பக்கங்கள்

வியாழன், 30 ஆகஸ்ட், 2018

திரையிசைப் பாடல்களில் இலக்கணம்:


திரையுலகம் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடையக் கூடியது. அதன் மூலம் நாம் ஒரு செய்தியைக் கூறினால், உடனே புரிந்து கொள்ளும் தன்மை, யாருக்கும் உண்டு. இதில் வரும் இலக்கணங்கள் இனிப்புத் தடவப்பட்ட "கசப்பு மாத்திரைகள்" என்று கூறலாம்.

🖌தமிழ் இலக்கணம் குறித்த சில சான்றுகள் இங்கே உங்களுக்காக...

*🖌அடுக்குத்தொடர்:
ஓடிஓடி உழைக்கனும் ஊருக்கெல்லாம் கொடுக்கனும்.

*🖌இரட்டைக்கிளவி:
ஜல்ஜல் எனும் சலங்கை ஒலி சலசல எனச் சாலையிலே.

*🖌சினைப்பெயர்:
பூப்பூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா.

*🖌பொருட்பெயர்:
  கண்ணன் என்னும் மன்னன் பெயரைச் சொல்லச் சொல்ல

*🖌இடப்பெயர்:
வீடு வரை உறவு வீதி வரை மனைவி!

*🖌காலப்பெயர்:
வெள்ளிக்கிழமை விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன்!

*🖌குணம் அல்லது பண்புப்பெயர்:
அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா!

*🖌தொழில் பெயர்:
  ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலே தான் சுகம்! சுகம்!

*🖌இறந்த காலப் பெயரெச்சம்:
வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை!

*🖌எதிர்காலப் பெயரெச்சம்:
ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ?

*🖌இடவாகுபெயர்:
  உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீ தான் நீதிபதி

*🖌எதிர்மறைப் பெயரெச்சம்:
துள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள் சொல்லும்

*🖌குறிப்புப் பெயரெச்சம்:
அழகிய தமிழ்மகள் இவள் இரு விழிகளில் எழுதிய மடல்!

*🖌ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்: 
வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது.

*🖌வன்றொடர்க் குற்றியலுகரம்:
முத்துப்பல் சிரிப்பென்னவோ முல்லைப்பூ விரிப்பென்னவோ!

*🖌நெடிற்றொடர்க் குற்றியலுகரம்:
  நாடு அதைநாடு அதை நாடாவிட்டால் ஏது வீடு

*🖌உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்:
  ஞாயிறு ஒளி மழையில் திங்கள் குளிக்க வந்தாள்

*🖌இரண்டாம் வேற்றுமை உருபு:
  நிலவைப்பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே.

*🖌மூன்றாம் வேற்றுமை உருபு:
  உன்னால் முடியும் தம்பி! தம்பி!!

*🖌பெயர்ப் பயனிலை:
  காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம்....

(பகிருங்கள். ஆசிரியர்களுக்குப் பயன்படும்)

- கட்செவி யில் வந்தது

புதன், 22 ஆகஸ்ட், 2018

பிழைஇன்றி எழுதுவீர்! (10)

தளை


இதுவரைக்கும் எழுத்து, அசை, சீர் என்பன பற்றிப் பார்த்தோம். இனித், தளை பற்றிக் கூறப்படும். சீர் ஒன்றோடு ஒன்று சேர்ந்து வருவது தளை. நேர் நேரோடும், நிரை நிரையோடும் பொருந்தி வருவதும் நேர் நிரையோடும், நிரை நேரோடும் பொருந்தி வருவதும் தளை ஆயின.

“அம்மா என்றன் ஆசை என்றன்” என்பது அகவல் அடி. அதில் அம்மா என்பது நேர் நேர்; அதாவது தேமா. என்றன் என்பது நேர் நேர். அதாவது தேமா.

எனவே,  நேர் என்பதோடு நேர் ஒன்றிய தளை! நேர் நேர் என்பதில் கடைசியில் நேர் இருப்பது காண்க.

இன்னும்,

"வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்” என்பது வெண்பா அடி.

வாக்குண்டாம் என்பது தேமாங்காய். அதாவது நேர் நேர் நேர். அதனோடு நல்ல அதாவது தேமா நேர் நேர் வந்தது.

இதைக் காயுடன் - அதாவது நேர் நேர் நேருடன் நேர் வந்து ஒன்றியது - இதையும் தளை என்று காண்க.

தளை என்பது பற்றி இவ்வளவு மட்டும் தெரிந்து கொண்டால் போதும்.

அடி

இனி அடியைப் பற்றிச் சொல்லப்படும். அடி என்பது மேற்சொன்ன தளை ஒன்றை ஒன்று அடுத்து வருவது.

செய்யுட்களில் இருசீர் கொண்ட அடியும், முச்சீர் கொண்ட அடியும், நற்சீர் கொண்ட அடியும், அய்ஞ்சீர் கொண்ட அடியும், அய்ந்துக்கு மேற்பட்ட சீர்களைக் கொண்ட அடியும் வரும். மேலும் செய்யுட்களில், | இரண்டடி கொண்ட செய்யுட்களும், மூன்றடி கொண்ட செய்யுட்களும், நான்கடி கொண்ட செய்யுட்களும், பல அடிகள் கொண்ட செய்யுட்களும் உண்டு.

அடிபற்றி இவ்வளவே தெரிந்து கொண்டாற் போதும். சுருக்கமாக இதுவரைக்கும் சொல்லி வந்தவற்றை மறக்கா மல் இருக்க வேண்டும்.

தொடை

இனி, இப்படி அமைந்தது இன்ன செய் யுள் என்றும், இப்படி அமைய வேண்டும் இன்ன செய்யுள் என்பன வற்றைச் சொல்ல ப்படும். தொடை என்பது பற்றி இனிக் காண்போம்.

வெண்பா

காய்முன் நேர் வரவேண்டும். மாமுன் நிரை வர வேண்டும்.

வாக்குண்டாம் நல்ல - என்பதில் வாக்குண்டாம் என்பது தேமாங்காய்.

