்ஹ், ர், ர்பீ  எழுத்துகள் மாற்றம்
சென்ற வாரம் பகுத்தறிவில் எழுத்தில் சீர்திருத்தம் என்று ஒரு சிறு உபதலையங்கம் எழுதி இருந்ததில் இவ்வார முதல் கொண்டு நமது பத்திரிகை பழைய பெயராகிய குடிஅரசு என்னும் பெயராலேயே வெளியிடலாம் என்று கருதி அதில்  க், ங், ச், க்ஷர்க்ஷ், ர்ஹ், ர், ர்பீ  என்கின்ற எழுத்துகளை முறையே ணா - றா - னா - ணை - லை - ளை - னை என்று அச்சில் பிரசுரிக்கப்படும் என்பதாக எழுதி இருந்தோம் அந்தப் படிக்கே விஷயங்களை எழுத்துக் கோர்த்து இருந்தோம்.

வாசகர்கள் விஷயத்தைப் படிக்கும்போது ணா-றா-னா என்கின்ற எழுத்துகள் வரும் போது அவற்றை க், ங், ச்,  என்ற உச்சரிப்புப் போலவும், ணை - லை - ளை - னை என்கின்ற எழுத்துகள் வரும்போது ர்க்ஷ், ர்ஹ், ர், ர்பீ என்ற உச்சரிப்புப் போலவும் உச்சரித்துக் கூட்டி  வாசித்துக் கொள்ள வேண்டுமாய் கோருகிறோம். இந்தப்படியே சில புஸ்தகங்களும் பிரசுரிக்க இருக்கிறோம் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

[பெட்டிச் செய்தி -  பகுத்தறிவு அறிவிப்பு - 06.01.1935]
மேலும் 20.01.1935 நாளிட்ட குடிஅரசு தலையங்கத்தில் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் என்ற தலைப்பின் கீழ்,
தமிழ் பாஷை எழுத்துகள் விஷயமாய் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்பது அனேகருக்குள் வெகுகாலத்திற்கு முன்பு இருந்தே ஏற்பட்டிருந்த அபிப்பிராயங்களாகும்.......

தமிழ் ஏற்பட்டது இன்று நேற்றல்ல. எழுத்துகள் ஏற்பட்டது இன்று நேற்றல்ல. ஆனால் எழுத்துகள் கல்லிலும், ஓலையிலும் எழுதும் காலம் போய் காகிதத்தில் எழுதவும், அச்சில் வார்த்துக் கோர்க்கவும் ஏற்பட்ட காலம் தொட்டு இன்று வரை அவற்றில் யாதொரு மாற்றமும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. ஆதலால் யாராவது ஒருவர் துணிந்து இறங்க வேண்டிய தாயிற்று.

புதிய மாறுதல்களால் அதாவது போக்குவரத்து வசதியின் காரணத்தால் ஏற்பட்ட பல தேச மக்கள் கூட்டுறவாலும், பல தேச பாஷை  சொற்களும், பல தேசப் பொருள்களும் கலக்கும்படி ஏற்பட்ட சம்பவங்களாலும், இன்று அநேக வார்த்தைகள், உச்சரிப்புகள் தமிழில் சர்வ சாதாரணமாய் கலந்து விட்டன. அவைகளை உச்சரிக்கும்போதும், எழுதும் போதும் தமிழ் பாஷையும், தமிழ் எழுத்தும் விகாரமாய் வெட்கப்பட வேண்டி இருக்கிற தன்மையில் இருக்கின்றன.

(அதற்கு தத்துவார்த்தமும், விதியும் இருக்கலாம்) ஆதலால் சில எழுத்துகள் வேறு பாஷைகளில் இருந்து எடுத்துக் கொள்ள வேண்டியதுகூட மிக அவசியமாகும். அதற்கு வெட்கமாய் இருக்கும்பட்சம் புதியதாகவாவது எழுத்துகளை உண்டாக்கிக் கொள்ள வேண்டும்.

இவைகள் ஒருபுறமிருக்க, இப்போது உயிர் மெய்  எழுத்துகள் என்று சொல்லப்படும் 18 எழுத்துகளிலும் ஒவ்வொன்றுக்கும் உள்ள இகரம், ஈகாரம், உகரம், ஊகாரம் ஆகிய நான்கு சப்தங்கள் கலந்த எழுத்துகள் தனித்தனி வடிவம் கொண்டு அதாவது கி, கீ, கு, கூ என்பது மாதிரியே 18 எழுத்துகளும் தனித்தனி உருவம் பெற்று 18 ஜ் 4 = ஆக மொத்தம் 72 எழுத்துகள் அதிகமாக அனாவசியமாக இருந்து வருகின்றன.

