பக்கங்கள்

தமிழ்ப் புத்தாண்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ்ப் புத்தாண்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 22 அக்டோபர், 2024

தமிழ்ப் புத்தாண்டு : சங்க இலக்கியமும் அறிஞர்களும் சொல்வதென்ன?

 

ஜனவரி 16-31

பொங்கல் விழா நாளையே தமிழர்கள் புத்தாண்டுப் பிறப்பாக பல்லாண்டு காலமாகக்  கொண்டாடி வந்திருக்கின்றனர் என்பதற்கு அறிஞர்கள் தக்க சான்றுகளாகத் தந்துள்ளனர்.

இரண்டாயிரம் (2000) ஆண்டுகட்கு முற்பட்ட கழக இலக்கியங்களில் இதற்குச் சான்றுகள் உள்ளன.

தைஇத் திங்கள் தண்கயம் படியும்  என்று நற்றிணையும் தைஇத் திங்கள் தண்ணிய தரினும் என்று குறுந்தொகையும் தைஇத் திங்கள் தண்கயம் போல் என்று புறநானூறும் தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ  என்று கலித் தொகை யும் தமிழர் வாழ்வில் தைப் பிறப்புச் சிறப்பிடம் பெற்றுள்ளதையும், ஆண்டிற்கு மாதங்களை உருவாக்கிப் பெயர்கள் சூட்டியிருப்பதை அறிய முடிகிறது.

தைப்பிறப்பாண்டு வெறும் விழாவையோ அதனாற் கிளர்ந்து எழும் மகிழ்வையோ அடிப்படையாக மட்டும் கொண்டு பிறந்ததல்ல. அறிவியல் தெளிவோடு, கதிரவன் தென்திசை நோக்கி நகர்ந்து மறுபடியும் வடதிசை நோக்கித் திரும்பும் பருவ -கால மாறுதலைக் கொண்டும் கணித்து உருவாக்கப்பட்டதாகும்.

ஆரியர் தமிழ்நாட்டிற்கு வருமுன் வான நூலை ஒரு சிறிதும் அறியார். அவர் அறிந்ததெல்லாம் திங்களுடைய வளர்ச்சி தளர்ச்சியைக் கண்டு காலத்தைக் குறிப்பிடுவது மட்டுந்தான். உவாவு (அமாவாசை)க்கு ஒரு உவா மாதம் என்று அவர்கள் கணக்கிட்டனர். அவர்கள் பல்கித் தமிழ்நாட்டை அடைந்தபோதே தமிழர்களுடைய மதி நுட்பத்தையும், கணித முறைகளையும் கண்டு வியந்து தாமும் தம் முறையைக் கையாளத் தொடங்கினர்.

அவர்கள் தங்கள் பிறை மாதங்களுக்குப் பெயர் கொடுக்க நினைத்துச் சித்திரை, வைகாசி முதலிய மாதப் பெயர்களையே பெரும்பாலும் சைத்திரம், வைகாசம் எனத் திரித்து வழங்கத் தொடங்கினர்.

சித்திரை மாதத்தில் வரும் உவா நாளுடன் முடிகிற மாதம் சைத்திரம் எனவும், இவ்வாறே ஏனைய மாதங்களுக்கும் பெயர் வைத்துக்கொள்ள ஆரிய மக்கள் சில ஆண்டுகளின் பின் தங்களின் கொள்கைக்கு மாறாகச் சைத்திரம் பங்குனியிலும் வைகாசம் சித்திரையிலும் இவ்வாறே ஏனைய மாதங்களும் முடிவதைக் கண்டு அஞ்சினர்களாய் சித்திரை முதலிய மாதங்களே நிலையானவை; ஆதலினால் அவற்றோடு தங்கள் புதிய மாதங்கள் கூடாமற் போனால் பயனற்றுப்போம் என்று தெரிந்து பங்குனியோடு முடிகிற தமது சைத்திரத்தை அதிமாதம் அல்லது பொய் மாதம் என்று தள்ளி சித்திரை மாதத்தின் உவாவுடன் முடிகிற பிழை மாதமே உண்மைச் சைத்திரம் (நிசசைத்திரம்) என்று கொள்வாராயினர்.

ஆகவே சித்திரை முதலிய பன்னிரு மாதப் பெயர்களும் ஆரியமயப்பட்டுக் கிடத்தல் அறியப்படும்.  பழந்தமிழ் மக்கள் ஓரைப் (நட்சத்திர) பெயர்களையே மாதப் பெயர்களாகக் கொண்டிருந்தனர் என்பது அறிஞர் பெருமக்களால் தெளிவுறுத்தப்படுதலாலும் பழஞ் சேர நாடான மலையாளத்தில் இவ்வழக்கே இன்றும் நடை முறையிலிருப்பது அறியப்படுதலாலும், சுறவம், கும்பம், மீனம், மேழம், விடை, ஆடவை, கடகம், மடங்கல், கன்னி, துலை, நளி, சிலை என்னும் ஓரைப் பெயர்களால் சுட்டுவதே சிறந்ததென்று தமிழ் மக்கள் கடைப்பிடித்தல் வேண்டும்! (செந்தமிழ்ச் செல்வி, சிலம்பு 25) என்று மறைமலை அடிகளாரின் நண்பர் இ.மு. சுப்பிரமணியம் (பிள்ளை) அவர்கள் கூறியுள்ளார்

முன் காலத்தில் வருடப் பிறப்பு சித்திரை முதல் நாளாக இருந்ததில்லை. தை முதல்நாள்தான் வருடப் பிறப்பாகப் பெரியோர்கள் கொண்டாடினார்கள். அந்த நாள் முதல் எல்லாருடைய வாழ்வும் பல வகையில் புதிய  வாழ்வாக இருக்க வேண்டும் என்று ஏற்படுத்தினார்கள் என்று டாக்டர் மு.வ.கூறுகிறார்.

