பக்கங்கள்

ஞாயிறு, 29 மே, 2016

பாராட்டத் தக்க ஆணை பள்ளிகளில் திருக்குறள் கட்டாய தனிப்பாடம் மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு



மதுரை, ஏப்27_ சென் னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளையில் நீதிபதி ஆர்.மகாதேவன் அளித் துள்ள தீர்ப்பில் பள்ளிகளில் திருக்குறள் கட்டாய தனிப்பாடமாக கற்பிக்க வேண்டும் என்றும், திருக்குறளை அனைத்து பள்ளி வாகனங்களிலும் எழுதிட வேண்டும் என் றும் தமிழக அரசுக்கு உத் தரவிட்டுள்ளார்.

திருக்குறள் நூலிலி ருந்து சில பகுதிகளை மட்டும் பாடங்களின் ஒரு பகுதியாக கொண்டிராமல், ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை திருக் குறளை தனிப்பாடமாகவே வைத்திடவேண்டும் என்று கோரி தூத்துக்குடி மாவட் டத்தில் வணிகவரித் துறை அலுவலராகப் பணியாற்றி, பணி ஓய்வு பெற்றவரும்,  கோவில்பட்டியை சேர்ந்த வருமான ச.இராசரத்தினம் வழக்கு தொடுத்துள்ளார்.

அம்மனுமீதான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத் தின் மதுரைக் கிளையில் எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரணைக்கு வந்தது. நீதிபதி ஆர்.மகாதேவன் விசாரணை மேற்கொண் டார்.  பள்ளிகளில் திருக்குற ளைப் பரப்பவேண்டிய பணிகளை செயல்படுத்தா மல் இருந்துவருகின்ற பள்ளிக்கல்வி இயக்குநரகம், தமிழ் வளர்ச்சித்துறை  ஆகிய அரசுத் துறைகளுக்கு மனுவில் குறிப்பிட்டுள்ள படி உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கோரியுள் ளார்.

மனுவில், இளைய சமு தாயம் மிகவும் சீரழிந்து வருவதாகவும், அவர்களை நல்வழிப்படுத்த, திருக்குற ளை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். மேலும், தற்போது மனப்பாட பகுதி யாக உள்ள திருக்குறளை முழு பாடத்திட்டமாக மாற்றவும் வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

வழக்கு விசாரணையில் நீதிபதி கூறும்போது, Òகுழந் தைகள் திருக்குறளை விரி வாகப் படிக்க வேண்டியது மிகவும் அத்தியாவசியமா னது. பழைமைவாய்ந்த இலக்கியத்தில் அரசாட்சி முறை, அறநெறிகள், மனித வாழ்வுக்கு தேவையான அனைத்து  நெறிமுறை களையும் அளிக்கின்ற நூல் திருக்குறள்’’ என்று  குறிப் பிட்டுள்ளார்.
தமிழக அரசு பள்ளிப் பேருந்துகளில் திருக்குற ளை எழுதவேண்டும். வரும் கல்வி ஆண்டு முதல், 6ஆ-ம் வகுப்பில் இருந்து 12ஆ-ம் வகுப்பு வரை திருக்குறளை தனிப்பாட மாக கற்பிக்க வேண்டும் என்று உயர்நீதி மன்ற மதுரைக் கிளை உத்தர விட்டுள்ளது.

இந்த மனுவை விசா ரித்த நீதிபதி மகாதேவன் இளைய சமுதாயத்தின் சீரழிவை தடுக்க, திருக்குற ளில் இன்பத்துப் பாலைத் தவிர, மற்ற எல்லாப் பகுதி யையும் கட்டாய தனிப் பாடமாக கற்பிக்க உத்தர விட்டார்.

வரும் கல்வி ஆண்டு முதல், 6-ஆம் வகுப்பில் இருந்து 12ஆ-ம் வகுப்பு வரை திருக்குறளை தனிப் பாடமாக அமல்படுத்த தமிழக அரசிற்கும், பள்ளிக் கல்வித்துறைக்கும் உத்தர விட்டார். மேலும், திருக் குறளை மாணவர்கள், புரித லோடு கற்றுக் கொள்வது அவசியம் என்று தெரி வித்தார்.

மனுதாரர் தம் மனுவில் குறிப்பிடும்போது, சமூகத் தில் இளைய தலைமுறை யினர் சீரழிந்து வருவது கண்கூடு. அண்மைக்காலங் களில் இளைஞர்கள் ஒழுங்கு, கட்டுப்பாடு, அடுத்தவர்களை மதித்து நடப்பது என்று அனைத்து நெறிமுறைகளும் இல் லாமல் இருக்கின்றனர். குடும்ப பிரச்சினைகள் அதி கரித்தவண்ணம் உள்ளன. முதியோர் இல்லங்கள் காளான்கள்போல் பெருகு கின்றன.

முதியோர்களைத் தாக்கிவிட்டு, கொள்ளை யடிப்பது, அச்சுறுத்துவது பெருகிவிட்டது.  எவரே னும் தாக்கிவிடுவார்களோ என்கிற அச்சம் உள்ளது. முதியவர்கள் பயணம் செய்வது பாதுகாப்பற்றதாக வே மாறிவிட்டது.  மூத்த குடிமகன் என்கிற முறை யில் நானே என்னுடைய வீட்டின் கதவைத் திறப்ப தில்கூட அச்சத்துடன் இருக்கின்றேன். அறிமுக மில்லாதவர்களுக்கும் உணவளிப்பது, தங்குவதற்கு இடம் கொடுப்பது என்கிற காலம் மலையேறிவிட்டது.

2011 ஆம் ஆண்டில் குற்றசெயல்களில் ஈடுபட்ட, 2083 சிறுவர் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள் ளார்கள். அவர்களில் தொடக்கக் கல்வி பயில் பவர்கள் 1,170 பேர். 617 பேர் நடுநிலை, உயர் நிலை, மேல்நிலைக்கல்வி பயின்று வருபவர்கள்.  56 பேர் மேல் நிலைக் கல்வியை முடித்து விட்டவர்கள்., 240பேர் கல்வி பெறாதவர்கள்.

சமூகத்தில் இது போன்றவர்களிடையே சீர்திருத்தம் செய்ய வேண் டிய அவசியம் உள்ளது. அவர்களிடையே மாற்றத் தை ஏற்படுத்தி, அவர்களை சீர்திருத்தும் ஒரே வழி, திருக்குறள் நெறிகளை பின் பற்றச் செய்வதேயாகும். அதற்கான தத்துவங்களை உள்ளடக்கியதுதான் திருக்குறள். கலாச்சாரம், மதம், இனம் என்கிற எவ்வித வேறுபாடுகளும் இல்லாமல் அனைவரையும் இயற்கையின் அடிப்படை யில் நெறிப்படுத்தக்கூடியது திருக்குறள்’’ என்று ச.இராச ரத்தினம் தம் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
-விடுதலை,27.4.16

திங்கள், 23 மே, 2016

தமிழும் வடமொழியும்



இனி, ஆரியருந் தமிழரும் ஒரே நாட்டின் கண்ணேயிருந்து ஒருங்கு வாழவேண்டியது அவசியமாயிற்று.  ஆரியர் தமிழும், தமிழர் சமஸ்கிருதமும் பயிலப் புகுந்தனர். 

சமஸ்கிருதம் வடக்கினின்றும் போந்த காரணத்தால் அதனை வடமொழி யென்று உரைப் பாராயினர்.  அது வடமொழி யென்னப் பட்டவுடனே தமிழ்மொழி தென் மொழி யெனப் படுவதாயிற்று.  தமிழரும் ஆரியரும் வேறுபாடின்றி ஒத்து நடந்தமைபற்றி அவ்விருவர் பாஷைகளும் சில நாள் தமக்குள்ளே கலப்பனவாயின. 

வடமொழி தமிழொடு மருவு முன்னே, அம்மொழியினின்றும் பாகத பாஷைகள் பல கிளைத்துத் தனித்தனி பிரிந்தன.  இதற்கிடையிலே தான் தமிழ் மொழியினின்று தெலுங்கு, மலையாளம், கன்னடந் துளுவமென்னும் வழி மொழிகள் கிளைத்தன.

இவ்வழி மொழிகளிலே தெலுங்கு தான் வடமொழியொடு மிகவுங் கலந்து விசேடமான திருத்தப்படாடைந்தது;  தனது நெடுங்கணக்கையே திருத்தி விரித்துக்கொண்டது; பல்லாயிரஞ் சொற்களையும் மேற்கொண்டது; வடசொல் இலக்கணத்தையும் மிகத் தழுவிக்கொண்டது. 

தெலுங் கிலக்கணமெல்லாம் தமிழ்ப்போக்கில் இயங்க வேண்டியிருக்க, அதை விடுத்து வடமொழிப் போக்கை யனுசரிக்கப் புகுந்தன.  புகுதலும் வட மொழியிலே தெலுங்கிலக்கணம் அமைவதாயிற்று.  இஃது இடைக்காலத்திலிருந்த நன்னயப் பட்ட ராதிய பிராமண வையாகணர்கள் செய்த தவறு.  இத்தவறு காரணமாகத் தெலுங்கு தமிழின் வழிமொழி யன்றென்பது அசங்கதமாம்.

இவ்வாறே கன்னடமுந் தெலுங்கை யொட்டிப் பெரிதும் இயங்கினமையான் அதுபோலவே பல்லாற்றானுந் தன்னைச் சீர்ப்படுத்திக்கொண்டது.  இதனாலன்றோ பழங்கன்னடம் என்றும் புதுக்கன்னடம் என்றும் அஃது இருவேறு பிரிவினதாகி யியங்குகின்றது.  பழங்கன்னடத்தைத் தமிழினின்றும் பிறந்ததெனக் கூறுங் கன்னடப்புலவர் பலர் இன்றுமுளர்.

இனி மலையாளமோ வெகுநாள் காறுந் திருந்தாதிருந்தது.  இறுதியில் ஏறக்குறைய முந்நூற்றியாண்டுகட்கு முன்னர்.

வடமொழிக் கலப்பு

வடமொழி தமிழ் நாட்டில் வெகுநாள் காறும் இயங்கியும் அதற்குத் தமிழ்மொழியைத் தன் வழியிலே திருப்பிக் கொள்ளுதற்குற்ற ஆற்றலில் லாது போயிற்று.  வடமொழியாளர் தமிழர்களது ஒழுக்கவழக்கங்களை யுணர்ந்து அவற்றிற்கேற்ப வடமொழியில் நூல்கள் வகுப்பான் புகுந்தனர். 

அவர்களெல்லாம் ஆன்ம நூற்பயிற்சி மிக்குடையாராயும், கலையுணர்ச்சி சான்றவ ராயுமிருந்தமை பற்றித் தமிழரது திவ்விய ஸ்தலங் களுக்குப் புராணங்கள் வகுத்தனர்; தமிழர்களிடத்தில்ல திருந்த அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற நால் வகைச்சாதி முறையை மெல்லமெல்ல நாட்டிவிட்டனர்.

முற்சடைப் பலனில்வே றாகிய முறைமைசொல்
நால்வகைச் சாதியிந் நாட்டினீர் நாட்டினீர்

என்று ஆரியரை நோக்கி முழங்குங் கபிலரகவ லையுங்காண்க. இன்னும் அவர் தம் புந்திநலங் காட்டித் தமிழரசர்களிடம் அமைச்சர்களெனவும் மேலதிகாரப் பிரபுக்களெனவும் அமைந்து கொண்டனர்; தமிழரிடத் திருந்த பல அரிய விஷயங்களையும் மொழிபெயர்த்துத் தமிழர் அறியு முன்னரே அவற்றைத் தாமறிந்தன போலவும், வடமொழியினின்றுமே தமி ழிற்கு அவை வந்தன போலவும் காட்டினர்.

தமிழருட் சாமானிய சனங்கள் அவ் வாரியரது விருப்பத்திற்கேற்ப எவ்வள விணங்கிய போதிலும், புலவராயினார் அவர்களது திருத்தப்பாட்டிற்குப் பெரிதுமிணங்கினாரல்லர். ஒழுக்கச் சீர்ப்பாடு ஏற்பட்டபோதினும், பாஷைத் திருத்தம் ஏற்படவில்லை.  தமிழின் முப்பத்தோரெழுத்துகளும் அவ்வாறே யின்றளவுமிருக்கின்றன; சிறிதும் வேறுபடவில்லை.  நாங்கள் செல்லு மிடங்களுக்குத் தக்கபடி புதிய புதிய இலிபிகள் ஏற்படுத்திக்கொள்ளுமியல் புடைய ஆரியர் தமிழ்நாட்டிற்கேற்றபடி தமிழிலிபியை யொட்டிக் கிரந்தம் என்னும் பெயரிற் புதுவதோர் இலிபி வகுத்தனர்; தமிழரை வசீகரிக்குமாறு அவ்விலிபியிற் பல நூல்கள் வரைந் தனர்.  தமிழ்ப் புலவராவார் எதற்கும் அசையாது தங்கள் தமிழ்மொழியின் போக்கையே தழுவிச் செல்வாராயினர்.

இவ்வாறு தமிழருட் பண்டிதரா யினார் வடமொழியைத் தமிழின்கண் விரவவொட்டாது விலக்கியும், பாமரரா யினார் வடமொழிச் சொற்களுட் பலவற்றை மேற்கொண்டு வழங்கப் புகுந்தமையின் நாளாவட்டத்தில் வடசொற்கள் பல தமிழ்ப்பாஷை யின்கண்ணே வேரூன்றிவிட்டன. 

அவ்வாறாயின் இதுபோலவே வட மொழியின் கண்ணும் தமிழ்ச் சொற்கள் பல சென்று சேர்ந்திருத்தல் வேண்டு மன்றோ? வடமொழி தமிழ்மொழி யொடு கலக்கப் புகுமுன்னரே, முன்னது பேச்சுவழக்கற்று ஏட்டுவழக்காய் மட்டிலிருக்கும் நிலைமைக்கு வந்து விட்டது.  ஏட்டுவழக் கொன்றுமே யுள்ள பாஷையோடு இருவகை வழக்கு முள்ள பாஷையொன்று கூடியியங்கப் புகுமாயின் முன்னதன் சொற்களே பின்னதன்கட்சென்று சேருமேயன்றிப் பின்னதன் சொற்கள் முன்னதன் கட்சென்று சேரா.

