மின்சாரம்
சமஸ்கிருதத்துக்கு இடம் அளித்திருப்பது நியாயமே என்ற பக்கத்தில் நின்று பேசிய வர்கள் சொன்னது என்ன?
'சமஸ்கிருதம் மூத்த மொழி. அதைக் கற்பிப்பதால் உங்களுக்கு என்ன சங்கடம்? இந்தியா முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் எல்லாம் கூட மாநில மொழிகள் கற்பிக்கப்படுவதில்லை, சமஸ்கிருதம் கற்பிக்கப்படுகிறது. அதே நிலைதான் தமிழ்நாட்டிலும் - உண்மை இவ்வாறு இருக்க தமிழ்நாட்டில் மட்டும் ஏன் வீண் சர்ச்சை?'
'கேந்திரிய வித்யாலயாவிலும் தமிழ் கற்பிக்கப்பட வேண்டும் என்று எந்தப் பெற் றோரும் கோரிக்கை வைக்க வில்லையே' என்ற சப்பைக் கட்டு ஒரு பக்கம்.
இப்படியெல்லாம் பேசியவர்கள் பார்ப் பனர்களாகத்தான் இருப்பார்கள் என்பதைச் சொல்லியா தெரிய வேண்டும்? சாட்சாத் அவாளே தான்.
இந்தப் பார்ப்பனர்களின் தகவல்களை யும், கருத்துக்களையும் சந்தித்த எதிர் அணியினர் மணிமணியாக வரலாற்றுப் பார்வையோடும், நடைமுறை உண்மை களோடும் எடுத்து வைத்த விவாதங்கள் வெகுசிறப்பு! வெகுசிறப்பு!
சமஸ்கிருதத் திணிப்பு என்பதில் ஓர் அரசியல் இருக்கிறது. அது ஒரு மேலாதிக்க மொழி. தமிழை பல மொழிகளாக்கிக் கூறு போட்ட மொழி. ஜாதி, சனாதனம், சமயம் என்ற பெயரால் ஆதிக்கம் செலுத்தும் மொழி - தெய்வ மொழி என்று ஏற்றிப் போற்றப்படும் மொழி.
இந்து மதத்தைப் பரப்பும் நோக்கம் கொண்ட ஆர்.எஸ்.எஸின் சித்தாந்தம் அதிலிருந்துதான் பிரசவம் ஆனது.
இந்தியாவிலேயே வெறும் 24 ஆயிரம் பேர் மட்டுமே பேசும், சமஸ்கிருதத்துக்காக இந்திய மத்திய பா.ஜ.க. அரசு ஒதுக்கியுள்ள தொகை ரூ. 643 கோடி - மற்ற அய்ந்து செம்மொழிகளுக்கும் சேர்ந்து ஒதுக்கப் பட்ட தொகை வெறும் ரூ. 26 கோடி - அதா வது அனைத்து மொழிகளையும் சேர்த் தால்கூட, சமஸ்கிருதத்திற்கு 25 மடங்கு அதிகம்.
தமிழை கேந்திரிய வித்யாலயாவில் கற்பிக்க வேண்டும் என்று எந்தப் பெற்றோர் கேட்டனர் என்று எதிர் தரப்பினர் எழுப்பிய வினாவிற்கு - கேந்திரிய வித்யாலயாவில் சமஸ்கிருதத்தைச் சொல்லி கொடுக்க வேண்டும் என்று எந்த பெற்றோர் வரிசை யாக நின்றனர்? என்ற பதிலடி.
மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற நிலை இருந்ததையெல்லாம் சுட்டிக்காட்டி சுட்டெரித்தனர்.
இவர்களுக்கு தமிழ் என்றாலே “இனந் தெரியாத” வெறுப்பு! தமிழை நீஷப்பாஷை என்று சொன்னவர் காஞ்சி பெரிய சங் கராச்சாரி ஆயிற்றே. (பூஜை வேளையில் தமிழ்ப் பேசினால் தீட்டுப்பட்டு விடுமாம்)
நிமிடத்துக்கு நிமிடம் விவாதம் சூடே றியது - பெரியவாள் எங்கே சொன்னார் - அதெல்லாம் கட்டுக்கதை என்று சமாளித் தனர்.
விரிவாகப் பதில் அளிக்க வாய்ப்பு இல்லை - நேரம் இல்லை - ஆனாலும் உண்மை என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டாமா?