இந்தத் தனித்தனி வடிவங்கள் எதற்காக இருக்க வேண்டும்? எல்லா உயிர் மெய் எழுத்து களுக்கும் ஆ காரம், ஏ காரம் ஆகிய சப்தங்களுக்கு ,  ஆகிய குறிப்புகளைச் சேர்த்து எப்படி கா, கே என்று ஆக்கிக் கொள்ளுகின்றோமோ அதுபோலவே மேற்கண்ட கி, கீ, கு, கூ முதலிய சப்தங்களுக்கும் ஒரு தனிப்பட்ட குறிப்பு அடையாளத்தை ஏன் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்பது மிகவும் யோசிக்கத்தக்க விஷயமாகும்.

உதாரணமாக ஜ, ஷ முதலிய கிரந்த அட்சரங்கள் என்று சொல்லப்படுபவைகளுக்கு இன்றும் உகரம், ஊகாரம் சப்தங்களுக்கு கு, கூ என்கிற மாதிரி தனி எழுத்துகள் இல்லாமல் உ, கரத்துக்கு  இந்த மாதிரி குறிப்புகளையும் ஊகாரத்திற்கு  இந்த மாதிரி குறிப்புகளையும் சேர்த்து ஜு, ஜூ, ஷு, ஷூ, ஸு, ஸூ, ஹு, ஹூ என்பதாக ஏற்படுத்தி இருக்கிறார்கள். அதுபோல் தமிழ் எழுத்துகளிலும் கி, கீ, கு, கூ ஆகியவைகளுக்கு ,  என்பது போன்றவைகளையோ அல்லது வேறு விதமான குறிப்புகளையோ சேர்த்தால் அச்சில் 72 தனி எழுத்துகள் தேவையில்லை என்பதோடு பிள்ளைகள் தமிழ் கற்பதற்கும் 72 எழுத்துகளைத் தனியாக இந்த ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லாத சௌகரியமும் ஏற்படும். மற்றும் எழுத்துக் குறைவால் அச்சில் சவுகரியம் ஏற்படுவது போலவே தமிழ் எழுத்து டைப்ரையிட்டிங் என்று அச்சடிக்கும் யந்திரம் செய்வதிலும், மிகுந்த சவுகரியமும், விலை சகாயமாய் செய்யக்கூடிய நிலைமையும் ஏற்படும். எழுத்துகள் உருவம் மாற்றுவது, குறிப்புகள் ஏற்படுத்துவது, புதிய எழுத்துகளைச் சேர்ப்பது, என்பது போலவே சில எழுத்துகளை அதாவது அவசியமில்லாத எழுத்துகளை குறைக்க வேண்டியதும் அவசியமாகும்.

உதாரணமாக, உயிரெழுத்துக்கள் என்பவைகளில் ஐ, ஔ என்கின்ற இரண்டு எழுத்துகளும் தமிழ் பாஷைக்கு அவசியமில்லை என்பதே நமது வெகுநாளைய அபிப்பிராயமாகும். ஐகாரம் வேண்டிய எழுத்துகளுக்கு , இந்த அடையாளத்தைச் சேர்ப்பதற்கு பதிலாக ய் என்ற எழுத்தை பின்னால் சேர்த்துக் கொண்டால் ஐகார சப்தம் தானாகவே வந்து விடுகின்றது. உதாரணமாக கை என்பதற்குப் பதிலாக கய் என்று எழுதினால் சப்தம் மாறுவதில்லை என்பது விளங்கும்.

அதுபோலவே ஔ காரத்துக்கும், கௌ என்பதற்குப் பதிலாக கவ் என்றோ, கவு என்றோ எழுதினால் சப்தம் மாறுவதில்லை. கௌமதி - கவ்மதி, கவுமதி என்கின்ற சப்தங்கள் ஒன்று போலவே உச்சரிப்பதைக் காணலாம். இந்த வகையில் ஐ, ஔ, இரண்டு எழுத்து உயிரெழுத் திலேயே குறைத்து விட்டால் அதனாலும் பெரிதும் அனுகூலம் உண்டு.
ஆகவே கி, கீ, கு, கூ என்கின்ற சப்தங்களுக்கு தனிக் குறிப்பு வடிவங்கள் ஏற்படுத்துவதன் மூலம் குறிப்புகள் அதிகமானாலும் ஒ, ஔ குறிப்புகள் குறைபடுவதன் மூலம் கிட்டத்தட்ட சரி பட்டுப் போக இடமேற்படும். கையெழுத்து எழுதுவதற்கும் அசௌகரியமிருக்காது.

