• Viduthalai
உலகில் அனைத்து உயிரினங்களும் பரிணமிக்கின்றன. சமகாலத்திய உயிர்கள் அனைத்தும் பரிணாம கிளைகளின் தொடர் சங்கிலியின் தற்போதைய கண்ணி. பரிணாம தொடர்ச்சியில் தற்போதைய உயிரினங்களில் மனிதனுக்கு நெருக்கமானது சிம்பன்சி. சுமார் 65 லட்சம் ஆண்டுகளுக்கு முன் மனிதனுக்கான பரிணமித்த பாதையும் சிம்பன்சி பயணித்த பாதையும் பிரிந்தன. இருந்தும், ஒப்பீட்டளவில் 98.8% மரபணு தொகுப்பு ஒன்று போல் இருக்கும்.
அறிவியல் ரீதியாக மனிதனை புரிந்து கொள்ள, சிற்றினம், பேரினம், குடும்பம் போன்ற சில அடிப்படை அறிவியல் வழங்கு வார்த்தகளை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். உதாரணமாக Pantheraஎனும் ஒரே பேரினத்தை சேர்ந்தவைதான் சிங்கம் (leo), புலி (tigris), சிறுத்தை (pardus). இவை மூன்றும் பூனை (Felidae) குடும்பத்தை சார்ந்தவை.
ஆக, புலியின் அறிவியல் பெயர் pandarus tigris, சுருக்கமாக P. tigris எனவும் தொடர்ந்து குறிக்கலாம். சிங்கம் - P. leo, சிறுத்தை P. pardus.
மனிதனின் அறிவியல் பெயர் Homo sapiens. Homo பேரினம், sapiens சிற்றினம். தற்போது உலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் H. sapiens தான். இந்த H. sapiens எப்போது எங்கே எப்படி உருவானாது, எப்போது, எப்படி பரவியது? Sahelanthropus tchadensis என்னும் மனிதக் குரங்குதான்(Primate)என்று கூறுவர், முதனி என தமிழ்படுத்துகின்றனர்) தற்கால மனிதனுக்கும், சிம்பன்சிக்குமான பொதுவான மூதாதையின் நெருங்கிய உறவாக கருதப்படுகிறது. ஆப்ரிக்க கண்டத்தின் மேற்கு பகுதியில் சுமார் 70 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்திருக்கிறது. இது எப்போதும் அல்லாமல், அவ்வப்போது மட்டும் நிமிர்ந்து நடந்திருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.
அதாவது மனிதன் எனும் உயிரினம் உருவாவதற்கான முதல் படிநிலை இந்த உயிரினத்தினிடமிருந்து தொல்லியல் ஆதாரத்தில் அறியப்படுகிறது.
பின் மனித பரிணாமத்தில் பாதையில் முக்கிய திருப்புமுனையில் இருந்த உயிரினம் Orrorin tugenensis எனும் கிழக்கு ஆப்ரிக்காவில் வாழ்ந்த பிரைமேட். அது கிட்டத்தட்ட முழுவதுமாக நிமிர்ந்த நடை கொண்டிருந்தது. இந்த O. tugenensis மனிதனின் மூதாதை வழியில் அல்லாமல், ஆனால் மூதாதை விலங்கின் நெருங்கிய பரிணாம தொடர்பு கொண்ட உயிரியாக இருக்கலாம் என்றும் கருத்துகள் உண்டு. அதன் தொடர்ச்சியாக, 55 லட்சம் ஆண்டுகளுக்கு முன் கிழக்கு ஆப்ரிக்காவில் Ardipithecus kadabba எனும் விலங்கு இரு கால்களைக் கொண்டு நிமிர்ந்து நடக்கும்படியான ஆற்றல் பெற்றிருந்ததை அதன் தொல் எலும்பு படிமங்கள் மூலம் அறியப்படுகிறது(Gobbons 2009).
ஆனாலும், இந்த Ardipithecus பேரின விலங்குகள், மரத்தினை பற்றும் படியான உள்ளங்கை உள்ளங்கால்களை கொண்டிருந்தன. இவைகளின் மூளை அளவும் 300 - 350cc (1ccஎன்பது ஒரு கன செண்டிமீட்டர்) அளவிலேயே இருந்தன.
இந்த Ardipithecus பேரினத்திலிருந்து தான் Australopithecus பேரினம் பரிணமிக்கிறது. இந்த நிகழ்வுமனித பரிணாமத்தில் முக்கிய மைல்கல்.