இது பாஷை நூலின் உண்மைகளுளொன்று.  இதுவே வழக்காற்று முறை.  இம்முறை பற்றியே வடசொற்கள் பல தமிழின்கட் புகுந்தன.  தமிழ்ச் சொற்களிற் சில தாமும் வடமொழியின்கண் ஏறாமற் போயின.  எனினும் தொன்னாட்டு வடமொழி யாளர் மட்டிற் சிலர் ஊர்ப்பெயர், மலைப் பெயர், யாற்றுப்பெயர் முதலாயிவற்றைத் தங்கள் சப்த சாஸ்திரத்திற் கியைந்தவண்ணம், ஓசை வேறுபாடு செய்து கொண்டு தாங்கள் வகுக்கப் புகுந்த புராணாதிகளில் வழங்கு வாராயினர்.  இதுதானுண்மை; இதற் குமே லொன்றுஞ் சொல்ல இயலாது.

இனித் தமிழ்ப் புலவர்களாயினார் சமஸ்கிருதச் சொற்களை எவ்வளவோ விலக்கிப்பார்த்தும் அவற்றை விலக் குதல் முடியாது போயிற்று.  போகவே தமிழ்ப் புலவர்களுந் தங்கள் முயற்சி களெல்லாம் வீணாதல் கண்டு வேண்டா வெறுப்பாய்த் தமக்கு வேண்டிய சிற்சில சொற்களை மட்டில் தங்கள் எழுத்திலக்கணவிதிகட்குத் தக்கவாறு திரித்து மேற்கொள்வாரா யினார்; ஆரியச் சொற்கள் தமிழில் வருவதற்கேற்ற விதிகளும் வகுத்தனர் பின்னர்க் கொஞ்சங்கொஞ்சமாக வட சொற்கள் பல தமிழ் மொழியின்கண் இடம் பெறுவன வாயின.

அதன்மேல் முதலிடை கடையெனும் முச்சங்கத்தார் காலத்தினும் வட சொற்கள் தமிழ் நூல்களிலேறின.  ஆயினும் அவை சிறிதளவேயாம்.  தொல்காப்பியம் என்னும் இலக் கணத்தினுள்ளும் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க் கணக்கு என்னும் நூற்றொகைகளுள்ளும் ஆங் காங்கு இரண்டொரு வடசொற் காணப் படலாமேயன்றி, அதற்குமேலில்லை.

பின்னர்ப் பவுத்தராயினார் தலையெடுத்துத் தம் மதத்தை யாண்டும் பரப்பிப் பல்லாயிரக் கணக்காகச் சனங்களைச் சேர்த்துக்கொண்டு அக் காலத்திருந்த ஆரியரை யெதிர்த்தனர்.  இப்பகைமை தென்னாட்டினும் பரவிற்று.  பரவவே தமிழருட் பலர் பவுத்தமதம் மேற்கொண்டு ஆரியரை யெதிர்ப்பதில் நோக்கமுற்றிருந்தனர்.  அக்காலத்தில் மறுபடியும் தமிழ்ப் புலவர்கள் தங்களாற் கூடியமட்டில் வடசொற்களைத் தமது தமிழ் மொழியின் கண்ணே கலக்கவொட் டாது தடுத்தனர். 

முன்னரே தமிழிற் போந்நு வேரூன்றிவிட்ட வடசொற் களைத் தொலைப்பது அவர்கட்குப் பெருங்கஷ்டமாய்விட்டது.  ஆதலின் அவர்கள் என்செய்ய வல்லர்?  முன் னரே வந்தனபோக, இனிமேலாதல் அப்பொல்லாத வடசொற்கள் தமிழின் கண் வாராதவாறு பாதுகாத்தல் வேண்டுமென்று சிறிதுகாலம் முயன் றனர். 

அவ்வாறே இவர்களது விடா முயற்சியாற் சிறிதுகாலம் வடசொற்கள்  தமிழில் அதிகமாய் வந்து கலவாம லுமிருந்தன.  இக்காலத்திலேதான் செந் தமிழ், கொடுந்தமிழ் எனத் தமிழ் இருபிரிவினதாகி யியங்கப் புகுந்தது.  செந்தமிழாவது புலவராயினார் பயிலுந் தமிழ்; கொடுந்தமிழாவது புலவரல்லாத சாமானிய மக்கள் பயிலுந்தமிழ்.
- பரிதிமாற்கலைஞர்
(தமிழ் மொழியின் வரலாறு)
விடுதலை ஞா.ம., 7.5.11