வடநாட்டாருக்குத் தீபாவளி வருஷப் பிறப்புப் போல, தமிழ்நாட்டாருக்குப் பொங்கல் புத்தாண்டுப் பிறப்பாகும். இடைக்காலத்தில் ஆரியர் தொடர்பால், தை மாதத்திற்குப் பதிலாக, சித்திரை மாதம் புதுவருஷமாக ஆகிவிட்டது. சூரியன் தக்ஷிணாயனத்திலிருந்து அதாவது தென் திசையிலிருந்து உத்திராயனத்துக்கு அதாவது வடதிசைக்கு வரும் பருவமாறுதலை வைத்தே ஆண்டுத் தொடக்கத்தை வரையறுத்தார்கள் இயற்கை வழி வாழ்க்கை நடத்திய நம் மூதாதையர். என்று நாரண துரைக்கண்ணன் கூறியுள்ளார். (பொங்கல் தமிழ்ப் புத்தாண்டு மலர், மலேசியா 15.1.1988)

தமிழ் அரசர்களுடைய கல்வெட்டுகளிலே காணப்படும் காலக் கணக்குகள் அவர்கள் முடிசூடி ஆளத் தொடங்கிய ஆண்டிலிருந்தே கணிக்கப்பட்டுள்ளன. தமிழ் மக்களிடையே பெருவழக்கிலிருக்கும் சாலிவாகன சக வருடம் அக் கல்வெட்டுகளில் இடம் பெறவில்லை.

இச் சாலிவாகன சகவருடம் சாலிவாகனன் எனும் வடநாட்டு அரசனால் இற்றைக்கு 1880 ஆண்டுகளுக்கு முன்னர் நிலைநாட்டப் பட்டதென்பர். இவ்வரசனுக்கு முன்னர் பல்லாயிரம் ஆண்டுகளாக நயத்தக்க நாகரிகத்துடன் வாழ்ந்த தமிழ் மக்கள் தம் நாட்டுப் பெருமகன் ஒருவனுடன் இணைந்த தொடர் ஆண்டை நிலைநாட்ட முயலாதது பெரும் விந்தையாக இருக்கிறது. வட நாட்டரசன் ஒருவன் நிலைப்படுத்திய ஒரு தொடர் ஆண்டை வரவேற்று வழங்கித் தமிழினத்தின் பழமையையும் – பண்பையும், சிறப்பையும் – செல்வாக்கையும் சிதைத்து வந்தமை பெரும் வெட்கத்துக்கிடமானதாகவும் இருக்கிறது என்று இலங்கைப் பேராசிரியர் கா.பொ.ரத்தினம் விளக்குகிறார்.

 

அந்நாள் இதழ் ஒன்றில்…

கேள்வி: மனிதனுக்குக் கடவுள் நம்பிக்கை வேண்டுமா?

பதில்: வேண்டியதேயில்லை.

கேள்வி:    ஏன்?

பதில்: ஒருவனை ஒழுங்குபடுத்த மனசாட்சியும், தண்டிப்பதற்குச் சட்டங்களும் இருக்கும்போது, வீணாகக் கடவுள் நம்பிக்கை எதற்கு?

பதில் சொன்னவர்:-

உவமைக் கவிஞர் சுரதா

வெளியான இதழின் பெயர்:

சிரஞ்சீவி, 15.5.1952

செவ்வாய், 14 ஜனவரி, 2020

தமிழ்ப் புத்தாண்டு

- நாரண. துரைக்கண்ணன் -

தைப்பொங்கல் திருநாள் தமிழர்களாகிய நமக்குப் புத்தாண்டுத் தொடக்க நாளாகும். வடநாட்டாருக்குத் தீபாவளி வருடப்பிறப்புப் போல, தமிழ் நாட்டாருக்குப் பொங்கல், புத்தாண்டுப் பிறப்பாகும். இடைக்காலத்தில் ஆரியர் தொடர்பால், தை மாதத்திற்குப் பதிலாக, சித்திரை மாதம் புது ஆண்டு மாதமாகிவிட்டது.

சூரியன் தட்சிணாயனத்திலிருந்து அதாவது தென் திசையிலிருந்து உத்தராயனத்துக்கு அதாவது வடதிசைக்கு வரும் பருவ மாறுதலை வைத்தே ஆண்டுத் தொடக்கத்தை வரையறுத்தார்கள். இயற்கை வழி வாழ்க்கை நடத்திய நம் மூதாதையர்.