சுமார் 40 லட்சம் ஆண்டு காலம் முன் வாழ்ந்த Australopithecis anamensis எனும் விலங்கின் தொல் படிமத்தால் அறியப்படும் முக்கிய நிகழ்வு, அதன் உள்ளங்கைகள், உள்ளங்கால்கள் மரத்தில் ஏறும்படியாக இல்லாது இருந்தது, பரிணாமத்தில் முக்கிய நிகழ்வு (Leakey et al.1995).
இதன் மூளை அளவு420 - 510cc ஆக அதிகரிக்கிறது. இதன் பின் கால சுழற்சியில் பரிணாமத்தில் Australopithecus பேரினம் பல வேறுபட்ட சிற்றினங்கள் என, (உதாரணம் A. garhi) பரிணமிக்கிறது. இதன் கிளையாக paranthropus aethiopicus எனும் உயிரினமும் வாழ்ந்தது அறியப்படுகிறது. இதே காலகட்டத்தில்தான் (25-27 லட்சம் ஆண்டுகளுக்கு முன்) கற்களை கருவிகளாக இந்த விலங்குகள் பயன்படுத்தி இருக்கின்றன என உறுதிபட கூற முடியாவிட்டாலும், அதற்கான சமிக்ஞைகள் பரிணமித்திருக்கும் என கருதப்படுகிறது.இதன் அந்திம காலத்திலேயே (23 லட்சம் ஆண்டுகளுக்கு முன்) Homo habilis எனும் Homo பேரினத்தை சார்ந்த விலங்கும் தோன்றுகிறது. மனிதனான Homo sapiens sapiensசும், H. habilis-சும் ஒரே பேரினத்தை சார்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
இனி, அது இது என அஃறிணையில் குறிக்காமல் உயர்திணையிலேயே குறிப்போம். H. habilis கற்களை குச்சிகளை கருவிகளாக மாற்றி, அதை உபயோகப்படுத்தியதும் கண்கூடாக, தொல் எச்சங்கள் மூலம் அறியப்படுகிறது (இந்த கருவிககளை இதற்கு முன்னும், இதே காலகட்டத்திலும் வாழ்ந்த Australopithecus garhi, paranthropus aethiopicus விலங்குகள் செய்திருக்கலாம் எனும் வாதமும் உண்டு). Homoபேரினத்தில் வெளிப்புறத் தோற்றம் தாண்டி, மூளை/அறிவு சார்ந்த பரிணாமமும் மிகப்பெரிய மாற்றங்களை உண்டாக்கியுள்ளது. இவரை முதல் மனிதன் என்றே சொல்லும் அளவுக்கு மனிதனுக்கான பண்புகள் உருவாகிவிட்டிருந்தன. இவர் சுமார் 23 லட்சம் ஆண்டுகளுக்கு முன் உருவாகி, 16.5 லட்சம் ஆண்டுகள் வரை வாழ்ந்துள்ளான். இவரை‘HANDY MAN’ என்று அழைக்கலாம். காரணம் ஆயுதங்களை செய்யக் கற்றுக்கொண்டார்.அதனை பத்திரப்படுத்தி மீண்டும் மீண்டும் உபயோகப்படுத்தினார் (இதற்கு முந்தைய விலங்குகள், தற்போதும் சில குரங்குகள் கற்ளை குச்சிகளை கருவிகளாக பயன்படுத்தினாலும், பத்திரப்படுத்தி மீண்டும் மீண்டும் உபயோகித்ததில்லை). அதாவது, எதிர்காலத்தில் தேவை உண்டு எனும் சிந்தனை மேலோங்கத் தொடங்கிய காலம். குறிப்பிடத்தகுந்த மாற்றமாக, இவரது மூளையின் அளவு 500 - 900cc வரை விரிவடைந்திருந்தது. இது மூளை/அறிவு சார்ந்த பரிணாமத்தின் மிகப் பெரிய லாங்ஜம்ப் என்றே சொல்லலாம். இந்த H. habilis,பிற Homo சிற்றினங்களுக்கும், முந்தைய Australopithecus பேரினத்திற்குகான இடைப்பட்ட குணாதிசியங்களுடனே இருந்தார் (Tobias 2006). வெளித்தோற்றமும் சற்றே குரங்கு ஜாடை இருந்தது. (Tobias 2006). என்றால் நிமிர்ந்த என்று பொருள். இவரை ‘UPRIGHT MAN’’ என்றும் குறிப்பிடுவதுண்டு. Homo erectus சுமார் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன் கிழக்கு ஆப்ரிக்காவில் தோன்றியது. உடல்ரீதியாக மனிதனாகவே தெரிந்தார். H. habilisக்கு இருந்தது போல அல்லாமல், குரங்கு முகஜாடை பெருமளவு மறைந்து மனித முகஜாடை கொண்டிருந்தார். இவரது மூளை அளவு 546 - 1,251cc வரை விரிவடைந்திருந்தது. இவர் பயன்பாடு சார்ந்த பலதரப்பட்ட விதவிதமான கல் ஆயுதங்களை செய்தார்.