ஆதாரத்திற்கு வெளியே செல்ல வேண் டிய அவசியமில்லை. தமிழை நீஷப்பாஷை என்று சொன்ன காஞ்சி சங்கராச்சாரி சந்திர சேகரேந்திர சாஸ்திரியின் முக்கிய ஆலோ சகராக இருந்த - நூறு ஆண்டுகள் வாழ்ந்து சிறிது காலத்திற்கு முன் மறைந்த அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா?
இதோ அக்னி ஹோத்ரம் பேசுகிறார்.
கும்பகோணம் மடம் (காஞ்சி மடத்துக்கு அதுதான் உண்மைப் பெயர்) சூரியன் வானத்தின் மேற்குப் பக்கமாய் மேய்ந்துக் கொண்டிருந்தான். மஞ்சள் நிற கதிர்கள் பூமியின் மீது பொலபொலவென உதிர் கின்றன. ஒருவிதமான ஊதல் காற்று கும்ப கோணத்தையே குளிப்பாட்டிக் கொண்டி ருந்தது.
அந்த நாளுக்கான மாலை நேர பூஜை களுக்காக மடம் தயாராகிக் கொண்டிருந்தது. மகா பெரியவர் ஸ்நானம் முடித்திருந்தார். மதியம் சிறிது நேரம் தூங்கினால்கூட மடி அதாவது ஆச்சாரம் போய்விடும். மறு படியும் குளித்தாக வேண்டும். அந்த வகையில்... குளித்து முடித்துவிட்டிருந்தார் மகாபெரியவர்.
அந்த நேரமாய் பார்த்து ஒரு சில பக்தர்கள் அவரைப் பார்த்தே தீருவது, அருளாசிப் பெற்றே தீருவது என்ற முடிவில் காத்திருந்தார்கள். அவர்களில், நாட்டுக் கோட்டை செட்டி நாட்டிலிருந்து வந்திருந்த அருணாசலம் என்ற பக்தர்... மகா பெரிய வரைப் பார்த்து அவரிடம் அருள்மொழிகள் வாங்கி விட்டுத்தான் போவது என்ற உறுதியோடு இருந்தார்.
அந்த நேரம் நானும் மடத்தில் இருந்த தால், அருணாசலத்திடம் சொன்னேன்... இதோ பாரப்பா, இன்றைக்கு நீ மகாபெரி யவரை பார்க்க முடியாது, நாளை வாயேன் என்றேன்.
இல்லை சாமி இப்பவே அவரைப் பார்க் கணும் - என்றார் பக்தர்.
எங்கள் பேச்சுச் சத்தத்தைக் கேட்ட சிலர்... விஷயத்தை மகாபெரியவரிடம் சொல்ல அவர் என்னை உள்ளே அழைத் தார்.
போனேன். கேட்டார். சொன்னேன். இதோ பாரும் தாத்தாச்சாரி... அவரைப் பார்க்கறதுக்கு நேக்கு ஒண்ணுமில்லை... பார்த்தால் ஏதாவது கேப்பார், பதிலுக்கு நான் தமிழ் பேச வேண்டிவரும், நோக்கு தான் தெரியுமே... தமிழ் பேசினால் எனக்கு தீட்டு. மறுபடியும் ஸ்நானம் பண்ணனும்... பூஜைக்கு நேரமாயிடுத்துல்யோ... அதனால் நான் மவுனம் அனுஷ்டிக்கிறேன்னு சொல்லி அனுப்ச்சிடுங்கோ...
என என்னோடு சமஸ்கிருத சம் பாஷணை நிகழ்த்தினார் மகாபெரியவர்.
நானும் வெளியே வந்தேன். நான் சொன்னதுதானப்பா... சுவாமிகள் மவுனத் தில் இருக்கார். நாளைக்கு வாயேன்... என்றேன்.
அப்படியா? தெய்வத்தை இன்னிக்கே பார்க்கலாம்னு எதிர்பார்ப்போட வந்தேன். சரி... நாளை வரை ஏதும் சத்திரத்தில் தங்கிவிட்டு வர்றேன்- என தாய்மொழியாம் தமிழில் மகா பெரியவரை தெய்வமாக மதித்து ஆதங்கப்பட்டுக் கொண்டே சென்றார் அருணாசலம்.
(ஆதாரம்: “இந்து மதம் எங்கே போகிறது?” - அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார், பக்கம் 95 - 97)
சொல்லியிருப்பவர், சாட்சியாக இருந்த வர், சாதாரணமானவர் அல்லர் - இந்து மத சாஸ்திரங்களைக் கரைத்துக்குடித்தவர் - சங்கராச்சாரியாருக்கே ஆலோசனை கூறும் இடத்தில் இருந்தவர்.