இவற்றையெல்லாம் பார்க்கும் போது தைப் பொங்கல் விழா தமிழர் மட்டுமல்லர். தென்னாட்டில் வாழும் பல இனத்தினரும் மட்டுமல்லர்; இந்தியா முழுவதிலுமுள்ள எண்ணற்ற இனத்தினர் மட்டு மல்லர், உலக மக்கள் அனைவருமே கொண்டாடத் தக்க    ஒப்பற்ற தேசியத் திருவிழாவாகும். சர்வதேசங் களிலுள்ள சகல இனத்தினரும், மொழியினரும் உவந்து கொண்டாட வேண்டிய ஈடு இணையற்ற திரு நாளாகும்.

பசியும், பிணியும் நீங்கி நல்வாழ்வு வாழ சூரியன் திசை மாறுவது போல, நம் வாழ்க்கையைப் பிடித் துள்ள வறுமையும் மிடிமையும் (சோம்பலையும்) மற்றும் துன்பங்களையும் மாற்றி வாழ்வில் செழுமை உண்டாக்கும் பொங்கல் திருநாளைப் பூரிப்புடன் நாம் அனைவரும் கொண்டாடுவோமாக!

-  விடுதலை ஞாயிறு மலர், 11.1.20

வியாழன், 30 மே, 2019

தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம் ‘தை’யா? ‘சித்திரை’யா?



தமிழ்ப் புத்தாண்டு சித்திரையில் தான் தொடங்க வேண்டுமா? தையில் தொடங்கக் கூடாதா? இதைப் பற்றி நாம் சற்று ஆய்வு செய்வோமே!

கணக்கீட்டு வசதிக்காக, பூமிக் கோளமா னது குத்துக் கோடுகள் (LATITUDE) மற்றும் கிடைக் கோடுகளாக (LONGITUDE) நில அறிவியல் அறிஞர்களால் பகுக்கப்பட்டு உள்ளது. கிடைக் கோடான 0 (சுழி) பாகை என்பது, இந்திய வரை படத்தைப் பொறுத்த வரையில் இலங்கைக்குத் தெற்கே கிழக்கு மேற்காக அமைந்துள்ளது. இதற்கு நில நடுக்கோடு (EQUATOR) என்று பெயர்.

இலங்கையில் உள்ள கொழும்பு நகர், நில நடுக்கோட்டுக்கு வடக்கில் (கவனிக்கவும் - வடக்கில், தெற்கில் அல்ல) ஏறத்தாழ 7 பாகை அளவில் அமைந்துள்ளது. கன்னியா குமரி 8 பாகை வடக்கில் உள்ளது. சென்னை 13 பாகை வடக்கில் உள்ளது. கொல்கத்தா 22-1/2பாகை வடக்கில் உள்ளது. இந்தியாவின் வடகோடியில் உள்ள சிறீநகர் 34 பாகை வடக்கில் உள்ளது.

மகர ரேகை (CAPRICORN), என்பது நில நடுக்கோட்டுக்கு 23-1/2 பாகை தெற்கே (அதாவது 3,313 கி.மீ தெற்கே) கிழக்கு மேற் காக அமைந்துள்ளது. கடக ரேகை என்பது (CANCER) நில நடுக்கோட்டுக்கு 23-1/2 பாகை வடக்கே, அதாவது கொல்கத்தாவுக்கு சற்று வடக்கில் கிழக்கு மேற்காக அமைந்துள்ளது.

செப்டம்பர் 22இல் நில நடுக்கோட்டுக்கு நேர் மேலே உச்சி வானத்தில் இருக்கும் சூரியன் சிறிது சிறிதாக தெற்கு நோக்கி நகர்ந்து டிசம்பர் 22இல் 231/2 பாகை தெற்கில் உள்ள மகர ரேகையை அடைகிறது. நாம் வாழும் இடம் சென்னை என வைத்துக் கொள்வோம். டிசம்பர் 22 அன்று சென்னை யிலிருக்கும் நமது உச்சந்தலைக்கு நேர் மேலே உள்ள வானத்திலிருந்து தெற்கில் ஏறத்தாழ 6150 கி.மீ தள்ளி சூரியன் இருப்ப தால், நாம் இந்தக் காலப்பகுதியில் மிகுதியான குளிரை உணர்கிறோம். சூரியன் அருகில் இருந்தால் வெப்பம் மிகும்; தொலைவில் செல்லச் செல்ல வெப்பம் குறைந்து குளிர் மிகும் என்பதை நினவிற் கொள்ளுங்கள்.

சூரியன் இருக்கும் இடம், [பாகை அளவில்]

செப்டம்பர் 22... = புரட்டாசி 6-ஆம் தேதி. [ 0 பாகை]

டிசம்பர் 22. ..............= மார்கழி 7-ஆம் தேதி....[23-1/2* தெ]

மார்ச்சு 21...............= பங்குனி 8-ஆம் தேதி.....[0 பாகை ]

ஜூன் 21...............= ஆனி 7-ஆம் தேதி...........[23-1/2* வ]

[0 பாகை = நில நடுக்கோடு என்று பொருள்]

மகர ரேகையை அடையும் சூரியன் பின்பு டிசம்பர் 22-ல் வடக்கு நோக்கி நகரத் தொடங்குகிறது. வடக்கு நோக்கிய இந்த நகர்வுக்கு உத்தராயணம் என்று பெயர். வான் அறிவியலின் படி உத்தராயணம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 22இல் அதா வது, மார்கழி 7 (அ) 8இல் தொடங்குகிறது. ஆனால் பஞ்சாங்கத்தின் படி தை முதல் நாளில் தான் உத்தராயணம் தொடங்குகிறது.

சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு மார்ச்சு 21இல் (பங்குனி 7 (அ) 8) நில நடுக் கோட்டை அடைகிறது. நில நடுக்கோட்டிலி ருந்து சூரியன் வடக்கு நோக்கி நகரும் (உத்த ராயணம்) இந்த நாளைத் தானே (அதாவது, பங்குனி 7 (அ) 8) புத்தாண்டாக அறிவித் திருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல், சோதிடக் கலையின் அடிப்படையில், மீன இராசியிலிருந்து மேஷ இராசிக்குச் சூரியன் நகரும் நாளான சித்திரை ஒன்றாம் தேதியை ஆண்டுப் பிறப்பாகவும் உத்தராயணத் தொடக் கமாகவும் அறிவித்திருப்பது முரண்பாடானது அல்லவா?

இதிலிருந்து ஒன்று உங்களுக்கு விளங்கி இருக்கும். அதாவது, சித்திரை மாதம் முதல் தேதியன்று இப்போது கொண்டாடப்படும் தமிழ் (?) வருடப்பிறப்பு அறிவியல் அடிப் படையில் சரியல்ல! சோதிட அடிப்படையில் மட்டுமே சரி! சோதிடம் என்பது அறிவியல் அளவுகோலின்படி மெய்ப்பிக்கப்பட்டது அல்லவே?

வேளாண் தொழிலில் ஈடுபட்டிருக்கும் மக்களுக்குத் தை மாதம் என்பது அறுவடை மாதம். உழைத்துப் பாடுபட்டதற்கு ஊதியத் தைக் காணும் மாதம். தனது உழைப்பினால் விளைந்த நெல்லைக் குத்தி அரிசியாக்கி, சர்க்கரைப் பொங்கல் செய்து வேளாண் மைக்கு உதவி செய்த சூரியனுக்கு விழா எடுக்கும் நாள். இந்த நல்ல நாளே வேளாண் மக்களுக்குத் திருநாள். இந்த நல்ல நாளில் திருவள்ளுவர் ஆண்டும் தொடங்குவதால், தை முதல் நாளே தமிழர்களுக்குப் புத்தாண்டு நன்னாள்.

தை முதல் தேதி தான் தமிழ்ப் புத்தாண்டு நன்னாள். திருவள்ளு வர் ஆண்டுப் பிறப்பும் இந்நாளே! தமிழர்கள் அனைவரும் இந்த நன்னாளைத் தமிழ்ப் புத்தாண்டு நாளாகவும், திருவள்ளுவர் ஆண்டுப் பிறப்பு நாளாகவும், பொங்கல் திரு நாளாகவும் கொண்டாடி மகிழ்வோம்! புத் தாண்டு வாழ்த்துகளையும் பரிமாறிக் கொள் வோம்!

இடுகை

வை.வேதரெத்தினம்

ஆட்சியர், தமிழ்ப் பணி மன்றம்.

(தி.ஆ: 2049, சிலை, 22. (06-01-2018))

பின் குறிப்பு: அறிவியலின் படி பூமிதான் சூரியனைச் சுற்றி வருகிறது. ஆனால், சோதிடக் கலையின் படி சூரியன்தான் பூமி யைச் சுற்றி வருகிறது. படிப்பவர்களுக்கு எளி தில் புரிவதற்காக, இந்தப் பதிவில், சூரியன் நில நடுக் கோட்டிலிருந்து வடக்கும் தெற்குமாக நகர்கிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதைக் கருத்திற் கொள்க!

 - விடுதலை ஞாயிறு மலர் 18. 5 .2019

செவ்வாய், 5 பிப்ரவரி, 2019

'தை’ மாதத்தை ஆண்டின் முதல் மாதமாக குறிப்பிடும் பழங்கால கல்வெட்டு கண்டுபிடிப்பு!



ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் தை மாதத்தை ஆண்டின் முதல் மாதமாக குறிப்பிடும் பழங்கால கல்வெட்டு.

ராமநாத புரம் மாவட்டம் கீழக்கரையில் வள்ளல் சீதக்காதி சாலையில் உள்ள ஜும்மா பள்ளிவாசலில் காலச்சக்கரபழங்கால கல் வெட்டு ஒன்று உள்ளது. அந்த கல்வெட்டில் தை மாதத்தை தமிழ் வருட ஆரம்ப மாத மாக குறிக்கப்பட்டு உள்ளது. அதாவது சூரியன் உத்ரா யணத்தில் பிரவேசிக்கும் மாதமாகிய ‘தை’ மாதத்தில் ஆரம்பித்து ஆனியில் முடிவுற்று பின் அங்கிருந்து தட்சனாய ணத்தில் பிரவேசிக்கும் மாத மாகிய ஆடியில் ஆரம்பித்து மார்கழியில் முடிவடைகிறது.

