பக்கங்கள்

சனி, 29 பிப்ரவரி, 2020

தமிழ் - சமஸ்கிருதம்!

தமிழ்

உங்களது தாய்மொழி என்ன? தமிழ்

அதை எழுத்துப் பூர்வமாக பயன்படுத்துகிறீரா? ஆம்

உங்களது தொடர்பு மொழி யாக பரவலாக பயன்படுகிறதா? ஆம்

அரசு ஆவணங்கள் உங்கள் (தமிழ்) மொழியில் உள்ளதா? ஆம்

தமிழ் பேசும் மக்கள் அனை வருமே அதை பயன்படுத்துகி றார்களா? ஆம்

பள்ளி, பொதுப்பயன்பாடு, கலந்துரையாடல், வீடு, மற்றும் பொதுவிடத்தில் அனைவரும் தமிழ் பேசுகிறீர்களா? ஆம்

எங்கு எங்கு பேசுகிறீர்கள்? தமிழகம், சிறீலங்கா, சிங்கப்பூர், மலேசியா நாடுகளில் பெரும் பான்மையாகவும், மொரீசியஸ், மாலத்தீவு சிசல்ஸ், ரி யூனியன் போன்ற தீவு நாடுகளில் பரவ லாகவும், மும்பை, பெங்களூரு, உள்ளிட்ட பல தமிழர்கள் அதிக மாக வாழும் இந்திய மாநிலங் களில், தமிழர்கள் வாழும் பல் வேறு நாடுகளில் தொடர்பு மொழியாகவும் தமிழ் பயன்படு கிறது. இந்தியா மற்றும் இதர நாடுகளைச்சேர்த்தால் 12 கோடி அல்லது அதற்கும் சிறிது அதிக மான மக்களால் பேசப்படுகிறது.

சமஸ்கிருதம்

உங்களது தாய்மொழி என்ன?  சமஸ்கிருதம்

அதை எழுத்துப் பூர்வமாக பயன்படுத்துகிறீரா? இல்லை

உங்களது தொடர்பு மொழி யாக பரவலாக பயன்படுகிறதா? இல்லை

அரசு ஆவணங்கள் உங்கள் மொழியில் உள்ளதா? இல்லை

சமஸ்கிருதம் பேசும் மக்கள் அனைவருமே அதை பயன் படுத்துகிறார்களா?  இல்லை

பள்ளி, பொதுப்பயன்பாடு, கலந்துரையாடல், வீடு, மற்றும் பொதுவிடத்தில் அனைவரும் சமஸ்கிருதம் பேசுகிறீர்களா? இல்லை

எங்கு எங்குதான் பேசுகிறீர் கள்?

கருநாடக மாநிலம் சிமோகா மாவட்டத்தில் உள்ள பெங்கல ஹல்லி தாலுகாவில் உள்ள ஹொஸ்னகல்லி ஊராட்சியில் உள்ள மட்டூர் என்ற குக் கிராமத்தில் பேசுகிறோம்

எத்தனைப் பேர் பேசுகி றார்கள்? 14, 000

அங்கே எத்தனைப் பேர் வசிக்கின்றனர்? 3,500 பேர்

பிறகு எப்படி 14,000 பேர் பேசுகிறார்கள் என்று கூறுகிறீர் கள்?

பாதி பேர் உள்ளூரிலிருந்து வெளியூருக்கு சென்றுவிட்டனர். அவர்களையும் சேர்த்துதான்,

அவர்கள் வெளியூரில்சமஸ்கிருதம் பேசுகிறார்களா? இருக்கலாம்!

உங்கள் ஊரில் பொதுப்பயன் பாட்டில் பேசுகின்றீர்களா? கடை வீதி, இதர வீட்டிற்கு வணிகம் செய்ய வருபவர்களிடம்? இல்லை

பிறகு என்ன மொழி பயன்படுத்துகிறீர்கள்? கன்னடம்

வீட்டில் நாளிதழ், தொலைக் காட்சி நிகழ்ச்சி திரைப்படம் போன்றவைகள் எந்த மொழியில் உள்ளது. கன்னடம், ஆங்கிலம், இந்தி

பிறகு எதைவைத்து சமஸ் கிருதம் உங்கள் தாய்மொழி என்று கூறுகிறீர்கள்???

பதில் மவுனம்

- மயிலாடன்

- விடுதலை நாளேடு 14 2 20

புதன், 26 பிப்ரவரி, 2020

இலத்தீன், கிரேக்க மொழிகளை விட தமிழ்தான் பழைய மொழி உலக தாய்மொழி தினத்தில் குமரி அனந்தன் பேட்டி

சென்னை,பிப்.22, உலக தாய்மொழி நாளையொட்டி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:-

உலகத்தில் உள்ள தாய் மொழிகளை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அய்க் கிய நாடுகள் அவை சார்பில் பிப்ரவரி 21-ஆம் தேதி உலக தாய்மொழி தினமாக கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது. 20ஆ-ம் நூற்றாண்டு தொடக்கத்தில் உலக அளவில் புழக்கத்தில் இருந்த தாய்மொழிகள் 7006 என்றும் தாய்மொழிகளை காப்பாற்றவில்லை என்றால் 21-ஆம் நூற்றாண்டுக்குள் 300 மொழிகள்தான் இருக்கும் என்று அறிவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

உலகத்திலேயே மூத்த மொழி தமிழ் மொழிதான். சிலர் இலத்தீன், கிரேக்க மொழிகள் தான் மூத்த மொழி என்பார்கள்.

ஆனால், இந்த இலத்தீன் மற்றும் கிரேக்க மொழிகளில் தலா ஆயிரம் தமிழ் சொற்கள் இருக்கின்றன என்று சிவ காசியை சேர்ந்த அருணகிரி என்ற தமிழ்ப் பேராசிரியர் ஆய்வு செய்து தெரிவித்து உள் ளார். அப்படியானால் இலத் தீன், கிரேக்க மொழிகளை விட தமிழ்தானே பழைய மொழி.

அதேபோன்று, தமிழக கோவில்களில் தமிழில் வழிபாடு செய்யலாமே என்று நான் சட்டசபையில் எழுப்பிய கேள்விக்கு ஓய்வு பெற்ற நீதிபதி மகராஜன் தலைமையிலான குழு ஆய்வு செய்து 1311-ஆம் ஆண்டுவரை தமிழகத்தில் உள்ள கோவில்களில் எல்லாம் தமிழ் மொழியில்தான் வழி பாடு நடந்தது என்று தெரிவித்து இருந்தார்.

அதே போன்று சங்க இலக்கியத்தில் ஜாதி என்ற சொல்லே இல்லை. இது போன்ற தமிழர்கள் பெரு மையை நாம் அனைவருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கீழடி அருங்காட்சியகத்துக்கு நிதி ஒதுக்கீடு

அரசாணை வெளியீடு

சென்னை, பிப்.22 கீழடி அருங்காட்சியகத்துக்கு ரூ.12 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழாய்வின்போது கிடைத்த பொருட்களை காட்சிப்படுத்த ரூ.12.21 கோடி செலவில் சிவகங்கை கொந்தகையில் உலகத்தரத்தில் அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசு ஏற்கெனவே முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதற்காக 2019-2020ஆம் நிதியாண்டில் ரூ.30 லட்சமும், 2020-2021ஆம் நிதி ஆண்டில் ரூ.11.91 கோடியும் ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

- விடுதலை நாளேடு 22 2 20

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2020

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்தமிழ் மொழியை நான் ஒரு காட்டுமிராண்டி மொழி என்று சுமார் 40 ஆண்டுகளாகக் கூறி வருகின்றேன். இடையில் இந்தியை நாட்டு மொழியாகவும், அரசியல் மொழியாகவும் பார்ப்பனரும், பார்ப்பன ஆதிக்க ஆட்சியும் முயற்சிக்கின்ற சந்தர்ப்பங்களில் அதன் எதிர்ப்புக்கு பயன்படுத்திக் கொள்ள தமிழுக்கு சிறிது இடம் கொடுத்து வந்தேன்.

ஆங்கிலத்துக்கு ஆதரவு

ஆயினும் ஆங்கிலமும் தமிழின் இடத்தில் இருக்கத் தகுந்த மொழியாகும் என்று பேசியும், எழுதியும், முயற்சித்தும் வந்து இருக்கின்றேன்.

அக்காலத்திலெல்லாம் நம் நாட்டில் ஆங்கிலம் அறிந்த மக்கள் மிக மிகச் சிலரேயாவர். தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்த மக்கள் 100-க்கு சுமார் 5 முதல் 10 பேருக்கும் உட்பட்ட எண்ணிக்கை உடையவர்களாகவே இருந்தாலும் நூற்றுக்கு 75 பேர்கள் போல் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களாகவே இருந்து வந்திருக்கிறார்கள். ஆனதால் அவர்களிலும் 100க்கு 90 பேர்கள் போல் பகுத்தறிவற்ற மக்களாக இருந்து வந்ததால் அவர்களுக்கு மதப்பற்று, கடவுள் பற்று, பழைய பழக்கவழக்கப் பற்று, குறிபற்று எப்படி முரட்டுத்தனமான பற்றாக இருந்து வந்ததோ - வருகிறதோ அதுபோன்றே தமிழ் மொழிப் பற்றும் முரட்டுத்தனமாக இருந்து வந்தது; வருகிறது.

தமிழ்ப் புலவர்கள் நிலை

அதிலும் தமிழ்ப் படித்த தமிழில் புலவர்களான வித்துவான்கள் பெரிதும் 100-க்கு 99 பேருக்கு ஆங்கில வாசனையே இல்லாது வெறும் தமிழ் வித்துவான்களாக... தமிழ்ப் புலவராகவே வெகு காலம் இருக்க நேர்ந்து விட்டதால், அவர்களுக்கும் பகுத்தறிவுக்கும் வெகுதூரம் ஏற்பட்டதோடு அவர்கள் உலகம் அறியாத பாமரர்களாகவே இருக்க வேண்டியவர்கள் ஆகிவிட்டார்கள்.

புலவர்களின் மூடநம்பிக்கையும் பிடிவாதமும்

மற்றும் புலவர், வித்துவான் என்ற பெயரால் யார் வாழ்ந்தவராக, வாழ்பவராக இருந்தாலும் அவர்கள் பெரிய மதப்பற்றுள்ளவர்களாகவும், மதவாதிகளாகவுமே இருந்து வருவது ஒரு சம்பிரதாயமாகவே ஆகிவிட்டதால் புலவர், வித்துவான் என்றால் மேலும் மூட நம்பிக்கைக்காரர்களாகவும், பிடிவாதக்காரர்களாகவுமே இருக்க வேண்டியவர்களாக ஆகிவிட்டார்கள்.

பகுத்தறியும் தத்துவ விசாரணை
அறவே இல்லாதவர்கள்

அதிலும் கொஞ்ச காலத்திற்கு முன்வரையில் புலவர்கள், வித்வான்கள் என்றால் 100-க்கு 90 பிச்சை எடுத்தே அதாவது இச்சகம் பேசி பிச்சை வாங்கும் தொழிலுடையவர் என்று ஆகிவிட்டதால் பொய்யோ, புளுகோ, கற்பனையோ ஏதேதோபேசி பணம் பெறுவதிலேயே கவலை யுள்ளவர்களாகவே வாழ்ந்ததால் தத்துவ விசாரணை என்பது அவர்களுக்கு வெகுதூரமாகவே இருக்க வேண்டியதாகி விட்டது.

ஆகவேதான் புலவர்கள், வித்துவான்கள் என்பவர்கள் 100-க்கு 90 பேர்கள் வரை இன்றைக்கும் அவர்களது வயிறு வளர்ப்ப தற்கல்லாமல், மற்றெதற்கும் பயன்படுவதற் கில்லாதவர்களாகவே ஆகிவிட்டார்கள்.


ஆசிரியர், மாணவர் நிலையும்  பகுத்தறிவைத் தரவில்லை

புலவர்களை நீக்கிவிட்டால் மற்ற ஆசிரியர்கள் 100-க்கு 90 பேர்கள் பார்ப்பனர்களாகவே சமீப காலம் வரை அமர்ந்திருக்கும் படியாக நம்நாடு இருந்து வந்ததால், அவர்களிடம் பயின்ற எந்த மாணவனுக்கும் பகுத்தறிவு என்றால் எத்தனை படி? என்று கேட்கும் நிலைதான் மாணவர்களது நிலையாக ஆகிவிட்டது.

விஞ்ஞானம் பயிற்றுவிக்கும் ஆசிரியனும், விஞ்ஞானம் பயிலும் மாணவனும் அதில் முதல் வகுப்பாக பா° பெற்ற மாணவனும்கூட நெற்றியில் முக்கோடு சாம்பல் பட்டை அணிந்தவனாக இருந்து கொண்டுதான் பயிலுவான். “என்னையா அக்கிரமம் நீ சயன்சு படிக்கிறாய்; தத்துவ சா°திரம் படிக்கின்றாய்; நெற்றியில் சாம்பல் பட்டை போட்டிருக்கிறாயே” என்றால் சிறிதும் வெட்கமில்லாமல் “அதற்கும் இதற்கும் என்னய்யா சம்பந்தம்? நீ என்ன நாத்திகனா?” என்று கேட்பான்.

இந்த நிலையில் உள்ள ஆசிரியர்களுக்கும், மாணவர் களுக்கும் குறிப்பாக புலவர், வித்துவான்களுக்கும் இவருடன் உழல்வோருக்கும் தமிழை, தமிழ் மொழியைப் பற்றி அறிவு எவ்வளவு இருக்க முடியும்?

மக்கள் சிந்தனைக்கு முட்டுக்கட்டை

“அயோக்கியர்களுடைய வயிற்றுப் பிழைப்புக்கு கடைசி மார்க்கம் அரசியல் துறை” என்பது ஆக ஒரு மேல்நாட்டு அறிஞன் சொன்னதுபோல் அரசியலில் பிரவேசிக்க நேர்ந்த பல அரசியல்வாதிகள் மக்களின் மடமையை நிறுத்து அறிந்ததன் காரணமாய் அவர்களில் பலரும் தமிழை தங்கள் பிழைப்பிற்கு ஆதாரமாய்க் கொண்டு தமிழ் மொழிப் பற்று வேஷம் போட்டுக் கொண்டு வேட்டை ஆடுவதன் மூலம் மக்களது சிந்தித்துப் பார்க்கும் தன்மையையே பாழாக்கி விடுகிறார்கள்.

சிந்திக்காத எதிர்ப்புப் பேச்சுக்கள்

இந்தத் தமிழ் மொழியானது காட்டுமிராண்டி மொழி என்று நான் ஏன் சொல்கிறேன்? எதனால் சொல்லுகிறேன்? என்று இன்று கோபித்துக் கொள்ளும் யோக்கியர்கள் ஒருவர் கூட சிந்தித்துப் பேசுவதில்லை. “வாய் இருக்கிறது எதையாவது பேசி வம்பு வளர்ப்போம்” என்பதைத் தவிர அறிவையோ, மானத்தையோ, ஒழுக்கத்தையோ பற்றி சிறிது கூட சிந்திக் காமலே பேசி வருகிறார்கள்.

இப்படிப்பட்ட இவர்கள் போக்குப்படியே சிந்தித்தாலும் “தமிழ்மொழி 3000-4000 ஆண்டுகளுக்கு முந்தி ஏற்பட்ட மொழி” என்பதை தமிழின் பெருமைக்கு ஒரு சாதனமாய்க் கொண்டு பேசுகிறார்கள்.

நானும் தமிழ் காட்டுமிராண்டி மொழி என்பதற்கு அதைத் தானே முக்கிய காரணமாய்ச் சொல்லுகின்றேன்.

அன்று இருந்த மக்களின் நிலை என்ன? அவன் சிவனா கட்டும், அக°தியனாகட்டும், பாணினியாகட்டும் மற்றும் எவன்தானாகட்டும் இவன்களைப் பற்றித் தெரிந்து கொள்ள உனக்குப் புத்தியில்லாவிட்டால் நீ தமிழைப் பற்றி பேசும் தகுதி உடையவனாவாயா?

(Primitive)  பிரிமிட்டிவ் என்றால் அதன் தத்துவமென்ன? (Barbarian) பார்பேரியன்,
(Barbarism) பார்பேரிசம் என்றால் அதன் பொருள் என்ன?

3000.... 4000... ஆண்டுகளுக்கு முன் என்பதற்கு பிரிமிட்டிவ், பார்பேரியன், பார்பேரிசம் என்பதற்கும் அக்கால மக்கள் அறிவு, அக்கால மக்கள் நிலை முதலியவை என்பவற்றிற்கும் என்ன பேதம் கற்பிக்க முடியும்?

பழமையில் பிடிப்பு இன்னும் நீங்கவில்லையே?

இன்று நமது வாழ்வு, மதம், கடவுள், மொழி, இலட்சியம் என்பன போன்றவை உண்மையான காட்டுமிராண்டித் தன்மை பொருந்தியவை தவிர வேறு எதில் பற்று கொண்டிருக்கிறோம்? எதைக் குரங்குப் பிடியாய் பிடித்துக் கொண்டிருக்கிறோம்.

நான் நாற்பதாண்டுகளுக்கு மேலாகவே சொல்லி வருகிறேன், எழுதி வருகிறேன் கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் பரப்பினவன் அயோக்கியன் வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்று! அதற்காக கோபப்படாத அரசியல்வாதிகள் தமிழைக்  காட்டுமிராண்டி மொழி என்றால் கோபப்படுகிறார்கள். இவனுக்கு என்ன பெயர் இடுவது என்பதே நமக்கு புரியவில்லை.

தமிழைச் சீர்திருத்தி வளர்க்க எவனும் முன்வரவில்லையே?

தமிழை, தமிழ் எழுத்துக்களைத் திருத்த வேண்டும் என்று 1927 வாக்கில் கருத்து கொடுத்தேன்; வகை சொன்னேன். ஒருவனாவது சிந்திக்கவில்லை. பார்ப்பனர்கள் கூட ஏற்றுக் கொண்டார்கள்; நம் காட்டுமிராண்டிகள் சிறிது கூட சிந்திக்கவில்லை.

பிறகு தமிழ் மொழிக்கு (கமால் பாட்சா செய்தது போல்) ஆங்கில எழுத்துக்களை எடுத்துக் கொண்டு காட்டு மிராண்டிக் கால எழுத்துகளைத் தள்ளிவிடு என்றேன். இதையும் பார்ப்பனர் சிலர் ஏற்றுக் கொண்டனர். தமிழன் சட்டை செய்யவே இல்லை. இந்நிலையில் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று ஒரு இலட்சத்து ஒன்றாவது தடவையாகச் சொல்லுவதற்கு ஏன் ஆத்திரம் காட்டுகிறாய்? கூலிக்கு மாரடிக்கும் அழுகைத் தொழிலில் வாழ்பவர்கள் போல ஏன் அடித்துக் கொள்ளுகிறாய்?

வேறு மொழி ஏற்பதால் கேடு என்ன?