அதாவது, இன்ன வேலைக்கு இன்ன ஆயுதங்கள் என பிரித்தறியும் அறிவு பெற்றிருந்தார். மிக முக்கியமாக, நெருப்பை உண்டாக்க கற்றுக்கொண்டாரா என்பதில் அய்யப்பாடு இருந்தாலும், நெருப்பை பயன்படுத்த கற்றுக்கொண்டார். இயற்கையாக தோன்றிய நெருப்பை, தொடர்ந்து எரிய விட்டு பயன்படுத்தியிருக்கலாம் என்றே கருதப்படுகிறது. ஹோமோ எரக்டஸ் மனிதர்கள் அறிவு சார்ந்த ஆதிக்கம் செலுத்தி ஆப்ரிக்கா முழுவதும் பரவினர்.
இவர்களே முதல் முறையாக ஆப்பிரிக்காவை விட்டும் வெளியேறினர். மத்திய கிழக்கில் இரண்டாக பிரிந்து, அய்ரோப்பாவிலும் ஆசியாவிலும் நுழைந்தனர். மேற்கு அய்ரோப்பா வரையிலும், ஆசியாவில் இந்திய நிலப்பரப்பை தாண்டி, இந்தோனீசியா தீவுகள் வரையிலும் பரவினர். இவர்கள் மிதவைகளை பயன்படுத்திய முதல் கடலோடியாக இருக்கவும் வாய்ப்புண்டு என்றும் நம்பப்படுகிறது. பின், சென்ற இடங்களுக்கு ஏற்ப தன்னை தகவமைத்து பல்வேறு புதிய Homo சிற்றினங்களாக பரிணமித்தனர். தெற்கு ஆப்ரிக்காவில் பரவிய H.erectus, கால சூழ்நிலைக்கேற்ப மாற்றமடைந்து H. ergaster - ராக பரிணமித்தது. இந்தH. ergaster சுமார் 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றி, 14 லட்சம் ஆண்டுகளுக்கு முன் அழிந்தே போகிறது. ஆயினும்H.erectus மற்றும் H.ergaster அவ்வப்போது கலந்து இணை சேர்கின்றன.மேற்கு அய்ரோப்பாவை வந்தடைந்த H. erectus,அங்குள்ள சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டு H. antecessor ராக பரிணமித்தது. இந்த இனம் 12 லட்சம் ஆண்டுகள் முன் தோன்றி, 8 லட்சம் ஆண்டுகளுக்கு முன் முற்றாக அழிந்தது.
சமகாலத்தில் ஆப்பிரிக்காவிலிந்து கிழக்கே நகர்ந்து சீனா மற்றும் இந்தியா வரை வந்தடைகின்றது H. erectus. இந்தியா வந்தடைந்த H.erectus, இந்தியா முழுவதும் பரவி, தரைவழியாக கிழக்கு ஆசியா வரை பரவி, பின் கடல் மார்கமாக இந்தோனீசியா தீவுகள் வரை பரவியது.
தென் இந்தியாவில் சென்னைக்கு அருகில் அதிரம்பாக்கத்தில், கற்கருவிகளை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதன் காலம் 3,85,000 ஆண்டுகளுக்கு முன் வரை இருக்கலாம் என தெரிகிறது. இதனை உருவாக்கி பயன்படுத்தியதுH.erectus என்றே ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.இந்த கற்கருவிகளுக்கும், அங்கே தற்போது வாழும் தமிழர்களுக்கும், ஒட்டு மொத்த இந்தியர்களுக்கும் எந்தவித வரலாற்றுத் தொடர்பும் இல்லை.
இந்தோனீசியா வரை சென்றH.erectus, அங்கே ஃப்ளாரன்ஸ் தீவில், உருவமாற்றம் பெற்று, H. florensisஎனும் குட்டையான மனிதனாக உருவெடுத்தது. தீவின் சூழல் இவனை மூன்றடிக்கு வளரும் இனமாக மாற்றிவிடுகிறது. அங்குள்ள, குள்ள யானைகளை கூட வேட்டையாடியது.