நல்ல என்பதில் முதலில் நேர் இருக்கிறது. இதைத் தான் காய்முன் நேர் வரவேண்டும் என்பது.

நல்ல மனமுண்டாம் என்பதில் நல்ல என்பது மா மனமுண்டாம் என்பதன் முதலில் நிரை இருக்கின்றது. இதைத் தான் மாமுன் நிரை வரவேண்டும் என்றது.

இவ்வளவு சொல்லிவிட்டால் போதாது. வெண்பாவில் நேரிசை வெண்பா என்பது ஒன்று. வாக்குண்டாம் என்று தொடங்கும் பாட்டெல்லாம் வெண்பாதான். அதிலும் அதுதான் நேரிசை வெண்பா.

நேரிசை வெண்பாவிற்கு நான்கு அடி வரும். அந்த நாலடியில் முதலடி நாற்சீரடி. அடுத்த அடி முச்சீரடி. அந்த முச்சீரடியை அடுத்து ஒரு தனிச்சொல். அதன்பிறகு நாற்சீரடி. அதன் பிறகு முச்சீரடி.

வாக்குண்டாம் நல்ல

மனமுண்டாம் மாமலராள்

நோக்குண்டாம் மேனி

நுடங்காது - பூக்கொண்டு

துப்பார் திருமேனி

தும்பிக்கை யான்பாதம்

தப்பாமற் சார்வார் தமக்கு.

இதில் முதலடி நாற்சீரடியாக இருப்பது காண்க. அடுத்த அடி முச்சீரடியும், தனிச்சொல்லும் ஆனது அறிக. அதற்கு அடுத்த அடி நாற்சீரடி ஆனதறிக. கடைசி அடி முச்சீரடியாய் இருப்பதறிக.

வெண்பாவைப் பற்றி இவ்வளவு மட்டும் சொல்லி விட்டால் போதாது.

வாக்குண்டாம் என்பது முதலடி. அடுத்த அடி நோக்குண்டாம் என்று இருப்பதை நோக்க வேண்டும். அப்படி எதுகை வைத்துத் தொடங்க வேண்டும். இரண்டாம் அடியை வாக் என்பதற்கு நொக் என்பது எதுகையல்ல, நோக் என்பதுதான் எதுகை. முதலெழுத்து நெட்டெழுத்தாய் இருக்க வேண்டும். அடுத்த எழுத்து க் என்றிருந்தால் அடுத்த அடியின் அடுத்த எழுத்தும் க் என்றே வரவேண்டும்.

"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

கண்ணென்ப வாழும் உயிர்க்கு”

எண், கண் என எதுகை வந்திருப்பதைக் காண்க.

எண் என்பதற்குக் கண் எதுகையே தவிர காண் என்பதோ, கண என்பதோ எதுகை அல்ல.

முதலடியும் இரண்டாம் அடியும் எதுகை உடையவை களாயிருந்தால் மட்டும் போதாது. தனிச் சொல்லும் எதுகையுடையதாய் இருக்க வேண்டும்.

வாக்குண்டாம் நல்ல

மனமுண்டாம் மாமலராள்

நோக்குண்டாம் மேனி

நுடங்காது - பூக்கொண்டு

என்பதில் வாக்-நோக்-பூக் என எதுகை வருதல் காண்க. கடைசி இரண்டடிகளும் எதுகையோடு வரவேண்டும்.

“துப்பார் திருமேனி

தும்பிக்கை யான்பாதம்

தப்பாமல் சார்வார் தமக்கு”

துப் என்றும் தப் என்றும் வந்தது காண்க.

நேரிசை வெண்பா என்பது நாலடி கொண்டது.

எடுத்துக்காட்டு

தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற

தீயார்சொற் கேட்பது வும்தீதே - தீயார்

குணங்க ளுரைப்பதுவும் தீதே அவரோ

டிணங்கி இருப்பதுவும் தீது.

‘குறள் வெண்பா’ என்பது இரண் டடியில் வருவது.

எடுத்துக்காட்டு

“எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு”

இன்னிசை வெண்பா என்பது நான்கு அடிபெற்றுப் பலவாறு வரும்.

எடுத்துக்காட்டு

வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார்

வைகலும் வைகல் வைகுமென் றின்புறுவார்

வைகலும் வைகற்றம் வாழ்நாண்மேல் வைகுதல்

வைகலை வைத்துணரா தார்.

இது ஒரே வகை எதுகையால் வந்த இன்னிசை வெண்பா. மேலும் இதில் தனிச்சொல் இல்லை.

இன்றுகொல், அன்றுகொல் என்றுகொல் என்னாது

பின்றையே நின்றது கூற்றமென் றெண்ணி

ஒருவுமின் தீயவை! ஒல்லும் வகையாம்

மருவுமின் மாண்டார் அறம்!

இது முதலிரண்டடி ஒரே எதுகையும் பின் இரண்டடி ஒரே எதுகையும் கொண்டு வந்து, தனிச்சொல் இல்லை. இவ்வாறு பலவாறு வரும்.

இனிப் பஃறொடை வெண்பா பல அடிகள் கொண்டு வரும்.

குறிப்பு: எழுதி வருவதை ஊன்றி நோக்கவேண்டும். முன் கூறியதைப் பின் மறத்தல் கூடாது. பாட்டுக்கு இலக்கணம் தெரிந்து கொள்ள வேண்டும். இன்றியமை யாதது.

- குயில்: சென்னை 15.7.62

தொடரும்

- விடுதலை ஞாயிறு மலர், 11.8.18

தூங்கிவிடும் பூனை எலி பிடிக்காது - செத்துப்போன சமஸ்கிருதம் உயிர் பிழைக்காது

சமஸ்கிருதம் எங்கே?   இந்தி மொழி டில்லி, உ.பி., பீகார், அரி யானா, ராஜஸ்தான், சத்தீஷ்கர், ஜார்கண்ட், இமாச்சல்பிரதேஷ், உத்தராகண்ட், போன்ற மாநிலங்களில் பேசப்படுகிறது.