தமிழை ஒதுக்கி விடுவதால் உனக்கு நட்டம் என்ன? வேறு மொழியை ஏற்றுக் கொள்ளுவதால் உனக்குப் பாதகம் என்ன?

இங்கிலீஷினால் சிறுமை என்ன?

தமிழிலிருக்கும் பெருமை என்ன? நான் சொல்லும் ஆங்கிலத்தில் இருக்கும் சிறுமை என்ன?

நமது நாட்டுக்கு கமால் பாட்சா போன்ற ஒரு வீரனும், யோக்கியனுமான ஒருவனும் இல்லை என்பதால் பலமுண்டங்கள் பலவிதமாய் பேச முடிகிறதே அல்லாமல், இன்று தமிழைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் யாருக்கு என்ன வந்தது? என்று கேட்கிறேன்.

நம் மக்கள் வளர்ச்சியில் நாட்டம் வேண்டும்?

நம் மக்கள் வளர்ச்சி அடைய வேண்டிய நிலை இன்னும் வெகுதூரம் இருக்கிறது. அதனால் வேகமாய்ச் செல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது.

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி?

புலவர்களுக்கு (தமிழ் படித்து, தமிழால் பிழைப்பவர்களுக்கு) வயிற்றுப் பிழைப்புக்கு வேறு வழியில்லையே என்கின்ற காரணம் ஒன்றே ஒன்று அல்லாமல் தமிழர்கள் நல்வாழ்விற்கு தமிழ் எதற்கு ஆக வேண்டியிருக்கிறது?
இத்தனை காலமும் தமிழ் தோன்றிய 3000, 4000 ஆண்டுகாலமாக இந்த நாட்டில் வாழ்ந்த தமிழினாலும் தமிழ் படித்த புலவனாலும் தமிழ் நாட்டிற்கு, தமிழர் சமுதாயத்திற்கு என்ன நன்மை என்ன முற்போக்கு உண்டாக்கப்பட்டிருக்கிறது? இலக்கியங்களிலே, சரித்திரங்களிலே காணப்படும் எந்தப் புலவனால், எந்த வித்துவானால், எவன் உண்டாக்கிய இலக்கியங்களினால், இதுவரை தமிழனுக்கு ஏற்படுத்தப்பட்ட, ஏற்படுத்திய நன்மை என்ன என்று கேட்கிறேன்.

முக்கியப் புலவர்களும் மத உணர்வுள்ள ஆரிய அடிமைகளே!

இன்று தமிழ் உலகில் தமிழ்ப் புலவர்களில் இரண்டு, மூன்று புலவர்களின் பெயர்கள் அடிபடுகின்றன. அவர்கள் (1) தொல்காப்பியன், (2) திருவள்ளுவன், (3) கம்பன்.

இம்மூவரில்,

1. தொல்காப்பியன் ஆரியக் கூலி. ஆரிய தர்மத்தையே தமிழ் இலக்கண மாகச் செய்துவிட்ட மாபெரும் துரோகி.

2. திருவள்ளுவன் அக்காலத்திற்கு ஏற்ற வகையில் ஆரிய கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் அளவில் பகுத்தறிவைப் பற்றி கவலைப்படாமல் நீதி கூறும் முறையில் தனது மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச் சென்றார்.

3. கம்பன் இன்றைய அரசியல்வாதிகள், தேச  பக்தர்கள் பலர் போல் அவர் படித்த தமிழ் அறிவை தமிழர் எதிரியாகிய பார்ப்பனருக்கு ஆதரவாய் பயன்படுத்தி தமிழரை இழிவுபடுத்தி கூலி வாங்கிப் பிழைக்கும் மாபெரும் தமிழர் துரோகியே ஆவான்! முழுப் பொய்யன்! முழுப் பித்தலாட்டக்காரன்! தன்னை பார்ப்பானாகவே கருதிக் கொண்டு பார்ப்பான்கூட சொல்லப் பயப்படும் கருத்துக்களையெல்லாம் கூறி தமிழர்களை நிரந்தரக் கீழ்மக்களாக்கிவிட்ட துரோகியாவான்!

சாதியை, சாதித் தொழிலை ஆதரித்தவர்கள்

இம்மூவர்களும் சாதியையும், சாதித் தொழிலையும் ஏற்றுக் கொண்டவர் களே ஆவார்கள்.

சந்தர்ப்பம் நேரும்போது இக்கருத்தை நல்ல வண்ணம் விளக்கக் காத்திருக்கிறேன். இவர்களை விட்டுவிட்டு தமிழர்கள் இனி எந்தப் புலவனை, எந்த இலக்கியத்தை தமிழன் நன்மைக்கு ஆதாரமாக எடுத்துக் காட்ட தமிழபிமானிகள் என்பவர்கள் முன்வரப் போகிறீர்கள் என்று கேட்கிறேன்.

கம்பனுக்கு சிலை வைத்து மானம் கெடுவதா?

உலகில் ஒரு மாபெரும் மானம் கெட்ட சமுதாயம் இருக்கிறது என்றால் அது கம்பனுக்கு சிலை வைக்க வேண்டும் என்று கூறும் கூட்டமேயாகும்.

இன்று நம் நாட்டில் சமதர்மம் என்பது, சாதியில் சமதர்மம், செல்வத்தில்; பொருளில் சமதர்மம் என்பது மாத்திரமல்லாமல், குணத்திலும் சமதர்மம் என்பதாகக் கருதப்படுகிறது.

பார்ப்பானும், “பறையனும்” சமம்; முதலாளியும், பிச்சைக் காரனும் சமம் என்பதோடு யோக்கியனும், அயோக்கியனும் சமம்; தமிழர் சமுதாயத்திற்கு நன்மை செய்தவனும் - கேடு செய்து கூலி வாங்கிப் பிழைப்பவனும் சமம்; சாணியும் சவ்வாதும் சமம்  என்ற அளவுக்கு இன்று நம் நாட்டில் சமதர்மம் தாண்டவமாடுகின்றது.

மக்களிடம் சமத்துவம் ஏற்படுத்துவதற்கு
முட்டுக்கட்டை போடுவதா?

இது ஒரு புறமிருந்தாலும் பல்லாயிரம் ஆண்டுகளாக கீழ்மைப்படுத்தப்பட்டு இழி நிலையில் இருத்தப்பட்ட தமிழன் விடுதலை பெற்ற, மனிதத் தன்மை அடைந்த மற்ற உலக மக்களுடன் சரிசமமாய் வாழ வேண்டுமென்று உயிரைக் கொடுத்து சிலர் பாடுபடுகிறபோது இந்த தமிழ்ப் புலவர் கூட்டமும், அவர்களால் முட்டாள்களாக்கப்பட்ட தமிழர் கூட்டமும், தமிழ், தமிழ்மொழி, தமிழர் சமுதாயம் என்னும் பேரால் முட்டுக்கட்டை போடுவது என்றால் இந்தக் கூட்டத்திற்கு என்றைக்குத்தான் தன்மான உணர்ச்சி வந்து மனிதத்தன்மை ஏற்படப் போகிறது?

பார்ப்பான் உன் தமிழை ஏற்கிறானா? ஏன்?

அடமுட்டாள்களா! உங்கள் தமிழை பார்ப்பான் நீசமொழி என்று பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சா°திரங்களில் எழுதி வைத்து, சாமிகள் இருக்குமிடத்தில் புகாமல் விரட்டி அடித்ததோடு மாத்திரமல்லாமல் உன்னையும் உள்ளே புகவிடாமல் தீண்டாதவனாக ஆக்கி வைத்திருக்கிறானே!

இதற்கு நீ என்றாவது வெட்கப்பட்டாயா? உங்களப்பன் வெட்கப்பட்டாரா? அவனை விட்டு விட்டு என்னிடம் வந்து மோதிக் கொள்கிறாயே? இதற்கு அறிவில்லை என்று பெயரா? மானமில்லை என்று பெயரா? “நீ யாருக்குப் பிறந்தவன்?” என்று என்னைக் கேட்கிறாய். நான் கேட்கிறேன், உன் தமிழையும் உன்னையும் உள்ளே விடாமல், இரண்டையும் வெளியில் நிறுத்தி கும்பிடு போடும்படி பார்ப்பான் செய்கிறான். நீயும் அதற்கேற்ப அடங்கி ஒடுங்கி நின்று குனிந்து கும்பிடுகிறாயே மடையா! மானங்கெட்டவனே! நீ யாருக்குப் பிறந்தவன் என்று கேட்கிறேன்.

தமிழ்ப் படித்தவன் பலன் இதுதான்

புலவனே! நீ கெடுவதோடு தமிழ் மக்களை ஒவ்வொரு வனையும் பார்த்து, “நீ யாருக்குப் பிறந்தவன்” என்று கேட்கும் படி செய்கிறாயே; இதுதானா உன் தமிழின், தமிழர் சமுதாயத்தின் பெருமை?

தமிழ் உயர்மொழி எனில் தமிழன் கீழ்மகனானதெப்படி?

தமிழ் உயர்மொழியானால், தமிழன் கலப்படமற்ற சுத்தப் பிறவியானால், தமிழ் பேசுகிறவன் தமிழன் என்கிற காரணத்திற்கு ஆக உன்னை சூத்திரன், பார்ப்பானின் வைப்பாட்டி மகன் என்று கடவுள் சொன்னதாக சா°திரம் எழுதி வைத்து, ‘கீதை’ வெங்காயம் சொல்லுகிறது என்று சொல்லி உன்னை தீண்டாத ஜாதியாக பார்ப்பானும், அவன் பெண்டாட்டி, பிள்ளை, ஆத்தாள், அக்காளும் நடத்துகிறார்களே; நீ நாக்கைப் பிடுங்கிக் கொண்டாயா? நீ யாருக்குப் பிறந்தாய் என்பது பற்றி சிறிதாவது சிந்தித்து இருந்தால், என்னை நீ யாருக்குப் பிறந்தாய் என்று கேட்டு இருக்க மாட்டாய்.

எனக்கு நான் யாருக்குப் பிறந்தேன் என்பது பற்றிக் கவலை இல்லை. அது என் அம்மா சிந்திக்க வேண்டிய காரியம். நான் யாருக்குப் பிறந்தேன் என்று என்னாலும் சொல்ல முடியாது; தம்பீ உன்னாலும், அதாவது நீ யாருக்குப் பிறந்தாய் என்று (உன்னாலும்) சொல்ல முடியாது; அந்தப் பிரச்னையே முட்டாளுக்கும், அயோக்கியனுக்கும்தான் தேவை.

மனிதனுக்கு மானமே தேவை

யாருக்குப் பிறந்தாலும் மனிதனுக்கு மானம் தேவை; அது உன்னிடம் இருக்கிறதா, என்னிடம் இருக்கிறதா என்பதுதான் இப்போது சிந்திக்க வேண்டிய தேவை.

அதையும் விட தமிழ் மொழியிலும், தமிழ்ச் சமுதாயத்திலும் இருக்கிறதா? இருப்பதற்குத் தமிழ் உதவியதா? உதவுகிறதா? என்பதுதான் முக்கியமான, முதலாவதான கேள்வி.

ஈன சாதியாக்கிய முட்டாளை வணங்குவது ஈனமல்லவா?

தமிழ் காட்டுமிராண்டி மொழி என்பதால் உனக்கு பொத்துக் கொண்டது. ஆனால், தமிழன் ஈன ஜாதிப்பயல் என்று கூறி உன்னை ஈனஜாதியாக நடத்துவது பற்றி உனக்கு எங்கும் பொத்துக் கொள்ளவில்லை! அதுமாத்திரமல்ல; முட்டாள் பசங்கள் உன்னை ஈனஜாதியாய் நடத்துகின்ற வர்கள் காலில் விழுகிறீர்கள்; அவனை சாமி என்று கூறுகிறீர்கள்; பிராமணர்கள் என்று ஒப்புக் கொள்ளுகிறீர்கள்!

சிந்தித்துப் பார், நீ, நீங்கள் யார் என்று!

“வாழ்க்கை இன்ப துன்பங்களிலும் போக போக்கியங்களிலும் “இரு வருக்கும் சம உரிமை உண்டு என்றும் குறிப்பிட்ட சமத்துவ சுபாவம் மிளிரும் மாறுதல் அவசியமா இல்லையா என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள். உங்கள் மனைவிமார்களை நினைத்துக் கொண்டே யோசிக்காதீர்கள். உங்களுடைய செல்வப் பெண் குழந்தைகளையும், அன்புச் சகோதரிகளையும் மனதில் கொண்டு யோசித்துப் பாருங்கள்.

உங்கள் தாய்மார் சுதந்திரவாதிகளாயிருந்தால் நீங்கள் எப்படி இருந்திருப்பீர்கள் என்பதையும் யோசித்துப் பாருங்கள். இன்று உலகில் கீழ்சாதியார் என்பவர்களுக்கு சம சுதந்திரம் வேண்டும் என்று போராடுகிறோம். அரசாங்கத்தினிடமிருந்து விடுதலை பெற்று சுதந்தரமாய் வாழ வேண்டுமென்று போராடுகிறோம். அதே போராட்டத்தை நமது தாய்மார்கள் விஷயத்திலும், நமது சகோதரிகள் விஷயத்திலும், நம் பெண் குழந்தைகள் விஷயத் திலும் கவனிக்க வேண்டாமா?


- தந்தை பெரியார்

நூல் : தமிழ் காட்டுமிராண்டி மொழி  ஏன்? எப்படி?
ஆசிரியர்  -தந்தை பெரியார்
- பெரியாரியம் blogspot.com

சனி, 22 பிப்ரவரி, 2020

எழுத்துப்பிழை இல்லாமல் தமிழ் சொல்லி தர பிள்ளைகளுக்கு சில விளக்கங்கள்...

"ண", "ன" மற்றும் "ந" எங்கெல்லாம் வரும்? 
ஒரு எளிய விளக்கம்

மூன்று சுழி “ண”, 
ரெண்டு சுழி “ன” மற்றும்
 "ந" என்ன வித்தியாசம்?

தமிழ் எழுத்துகளில் 
ரெண்டு சுழி "ன" என்பதும், மூன்று சுழி "ண" என்பதெல்லாம் வெறும் பேச்சு வழக்கு.

"ண" இதன் பெயர் டண்ணகரம்,
"ன" இதன் பெயர் றன்னகரம்,
"ந" இதன் பெயர் தந்நகரம் என்பதே சரி.

மண்டபம், கொண்டாட்டம் – என எங்கெல்லாம் இந்த மூன்று சுழி "ணகர" ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து 'ட' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு "டண்ணகரம்" னு பேரு. (சொல்லிப் பாருங்களேன்!)

தென்றல், சென்றான் – என எங்கெல்லாம் இந்த ரெண்டு சுழி "னகர" ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து 'ற' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு "றன்னகரம்" னு பேரு. (சும்மா சொல்லிப்பாருங்க!)

இது ரெண்டும் என்றுமே மாறி வராது..
நினைவில் கொள்க..

மண்டபமா? மன்டபமா? சந்தேகம் வந்தா...
பக்கத்துல 'ட' இருக்கா,
அப்ப இங்க மூன்று சுழி 'ண்' தான் வரும்.
ஏன்னா அது "டண்ணகரம்".

கொன்றானா? கொண்றானா? சந்தேகம் வந்தா...
பக்கத்துல 'ற' இருக்கா
அப்ப இங்க ரெண்டு சுழி 'ன்' தான் வரும்.
ஏன்னா அது "றன்னகரம்"
என்று புரிந்து கொள்ளலாம்.

இதே மாதிரித்தான் 'ந' கரம் என்பதை, "தந்நகரம்" னு சொல்லணும்
ஏன்னா இந்த 'ந்' எழுத்தை அடுத்து 
வரக்கூடிய உயிர்மெய் 'த' மட்டுமே. (பந்து, வெந்தயம், மந்தை).

இந்த "ண", "ன" மற்றும் "ந" விளக்கம் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்..........

அருமையான விளக்கம்  இதுவரை பலபேருக்கு தெரியாமல் இருந்தது. 
தமிழறிவோம் இதை பலபேருக்கு பகிர்வோம்.

- படித்ததில் பிடித்தது. தமிழ் அறிவோம்..👌👌👌👍👍👍🙏🙏🙏🙏

புதன், 19 பிப்ரவரி, 2020

தமிழ் எண் மைல் கல் கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை, பிப்.19, கடந்த நூற்றாண்டு வரை மக்கள் பயன்படுத் தியது தமிழ் எண்களே என்பதற்கான சான்று - 1849 ஆம் ஆண்டு நடப்பட்ட தமிழ் எண் மைல் கற்கள் செங்கிப் பட்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள் ளது. தஞ்சாவூர்  செங்கிப்பட்டியில், திருச்சி தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே பயணியர் விடுதியின் சுற்றுச்சுவரின் அருகே தமிழ் எண்கள் பொறிக்கப்பட்ட இரண்டு மைல்கற்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. வித்தியாச மான எண்கள் பொறிக்கப்பட்ட மைல் கல் கிடப்பதாக கந்தர்வ கோட்டை ஒன்றியம் குரும் பூண்டியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மூ.சேகர் அளித்த தகவலைத் தொடர்ந்து, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொல்லறிவியல் துறையினர் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர். அதில் திருச்சி, தஞ்சாவூர் இடையே 1849 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட சாலை மேம் பாட்டு பணியின் போது நடப்பட்ட தமிழ் எண்களுடன் கூடிய மைல் கல் என அடையாளம் கண்டுள்ளனர்.

இது குறித்து தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக தொல்லறி வியல் துறை முனைவர் பட்ட ஆய்வாளர் ஆ.மணிகண்டன் கூறியதாவது: தமி ழகம் முழுவதும் பத்துக்கும் மேற் பட்ட இடங்களில் தமிழ் எண்கள் பொறிக்கப்பட்ட மைல் கற்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் எமது குழுவினரால் புதுக் கோட்டை மாவட்டத்தில் கூழியான் விடுதி, ஆதனக்கோட்டை, அன்ன வாசல், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கவுதமபுரி, தஞ்சாவூர் மாவட்டம் மாப்பிள்ளை நாயக்கன் பட்டி, செங்கிப்பட்டி கீரனூர் விலக்குச்சாலை ஆகிய இடங்களில் அடையாளம் கண் டுள்ளோம், தற்போது செங்கிப்பட்டியில் மேலும் இரண்டு மைல்கல் கண்டுபிடிக்கப் பட்டிருப் பது  கூடுதல் முக்கியத்துவம் பெறு கிறது.

மைல் கல் நடப்பட்ட காலம்

ஆங்கிலேயர் காலத்தில், திருச்சியிலிருந்து திருவெறும்பூர் வழியாக, தஞ்சாவூருக்கு செல்லும் ஏழாம் எண் சாலை, 1849 ஆம் ஆண்டு போடப் பட்டது என்றும், இது கப்பிச் சாலையாகவும், பாலத்துடனும், நல்ல நிலையில் இருந்ததாக லீவிஸ் மூர் என்ற ஆங்கிலேயர் 1878 ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் தேதியிட்ட “மேனுவல் ஆப் தி திருச்சினாப்போளி டிஸ்டிரிக்ட்” என்ற புத்தகத்தில் தெரிவித்துள் ளார்.இந்தச்சான்றின் மூலம் மைல்கல் நடப்பட்ட ஆண்டை உறுதிசெய்ய முடிகிறது.