முற்காலத்தில் கோள்களின் சுழற்சியை அடிப்படையாக கொண்டே காலத்தை கணித் துள்ளார்கள். பூமியின் சுழற்சி யால் சூரியன் பூமியின் தென் பகுதியில் இருந்து வடபகுதி யின் கடைசிக்கும், வடபகுதி யில் இருந்து தென்பகுதியின் கடைசிக்கும் செல்ல முறையே 6 மாத காலங்கள் எடுத்துக் கொள்கிறது.

தை மாதத்தில் அதிக வெப்பம் மற்றும் அதிக குளிர் இல்லாமல் இதமான சூழல் இருக்கும். தைப்பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழிக்கு ஏற்ப சுப காரியங்கள் இந்த மாதத்தில் ஆரம்பிப்பதும், செயல்படுத்துவதும் சிறப் படையும் என்ற நம்பிக்கை மக்களிடம் உண்டு. மார்கழியில் அறுவடை முடித்து புது அரிசி கொண்டு சூரியனுக்கு பொங்க லிட்டு உழவர்கள் தை மாதத்தை வரவேற்கின்றனர். இந்த வழக்கம் பண்டைய காலத்தில் இருந்தேதொடர்கிறது என்பதை இலக்கியங்கள் தெரிவிக்கின்றன.

இதனால்தான் 2006 -  11  திமுக ஆட்சியில் அப்போ தைய தமிழக முதல்வராக இருந்த கலைஞர்  ‘தை’ மாத பிறப்பை தமிழ் புத்தாண்டாக அறிவித்தார். பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் இந்த அறிவிப்பை நீக்கி மீண்டும் சித்திரை மாதத்தின் முதல் தேதியே தமிழ் புத்தாண்டு பிறப்பாக அறிவிக்கப்பட்டது. தற்போது காணப்பட்டுள்ள முன்னோர்களின் பழங்கால கல்வெட்டு தை மாதத்தை தமிழ் மாதத்தின் தொடக்க மாதமாக ஆரம்பித்துள்ளதை நிரூபித்துள்ளது. 300 ஆண்டு களுக்கு முன்பு தை மாதத்தை தமிழ் வருடத்தின் முதல் மாதமாக கடைப்பிடிக்கப் பட்டு வந்துள்ளது என்பதற்கு சான்றாக இந்த பழங்கால கல்வெட்டு உள்ளது. இந்த தகவலை கீழக்கரை வரலாற்று தொல்லியல் ஆய்வாளர் விஜயராமு தெரிவித்தார்.

 - விடுதலை ஞாயிறுமலர், 12.1.19

இலக்கியத்தில் - தை மாதத்தின் சிறப்பு

பொங்கல் விழா நாளையே தமிழர்கள் புத்தாண்டுத் தொடக்க மாகப் பல்லாண்டுக் காலமாகக் கொண்டாடி வந்துள்ளனர் என்ப தற்கு ஈராயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட கழக இலக்கியங்களில் சான்றுகள் உள.


“தைஇத் திங்கள் தண்கயம் படியும்” - நற்றிணை

“தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” - குறுந்தொகை

“தைஇத் திங்கள் தண்கயம் போல்” - புறநானூறு

“தைஇத் திங்கள் தண்கயம் போல" - ஐங்குறுநூறு

“தையல் நீராடி தவம் தலைப்படுவாயோ" - கலித்தொகை

தமிழ்ப் புத்தாண்டைப் பற்றிய குறிப்புகள் - மு.மணிவெள்ளையன்

* தீய்ந்த தீபாவளி வந்தாலென்ன? காய்ந்த கார்த்திகை வந்தாலென்ன? மகா ராசன் பொங்கல் வரவேண்டும் என்பது நாட்டுப்புற நடைமுறை மொழி வழக்கு.

* பண்டைத் தமிழர் பொங்கல் விழா கொண்டாடும் வெற்றியைப் பற்றிப் புற நானூற்றிலே ஒரு பாடல் உண்டு. தொன்மையுடைய பொங்கலைப் பற்றிக் கருவூர் கந்தப் பிள்ளை சாத்தனார் என்ற புலவர் பாடியுள்ளர். பாடல்: 168.

* தைப் பிறந்தால் வழி பிறக்கும் - தை மழை; நெய் மழை-என்பன போன்ற பழமொழிகள் தமிழர் புத்தாண்டு வரவேற்பை உறுதிப்படுத்துவனவாகும்.

-  விடுதலை ஞாயிறுமலர், 12.1.19

தமிழ்ப் புத்தாண்டு எது?

2001 - மலேசியா - கோலாலம்பூர் மாநாட்டில் சிறப்புத் தீர்மானங்கள்




தை முதல் நாள்தான் தமிழாண்டுத் தொடக்கம் எனும் முடிவு தமிழ்ச் சான்றோர் களால் 1921 ஆம் ஆண்டு உறுதிச் செய்யப் பெற்று 1935 ஆம் ஆண்டு தெளிவுபடுத்தப் பட்டுத் தொடர்ந்து பல்வேறு கூட்டங்களில், மாநாடுகளில், கருத்தரங்கங்களில் தீர் மானமாக அமையப் பெற்றது.