*                   அசாமி அசாம் மாநிலத்திலும், அதனை ஒட்டிய வடகிழக்கு மாநிலத்திலும் பேசப் படும் மொழி

*                   வங்க மொழி மேற்குவங்கம், மற்றும் அசாமில் பேசப்படும் மொழி,

*                   டோகிரி மற்றும் உருது ஜம்மூ-காஷ் மீரில் பேசப்படும் மொழி

*                   குஜராத்தி, குஜராத் மற்றும் வட மகாரஷ் டிராவில் சில இடங்களில் பேசப்படும் மொழி

*                   கன்னடம் கருநாடகம், மராட்டிய மாநி லத்தின் சிலபகுதிகளில் பேசப்படும் மொழி.

*                   கோங்கனி கோவா மாநிலத்தில் பேசப் படும் மொழி

*                   காஸி மேகாலயா மாநிலத்தில் பேசப் படும் மொழி

*                   மலையாளம் கேரளாவில் பேசப்படும் மொழி

*                   மராட்டிய மொழி மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் பேசப்படும் மொழி

*                   மணிப்பூரி மணிப்பூர் மாநிலத்தில் பேசப்படும் மொழி

*                   மிசோ, மிசோராம் மாநிலத்தில் பேசப் படும் மொழி

*                   ஒரியா, ஒரிசா மாநிலத்தில் பேசப்படும் மொழி

*                   பஞ்சாபி மொழி, பஞ்சாப் மற்றும் அரியானாவில் பேசப்படும் மொழி

*                   தமிழ் மொழி தமிழ்நாடு, ஆந்திரா கேரளா மற்றும் கருநாடகா மாநிலங்களில் பேசப்படும் மொழி

*                   தெலுங்கு மொழி ஆந்திரா, தெலுங் கானா மற்றும் தமிழகத்தில் சில பகுதிகளில் பேசப்படும் மொழி

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி வரையறுக்கப்பட்ட மக்கள் தொகையில் பேசும் மொழிகள் இங்கே எந்த இடத்திலும் சமஸ்கிருதம் இல்லை.

10 ஆண்டுகளுக்கான சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு என கோபாலகிருஷ்ணன் குழு கொடுத்துள்ள அறிக்கையின் ஒரு துளி

1.                     சமஸ்கிருத்தை பள்ளிகளில் கற்பிக்கும் போது ஆசிரியர் சமஸ்கிருத்திலேயே பேச வேண்டும். மாணவர்களுக்கு சமஸ்கிருதத் தில் பேசி அதற்கான விளக்கத்தை கொடுக்க வேண்டும்.

2.                     பள்ளிக்கூடத்தில் வகுப்பறை, ஆய்வு அரங்கம், விளையாட்டு மைதானம் போன்ற இடங்களிலும் சமஸ்கிருதம் பேசவேண்டும்

3.                     மாணவர்கள் பள்ளிகள் மட்டுமல்லாது வெளியிடங்களிலும் சமஸ்கிருதம் பேச வேண்டும்.

4.                     சமஸ்கிருதம் பேசுவதை கேலிசெய் தால் அதற்காக கோபப்படாமல் சமஸ்கி ருத்தை தொடர்ந்து பேசவேண்டும்

5.                     பொதுவிடங்களில் முக்கிய பொருள் குறித்து விவாதிக்கும் போது சமஸ்கிருதத்தி லேயே பேசவேண்டும்

6.                     சிறு சிறு குறிப்புகளை சமஸ்கிருதத்தில் எழுதப் பழகவேண்டும்.

7.                     பொதுவிடங்களில்(வங்கி, பேருந்து, பூங்கா) சமஸ்கிருதத்திலேயே உரையாடி அதற்கான விளக்கத்தை பிற மொழியில் கூறவேண்டும்.

8.                     எந்த ஒரு விண்ணப்பத்தையும் சமஸ் கிருதத்தில் தந்து அதற்கான விளக்கத்தை பொது மொழியில் தரவேண்டும்

- விடுதலை ஞாயிறு மலர், 11.8.18

சமஸ்கிருதம் பழமையான மொழியா?

கிறிஸ்து பிறப்பிற்கு முன்பும் இன்றும் சமஸ்கிருதம் ஒரு சிறு குழுவினரின் ரகசிய மொழியாகவே உள்ளது என்கிறார் பேராசிரி யர் ராஜேந்திர பிரசாத் சிங்.


பீகார் மாநிலம் கயாவில் நடந்த கலாச்சார நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இந்திய விவசாயத் துறை  பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரி யர் முனைவர் ராஜேந்திரப் பிரசாத் கூறிய தாவது, இன்று பல தளங்களில் சமஸ்கிருதம் இந்தியாவில் மிகவும் பழைமையான மொழி என்று கூறப்பட்டு வருகிறது, இது உண்மை யல்ல, சமஸ்கிருதம் பழைமையான மொழி என்றால் இந்தியா முழுவதும் பொதுப் பழக்கத்தில் இருந்த பிரகிருத மொழியில் எந்த ஒரு இடத்திலும் சமஸ்கிருதம் பற்றிய சிறிய குறிப்புகள் கூட இல்லை. ஒரு மொழி என்பது அன்றைய வாழ்வியல் நடைமுறையில் ஏற்பட்ட தாக்கத்தை பதிவு செய்யும் ஒன்றாக இருக்கும், இன்றைய இந்திமொழியில் நிறைய சமஸ்கிருத வார்த்தைகள் உள்ளன. ஆனால் அது பொதுவில் பேசுவதற்கேற்ப வடிவமைக் கப்பட்டுள்ளது, ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு கூட நேரடி சமஸ்கிருதம் பேச்சு மொழி யாக வரவில்லை, வரமுடியாத நிலையில் உள்ளது. இதிகாசங்கள் எனப்படும் வேதம், ராமாயணம், மகாபாரதம் இதர சமஸ்கிருத கதைகள் உயர்குடியினரிடம் மட்டுமே புழக்கத்தில் இருந்தன. ஆகையால் முந்தைய காலங்களில் சமஸ்கிருத தாக்கம் அதிகமான மக்களிடையே எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை, பொதுமக்களிடையே அதிகம் பிரபலமாக இருந்த நாத்திக கவிஞரான கபீர்தாஸ், நாதபந்தாஸ் (லிங்காயத்), ராமனந்தா போன்றோர்களின் பாடல்களில் சமஸ்கிருதம் எந்த இடத்திலும் காணப்பட வில்லை, இவர்களைத் தொடர்ந்து பின்வந்த பிரபல கவிஞர்களின் பாடல்களிலும் சமஸ் கிருத வார்த்தைகள் இல்லை, இதிலிருந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கூட சமஸ்கிருதம் வழக்கத்தில் இல்லாத மொழியாகவே இருந்தது, அன்றும் இன்றும் சமஸ்கிருதம் ஒரு நிழல் மொழியாகவே இருந்து வருகிறது.