தமிழ் எண் மைல் கல் கல்வெட்டு

தற்போது கண்டுபிடிக்கப்பட் டுள்ள இரண்டு மைல்கற்களும் வெவ்வேறு இடங்களில் நடப்பட் டவை என்பதை பொறிக்கப்பட்டுள்ள தூரத்தை அடிப்படையாகக் கொண்டு உறுதி செய்ய முடிகிறது. முதலாவது மைல் கல் தற்போதைய செங்கிப்பட்டி பிரதான நெடுஞ்சாலையிலும், இரண்டாவது மைல்கல் துவாக்குடி அருகேயும் நடப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. முதலாவது மைல்கல்லில், தஞ்சாவூர் 16  என அரபு எண்ணிலும், ய என்று தமிழ் எண்ணிலும் , தொடர்ச்சியாக திருச்சினாப்பள்ளி (திருச்சிராப் பள்ளி)  18 மைல் என்பதை, ய  என தமிழ் எண்ணுடனும் குறிக்கப் பட்டுள்ளது. இரண்டாவது மைல் கல்லில் தஞ்சாவூர் 21 என அரபு எண்ணிலும் 'உயக'  என தமிழ் எண் ணிலும், திருச்சிநாபள்ளி (திருச்சி ராப்பள்ளி) 13 என அரபு  எண்ணிலும், ய? தமிழ் எண்ணிலும்  குறிக்கப் பட்டுள்ளது. இந்த இரண்டு கல் வெட்டிலும் முதலாவதாக ஆங்கிலத் தில் ஊர்ப்பெயரும் , அதன் கீழே அரபு எண்ணில் தூரமும், இரண் டாவதாக தமிழ் எழுத்தில் ஊர்ப் பெயரும் அதன் கீழே தமிழ் எண்ணில் தூரமும் பொறிக்கப்பட்டுள்ளது. தமிழ் எண்கள் பொதுமக்கள் பயன் பாட்டில்,  எந்தக்காலம் வரை  இருந்தது, என்பதற்கான முக்கியத் துவமான சான்றாக உள் ளது.

தமிழ் எண் மைல்கல் ஆய்வு

எமது குழுவினரால் மாப்பிள்ளை நாயக்கன்பட்டியில் கண்டுபிடிக்கப் பட்டு, தமிழ் பல்கலைக்கழக அருங் காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட் டுள்ள மைல்கல் கல்வெட்டில், ஆதனக்கோட்டை ‘ய சா’ அதாவது 16 மைல் என்றும், தஞ்சை அருங் காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள ஆதனக்கோட்டை ‘யஅ ’ அதாவது 14 மைல் என்றும் தஞ்சையிலிருந்து புதுக்கோட்டை நோக்கி வரு பவர் களுக்காக குறிப்பிட்ட இடை வெளிகளில் நடப்பட்டுள்ளதை உறுதிசெய்தோம். தற்போது அடை யாளம் காணப்பட்ட மைல்கற்களின் எழுத்தமைதி எழுத்துருக்கள், ஒருபக்கம் மட்டுமே பொறிக்கப்பட் டுள்ள தன்மை , கல்லின் வடிவம் ஆகியவற்றை ஒப்புநோக்கும்போது இம் மைல்கற்கள் ஒரே காலத்தி லானவை என்றும், தஞ்சையில் தமிழ் மற்றும் அரபு எண்களும், புதுக் கோட்டையில் தமிழ் மற்றும் ரோமன் எண்களும், இருப்பது நோக்கத்தக்கது. இதன் மூலம் புதுக்கோட்டை சமஸ்தானத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தமிழ் ரோமன் எண்கள் அலுவலக பயன்பாடு களில் முதன்மை பெற்றிருந்ததும், தஞ்சை, திருச்சி ஆளு கைக்குட்பட்ட பகுதிகளில் தமிழ் அரபு எண்கள் முன்னிலைப் பெற்றிருந்திருப்ப தையும், அறிந்துகொள்ள முடிகிறது.

தமிழ் எண்களின் பயன்பாடும் வீழ்ச்சியும்

நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை ரோமன் மற்றும் அரபிய எண்கள் வெளிநாட்டவருக்கான எண்ணாகவும்,  மக்கள் பயன்பாட்டில் தமிழ் எண்கள் மட்டுமே இருந் துள்ளதை வெளிப்படுத்தும் மிக முக்கியமான தொல்லியல் சான்றாக, தமிழ் எண் மைல்கல்  கல்வெட்டுகள் உள்ளன.

தமிழ் எண்கள் சமீப காலமாகத் தான் மக்கள் பயன்பாட் டிலிருந்து வழக்கொழிந்து போயிருக்கிறது  என்பதை  உணர முடிகிறது, என்றார்.

 -விடுதலை நாளேடு, 19.2.20

செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

கருநாடகம் மாநில பெயர் எப்படி!

கர்நாடகம் பெயர் மாற்றத்திற்கும் குரல் கொடுத்தவர் அறிஞர் அண்ணா.. 

வரலாற்று செய்தி: 
இந்த மா நிலத்தை மைசூரு மா நிலம் என்ற பெயரில் அழைப்பது தவறு. "கரு நாடகம் " என்று இம்மா நிலத்திற்கு பெயர் சூட்ட வேண்டும் என்று கூறிய அண்ணா இதற்கு ஆதாரமாக தமிழ் இலக்கியங்களில் மேட்டுப் பகுதியில் இருக்கும் இ ந் நிலப்பரப்பு "கரு நாடகம்" என்றே குறிப்பிடப்படிருப்பதைச் சுட்டிக் காட்டினார். திமுக இதை தீர்மானமாக நிறைவேற்றியது. 1956 முதல் பெங்களூரு திமுக மாவட்ட மா  நாட்டில் இதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.  பிற்காலத்தில் 1972ல் கர் நாடக என்ற பெயரை முதல்வர் தேவராஜ் அர்ஸ் சூட்டிய போதும் அதை வழி மொழிந்து பேசியவர் திமுக சட்டமன்ற உறுப்பினர் திராவிடமணி. இதனால் ..அன்றைய கன்னடர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றவர் அண்ணா. .

சரவணா.. தமிழ் நாட்டுக்கு தமிழ் நாடு என்ற பெயரை மீட்டுக் கொடுத்தவர் அண்ணா என்பதே ரொம்பவும் சூடா ஓடிட்டிருக்கும் போது
அதே சூடு தணியாம இதையும் போட்டு வைப்போம்னு சொல்லியாச்சு.. நம்ம வேலை முடிஞ்சுது.....

(மும்பை புதியமாதவி பதிவு)

புதன், 12 பிப்ரவரி, 2020

சிந்தனை : தமிழன் எப்படிக் கெட்டான்?

தேவ நேயப் பாவாணர்

மதப் பைத்தியம்

பொதுவாக ஒரு மதம் ஏற்படும்போது, அதன் அடியார்கள் அல்லது அதை ஏற்படுத்துவோர் தங்கள் மதக் கருத்துகளையும், தங்கள் முன்னோரைப் பற்றிய சில சரித்திரப் பகுதிகளையும் தொகுத்து நூல்கள் எழுதி வைக்கிறார்கள். அல்லது பாட்டுப் பாடி வைக்கிறார்கள். அவை அம்மதத்திற்கு மறை (வேத) நூல்களாகின்றன. அவற்றில், கலையியல் உண்மைக்கு மாறான சில கருத்துகள் இருக்கலாம். கலை வரவர வளர்ந்து வருகிறது. கலை வளர்ச்சியடைந்த காலத்தில், அதன் உண்மைக்கு மாறான கருத்துகள் மறை நூல்களில் இருக்குமானால், அவற்றை விலக்கிக் கொள்வது கடமையாகும். மனிதனுக்கு மதமேயன்றி மதத்திற்கு மனிதன் அல்லன்.

ஒவ்வொரு துறையிலும் மனிதன் தன் அறிவை வளர்த்து வருகிறான். அறிவு வளர வளர தன் கருத்துகளைத் திருத்திக் கொள்ள வேண்டும். தன் அறியாமையை மதத்தின் மேலேற்றி மதநூலைக் கலை நூலோடு முரண்படக் கூறின், கடவுளின் தன்மைக்கே முரண்பாடு கூறியதாகும். அதோடு கலையும் வளராது; நாடும் கீழ் நிலையடையும்; அறியாமையும் அடிமைத்தனமும் ஓங்கும்.

சில மத நூல்களில், அவற்றை எழுதியவரின் அறியாமையாலோ தன்னலத்தாலோ, மன்பதை (சமுதாயம்) முன்னேற்றத்திற்குத் தடையாயுள்ள சில தீய கருத்துகள் புகுத்தப்பட்டுள்ளன. பிறப்பாற் சிறப்பென்பதும் தாழ்த்தப் பட்டோர்க்குக் கோயிற்புகவு (ஆலயப் பிரேவேசம்) இல்லையென்பதும் இத்தகையன. இதனால்தான் மக்கள் முன்னேற்றத்திற்கு மதம் முட்டுக்கட்டை எனச் சிலர் கருதுகின்றனர்.

சிவனடியாருள் சிறந்தவராகச் சொல்லப்படும் அறுபத்துமூவருள், இயற்பகை நாயனார், சிவனடியார்போல வேடம் பூண்டு வந்த ஒருவனுக்குத் தம் மனைவியைக் கொடுத்ததுமல்லாமல், அதைத் தடுக்க வந்த தம் இனத்தாரையெல்லாம் வெட்டிக் கொன்று முன்பின் அறியாத அக்காமுகனை ஊருக்கு நெடுந்தூரம் யாதோர் இடையூறுமின்றிக் கூட்டிக் கொண்டு போயும் விட்டனர். இது ஒரு பெரிய மானக்கேடு. ஏனாதிநாத நாயனார் தம் எதிரியாகிய அதிசூரனோடு வாட்போர் செய்யுங்கால், அவன் வஞ்சனையால் நீற்றைப் பூசி நெடுநேரம் கேடயத்தால் மறைத்து வைத்திருந்த தன் நெற்றியைத் திடீரென்று காட்ட அவர், “ஆ கெட்டேன்! இவர் பரமசிவனுக்கு அடியவராய்விட்டார்’’ என்று வாளையும் கேடயத்தையும் விட்டுவிடக் கருதி, பின்பு “ஆயுதமில்லாதவரைக் கொன்ற குற்றம் இவரை அடையாதிருக்க வேண்டுமென்று’’ எண்ணி, அவற்றை விடாமல், உண்மையில் எதிர்ப்பவர் போல நடித்து நேரே நிற்க, பழிகாரனாகிய அதிசூரன் அவரை வெட்டிக் கொன்றான். மெய்ப்பொருள் நாயனார் சிவனடியார் போல வேடம் பூண்டுவந்த தம் பகைவனாகிய முத்திநாதனாற் குத்துண்டிறக்கும்போது, அவரை சேதமின்றி ஊருக்கு வெளியே கொண்டு போய்விடும்படி தம் வாயிற்காவலனாகிய தத்தனுக்குக் கட்டளையிட்டார். இவை போன்ற சிவனடியார் சரிதங்கள் இன்னும் பலவுள. இவற்றால், சிவனடியாரான தமிழர் தம் உயிரையும் மானத்தையும் பொருட்படுத்தாமல் மதப்பித்தங் கொண்டு பகைவருக்குக்கூட எதையும் கொடுக்கத் தயாராயிருந்தனர் என்பது வெளியாகும். இயற்பகை நாயனார் சரிதம் பெரிய புராணத்தில் மங்கல முடிவாக மாற்றிக் கூறப்பட்டுள்ளது. அது செவிவழக்காய் மட்டும் வழங்கிய காலத்திலேயே இங்ஙனம் மாற்றப்பட்டிருத்தல் வேண்டும். பிராமண வடிவம் கொண்டு அவருடைய மனைவியைக் கேட்க வந்த சிவபெருமானாகக் கருதப்படுகிறவன், உண்மையில் ஒரு மனிதனாகவேயிருத்தல் வேண்டும். மேன்மேலும் இனத்தார் எதிர்த்து வந்ததை அக்காமுகன் கண்டஞ்சி, இறுதியில் ஓடி ஒளிந்திருக்க வேண்டும். இறுதியில் சிவபெருமான் காட்சி கொடுத்ததாகக் கூறுவது அடியார்க்கெல்லாம் பொதுவாகக் கூறப்படும் மங்கல முடிவு. சிவபெருமானே இயற்பகையாரின் மனைவியைக் கேட்டதாக வைத்துக் கொண்டாலும், அது முடிவின்றி முன்னதாகத் தெரியாமையால், சிவனடியார் வேடம் பூண்டுவந்த எவர்க்கும் தம் மனைவியைக் கொடுத்திருப்பார் என்பது வெட்ட வெளியாகின்றது. மேலே கூறப்பட்ட மற்ற ஈரடியார்களும் பகைவரென்று தெரிந்த பின்பும் போலிச் சிவவேடத்தாருக்கு இணங்கியமையும் இதை வலியுறுத்தும்.

சில திருப்பதிகங்களில் தேரோட்டக் காலத்தில் தேர்க்காலின்கீழ் தலையைக் கொடுத்திருப்பதும், கும்பகோணத்தில் மகாமகக் குளத்தில் மிதியுண்டு சாவதும், சில கோயில்கட்குப் பிள்ளை வரத்திற்குச் சென்று தெரிந்தோ தெரியாமலோ தம் மனைவியரைக் கற்பிழக்கச் செய்வதும் அல்லது இழப்பதும், கோவில் வழிபாட்டிற்குச் சென்றவிடத்துத் தம் அழகான அருமந்த மகளிரைத் தேவ கணிகையராக விட்டுவிட்டு வருவதும், பண்டைத் தமிழருள் பகுத்தறிவற்று மானங்கெட்ட மதப்பித்தர் சிலரின் செயல்களாகும்.

இந்த 20ஆம் நூற்றாண்டிலுங்கூட, சில மதப்பித்தர் ஆங்கிலக் கல்வி சிறப்புப் பெற்றிருந்தும் தாய்மொழி கெட்டாலும் தமது மதம் கெடக்கூடாதென்று கருதி, வேண்டாத வட சொற்களையும் புறம்பான ஆரியக் கொள்கைகளையும் தழுவுகின்றனர். உயிரையும் மானத்தையும் வீணாய் இழக்கத் துணியும் மதப்பித்தர்க்கு இது எம்மட்டு?

மேலும், தமிழை வளர்ப்பதால் மதம் கெடப்போவதுமில்லை. தாய்மொழியையும் மதத்தையும் தூய்மைப்படுத்துவதால் அவை வளர்ந்தோங்கு மென்பதையும் தமக்குப் பெருமை உண்டாகுமென்பதையும் அவர் ஆராய்ந்தறிவதுமில்லை; ஆராய்ந்தவர் சொல்லினும் உணர்வதுமில்லை. இத்தகையோர் இருப்பின் என்! இறப்பின் என்!

சிலர் மதம் பற்றிய வடசொற்கட்குத் தென் சொற்கள் இல்லையென்றும், மதத்துறையில் வடசொற்கள் வந்துதான் ஆக வேண்டுமென்றுங் கூறுகின்றனர். இது தாய்மொழியுணர்ச்சியும் சொல்லாராய்ச்சியும் சரித்திர அறிவும் இல்லாமையால் வந்த கேடு. மேலும் சைவ மாலியமும் (வைஷ்ணவ) அவற்றின் முதல் நூல்களும் தமிழர்களுடையவையாயும் தமிழிலும் இருக்க அல்லது இருந்திருக்க, அவை ஆரியர் கொண்டு வந்தவையென்றும், அவற்றின் முதல் நூல்கள் வடமொழி மறைகளே யென்றுங் கொள்கின்றனர்.

“தம்மானை யறியாத சாதியார் உளரே!’’ இவர்க்கு எத்தனை மொழி நூல்கள் வெளி வந்தென்ன? எத்தனை மொகஞ்சோதாரோக்கள் அகழப்பட்டென்ன?

வடமொழியிற் சொற்கள் ஆனது போன்றே தமிழிலும் ஆக முடியும். ஈராயிரம் ஆண்டுகளாக வடமொழியைத் தழுவி வந்ததால் தமிழில் சொல் வளர்ச்சியில்லாது போயிற்று. இன்றும் தமிழர், சிவபெருமானுக்கும் திருமாலுக்கும் அஞ்சுவதிலும் மிகுதியாகப் பார்ப்பனருக்கு அஞ்சுவதே தமிழ் வளர்ச்சிக்குத் தடையாயுள்ளது.

ஒரு நாட்டின் நாகரிக அல்லது முன்னேற்ற நிலைக்கு மதப் பொறுதியும் (இணக்கம்) ஓர் அறிகுறியாகும். பண்டைக்காலத்தில் தமிழ்நாட்டில் தற்கால இங்கிலாந்திற் போன்றே, மதப் பொறுதியிருந்து வந்தது. கடைத் தமிழ்ச் சங்கத்தில், சைவர், வைணவர்(மாலியர்), பௌத்தர், சமணர், உலகாயதர் முதலிய பல மதத்தினரும் புலவராயிருந்தனர். செங்குட்டுவன் என்னும் சேர மன்னன் வைணவனாயும் அவன் தம்பி இளங்கோவடிகள் சமணராயும் இருந்தனர். இங்ஙனம் பல மதத்தினரும் ஒற்றுமையாய்  வாழ்ந்ததால், தமிழ்நாட்டில் அமைதி நிலவியது. கல்வியும், கைத்தொழிலும், வாணிகமும், அரசியலும் ஓங்கி நாடு நலம் பெற்றது. இக்காலத்திலோ, சில குறும்பர், மதப் பிரிவினையுண்டாக்கித் தமிழ்நாட்டைச் சீர்குலைக்கின்றனர்.

                                                  (நூல் : தமிழர் மதம்)

-  உண்மை இதழ்,16-31.8.19

செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

முகப்புக் கட்டுரை : செம்மொழி தமிழே உலகின் தொன்மொழி! சமஸ்கிருதத்திற்கு மூலமொழி தமிழே!

மஞ்சை வசந்தன்

உலகின் பல மொழிகளுக்கும் மூலமொழி தமிழ் என்பதோடு செம்மொழிக்குரிய தகுதிகளையும், மிகத் தொன்மையையும் உடையது. ஆனால், சமஸ்கிருதம் என்பது ஒரு மொழியே அல்ல. அது கி.பி.மூன்றாம் நூற்றாண்டு வாக்கில் தொன்மைத் தமிழ் சொற்களைப் பயன்படுத்தி செயற்கையாக உருவாக்கப்பட்டது. உண்மை இப்படியிருக்க அதை மறைத்து சமஸ்கிருதமே உலகின் மூல மொழி எனவும், தொன்மை உடையது எனவும், செம்மொழி தகுதி பெற்றது எனவும் ஆரிய பார்ப்பனர்கள் மோசடியாகத் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

அண்மையில் மேல்நிலை வகுப்பு தமிழ்ப் பாடத்தில் கூட இப்பொய்ப் பிரச்சாரத்தைச் செய்துள்ளனர்.