அம் முடிவு தமிழர் வாழும் உலக நாடு கள் அனைத்தும் ஏற்றுக் கொண்டு நடை முறைப்படுத்துவான் வேண்டி தி.பி.2031 சிலைத் திங்கள் 22 ஆம் பக்கல் (1.6.2001) மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் அமைந்துள்ள பிரிக்பீல்ட்ஸ், அசோகர் அரங்கத்தில் நடைபெற்ற -

தை முதல் நாளே தமிழாண்டுத் தொடக் கம் எனும் உலகப் பரந்துரை மாநாட்டில் பரந்துரை செய்யப் பெற்று அறிஞர் பெரு மக்களால் கீழ்க்காணும் சிறப்புத் தீர்மானங் கள் முன்மொழிந்து, வழிமொழிந்து ஏற்றுக் கொள்ளப்பட்டன.

1) தை முதல் நாளே தமிழாண்டுத் தொடக்கம் என்பதனை உலகத் தமிழர்கள் அனைவரும் ஏற்று இனித் தொடர்ந்து அனைத்து வாழ்வியல் நிலைகளிலும் பின் பற்றுமாறு இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

2) இவ்வுலகில் வெளிவரும் செய்தி ஊடகங்கள் (தாளிகைகள், ஏடுகள், வானொலி, தொலைக்காட்சி, இணையதளம்) அனைத்தும் தமிழ் இன, மொழி, நெறி நலங்கருதி இனித் தொடர்ந்து திருவள்ளுவர் ஆண்டுத் தொடக்கத்தைப் பின்பற்றி தமிழர் இறைமைக்குத் துணை நிற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

3) உலகெங்கும் தமிழர் பரந்து வாழ் கின்றனர். அவர்களைப் புரந்து வருகின்ற நாடுகளைச் சேர்ந்த அரசு, அரசியலார் இப்பரந்துரையினை ஏற்று அதைத் திங்கள் முதல் நாளில் தமிழ் மக்களுக்குப் பொது விடுமுறை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றது.

4) “நாள் காட்டியும் அதன் வரலாறும்” என்ற தொகுப்பினைச் செய்து வரும் இங் கிலாந்து நாட்டின் எருதந்துறை பல்கலைக் கழக அச்சகத்தார் தங்களுடைய உலக இனங்களின் புத்தாண்டு வரலாற்றுத் தொகுப் பில் தமிழர்க்குரிய ஆண்டுத் தொடக்கமாக “தை மாத முதல் நாளே தமிழாண்டுத் தொடக் கம்” என்பதை இணைத்துக் கொள்ளுமாறு வேண்டப்படுகிறது.

5) பாராட்டுகிறோம்: தை முதல் நாளே தமிழாண்டு எனும் கருத்துருவாக்கத்தை வலியுறுத்தி நீண்டகாலமாக நடைமுறைப் படுத்தியும் பரப்பியும் வரும் போராட் டத்தில் முன்னோடியாக விளங்கய உலக நாடுகளைச் சேர்ந்த செய்தி ஊடகங்கள், தமிழர் அமைப்புகள் குறிப்பாகத் தனித் தமிழியக்க உணர்வாளர்கள் தமிழ் அறிஞர் பெருமக்கள், அரசியல் இயக்கங் கள் முதலான அனைவரையும் இம்மா நாடு நினைவு கூர்ந்து நன்றி பாராட்டு கின்றது.

கரு: “தை முதல் நாளே தமிழாண்டுத் தொடக்கம்” உலகப் பரந்துரை மாநாடு

இடம்: அசோகா அரங்கம், பிரிக் பீல்ட், கோலாலம்பூர்

நாள்: 6.1.2001

நோக்கங்கள்


1) இம்மாநாட்டின் வழி, தமிழ்ச் சான்றோரும் அறிஞர் பெருமக்களும் ஒட்டு மொத்தமாகப் பண்பாட்டியல் அறிவியல், வானியல், வரலாற்றியல் சான்றுகள் வழி உறுதிப்படுத்திய தை - மாதம் முதல் நாளே தமிழாண்டுத் தொடக் கம் என்பதை உலகத் தமிழருக்கு உணரச் செய்து ஏற்றுப் பின்பற்ற வைத்தல்.

2) இம்மாநாட்டின் வழி தாய்மொழிக் கல்வி நிலைப்பாட்டினையும் தமிழ் நெறிச் சிந்தனைகளையும், தமிழியல் கோட் பாடுகளையும் தடம்புரளும் தலைமுறை யினர்க்கு உணர்த்தி நல்ல மனம் நலம் சார்ந்த தமிழ்ப் பண்பாளர்களை உரு வாக்குதல்.

3) இம் மாநாட்டின் வழி தமிழ் மக்கள் மனத்தின் கண் புத்துணர்ச்சியையும், புத்தெழுச்சியையும் தமிழர் அறிவு கோட் பாட்டின் அடிப்படையில் உருவாக்கி மொழியியல், இனவியல், வரலாற்றியல், பண்பாட்டியல், மெய்யியல் தன்மைகளை உணர்த்துதல்.