குறளுக்கு குரல் கொடுத்த பெரியார்


வரையறுத்துக் கூற முடியாத தொன்மை வாய்ந்த உலகப் பந்து தோன்றியபோது இருள் சூழப்பட்டு எங்கும் நைட்ரஜன் பரவி, நெருப்புக் கோளமாகி, மிதமிஞ்சிய வெப்பத்தால் பேரொலியுடன் வெடித்து சிதறிய தாகவும், சிதறிய துண்டங்கள் பல கோடிக்கணக்கான ஆண்டுகள் எரிந்து பெரிதும்  சிறிதுமான நட்சத்திரங் களாகின எனவும் அவற்றின் நடுநாயக மாக சூரியனும் அதனைச் சுற்றி பூமி, வீனஸ், மார்ஸ், ஜூபிடர், சனி, யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ என பல கோள்கள் ஏற்பட்டதெனவும் ஆராய்ச் சியாளர்கள் தெரிவிக்கின்றனர். அதோடு பல லட்சம் ஆண்டுகளுக்குப் பிறகு 10 ஆயிரம் டிகிரி செல்சியசாக இருந்த பூமியின் வெப்பம் 150 செல்சியசாக குளிர்ந்து நிலப்பரப்பும், நீர்ப்பரப்புமாக மாறியது என்பர்.அதில் ஏராளமான எரிமலைகளும், பூகம்ப பள்ளத்தாக்குகளும் நீர் நிலைகளும் நிறைந்திருந்தன எனவும் அறிய வருகிறது.
காலச்சுழற்சியில் ஓர் அணு உயிரிகள் தோன்றி பலவாறாகப் பெருகின. புல்லாகி, பூவாகி பூண்டாகி, செடியாகி, கொடியாகி, மரமாகி, புழு வாகி, பூச்சியாகி பரிணாம வளர்ச்சியில் குரங்காகி மனிதனாகி வளரத் தொடங்கின. அவ்வாறு மனித இனம் முதலில் தோன்றியது ஆப்பிரிக்காவின் சவானா காடுகளில் தான்என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மனிதனோடு விலங்குகளும் தோன்றி பாகுபாடு இன்றி வளர்ந்து பசித்த போது காடுகளில் கிடைத்த இலை, தழை, காய், கனிகளை உண்டு வாழ்ந் தது. எதுவுமே தெரியாத மனித இனம், இடி, மின்னல், மழை, புயல், பூகம்பம், நெருப்பு ஆகிய இயற்கை சீற்றங்களைக் கண்டு பயந்து ஓடி ஒளிந்தன. நமக்கு மீறிய சக்திகளாக எண்ணி அவைகளை வணஙக ஆரம்பித்தனர். அவர்களுக்கு பேசத் தெரியாது. மனம் போன போக் கில் ஒலி எழுப்பியும், சைகைகளை காட்டியும் தங்களின் உள்ளுணர்வு களை வெளிப்படுத்தினர். அவையே மொழியாக உருவெடுத்து வழக்கத்திற்கு வந்தது. எழுதத் தெரியாத மனித இனம் சித்திரங்களால் தரையிலும், மரத்திலும், மரப்பட்டைகளிலும், ஓலைகளிலும், இறந்த விலங்குகளின் காய்ந்த தோல் களிலும் தாம் இயற்கையாக கண்ட காட்சிகளை கிறுக்கிப் பார்த்தது. அதுவே வளர்ச்சி பெற்று வரிவடிவங் களாகின. மொழியும் எழுத்தும் சிறிது சிறிதாக பல்வேறு மாற்றங்களைப் பெற்று தற்போதுள்ள நடைமுறைக்கு வந்துள்ளன. இக்காலத்திலும் எழுத் தில்லா மொழிகளும், பேச்சு வழக் கில்லா மொழிகளும் உலகில் பல பாகங்களிலிருக்கின்றன. லத்தீன், பிரா கிருதம் சமஸ்கிருதம் போன்ற வழக் கொழிந்த மொழிகளுமிருக்கின்றன.
இன்றைய தமிழ்நாடு பன்னெடுங் காலத்துக்கு முன்  ஆப்பிரிக்கா கண்டத் துடன் இணைந்த ஒரே நிலப்பரப்பாக இருந்ததாகவும், அவை லெமூரியாக் கண்டம், குமரிக்கண்டம் என வழங்கப் பட்டதாகவும் 18 அல்லது 15 கோடி ஆண்டுகளுக்குப்பின் கடலால் பிரிவு பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதுபோல கிழக்கிந்திய தீவுகள் ஆஸ்திரேலியா இந்தியா ஆகியவையும் இணைந்த நிலப்பரப்பாக இருந்து கொண்ட்வானா என்ற பெயருடன் விளங்கி காலப் போக்கில் கடல் கோளால் பிரிவுபட்ட பகுதிகளாகின எனவும் தெரியவருகிறது. பூம்புகார் பட்டினம் கடலுக்குள் மூழ்கியிருப்பதும் ஆய்வுகளால் வெளிப்படுத்தப்பட்டுள் ளது. வடக்கே சிந்து மாகாணத்தில் லாக்கானா என்ற வட்டத்தில் 70 அடி உயரமுள்ள மண்மேட்டை அகழ்ந்து பார்த்தபோது கிடைத்த மண்பாண்ட ஓடு தான் மொகஞ்சோதாரோ நகரத்தை வெளிக்கொணர்ந்தது.  அதுபோல் ஹரியூபீயா என்ற வழங்கப்பட்ட நகரம் தான் அரப்பா எனத் திரிந்து நமக்கு தெரிய வந்தது. 3000 மைல்கள் நீளமும் 1000 மைல்கள் அகலமும் கொண்ட சஹாரா பாலைவனத்தில் நின்ற கடல் 16000 மைல்கள் நீளமுள்ள தமிழ கத்தையே விழுங்கி விட்டது. பாகிஸ் தானில் சிந்து வெளிப்பகுதியில் நம் தமிழ் நகரங்களான கொற்கை, வஞ்சி, தொண்டி என்பவை இன்றும் இருப்ப தாக ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரி விக்கிறார். சீன நாட்டிலும் ரோமானிய நாட்டிலும் கிடைத்த புதைப் பொருள் களில் தமிழ் எழுத்துகளிருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்படி பரந்து விரிந்து புகழ்பரப்பிய தமிழ் மண் இயற்கை சீற்றங்களாலும், கால மாற்றங்களாலும் சிதைந்து குறுகிய வட்டத்துக்குள் அடங்கிவிட்டது.
ஒரு நாட்டின் நாகரிகத்திற்கும், மக்களின் பண் பாட்டு நெறி முறைகளுக்கும் அளவுகோலாக இருப்பது அங்கே பேசப்பட்ட மொழி யின் வளமேயாகும். நம் தாய்மொழி தமிழ் கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழ் என்ற பெருமைக்குரியது. தமிழ் என்ற சொல்லிலேயே வல்லினம், மெல்லினம், இடையினம் இருக்கிறது. முக்கடல் சூழ் குமரி கண்டத்திலும் அவ்வகை வரம்புள்ளது. நாட்டின் பெருமையையும் நாகரிகத்தின் பழமையையும் பறை சாற்றும் நகரங்கள் புதைந்து போனா லும் சிதைந்து போனாலும் எஞ்சியவை நினைவுச் சின்னங்களாக இருந்து நம்மை எழுச்சி பெற செய்கிறது. அவைகளை படம் பிடித்திடுவது போல் நம் முன்னோர்கள் தமிழ்ப் பெரும் புலவர்கள் எண்ணற்ற நீதி நூல் களையும் மருத்துவம், வானவியல், கட்டிடக் கலை சார்ந்த பல்வேறு நூல்களையும் எழுதி வைத்துள்ளனர். அவற்றுள் தொல்காப்பியம் - புறநானூறு பதிற்றுப் பத்து -_ அகநானூறு _ பரிபாடல் என சிற்றிலக்கியங்களும் பேரிலக்கியங்களும் எழுதப்பட்டி ருந்தன. இயற்கை சீற்றங்களால் எதிரிகளின் படையெடுப்பால் எரிந்து சாம்பலானவை பலப்பல, பாதுகாப்பு இல்லாமல் பறிபோனவை, கரையான் களால் அரிக்கப்பட்டவை, எதிரிகளால் மறைக்கப்பட்டவை, மாற்றி எழுதப் பட்டவை, சிதைக்கப்பட்டவை, சீரழிக் கப்பட்டவை என நம் அரிய கருவூ லங்கள் பறிபோயின.
முத்தொள்ளாயிரம் எனும் நூலின் 2700 பாடல்களில் 200 மட்டுமே எஞ் சியுள்ளன. புறநானூறுப் பாடல்களில் 398 தான் உள்ளன. பரிபாடல் 22 பாடல்களே மீதம். இப்படி விரித்துக் கொண்டே போகலாம். எனவே இழந் ததை எண்ணி வருந்தாமல் இருப் பதைக் காப்பது தமிழர்களாகிய நமது கடமையாகும். அய்யாயிரம் ஆண்டுகள் தாய்மொழி தமிழை செம்மொழி தரத்துக்கு உயர்த்தி நடுவண் அரசால் ஆணை பிறப்பிக்கப்பட்டது. நாம் அறிந்ததே, ஆனால் அதன் தொன்மைச் சிறப்பை சுமார் 1500 ஆண்டுகளுக்குள் தோன்றிய சமஸ்கிருத மொழியுடன் ஒப்பிட்டு குறைத்தே மதிப்பிட்டிருந்தது. தமிழ் வளம் மிக்க மொழி -_ எண்ணற்ற இடையூறுகளைக் கடந்து நலிவுறாது சீரிளமைத் திறம் வியந்து பாடக்கூடிய அளவில் வளர்ந் துள்ளது. தென்பாண்டிய மன்னர்கள் முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச் சங்கம் என அமைப்புகளை உருவாக்கி வளர்த்தனர். ஆனால் பிறமொழி மோகங்கொண்டு பல மன்னர்கள் தமிழுக்கு இழைத்த தீங்கினையும் நாம் நினைவு கூரத்தான் வேண்டும். உதாரணத்திற்காக சிலவற்றைக் கீழே விரித்துள்ளேன்.
சோழ மன்னன் முதலாம் இராசேந் திரன் 11ஆம் நூற்றாண்டில் தென்னாற் காடு மாவட்டத்தில் எண்ணாயிரம் என்ற ஊரில் சமஸ்கிருதக் கல்விக் கழகம் அமைத்து 14 ஆசிரியர்களை நியமித்து 340 மாணவர்கள் படிக்க உதவித் தொகையோடு நெல் அளந்தும் கொடுத் தான். இங்கு தமிழ் கற்பிக்கப் படவில்லை.
பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் மத்தவிலாசம் என்ற நாடகத்தை சமஸ்கிருத மொழியில் தானே எழுதி பரப்பினான். தமிழுக்கு அங்கு வாய்ப்பில்லை. மூன்றாம் குலோத்துங்க சோழன் திருவெற்றியூரில் மட்டும் 3 சமஸ்கிருதக் கல்லூரிகளை ஆரம்பித்து 340 மாணவர்களுக்கு சமஸ்கிருத இலக்கணம் கற்பிக்கச் செய்தான். தமிழ் புறக்கணிக்கப்பட்டது. இவை தவிர, திருமுக்கூடல், திருவாவடுதுறை, பாகூர் - பெருவள்ளூர் - காம்பள்ளூர் -_  ஆனியூர் (ஆனூர்) ஆகிய இடங்களி ல்லாம் பள்ளிகள் அமைக்கப்பட்டு நான்கு வேதம் _ ஆறுசாஸ்திரம் _ மகாபாரதம் _ இராமாயணம் _ மனுநீதி மீமாம்சை, வியாகரணம் பாஷ்யங்கள் என 18 வகையான வித்தைகள் சமஸ்கிருத மொழியில் கற்றுத் தரப் பட்டன. சமஸ்கிருதம் சொல்லி கொடுக் கப்ட்டது. தமிழ் மறுக்கப்பட்டது.மதுரை நாயக்கர் காலத்தில் 10,000 பார்ப்பன மாணவர்களுக்கு வேதக் கல்வியும், சமஸ்கிருதமும் பயிற்றுவிக்கப்பட்டது தமிழர்களுக்கல்ல. பல்லவர் காலத்தில் காஞ்சியில் கடிகை என்ற உலகப் புகழ் பெற்ற வடமொழிக் கல்லூரி உருவாக் கப்பட்டு 400 வருடங்கள் சிறப்பாக நடைபெற்றது. இப்படி புறக்கணிக் கப்பட்ட தமிழ்மொழியைக் கற்றுத் தேர்ந்து போற்றிப்புகழ மேலை நாட்டு அறிஞர்கள் வந்தனர். அவர்களில் ஒரு சிலரது தமிழ்த் தொண்டினைப் பாராட்டி நன்றி செலுத்த வேண்டு மல்லவா! அந்த அறிஞர்களை கீழே தொகுத்துள்ளேன்.
இத்தாலி நாட்டில் வெனீஸ் நகரில் 1680இல் பிறந்த கான்ஸ்டென்டைன் ஜோசப் பெஸ்கி என்பவர் 1710இல் இந்தியா வின் கோவாவுக்கு வந்து, திரு. சுப்ரதீபக் கவிராயர் என்ற தமிழ் அறி ஞரிடம் இருபது ஆண்டுகள் மாணவ ராக தமிழ் பயின்று தேம்பாவணி என்ற தமிழ் நூலை எழுதி மதுரை தமிழ்ச் சங்கத்தில் அரங்கேற்றிய போது வீரமாமுனிவர் என்ற விருதினை தமிழ்ப் புலவர்கள் அவருக்கு வழங்கி கவுரவித்தனர். உலகப் பொது மறையாம் திருக்குறளின் அருமையுணர்ந்து அறத்துப்பாலையும், பொருட்பாலையும் லத்தீன் மொழியில் மொழி பெயர்த்தார். இதுவே திருக்குறளின் முதல் மொழிபெயர்ப்பு அக்காலத்தில் தமிழில் அகராதி என்னும் அமைப்பு இல்லை. நிகண்டு எனும் பெயரில் தான் இயங்கி வந்தது. அதனை பெயர் - பொருள், தொகை, தொடை என நான்கு அதிகாரங்களைக் கொண்ட சதுரகராதி என உருவாக் கினார். தமிழ் எழுத்துக்களில் ஏ ஒ எனும் நெட்டெழுத்துக்களை வழக் கிற்குகொண்டு வந்தார். இப்படி எண்ணற்ற தமிழ்த் தொண்டாற்றினார்.
இங்கிலாந்து நாட்டில் 1820இல் பிறந்து ஜியார்ஜ்யுக்ளோ என்று வழங் கப்பெற்ற ஜி.யு. போப் 1839இல் தமிழகத் திற்கு வருகைபுரிந்து இராமானுஜ கவிராயர் என்ற தமிழறிஞரிடம் தமிழ் கற்றுத் தேர்ந்தார். தமிழ்ச் செய்யுட் கலம்பகம் எனும் நூலை வெளியிட் டார். ஆங்கிலம் _- தமிழ் தமிழ் _ ஆங்கிலம் அகராதியை தயாரித்தார். 40 ஆண்டுகள் திருக்குறளைப் படித்தறிந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்ந்து 1886இல் முகவுரையுடன் வெளியிட் டார். 1884இல் மறைநூல் அறிஞர், வேதசாஸ்திரி எனும் பட்டங்களைப் பெற்றார். தன் கல்லறையில் ஒரு தமிழ் மாணவன் என்று பொறிக்கப்பட வேண்டும் என்று கூறிச் சென்றார். தமிழ்மீது அவர் கொண்ட பற்று நம்மை வியக்க வைக்கிறது.
அய்ரோப்பாவின் அயர்லாந்தில் 1815இல் பிறந்த கால்டுவெல் 1838இல் சென்னைக்கு வந்தார். தமிழ் மொழியை பிழையறக்கற்று தஞ்சை திருச்சி, சிதம்பரம், நீலகிரி, கோவை, மதுரை ஆகிய ஊர்களுக்கெல்லாம் சென்று இறுதியாக இளையான் குடியில் தங்கி தமிழைப் பரப்பினார். கிறித்துவ வேத நூல்களான பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு ஆகியவற்றை தமிழில் மொழி பெயர்த்தார். தமிழ் மொழியுடன் தொடர்புடைய தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவைகளின் ஒப்பியல் களை ஆராய்ந்து திராவிட மொழி களின் ஒப்பிலக்கணம் எனும் நூலை உருவாக்கினார். தமிழ்த்தாயின் தவப்புதல்வர் என்றும் தமிழ்ப் பாது காவலர் என்றும் சிறப்பிக்கப்பட்டார். தமிழ் மொழிக்காகவே வாழ்ந்த கால்டுவேல், தன் நாட்டுக்கு திரும்பாமல், இந்தியாவில் தான்உயிர் துறப்பேன் என்று கூறியவாறே, கொடைக்கானலில் மறைந்தார்.
இவர்களைப்போலவே ஜெர்மனி நாட்டில்பிறந்த இரேனியஸ், சீகன் பால்கு, இத்தாலி நாட்டின் ராபர்ட்டி நோபிலி, ஆங்கில நாட்டில் பிறந்த பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ் ஆகியோர் நம் தாய்மொழி தமிழை வளர்க்க அரும்பாடுப்பட்டனர். ஆனால் நம் மன்னர்கள் டர்கீஸ் மொழி - _ ஈரானிய மொழி _ பர்மியன் மொழி ஆகிய வற்றின் கூட்டமைப்பில் உருவாகி, செப்பனிடப்பட்டது என்று பொருளை தரக்கூடியதுமான சமஸ்கிருதத்தையே வளர்த்தனர்.
தந்தை பெரியார் தமிழ் இலக்கி யங்கள் பெரும்பாலானவற்றை படித் தும், பிறரைப் படிக்கச் சொல்லிக் கேட் டும் அவற்றுள் பொதிந்துள்ள நல்ல கருத்துக்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லவும் எழுதவும் செய்தார். அதே நேரத்தில் மனித வாழ்வுக்கு ஊறு விளைவிக்கும் கற்பனைக் கதைகளை யும், பொய்மை உரைகளையும், மனிதநேயமற்ற மதச் சடங்குகளையும், ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்தும் சாதி மத பேதங்களை வலியுறுத்தும் புராண இதிகாசங்களையும், கடவுளர்களின் கண்மூடித்தனமான,  இயற்கைக்கு ஒவ் வாததுமான செயல்களைக் கூறும் நூல்களையும் வெறுத்து ஒதுக்கினார். பிணத்தை ஆய்வு செய்யும் மருத்து வரைப்போல ஒவ்வொன்றையும் அலசி ஆராய்ந்து நல்லவை கொண்டு அல்லவை தவிர்த்தார். கடவுள் பெயரைச் சொல்லி கயமைத்தனம் செய்யும் சமுதாய விரோதிகளைக் கண்டித்தார். மக்களிடையே சமத்துவம் வளரவும், சன்மார்க்கம் தழைக்கவும் சாதிகள் மடியவும், தாழ்வு மனப் பான்மை மறையவும், கல்வி அறிவு பெற்று மக்கள் உயரவும் பெண்களின் அடிமைத்தனத்தைப் போக்கவும் தன்வாழ்நாளை அர்ப்பணித்த பெரியார் அவைகளை நிறைவேற்ற திருக்குறள் ஒன்று தான் சிறந்ததென தேர்ந்தார். தேடிய நூல்கள் தேர்ந்த தமிழறி ஞர்களின் புத்தக அலமாரிகளில் இருப்புக் கணக்கைக்காட்ட முடக்கி வைக்கப்பட்டிருந்ததே தவிர மக்களுக்கு பயன்படச் செய்யவில்லை. புலவர்களின் பாராமுகம் திருக்குறளை இருட்டடிப்பு செய்தது. கம்பராமாயண சொற் பொழிவுகளும், மகாபாரத உபன்யாசங் களும், சிலப்பதிகார பட்டிமன்றங்களும், திருப்பாவை திருவெம்பாவை மாநாடு களும் நடத்தி தங்களின் ஆய்வுத் திறமையைக் காட்டி வந்த தமிழறி ஞர்கள் சமுதாயத்தை நினைக்கவில்லை. தங்களின் புலமையை மற்ற ஆராய்ச்சி யாளர்கள் பாராட்ட வேண்டும், புகழ வேண்டும் என்று நினைத்து செயல் பட்டார்களேயொழிய நாம் சார்ந்துள்ள தமிழ்ச் சமுதாயம் விழிப்புணர்வு பெற்று எழுச்சி பெற வேண்டும் என்று எண்ணவில்லை. சமுதாய அக்கறை கொண்ட பகுத்தறிவுப் பகலவன் பெரியார்தான் முடங்கி கிடந்த குறளுக்கு குரல் கொடுத்தார்.
மனிதநேயத்தை வலியுறுத்தும் திருக்குறளை எழுதியவர் யார்? எந்த மதத்தைச் சார்ந்தவர்? எங்கே பிறந் தவர்? அவரது சமகாலப் புலவர்கள் யாவர்? எப்படி நூல் அரங்கேற்றம் செய் யப்பட்டது? பத்துபாடல்கள் கொண்ட அதிகாரங்களாக பாகுபடுத்தியதுயார்? என்று கேள்விகளைக் கேட்டு விடை காண விரும்பவில்லை பெரியார். தமிழ் மொழியில் எழுதப்பட்டு உலகமாந்தர் எல்லோராலும் ஒத்துக் கொள்ளக் கூடிய பெரும்பாலான கருத்துக்களை உள்ளடக்கிய நூல் என்பதை மட்டுமே மனதில் கொண்டு அதனை முன்னி லைப்படுத்தினார்.  எனினும் கால வரம்பை நிலைநாட்ட வேண்டிய கட் டாயம் தமிழர்களுக்கு உண்டு என்பதால் 530 தமிழறிஞர்கள் சென்னை பச்சையப்பன்  கல்லூரியில் 1929 மார்ச் 11ஆம் நாளில் ஒன்றுகூடி தமிழ் தாத்தா என்று அழைக்கப்படும் உ.வே.சாமி நாதர் தலைமையில் விவாதித்தனர். 10 புலவர்கள் விளக்க உரையாற்றியும் எந்த முடிவுக்கும் வர முடியாத நிலையில் பசுமலைப் பாரதி என்றழைக் கப்பட்ட அறிஞர் சோமசுந்தர பாரதியார் பதினோராவதாக தன் கருத்துக்களை பிற நூல்களுடன் ஒப்பிட்டுக் காட்டி ஆதாரங்களை அடுக்கி விளக்கம் தந்தார். அதன் வழி ஏசு கிறிஸ்து பிறப் பதற்கு 31 ஆண்டுகள் முன்னதாக திருவள்ளுவர் பிறந்தார் என்ற முடிவு கூட்டத் தலைவரின் இசைவோடு ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதன்படி ஆங்கில ஆண்டோ 31 ஆண்டு களைச் சேர்த்து திருவள்ளுவர் தொடர் ஆண்டு கணக்கிடப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
தந்தை பெரியார் அத்தோடு நில்லாமல் தமிழ் அறிஞர் பெரு மக் களைக் கூட்டி ஆய்வு செய்து கலந் துரையாடச் செய்தார். மக்களின் மன நிலை ஓரளவு பகுத்தறிய தொடங்கும் வரை பிரச்சாரம் செய்து விழிப் புணர்வை ஊட்டினார். 1949ஆம் ஆண்டில் ஜனவரி 15_16 தேதியில் சென்னை பிராட்வே டாக்கீசுக்கு அடுத்த மைதானத்தில் திருக்குறள் மாநாடு நடத்தி அறிஞர்களையும் மொழி ஆர்வலர்களையும் பேச வைத்து இன உணர்வையும், சுயமரி யாதை சிந்தனையையும் வளர்த்தார். பாராமுகமாக விருந்த பாவலர்கள் பெரியாரின் முயற்சிகளைப் பாராட்டத் தொடங்கினர். பைபிளைப் படிப்பவர் கிறித்துவராகலாம், குரானைப் படிப்பவர்கள் முகமதியராகலாம். கீதையைப் படிப்பவர் இந்துதவாகலாம் எல்லாமே மதம் சார்ந்தவை. ஆனால் திருக்குறளைப் படிப்பவர்கள் மனித நேயமிகுந்த மனிதராகலாம். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற முது மொழிக்கு உயிர்ப்பைக் கொடுக்கலாம் என்ற உணர்வு அறிஞர்களிடம் பரவத் தொடங்கியது.
உலகமாந்தர் எல்லோ ரும் ஓர் குலம் ஓர் இனம் என்ற மனித நேயப்பண்பு வளரத் தொடங்கியது. மேடையில் முழங்கும் அறிஞர் பெருமக்கள் திருக்குறளைச் சொல்லியே ஆரம்பிக்கவும் முடிக்கவும் பழகிக் கொண்டனர். ஏராளமான திருக்குறள் மன்றங்கள் தோன்றின. திருக்குறள் விளக்கப் பேரவைகள், பேரணிகள் ஆய்வுக் கூட்டங்கள் என பரந்து விரிந்து செயல்படத் தொடங்கின பெரியாரின் கொள்கைகளை மக்களின் மனதில் பதிய வைக்க திருக்குறள் நெறி முறைகள் படிக்கட்டுகளாக அமைந்தன. பழமை எண்ணங்களின் தாக்கம் குறைய ஆரம்பித்தது. புதிய அறிவியல் சிந்தனையின் நோக்கம் வளரத் தொடங்கியது. தந்தை பெரியாரின் தன்னலமற்ற தொண்டு தமிழ் சமுதாயத்தை மட்டுமல்லாமல் மனித இனத்தையே வாழ வைக்கும் மனித நேயத்தை வளர்க்கும் தொண்டு. அதற்கு முதற்படியாக வள்ளுவத்தை வாழ்வியலாக்குவோம், வளம் பெறுவோம் -_  நலம் பெறுவோம் வாருங்கள். பெரியார் குறளுக்குக் குரல் கொடுத்து வழிகாட்டியுள்ளார். அறிஞர்கள் பாதைகளை அமைத்துள் ளனர். அவைகளைப்பற்றி மன உறுதியோடு நடப்போம். தடையி ருப்பின் தகர்ப்போம். வாழ்வினிலே உயர்வோம்.
ஆக்கம்: பெரியார் அண்ணா கலை விருதுகள் பெற்ற நாடகச் செம்மல் கு.ப. செயராமன்
பாபநாசம்
-விடுதலை ஞா.ம.,18.10.14