எனவே, உண்மை எது என்பதை ஆதாரபூர்வமாக உலக மக்களுக்கு உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளபடியால், ஆய்வுகளின் அடிப்படையிலான சான்று களுடன் இதை இங்கு உறுதி செய்துள்ளோம்.

சமஸ்கிருதம் பின்னாளில் உருவாக்கப்பட்ட செயற்கை மொழி

ஆரியர்கள் இந்தியாவிற்கு கி.மு.1500 அளவில் வந்ததாகவும், இருக்கு வேதம் கி.மு. 1200 அளவில் தோன்றியதாகவும் மேல் நாட்டறிஞர் கூறுவர்.

அசோகருடைய கல்வெட்டுகளில் பிராகிருதமும், பிராமி எழுத்துகளுமே காணப்படுவதால் அக்காலத்தில் சமஸ்கிருதம் பொதுமக்களால் பேசப்படவில்லை என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

பண்ணவணா, சுத்தா முதலிய சைன நூல்கள், அக்காலத்தில் இந்தியாவில் 18 வகையான எழுத்துகள் இருந்ததாகவும், அவற்றில் குறிப்பிடும்படியானவை பாம்பி, கரோஷ்டி, தமிழி போன்றவை என்றும் கூறுகின்றன. ஆனால், ஆரியம் அல்லது சமற்கிருதம் போன்ற எழுத்து வகைகள் அதில் குறிப்பிடப்படவில்லை.

இராமாயணமும், மகாபாரதமும் எழுதப்பட்ட காலத்தில் சமஸ்கிருத எழுத்து உருவாகவில்லை.

இந்திய வரலாற்றாசிரியர் கே.சி.கன்னா என்பவர், இராமாயணம், மகாபாரதம், புராணங்கள் போன்றவை கி.பி.நான்கு அல்லது அய்ந்தாம் நூற்றாண்டில் குப்த அரசர் காலத்தில் சமற்கிருதத்தில் எழுதப்பட்டனவென்றும், அப்பொழுது அவை சமய இலக்கியங்களாக மாறின என்றும் கூறுகிறார் ஏ.பார்த் என்னும் அறிஞரும் இதே கருத்துடையவராய் இருக்கிறார்.

அறிஞர் பர்னல், ஆரியர்கள் தங்களுக்கென ஓர் எழுத்து முறையை உருவாக்கவில்லை என்றும், அவர்கள் குடியேறிய இடத்து எழுத்துகளையே ஏற்று வாழ்ந்தனர் என்றும் குறிப்பிடுகிறார். சமற்கிருதம் ஏற்கெனவே இருந்த திராவிட எழுத்துகளில் ஆரியர்கள் செய்த மாற்றம் என்று தெரிகிறது.

எச்.ஜி.வெல்ஸ் என்னும் அறிஞரும் ஆரியர்கள் நாகரிகமடைந்த மக்களுடன் தொடர்பு கொள்ளும்வரை அவர்களுக்கென்று எழுத்து முறை இருந்ததில்லை என்று  ‘A Short history of the World’ என்னும் நூலில் குறிப்பிடுகிறார்.

கி.மு. முதல் நூற்றாண்டு வரை கல்வெட்டுகளிலும் நாணயங்களிலும், பிற தொல்லியல் ஆதாரங்களிலும் காணப்படாமலிருந்த சமற்கிருதம் கி.மு. முதல் நூற்றாண்டு முதல் பிராகிருத எழுத்துகளால் எழுதப்பட்டும், கி.பி. 350க்குப் பின் பிராகிருத இலக்கியத்தை மொழிபெயர்த்தும் வளர்ந்தது. இந்த மொழிபெயர்ப்புக் காலத்தில்தான் இந்திய மரபுப் புராணங்களும், இராமாயணம், மகாபாரதம் போன்ற காப்பியங்களும் திருத்திச் சமற்கிருத மொழியில் வெளியிடப்பட்டன. (ஆதாரம்: இந்திய வரலாற்றுத் தொகுதி 162_3 பாரதீய வித்யாபவன் வெளியீடு _ சார்ஜ் எல். ஆர்ட்டின் _ ஆரிய மொழி, திராவிட மொழி மரபுகளின் ஒப்பாய்வு நூல்.)

சமற்கிருத மொழியின் தோற்றம், அமைப்புப் பற்றி ஆராய்ந்த கால்வின் கெபார்ட்  (Calvin Kephart) ‘‘இந்தியாவின் பழைய மொழி எதற்கும் சமஸ்கிருதம் தாய் அல்லவென்றும், அது பழைய இந்திய மொழிக் கூறுகளின் கலப்பால் பிற்காலத்தில் தோன்றி வளர்ந்த மொழி என்றும் விளக்கிக் காட்டியிருக்கிறார்.

மத்திய தேசத்தினர் பேசி வந்த மொழி சூரசேனி பண்டைய பாகதமாகும். இச்சூரசேனி இந்தி மொழியின் பெரும் பகுதியாகிய மேற்கு இந்திக்குத் தாய் மொழியாகும். இச்சூரசேனியே பின்னர் மத்திய தேசத் திருந்திய ஆரிய மொழியாக மாறுதலடைந்தது. அதுவே மேலும் மேலும் செம்மை செய்யப்பட்டு முறையான இலக்கண அமைப்புடையதாகப் பின்னர் மாறியதன் காரணத்தால், சமற்கிருதம் என்று பெயர் பெற்றது.

இதனால் திருத்தம் செய்யப் பெற்றுப் புத்துருக்கொண்ட சமற்கிருத மொழியினின்றும் வேறெம்மொழியும் கிளைத்திருக்க முடியாது என்பது தெளிவு’’, என்கிறார்.

இந்திரமால் பகவான்ஜி என்னும் சமண அறிஞர் பழைய பிராகிருத மொழிகள் பழங்காலத்தில் சிறந்து விளங்கின என்றும் அவற்றின் போலி உருவங்களே சமற்கிருத மொழி என்றும் கூறுகிறார்.

ஆதலின், பிராகிருத மொழியிலிருந்தே தோன்றியது  சமற்கிருதம். சமற்கிருதத் திலிருந்து பிராகிருத மொழிகள் தோன்றவில்லை.

பிராகிருதம், பாலிமொழி என்பவை தொன்மைத் தமிழே

வடமொழியில் மூன்று விதச் சகர ஒலிகள் உண்டு. ஆனால் பாலியில், தமிழில் உள்ளதுபோல ஒரே சகரம்தான் உள்ளது.

தமிழில் மெய்யெழுத்துகள் வருமொழி முதல் எழுத்துக்கேற்ப மாறும் தன்மையுடையவை. இம்முறை பாலியிலும் உண்டு.

தமிழில் சொற்கள் எளிய ஒலிகளால் முடியும். அதாவது, உயிரொலிகள் அல்லது மூக்கொலிகளால் முடியும்.

வடமொழியில் உள்ள இருமை பாலியில் இல்லை: திராவிட மொழிகளில் உள்ளபடி ஒருமை, பன்மை தாம் உண்டு.

வடமொழியில் எகர, ஒகரக் குற்றுயிர்கள் இல்லை. ஆனால், அவை பாலியில் உண்டு.

மேற்கூறிய கூறுகள் எல்லாம் திராவிடக் கூறுகளாய் இருப்பதால் ஆரியர் வருகைக்கு முன்னரே, வட இந்தியாவில் இம்மொழியைப் பேசி வந்த மக்கள் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை உறுதி செய்கின்றன.

கி.பி.10இலிருந்து கி.பி.15க்குள் வழங்கிய பேச்சு மொழிகளாயிருந்த சில பிராகிருத மொழிகளிலிருந்து அபப்பிராம்ச மொழிகள் தோன்றின. சூரசேனியிலிருந்து மேற்கு இந்தி, ராஜஸ்தானி, குஜராத்தியும் _ மகாராட்டிரி யிலிருந்து மராத்தியும் _ மாகத்தியிலிருந்து வங்காளி, பீகாரி, அசாமி, ஒரியாவும் _ அர்த்தமாகதியிலிருந்து கிழக்கு இந்தியும் _ பைசாசியிலிருந்து இந்தியும் தோன்றின.

கி.மு. பத்தாவது நூற்றாண்டிற்கு முன்பிருந்தே தமிழ் எழுத்தும், நெடுங்கணக்கும் பெற்றிருந்ததாக எஸ்.கே.சாட்டர்சி போன்ற அறிஞர்கள் கூறுவர்.

தமிழுக்கும், பிராகிருதிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இலக்கண அடிப்படையிலும் இவை இரண்டும் சமற்கிருதத்திலிருந்து வேறுபடுகின்றன என்பர் இம்மொழிகளை ஆராய்ந்த அறிஞர் (D.C.Sircar, Prakrit grammar, Calcutta). இவ்விரு மொழிகளின் உயிரெழுத்துகளிலும் ஒற்றுமை காணப் படுகின்றது.

பிராகிருதியில் தமிழ் போல் அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஒ, ஓ உயிரெழுத்துகள் உள்ளன. வடமொழிக்குரிய புலதம், விசர்க்கம் போன்றவையும் இல்லை. ரு, ரூ, னு, லூ போன்றவையும் இல்லை. ங, ஞ, ஸ, ஷ ஆகிய மெய்யெழுத்துகளும் இல்லை. (தமிழிலுள்ள ள, ற வும் இல்லை.)

கூட்டெழுத்துகள் அமைப்பு தமிழ் மரபை ஒட்டியிருக்கிறது. வடமொழியில் தன்னின எழுத்துகள் மட்டுமின்றிப் பிற மெய்களின் கூட்டுறவே அதிகமாகும். தமிழில் தன்னினக் கூட்டே மிகுதியாகும்.

வடமொழியில் ஒருமை, இருமை, பன்மை என்று மூன்று எண்கள் உள்ளன. பாலி, பிராகிருத மொழிகளில் திராவிட மரபுப்படி ஒருமை, பன்மை என இரு எண்களே உள்ளன. இருமை இரு வடிவம் இல்லை.

தமிழ் எ, ஒ போன்ற குறில்கள் பிராகிருதியில் உண்டு. சொல் உச்சரிப்பு முறையில் பிராகிருதம் முழுவதும் தமிழோடு ஒத்திருக்கிறது. சில எடுத்துக்காட்டுகள்:

தமிழ்             பிராகிருதம்

அச்சன்             அஜ்ஜ

அத்தன்            அத்த

அத்தை            அத்தா

அப்பன்             அப்ப

இதோ               இதோ

செட்டி               சேட்டி

எனவே, இவை இரண்டு மொழிகளும் தொன்மைத் தமிழே.

சமற்கிருதம் உருவானது எப்படி?

தந்தை பெரியார் அவர்கள், பழங்காலத்தில் சமஸ்கிருதம் என்பதாக ஒரு மொழி இருந்திருக்கவில்லை. சமஸ்கிருதம் பழங்காலத்தில், பலர் பலவிதமாகப் பேசிவந்த பல மொழிகளிலிருந்த சொற்களைச் சேர்த்து உருவாக்கப்பட்ட ஒரு புது மொழியாகும்.

சமஸ்த்தம் + கிருதம் = சமஸ்கிருதம்

சமஸ்த்தம் = யாவும்

கிருதம் = சேர்த்துச் செய்தது என்பது பொருள் என்று கூறியுள்ளார்.

பாவாணர், வடமொழி அய்ந்து நிலைகளில் உருவானது என்கிறார். அதன் முதன்நிலை தெலுங்கு அல்லது தென் திராவிடம். இரண்டாம் நிலை பிராகிருதம் அல்லது வட திராவிடம். மூன்றாம் நிலை கீழையாரியம். வேத ஆரியரின் முன்னோர் வடகோகித்தானத் திலிருந்த போது (தற்கால ஈரான்) பேசிய மொழியே கீழையாரியம். இம்மொழி கிரேக்கத்திற்கு மிக நெருக்கமாய் இருந்தது. நான்காம் நிலை வேதமொழி. வேத ஆரியர் வடநாட்டில் சிறுபான்மையினராய் இருந்ததால் வடநாட்டுத் திராவிடருடன் கலந்து தங்கள் முன்னோர் மொழியை மறந்துவிட்டனர். வேதங்கள் ஆரியர் இந்தியாவுக்கு வந்து பல நூற்றாண்டுகள் சென்ற பிறகே இயற்றப்பட்டதால் வேதமொழி பிராகிருதம் என்னும் வடதிராவிடச் சொற்கள் கலந்தது. வேதமொழியின் சொற்றொடரமைப்பு தமிழ் முறையைத் தழுவியது.

அய்ந்தாம் நிலை சமற்கிருதம் வேதமொழியும் ஆயிரக்கணக்கான தென்சொற்களும் கலந்ததே சமற்கிருதம். வடமொழியில் அய்ந்திலிருபகுதி தமிழ்ச் சொற்கள் உள்ளன.

ஆரியர் தென்னாடு வந்து தமிழரோடு தொடர்பு கொண்ட பின்பே தமிழ் எழுத்தைப் பின்பற்றிக் கிரந்த எழுத்தையும், தேவநாகரியையும் கி.பி.மூன்றாம் நூற்றாண்டிற்குப் பின்னரே அமைத்துக் கொண்டனர்.

வடமொழி நெடுங்கணக்கும் தமிழைப் பின்பற்றியே உள்ளதால் அம்மொழி பிந்தித் தோன்றியது.

மேலை ஆரிய மொழிகளில் எண் வேற்றுமை சொல்லப்படாததால் வடமொழி வேற்றுமை அமைப்பும் தமிழைத் தழுவியது.

கிரேக்க இலக்கணத்தில் அய்ந்து வேற்றுமைகளும், இலத்தீன் மற்றும் முதற்கால ஆங்கில இலக்கணத்தில் ஆறு வேற்றுமைகளும் இருக்க வடமொழியில் தமிழில் உள்ளதுபோல் எட்டு வேற்றுமைகள் உள்ளன. அவற்றின் வரிசையும் பொருளும் தமிழில் உள்ளதுபோல் இருக்கின்றன. முக்கிய இலக்கணக் கூறுகள் எல்லாம் தமிழைப் பின்பற்றியே அமைந்திருக்கின்றன.

கிரேக்க நாட்டில் கிரேக்கர்களுக்கு முன் வசித்த தமிழ்மொழி பேசிய மக்கள் கிரேக்கர்களுடன் கலந்ததால் அவை கிரேக்க மொழியில் நிலைத்தன என்று கூறுகிறார்.

கிரேக்க நாட்டில் கி.மு.5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஏரோதோத் என்று வரலாற்றாசிரியர் இந்தியாவின் தென்கோடியில் உள்ள குமரிநாட்டிலிருந்து வந்த பினிசியர் முதலில் கிரீத் தீவிலும் பின்னர் கிரேக்க நாட்டிலும் கி.மு.3000 அளவில் குடியேறியதாகக் கூறுகிறார்.

தமிழின் தொன்மை வடிவமான சூரசேனி என்னும் பிராகிருத மொழி, கலப்பு குறைந்து காணப்பட்டதால் ஆரியர் அதைச் செம்மைப்படுத்திச் சமற்கிருதம் (செம்மை செய்யப்பட்டது) என்கிற பெயரைக் கொடுத்து அக்காலத்தில் வாழ்ந்த மக்களின் கருத்துகளை எல்லாம் நூல்கள் வடிவில் அம்மொழியில் எழுதி வைத்தனர். அவர்களுக்குப் பின் வந்த அறிஞர்களும், அம்மொழியிலேயே எழுத ஆரம்பித்ததால் சமற்கிருத நூல்கள் நாளடைவில் பெருகி அவற்றிற்குச் சிறப்புகள் பல உண்டாயின. இந்தியாவின் பல பாகங்களிலிருந்த அறிஞர் பலவகை அறிவு வளர்ச்சியையும் வடமொழியில் எழுதி வைத்தனர். அவ்வாறு வடமொழியில் எழுதி வைத்தவர்களில் பலர் தென்னாட்டு அறிஞர்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

வரலாற்று ஆசிரியர்களான எச்.வி. சீனிவாசமூர்த்தி, ஆர்.இராமகிருஷ்ணன் போன்றோர் சாதவாகனருடைய கல்வெட்டுகள் பிராகிருதியிலும், பிராமி எழுத்துகளிலும் இருந்தனவென்றும், சமற்கிருத மொழி கல்வெட்டுகளில் புகுந்தது கி.பி.நான்காவது அல்லது ஐந்தாவது நூற்றாண்டுகளில்தான் என்றும் கூறுவர். ஆனால், நாசிக் குகையில் காணப்படும் நாகபாணா கல்வெட்டுதான் பழமையானதென்பர் சிலர். வேறு சில அறிஞர்கள் கி.பி.150இல் ருத்ரதாமனால் வெட்டுவிக்கப்பட்ட ஜுனாகத் கல்வெட்டே (கிர்னார் கல்வெட்டு) மிகப் பழமையானதென்பர்.

டி.ஆர்.சேஷ அய்யங்காரும் இதே கருத்தைத் தெரிவிக்கிறார். (Dravidian India - Prof. Sesha Aiyangar).

ஸ்டென்கொனோவ், பர்ரோ போன்றவர்களும் சமஸ்கிருதத்தில் திராவிடச் சொற்கள் அதிக அளவில் இருப்பதைச் சுட்டிக்காட்டுவர்.

எமினோ, சட்டர்ஜி, முயல் ப்லோக் போன்றவர்கள் சமற்கிருதம் திராவிட முறையைத் தழுவி வினையெச்சங்கள், வினையாலணையும் பெயர்களைப் பயன்படுத்தி யிருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர்.

டாக்டர் மக்ளீன் என்னும் அறிஞர் ‘‘திராவிட மொழிகள் சமற்கிருதத்தைவிட மூத்த மொழிகள் என்பதில் சந்தேகமில்லை’’ என்கிறார்.

பஞ்சாப், சிந்துவெளிப் பகுதிகளில் கிடைத்த குறியீடுகளை ஆராய்ந்து பார்த்த பி.டி.சீனிவாச அய்யங்காரும், அக்குறியீடுகள் மூலத் தமிழைக் குறிப்பதாகக் கூறுகிறார். புதிய கற்காலத்தில் இந்தியாவில் பேசப்பட்ட மொழிகள் அனைத்தும் மூலத்தமிழ் மொழியின் கிளைமொழிகள் என்றும், தற்காலத்தில் கீழ்க்கோதாவரிப் பகுதிகளில் பேசப்படும் மொழிகள், மூலத்தமிழின் இன்றைய கிளைமொழிகள் என்றும், வடநாட்டு இந்தோ_ ஆரிய மொழிகள் மூலத்தமிழிலிருந்து கிளைத்த மொழிகள் என்றும், என்றும் கூறுகிறார்.