H. florensis-ä ‘HOBBIT MAN’, ‘FLORES MAN’என்றும் அழைக்கின்றனர். H. florensis இனம் சுமார் 1,90,000 ஆண்டுகளில் தொடங்கி, மிக சமீபமாக 12,000 ஆண்டுகளுக்கு முன் வரை அந்த தீவுகளில் வாழ்ந்துள்ளது. வடக்கு ஆப்பிரிக்காவில் வாழ்ந்த H.erectus,மெல்ல மெல்ல மாற்றமடைந்து, H.ergester சில சந்தர்ப்பங்களில் கலந்து, H. heidelbergensis உருவெடுத்தது. இந்த இனமே தற்கால மனித இனமான பி. H. sapiens-ன் நேரடி மூதாதை. இந்த H. heidelbergensis மீண்டும் ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறி, அய்ரோப்பா, ஆசியாவில் சீனா, இந்தியா, இந்தோனீசியா வரை பரவியது. இந்த இனம் வாழ்ந்தது 6 லட்சம் முதல் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வரை.
நான்கு லட்சம் ஆண்டுகளுக்கு முன், நெருப்பை பயன்படுத்துவது இந்த இனத்துக்கு கைவந்த கலையாக மாறிவிட்டிருந்தது. இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் பண்பு இந்த H. heidelberginsis காலத்தில் தான் தொடங்குகிறது. சீனா மற்றும் கிழக்காசியா வரை பரவிய இவன், அங்கே H. denisova எனும் புதிய மனித இனமாக பரிணமித்தது. Denisovans என அழைக்கப்பட்ட இந்த மனித இனம் வாழ்ந்தது இரண்டு லட்சம் தொடங்கி 50,000 ஆண்டுகள் வரை. அய்ரோப்பவை வந்தடைந்த H. heidelbergensis, அங்கே குளிருக்கு ஏற்றபடி H. neanderthalensis, ‘NEANDERTHAL MAN’ என்றும் அழைக்கப்படும் நியாண்டர்தால் மனிதனாக மனித இனமாகப் பரிணமித்தது. வெள்ளை தோலுடன், செம்பட்டை முடியுடன், பருத்த உடலுடன், வாழ்ந்த இந்த இனத்துக்கு என்று மொழிகள் இருந்திருக்கும் என நம்பப்படுகிறது. புறத்தோற்றத்தில் சகமனிதனாகவே நாம் கருதும் அளவுக்கு தற்கால மனித இனத்தை இந்த இனம் ஒத்திருந்தது.
H. neanderthalensis வாழ்ந்த காலம் சுமார் நான்கு லட்சம் முதல் 1,30,000 ஆண்டுகள் முன் உச்சம் பெற்று, சுமார் 35,000 ஆண்டுகளுக்கு முன், மனிதன்(H. sapiens) வரவை தொடர்ந்து முற்றாக அழிந்தது. H. neanderthalensis மனித இனம் H.sapiens இனப்பெருக்கம் செய்துள்ளது வரலாற்றில் முக்கிய நிகழ்வு. நியாண்டர்தால்களிடம் கலை பண்பாடு இருந்ததும் பரிணாமத்தின் முக்கிய மைல்கள்.வடக்கு பகுதி ஆப்ரிக்காவில் தங்கிய H. heidelbergensis, மெல்ல மெல்ல பரிணமித்து, மூன்று முதல் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன் H. sapiensஎனும் புதிய மனிதனாக பரிணமித்தது, அதாவது நாம் தான். H. sapiens இனத்தை ‘MODERN HUMAN’ என்றே அழைத்தனர். H. sapiens- இடம் கட்டமைந்த மொழி இருந்தது.
உலகத்தை கைப்பற்றுதல்
இந்த H. sapiens,2 லட்சம் ஆண்டுகளுக்கு முன் மீண்டும் ஆப்ரிக்காவை விட்டு வெளியேறி, மத்திய கிழக்காசியாவிலும், அய்ரோப்பாவிலும் நியாண்டெர்தல்களுடன் கலந்தது. நியாண்டர்தால்கள் புதிய மனிதனுடன் இரண்டற கலந்து சுமார் 35,000 ஆண்டுகளுக்கு முன் முற்றாக வரலாற்றிலிருந்து காணாமல் போகிறது.