4) தை முதல் நாளே தமிழாண்டுத் தொடக்கம் என்ற நீண்ட கால உலகத் தமிழர் போராட்டத்தைத் தமிழக அரசு, புதுவை அரசு, இந்திய நடுவணரசு, யுனே கக்கேர் அமைப்பு மற்றும் உலகளாவிய தமிழ் மக்களை புரக்கும்  நாடுகளின் அர சுகளை மதிக்கச் செய்து நடைமுறைப் படுத்தத் தூண்டுதல்.

உயர்வு நாடிச் செல்வோம்! ஒன்றுபட்டு வெல்வோம்!

மாநாடு ஏற்பாடு: மலேசியத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், மலேசியத் தமிழ் நெறிக்கழகம், மலேசிய திராவிடர் கழகம்.

-  விடுதலை ஞாயிறுமலர், 12.1.19

தைத்திங்கள் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!



ஆண்டுகள் வரலாற்றைத் தொடர்ச்சி யாகப் பதிவு செய்யப் பயன்பட வேண்டும். அவை குழப்பத்திற்கு இடமின்றி இருத்தல் வேண்டும். தமிழர் வரலாற்றில் காலக்குழப்பம் இருப்பதற்குத் தொடராண்டு முறை இல்லாதது முக்கியக் காரணமாகும்.

பழந்தமிழரிடையே வியாழ ஆண்டு என் கிற அறுபதாண்டு கணக்குமுறை இருந்துள் ளது என்பதை வரலாற்றில் அறிய முடிகிறது. இந்த அறுபதாண்டு கணக்கு முறையைப் பின்னாளில் ஆரியர்கள் தாங்கள் கையகப் படுத்திக் கொண்டு ஆரியமயமாக்கி 60 ஆண்டுகளுக்கும் சமஸ்கிருதப் பெயர்களைச் சூட்டி, காலப் போக்கில் தமிழரின் ஆண்டு முறையையும், வானியல் கலையையும், அய்ந்திற அறிவையும் அழித்து ஒழித்தனர். தமிழரிடையே தொடராண்டு முறை இல்லாமல் போனதால் இன்று நாம் காணுகின்ற பல்வேறு தாக்குறவுகளும் பின்னடைவுகளும் தமிழினத்திற்கு ஏற்பட்டு விட்டது.

இந்தக் குழப்பத்தை நீக்க அய்ந்நூறு தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள் மறைமலை அடிகளார் தலைமையில் 1921ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஒன்று கூடி ஆராய்ந்தார்கள். திருவள்ளுவர் பிறந்த ஆண்டை கி.மு.31 எனக் கொண்டு, திருவள் ளுவர் பெயரில் தொடர் ஆண்டை ஏற்படுத் துவதென முடிவு செய்தனர். இழந்த தொன் மைச் சிறப்புக்குரிய தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமென அவர்கள் அறிவித்தனர். சைவம், வைணவம், புத்தம், சமணம், கிறித்தவம், இசுலாம் எனப் பல்வேறு சமயத்தைத் தழுவிய அந்த அய்ந்நூறு சான்றோர்கள் தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்ததற்குச் சரியான காரணம் சான்றுகளும் இருக்கின்றன.

தை முதல் நாள்தான் தமிழ்ப் புத் தாண்டு என்பதற்கு ஈராயிரம் ஆண்டு களுக்கும் முற்பட்ட கழக இலக்கியங் களில் காணப்பெறும் சான்றுகள் சில:

1. தைஇத் திங்கள் தண்கயம் பாடியும் - நற்றிணை

2. தைஇத் திங்கள் தண்ணிய தரினும் - குறுந்தொகை

3. தைஇத் திங்கள் தண்கயம் போல் - புறநானூறு

4. தைஇத் திங்கள் தண்கயம் போல - அய்ங்குறுநூறு

5. தையில் நீராடித் தவம் தலைப்படு வாயோ - கலித்தொகை

தை பிறந்தால் வழி பிறக்கும். தை மழை நெய் மழை முதலான பழமொழிகள் தமிழ் மக்கள் நாவில் இன்றும் பயின்று வருகின்றன. இவை வாழையடி வாழையாக வாய் மொழிச் சான்றாக அமைந்துள்ளன.

இனி, தை முதல் நாளே புத்தாண்டு என்பதற்கு உரிய வானவியல் அடிப்படை யிலான காரணத்தைக் காண்போம். பூமி ஒரு முறை கதிரவனைச் சுற்றி வரும் காலமே ஓர் ஆண்டாகும். இச்சுழற்சியில் ஒருபாதிக் காலம் கதிரவன் வடதிசை நோக்கியும் மறுபகுதிக் காலம் தென்திசை நோக்கியும் செல்வதாகக் காணப்படுகிறது. இதனால் ஓராண்டில் சூரியனின் பயணம், வடசெலவு (உத்ராயணம்) என்றும் தென் செலவு (தட்சாயணம்) என்றும் சொல்லப்படும். தை முதல் ஆனி வரை ஆறு மாதம் வடசெல வும் ஆடி முதல் மார்கழி வரை தென் செலவுமாகும். அந்த வகையில், கதிரவன் வடசெலவைத் தையில்தான் தொடங்கு கிறது. இந்த வானியல் உண்மையை அறிந்த பழந்தமிழர் தைத் திங்களைப் புத்தாண்டாக வைத்தது மிகவும் பொருத்தமானதே.