குமரிக்கண்டம் - சாத்தூர் சேகரன்


ஆய்வுக் கருத்து 17

தமிழ் வட்ட எழுத்தைப் பற்றி முதலில் கூறியவர்கள் _ இவை பிற்காலச் சோழர் (கி.பி. 8 ஆம் நூற்றாண்டு) எழுத்து என்றனர்.  பின்னர் பல்லவர் காலத்தில் (கி.பி. அய்ந்தாம் நூற்றாண்டு) உள்ள எழுத்து என்றனர்.  ஆனால் கி.பி. மூன்றாம் நூற்றாண்டிலும் வட்டெழுத்து உண்டு என்றனர் ஆழமாக ஆராய்ந்து பார்த்த சில அறிஞர்கள்.

இன்று கி.மு. 5 ஆம் நூற்றாண்டில் உள்ள தமிழ் பிரம்மி எழுத்துகளின் ஊடே சிற்சில எழுத்துகள் இருப்பதால், வட்ட எழுத்துகளின் பழைமை கி.மு. 5 ஆம் நூற்றாண்டிற்கும் முன்னே செல்கிறது.

ஆய்வுக் கருத்து 18 

தமிழ் வட்ட எழுத்து உலகில் 30_ க்கு மேற் பட்ட மொழிகளில் இருக்கிறது என்று அறியப்படும் பொழுது, வட்ட எழுத்தின் பழைமையும், பெருமையும் கூடுகிறது.

அண்டை அயல் மொழிகள்

சாவகம்        சிங்களம்
பர்மிய மொழி    ஆதிமலாய்

இந்திய மொழிகள்

தெலுங்கு        கன்னடம்
ஒரியா        பழைய மோடி மொழி
மலையாள எழுத்து    கிரந்த எழுத்து
பஞ்சாபி எழுத்து

பாதி வட்ட எழுத்து

தாய்லாந்து லாவோசு
வியட்நாம்    உருது
அரபி பெர்சியன்
இராக்கி    ஹிப்ரு
பினிசியன்    சிந்தி
காஷ்மீரி    தமிழ் பிரம்மி
வட இந்திய பிரம்மி    நகரி எழுத்து
திபெத்திய எழுத்து    பூட்டானிய எழுத்து
அசாமி எழுத்து    வங்காள எழுத்து

தொலைதூர மொழிகள்

கொரியா  ரோமானிய வட்டம்

ஆய்வுக் கருத்து 19

தமிழ் பிரம்மியில் இருந்து மட்டுமே வட இந்திய பிரம்மி கிளைத்து இருக்க முடியும் என்று ஏற்கெனவே கூறியுள்ளோம்.

ஆனால் சிந்துவெளி காலத்தின் பின் ஒழுங்கான உயிர்மெய் அட்டவணை ஏற்பட்டபின் குமரிக்கண்டத்திலும் இந்தியாவிலும் இருந்த எழுத்து வகை எது என்ற கேள்வி பிறக்கிறது.  அது வட்ட எழுத்தா? அல்லது தமிழ் பிரம்மி எழுத்தா? ஒன்றுக்கொன்று என்ன உறவு?  இது அடுத்த கேள்வியாகும்.

சில ஒற்றுமைகளை இங்கே காண்போம்:
ஏற்கெனவே 30_க்கு மேற்பட்ட மொழிகளில் வட்ட எழுத்தின் ஆதிக்கம் இருப்பதாலும் தொலை தூர நாடுகளுக்குச் சென்றிருப்பதாலும் வட்ட எழுத்தின் காலம் கி.மு. 7000 மேல் எல்லையாகவும் கி.மு. 500 கீழ் எல்லையாகவும் இருந்திருக்கக் கூடும்.  மீண்டும் இரண்டாம் கட்ட வளர்ச்சியாக கி.மு. 300 முதல் கி.பி. 1000 வரை வளர்ந்திருக்க வேண்டும்.  கி.பி. 1000_த்துக்குப் பின் ஓரளவு கோடு சார்ந்த தமிழ் எழுத்தாகி இன்றைய தமிழ் எழுத்தாக மாறி இருக்க வேண்டும்.  கி.பி. 1000_த்துக்குப் பின்னரே இந்த தமிழ் எழுத்து வட இந்திய நகரி எழுத்தாக மலர்ந்திருக்கிறது.

ஆய்வுக் கருத்து 20

சிந்துவெளி எழுத்து _ வட்ட எழுத்து _ தமிழ் பிரம்மி ஆகிய மூன்று எழுத்து வகைக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஆராய்வோம்.
இந்த அட்டவணையைக் காணும்போது வட்ட எழுத்துகளில் இருந்தே தமிழ் பிரம்மி வந்திருக்கக் கூடும் எனத் தெரிய வருகிறது.

ஆய்வுக் கருத்து 21

ஓலையில் எழுதும்போது சில நுட்பங்களைக் கவனிக்க வேண்டியுள்ளது. 

(1) ஓலையில் இருபுறமும் எழுதியதால் புள்ளி எழுத்திற்குப் புள்ளி இடவில்லை.  இதனால் பல கிளை மொழிகளில் தமிழ் சற்று மாறியுள்ளது. 

(2)  தமிழில் இட வலமாக எழுதிவர, மேற்கு ஆசிய பகுதி மக்கள் வட்ட எழுத்தை வலமாக எழுத முயன்றனர்.  இதனால் தமிழ் எழுத்துகளில் சில பாதி எழுத் தாகின.  சில வல மாற்றமோ, தலைகீழ் மாற்றமோ பெற்றன.

(3) தமிழில் உயிரெழுத்துகளுக்குத் தனி எழுத்து வகை இருந்து அவற்றையே இன்றுவரை எழுதி வருகிறோம்.  ஆனால் மேற்காசிய மக்கள் அ, இ, உ என்ற உயிரினை மட்டும் குறியீடுகளாக எழுத்தின் மேற்புறம் அல்லது கீழ்புறம் இடத் தொடங்கினர்.  இன்றும் அவற்றிற்குத் தனி உயிர் எழுத்து இல்லை.

(4) ஓலையில் நுண்ணிய நரம்புகள் நெடுவாக்கில் இருப்பதைக் காணலாம்.  எனவே ப என்று ஓலையில் எழுதினால் 11 இரண்டு கோடுகள் மட்டுமே தெளிவாகத் தெரியும்.  கிடைக்கோடு சரியாகத் தெரியாது.  மாறாக ஹி எனப் பகரத்தை வட்ட எழுத்தாக எழுதினால், பகரம் தெளிவாகத் தெரியும்.  எனவே ஆதி சிந்து வெளி எழுத்துகளை ஓலையில் எழுதத் தொடங்கிய போதே வட்ட எழுத்து முறை ஏற்பட்டிருக்க வேண்டும்.

ஆய்வுக் கருத்து 22

திருமந்திரத்தில் தமிழ் எழுத்துகள் 51 என வருகிறது.  இந்தியாவின் ஏதோ ஒரு பகுதியில் தமிழை 51 எழுத்துகள் ஆக்கும் முயற்சி நடை பெற்றது என்றும் அதன் பின்னரே தமிழில் இன்றும் இருந்து வரும் 30 உயிர்மெய் எழுத்துகள் வட இந்திய மொழிகளில் இன்றைய 51 எழுத்து வகை யாக மாறி இருக்க வேண்டும் என்று தெரிய வருகிறது.

ஆய்வுக் கருத்து 23

(1)  வட இந்தியாவின் ஊர்ப் பெயர்கள் நூற்றுக்கு நூறு இன்றும் தமிழாகவே உள்ளன.  சில இடங்களில் திரிந்துள்ளன. 

(2) இவ்வாறே மக்கட் பெயரும் நூற்றுக்கு நூறு தமிழாகவே உள்ளன.  சில இடங்களில் திரிபு 40 சதவிகிதம் வரை இருக்கலாம். 

(3) எழுத்து முறையிலும் வட இந்திய பிரம்மி ஆனாலும் சரி, பின்னர் தோன்றிய நகரி முறை ஆனாலும் சரி இவையாவும் தமிழின் எழுத்து வகையில் இருந்து கிளைத்தனவே ஆகும்.

(4) சொற்கள் என்று வந்தால் யாவும் தமிழைச் சற்று திரித்தே தம் சொற்களை அமைத் துள்ளன.

(5) இலக்கண முறையும் தமிழ் இலக் கணத்தைச் சற்று மாற்றியோ, திரித்தோ அமைத் துள்ளன.

(6) சொற்றொடர் அமைப்பில் நூறு சதவிகித தமிழாகவே வடஇந்திய மொழிகள் உள்ளன.
நன்றி: முதற்சங்கு- - மார்ச் -  2011
-விடுதலை ஞா.ம.,7.5.11

ஞாயிறு, 22 மே, 2016

கம்பன் புலமையில் சிறந்தவனா?


கம்பராமாயண இன்சுவைப் பெரு நாவலரான சிதம்பர நாதர்க்கு கம்பர் கவிகளே இணையில்லா இன்பச் செல்வங் களாகும். அவைகளை அவர் கடவுளின் பமாகவே கண்டா ரென்றால் அது முழு உண்மையாகும். ஆனால், அதற்கு நேர் மாறாக நம் அடிகளோ, கம்பர் பாடல்கள் சிறந்த  நல்லிசைப் புலமையால் எழுந்தன அல்ல வென்றும்,
பண்டைத் தண்டமிழ்ச் சங்கப் பாடல்களோடு அப்பாடல் களை ஒப்பிட்டால் கம்பர் கவிகள் சிறந்து நில்லா என்றும், அவை பகுத்தறிவுக் கொவ்வாக் கதைகளால், ஆரவாரமான, ஏராளமான - பொருளற்ற -கற்பனைகளால் வரை துறையின்றி யாக்கப்பட்டவை என்றும், கம்பரைப் பின்பற்றி எழுந்த ஏனைய காவியங்களும் அவர் முறையைப் பின்பற்றி எழுந்த ஏனைய காவியங்களும் அவர் முறையைப் பின்பற்றிச் சிறப்பிழந்தன என்றும், பாட்டுப் பற்றிய பண்டைத் தமிழர் மரபே கம்பரால் புறக்கணிக்கப்பட்ட தென்றும் தமிழர் நாகரிக - இன உணர்வைத் தம் கதையால் கம்பர் கெடுத்து விட்டார் என்றும் கருதினார்.
கருதியது மட்டுமின்றித் தாமாக்கிய சாகுந்தல நாடக ஆராய்ச்சி என்ற திறனாய்வு நூலிலும், முற்கால பிற்காலத் தமிழ் புலவோர் என்ற நூலிலும், பிறநூல்களிலும் மேற்காட்டிய கருத்துகளைக் காட்டி கம்பர் ஓர் நல்லிசைப் புலவர் அல்லர் என்றும், அவர் கவிகள் அப்படி ஒன்றுஞ் சிறந்தன அல்ல என்றும் சான்றுகளுடன் எழுதியுள்ளார்.
அத்துடனில்லாது அடிகள் தமிழர் நாகரிக - சமய - இன உணர்வுக்கு மாறான கம்பராமாயணத்தை பயிலுதலும். அவைக்களங்களில் அதனை விரித்தெடுத்து ஓதிப்பரப்பு தலும், தவறென்று தம் சொற்பொழிவுகளிலும், எழுத்து களிலும் வெளியிட்டும், எழுதியும் வந்தார்.
சைவ, வைணவ, சமய நூல்களின் ஆசிரியர்களும், உரையா சிரியர்களில் எவரும் கம்பர் கவிகளைத் தமது நூல்களில் மேற்கோள்களாகக் கூட எடுத்தாளவில்லை என்றும் எழுதி யுள்ளார்.
அடிகள் சிவநெறியாளரானபடியால் அந்நெறிப் பற்றின் காரணமாக இவ்வாறு கம்பர் கவிகளைப் பழிக்கின்றார் என் றெண்ணுதல் பொருந்தாது.
சைவசமயத்தின் சிறந்த புராணங்களில் ஒன்றாகிய கந்த புராணத்தையே அடிகள் ஒப்பவில்லை. விநாயகரைப் பற்றிய கதைகளையும், ஏனைய பல தலபுராணங்களையும், அவற்றின் கதைகளையும் கருத்தில்லாப் பாடல்களையும் அடிகள் ஒப்பாது மறுத் தெழுதியும், பேசியும் உள்ளார்.
இதனை அடிகளின் “கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா” “பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம்” “சாகுந்தல நாடக ஆராய்ச்சி” “முற்காலப் பிற்காலத் தமிழ்ப் புலவோர்” என்றும் நூல்களிலும், அவற்றின் முன்னுரைகளிலும் விரிவாக காணலாம்.
“மறைமலை அடிகள் வரலாறு”
(மறைமலை அடிகள் மகன் வித்துவான் மறை
திருநாவுக்கரசு எழுதியது) (பக்கம் 661-642)
-விடுதலை,29.1.16

சனி, 21 மே, 2016

தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!