H. sapiens -ன் ஆசிய வரவால், இங்கே இந்தியாவில் வாழ்ந்து வந்த H. erectus, போட்டியிட முடியாமல் வாழமுடியாமல் மெல்ல மெல்ல அழிகிறது. அவ்வப்போது, இரண்டு இனங்களும் இணை சேர்ந்த நிகழ்வும் நடந்ததாக கருதுகோள் உண்டு, ஆயினும் போதிய தரவுகள் இல்லை.
கிழக்காசியாவை அடைந்த H. sapiens, அங்கிருந்த டெனிசோவியன்ஸிடம் கலந்தது. காலப்போக்கில் டெனிசோவியன்ஸும் மறைகின்றனர். சுமார் 40000 ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியாவையும் கடல் வழியாக இந்த புதிய மனித இனம் அடைந்தது. கிழக்கு ரஷ்யா வழியாக, நிலவழியாக அலாஸ்காவை 20000 ஆண்டுகளுக்கு முன் அடைந்து, வட அமெரிக்கா தாண்டி, 12000 ஆண்டுகளுக்கு முன் தென் அமேரிக்காவிலும் அடைந்து, அண்டார்டிகா தவிர்த்து, மொத்த உலகத்திலுமான ஒரே மனித இனமாக பரவி வாழத்தொடங்குகியது.
தமிழன் தனித்துவமானவனா?
மரபணு ரீதியில் தமிழன் தனித்துவமானவனா என்றால் இல்லை என்றே பதிலளிக்க வேண்டியிருக்கும். ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறிய மொத்த மனித கூட்டம் அதிகபட்சமாக 10,000 இணைகள் மட்டுமே என நம்பப்படுகிறது.
அதாவது, ஆப்பிரிக்காவுக்கு வெளியே வாழும் அனைத்து மக்களின் மூதாதையர்கள் இந்த பத்தாயிரம் பேர்களே என நம்பப்படுகிறது. ஆப்ரிக்காவில் வாழும் மனிதர்கள் ஒன்று போல நமக்கு தோன்றினாலும், மரபணு ரீதியாக அதிக வேறுபாடுகளை கொண்டவர்கள். அதாவது, ஒரு வெள்ளை அய்ரோப்பியரும், பழுப்பு இந்தியரும், மஞ்சள் சீனரும், கருப்பு ஆஸ்திரேலியரும் வேறுபாடுகளாக நம் கண்களுக்கு தெரிந்தாலும், அனைவரும் மரபணு நெருக்கம் கொண்டவர்கள். காரணம், மரபணு வேறுபாடு அடைய பல லட்சம் ஆண்டுகள் பிடிக்கும்.
நாம் தோன்றியதே சுமார் மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன்தான். வெறும் பத்தாயிரம் இணைகள் மூலமே ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறி, அதிகபட்சம் இரண்டு லட்சம் ஆண்டுகள்தான் பரிணாமப் பாதையில் நடந்துள்ளோம். தனித்த மரபணு தொகுப்பு உருவாக, புவியியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டு, பல லட்சம் ஆண்டுகளாவது ஆகும்.
சுமார் 65 லட்சம் ஆண்டுகளுக்கு முன் நம்மை பிரிந்த சிம்பன்சிக்கும் நமக்குமான மரபணு தொகுப்பு வேறுபாடே 1.2% தான் எனும் போது, வெறும் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றி, புவியியல் ரீதியாக தனிமைப்படுத்தப்படாத நாம், எப்படி மரபணு தொகுப்பில் அதிகப்படியான வேறுபாட்டை கொண்டிருக்கமுடியும்? அதற்கான வாய்ப்போ, காலமோ நமக்கு அமையவில்லை என்பதே நிதர்சனம்.
தமிழன் மட்டுமல்ல, உலகில் உள்ள எந்த இனக்குழுவிற்கும் தனித்த மொழி, கலாசார அடையாளங்கள் இருக்குமே தவிர, தனித்த மரபணு தொகுப்பு அமைப்பு, அறிவியல் ரீதியாக இல்லவே இல்லை.
(தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கட்டுரையாளர் ராம்குமார், சுமார் 15 ஆண்டுகளாக மரபணு சார்ந்த ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். தற்போது அமெரிக்காவின் ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் முதுமுனைவர்பட்ட ஆய்வாளராகவும், திருச்சி அரசுக் கல்லூரியின் வருகைதரு ஆசிரியராகவும் இருக்கிறார்.)