கிறிஸ்துவிற்கு முன்பான எந்த ஒரு பழைமையான பொதுவில், புழக்கத்தில் இருந்த மொழிகளிலும் சமஸ்கிருதம் காணப்படவில்லை, சமஸ்கிருத எழுத்துக் கள் கிறிஸ்துவிற்கு பிறகுதான் முழு வடிவம் பெற ஆரம்பிக்கிறது. அசோக ரின் காலத்திலும், சந்திரகுப்த மவுரியா வின் காலத்திலும் சமஸ்கிருதம் பொது மொழியாக இருந்ததில்லை, பிராகிருதம் மற்றும் பாலிமொழியே வெகுஜன மக்களின் மொழியாக இருந்தது,  மொழி மற்றும் கலாச்சாரத்தை அறிய தொல்பொருள் ஆய்வுகள் மிகவும் முக்கியமான ஒரு சான்றாக உள்ளது, ஆனால் இந்தியாவில் தொல்பொருள் சான்றுகள் அனைத்தும் குறிப்பிட்ட நபர் களின் ஆதரவு தளமாக மாற்றப்பட்டு விட்டது, இப்படி மாற்றப்பட்டதால் சமஸ்கிருதம் பற்றிய ஒரு தெளிவான நிலையை அவர்களால் கூட நிலை நிறுத்த முடியவில்லை. உண்மையில் இந்திய தொல்பொருள் ஆய்வாளர்கள் இன்றுவரை இல்லாத ஒன்றை நிலைநிறுத்த பாடுகின்றனர். ஆய்வு களைப் பொருத்தவரை இல்லாத ஒன்றை என்றுமே நிலை நிறுத்த முடியாது, உண்மையை மறைக்க முயலும் போது முழுமைபெறாத ஒரு ஆய்வாகவே இருக்கும், ஆகவே தான் இந்தியாவில் இன்றுவரை சமஸ்கிருதம் குறித்த உறுதியான சான்றுகளை யாராலும் தரமுடிய வில்லைஎன்று கூறினார்.

- விடுதலை ஞாயிறு மலர், 11.8.18

பிழைஇன்றி எழுதுவீர்! (11)

எழுத்துச் சிக்கனம்


உயிர் 12, மெய் 18, உயிர்மெய் 216, ஆய்தம் 1. இத்தனை எழுத்துக்கள் தமிழில் இருப்பதால் மிகத் தொல்லையாய் இருக் கிறதென்று கூறுகிறார்கள்.

அவர்கள் கூறுவது சரிதான். எழுத்துக் களின் வரி வடிவத்தைக் குறைக்க வேண்டும் என்கிறார்கள். ஆம் என்று நாமும் கூறுகிறோம்.

வரிவடிவங்களைக் குறைக்க வேண்டிய முறையைப் பற்றிப் பலர் பலவாறு கூறுகிறார்கள். கூறுகிறவர்கள் எல்லாம் பொது நலன்கருதியே கூறுகிறார்கள். அதில் இம்மியும் அய்யமில்லை .

தமிழ் டைப்ரைட்டிங் மெசினில் மிகப்பல எழுத்துக்கள் அமைக்க வேண்டியிருக்கிறது. அதனால் அந்த மெசின் மற்றவைகளைவிட மிகப் பெரிதாகிவிடுகிறது. அச்சுக் கூடத்தில் எழுத்துப் பெட்டிகளின் அறைகளோ மிகமிக; ஒரு திண்ணையளவு பெரியதாக அமைய வேண்டிய திருக்கிறது.

கை, ளை என ஒரே இனத்தில் இரண்டு வகை. கை என்பது போலவே ளை என்றும் இருந்தால் என்ன முழுகி விடும்.

க இது குறில். கா இது நெடில். ஆனால் உ இது. குறில், ஊ இது நெடில். எத்தனை தொல்லை? உ குறில் உ£ நெடில் என்றால் ஏன் பொருந்தாது? - இப்படிச் சிலர் கேட்கிறார்கள்.

து இது குறில். தூ இது நெடில் என்றால் ஏன் பொருந்தாது - இப்படிச் சிலர் கேட்கிறார்கள்.

எழுத்தின் வரி வடிவத்தைச் சிக்கனப் படுத்தும் முறைபற்றி உங்கள் கருத்தென்ன என்று சிலர் நம்மைக் கேட்டார்கள்.

சொன்னோம். சொல்லுகிறோம். ஆயி னும் நம் கருத்தை யாரும் ஒப்பமாட்டார்கள். ஒப்பமாட்டார்கள் என்பதற்காக நாம் சொல்லாமல் இருப்பதுண்டா? - கிடையாது.

நாம் சொல்லும் முறையைக் கையாண் டால் டைப் ரைட்டிங் மெசினிலும் எழுத்துப் பெட்டி அறைகளிலும் 31 எழுத்துக்கள் போதும். ஒத்துக் கொள்ளுகிறவர்களின் நிலைமைதான் சரியில்லை.

க என்பது ஓர் எழுத்தன்று. க் என்பதும் அ என்பதும் சேர்ந்தது க. இப்படியேதான் உயிர்மெய் 216ம்.

பை என்பது ஓர் எழுத்தன்று. ப் என்பதும் ஐ என்பதும் சேர்ந்ததுதான் பை.

க என்று ஓர் எழுத்து வேண்டாம். க் அ என்றே குறிக்கலாம் என்கிறோம்.