George. Hart - Tamil heroic poems என்னும் நூலில், பெருவாரியான தமிழ் மற்றும் திராவிட இலக்கிய மரபுகள், பிராகிருத மொழி இலக்கியங்கள் மூலம் சமஸ்கிருதத்திற்கு வந்ததாகப் பல எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்கிக் காட்டுகிறார்.

தமிழ் வார்த்தைகளை சமஸ்கிருத வார்த்தைகளாக்கினர்

ஆரிய பார்ப்பனர்கள் தமிழ் எழுத்துகளுக்குப் பதிலாக சமஸ்கிருத எழுத்துகளை மாற்றிப்போட்டு சமஸ்கிருத வார்த்தைகளை உருவாக்கினர்.

சுரம் என்பதை ஜூரமாக்கினர்.

சுரம் என்பது ‘சுர்’ என்ற தமிழ் வேர்ச் சொல்லிலிருந்து வந்தது. சுர் என்றால் சுடுதல்.

சலம் என்பதை ஜலம் என்று சமஸ்கிருதமயமாக்கினர்.

“சலம்’’ என்பது நீர் சலசல வென்று ஓடுவதால் வந்த காரணப் பெயர்.

சலம் என்பதை ஜலம் என்று சமஸ்கிருதமயமாக்கினர்.

பன்கயம் என்ற தூய தமிழ்ச் சொல்லை பங்கஜம் ஆக்கினர்.

பன்கயம் என்பது பல இதழ்களை உடையது என்பது பொருள். தாமரை பல இதழ்களை உடையதால் அது பன்கயம் எனப்பட்டது. அதில் எழுதுவதை மாற்றி பங்கஜம் என்ற சமஸ்கிருத சொல்லாக்கினர்.

குருதி ஆயம் என்ற தமிழ் வார்த்தையை ஹிருதயம் என்று சமஸ்கிருதமாக்கினர். குருதி ஆயம் என்றால் குருதி சேரும் இடம். இதயத்தில் குருதி சேர்வதால் அதற்கு குருதி ஆயம் என்று தமிழில் பெயர். அதை ஹிருதயம் என்று மாற்றி சமஸ்கிருதம் ஆக்கினர்.

இப்படி தமிழிலிருந்து சமஸ்கிருதத்தை உருவாக்கினர். சமஸ்கிருதத்தில் இவற்றிற்கு வேர்ச் சொல் கிடையாது என்பதை ஆய்வில் கொள்ள வேண்டும்.

இடவல மாற்றம் (Mirror Method)

கண்ணாடியில் இடதுவலமாகத் தெரியும். அதேபோல் தமிழ் எழுத்துகளை இடவலமாகத திருப்பிப் போட்டு சமஸ்கிருதமாக்கினர்.

அரசு என்று தூய தமிழ் சொல்லை இடவலமாற்ற முறையில் ராஜ் என்று சமஸ்கிருதமாக்கினர்.

அரசு என்பதில் முதல் இரு எழுத்துகளை இடவலமாக மாற்றினால் ரஅசு என்று ஆகும். முதல் எழுத்தை நெடில் ஆக்கி ராசு என்று ஆக்கி பின் சு_ஜீ என்று மாற்று ராஜீ _ ராஜ் என்று ஆக்கினர்.

அரசன் என்ற தூய தமிழ்ச் சொல்லை இதே முறையில் ராஜன் என்று ஆக்கினர்.

அரசன் _ என்பதை இடவலமாக மாற்றி ராஅசன் என்றாக்கி ‘ச’ எழுதுவதை ஜ வாக்கி ராஜன் என்றாக்கினர். இவ்வாறே அறமன் என்பதை ராமன் என்றும் அறவாணன் என்பதை ராவணன் என்றும் ஆக்கினர்.

சிலர், வேதங்கள் 2500 ஆண்டு பழமையானவை. அவை சமஸ்கிருதத்தில் இருப்பதால் சமஸ்கிருதம் 2500 ஆண்டுகள் பழைய மொழி என்கின்றனர். ஆனால் இது அறியாமை.

வேதமொழி சமஸ்கிருதம் அல்ல!

ஆரியர் இந்தியாவுக்கு வந்தபோது அவர்களிடம் எழுத்தும் இல்லை; எழுத்து வடிவான இலக்கியமும் இல்லை.

தமிழே வேத மொழிக்கு முந்தையது என்பதை மலையாளத்தில் சட்டம்பி அடிகள் 1901ஆம் ஆண்டில் ‘ஆதிபால’ என்னும் நூலில் நிலைநிறுத்தி இருக்கிறார். பாணினி நூற்பாக்களைத் தொல்காப்பிய நூற்பாக்களோடு மேற்கோள்காட்டி தமிழே முந்தையது என்றார்.

மாபாணன் என்னும் சொல் சிந்துவெளி முத்திரையில் உள்ளது. ஈரானியம் மற்றும் பிற மொழிகளிலிருந்து 20 சதவிகித சொற்களும், தமிழில் இருந்து 60 சதவிகித சொற்களும் வேத மொழியில் கலந்தன. எனவே, வேதமொழி சமஸ்கிருதம் அல்ல.

சிந்துவெளி முத்திரைகள் அனைத்திலும் கி.மு.3000 காலத்திய தமிழ்ச் சொற்கள் உள்ளன. ஆப்கானிஸ்தான் மெகர்கார் அகழ்வாராய்ச்சியில் சிந்துவெளி எழுத்தில் ஸ்வஸ்திக் வடிவம் காணப்படுகிறது. இதன் காலம் கி.மு.6000_கி.மு.7000 என வரையறுத்துள்ளனர். ஸ்வஸ்திக் எழுத்து தமிழ் ‘ஓம்’ எனப் படிக்கப்பட்டுள்ளது. ஓம் ஓம்பு என்னும் சொல் காப்பாற்று என்று பொருள்படும்.

எனவே, உலக மொழிகளிலேயே 9 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட எழுத்துச் சான்றுடைய மொழி தமிழ் என நிறுவப்பட்டுள்ளது.

வடமொழிப் பேராசிரியர் டாக்டர் கே.கைலாசநாத குருக்கள் வேதங்கள் சமற்கிருத நூல்கள் எனப்படுவதில்லை என்றும், வேதங்களுக்குப் பின் பாணினியால் திருத்தம் செய்யப்பட்ட மொழியில் தோன்றிய இலக்கியங்களே சமற்கிருத நூல்கள் எனப் பெயர் பெற்றதாகவும் கூறுகிறார்.

வேதமொழி சமஸ்கிருதம் அல்ல என்று பெரிய சங்கராச்சாரியும் கூறியுள்ளார்.

உலகின் மூலமொழி, தொன்மொழி தமிழ்!

ஆங்கிலம், ஜப்பான், கொரியா உள்பட உலகில் பல மொழிகளின் மூலமொழி தமிழ் ஆகும்.

W.W.Skeat என்பவரின்  The Etymological dictionary of the English languageஇல்  உள்ள 14286 சொற்களில் 5700 (40 விழுக்காடு) சொற்கள் தமிழ் மூலத்திலிருந்து வந்தவையென்று விளக்கியிருப்பதாகவும், மேலும் 7200 சொற்கள் (50 விழுக்காடு) தமிழ் மூலத்திலிருந்து வந்தவை என்று சந்தேகப்படுவதாயும் கூறுகிறார். பொதுவாகப் பார்க்கும்போது ஆங்கிலமொழி பாதிக்கு மேல் தமிழ் மொழியே என்று தாம் நினைப்பதாக் கூறுகிறார்.

எடுத்துக்காட்டாக:

தமிழ் - ஆங்கிலம்

கரை   _Cry

கனை  _ Neigh

மண்   _  Mud gland

மாறுகடை _ Market

பிளிறு _ Blare

இவ்வாறு இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட அய்ரோப்பிய கலைச் சொற்களிலும் தமிழ் வேர்ச் சொற்கள் உள்ளன என்றும் அவை கிரேக்க, இலத்தீன், தியுத்தானிய மொழிகள் மூலம் அய்ரோப்பிய மொழிகளில் கலந்ததாகக் கூறுகிறார்.

செனகல் மொழி

அம்மொழி அறிஞர் இந்தியாவில் செனகல் மொழிச் சொற்கள் தமிழ்ச் சொற்களோடும் ஒத்திருக்கிறது என்கிறார்.

ஜப்பான் மொழி தமிழிலிருந்து வந்தது என்று ஜப்பான் மொழியியல் அறிஞர் சுசுமோ ஓனோ கூறுகிறார்.

அதேபோல் கொரிய, சுமேரிய மொழியின் மூலமொழி தமிழ் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

தமிழ் - கொரியா

குடில்                _ குடுல

அப்பா                _ அபி

தீ            _ தீ

பாம்பு _ பாம்

காய்    _ க்யு

படகு  _ பட

 

தமிழ் - சுமேரியா

அம்மா             _ அம்மா

அப்பன்             _ அபா

அரை _ அர

ஊ         _ ஊர்

குருதி                _ குருன்

தும்பி _ தும்

 

இப்படி உலக மொழிகளுக்கெல்லாம் மூலமொழியாம் தமிழ்மொழியின் தொன்மை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தையது. 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அதில் நல்ல நூல்கள் உருவாகியுள்ளன. தமிழ்மொழியின் தோற்றம் 15 ஆயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்டது.

இப்படிப்பட்ட தொன்மையான தமிழ்மொழியோடு, கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் செயற்கையாக தமிழைக் கொண்டு உருவாக்கப்பட்ட சமஸ்கிருதத்தை ஒப்பிடுவதே குற்றம். அப்படியிருக்க தமிழைவிட சமஸ்கிருதம் தொன்மையானது என்பது மோசடியாகும்.

எனவே, தமிழோடு ஒப்பிடும் அளவிற்கு தொன்மையும் வளமையும் உடைய மொழி உலகில் எதுவும் இல்லை, இல்லை, இல்லவே இல்லை!

-  உண்மை இதழ், 16-31.8.19

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2020

பார்ப்பனர் பார்வையில் திருக்குறள் தீண்டத்தகாததாம்!


1796 இல் சென்னைக்கு அரசுத் துறையில் பணியாற்ற வந்த எல்லீஸ் துரையவர்கள் தமிழ் படிக்க விரும்பினார்.

அவருக்குத் திருக்குறள் ஏட்டுச் சுவடியொன்றைத் தாம் வேலைப் பார்த்து வந்த வெள்ளைக்காரர் வழி சேர்ப்பித்தவர்  அயோத்திதாசரின் பாட்டனாரான கந்தசாமி என்பவர்.

எல்லீஸ் தனக்கு தமிழ் கற்றுக் கொடுக்க வந்த பிராமணர்களிடம், கந்தசாமி திருக்குறள் கொடுத்தாரென்றார். அதற்கு அவர்கள், ‘அவர் தீண்டத்தகாதவர், அவர் கொடுத்த திருக்குறள் தீண்டத் தகாதது’ என்றனர். காரணம் வள்ளுவர் புலைச்சியின் மகன் என்பது அவர்கள் எண்ணம்.

ஏன் இப்படி ‘பிராமணர்’கள் கருதுகிறார்கள் என்று கந்தசாமியை அழைத்து எல்லீஸ் துரை கேட்க “எங்களுக்கும் அவர்களுக்கும் விரோதம். எங்கள் வீதிக்குள் ‘பிராமணர்’கள் வந்தால் அவர்கள் பாதம் பட்ட இடம் பழுதாகி விடும் என்று சொல்லிக் கொண்டு அவர்களைத் துரத்தி ‘பிராமணர்’கள் வந்த வழியிலும், சென்ற வழியிலும் சாணத்தைக் கரைத்துத் தெளித்து சாணச் சட்டியையும் உடைத்து வருகிறார்கள்” என்று கூறினாராம்.

உண்மையான காரணத்தைப் புரிந்துகொண்ட எல்லீஸ் துரை திருக்குறளை ஆழமாகப் படித்து அதை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்தார்.

1819இல் துரை திடுமென மறைய நேர்ந்ததால் நூல் முழுவதும் மொழி பெயர்க்காமல் போயிற்று.

- “குறளும் அயோத்திதாசரும்”

என்ற தலையங்கத்தில்

“செந்தமிழ்ச் செல்வி” மார்ச், 2000

- விடுதலை ஞாயிறு மலர் 18 1 20

முதல் தமிழ்ப் புத்தகம்

முதல் தமிழ்ப் புத்தகம் அச்சிடப்பட்டது 1577ஆம் ஆண்டு. முதல் தமிழ் அகராதி அச்சிடப்பட்டது 1679இல். அகராதி, ஃபாதர் அடி புரோஞ்சா என்ற மேநாட்டவரால் தொகுக்கப்பட்டு , கொச்சியிலிருந்து வெளியிடப்பட்டது.

முதல் தமிழ் இலக்கணப் புத்தகம் 1716ஆம் ஆண்டில் தரங்கம் பாடியில் அச்சிடப்பட்டது.

- உண்மை, 15.11.1976, பக்கம் -27

- விடுதலை ஞாயிறு மலர் 18 1 20

தமிழர் விழா!

தந்தை பெரியார்

பொங்கல் விழா எதற்குக் கொண்டா டப்படுகிறது என்பது இன்னமும் பலருக்கு தெரியாது. உண்மையில் தமிழர்களுக்கு என்று தமிழர்களின் நாகரிகம் பண்பு இவைகளுக்குப் பொருத்தமான பண் டிகை ஒன்று கூடக்கிடையாது.

அப்படி இருந்தும் நம் மக்களுக்கு பண்டிகைகளுக்கு அளவே இல்லாது பல பண்டிகைகள் இருந்து வருகின்றன.

முதலில் அப்பண்டிகைகளின் பெயர் களைப் பார்த்தால் அவை அத்தனையும் சமஸ்கிருத பெயராகவே இருக்கும். தமி ழர்களுக்கென்றும் தமிழர்களின் பண்பு நாகரீகம் கலாச்சார பழக்கவழக்கம் இவைகளைக் கொண்டதாகவும் ஒரு பண்டிகை இருக்குமானால் அதற்கு தமிழிலேயே பெயர் இருக்கவேண்டும். ஆனால், வட மொழியில் இருக்குமானால் எப்படி தமிழர்களுக்குண்டான பண் டிகையென்று கூறமுடியும்?

பொங்கல் பண்டிகை

ஏதோ பொங்கல் பண்டிகை என்று கூறும் முறையில் தமிழ்ப் பெயராக இருப் பதும் அன்றி நம் மக்களுக்கு ஏற்ற பண்டிகையாகவும் இருக்கிறது. மேலும் இதற்கு கூட பார்ப்பனர்கள் சங்கராந்தி என்று பெயர் கொடுத்து அப்பண்டிகைக் காக கட்டுக்கதைகளை இயற்றிவிட்டு அது இந்திரனுக்குக் கொண்டாடப்படும் பண்டிகை என்பதாக மாற்றிவிட்டார்கள். பண்டிகைகள் ஒவ்வொன்றையும் எடுத்து ஆராய்ந்து பார்த்ததில் இப்பண்டிகையை மட்டும்தான் பார்ப்பனப் பண்டிகையிலி ருந்து  தமிழர் பண்டிகையாக மாற்றம் செய்ய முடிந்தது. தமிழர்களின் பண்புக் கேற்றவண்ணம் அதன் அவசியத்தையும், கொண்டாடும் முறையையும் விளக்கி வருகிறோம்.

உழவர் திருநாள்

இப்பண்டிகை நம் மக்களில் பெரும் பான்மையானவர்களாகிய விவசாயிக ளுக்குண்டான பண்டிகையாகும். அவர் கள் இந்த ஆண்டு முழுதும் விவசாயம் செய்து தானியங்களைத் தங்கள் இல்லத் தில் கொண்டு வந்து அத்தானியத்தை முதன்முதலாக சமைத்து உண்ணும் பொழுது தாங்கள் சந்தோஷமாக இருக் கும் அறிகுறியைக் காட்டும் முறையில் இப்படிக் கொண்டாடுகிறோம். இது வரைப் பார்ப்பனர்களின் முறைப்படி கொண்டாடப்பட்ட முறைகள் அறிவுக் கும் பண்புக்கும் பொருத்தமற்றதாகும் என்பதை விளக்கி நம்முடைய பழக்க வழக்கங்களுக்கு ஏற்றவண்ணம் கொண் டாடும் முறையை பின்பற்றுகிறோம்.

உறவைக் கூட்டும் விழா

இந்நன்னாளில் ஒருவருக்கொருவர் தங்கள் விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்ள தங்கள் நண்பர்களுக்கும் உற வினர்களுக்கும் வாழ்த்துக் கடிதங்கள் அனுப்புகிறார்கள். இப்பண்டிகை மட்டும் தான் தமிழர்களுக்கென்று உள்ள பண் டிகை.

இதைத் தவிர மற்றவை யாவும் பார்ப் பனப் பண்டிகைகள். அப்பண்டிகைகள் அத்தனைக்கும் கூறப்படும் கதைகள் அறிவுக்குப் பொருத்தமற்றவைகள். நாகரீக காலத்திற்கு ஏற்றவை அல்ல. அப்போது காட்டுமிராண்டித்தனம் மலிந்த காலத்தில் அதற்கேற்றவண்ணம் பார்ப்பனர்கள் கதைகளைக் கட்டிவிட் டார்கள்.

அறிவுக்கு அளவுகோல்

இப்போது விஞ்ஞானம் மலிந்த காலம்; ஆராய்ச்சியாளர்கள் மிகுந்து அதிசய - அற்புதங்கள் பலவற்றை சாதித்துக்காட்டும் காலம். இப்படிப்பட்ட ஆராய்ச்சிக் காலத்தில் புராணக்கதைகள் இருப்பது சிறிதும் அறிவுக்குப் பொருத்தமற்றதாகும்.

அவைகள் இன்னமும் நிலைத்து நிற்பதன் காரணம் நம்முடைய முட்டாள் தனம் எத்தனை டிகிரி இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறதே அன்றி அறிவின் தரத்தைக் காட்டுவதில்லை...

சேலம் நகராண்மைக் கழகக் கல்லூரி விழாவில் ஆற்றிய உரையிலிருந்து

- 'விடுதலை', 26.01.1954

- விடுதலை ஞாயிறு மலர், 11.1.20

இலக்கியத்தில் தை மாதத்தின் சிறப்பு:


பொங்கல் விழா நாளையே தமிழர்கள் புத் தாண்டுத் தொடக்கமாகப் பல்லாண்டுக் காலமாகக் கொண்டாடி வந்துள்ளனர் என்ப தற்கு ஈராயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட கழக இலக்கியங்களில் சான்றுகள் உள.