(துக்ளக் இதழில் சுதா சேஷய்யன் எழுதியதற்கு மறுப்பு)

- மஞ்சை வசந்தன்
தமிழரின் பண்பாட்டுச் சிறப்புகளை அழிப்பதிலும் திரிப்பதிலும் ஆரியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில் தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாள் என்பதை மாற்றி, சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்று திரித்து, சமஸ்கிருத பெயரைத் தமிழ் ஆண்டின் பெயர் என்று திணித்து, தமிழர் பண்பாட்டை அழிக்கின்றனர். 20.1.2016 ‘துக்ளக்’ இதழில் சுதா சேஷய்யன் என்ற அம்மையார், தன் ஆரிய இனப்பற்றின் உந்துதலால் சித்திரையே தமிழ்ப் புத்தாண்டு என்று சாதிக்க முயற்சிக்கிறார். வலுவான சான்று எதையும் காட்டாது வழக்கமாக ஆரியம் செய்யும் மோசடி வேலையையே இவரும் செய்கிறார். எனவே, அதை மறுத்து உண்மையை உணர்த்த கீழ்க்கண்டவற்றை தெரிவிக்க வேண்டியது கட்டாயமாகிறது.
தமிழர்கள் நாள், மாதம் ஆண்டுக் கணக் கீட்டை உலகுக்கு முதன்முதலில் இயற்கை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டுக் கொடுத்தவர்கள்.
காலையில் சூரியன் கிழக்கில் தோன்றி மீண்டும் கிழக்கில் தோன்ற ஆகும் காலம் ஒரு நாள். மாதம் என்பதற்குத் திங்கள் என்று ஒரு சொல் உண்டு. திங்கள் என்றால் நிலவு. நிலவை அடிப்படையாக வைத்துக் கணக்கிடப்படுவதால் திங்கள் என்ற பெயர் மாதத்திற்கு வந்தது.
முழுநிலவு தோன்றி மீண்டும் முழு நிலவு தோன்ற ஆகும் காலம் ஒரு மாதம்.
அதேபோல் ஆண்டு என்பது சூரியன் இருப்பை வைத்துத் தமிழர்களால் கணக்கிடப் பட்டது. சூரியன் தென்கோடி முனையிலிருந்து வடகோடி முனைக்குச் செல்ல ஆறு மாதம். அது மீண்டும் தென்கோடி முனைக்கு வர ஆறுமாதம். ஆக, தென்கோடி முனையில் தோன்றும் சூரியன் மீண்டும் தென்கோடி முனையை அடைய ஆகும் காலம் ஓர் ஆண்டு என்று கணக்கிட்டனர். (சூரியன் நிலை யாகவுள்ளது என்பது அறிவியல் உண்மை. ஆனால் பார்வைக்கு அது இடம் மாறுவதாய்த் தோன்றுவதை வைத்துக் கணக்கிட்டனர்.)
உலகில் முதன்முதலில் ஆண்டுக் கணக்கீட்டை சூரியன் இருப்பை வைத்துக் கணக்கிட்டவர்கள் தமிழர்கள். பின் இதனைப் பின்பற்றியே ஆங்கிலேயர்கள் ஆங்கில ஆண்டை அமைத்தனர்.
சூரியன் தென்கோடி முனையிலிருந்து வடக்கு நோக்கி நகரத் தொடங்கும் நாளே தமிழ் ஆண்டின் பிறப்பு. தமிழரின் புத்தாண்டு அன்றுதான். அந்த நாளே பெரும் பொங்கல் எனப்படும் சூரியத் திருநாள். ஆனால், இத்தகு வரலாற்றுச் சிறப்புக்குரிய இத்தமிழ்ப் புத்தாண்டை சித்திரை முதல்நாள் என்று மாற்றி, அதற்கு ஒரு புராணக் கதையை எழுதிச் சேர்த்து, தமிழ்ப் பண்பாட்டை ஒழித்து, ஆரியப் பண்பாட்டை, தமிழ்ப் புத்தாண்டிலும் புகுத்தினர்.
அதாவது, நாரதர் கிருஷ்ணனைப் பார்த்து, “நீர் அறுபதானாயிரம் கோபிகளுடன் கூடியிருக்கிறீரே, எனக்கு ஒரு கன்னியைத் தரக்கூடாதா’’ என்று கேட்டார். அதற்கு கண்ணன், “நான் இல்லாப் பெண்ணை உனக்கு உரியதாக்கிக் கொள்’’ என்று கூற, நாரதர் எல்லா வீடுகளிலும் சென்று பார்த்தபோது, கண்ணன் இல்லாத வீடு கிடைக்காததால், கண்ணன் மீதே காமங்கொண்டு, “நான் பெண்ணாய் மாறி உங்களைப் புணர வேண்டும்’’ என்ற தன் விருப்பத்தை வெளிப்படுத்த, “யமுனையில் குளித்துவிட்டு வாருங்கள்’’ என்று நாரதரைப் பார்த்து கண்ணன் கூற, யமுனையில் குளித்த நாரதர் அழகிய பெண்ணாக மாறினார். அந்த அழகில் மயங்கிய கண்ணன், பெண்ணாயிருந்த நாரதரை அறுபது ஆண்டுகள் புணர்ந்து, அறுபது பிள்ளைகளைப் பெற்றார். அவர்களே, பிரபவ தொடங்கி அட்சய முடிய அறுபது ஆண்டுகள் என்று ஆபாசமான அறுவறுப்பான ஒரு புராணக்கதையைச் சொல்லி, இவற்றைத் தமிழாண்டுகள் என்றனர். தமிழே இல்லாத இந்த அறுபது ஆண்டுகளைத் தமிழ் ஆண்டு என்று திணித்தனர்.
தமிழாண்டு என்றால் தமிழிலல்லவா ஆண்டுப் பெயர் இருக்கும். சமஸ்கிருதத்தில் உள்ள 60 ஆண்டும் எப்படித் தமிழாண்டாகும். சித்திரை தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்பது ஆரியர் பண்பாட்டின் திணிப்பு. தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்பதே தமிழரின் மரபு!
அடுத்து, அறிவியல் அடிப்படையில், வேளாண் விளைச்சலுக்கு முதன்மைக் காரணமாய் இருக்கும் சூரியனுக்கு நன்றி செலுத்தத் தமிழர்களால் உருவாக்கப்பட்ட இந்தப் பொங்கல் திருநாளை மகர சங்கராந்தி என்று மாற்றினர் ஆரியப் பார்ப்பனர்கள்.
“சூரியன் தனுசு இராசியில் சஞ்சரிக்கும் காலம். இது தேவர்களுக்கு விடியற்காலம். மகா சங்கிரமே சக்தி எனும் சக்தி தட்சிணாயணம் ஆறு மாதத்தில் மனிதனை மூதேவி உருவாயும், பசுக்களைப் புலி உருவாயும் வருத்தி வந்த நிலையில், அத்துன்பம் ஈஸ்வரானுக்கிரகத்தால் நீங்கியதனால், தை மாதம் முதல் நாள், அக்காலத்து விளைந்த பொருட்களைக் கொண்டு சூரியனை வழிபட்டனர். இதுவே மகர சங்கராந்தி என்று கூறி, பொங்கல் திருநாளை மகா சங்கராந்தி யென்று மாற்றினர்.
சூரியத் திருநாளை மகர சங்கராந்தி என்று மாற்றியதுபோல, மழைத் திருநாளை போகி என்று மாற்றினர்.
மழைத் திருநாள் போகிப் பண்டிகையாக்கப்பட்டது
தமிழர்களிடம் கடவுள் நம்பிக்கை தொன்மைக் காலத்தில் இல்லை. அவர்கள் தங்களுக்குப் பயன்படுகின்றவற்றை, தங்களுக்கு நன்மையும், பாதுகாப்பும் தருகின்றவற்றை மரியாதையின் பொருட்டும், நன்றி செலுத்தவும் வணங்கினர்.
அதனடிப்படையில் மனிதர்களின் இன்பத்திற்கும், இனப் பெருக்கத்திற்கும் காரணமாய் அமைந்த ஆண் பெண் உறுப் புகளை இணைத்து நன்றியும், மரியாதையும் செலுத்தினர். அதுவே பின்னாளில் ஆரியர்களின் திரிபு வேலையால், புராணம் புனையப்பட்டு, சிவலிங்க வழிபாடாக்கப்பட்டது.
அதேபோல் குலப் பெரியோர், வீரர், தலை சிறந்த பெண்டிர், நிலத் தலைவர் வழி பாடெல்லாம் அம்மன், முருகன், மாயோன், வருணன் வழிபாடுகளாக மாற்றப்பட்டன.
இதே அடிப்படையில் வேளாண் விளைவிற்குத் துணைநிற்கும் மழை, சூரியன், மாடு, உழைப்பாளிகளை மதிக்க, நன்றி சொல்ல தமிழர்கள் கொண்டாடிய அறிவிற்குகந்த, பண் பாட்டைப் பறைசாற்றும், நன்றி விழாவான பொங்கல் விழாவிலும் தங்கள் மூடக் கருத்துக்களை, சடங்குகளை, புராணங்களைப் புகுத்தினர்.
பொங்கல் என்பது அறுவடைத் திருவிழா. விளைவித்த விளைபொருள் களம் கண்ட மகிழ்வில், அந்த விளைவிற்குக் காரணமானவற்றை மதிக்கும் முகத்தான், முதலில் மழைக்கு நன்றி கூறினர். அது மழைத்திருநாள் ஆகும்.
மழை அன்றைய தினம் பொழியாது என்பதால், மழையின் அடையாளமாக ஒரு சொம்பில் தண்ணீர் வைத்து அதற்கு மரியாதைச் செலுத்தினர்.
ஆனால், ஆரிய பார்ப்பனர்கள் இந்த அர்த்த முள்ள விழாவில் தங்கள் பண்பாட்டை நுழைத்தனர். மழைக்கு அதிபதி இந்திரன். இந்திரனுக்கு போகி என்று ஒரு பெயர் உண்டு. எனவே, மழைக்குக் காரணமான இந்திரனைக் குறிக்கும் போகி என்ற பெயரை மழைத் திருநாளுக்கு மாற்றாக நுழைத்து, மழைத் திருநாளை போகிப் பண்டிகையாக்கினர்.
மழைக்கதிபதியாக இந்திரன் இருக்க, கரிய மாலை (திருமாலை), மழையின் பலன் பெற்றதற்காக வழிபட மக்களுக்குக் கட்டளையிட்டதால், வருணன் கோபம் கொண்டு பெரும் மழையை பெய்யச் செய்ய, இதனால் உயிரினங்கள் மழையால் பாதிக்கப்பட, கிருஷ்ணன் கோவர்த்தன மலையைக் குடையாய் பிடித்துக் காக்க, இந்திரன் தன் தோல்வியை ஒப்பி வெட்கிக் குனிந்து நிற்க, இந்திரனை மன்னித்து அவனுக்கும் சிறப்பு செய்ய, சங்கராந்திக்கு முதல் நாள் இந்திரன் என்ற போகிக்கு போகிப் பண்டிகை கொண்டாட கிருஷ்ணன் கட்டளையிட்டான். இதுவே போகி என்று புராணக் கதையைக் கூறி, மழைத் திருநாளை போகிப் பண்டிகையாக்கினர்.
போகி என்பதை காலப்போக்கில் போக்குதல் என்று பொருள் கொண்டு, வீட்டிலுள்ள பழைய பொருட்களைக் போக்குதல் என்று முடிவு செய்து, பழைய நூல்கள் உட்பட எல்லாவற்றையும் தெருவிலிட்டு தீ வைத்தனர். நாடு முழுவதும் ஒரே நேரத்தில் கொளுத்தப்படுவதால் காற்று மண்டலமே கரும்புகை மண்டலமாக மாறி, மூச்சுக் கோளாறுகளையும், மற்றக் கேடுகளையும் உருவாக்கி வருகிறது.
ஆக, ஆரிய பார்ப்பன பண்பாட்டுப் படை யெடுப்பால், அர்த்தமுள்ள மழைப் பண்டிகை, போகிப் பண்டிகையாக மாற்றப்பட்டு, புகைப் பண்டிகையாகி கேடு பயக்கிறது.
பொங்கல் திருநாள்:
பொங்கல் திருநாள், பெரும் பொங்கல் என்று தமிழர்களால் அழைக்கப்படும். இந்த நாள் தமிழரின் முதன்மையான திருநாளும் ஆகும். காரணம், அன்றுதான் தமிழ்ப் புத்தாண்டு தொடங்குகிறது. அன்று பயிர் விளைய அடிப்படைக் காரணியாய் உள்ள சூரியனுக்கு நன்றி செலுத்தினர்.
மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல்
வேளாண் உற்பத்திக்கு மழை, சூரியன் இவற் றிற்கு அடுத்தது மாடுகள் கட்டாயம்.
காரணம், ஏர் உழப் பயன்படுவதோடு, வேளாண் மைக்குத் தேவையான உரம் கிடைக்கவும் மாட்டுக் கழிவுகள் பயன்படுகிறது என்பதாலும், மாடுகள் உழவனின் தோழன் என்பதாலும், உழவனின் செல்வம் என்கிற சிறப்பாலும் மாடுகளுக்கு ஒரு திருநாள் கொண்டாடினர் தமிழர். இது பண்பாட்டின் அடிப்படையில் நன்றி செலுத்தும் நோக்கில், உதவியாய் அமைந்தவற்றிற்கு உரிய சிறப்பு செய்யும் உணர்வில் உருவாக்கப்பட்டது. மாட்டுப் பொங்கல் தமிழரின் நன்றி கூறும் பண்பாட்டின் அடையாளம்.
ஆனால், இதையும் புராணக் கதையைப் புகுத்தி புரட்டு வேலை செய்து மாற்றினர். இந்திரன் கோபத்தால் கடும் மழை பெய்யச் செய்ததால் மாடுகள் மிகவும் சிரமப்பட்டதாகவும், பின்னர் மனம் மாறி இந்திரன் மழையை நிற்கச் செய்ததால், மறுநாள் மாடுகள் கட்டு அவிழ்த்து விடப்பட மகிழ்ச்சியில் துள்ளிப் பாய்ந்து ஓடினவென்றும், அதுவே மாட்டுப் பொங்கல் ஆனது என்றும் மாட்டுப் பொங்கலின் மாண்பிலும் மடமையைப் புகுத்தினர். தமிழர் பண்பாட்டில் ஆரியப் பண்பாட்டைப் புகுத்தினர்.
காணும் பொங்கல்
அடுத்த நாள் கொண்டாடப்படும்  காணும் பொங்கல் என்பது வேளாண் உற்பத்திக்காக உழைக்கின்ற உழைப் பாளர்களுக்கு நன்றி சொல்லவும், அவர்களைச் சிறப்பிக்கவும் தமி ழர்களால் உருவாக்கப்பட்டு கொண் டாடப்படுவதாகும்.
அன்று உழைப்பாளிகள் நில உரிமை யாளர்களைச் சென்று கண்டு, நெல், காய்கறி, துணி போன்றவற்றைப் பெறுவர். நிலத்தின் உரிமையாளர்களும் உழைத்து உற்பத்திப் பெருக்கும் உழைப்பாளிகளை மகிழ்விக்க புத்தாடை, புதுப்பானை, புத்தரிசி, கரும்பு என்று பலதும் வழங்கிச் சிறப்பிப்பர்.
இப்படி உழைப்பாளிகளைச் சிறப்பிக்கத் தமிழர்கள் உருவாக்கிய உழைப்பாளிப் பொங்கல் என்னும் காணும் பொங்கலையும் புராணக் கதைப்புக் கூறி புரட்டினர்; தங்கள் பண்பாட்டைப் புகுத்தினர். கோபங் கொண்டு இந்திரன் பொழியச் செய்த பெருமழையால் பாதிக்கப்பட்ட மக்கள் மழை நின்ற பின் ஒருவரையொருவர் கண்டு பாதிப்பு பற்றி விசாரித்தனர். அதவே காணும் பொங்கல் என்று கதை கட்டி, காரணம் கூறினர். காணும் பொங்கலிலும் ஆரியப் பண்பாட்டை, புராண மடமையைப் புகுத்தினர்.
இந்த உண்மைகளை மறைத்து ஆரிய பார்ப்பனர்கள் தொடர்ந்து சித்திரை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு என்கின்றனர். சித்திரையில் சூரியன் தலைக்கு நேர் இருக்கும். ஆண்டு தொடங்கும்போது தலைக்கு நேர் இருந்து தொடங்க மாட்டார்கள். நாள் தொடங்கும்போது காலையில் சூரியன் கிழக்கில் உதிப்பதைத்தான் எடுத்துக் கொண்டனர். மாறாக, மதியம் தலைக்கு நேர் சூரியன் இருப்பதை எடுக்கவில்லை. அதேபோல் சூரியன் தென்கோடியிலிருந்து தை மாதம் முதல் நாள் வடக்குநோக்குவதைத்தான் ஆண்டின் தொடக்க மாகக் கொண்டனரே தவிர, சூரியன் தலைக்கு நேர் இருக்கும் சித்திரையை அல்ல.
தமிழர் பண்பாட்டை மாற்றி, மறைத்து, ஆரியப் பண்பாட்டைப் புகுத்துவதில் ஆரிய பார்ப்பனர்கள் எவ்வளவு முனைப் புடன் செயல்படுகிறார்கள் என்பதற்கு ‘துக்ளக்’ இதழும், சுதா சேஷய்யனும் சான்று. தமிழர்கள் இவர்களிடம் எச்சரிக் கையாய் இருக்க வேண்டும்!
-விடுதலை,18.1.16