கண்ணன் என்று எழுத வேண்டு மானால் க்அண்ண்அன் என்று குறிக்க.

விசிறி என்பதை வ் இச் இச் இ என்று குறிக்க வேண்டும். இந்த முறையை மேற்கொண்டால் உயிர் 12, மெய் 18. ஆய்தம் 1 ஆக 31 எழுத்துக்கள் போதும். எல்லாவற்றையும் எழுதிவிடலாம். இந்த 31 எழுத்தால், இப்படி எழுதுவதால் ஒரு வரியில் மிகப்பல எழுத்துக்கள் போட வேண்டும் என்று கூறலாம். அப்படி யில்லை. சில எழுத்துக்களே அதிகமா கின்றன.

வழக்கத்தில் வருவது முடியாது என்று கூறலாம். வழக்கத்தில் வருவது இலேசு என்று தோன்றுகிறது.

அஃது பெரிது ஆயினும் எளிது என்பதை அஃத்உ ப்எர் இத்உ. ஆய் இன்உம் எள் இத்உ என்று எழுதுக. சில நாட்கள் தொல்லையாக இருக்கும். பிறகு எளிதாகிவிடும்.

இங்கிலீஷிலும் பிரஞ்சிலும் இப்படித் தானே. பு என்பதை இங்கிலீஷில்  என்று தானே போடுகிறான். பிரஞ்சிலோ அவளப் பன்!  என்று மூன்று எழுத்துக்கள் போட வேண்டும்.

உயிர் 12, மெய் 18, ஆய்தம் 1.

ஆக 31 எழுத்தைக் கொண்டே எழுத் துக் குடித் தனத்தைச் சிக்கனப்படுத்தலாம் என்று கூறினோம்.

ஒரு தோழர் தெரிவிக்கிறார். நீங்கள் சொல்லிய வழி ஏற்றது. அதனோடு ஆ என்பதை அ£ என்றும் ஈ என்பதை இ£ என்றும். சுருக்கலாம் என்கிறார். செய்யலாம். என்கிறோம் அப்படியே.

அதன்படி

ஈவது விலக்கேல் என்பதை

இவ்அத்உ வ்இல் அக்க்பால் என்று எழுதுக.                           (தொடரும்)

 

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

தந்தை பெரியாரின் தமிழ்த்தொண்டு குறளைப் போற்றுங்கள், குறள்வழி வாழுங்கள்! -2

- தந்தை பெரியார்

 


 

பகவத் கீதை, இராமாயணம், மகாபாரதம், பெரிய புராணம் முதலியவையும், அவை போன்றவையும் திராவிடரின் ஒழுக்கத்திற்கோ, உயர்வுக்கோ, மான வாழ்வுக்கோ ஏற்றபடி எழுதப்பட்ட நூல்கள் அல்ல.


குறளில் ஏதோ சில குறைகள் இருக்கலாம். இருக்கமுடியும். ஏனென்றால் அது 1950ஆவது வருடத்திய (இன்றைய) மாடல் அல்ல. 2000 வருடத்திற்கு முந்திய சங்கதி. திருவள்ளுவர் திரிகாலமுணர்ந்த முனிபுங்கவரென்றோ, ஞானியென்றோ நாம் கொள்ளவில்லை. 2000 வருடங்களுக்கு முன்னர் ஒருவன் எவ்வளவு அறிவாளியாய் இருந்தாலும் எலக்ட்ரிக் லைட், ஒலிபெருக்கி, மோட்டார் முதலியவைகளைக் கண்டிருப்பானா? மதவாதிகள் வேண்டுமானால் எல்லாக் காலத்தையும், முக்காலத்தையும் உணர்ந்த மகான் இவர் என்று பலரை விளம்பரப்படுத்தலாம். ஆனால் அது பகுத்தறிவுக்கு ஒவ்வாதது. நாம் திருவள்ளுவரை மகான் என்றோ அவதார புருஷரென்றோ ஒத்துக் கொள்ள மாட்டோம்.

திருவள்ளுவர் நல்ல அறிவாளி, ஆராய்ச்சிக்காரர். அந்தக் காலத்தில் மக்களிடம் பரவி இருந்த மூட எண்ணங்களோடு போராடிய அறிஞர் என்ற அளவில் தான் ஒத்துக்கொள்ள முடியும்.

அந்தப்படியிருக்க 2000 ஆண்டுகளுக்கு முன்னதாக திருவள்ளுவர் சொன்னவை எல்லாம் அப்படியே இன்றைக்கும் ஏற்றதாக இருக்க முடியுமா? இன்றைய நிலைக்கு நான் பேசும் கொள்கைகள் சரி, என் திட்டங்கள் சரி என்றால் எனக்குப் பிறகும், இன்னும் 100, 200, 1000 வருடங்களுக்குப் பிறகும் என் கொள்கைகள், நான் வகுத்த திட்டங்கள் கொஞ்சங்கூட மாற்றப்படாமல் அப்படியே இருக்கவேண்டுமே என்பது என்ன நியாயம்? அந்தப்படி இருக்க முடியுமா?

திருக்குறள் ஒரு மதத்தைத் தழுவியோ, ஒரு மதத்தின் உயர்வுக்கு ஆகவோ எழுதப்பட்ட நூல் என்றில்லாமல், மக்களின் வாழ்க்கைக்கு, மக்கள் தங்களுடைய வாழ்க்கையிலே கையாள வேண்டிய வழி, வகைகள் பற்றி எழுதப்பட்ட நூல் என்று ஆகிறது. குறளாசிரியர் காலத்தில் இந்து மதம் என்பது இல்லை. இந்து மதம் என்று இருந்திருந்தால் திருக்குறளில் ஓர் இடத்திலாவது இந்து என்ற சொல்லைக் குறிப்பிட்டிருக்கலாம். ஆனால் 1,330 பாட்டுகளிலும் ஓர் இடத்திலாவது இந்து என்ற சொல் காணப்படவேயில்லை.