பூஜை வேளையில் தமிழ்ப் பேசினால், தீட்டாகிவிடும் - மறுபடியும் ஸ்நானம் செய்தாக வேண்டுமாம். இவர்களைத் தெரிந்து கொள்க!
ஆட்சி மொழி காவலர் கீ.இராமலிங் கனார் காஞ்சிபுரத்தில் அதிகாரியாக இருந்த போது சங்கராச்சாரியாரைச் சந்தித்துப் பேச வேண்டிய ஒரு சந்தர்ப்பத்தில், கீ.இராமலி ங்கனார் தமிழில் பேச, சங்கராச்சாரியார் சமஸ்கிருதத்தில் பேசிட அதனை மடத்து மேலாளர் தமிழில் மொழி பெயர்த்து சொல்லியிருக்கிறார். உரையாடல் முடிந்த நிலையில் சங்கராச்சாரியாருக்குத் தமிழில் பேச வராதா என்று மடத்தின் மேலாளரிடம் கீ.இராமலிங்கனார் கேட்ட போது ‘பெரிய வாள் பூஜை வேளையில் நீஷப்பாஷையை பேச மாட்டார்’ என்று பதில் அளித்தார்.
(‘உண்மை’, 15.12.1980 - கீ.இராமலிங் கனாருடன் கவிஞர் கலி.பூங்குன்றன் பேட்டி)
தமிழ் .. வழிபாட்டு மொழி என்பது பற்றி ‘துக்ளக்‘ இதழில் ‘சோ’ ராமசாமி தலையங் கமாக என்ன எழுதினார் தெரியுமா?
தலையங்கத்தின் தலைப்பு - “மொழி ஆர்வமா? மத துவேஷமா?” என்பதாகும்.
“நாயன்மார்களும் - ஆழ்வார்களும் இயற்றிய தமிழ்ப் பாடல்களை சமஸ் கிருதத்தில் மொழி பெயர்த்தால் அர்த்தம் இருக்கும் - அருள் இருக்காது. தமிழில் மொழி பெயர்த்தால் பொருள் இருக்கும் புனிதம் இருக்காது” (‘துக்ளக்‘: 18.11.1998) என்று ‘சோ’ எழுதிடவில்லையா?
எந்த கிறுக்குப் பிடித்த பார்ப்பானை எடுத்துக் கொண்டாலும் தமிழ் மீது துவேஷம் என்ற நஞ்சைக் கக்கத்தான் செய்வார்கள்.
சமஸ்கிருதம் என்றால் தெய்வ மொழி என்று பீற்றிக் கொள்வார்கள்.
நடராஜப் பெருமான் தன்னை மறந்து ஆடிக்கொண்டிருந்தபோது, அவரது உடுக்கிலிருந்து ‘ஹய வரடு - ஹல்” முதலிய பதினான்கு வேறு வேறான சப்தங்கள் வெளி வந்தன. அவற்றை முறைப்படுத்தி பாணினி ரிஷி சமஸ்கிருதத்தை உண்டாக் கினார்!! என்று சங்கராச்சாரியார் கூறுகிறார். (“கல்கி’ 25.6.1972)
கடுகு அளவேனும் மொழி அறிவு - மொழி விஞ்ஞானம் அறிந்தவர்கள் இந்தக் கூற்றை ஏற்பார்களா? அதே சிதம்பரம் நட ராஜன் கோயிலில் ஓதுவார் ஆறுமுகச்சாமி என்ற முதியவர் திருவாசகப் பாடலைப் பாடினார் என்பதற்காக கோவில் அர்ச்சகத் தீட்சிதப் பார்ப்பனர்கள், அவரை அடித்து உதைக்கவில்லையா? கை எலும்பில் முறிவு ஏற்படவில்லையா?
பார்ப்பனர்களைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா? அவர்களின் மொழி உணர்வு மூலம் முழுமையாகத் தெரிந்து கொள்ளலாமே!
பார்ப்பனர்கள் எப்படி இருந்தாலும் எங்கிருந்தாலும் பார்ப்பனர்கள் தான். அவர்களின் பச்சைப் பம்மாத்தில் மயங்கிட வேண்டாம்.
பார்ப்பான் பால்படியாதீர்
பார்ப்பான் சொல் கேளாதீர்!
என்று புரட்சிக் கவிஞர் பாடியதை மனதில் கொள்க!