தமிழ் எழுத்துகளில் மேலே குறிப்பிட்ட இந்தப்படியான சீர்திருத்தங்கள் எல்லாம் செய்யப்படு மானால் அப்போது தமிழில் மொத்த எழுத்துகள் 46-ம் 7 குறிப்பு எழுத்துகளும் ஆக 53 எழுத்துகளில் தமிழ் பாஷை முழுவதும் அடங்கிவிடும். அதாவது உயிர் எழுத்து 10, உயிர் மெய் எழுத்து க முதல் ன வரை) 18, ஒற்றெழுத்து  19 எழுத்துகளின் குறிப்புகள் (அதாவது , , , ,   இதுகள் போல்) 7 ஆக மொத்தம் 54 எழுத்து களுக்குள் அடங்கி விடும்.  அச்சுக்கும் 54 அறைகள் (கேஸ்கள்) இருந்தால் போதுமானதாகும். பிள்ளைகளுக்கும் இந்த 54 எழுத்துகள் ஞாபகமிருந்தால் போதுமானதாகும்.

ஜ, ஸ, ஷ, ஹ, க்ஷ என்கின்ற கிரந்த அட்சரங்களான எழுத்துகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டுமானால் அதில் குற்றெழுத்து உள்பட ஒரு பத்து எழுத்து அதிகமாகி 64 எழுத்துகளாகலாம். ஆனால் இப்பொழுதோ மேற்படி 64 எழுத்துகளுக்குப் பதிலாக சுமார் 150க்கு மேல் 160 எழுத்துகள் வரை இருந்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

பாஷையின் பெருமையும், எழுத்துகளின் மேன்மையும் அவை சுலபத்தில் தெரிந்து கொள்ளக் கூடியதாகவும், கற்றுக் கொள்ளக் கூடியதாகவும் இருப்பதைப் பொருத்ததே ஒழிய வேறல்ல. ஆத லால் இந்த மாற்றங்கள் நாளாவட்டத்தில் செய்யக் கூடியது என்று சொல்லுவதானாலும் ண, ணை முதலிய 7 எழுத்துகளைப் பொறுத்தவரையில் உள்ள மாற்றத்தை வாசகர்கள் இப்போது முதலே அனுமதிப்பார்கள் என்றே கருதுகின்றோம். இதுவரை பல தோழர்கள் ஆதரித்ததோடு மற்ற மாறுதல்களையும் எழுதியிருப்பதும் இப்பொழுதே செய்ய வேண்டுமென்று குறிப்பிட்டிருப் பதும் நமக்கு தைரியத்தைக் கொடுக்கின்றது. அவர்களுக்கு நமது நன்றியும் பாராட்டுதலும் உரியதாகும் என்று எழுதியுள்ளார்.

ஆக, தந்தை பெரியார் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தைக் கொண்டுவந்தது 1935. அய்ராவதம் மகாதேவன் தினமணி ஆசிரியராய் இருந்தது அதற்குப் பின் பல ஆண்டுகள் கழித்து.
அப்படியிருக்க, இன்று பெரியார் எழுத்து என்று அழைக்கப்படும் எழுத்துச் சீர்திருத்தம் உண்மையில் ஐராவதம் மகாதேவன் ஏற்படுத்திய இதழியல் சிர்திருத்தம் என்பது எப்படிப்பட்ட மோசடிப் பிரச்சாரம்.

பெரியார் எழுத்துச் சீர்திருத்தத்தை திராவிடர் கழக ஏடுகள் பின்பற்றிய பின் தினமணியில் அதை அய்ராவதம் மகாதேவன் பின்பற்றி மற்ற இதழ்களுக்கு வழிகாட்டினார் என்பதே உண்மை. மாறாக, அய்ராவதம் மகாதேவன் உருவாக்கியது அல்ல.

அய்ராவதம் மகாதேவன் சிறந்த தமிழ் ஆய்வாளர். பெரியார் எழுத்தை தினமணியில் பின்பற்றியவர். அப்படிப்பட்டவர் அமர்ந்த இடத்தில் இப்படிப்பட்டவர்களும் அமர்ந்து கொண்டு மோசடியாகக் கருத்துக்களைப் பரப்புவது கண்டிக்கத்தக்கது.