“தை இத்திங்கள் தண்கயம் படியும்“ - நற்றிணை

“தை இத்திங்கள் தண்ணிய தரினும்“ - குறுந்தொகை

“தை இத்திங்கள் தண்கயம் போல்” - புறநானூறு

“தை இத்திங்கள் தண்கயம் போல” - அய்ங்குறுநூறு

“தையல் நீராடி தவம் தலைப்படுவாயோ” - கலித்தொகை

தமிழ்ப் புத்தாண்டைப் பற்றிய குறிப்புகள் - மு. மணிவெள்ளையன்

தீய்ந்த தீபாவளி வந்தாலென்ன? காய்ந்த கார்த்திகை வந்தாலென்ன? மகாராசன் பொங் கல் வரவேண்டும் என்பது நாட்டுப் புற நடை முறை மொழி வழக்கு.

பண்டைத் தமிழர் பொங்கல் விழா கொண் டாடும் வெற்றியைப் பற்றிப் புற நானூற்றிலே ஒரு பாடல் உண்டு. தொன்மையுடைய பொங்கலைப் பற்றிக் கருவூர் கந்தப் பிள்ளை சாத்தனார் என்ற புலவர் பாடியுள்ளார். பாடல்: 168.

தைப் பிறந்தால் வழி பிறக்கும் - தை மழை; நெய் மழை-என்பன போன்ற மறுமொழிகள் தமிழர் புத்தாண்டு வரவேற்பை உறுதிப்படுத்து வனவாகும்.

- விடுதலை ஞாயிறு மலர் 11 1 20


தமிழ் ஆண்டு (திருவள்ளுவர் ஆண்டு)

வ.வேம்பையன்

தமிழ் உலகில் தமிழ் ஆண்டு என்னும் பெயரில் வழக்கில் இருக்கின்ற பிரபவ முதல் அட்சய வரை உள்ள 60 ஆண்டுகளின் பெயர்கள் தமிழில் இல்லை. அவை பற்சக்கர முறையில் இருப்பதால் 60 ஆண்டுகளுக்கு மேல் உள்ள காலத்தைக் கணக்கிடுவதற்கு உதவியாக இல்லை. அதற்கு வழங்கும் கதை அறிவு, அறிவியல், தமிழ் மண், மாடி, மாண்பு, பண்பு ஆகியவற்றுக்குப் பொருத்தமாக இல்லை.

எனவே, தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள் 1921 ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில், தமிழ்க்கடல் மறைமலை அடிகள் தலைமையில் கூடி ஆராய்ந்தார்கள். திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவது; அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது, திருவள்ளுவர் காலம் தி.மு.31; தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள் என்று முடிவு செய்தார்கள்.

இந்த முடிவை 13.1.1935 ஆம் நாள் திருவள்ளுவர் திருநாள் கழகத்தினர் நடத்திய திருவிழாவில், தலைமை தாங்கிய தமிழ்க் கடல் மறைமலை அடிகளார் உறுதி செய்து அறிவித்தார். திருவள்ளுவர் ஆண்டு கணக்கிட கிறித்து ஆண்டுடன் 31 கூட்ட வேண்டும் என்று கூறி, திருவள்ளுவர் ஆண்டைத் தொடங்கி வைத்தார். 1925+31=1966. அதை அறிஞர் அவை ஏற்றுக் கொண்டது. அன்று தொட்டு அறிஞர்களால் அவ்வாண்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. (பக்கம் 117, திருவள்ளுவர் நினைவு மலர் 1935)

திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை: இறுதி மாதம் மார்கழி. புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள். ஏழு கிழமைகளில் புதன், சனி தவிர மற்றவை தமிழ், புதன் - அறிவன்; சனி - காரி.

ஆங்கில ஆண்டுடன் 31 கூட்டினால் வருவது திருவள்ளுவர் ஆண்டு. 2007+31=2038. தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்று 1971 முதல் தமிழ்நாடு அரசு நாட்குறிப்பிலும் 1972 முதல் தமிழ்நாடு அரசிதழிலும் 1981 முதல் தமிழ்நாடு அரசின் அனைத்து அலுவல்களிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது. நாம் பின்பற்றவும் பரப்பவும் வேண்டும்.

உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் ஒப்பற்ற உயிர்ப்பாற்றல் நான்கு. தமிழ் மொழி, தமிழ் மறை, தமிழ் ஆண்டு, தமிழர் திருநாள். இவற்றைப் போற்றிப் புரந்து பின்பற்றிப் பரப்பினால் தமிழர் நலவாழ்வு, வள வாழ்வு, பெருவாழ்வு, புகழ் வாழ்வு பெற முடியும்.

தமிழ் ஆண்டு முறையைப் பின்பற்றுவோம் -- நாம்

தமிழர் என்று நிலை நாட்டுவோம்.

தரணி முழுதும் வாழ்கின்ற தமிழர்களுக்குத் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!

- விடுதலை ஞாயிறு மலர் 11 1 20

சனி, 8 பிப்ரவரி, 2020

2500 ஆண்டு சமஸ்கிருதம் - 4500 ஆண்டு வரலாறு தமிழ்

கடவுளுக்குத் தேவ பாஷை சமஸ்கிருதம் மட்டும்தான் தெரியுமென்றால் அந்தக் கடவுளைத் தூக்கிக் கடலில் எறி என்றவர் எங்கள் தத்துவ பிதாமகர் தந்தை பெரியார்

செத்த மொழிக்கு ரூ.150 கோடி - திராவிட மொழிகளுக்கு ரூ.12 கோடி ஒதுக்கீடா?

நாடாளுமன்றத்தில் மானமிகு  ஆ.இராசா மகத்தான போர் முழக்கம்!

புதுடில்லி, டிச.14  கடவுளுக்குத் தேவ பாஷை சமஸ்கிருதம்தான் தெரியும் என்றால், அந்தக் கடவுள்களைத் தூக் கிக் கடலில் வீசு என்று சொன்னவர் எங்கள் தத்துவ பிதாமகர் தந்தை பெரியார் என்றும், செத்துப்போன சமஸ்கிருத மொழிக்கு ரூ.150 கோடி யும், வளமான திராவிட மொழிகளுக்கு ரூ.12 கோடியும் ஒதுக்கும் பாரபட்சம் ஏன் என்று இடி முழக்கம் செய்தார் திராவிட முன்னேற்றக் கழக கொள் கைப் பரப்பு செயலாளர் ஆ.இராசா அவர்கள்.

மக்களவையில், மத்திய சமஸ்கிருத பல்கலைக் கழக ஆராய்ச்சி மய்யம் அமைத்தல்' மசோதா மீது நடைபெற்ற விவாதத்தில்மேனாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா பேசியதாவது:

பேரவை மாற்றுத் தலைவர் அவர் களே, இந்த சமஸ்கிருத பல்கலைக் கழக மசோதாவில் பங்கேற்கின்ற வாய்ப்பினை வழங்கியதற்காக முத லில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த அவையில் நான் 5-ஆவது முறையாக நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, மூன்று முறை அமைச்சராகப் பணியாற்றி இருந்தா லும், முதல் முறையாக என்னுடைய தாய்மொழியில் பேசுகின்ற வாய்ப்பை, அவசியத்தைப் பெற்று பேசுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

எதிர்க்கட்சிகளுக்கும்

அதிக நேரம் ஒதுக்குக!

முதலில் நான் பேரவைத் தலைவர் அவர்களைக் கேட்டுக் கொள்வது, பொதுவாக மசோதாவில் பேசுகின்ற வர்களுக்கு நேரம் ஒதுக்கும்போது, அந்தந்த அரசியல் கட்சிகளின் உறுப் பினர்களின் எண்ணிக்கை அடிப் படையில் நேரம் ஒதுக்குவது வழக்கம். நானும் அதனை ஏற்றுக்கொண்டிருக் கிறேன்.

ஆனால், இந்த முறை நடந்து கொண்டிருக்கின்ற விவாதம், சற்று வித்தியாசமான கோணத்தில் சென்று கொண்டு இருக்கின்ற காரணத்தி னால், எண்ணிக்கை அடிப்படையில் இல்லாமல், கருத்துக்கு கருத்து என் கின்ற அந்த அடிப்படையில் அதிக நேரத்தை எதிர்க்கட்சிகளுக்கும் ஒதுக்க வேண்டும் என்று உங்களை நான் முதலில் பணிவன்போடு கேட்டுக் கொள்கின்றேன்.

மொழியை அழிக்க நினைத்தால் தி.மு.கழகம் எதிர்க்கும்!

இந்தச் சட்டத்தின் நோக்கம், சமஸ்கிருதத்தில் பட்டமேற்படிப்பு, முனைவர் படிப்பு, ஆராய்ச்சி படிப்பு, சாஸ்திர கல்வியை கற்பிப் பது என்கின்ற நோக்கத்தோடு இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டு இருக் கின்றது.

நான் சார்ந்திருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகமோ அல்லது நானோ எந்த மொழிக்கும் எதிரான வர்கள் அல்ல. ஆனால், எந்த ஒரு மொழியும், இன்னொரு மொழியின்மீது ஆதிக்கம் செலுத்துமானால், எந்த ஒரு மொழியும், தானே பெரிய மொழி, சிறந்த மொழி என்று சொல் கின்ற காரணத்தினால், இன்னொரு மொழியை அழுத்த நேர்ந்தால் அல்லது அழிக்க நேர்ந்தால் அதனை ஒருபோதும் திராவிட முன்னேற்றக் கழகம் ஒப்புக்கொள்ளாது என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவில் இரண்டு சிந்தனை மரபுகள்!

சமஸ்கிருதத்தை வளர்க்க வேண் டும் என்பதற்காக இந்த அரசு எடுக் கின்ற நடவடிக்கைகள் எங்களுக் கொன்றும் விரோதமானது அல்ல. ஆனால், அதே நேரத்தில் இந்த அவையில் பேசப்படுகின்ற கருத்துகள், அரசியல் வரலாற்றில் ஒரு மிகப் பெரிய பிழையை ஏற்படுத்துகின்ற வகையில் இருந்துவிடக் கூடாது.

இந்தியாவில் இரண்டு சிந்தனை மரபுகள் இருந்தன என்பதை நாம் எல்லோரும் ஒப்புக் கொண்டாக வேண்டும். வரலாற்று ஆராய்ச்சி யாளர்கள் ஒப்புக்கொண்டு இருக் கிறார்கள். சி.பி.இராமசாமி அய்யர், எல்லோருக்கும் தெரிந்தவர்தான். திருவாங்கூர் சமஸ்தானத்தில் திவா னாக இருந்தவர். அதற்குப் பிறகு பனாரஸ் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்தவர்.

இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்று சொன்னால், நேரு அவர்கள், சுதந்திரத்திற்குப் பிறகு எல்லா சமஸ்தானங்களையும் இணைக்க வேண்டும் என்று முடி வெடுத்த நேரத்தில், மாகாணங்களை இணைப்பதற்காக, நேஷனல் இண்டி கிரேஷன் கவுன்சில்- என்ற குழுவை ஆரம்பித்தபோது, அதன் தலைவராக யாரைத் தேர்ந்தெடுத்தார் என்றால்; சி.பி. இராமசாமி அய்யர் அவர் களைத்தான் தேர்ந்தெடுத்தார்கள்.

சமஸ்கிருதத்திலிருந்து தமிழா?

ஏற்க முடியாது!

அவர் ஒரு சமஸ்கிருத பண்டிதர். அவர் என்ன சொல்கிறார் என்றால், "இந்த நாட்டினுடைய இரண்டு பண் பாடுகள், இரண்டு மொழி குடும்பங் களை அடிப்படையாகக் கொண்டது; ஒன்று, சமஸ் கிருதத்தை அடிப்படையாகக் கொண்டது, இன் னொன்று திராவிட மொழிகளை அடிப்படை யாகக் கொண்டவை. இவை இரண் டும் வேறு வேறு" - என்று சொன்னார்.

இதற்கு மூலம் எங்கே இருக்கின்றது என்று சொல்வதற்கெல்லாம் நேர மில்லை, நம்முடைய அமைச்சர் அவர்கள் கூட இங்கே சொன்னார்கள். நான் அதனை மறுக்கிறேன். சமஸ் கிருதத்தில் இருந்து தமிழ் வந்தது என்பதை ஒருபோதும் என்னால் ஒப்புக் கொள்ள முடியாது.

திராவிடத்தின் தனித்த அடையாளங்கள்!

நாடாளுமன்றத்தில், பேரறிஞர் அண்ணா அவர்கள் குறிப்பிட்டார் கள்: “நான் திராவிட இனத் தைச் சேர்ந்தவன், அப்படிச் சொல்லுகின்ற காரணத் தினால் நான் ஒரு குஜராத்திக்கோ, ஒரு மராட்டி யருக்கோ, ஒரு வங்காளியருக்கோ எதிரான வனல்ல.

நான் அப்படிச் சொல்வதற்கு என்ன காரணம், இந்த உலகத்துக்கு வழங்குவதற்கு எங்களிடத்தில் திட மான, தனித்த விழுமியங்கள் கொண்ட கருத்துக்கள் இருக்கின்றன. அவற்றை நாங்கள் தனித்த அடை யாளத்தோடு இவ்வுலகிற்கு வழங்க முடியும்'' என்று சொன்னார்.

எனவே, முதலில் இந்த அவைக்கு நான் தெரிவித்துக் கொள்வது; இந்தி யாவில் இரண்டு சிந்தனை மரபுகள் இருக்கின்றன. ஒன்று, சமஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்ட ஆரியப் பண்பாடு, இன் னொன்று; தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட திராவிட மொழிகளை அடிப்படை யாகக் கொண்டு இருக்கின்ற திரா விடப் பண்பாடு என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.

திறந்த மனதோடு

இந்த சமஸ்கிருத மொழி இந்தோ_அய்ரோப்பா குடும்பங்களின் தலையாய மொழிகளில் ஒரு மொழியாக இருக்கின்றது. அதேபோல தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகள் திராவிடக் குடும்பத்தின் அட்டவணையில் இருக்கின்ற மொழிகள் ஆகும். இரண்டுக்கும் சிறப்புகள் இல்லை என்று நான் சொல்லவில்லை. இரண்டிற்குமே இருக்கின்றது.

ஆனால், எதிலே குறை பாடும் இருக்கின்றது என் பதை அருள்கூர்ந்து திறந்த மனதோடு எண்ணிப் பார்க்க வேண்டும் என்று நான் வேண்டுகிறேன்.

சமஸ்கிருத மொழி, அது ஒரு செவ்வியல் மொழி, ஆனால் அந்த மொழிக்கு என்ன ஆதாரம்? வேதநூல் இருக்கிறது. ஆகமம் இருக்கின்றது. பகவத் கீதை இருக்கின்றது. புராணங்கள், மகாபாரதம், இராமா யணம் இருக்கின்றன. இதற்கெல்லாம் என்ன வயது? எவ்வளவு தாராளமயமான மனப்பான்மையுடன் கணக்கிட்டு சொன்னால் கூட 2500 ஆண்டுகளுக்கு மேல் சொல்ல முடியவில்லை. நான் அல்ல, வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். ஆனால், தமிழுக்கு வாருங்கள்_- திராவிடத்திற்கு வாருங்கள். 4500 ஆண்டு களுக்கு முன்னால் வரலாறு இருக்கின்றது.

முதற் தமிழ்ச்சங்கம்! அதனை அன்றைக்கு அமைத்த மன்னன் காய்சின வழுதி. 450 புலவர்கள் கொண்டது முதற்சங்கம். அதிலே முதுநாரை, முதுகுறுகு எனும் இரு நூற்கள் தவிர எல்லாம் கடலில் போய் விட்டன. வெள்ளத்தில் போய்விட்டது! இது வரலாறு! இன்றைக்கும் கல் வெட்டில் இருக்கின்றது. நான் ஏதோ இதனை தேவபாஷை என்றோ அல்லது நம்பிக்கையின் அடிப்படையிலோ பேசவில்லை.

நம்பிக்கை அடிப்படையில் பேசுவது அழகல்ல!

ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். வெறும் நம்பிக்கை அடிப்படையில் பேசுவது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழகல்ல. மாண்புமிகு உறுப்பினர் நண்பர் சத்யபால்சிங் கூட- _ ஒரு ஓய்வு பெற்ற காவல் அதிகாரி, மெத்தப் படித்தவர். இங்கே பேசினார் சமஸ்கிருதம் தெய்வ பாஷை என்று. நம்பிக்கை என்பது வேறு. உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்று சொன்னால், நான் சிறு வயதில் படிக்கின்றபோது, என்னுடைய தாய் தந்தை யர், வீட்டில் சிவன் படத்தை மாட்டி இருந்தார்கள். சிவன் தலையில் நிலா இருந்தது. நான் அதை அப்போது நம்பினேன் சிவனின் தலையில்தான் நிலா இருந்தது என்று. அது பகுத்தறிவு அல்ல, நம்பிக்கை! ஆனால், 1969 ஆம் ஆண்டு, ஆர்ம்ஸ்ட்ராங் தன்னு டைய இடது காலை எடுத்து நிலவில் வைத்தார் என்று சொன்னதற்குப் பிறகு, என்னால் அதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை .

எனவே, அறிவியல் என்று வருகின்றபோது, நம் பிக்கை நகர்ந்து வழிவிட்டால்தான் அது ஆரோக் கியமான மனிதப் பண்பு. இல்லாவிட்டால் அது மனிதப் பண்பு அல்ல என்பதை இந்த அவையில் நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.

4500 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய தமிழ் மொழி!

எனவே, சமஸ்கிருதத்திற்கு என்று 'நம்பிக்கை நூல்கள்' இருக்கின்றன. தமிழ்மொழிக்கு என்று பார்த்தால் 4500 ஆண்டுகளுக்கு முன்னால் முதற் சங்கம், மூவாயிரத்து அய்நூறு ஆண்டுகளுக்கு முன் னால் இரண்டாம் சங்கம், அதனை அமைத்தவர் வெண்டேர் செழியன் என்ற அரசர். அப்போதுதான் தொல்காப்பியம், இசை நுணுக்கம் ஆகிய நூல்கள் கிடைத்தன. (குறுக்கீடுகள்). அதற்குப் பிறகு ஒன்று, இரண்டு, மூன்றாம் நூற்றாண்டுகளில் எட்டுத் தொகை, பத்துப் பாட்டு, பதினெண்கீழ்கணக்கு நூல் கள் வந்தன, இன்னும் பெருமையோடு சொல்கிறேன். நம்முடைய மாண்புமிகு பிரதமர், வெளிநாட்டிற்குப் போய்ச் சொல்கிறார்.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்" _ என்று. பிரதமர் சொல்கிற, அந்த வாக்கியம் எதில் இருக்கின்றது என்றால் முதலாம் நூற் றாண்டில் வந்த இந்த எட்டுத் தொகையில் வருகின்றது என்பதை மறந்து விடக்கூடாது.

நான் இன்னொன்றை விளக்கமாக வேறுபாட்டைச் சொல்கிறேன். சமஸ்கிருதம் முதன்மை என்று சொல் கிறீர்கள். சதுர்வர்ணம் மயா சிருஷ்டம் _ அதாவது நான்கு வர்ணங்களையும் நானே படைத் தேன் என்று _- இது சமஸ்கிருதம். ஆனால், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் - என்று சொல்வது எங்களுடைய திருக்குறள்.