அதுமட்டுமல்ல; குறளாசிரியர் கடவுளையும், மோட்ச, நரகத்தையும் ஒத்துக் கொள்ளவில்லை. குறளில் நீங்கள் அறம், பொருள்,  இன்பம் என்ற அளவில்தான் காண முடியுமே தவிர, வீடு, மோட்சம் பற்றி அவர் கூறியிருப்பதாக இல்லை.  அறம், பொருள்,  இன்பம் என்றுதான் முப்பிரிவு கூறுகிறார், மோட்ச சாம்ராஜ்யத்தை விட்டு விட்டு.

திருவள்ளுவர் கடவுளைப் பற்றி கவலைப்படவில்லை என்று கூறினேன். திருக்குறளின் முதல் அத்தியாயத்தில் கடவுள் வாழ்த்து என்று ஓர் அதிகாரம் இருக்கிறது. அதில் உருவ வணக்கக் கொள்கைகள் இடம் பெறவில்லை. மேலும் இந்து மதக் கடவுள்களைப் பற்றிய புகழ் பாசுரம் அந்தப் பத்துப் பாட்டுகளிலும் கிடையாது.

சிலர் கூறுகிறார்கள், குறளில் முதல் அத்தியாயத்தில் இருக்கும் கடவுள் வாழ்த்துப்பாக்கள் இடைச் செறுகல் என்று. சிலர், அப்படியெல்லாம் இல்லை, வள்ளுவர் பாடியதுதான் என்று கூறுகிறார்கள்.  நம்மைப் பொறுத்தவரையில் கடவுள் வாழ்த்துப்பாக்களை வள்ளுவரே பாடியதாகவே வைத்துக் கொண்டாலும், ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை. இன்றைக்கு நமக்கு இருக்கின்ற கடவுள்களைப் போன்ற கடவுள்களுக்காக வள்ளுவர் வாழ்த்துக் கூறினாரா? இல்லை கடவுள் வாழ்த்து கூறப்படும் பத்துப் பாட்டிலும் ஒரு பாட்டிலாவது வள்ளுவர் கடவுள் என்ற சொல்லை கையாளவில்லை. திராவிடர்களுக்கு எல்லாம் வல்ல, எங்கும் நிறைந்த என்பதான கடவுளைக் குறிக்க கடவுள் என்ற ஒரு சொல்லைத் தவிர, வேறு சொல் கிடையவே கிடையாது. அந்தச் சொல்லையே வள்ளுவர் தமது குறளில் கை வைக்கவில்லை. கடவுள் வாழ்த்து என்ற அதிகாரத்தில் கையாளவில்லை என்பதோடு மாத்திரமல்ல; குறள் முழுவதிலுமே 1,330 பாடல்களிலுமே ஒரு இடத்திலாவது வள்ளுவர் கடவுள் என்ற சொல்லைக் குறிப்பிடவில்லை. தமிழ் மொழியில் உள்ள நல்ல சொற்களையெல்லாம், உயர்ந்த சொற்களையெல்லாம் தமது நூலில் பயன்படுத்திய வள்ளுவர் கடவுள் என்ற சொல்லை மட்டும் பயன்படுத்தவில்லை. திருக் குறளுக்கு முந்திய நூல் என்று சொல்லப்படுகிற தொல் காப்பியத்திலும் கடவுள் என்ற வார்த்தையே கிடையாது.

அடுத்தபடியாக வள்ளுவர் ஆரியர் செய்யும் வேள்வியைக் கண்டிக்கிறார்.

“அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்

 உயிர்செகுத் துண்ணாமை நன்று’’ என்கிறார்.

அதாவது கடவுள் பெயர் கூறி உயிர்க் கொலை புரியும் கொடுஞ் செயலைக் கண்டிக்கிறார். நாட்டிலே நாலு வர்ணத்தை நிலைநிறுத்துவதற்கு ஆகவும், ஆரியர்களின் உயர் வாழ்வுக்கு ஆதாரமாயும் இருந்து வரும் வேதங்களையும், அதாவது வேதத்தைப் படிக்காவிட்டாலும் குற்றமில்லை, ஒழுக்கமாக நடக்க வேண்டும் என்று வள்ளுவர் வேதியத் தன்மையைக் கண்டிக்கிறார்.

இந்தப்படியாக மதம், கடவுள், வேதம், வேள்வி ஆகிய அத்தனையையும், ஆரியத்தின் உயர்வுக்கும் நம்மவர் இழிநிலைக்கும் ஆதாரமாய், காரணமாய் நின்று  நிலவும் அவற்றை வள்ளுவர் வெகு தீவிரமாகக் கண்டிக்கிறார். இந்தப்படியாக வள்ளுவர்  ஆரியக் கருத்துகளை எதிர்த்து விட்டு கண்டித்து விட்டு தனக்கு என்று யாதொரு ‘புது மத உபதேசமும்’ அவர் புரியவில்லை. ‘உன் அறிவைக் கொண்டு சிந்தித்து, ஆராய்ந்து உண்மை கண்டு உலகம் ஒப்ப நடந்து கொள்’ என்கிறார். யார் ஒருவர், ‘உன் அறிவின்படி உலகம் ஒப்ப நட’ என்கிறாரோ, அவர் எந்த மதத்தையும் சேர்ந்தவராகார்.

“குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து

  மானங் கருதக் கெடும்’’ என்று கூறுகிறார்.

அதாவது ஒரு மனிதன் தன் இனத்தவருக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்று நினைத்தாரானால், அதாவது பொதுநலத்துக்குப் பாடுபட வேண்டும் என்று முன் வந்தால் அவன் அந்தக் காரியத்திற்கு ஏற்ற நல்ல காலம் வரட்டும் என்று காத்திருக்கக் கூடாது. “இரண்டாவதாகவும் இந்தக் காரியத்தில் இறங்குகிறோமே, இதனால் இன்னின்ன கஷ்டங்கள் வருமே. நமக்கு பல விதத்திலும் அவமானம் ஏற்படுமே, மானம் போய்விடுமே’’ என்று கவலைப்படக் கூடாது. அந்தப்படியாக வெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தால், பொது வாழ்வில் நாம் செய்யப் புகும் காரியமே கெட்டு விடும் என்று மிகப் புரட்சி கரமாகக் கூறுகிறார்.