தமிழும் வடஇந்திய மொழிகளும்


(சாத்தூர் சேகரன், 1.1.1998இல் பெரியார் வாசகர் வட்டத்தில்
ஆற்றிய உரைச்சுருக்கம்)

முன்னுரை:

இருதிங்கள் முன்பு (20.11.97) பேசியபோது, தமிழே தென்னிந்திய மொழிகளுக்கும், வட இந்திய மொழிகளுக்கும் தாயாக இருக்கிறது என்பதையும் தமிழின் திரிந்த மொழியே பிற திருவிட மொழிகளும் வடஇந்திய மொழிகளும் என்பதை சற்று சுட்டிக் காட்டியிருந்தேன்.
இன்றைய வரையில் குறிப்பாக நான்கு செய்திகளைக் கூற விழைகிறேன். 1) தமிழே வட இந்திய மொழிகளுக்கும் தாயாக இருக்கிறது 2) சமஸ்கிருதம் எந்த வகையிலும் இந்திய மொழிகளின் தாயாக இல்லை.
3) சமஸ்கிருதம் செய்யப்பட்ட மொழி என்பதால் தமிழின் பிற சொற்களை திரித்து, தன்சொல்லை உருவாக்கியுள்ளது. 4) இந்தியாவின் ஊர்ப்பெயர்கள் யாவும் தமிழாக உள்ளன; இவ்வாறே இந்தியாவின் மக்கட் பெயர்கள் யாவும் தமிழாக உள்ளன. இவற்றை ஒன்றொன்றாகப் பரிசீலித்து பார்ப்போம்.
1. தமிழே இந்திய மொழிகளின் தாய்
(அ) அடிப்படைச் சொற்கள் யாவும் தமிழாக உள்ளன. முகம் என்பது ‘முக்/முக’ என்று வடஇந்திய மொழிகளில் குறுகியுள்ளது. மூக்கின் மற்றொரு பெயரான நாசி என்பது ‘நாக்’ என மாறியுள்ளன. மூளை ‘முகுள’ எனத் திரிந்துள்ளது. கழுத்து, ழகரம் வட இந்திய மொழிகளில் இல்லாத காரணத்தால், அச்சொல் கள்ளம், கல்லா எனத் திரிந்துள்ளது. கண், ஆங்கண் என மருவி ஆங்க் என்றாகியுள்ளது.
செவி, காது என்பதன் பிரிதொரு வடிவமான கண் (கன்னத்தின் அருகில் இருப்பது என்ற பொருளில் உண்டான தமிழ்ச்சொல்) என்பது கான் என்றும் கர்ண என்றும் திரிந்துள்ளது. உடம்பின் மறுசொல்லான பொதி - பதன் என்று சில மொழிகளிலும், பாடி என்று ஆங்கிலத்திலும் உள்ளது என்பதை  நினைக்கும்பொழுது தமிழின் வீரியத்தையும் எங்கும் பரந்த தன்மையும் உய்த்துணரலாம்.
வீறு என்ற வல்லின ஒலிப்பில் பிறந்த சொல், வீர என்று மாறி இந்திய மொழிகளில் எல்லாம் வீரன், வீரப்பன், வீராச்சாமி, வீரு, வீரா, வீரியம் என்று மாறியுள்ளன. வல்லமை என்ற சொல்லையும் வலிமை, வலிவு என்ற சொற்களையும் மாற்றி வல்லபன் பல்லவ் என்று வட இந்திய மொழிகள் கையாளுகின்றன.
தீரம் என்ற சொல்லில் இருந்து பிறந்த தீரன் வடஇந்திய மொழிகளில் தீரன் என்று வருவதுடன், தீர, தீர் என்றும் வந்து ஆண்மையைச் சுட்டுகின்றன. போரை விழையும் ஆண்மகன் புருஷனாக்கப்பட்டான். இது பின்னர் கணவன் என்ற பொருளையும் தந்தது. சில ஐரோப்பிய மொழிகள் person என்று வந்து வீரத்தையும் குறிக்காமல், கணவன் என்ற பொருளையும் குறிக்காமல் ஒரு சாதாரண ஆணைக் குறிக்கத் தொடங்கி விட்டது.
நெய் என்ற சொல் நெருக்கத்தைக் குறிக்க வந்தது. நேயம் என்ற சொல்லை உருவாக்கியது. ய=வ=க=ச என்பதால், இது நேசம் என்று இந்திய மொழிகளில் உள்ளது. இவ்வாறே பிரியாத நட்பு அல்லது காதல் என்ற கருத்தில் பிரியா + அம் என்ற கூட்டு உருவாகிப் பின் பிரியம் என வந்துள்ளது. முற்காலத்தில் சூரியனை அடிப்படையாகவும் நிலவை அடிப்படையாகவும் கொண்டு காலத்தைக் கணித்தார்கள். நிலவின் பலப்பெயர்களும் ஒன்று பிறை. இச் சொல்லில் இருந்தே பிராயம் தோன்றியது.
ழகரம் பிறமொழிகளில் இல்லாததால் பல சொற்திரிபு ஏற்பட்டன. தோழமை தோஸ்தி ஆயிற்று. முழுத்தம் (முழுவடிவ சிலை) மூர்த்தி என்றாயிற்று. பழம் பலம் ஆகியது; பல் ஆகியது.
சகரம் ககரமாதல்: சீர்த்தி - கீர்த்தி ஆகிறது. செம்பு கெம்பு ஆகிறது. சரி (Yes- ஆம்) சில மொழிகளில் கரி ஆகிறது. (மராத்தி; இலத்தீன் & ஆங்கிலம்: correct)
லகரம் ரகரம் ஆதல்: ஆலாத்தி - ஆராத்தி ஆகி வடஇந்திய மொழிகளில் ஆர்த்தி ஆகி விட்டது. ஆலம் = வட்டம். எனவே ஆலமரம் வட்டமரமாகி, வடமரமாகி விட்டது.
காரணவிதி:
காரண விதிகளைக் கொண்டு தமிழ் வேர்சொற்களை ஆராய்வது போல் பிறமொழிகளை ஆராய முடியாது. ஏனெனில் அவற்றிற்கு வேர்ச் சொல் கிடையாது. எல்லாச் சொற்களும் தமிழ்ச் சொற்களின் திரிபே ஆகும்.
ஒருவகை மலை யாட்டின் பெயர் வருடை, ஆண்டுக்கு ஒரு குட்டி மட்டுமே போடும். இதன் காரணமாக ஆண்டிற்கு வருட என்ற பெயர் ஏற்பட்டு இன்று வருஷ ஆகி விட்டது. வருடை, ஆடை, ஆடு என்றனர். இதுவும் வருடத்தின் பெயராக ஆடு (ஆட்டை/யாட்டை) என்றாகியது. பின்னர் மூக்கொலிபெற்று ஆண்டு ஆயிற்று. அய்ரோப்பிய மொழிகளில் அன்னம் அன்யூவல் என்று மாறலாயிற்று.
புணர்ச்சியால் பல:
சொற்கூட்டுகளால் சேதாரம் அதிகமாகிப்பல ஆயிரம் சொற்கள் தமிழில் இருந்து வட இந்திய மொழிகளுக்கும் உலக மொழிகளுக்கும் சென்றுள்ளன.
முதல் + தனம் என்பதே மூலதனம் ஆகியது. கணவனை இழந்து விட்ட +அவ்வை (பெண்) என்ற சொல்லே விதவை என்று இந்திய மொழிகளில் மாறிட (widow) வீடோ என்று சில அய்ரோப்பிய மொழிகளில் மாறியுள்ளது.
அறியாமை முறைகள்
தமிழில் முறையான வேரும் சொல்லும் இருக்கச் சில மொழிகளில் ஆகுபெயராக ஏதேனும் சிறிய காரணத்தையுடைய தமிழ்ச்சொல்லையே மூலச் சொல்லாகக் கொள்கின்றனர். கடல் நீர் உவர்ப்பாக உவரி என்ற பெயர் பெயர் பெற்றது.
உவர்ப்பு என்ற சொல் திரிந்தே உப்பு என்ற சொல் பிறந்தது. உப்பு அளத்துமூலம் (பாத்திகட்டுதல்) எடுப்பதால் கிளை மொழிகளில் அளம் என்றாலே உப்பு ஆயிற்று. சில மொழிகளில் அளதி, அலம் என்றெல்லாம் திரிய, சில அய்ரோப்பிய மொழிகளில் s+அளத் (Salt) என்று திரியவும் இடம் ஏற்பட்டது. இவ்வாறு தமிழில் இருந்தே பல்வேறு முறைகளில் தான் வட இந்திய மொழிகள் உருவாயின.
சமஸ்கிருதம் தாய்மொழி அல்ல:
சமஸ்கிருதத்தின் தோற்றம் வளர்ச்சி யாவுமே செயற்கையானது. வாரப்பெயர், மாதப் பெயர், தாவரப் பெயர், விலங்குப் பெயர், பறவைப் பெயர், ஏன் உறவுப் பெயர், உடற்கூறுப் பெயர் இன்ன பிறவும் தமிழ்ச்சொற்களைத் திரித்தே அமைக்கப் பட்டுள்ளன.
எடுத்துக்காட்டாக புதன் இந்திய மொழிகளில் இருக்க, பௌமிய என்று சமஸ் கிருதத்தில் உள்ளது; சனிக்கிழமையை அது சௌம்மிய என்கிறது. பின் ஏன் இவை தமிழல்ல என்று ஒதுக்க வேண்டும்?
ஊர்பெயர்:
இந்தியாவின் அத்தனை பெயர்களும் தமிழா கவே உள்ளன. சீர்நகரம் - ஸ்ரீநகர் ஆயிற்று. கன்னி+குமரி என்பதே கன்னியாகுமரி ஆயிற்று.
மக்கட் பெயர்:
இந்திய மக்கட்பெயர் பற்றி விரிவான ஆய்வு, முறையாக இதுகாறும் செய்யப்படவில்லை. பெயர் களைப் பகுத்து ஆராய்ந்தால் அத்தனையும் தமிழே எனலாம்.
முடிவுரை: விரிவான ஆராய்ச்சி நூலை இந்த ஆண்டே வெளியிட இருக்கிறேன். ஒவ்வொரு விதிக்கும் அய்ம்பதுக்கும் மேற்பட்ட எடுத்துக்காட்டு களைக் கூற இருக்கிறேன்.
எனவே அடுத்த பத்தாண்டுகளுக்குள் ஆராய் வோருக்கு எனது நூல் கையேடாக இருக்கும். விரைவில் தமிழ் தான் இந்தியமொழிகளில் தாய் என நிறுவப்படும். இனி எந்தச் சொல்லையும் தமிழல்ல என்று கூறாமல் ஆராய்ந்து பார்க்க வேண்டுகிறேன்.
-விடுதலை,14.5.16

தமிழர் விழாவிலும் மதச்சாயம்!


கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)

ஆரியப் புராணங்களில் அநேகம் முத்தமிழ் கலை இலக் கியம் ஆகியவைகளுக்குள் புகுந்து நமக்குச் செய்திருக்கும் கேட்டை ஒழிக்க.. மானத்தில் கவலையுள்ள நாம் எதை பலி கொடுத்தாவது இந்த நிலையை மாற்றியாக வேண்டும்; அடியோடு ஒழித்தும் ஆக வேண்டும்.
ஏனெனில், இப்படிப்பட்ட முன்னேற்றமான காலத்திலும் கூட தமிழர்கள் மனிதத்தன்மை பெறாததற்கும், அதைப்பற்றி சரியான கவலை கொள்ளாததற்கும் இந்தப் புராண இதிகாசக் கதைகளின் உண்மை அறியாத மூடநம்பிக்கையே முதற் காரணம்.
கலையின் மூலம் புகுத்தப்பட்ட இந்த மூடநம்பிக்கைகளே தான் தமிழர்களாகிய நமக்கு மதமாகவும், பக்தியாகவும், கடவுளாகவும் இருப்பதோடு மாத்திரமல்லாமல், இவைகளே கலையாகவும், நாடகமாகவும், சங்கீதமாகவும், சினிமாவாகவும், இலக்கியங் களாகவும், மக்களை மேன்மையாகவும், கீழ்மை யாகவும் கருதவும், வாழ்க்கை நடப்பதற்கு நீதியாகவும், உப மான உபமேயமாக எடுத்துச் சொல்லுவதற்கு ஆதாரமாகவும் இருக்கின்றன.
அன்றியும் அறிவாளிகள், கவிகள், பண்டிதர்கள், மேதாவிகள், மகாத்மாக்கள், மகான்கள் என்பவர்களுக்கும் அவர்களது வாழ்வுக்கும், மேன்மைக்கும், விளம்பரத்துக்கும் மூலப் பொருள் பொக்கிஷங்களாகவும் இவைகளே இருக்கின்றன.
ஆதலால் மொழி, சமுதாயம் ஆகிய துறை-களிலும், அறிவு, கலை, இலக்கியம், சமயம் முதலாகிய துறைகளிலும், நம் மக்களுக்கு இன்று இருந்துவரும் இழிவுகள் ஒழிந்து மேன்மைகள் ஏற்பட வேண்டும் என்று உண்மையாய் கருதுகிறவர்கள் இதுபோன்ற பெருத்ததொரு புரட்சிகரமான முயற்சிகள் செய்ய வேண்டும்.
உண்மையாகச் சொல்லுகிறேன், வடமொழி சாஸ்திர புராண இதிகாசங்கள் (தமிழர்களாலேயே ஆனவை களானாலும்) அவை எந்த ரூபத்தில் நுழைக்கப்பட்டு இருந்தாலும், அல்லது தானாகவே நுழைந்திருந்தாலும் அவை அடியோடு ஒழிக்கப்பட்டால் ஒழிய, தமிழன் மனித உரிமையோடும் மானத்தோடும் வாழ்ந்து சமநிலை அடைய முடியவே முடியாது என்பதை உணருங்கள்.
மற்றும், அவை வடமொழியில் இருப்பதைவிட தமிழில் இருப்பவைகளே நமக்கு மிகுதியும் கேடு செய்யக் கூடியவையாகும். அன்றியும் அவை வெறும் கதை, காவியம் புராணம் ஆகிய உருவில் இருப்பவைகளைவிட கலை உருவில் இருப்பதும்; இலக்கியம், நாடகம், இசை (சங்கீதம்) ஆகியவற்றின் உருவில் இருப்பதும் மிக மிகக் கேடு செய்பவையாகும் என்பதே எனது அறிவுக்கு ஆராய்ச்சிக்கும் எட்டிய முடிந்த முடிவாகும்.
எப்படியாவது அந்தப் புராண, இதிகாச, தேவார, பிரபந்தம் ஆகியவை கூறும் இராமன், கிருஷ்ணன், சிவன், சுப்பிர மணியன், ஷண்முகன், காளி, கவுரி முதலிய கடவுள்களையும் அவர்களைப்பற்றிய கலை, இலக்கியம், நாடகம், சினிமா, சங்கீதம், பஜனைப் பாட்டுகள் முதலானவைகளையும் அடியோடு ஒழிக்க வேண்டியதே நமது முக்கியமும் முதன் மையும் ஆன கடமையாகும் என்று உறுதி கொள்ளுங்கள்.
இந்தக் காரியங்களில் சமய, புராண, இதிகாச பண்டிதர் களையும் சமயாச்சாரிகளையும், கலை வாணர்களையும் துச்சமாகக் கருதுங்கள்.
உங்கள் மனோவேகம் கொண்ட மட்டும் அவர்களை வெறுத்துத் தள்ளுங்கள்.
இவர்களை, ஆரியர்களைவிட மோசமான உங்கள் விரோதிகளாகக் கருதுங்கள்.
29.1.1944 “குடிஅரசு” தலையங்கத்தில் தந்தை பெரியார் அவர்கள் இவ்வாறு எழுதியுள்ளார்.
தமிழர்களின் வீழ்ச்சிக்கு கலைகளும், புராண, இதிகாசங்களும், இலக்கியங்களும், பண்டிகைகளும் எந்த வகையில் காரணமாக இருந்தன என்பதை தந்தை பெரியார் அவர்கள் ஆழமான அறிவியல் சிந்தனையோடும், எடுத்துக்காட்டுகளுடனும் இவ்வாறு விளக்கியிருக்கிறார்கள்.
அறிவுக்கும், மான உணர்ச்சிக்கும் பயன்படாததோடு மட்டுமல்ல, அவற்றிற்கு விரோதமாகவும் இவை பயன்படு மானால், மானமும், அறிவும் உள்ள எந்த மக்கள்தான் ஏற்றுக்கொள்வார்கள்?
இந்தக் கண்ணோட்டத் தோடு நம் மீது திணிக்கப் பட்டுள்ள இதிகாச புராண வகையறாக்களையும் மதப் பண்டிகைகளையும் பார்ப்பது தான் நமக்கு மானமும், அறிவும் இருக்கின்றன என்ப தற்கு அடையாளமாகும்.
கம்பராமாயணத்தையும், பெரிய புராணத்தையும் தீ மூட்டவேண்டும் என்று அறிஞர் அண்ணா, டாக்டர் சேதுபிள்ளையோடும், நாவலர் சோமசுந்தர பாரதியாரோடும் விவாதப் போர் புரிந்ததும் இந்த அடிப்படையில்தான்.
இலக்கிய நயத்துக்காகவாவது இவற்றை ஏற்றுக்கொள்ளக் கூடாதா என்று வினா எழுப்பியது கூட உண்டு.
அதற்குத் தந்தை பெரியார் அவர்கள் அருமையான முறையில் விடையிறுத்தார்கள்.
‘நான் கலையுணர்ச்சியையும், தமிழ் உணர்ச்சியையும் வேண்டாம் என்று கூறவில்லை. தங்கக் கிண்ணத்தில் அமேத்தியம் (மலம்) இருந்தால், தங்கக் கிண்ணம் என்பதற்காக அமேத்தியத்தைப் புசிக்க முடியுமா? அதுபோல கம்பராமாயணப் பாட்டுகள் சிறந்தவைதான். அவற்றில் உள்ள மூட நம்பிக்கைக்கும், தமிழர் இழிவுக்கும், ஆரியர் உயர்வுக்கும் ஆதாரமானவற்றை வைத்துக்கொண்டு எப்படி அவற்றைப் பாராட்ட முடியும்? என்று தந்தை பெரியார் கூறியிருக்கிறார்.
இசைக் கலையை எடுதுகதுக்கொண்டால்கூட தந்தை பெரியார் தமிழிசைக்காக அரும்பாடுபட்டார்கள். சுயமரியாதை இயக்க மாநாடுகளோடு தமிழிசை மாநாட்டுக்கு ஏற்பாடு செய்து அதில் தேர்ச்சி பெற்ற தமிழர்களையெல்லாம் அழைத்து தமிழ்ப்பாடல்களைப் பாடச் செய்ததும் உண்டு.
1930 மே 10,11 ஆகிய நாள்களில் ஈரோட்டில் இரண்டாவது சுயமரியாதை மாநாடு தந்தை பெரியாரால் கூட்டப்பட்டது. அதையொட்டி, மே 12, 13 (1930) நாள்களில் தமிழ் மாகாண சங்கீத மாநாடு கூட்டப்பட்டது. அம்மாநாட்டில் தந்தை பெரியார் வெளிப்படுத்திய கருத்து சுயமரியாதை விரும்பும் ஒவ்வொரு இனத்துக்கும் பொருந்தக்கூடியதாகும்.
“சங்கீதக் கலையிலும் நம்மவர்களுக்குச் சுயமரியாதை உணர்ச்சி ஏற்படவேண்டுமென்று அந்தக் கலைகளை உடைய நம்மவர்கள் எந்தக் காரணத்தினாலும் தங்களுடைய சுயமரியாதையை இழக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். சங்கீத வித்தையிலும் நம்மவர்களுடைய சுயமரியாதை குறைக்கப்பட்டு இருப்பதனால் அதை நம்மவர்கள் தேடிக்கொள்ளவேண்டியது மிகவும் அவசிய மாகும். அதற்காகவே இந்தக் கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது” என்று தந்தை பெரியார் கூறியுள்ளதை எந்த நிலையிலும் தமிழர்கள் மறந்துவிடக் கூடாது.
தமிழ்நாட்டில் இசைக் கச்சேரிகளில் கலைஞர்கள் தமிழிலேயே பாடவேண்டும் என்ற உணர்ச்சி வலுத்து, தமிழில் பாடும் ஓர் நிலை உருவாக்கப்பட்டது வரவேற்கத்தக்கது என்பதில் அய்யமில்லை.
ஆனால், அதோடு தமிழர்கள் திருப்திபட்டுவிட முடியுமா என்றால், நிச்சயம் முடியாது.
பாடுபொருள் என்ன என்பதுதான் முக்கியம். வெறும் தமிழிசை என்று கண்மூடித்தனமாக வரவேற்றுவிடக் கூடாது என்பதிலே தெளிவாக தந்தை பெரியார் இருந்தார். என்ன காரணத்துக்காக இலக்கியச் சுவை ததும்பியிருந்தாலும், கம்பராமாயணத்தைக் கொளுத்தவேண்டும் என்று கூறி வந்தோமோ, அதே காரணம் தமிழிசைக்கும் பொருந்தும் தானே?
இதுபற்றியும் தந்தை பெரியார் அழுத்தமாகவும், கோபாவேசத்தோடும் பேசியிருக்கிறார்.
அது இதோ:
சென்னைத் தமிழ் இசை மாநாட்டில் இசைவாணர் தியாகராஜ பாகவதர் பாடினார். அவற்றுள் மாதிரிக்கு இரண்டு பாட்டுகளின் தன்மையைப் பாருங்கள்.
ஒரு பாட்டு:
(ராகம்: ஷண்முகப்பிரியா)
பல்லவி
பார்வதி நாயகனே பரமசிவா கருணாகர சம்போ
அனுபல்லவி
சர்வ பௌமனே சங்கரனே கைலாசவாசனேசந்திரசேகரா
என்பதாகும்,
மற்றொரு பாட்டு.
(ராகம்: லதாங்கி)
பல்லவி
ஸ்ரீஜகதாம்பிகையே தீனதயாபரி சங்கரி
அனுபல்லவி
ஒ ஜனநி நீயே அபயம் சாணுன் உபய சரணம் என்பதாகும்.
இப்படியே தான் அங்கு நடந்த 100க்கு 97 பாட்டுகளும் இருந்தன. இந்தப் பாட்டுகளை தெலுங்கிலோ, சமஸ்கிருதத் திலோ, இந்தியிலோ, அல்லது ஜப்பான், ஜெர்மனி மொழியிலோ பாடி, இருந்தால் என்ன குடிமுழுகிப் போய் இருக்கும்?
இந்த மாதிரி பாட்டுகள் பாடச் செய்வதற்கு ஆகவா இருகோடீஸ்வரர்கள் கூடி, உலகத்தைத் திரட்டி பல பதினாயிரக்கணக்கான ரூபாய்கள், பல அறிஞர்களின் அருமையான நேரங்கள், ஊக்கங்கள், செலவழித்து என்றும் கண்டிராத ஓர் உயர்ந்த திருவிழா இராப்பத்து பகல் பத்து போல் நடத்துவது என்பதையும் யோசித்துப் பார்க்க வேண்டுகிறோம்.
இதுதான் தமிழிசைக் கிளர்ச்சி என்றால் இதற்கு (ஐகோர்ட் ஜட்ஜுகள் முதல் அய்.சி.எஸ். கலெக்டர்கள்)  இத்தனை பெரியவர்கள் விரோதம் தான் இப்பெரியார்களுக்கும் தமிழ் இசை கிளர்ச்சி இயக்கத்திற்கும் எதற்கு ஏற்பட வேண்டும் என்று யோசித்தால் இது ஒரு பைத்தியக்காரத்தனமான வேலை என்றே தோன்றும்.
(“குடி அரசு” 29.1.1944, தலையங்கம்)
என்று தந்தை பெரியார் அவர்கள் எழுதியுள்ளார்.
நாடகக் கலையிலும் தந்தை பெரியாருக்கு இதே கண் ணோட்டம். கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களைப் பக்கத்தில் வைத்துக்கொண்டே தன் கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார் தந்தை பெரியார்.
நாம் கொண்டாடும் பண்டிகைகளின் தன்மைகளும் இந்நிலையில்தான் உள்ளன.
பெரும்பாலான பண்டிகைகளின் கதைகள் எல்லாம் தேவர்கள், அசுரர்களை அழித்து ஒழித்தார்கள் என்பதை மய்யப் பொருளைக் கொண்டதாகவே இருக்கும்.
பிரபலமாகக் கொண்டாடப்படும் தீபாவளியை எடுத்துக் கொண்டாலும் இதே நிலைதான்.
தேவர்கள் என்று சொல்லப்படுவோர் எல்லாம் ஆரியப் பார்ப்பனர்கள்தான் என்பதும், அசுரர்கள், அரக்கர்கள், ராட்சதர்கள் என்று சொல்லப்படுவோர் எல்லாம் அவர்களை எதிர்த்த திராவிடர்கள் என்றும், வரலாற்றுப் பேராசிரியர்கள் ஆதாரத்துடன் எழுதியுள்ளனர். (அண்ணாவின் ‘ஆரிய மாயை’ நூலிலும் விரிவாகக் காணலாம்)
தீபாவளியைக் கொண்டாடக் கூடது என்று திராவிட இயக்கம் முழக்கம் கொடுத்ததும் திராவிட இனத்தின் தன் மானங் கருதித்தான்.
தீபாவளி கொண்டாடாத தீரர்கள் பட்டியலை “விடுதலை”ஏடு வெளியிட்டதுண்டு.
தைத் திங்கள் முதல் நாள் வரும் பொங்கல்தான் தமிழர்களின் திருநாள்- தைமுதல் நாள்தான் தமிழர் புத்தாண்டு என்பதை திராவிட இயக்கம் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டு வருகிறது.
பொங்கல் விழாவை புதுப்பொலிவுடன், தமிழர் பண்பாட்டு மறுமலர்ச்சிக் கண்ணோட்டத்தோடு புதுத் திருப்பத்தைக் கொடுத்ததும் நம் இயக்கம்தான். இதன்மூலம் தீபாவளிக்கு என்று இருந்த மகிமை இருளில் தள்ளப்பட்டது.
உலகம் பூராவும் அறுவடைத் திருவிழாக்கள் கொண்டாடப் படுவதுண்டு. அதுபோன்ற தமிழினத்தின் தனிப்பெரும் விழா பொங்கலாகும்.
இதிலும் கூடப்பார்ப்பனர்கள் தங்களுக்கே உரித்தான புராண சரக்குகளை வேண்டிய மட்டும் திணித்துள்ளனர்.
தந்தை பெரியார் இதுகுறித்தும் ஆழமான கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்கள். அதனையும் இந்த இடத்தில் எடுத்துக்காட்டுவது பொருத்தமாக இருக்கும்.
ஒரு பொங்கல் நாளில் (“விடுதலை, 13.11970) தந்தை பெரியார் எழுதியுள்ள அந்தக் கருத்து தமிழர்களின் சிந்தனைக்கு இங்குத் தரப்படுகிறது.
பொங்கல் பண்டிகை என்பது நாள், நட்சத்திரம், மதக் கதை ஆதாரம் முதலியவை எதுவுமே இல்லாமல், தை மாதம் ஒன்றாம் தேதி என்பதாகத் தை மாதத்தையும், முதல் தேதியையும் ஆதாரமாகக் கொண்டதாகும்.
இதற்கு எந்தவிதமான கதையும் கிடையாது. இந்தப் பண்டிகை உலகில் எந்தப்பாகத்திற்கும், எந்த மக்களுக்கும் உரிமையுள்ள பண்டிகையாகும். என்றாலும், மற்ற இடங்களில் மற்ற மக்களால் பல மாதங்களில் பல தேதிகளில் பல பேர்களால் கொண்டாடப்படுவதாகும்.
அறுவடைப் பண்டிகை:
இக்கொண்டாட்டத்தின் தத்துவம் என்னவென்றால், விவசாயத்தை (வேளாண்மையை) அடிப்படையாகக் கொண்டு அறுவடைப்பண்டிகையென்று சொல்லப்படு வதாகும். ஆங்கிலத்தில் ஹார்வெஸ்ட் ஃபெஸ்டிவல் என்று சொல்லப்படுவதன் கருத்தும் இதுதான். என்றாலும், பார்ப்பனர் இதை மத சம்பந்தம் ஆக்குவதற்காக விவசாயம், வேளாண்மை, அறுவடை ஆகிய கருத்தையே அடிப்படை யாகக் கொண்டு இதற்கு இந்திரன் பண்டிகை என்றும், அதற்குக் காரணம் வேளாண்மைக்கு முக்கிய ஆதாரமான நீரை (மழையை)ப் பொழிகிறவன் இந்திரன் ஆதலால், இந்திரனைக் குறிப்பாய் வைத்து விவசாயத்தில் விளைந்து வெள்ளாண்மையாகியதைப் பொங்கி (சமைத்து) மழைக் கடவுளாகிய இந்திரனுக்கு வைத்து படைத்து பூசிப்பது என்றும் கதை கட்டிவிட்டார்கள்.
இந்தக் கதையை இவ்வளவோடு விட்டுவிடவில்லை.
இம்மாதிரியான இந்திர விழாபற்றி, கிருஷ்ணன் பொறாமைப்பட்டுத் தனக்கும் அந்த விழாவை (பூசையை) நடத்தவேண்டுமென்று மக்களுக்குக் கட்டளை இட்டதாகவும், மக்கள் அதன்படிச் செய்ததாகவும், இந்த இந்திர விழா கிருஷ்ணமூர்த்தி விழாவாக மாறியது கண்ட இந்திரன் கோபித்து ஆத்திரப்பட்டு, இந்த கிருஷ்ணமூர்த்தி விழா ஈடேறாமல் நடைபெறாமல் போகும் பொருட்டு பெரிய மழையை உண்டாக்கி விழாக் கொண்டாடுவோர் வெள்ளாண்மைக்கு ஆதரவாக இருந்த கால்நடைகள், ஆடு, மாடுகள் அழியும் வண்ணமாகப் பெரும் மழையாகப் பெய்யச் செய்துவிட்டான் என்றும், இதற்கு ஆளான மக்கள் கிருஷ்ணமூர்த்தியிடம் சென்று முறையிட்டதாகவும், கிருஷ்ணன் மக்களையும், ஆடு, மாடுகளையும் காக்க ஒரு பெரிய மலை (கோவர்த்தனகிரி)யைத் தூக்கி அதை தன் சுண்டு விரலால் தாங்கிப் பிடித்துக் காத்ததாகவும், இதனால் இந்திரன் வெட்கமடைந்து கிருஷ்ணனிடம் தஞ்சமடைந்து தனது மரியாதையைக் காப்பாற்ற வேண்டுமென்று கேட்டுக் கொண்டதாகவும், அதற்கிரங்கி, கிருஷ்ணன், எனக்கு ஒருநாள் பண்டிகை, உனக்கு ஒருநாள் பண்டிகையாக, மக்கள் முதல் நாள் எனக்காக பொங்கல் பண்டிகையாகவும் அதற்கு மறுநாள் உனக்காக மாட்டுப் பொங்கல் என்று கொண்டாடும்படியும் ராஜி செய்து கொண்டார்கள் என்றும் சிரிப்பிற்கிடமான - ஆபாச முட்டாள்தனமான கதைகளைக் கட்டிப் பொருத்தி விட்டார்கள்.
இதிலிருந்து தேவர்களுக்கு அரசனான, இந்திரனின் யோக்யதை எப்படிப்பட்டது? மக்களுக்குக் கடவுளான கிருஷ்ணனின் யோக்கியதை எப்படிப் பட்டது என்பதை மக்கள் சிந்தித்து உணரவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். மற்றும் இதில் பொங்கலுக்கு முதல் நாளைக்கு ஒரு கதையையும், மறுநாளுக்கு ஒரு கதையையும் போகிப் பண்டிகை என்றும், சங்கராந்திப் பண்டிகையென்றும் பெயர் வைத்து மூன்று நாள் பண்டிகையாக்கி அதில் ஏராளமான முட்டாள்தனத்தையும் மூடநம்பிக்கையும் புகுத்திவிட்டார்கள். என்று தந்தை பெரியார் குறிப்பிட்டுள்ளார்.
தமிழர் வாழ்வில் தொடுக்கப்பட்ட ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பை முறியடித்து, தமிழர் விழாவாம் பொங்கல் புத்தாண்டை பகுத்தறிவுடன் முன்னிறுத்தி, தமிழ்ப் புத்தாண்டு என்று தைத்திங்கள் முதல்நாளை அரசு ரீதியாக அறிவிக்கச் செய்து தமிழ் - தமிழர் - தமிழர் பண்பாடு இவற்றை காலத்திற்கேற்ப வலிவுடன், பொலிவுடன் முன்னிறுத்திட உறுதி கொள்வோமாக!
- கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம்
-விடுதலை,14.1.16