ஸ்திரீ ஜென்மா, பாவ கர்மா; பெண்ணாக பிறப் பது பாவம்! _ என்று சொல்வது சமஸ்கிருதம். பெண் ணிற் பெருந்தக்க யாவுள _- என்று சொல்வது திருக் குறள். (குறுக்கீடுகள்).

இந்திய சிந்தனை மரபு என்பது சமஸ்கிருதத்திற்கு மட்டும் சொந்தமா?

இந்த அடிப்படையில் நான் வருகிறேன். இந்தச் சட்டத்தின் நோக்கம் பற்றி என்ன சொல்கிறீர்கள் என்றால்...... இந்திய சிந்தனை மரபு, ஏதோ சமஸ் கிருதத்திற்கு மட்டும் தான் சொந்தம். முழு சொந்தம் என்று மறைமுகமாக ஒரு ரகசிய கள்ளத்தனத்தை மசோதாவில் நீங்கள் கொண்டு வருவதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.

ஏனென்றால், இந்தச் சட்டத்தின் 5ஆ-வது பிரிவு என்ன சொல்கின்றது என்றால், சமஸ்கிருதத்தின் மூலமாக அறிவியலைப் பரப்பப் போகின்றோம் என்று இதில் நீங்கள் சொல்கிறீர்கள்.

எனக்கு விந்தையாக இருக்கின்றது. ஒரு மொழி யைக் காப்பாற்றுங்கள். தவறில்லை. இந்த சமஸ்கிருதம் அழிவினுடைய விளம்பிலே நின்றுகொண்டிருக்கிறது.

1961இல் சென்செக்ஸ் கணக்கெடுத்த போது சமஸ்கிகிருதம் பேசுபவர்கள் மொத்தம் 2165 பேர். இப்போது 20,000.... (குறுக்கீடு) பிரிவு 5-இன்படி இந்தச் சட்டத்தின் நோக்கம் சமஸ்கிருதத்தின் மூலமாக அறிவியலைப் பரப்ப வேண்டும், மானுட அறிவியலைப் பெருக்க வேண்டும், சமூக அறிவியலைப் பெருக்க வேண்டும், ஒழுக்கத்தைப் பெருக்க வேண்டும் என் றெல்லாம் இந்த மசோதா வில் சொல்கின்றீர்கள்.

ஆனால், நான் கேட்கிறேன். இந்த சமஸ்கிருத மொழி உள்ளபடியே தேவ பாஷையாக இருக்கு மானால், இந்த மொழி இந்தியாவுக்கு சொந்தமாக இருக்கு மானால், அருமை நண்பர் கேட்ட கேள்வியை மீண்டும் கேட்கிறேன்.

சமஸ்கிருதத்தை எங்களால் ஏற்க முடியாது!

பனாரஸ் பல்கலைக் கழகத்திற்கு ஒரு இஸ்லாமியத் தோழர், சமஸ்கிருதத்தில் முழுமை பெற்று, தேர்ச்சி பெற்ற பிறகு, பேராசிரியராக வந்த பிறகு, அவரை பணி செய்ய விடாமல் தடுத்து மறுத்தீர்களே, அதற்கு என்ன காரணம்? அப்படி என்றால், நீங்கள் சமஸ்கிரு தம் என்பது இந்து மதத்திற்கு சொந்தம் என்கிறீர்கள், அப்படிச் சொல்வதாக இருந்தால் இந்த மொழியை ஒரு காலமும் எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை நான் திட்டவட்டமாக இந்த அவைக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

நாம் இப்போது எங்கே நின்று கொண்டு இருக்கி றோம் என்றால், இந்த மொழி இறந்து விட்டதா? இருக்கிறதா' என்று மொழியியல் ஆராய்ச்சியாளர்கள் கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு பட்டிமன்றமே நடந்து கொண்டு இருக்கிறது.

ஷெல்டன் பல்லாக், ஜான் ஸ்நெல்லிங் என்ற இரண்டு மொழியியல் ஆராய்ச்சியாளர்கள் சமஸ் கிருதம் ஒரு இறந்து விட்ட மொழி, மறைந்துபோன மொழி என்று சொல்கிறார்கள். ஆராய்ச்சியாளர் கென்னர், சமஸ்கிருதம் அழிந்து போகவில்லை ; அருகி வருகின்றது என்று சொல்கிறார்.

நிதி ஒதுக்குவதில் முரண்பாடு ஏன்?

நான் உண்மையிலேயே, மனம் திறந்து சொல் கிறேன், ஒரு அழிந்து கொண்டு இருக்கின்ற மொழிக்கு உதவிட வேண்டும்- தண்ணீர் ஊற்ற வேண்டும் என்கிற நியாயமான எண்ணம் உங்களுக்கு இருக்கு மேயானால் அதில் எனக்கு உடன்பாடுதான். ஆனால், நீங்கள் என்ன செய்து கொண்டு இருக்கின் றீர்கள், 150 கோடி ரூபாய் 2017--2018- இல் சமஸ் கிருதத்திற்கு ஒதுக்கி இருக்கிறீர்கள். ஆனால், தமிழ், தெலுங்கு, மலை யாளம், கன்னடம் என்று எல்லா வற்றுக்கும் சேர்த்து வெறும் 12 கோடி ரூபாய் ஒதுக்கி இருக் கிறீர்கள்.

தெரிந்தே தவறு செய்கிறது அரசு!

2014இல் 70 ஆயிரம் மாணவர்களை நீங்கள் திட்டமிட்டு தனியாக வேண்டுமென்றே சமஸ்கிருதம் படிக்க வைத்து இருக்கிறீர்கள். 41 பல்கலைக் கழகங்கள் இருக்கின்றன. 6 மொழிப் பல்கலைக் கழகங்கள் இருக்கின்றன. அந்த 6 மொழிப் பல்கலைக் கழகங்களில் மூன்று சமஸ்கிருதம், ஒன்று ஆங்கிலம், ஒன்று இந்தி, ஒன்று உருது இருக் கின்றது. ஒன்றுகூட தமிழுக்கு இல்லை . பிற செம் மொழிகளுக்கும் இல்லை.

இந்த அரசு தெரிந்தே ஒரு தவறு செய்கிறது. பிரதமர் உள்பட நான் குற்றம் சாட்டுகிறேன். பிரதமர் பேசுகிற போது என்ன சொல்கிறார்? மரபியல் அறிவியல், உடல் மாற்று அறுவை சிகிச்சை, காஸ்மெடிக் சர்ஜரி இவையெல்லாம் வேத காலத்தில் இருப்பதாக சொல்கிறார்கள்; சமஸ்கிருதத்தில் இருப்பதாக சொல் கின்றனர். யார் நம்புவார்கள், 2500 ஆண்டுகளுக்கு முன்னால்?

இந்திய அறிவியல் மாநாடு அரசு செலவில் நடக்கின்றது. அதிலே கட்டுரை வாசிக்கப்படுகின்றது. அதில் வேத காலத்தில் விமானங்கள் இருந்தது என்று கூறி சமஸ்கிருதத்தை துணைக்கு அழைக்கின்றீர்கள். இப்படிப்பட்ட மூடத்தனமான கருத்துக்களை தயவு செய்து நிறுத்துங்கள். தமிழ் உள்ளிட்ட அனைத்து செம்மொழிகளுக்கும் முக்கியத்துவம் தாருங்கள்.

இவ்வாறு  தி.மு.க. கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆ. இராசா பேசினார்.

- விடுதலை நாளேடு, 14.12.19

பழந் தமிழருக்குக் கோவில்கள் உண்டா? ஆரியர் கட்டிய கற்பனைக் கதைகள்-தமிழ்மக்கள் சிந்திக்கவேண்டும்!

மயிலை ஈ.முனிசாமி

(வாசக நேயர்களே,

ஊன்றிப் படித்துப் பயன்பெற வேண்டிய முக்கியப் பகுதி இது.

இதுபற்றி தங்களது கருத்தினை சுருக்கமாக எழுதி அனுப்புமாறு வேண்டுகிறோம்.

திராவிடர் இயக்கம் - 80 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாடு அரசியல் களத்தின் முக்கிய நிகழ்வுகள் - வரலாறு பற்றிய காலக்கண்ணாடியாக - திராவிடத்தின் தேவைக்கான நுண்ணாடியாக இது அமையும் ஒன்று. இதற்கான தேவை - பயன் - நுகர்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் பெரிதும் வரவேற்கப்படுகிறது. - ஆசிரியர்)

பழந்தமிழர் இயற்கையையே தெய்வமாக வணங்கி வந்தனர்.

பின்னர் நம் முன்னோர் ஏற்றிப்போற்றிய தமிழ்க் கடவுள் முருகனே எனக் கூறுவாரு முளர். ஏனெனில் முருகன் என்ற தூய தமிழ்ச்சொல் அழகு எனப்பொருள் படுதலான். முரு கனைப் பற்றிய பொய்ப் புராணங்களும், முன் வழக்கி லில்லாத வழிபாட்டு முறைகளும் ஆரியர் வந்த பிறகே புனைந்துரைக்கத் தமிழர் அதை ஆய்ந்து பாராமல் ஏற்றனர் ஏமாந்து . மிகப் பழங்காலத்தில் தமிழ் நாட்டில் ஆலயங்கள் இல்லை. அசோக அரசர் தூபிகள் அமைத்துப் புத்த கோவில்களும், கல்வெட்டு உருவங்களும் நிறுவியதைக் கண்டு நம்மவரும் ஆரியர் தூண்டுதலால், அவரைப் பின் பற்றிக் கோவில்கள் கட்டினர் என்பது நாட்டு வரலாறு அறிந்த அறிஞர் கூறும் முடிபு. ஆரியர் மொழி கேட்டு, தமிழ் அரசர்கள் பல கோவில்கள் உண்டாக்கினர்.

அரசர் எவ்வழி குடிகள் அவ்வழி' என்ற முது மொழிக்கிணங்க பொதுமக்களும் ஆங்காங்கு ஆலயங்கள் கண்டனர். அதனால் மன்னரும் பிறரும் ஆரியர் தம் சூழ்ச்சி வலையில் சிக்கி மீள வழியறியாது, மனம் மாழ்கின்றனர். அதன் பயனாய் தமிழர் அறிவு மங்கியது, மூட நம்பிக்கை என்னும் படுகுழியில் வீழ்ந்தனர். பணம் பகற்கொள்ளை அடிக்கப் படுகிறது. செல்வர் வெளியிடங்களுக்குச் செல்லு வதன் நோக்கம், அவ்வவ்வூர்களின் இயற்கையழகினையும், நிலங் களின் தன்மையையும், மக்களுடன் அளவளாவிப் பழகு தலையும், கோவில்களிலுள்ள சித்திரக்கை வேலைப் பாடுகளையும், கண்டு களித்து அறிவைப் பெருக்கிக் கொள்ளுவதற்காகவே இருத்தல் வேண்டும்.

ஆரியர் கற்பனை

ஆனால் இக்காரணங்களை விளக்காது, தமிழரை ஏய்க்க வைகை, காவிரி முதலிய ஆறுகளில் நீராடல், மதுரை, காஞ்சி முதலிய ஊர்களில் உள்ள கடவுளை வணங்குதல், வீடு பெறற்கு வழி என ஆரியர் எழுதி வைத்தனர். தமிழர் நம்பினர். ஏழைகளும் மூடநம்பிக்கையால் தம் பெண்டு, பிள்ளைகளோடு பிரயாணம் செய்து வெறுங்கையோடு வீடு திரும்புகின்றனர். யாது பலன் பெற்றனரோ? அறிகிலோம்.

கோவில் நுழைவு, கடவுளுக்குக் கற்பூரம் காட்டல், அர்ச்சனை புரிதல் முதலிய முக்கிய மற்ற செயல்கட்கெல்லாம் பார்ப்பனர் காசை அட்டையென உறிஞ்சுகின்றனர். கடவு ளுக்கும் பூணூல் அணிவித்துப் புராணக் கதைகளிலும் கடவுள் பார்ப்பன வடிவுகொண்டு அடியார்க்கு உதவி செய்ததாக வரைந்து வைத்து மக்கள் தம்மை உயர் குலத் தினர் என எண்ணும் வகையில் ஆக்கம் தேடிக்கொண்டனர். நம் நாட்டில் தமிழர், விழா, அபிசேகம், திருப்பணிகள் முதலியவற்றின் பேரால் செலவழிக்கும் பொருளுக்குக் கணக்கே இல்லை. திருமயிலை, பெரிய குளத்தின் கருங் கற்படிகள் புதிதாக அமைத்த காலத்து இவ்வூர் செல்வம் மிகப்படைத்த ஆரியர் உறைவிடமாயிருந்தும், ஒருவராவது இத்திருப்பணிக்கு உதவ முன் வந்தாரில்லை. இதற்குக் குளக்கரையில் அமைக்கப்பட்டிருக்கும் கல் மேல் எழுத்தே எடுத்துக் காட்டாக இலங்குகின்றது. பொது மக்களுக்குப் பயன்படும் இச்செயலுக்கும் உதவாத ஆரியர் தமிழரை ஏமாற்றிப் புண்ணியமுண்டு, புருடார்த்தமுண்டு எனக்கூறி அறச்சாலைகள் ஆக்கச் செய்கின்றனர். அப்பாவிகள் அவர்களே தங்கவும் உண்ணவும் எழுதி வைத்தாலும் அங்கு அவர்கள் தங்குவதற்கு இடமில்லை. தமிழர் அறம் பல புரிய ஆரியர் நலம் பல துய்க்கின்றனர். எல்லாவிடங் களிலும் அவர்கட்கே உரிமையும், முதன் மரியாதையும் எதற்கு? நம் மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமிழர்க்கு ஆவன செய்யத் துணிந்து முற்படவேண்டும்.

எது கடவுள் தன்மை?

கடவுள் வேண்டுதல், வேண்டாமை இல்லாதவர். மூவாசை துறந்தவர், அவர் அருளுக்குரியவர், என நூல்கள் அறைகின்றன. ஆனால் அவற்றைக் கடந்து நிற்கும் கடவு ளுக்கோ சிற்றூர்கள் பலவுண்டு. ஆண்டு தோறும் திரும ணங்கள் நல்லோரையில் நடைபெறுகின்றன. விலையுயர்ந்த அணிகள் சாத்தப்படுகின்றன. என்னே! அறிவீனம். தமிழகத் தில் உள்ள சித்திர சிற்ப வேலைப்பாடமைந்த கோவில்களைப் போன்று உலகில் வேறெங்கும் கிடையாது. இத்திறன் திரா விடர் சீர்திருத்தத்தையும், நுண்ணறிவையும் தெள்ளென விளக்கும். நம் நாட்டில் உள்ள கோவில்கள் கணக்கிலடங்கா. அவற்றைப் பராமரிக்க முடியாது பாழாயின. பல செல்வர் மேலும் பெரும் பொருட்செலவில் கோவில்கள் ஆக்கு கின்றனர். உள்ள கோவில்கள் போதாதா ஊரைச் சுரண்ட.  மக்கள் மனமே ஆண்டவன் கோவில். அன்பே கடவுள். கடவுள் உருவமற்றவர் எனத் தமிழ் நூல்கள் முறையிடு கின்றன. நட்ட கல்லைத் தெய்வமென்று நாலு புட்பம் சூட் டியே, சுற்றி வந்து மொணமொணென்று சொல்லு மந்திர மேதடா! நட்ட கல்லும் பேசுமோ? நாதனுள்ளிருக்கையில்" எனக் கூறிச் சென்றனர், தமிழ்ச் சித்தர். மக்களுக்கு நல் அறிவூட்டும் பல சித்தர்கள் பாடிய செய்யுட்களைத் தமிழர் படிக்க வேண்டும். அறிவைத் துலக்கி ஆண்மையுடன் நடக்க வேண்டும்.

இந்த மனப்பான்மை ஒழிய வேண்டும்

கடவுள் நம்மிடமிருந்து எதையும் வேண்டுகின்றாரில்லை. நாமே நம் மூடப்பழக்கத்தால் பணத்தைப் பாழாக்குகிறோம்; அறிவை அடகு வைக்கிறோம். தமிழர் கடவுள் இல்லை எனக் கூற வரவில்லை . ஆனால் கடவுளின் பேரால் ஒரு கூட்டத்தார் பல வழிகளிலும் வஞ்சித்துப் பொருளைப் பறிப்பதையும், பாழாக்குவதையுமே வலுவாகக் கண்டிக் கின்றனர் கடவுள் நம்மிடம் எதிர்பார்ப்பதென்ன? மக்களுள் வேற்றுமை பாராட்டாமை, ஏழைகளைக் காத்தல், உயிர் இரக்கம், வஞ்னையழுக்காறு இன்மை, பிறவும் ஆகும். இவற்றை மக்கள் எண்ணாது, தாம் நாடோறும் புரியும் தீமைகட்குக் கழுவாயாக கடவுளுக்குச் சிறப்புச் செய்து விடுகின்றனர் போலும். இத்தகைய சிறப்புக்களை அவர் எதிர்பார்ப்பதுமில்லை; ஏற்பதுமில்லை. அடியோடு ஒழிய வேண்டும், இம்மனப்பான்மை. நம்நாட்டில் குடிக்கக்கூழின்றி உடுக்க உடையின்றி, படுக்கப் பாயின்றி, இருக்க இல்லிட மின்றி மக்கள் ஏங்கிக்கிடக்க, இவற்றை நீக்க நினையாது, கடவுளுக்குப் பாலும், தேனும், பழமும் சொரிந்து நீராட்டி மகிழ்கின்றனர். திருவிழாக்களில் வாணவேடிக்கைக்குப் பெரும் பணம் செலவழித்து, காசைக்கரியாக்கிக் களிக்கின் றனர். கோவில்களில் கடவுளுக்குத் தளிகையிடும் தமிழர், ஆரியர் வயிறுபுடைக்க உண்பதையும், தமிழர் பார்த்து நிற் பதையும், தவிர வேறு என்ன கண்டனர்? மஞ்சள் ஆடை யுடுத்தித் தெருத்தெருவாகச் சுற்றிக் காசையும் ஆபரணங் களையும் காணிக்கையாக அள்ளி உண்டியலில் இடுகின்ற னர். ஓர் ஆரியராவது இச்சீர்த்திருத்தமற்ற செயலை மேற் கொள்வதைக் கண்டிலோம். தம் வரவுக்கு வழிகோலிக் கொண்டு சமயப்பற்றால் செய்யும் பயனற்ற செலவுகளைச் செய்யாமல் சிக்கன முறையைக் கையாளுவதாற்றான் ஆரியர் செல்வந்தராய் நாளுக்குநாள் உயர்வடைகின்றனர். அஃதில்லாமைபால் தமிழர் சீர்கேடுற்று வறிஞராய் வாடு கின்றனர்.