பத்திரிகை தர்மமும், நீதி நேர்மையும், நாணயமும் கிஞ்சிற்றேனும் வைத்தியநாத அய்யரின் அடிமனதில் ஒட்டிக் கொண்டிருக்குமானால் தவறான செய்திக்கு திருத்தம் வெளியிட்டு அய்ராவதம் மகாதேவன் இடத்திற்கு ஏற்பட்ட களங்கத்தை துடைக்க முயலட்டும்!

ஞாயிறு, 25 நவம்பர், 2018

தமிழருக்குத் தமிழ் மொழியைத் தந்தவர்களே ஆரியர்களா?

#வாட்சப்பில்
தமிழருக்குத் தமிழ் மொழியைத் தந்தவர்களே ஆரியர்கள் தான் என்பது ஆரியர்களின் கூற்று. தமிழர்கள் காட்டுமிராண்டிகளாயிருந்தார்கள். அவர்களை நாகரிகமுடையவர்களாக்கித் தமிழைச் செம்மையாக்கித் தந்தவர் குடத்திலிருந்து பிறந்த அகத்திய முனிவர் என்பது ஆரியர்கள் கூறுங்கதை. இதனையேதான் தமிழின் பெருமையாக உலக மகாகவி கூறுகின்றார்.

"ஆதிசிவன் பெற்று விட்டான் என்னை ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர் வேதியன் கண்டு...... இலக்கணஞ் செய்து கொடுத்தான்"

எனவும்

"ஆன்ற மொழிகளினுள்ளே உயர் ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன்"

இவ்வடிகளின் பொருளை நன்றாகச் சிந்தியுங்கள். இவை ஆரியத்தின் பெருமையை விளக்குகின்றதா? தமிழின் பெருமையை விளக்குகின்றதா?

வஞ்சத்திற்கு ஆண்மை என்பது ஆரியர்களின் அகராதிப் பொருள். வாலியை மறைந்து கொன்ற இராமன் பேராண்மையாளர் புருடோத்தமன் என ஆரியங்கூறும். அதே போல பாரதியார் ஆசையைப் பாருங்கள்!

"ஆரிய நாட்டினர் ஆண்மை யோடியற்றும் சீரிய முயற்சிகள் சிறந்து மிக்கோங்குக"

எனக் கூறுகின்றார். இவ்வாறு, பாரதியார் ஆரிய நாடு, ஆரிய இனம், ஆரிய மொழி, ஆரியக் கலை, ஆரியக் கடவுள், பெருமைகளையே பெருமையாகப் போற்றிப் பாராட்டியிருக்க, அவரைத் திராவிட இனத்தவர் போற்றுவது மானத்தோடு பொருந்திய செயலாய் இருக்க முடியுமா?
...........................................

'ஈட்டி' என்ற புனைப்பெயரில் தந்தைபெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை."குடிஅரசு", 18-10-1947

புதன், 21 நவம்பர், 2018

தமிழ் செம்மொழி: நீதிக்கட்சியின் தீர்மானம்

தமிழைச் செம்மொழி என அறிவிக்க 1918 ஆம் ஆண்டில் நீதிக்கட்சி மாநாட்டுத் தீர்மானம்.


1918 மார்ச் 30, 31 ஆகிய நாள்களில் தஞ்சை, திருச்சி பார்ப்பனரல்லாதார் முதல் மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டுத் தீர்மானங்களில் ஒன்று:

தீர்மானம் 8 (ஆ)

எல்லாப் பழைமையான மொழிகளைப் போல பழைமையான, வளமான, உயர் தரமாக உருவாக்கப்பட்ட பலதிறப்பட்ட இலக்கியங்களைக் கொண்டது தமிழ் மொழி. இது பல்கலைக் கழகத்தால் பாரசீக, அரேபிய, சமஸ்கிருத மொழிகட்கு ஈடாக மதிக்கப்பட்டுச் செம்மொழி என ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

முன்மொழிந்தவர்: திரு.ஜே.பி.நல்லுசாமி பிள்ளை பி.ஏ., பி.எல்., மதுரை.

வழிமொழிந்தவர்: திரு.ந.மு.வேங்கட சாமி நாட்டார், தமிழ்ப் பண்டிதர், எஸ்.பி.ஜி. கல்லூரி, திருச்சிராப்பள்ளி.

ஆதரித்தவர்: திருமதி.அலர்மேலு மங்கை தாயாரம்மாள், சென்னை.

தீர்மானம் நிறைவேறியது. அரசு ஆணையிலும் பதிவு செய்யப்பட்டது.

- விடுதலை நாளேடு, 20.11.18