திங்கள், 16 மே, 2016

தமிழர் தலைவர் பார்வையில்...

பெரும்பாலான பண்டிகைகளின் கதைகள் எல்லாம் தேவர்கள், அசுரர் களை அழித்து ஒழித் தார்கள் என்பதை மய்யப் பொருளைக் கொண்ட தாகவே இருக்கும்.
பிரபலமாகக் கொண் டாடப்படும் தீபாவளியை எடுத்துக் கொண்டாலும் இதே நிலைதான்.
தேவர்கள் என்று சொல் லப்படுவோர் எல்லாம் ஆரியப் பார்ப் பனர்கள்தான் என்பதும், அசுரர்கள், அரக்கர்கள், ராட்சதர்கள் என்று சொல் லப்படுவோர் எல்லாம் அவர்களை எதிர்த்த திராவிடர்கள் என்றும், வர லாற்றுப் பேராசிரியர்கள் ஆதாரத்துடன் எழுதியுள்ளனர். (அண்ணாவின் ஆரிய மாயை நூலிலும் விரிவாகக் காணலாம்)
தீபாவளியைக் கொண்டாடக் கூடாது என்று திராவிட இயக்கம் முழக்கம் கொடுத்ததும் திராவிட இனத்தின் தன்மானங் கருதித்தான்.
தீபாவளி கொண்டாடாத தீரர்கள் பட்டியலை விடுதலை ஏடு வெளி யிட்டதுண்டு.
தைத் திங்கள் முதல் நாள் வரும் பொங்கல்தான் தமிழர்களின் திருநாள் - தை முதல் நாள்தான் தமிழர் புத்தாண்டு என்பதை திராவிட இயக்கம் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டு வருகிறது.
பொங்கல் விழாவை புதுப்பொலி வுடன், தமிழர் பண்பாடு மறுமலர்ச்சிக் கண்ணோட்டத்தோடு புதுத் திருப் பத்தைக்  கொடுத்ததும் நம் இயக்கம் தான். இதன் மூலம் தீபாவளிக்கு என்று இருந்த மகிமை இருளில் தள்ளப் பட்டது.
உலகம் பூராவும் அறுவடைத் திரு விழாக்கள் கொண்டாடப்படுவதுண்டு. அதுபோன்ற தமிழினத்தின் தனிப் பெரும் விழா பொங்கலாகும்.
இதிலும்கூடப் பார்ப்பனர்கள் தங்களுக்கே உரித்தான புராண சரக்கு களை வேண்டிய மட்டும் திணித் துள்ளனர். தந்தைபெரியார் இதுகுறித் தும் ஆழமான கருத்தினை வெளிப் படுத்தியுள்ளார்கள். அதனையும் இந்த இடத்தில் எடுத்துக்காட்டுவது பொருத் தமாக இருக்கும்.
ஒரு பொங்கல் நாளில் (விடுதலை 13.1.1970) தந்தை பெரியார் எழுதியுள்ள அந்தக் கருத்து தமிழர்களின் சிந்தனைக்கு இங்குத் தரப் படுகிறது.
பொங்கல் பண்டிகை என்பது நாள், நட்சத்திரம், மதக்-கதை ஆதாரம் முதலியவை எதுவுமே இல் லாமல் தை மாதம் ஒன்றாம் தேதி என்ப தாகத் தை மாதத்தையும் முதல் தேதி யையுமே ஆதாரமாகக் கொண்டதாகும்.
இதற்கு எந்தவிதமான கதையும் கிடையாது. இந்தப் பண்டிகை உலகில் எந்தப் பாகத்திற்கும் எந்த மக்களுக்கும் உரிமையுள்ள பண்டிகையாகும். என்றா லும், மற்ற இடங்களில் மற்ற மக்களால் பல மாதங்களில் பல தேதிகளில் பல பேர்களால் கொண்டாடப்படுவதாகும்.
இக் கொண்டாட்டத்தின் தத்துவம் என்ன வென்றால், விவசாயத்தையும் வேளாண்மை யையும் அடிப்படையாகக் கொண்டு அறுவடைப் பண்டிகை யென்று சொல்லப்படுவதாகும். ஆங்கி லத்தில் ஹார்வெஸ்ட் பெஸ்டிவல் என்று சொல்லப்படுவதன் கருத்தும் இதுதான்.
என்றாலும், பார்ப்பனர் இதை மத சம்பந்தம் ஆக்குவதற்காக விவசாயம், வெள்ளாண்மை, அறுவடை ஆகிய கருத்தையே அடிப்படையாகக் கொண்டு இதற்கு இந்திரன் பண்டிகை என்றும் அதற்குக் காரணம் வெள்ளாண்மைக்கு முக்கிய ஆதாரமான நீரை (மழையை)ப் பொழிகிறவன் இந்திரன் ஆதலால் இந்திரனைக் குறிப்பாய் வைத்து, விவசாயத்தில் விளைந்து வெள்ளாண் மையாகியதைப் பொங்கி (சமைத்து) மழைக் கடவுளாகிய இந்திரனுக்கு வைத்துப் படைத்து பூசிப்பது என்றும் கதை கட்டி விட்டார்கள்.
- கி. வீரமணி
-விடுதலை ஞா.ம.10.1.15