இந்தப்படியாக வள்ளுவர் மக்களுக்கு நல்வாழ்வின் வழியையும், நல்லொழுக்கத்தையும் கூறுகிறார். இன்றையத் தினம் திராவிடர்களுக்கு நல்ல நூல் குறள்தான். மற்ற வேறு எதுவும் இல்லை. பகவத் கீதை, இராமாயணம், மகாபாரதம், பெரிய புராணம் முதலியவையும், அவை போன்றவையும் திராவிடரின் ஒழுக்கத்திற்கோ, உயர்வுக்கோ, மான வாழ்வுக்கோ ஏற்றபடி எழுதப்பட்ட நூல்கள் அல்ல. அவையெல்லாம் ஆரியர்கள், தங்களின் உயர்வுக்கு ஆக, தங்களின்  மேல்ஜாதித் தன்மையை நிலை நிறுத்தி, அதனால் லாபம் அடைவதற்கு ஆக ஏற்பட்ட வர்ணாசிரம தர்மத்தை வலியுறுத்தி  எழுதி வைத்துக் கொண்டதல்லாமல், பொதுவாக மனிதர்கள், உலக மக்களின் நலனுக்கு ஏற்ற முறையில் எதையும் கூறவில்லை.

(தொடரும்...)

- உண்மை இதழ், 1-15.8.18

குறளைப் போற்றுங்கள், குறள்வழி வாழுங்கள்!

- தந்தை பெரியார்

நேயன்

வள்ளுவரின் மூன்று பிரிவு வேறு! வடவரின் நான்கு பிரிவு வேறு!

 


மற்றொன்றும் நீங்கள் கவனிக்க வேண்டும். “தர்மார்த்த காமம்’’ என்பதைத்தான் வள்ளுவர் அறம், பொருள், இன்பம் என்கிற தத்துவமாக மாற்றிச் சொல்லியிருக்கின்றார் என்று சிலர் வியாக்கியானம் செய்யத் தலைப்பட்டிருக்கிறார்கள். அறம், பொருள், இன்பம் என்பன வேறு. தர்ம- அர்த்த - காம- மோட்சம் என்பன வேறு. உதாரணமாகக் காமம் என்பதை இன்பம் என்று எவனாவது கூறுவானேயானால், அக்கூற்றை அறிவுலகம் ஏற்க முடியுமா என்று கேட்கிறேன். காமத்தின் தன்மை என்ன? இன்பத்தின் நிலை என்ன? காமம், கெட்ட குணங்களில் ஒன்று. ஆசை அல்லது ஒரு நோய் (பலவீனம்). காமம் என்பது கண்டவுடன் காட்சி விகாரத்தால் தோன்றுவது. காமம் என்பதானால், கண்ட இடமெல்லாம் கண்டவாறு, மனத்தின் கண்ணே காட்சியளித்து, வெறியையுண்டாக்கி, நேர்மையை அழிக்கத்தக்கது ஆதலால் அதிலிருந்து விடுபட வேண்டும். அதனால் பெரிதும் கேடுதான்- அழிவுதான் பயனாக இருக்க முடியும்.

ஆனால் இன்பமும், அன்பும் அப்படியல்ல. அவை என்றும் நீடித்திருப்பது- இருக்க வேண்டியது. காமத்துக்கும் இன்பத்துக்கும் உள்ள வேறுபாடு மலைக்கும் மடுவுக்கும் உள்ளது போன்றதேயாகும். எனவே வள்ளுவர் வகுத்த இன்பத்துக்கு கேவலம் காமத்தை ஒப்பாகச் சொல்வது, ஒட்ட முயற்சிப்பது அறிவுக்கோ, அனுபவத்துகோ ஏற்றதல்ல என்றே கூறுவேன். அன்பைப்பற்றி வள்ளுவர் தனிப்படக் கூறியிருக்கிறார்.

இவ்வாறாகவுள்ள திருக்குறளைச் சிலர் தங்களது சொந்த நலனுக்கும் ஆதிக்கத்துக்கும் ஏற்றவாறு, குறுகிய மனப்பான்மையில் வியாக்கியானம் செய்தும் உரை எழுதியும் வருகின்றனர். இந்தப் பித்தலாட்டங்களை யெல்லாம் ஒழிக்கவேண்டிய பொறுப்பு, தமிழ்ப் பேரறிஞர்கள், காவலர்கள், பேராசிரியர் களுடையதல்லவா?

இன்பம் என்பதைக் காமமென்பதனோடு ஒப்பிட்டுக் கூறுவதை நாம் எப்படி ஒப்புக் கொள்ள முடியாதோ, எப்படி அறிவுக்கு ஏற்றுக் கொள்ளத் தகாததாயிருக்கின்றதோ அதே போன்று, வீடு - மோட்சம் என்பதையும் தமிழர்கள் ஒப்புக்கொள்ள முடியாததாகும். வள்ளுவர் வகுத்திருக்கும் “அறம், பொருள், இன்பம்’’ என்கிற மூன்றின் மூலமாக, மனித சமுதாயத்தின் நல் வாழ்வுக்கு அவர் வழி வகுத்து விட்டார். அறம் என்பது மனிதனிடம் மனிதன் நடந்துகொள்ள வேண்டிய மனிதனின் ஒழுங்குமுறை - கடமை. பொருள் என்பது மனித வாழ்க்கைச் சாதனம். இன்பம் என்பது மனிதன் அனுபவிக்கும் நற்பேறு. இந்த அடிப்படையில் இந்த மூன்று பிரிவைத் தவிர, நாலாவது பிரிவு என்று சொல்லப்படுகிற மோட்சத்தைப் பற்றியோ, மறு பிறவி, முன் ஜன்மம், காமம் என்பவைகளையோ குறளில் காணவேமுடியாது.

“கடவுள் எப்பொழுது உருவம் பெற்றதோ, அப்பொழுதே கேடும் உருவானது!’’

சமதர்ம ஞானி வள்ளுவர்!