தரகர் வேண்டாம்

கடவுளுக்கும் நமக்கும் இடையே தரகர் வேண்டுவ தில்லை. கோவில்களில் நம்பிக்கையுள்ளவர் தாமே சென்று தேங்காய் உடைத்துத் தமிழ்ப்பாக்கள் இசைத்துக் கடவுளைத் தொழல் சாலச்சிறந்தமுறை. செத்த மந்திரத்தைச் செப்புவதற் குப் பணத்தைத் தந்து மன நிறைவு கொள்ளுதல் தகாது. இச்சூழ்ச்சியினின்று தப்பி எச்சரிக்கையாய் இருத்தல் வேண்டும். கோவில்களில் கோடிக்கணக்கான பொற்காசுகள் மதிப்புள்ள நகைகள் ஒரு பயனுமின்றி ஆலய இரும்புப் பெட்டிகளில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. ஆலய அதிகாரிகள் பல துறைகளில் கிடைக்கும் வருவாயை ஏழை மக்கள் விடுதிச்சாலைகட்கும் தாழ்த்தப்பட்டார் நலனுக்கும், மருத்துவச் சாலைகட்கும் தமிழ்க் கல்விச் சாலைகட்குமாயினும் பயன்படும்படித் திட்டம் வகுக்கின்றனரா? அதுவு மில்லை. தமிழர் அறப்பணத்தில் ஆரியருக்கு மறை பயிலும் பள்ளிகள் உண்டாக்கி, அன்னமிட்டு மேலும் ஆக்கம் அளிக்கின்றனர்; பாம்புக்குப் பால்வார்த்து வளர்ப்பது போல.

பெரியாரைப் பின்பற்றுங்கள்

ஆதலால் தமிழர் தம் அறிவைப் பெருக்கிக் கடவுள் வழிபாடு, அபிசேகம், விழா, வாண வேடிக்கை, தளிகையிடல், வேண்டுதல், செலுத்தல் முதலியவற்றின் செலவை அறவே நீக்கி உயிர்கள் உய்யும் வழியில் பொருனைப் பயன்படுத்தி உதவ வேண்டும். நம்பிக்கை கொண்டவர் மிகமிகக் குறைந்த அளவில் செலவு செய்தேனும் நிலை குன்றாது நிற்றல் வேண்டும்.

தன்னறிவியக்கத் தந்தை மூடப்பழக்க வழக்கத்தையும், மனவிருளையும் ஒழித்து நல்வழியைப் பின்பற்ற வருமின் எனத் தமிழரை அழைக்கின்றார். மக்கட்கு நல்லறிவு தலைப் படின் தம் மதிப்பும், சுரண்டலும் நிலை குன்றிப்போமோ! என ஏக்கமுறும் ஆரியரும், பட்டம், பதவி, பெருமையை விரும்பி, அவர் வால் பற்றித் திரியும் சில தமிழரும், மாசிலாமணிக்கு, நாத்திகப் பட்டம் சூட்டி மக்கள் வெறுக்கும் வகையில் பொய்க் கற்பனைகள் புகல்கின்றனர். அப்புல்லர், வெற்றுரைகளைப் பொருட்படுத்தாது, தமிழர் நலனுக்கா கவே நானிலத்தில் தோன்றி, அல்லும் பகலும் உழைத்துவரும் பெரியார் அறிவு மொழிகளைச் செவியிற்புகுத்தி, அகத்தில் இருத்தி, நன்னெறியில் நின்று, நாட்டைச் செழிக்கச் செய்து, பண்டைப் பெருமையும், செல்வமும் பெற்று  எழில் மிக்க வாழ்வை அடை வாராக!

- விடுதலை: 9.4.1940

- விடுதலை நாளேடு 27. 1.20

தமிழில் குடமுழுக்கும் தளபதி ஸ்டாலின் கருத்தும்

தஞ்சாவூர் பெருஉடையார் கோயில் குடமுழுக்கு தமிழில் நடத்தப்பட வேண்டும் என்று திமுக தலைவர் தளபதி மானமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்தது - பக்திக்கு அப்பாற்பட்ட முறையில் வரவேற்கத்தக்கதே.

தமிழ்நாட்டில் உள்ள ஒரு கோயில், தமிழ் மன்னனால் - தமிழர்களின் உழைப்பால் உருவாக்கப்பட்ட கோயில், தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள்தான் பெரும்பாலும் வழிபாட்டுக்குச் செல்லக் கூடிய ஒரு கோயிலில் தமிழில் வழிபாடு நடத்தப்பட வேண்டும் என்பதும், குடமுழுக்கும் தமிழில்தான் நடத்தப்பட வேண்டும் என்பதும் இயல்பான ஒன்றுதானே.

இதனையும் கூட சிலர் எதிர்க்கின்றனர் என்றால் அத்தகைய வர்களைத் தமிழர்கள் அடையாளம் காணத் தவறக் கூடாது.

சில தொலைக்காட்சிகளில் இதுகுறித்து விவாதம் நடத்தப் பட்டதைக் கண்ணுற்றபோது தமிழில் கூடாது, சமஸ்கிருதத்தில் தான் வழிபாடு நடத்த வேண்டும் என்று சொல்லுபவர்கள் எல்லாம் பார்ப்பனர்களாகவும், தமிழில்தான் நடத்தப்பட வேண்டும் என்று சொல்லுபவர்கள் எல்லாம் தமிழர்களாகவும் இருப்பதைப் பார்க்கும் பொழுது - கேட்கும் பொழுது, பார்ப்பனர்கள் தமிழர்களல்லர் என்று திராவிடர் கழகம் சொல்லி வந்ததும், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா போன்றோர் சொல்லிவந்ததும் நூற்றுக்கு நூறு உண்மை என்பது பட்டவர்த்தனமாக எளிதாகவே விளங்கி விட்டது.

அறிஞர் அண்ணா சொன்னதை இந்த இடத்தில் எடுத்துக்காட்டுவது மிகவும் பொருத்தமாகவே இருக்கும்.

"தமிழ்நாட்டில் பிறந்தும், தமிழ்மொழி பயின்றும், தமிழரெனச் சொல்லிக்கொண்ட போதிலும், தமிழ்மொழி மூலம் பிழைத்து வந்தாலும், தமிழிலே பண்டிதரெனப் பட்டம் பெற்றாலும், சங்க நூல் கற்றாலும் பார்ப்பனர்கள் தமிழிடத்திலே அன்பு கொள்வதில்லை. அதனைத் தம் தாய்மொழியெனக் கருதுவதில்லை. அவர்களின் எண்ணமெல்லாம் வடமொழியாகிய சமஸ்கிருதத்தின்மீதுதான்!" ("திராவிட நாடு" 2.11.1947 பக்கம் 18) என்கிறார் அண்ணா!

இது - மிக அருமையானதோர் படப்பிடிப்பு! 73 ஆண்டுகளுக்கு முன் அறிஞர் அண்ணா கூறியது இன்றைக்கும் பொருந்துகிறதா இல்லையா?

கலைஞர் ஆட்சிக் காலத்தில் தமிழ்க் குடிமகன் இந்து அறநிலையத் துறை அமைச்சராக இருந்தார்.

'இனிக் கோயில்களில் தமிழில்தான் அர்ச்சனை; விரும்பிக் கேட்டால் சமஸ்கிருதத்திலும் செய்யப்படும்' என்று அறிவித்தார்.

அவ்வளவுதான்! ஹிந்துக் கோயில் பாதுகாப்புக் கமிட்டியின் தலைவர் வி.எஸ். சிறீகுமார் என்ற பார்ப்பனர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தொடர்ந்தார்.

"ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கோயில்கள் உள்ளன; கோயில்கள் பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்படும் பழக்க வழக்கங்களை மாற்ற அறநிலையத்துறையின் செயலாளருக்கோ, ஆணையருக்கோ அதிகாரம் கிடையாது.

அர்ச்சகர்களும், குருக்களும் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் கட்டாயப்படுத்துகின்றனர். கும்பாபிஷேகத்தின் போது வேத மந்திரங்களுக்குப் பதிலாக தமிழில் பாசுரங்களைச் சொல்லுமாறு கூறுகின்றனர். இது சட்ட விரோதமானது.

சமஸ்கிருதம் மூலமாகக் கடவுளிடம் தொடர்பு கொள்ள முடியும். இந்நிலையில் தமிழில் அர்ச்சனை செய்யுமாறு கூறுவது ஹிந்து மக்களின் நம்பிக்கையைத் தகர்க்கும்.

நான்கு வேளை பூஜை நடந்த கோயில்களில், இனி ஆறு வேளை பூஜை நடத்துமாறு ஹிந்து அற நிலையத் துறை ஆணையர் கூறியுள்ளார். வருமானத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன் இவ்வாறு உத்தர விடப்பட்டுள்ளது. கோயில்களில் நடக்கும் பூஜையில் தலையிடக் கூடாது என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்" என்று வி.எஸ். சிறீகுமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தவழக்கில்குறிப்பிட்டுள்ளார்.

1961ஆம் ஆண்டு முதலே தமிழகக் கோயில்களில் தமிழிலும் வழிபாடு செய்யலாம் என்பது சட்ட ரீதியான நிலைப்பாடு - அந்த நிலை தொடரலாம் என்பதே உச்சநீதிமன்ற தீர்ப்பாகும்.

"சைவ, வைஷ்ணவ ஆகமங்களுக்குக் கட்டுப்படாத கோயில்களில் வேண்டுமானால் அவர்கள் விரும்புகிற மொழிகளில் அர்ச்சனை செய்யட்டும்" என்று திமிர்வாதமாக, பார்ப்பன வெறியோடு அதே சிறீதர் பார்ப்பனர் 'இந்து' ஏட்டில் கடிதமாக எழுதியிருந்தார் (14.10.1980).

ஏதோ சிறீதர் என்ற ஒரு பார்ப்பனரின் கருத்து மட்டும்தான் இது என்று கருதிட வேண்டாம். ஜெகத் குரு  என்று பார்ப்பனர்களால் ஏற்றிப் போற்றப்படும் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியின் கருத்தும் இதேதான்.

"பக்தர்கள் ஆத்மார்த்தமாக எந்த மொழியிலும் கும்பிடட்டுமே! ஆனா எப்படி ஒரு தொழிற்சாலைன்னா அதுக்கு ஒரு விதி இருக்கோ, ஒரு பள்ளிக் கூடம்னா அதுக்கு ஒரு விதி இருக்கோ, அதுபோல ஒரு கோயிலுக்குன்னு ஒரு விதியிருக்கு; ஒரு முறை இருக்கு. பக்தர்கள் பக்தர்களாயிருக்கட்டும். எத்தனையோ கோயில்கள்ல நைவேத்தியம் கிடையாது - சுவாமிக்குச் சார்த்த துணி கிடையாது, வருமானம் கிடையாது.  அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாம, அதைப்பற்றி எல்லாம் அக்கறை இல்லாதவர்கள் அர்ச்சனை மட்டுமே தமிழ்ல நடக்கனும்னு பேசறது நியாயம் தானா?" என்று கேட்கிறார் ஜெகத்குரு என்ற நிலையில் உள்ளவர் ('குமுதம்' பேட்டி 10.12.1998).

திமுக தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் "தஞ்சைக் கோயில் குட முழுக்கு தமிழில் நடைபெற வேண்டும்" என்பதில் உள்ள தமிழ் உணர்வும், இனவுணர்வும் எத்தகைய முக்கியமானது என்பதை சங்கராச்சாரியார் வரை கூறும் கருத்திலிருந்தே புரிந்து கொள்ளலாமே!

- விடுதலை நாளேடு 24 1 20

தமிழில் குடமுழுக்கும் தளபதி ஸ்டாலின் கருத்தும் (2)

தமிழ் மன்னர்களால், தமிழர்களின் உழைப்பால் உருவாக் கப்பட்ட கோயில்களில் தமிழ்நாட்டு மக்களின் தாய்மொழியான தமிழில் வழிபாடு நடத்தக் கூடாது, குட முழுக்குகள் தமிழில் நடத்தப்படக் கூடாது என்ற நிலை தொடர்வது - தமிழ் நாட்டு மக்களின் தன்மானத்துக்கும் மொழி மானத்துக்கும் எதிரானது,  அறைகூவலானது என்பதில் எவ்வித அய்யமும் இல்லை.

கோவில்களில் பெண்களைப் பொட்டுக் கட்டி விட்டது, பார்ப்பன அர்ச்சகர்கள், வடமொழி அர்ச்சனை இவையெல்லாம் சோழவேந்தன் ராஜராஜன் காலத்தில் நடைபெற்ற மாபெரும் வீழ்ச்சியாகும்.

19.01.1958இல் திருச்சிராப்பள்ளியில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட ஜாதி ஒழிப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் கவனிக்கத்தக்கதாகும்.

"தமிழ்நாட்டு ஆலயங்களில் பார்ப்பனர்கள் தங்களுக்கு உயர்வு தேடிக் கொள்ளவும், தாங்களே அதில் ஏகபோகவுரிமை கொண்டாடவும் சாதகமாக வடமெழியையே ஆலயங்களில் உபயோகித்து வருவதும், பார்ப்பனர்களையே அர்ச்சகராகப் போட்டு வரும் சூழ்ச்சியைக் கண்டிப்பதோடு, இனி தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழிலேயே வழிபாடு - அர்ச்சனை நடக்க வேண்டுமென உத்தரவிட வேண்டுமெனவும், பார்ப்பனரல்லாத மக்களையும், அர்ச்சகர்களாக நியமித்து  சம உரிமை வழங்க வேண்டுமெனவும் அரசாங்கத்தாரை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது" ('விடுதலை' 21.1.1958).

6.1.1962இல் சென்னையில் தந்தை பெரியார் கூட்டிய திராவிடர் கழக மாநாட்டிலும் இது குறித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

"தமிழர் சமுதாயத்தின் சுயமரியாதையை முன்னிட்டு இன்று கோவிலிலிருக்கும் முறைகள் தமிழர்களது இன சுயமரியாதைக்கும், மொழி சுயமரியாதைக்கும், உணர்வுக்கும் மாறான வகையில் கேடு விளைவிப்பவைகளாய் இருப்பதால் இம்முறையை மாற்றி, தமிழர்கள் கர்ப்பக்கிரகம் என்பதற்குள்ளும் செல்லும் உரிமை பெறவும்; தமிழர்கள் பூசாரிகளாக (அர்ச்சகர்களாக) இருக்க வேண்டிய உரிமையையும்; தமிழில் வழிபாடு செய்யும் உரிமையையும் பெற வேண்டியும், அதற்காக அவ்வுரிமைகளை அடையத் தேவையான கிளர்ச்சிகளைச்செய்ய வேண்டுமெனவும், இம்மாநாடு கருதுகிறது" என்று 1962இல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தந்தை பெரியார் நினைவு நாளையொட்டி 25.12.1980 அன்று திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழ் வழிபாட்டு உரிமை மாநாடு சென்னை பெரியார் திடலில் நடத்தப்பட்டது.

மாநாட்டுத் தலைவர் தவத்திரு குன்றக்குடி அடிகள், திறப்பாளர் ஆட்சிமொழிக் காவலர் கி. இராமலிங்கனார், பாவாணர், திருக்குறளார் வீ. முனுசாமி, கி.ஆ.பெ. விசுவநாதம், பாவலரேறு பெருஞ்சித்திரனார், புலவர் புலமைப்பித்தன், சத்தியவாணிமுத்து எம்.பி.,  கல்வி நெறிக் காவலர் நெ.து. சுந்தரவடிவேலு, புலவர் ந.இராமநாதன், புலவர்

மா. நன்னன், முனைவர் எம். சுந்தரம், முனைவர் சி. பாலசுப்பிர மணியம், நாரண - துரைக்கண்ணன் ஆகியோர் அம்மாநாட்டில் தமிழ் வழிபாட்டு உரிமையின் அவசியத்தை விளக்கினார்கள்.

அம்மாநாட்டில் ஒரு வேண்டுகோள் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

"தமிழில் அர்ச்சனை செய்யாத, விரும்பாத திருக்கோயில்களில் தமிழர்கள் சமஸ்கிருத அர்ச்சனையைச் செய்யாது, தாமே வழிபாடு செய்துகொண்டு வந்துவிட வேண்டும்" என்பதுதான் அந்த வேண்டுகோள் தீர்மானமாகும்.

இப்படி திராவிடர் இயக்கம் தமிழ் வழிபாட்டு உரிமைக்குக் குரல் கொடுத்து வந்துள்ளது.

திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் இப்பொழுது தஞ்சைப் பெருவுடையார்  கோவில் குடமுழுக்கு தமிழில் நடைபெற வேண்டும் என்று வைத்துள்ள கோரிக்கை திராவிடர் இயக்கம் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்த கோரிக்கையின் தொடர்ச்சியே!

ஆனால் தொடக்க முதல் காஞ்சி சங்கராச்சாரியாரிலிருந்து 'துக்ளக்' சோ, ராமசாமி வரை தமிழில் வழிபாடு நடத்துவதற்கு எதிர் நிலையிலேயே இருந்து வருகிறார்கள்.

கோயில்களில் தமிழ் வழிபாடு என்பது மொழி ஆர்வமில்லை; மத துவேஷம் என்று தலையங்கம் தீட்டினார் சோ ('துக்ளக்' 18.11.1998). தமிழில் வழிபாடு செய்தால் அர்த்தம் இருக்கும் - அருள் இருக்காது என்று அந்தத்தலையங்கத்தில் கூறியிருக்கிறார்.

கரூர் மாவட்டம் திருமலை முத்தீஸ்வரர் கோயில் குடமுழுக்கில் 9.9.2002 அன்று தமிழில் திருமுறைகள் ஓதி குடமுழுக்குச் செய்யப் பட்டது.

அவ்வளவுதான் கோயில் தீட்டுப்பட்டு விட்டது என்று கோயில் நடையை மூன்று நாள் சார்த்தி தீட்டுக் கழிக்கப்படவில்லையா?

காஞ்சி சங்கராச்சாரியார் தமிழில் குட முழுக்குச் செய்தது தவறு என்று வக்காலத்து வாங்கவில்லையா?

நாத்திகர்கள் இதில் தலையிடலாமா என்று கேட்டார். அப்படிப் பார்க்கப் போனால் இந்து மதத்தில் நாத்திகத்துக்கு இடம் உண்டு என்று சொல்லப்படவில்லையா?

பிரச்சினையைத் திசை திருப்புபவர்தான் ஜெகத் குருவா? என்னதான் திசை திருப்பினாலும், சமாதானம் சொல்லப்பட்டாலும் வழிபாட்டு உரிமைப் பிரச்சினை என்றாலும், குடமுழுக்குப் பிரச்சினை என்றாலும், அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்றாலும் இவற்றின் அடிப்படை பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார், ஆரியர் - திராவிடர் போராட்டமே என்பது இமயமலை போன்ற உண்மையாகும்.

தமிழ்த் தேசியவாதிகள் முதலில் இதை உணரட்டும்!

- விடுதலை நாளேடு 27. 1.20