வள்ளுவர் அந்தக் காலத்தில் வாழ்ந்த ஒரு சமதர்மவாதியாவார் என்றுகூடக் கூறலாம். ஏனென்றால் பொதுவுடமையின் அடிப்படையை நாம் குறளில் காண முடிகிறது.

“இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்துகெடுக உலகு இயற்றியான்’’ என்று ஒரு குறளில் கூறுகின்றார். “ஒருவன் பிச்சை எடுத்துத்தான் வாழவேண்டிய நிலையிருப்பின், அவனைப் படைத்ததாகக் கூறப்படும் படைத்தவனை ஓழி!’’ என்று எடுத்துக் காட்டியிருக்கிறார். மக்களை _- உலகத்தைப் படைத்தவன் ஒருவன் உண்டு என்றோ, அப்படி அவன் இருப்பதனாலும் மக்கள் நடத்தைக்கும், கருத்துக்கும், தன்மைக்கும், பண்புக்கும் அவனேதான் காரணமானவன் என்றோ, அவர் எங்கும் கருதினதாகவோ, நமக்குக் காட்டுவதாகவோ குறளில் சொல்லவே இல்லை. இதிலிருந்து வள்ளுவரின் கடவுள் தன்மை, எப்படிப்பட்டது என்பதை நீங்கள் அறியக் கூடும். குறளுக்கீடான பொதுவுடைமை சமதர்மக் கருத்து, வேறு எந்தத் தமிழ் நூலில், எங்கிருக்கிறது? எவ்வளவு தலைகீழ் மாறுதல்! ஆகவே ஆரியத்தை - மூட நம்பிக்கையை எதிர்த்துப் போராட, வள்ளுவரின் குறள் நமக்குக் கேடயமாக இருக்கின்றது. மேலும் வள்ளுவர், பொதுநலத் தொண்டு ஆற்றுவதின் மேன்மையை மிக மிகச் சிறப்பித்து வலியுறுத்திக் கூறுகிறார்.

குறளில், மக்களின் நல் வாழ்க்கைக்கும், நல்லாட்சிக்கும், மக்கள் பூரண மனிதத் தன்மையையடைவதற்கும் ஏற்ற வழிவகைகள் குவிந்து கிடக்கின்றன. உலகக் கேடுகள் ஒழிவதற்கும் வழிவகை குறளில் இருக்கின்றன. ஆரிய மத நூல்களில், அவர்களது கடவுள் தன்மை எனக் கூறப்படும் புராண இதிகாசங்களில் இவைகளுக்கு மாறுபாடான கருத்துக்களே மலிந்து கிடக்கின்றன. ஆதலால் தான் குறளைப் படியுங்கள், ஆரியநீதி நூல்களை- கோட்பாடுகளை அறவே விலக்குங்கள் என்று வற்புறுத்திக் கூறிவருகிறோம்.

திருவள்ளுவர் தலைசிறந்த சமுதாயவாதி ஆனதால்தான் ஒரு துறையையும் பாக்கி விடாமல் சகலத்தையும் தொகுத்துக் கூறியிருக்கிறார். திருக்குறள் முனிசாமி அவர்கள் சொன்னார்கள். “அறிஞன் சொல்கிறானே என்றுகூட நம்பிவிடாதீர்கள். அவனிடத்தும் குறைபாடுகள் உண்டு’’ என்று திருவள்ளுவர் கூறியிருக்கிறார். உங்களுக்கு அறிவு இருக்கிறது. திருவள்ளுவரைவிட அதிக அனுபவமும் உங்களுக்கிருக்கிறது. திருவள்ளுவர் கண்டிராத ஒலிபெருக்கியை நீங்கள் காண்கிறீர்கள். அவர் பேசியறியாத டெலிபோனில் நீங்கள் பேசுகிறீர்கள். அவர் கேட்டறியாத வானொலி இசையை நீங்கள் கேட்கிறீர்கள். அவர் பார்த்தறியாத படக் காட்சிகளை நீங்கள் பார்க்கின்றீர்கள். ஆகவே அவரைவிட உங்களுக்கு அனுபவம் அதிகமாய்த்தானே இருக்க வேண்டும். இப்படிக் கூறுவதால் அவரை இழிவுபடுத்துகிறேன் அல்லது அவர் கால மக்களைத் தாழ்வுபடுத்துகிறேன் என்று நீங்கள் நினைத்து விடாதீர்கள். அந்தக் காலத்திய அறிவாளிகளில் அவர் பெரிய அறிவாளிதான்; அவர் ஒரு பெரிய தீர்க்கதரிசிதான். ஆழ்ந்த அறிவு படைத்தவர்தான். ஆகவேதான் அவரால் எல்லா காலத்திற்கும் பொருந்தும்படியான சில உண்மைகளைக் கூற முடிந்திருக்கிறது. இன்றுள்ள அநேகம் அன்றில்லை. அன்று இவை தேவைப்படவும் இல்லை. மின்சாரம் அன்றில்லை. அணுகுண்டும் அன்றில்லை. 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த மனித சமுதாயத்துக்கு எவை தேவைப்படவில்லையோ அவை நமக்குத் தேவைப்படுகின்றன. அதுபோல் அவர்களுக்கு எவை மிகவும் தேவைப்பட்டனவோ, அவை நமக்கு மிகவும் தேவையற்றனவாகிவிட்டன இன்றுள்ள அறிவு நிலையில் நாம் ஒவ்வொரு தேவையையும் சிந்தித்துப் பார்க்கிறோம். வாழ்க்கையை வளம்படுத்துவன எவை, வாழ்க்கையைக் கெடுப்பன எவை என்று சிந்தித்துப் பார்க்கிறோம். வளம்படுத்தக் கூடியவற்றை எடுத்துக் கொண்டு, கேடு செய்ய கூடியவற்றைத் தள்ளி விடுகிறோம். இன்று தேவையாக இருப்பவை நாளை தேவையற்றுப் போகும். இன்று சிலாமணியாகும் கொள்கைகள், நாளை சிலாமணியாகாமல் போகலாம். இதுதான் உண்மைத் தத்துவம், இதுதான் அறிவு வளர்ச்சித் தத்துவம்.

(தொடரும்...)

- உண்மை இதழ், 16-31.7.18