இப்படியும் இன்னும் பல அடிப்படை உதாரணங்களாலும் தை முதல் நாளை அய்ந்நூறு தமிழ்ச் சான்றோர்கள் புத்தாண்டாக அறிவித்தனர். தமிழ்நாடு அரசு அதனை ஏற்றுக் கொண்டு 1972 முதல் அரசுப் பயன் பாட்டிலும் ஆவணங்களிலும் நடைமுறைப் படுத்தி வருகிறது.

பத்தன்று நூறன்று பன்னூ றன்று

பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்

புத்தாண்டு, தை முதல் நாள்,

பொங்கல் நன்னாள்!

என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடலும் தமிழருக்குத் தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாள் என்பதைத் தெளிவாக்குகிறது.

தமிழ் மொழி, இன, சமய, கலை, பண்பாடு, வரலாற்று மீட்பு வரிசையில் பிற இனத் தாரின் தாக்குதலால், படையெடுப்பால், மறைப்புகளால், சூழ்ச்சிகளால் இடைக் காலத்தில் சிதைக்கப்பட்ட தமிழரின் வானி யல் கலையை அய்ந்திரக் (சோதிடம்) கலையை நாம் மீட்டெடுக்க வேண்டும். அப்போது தான் தமிழரின் செவ்வியல் நெறியை நிலைப் படுத்த முடியும்.

- லெட்சுமணன், ஈப்போ

நன்றி: முகம், சனவரி 2019
- விடுதலை ஞாயிறு மலர், 12.1.19

திங்கள், 4 பிப்ரவரி, 2019

சுறவம் (தை) முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு

#திருவள்ளுவராண்டே #தமிழராண்டு

#சுறவம் (தை) #முதல் #நாளே #தமிழ்ப்புத்தாண்டு
-------------------------------

ஒரு முறை கதிரவன் தோன்றி, மறைந்து மீண்டும் தோன்றுவதற்கு முந்திய பொழுதுவரை உள்ள காலத்தையே ஒரு நாள் என்கிறோம். இவ்வாறு கொள்ளுதலே இயற்கையொடு பொருந்தியதும் தமிழ்மரபு பற்றிய நடைமுறையில் உள்ளதும் ஆகும். ஆகவே நாள் என்பது இயல்பாகக் கதிரவன் தோற்றத்தையே தொடக்கமாகக் கொண்டுள்ளது.
கிழமை (வாரம்) என்பதும் கதிரவனில் இருந்தே தொடங்குகின்றது.
கிழமையின் முதல்நாள் ஞாயிற்றுக்கிழமையே.
மாதத்தின் தொடக்கமும் கதிரவனை அடிப்படையாகக் கொண்டதே.

திங்கள் வளர்தலும் தேய்தலும் ஆகிய, இரு பதினைந்து நாள் அடங்கிய, ஒளிப்பக்கம் (அமர பட்சம்),
இருட் பக்கம் (கிருட்டிணபட்சம்) என்னும் இரு பக்கங்களால் ஆன, முப்பது நாட்களைக் கொண்டது ஒரு மாதம் என்னும் அளவீடு, திங்களை அடிப்படையாகக் கொண்டதே ஆயினும், மாதம் என்னும் சொல்லும் மதியான் வந்தாய் இருப்பினும் மாதத்தின் தொடக்கம் திங்களின் அடிப்படையில் அமைந்ததன்று. அப்படி அமைந்திருப்பின் காருவா (அமாவாசை) நாளே மாதத் தொடக்கமாக அமைந்திருக்கும். கதிரவன் ஓரைக்குள் புகுந்துசென்று வெளியேறுங்காலம் முப்பது நாள் கொண்டதாய் இருத்தலாலேயே அது மாதம் எனப்படுகிறது. அவ்வகையில் மாதத்தின் தொடக்கம் என்பது  கதிரவனை அடிப்படையாகக் கொண்டே மாதம் தொடங்குகிறது என்பது தெளியப்படும்.
மேற்கூறியாங்குச் சுறவம் (தை) முதல் நாளில் தொடங்கும் வடசெலவும், கடகம் (ஆடி) முதல்நாளில் தொடங்கும் தென்செலவும் எனும் இருவகைச் செலவும் கதிரவனை அடிப்படையாய்க் கொண்டனவேயாம்.

ஆகவே, ஓர் ஆண்டின் தொடக்கமும் கதிரவன் இயக்கத்தின் அடிப்படையில் அமைதலே இயற்கை நெறியும் தமிழ்மரபுமாம், தமிழ்நாட்டு மக்கள் தாம் வாழும் தென்றிசையில் இருந்து வடசெலவு தொடங்கும் சுறவ(தை) முதல்நாளில் கதிரவனைப் போற்றியும் பொங்கலிட்டு மகிழ்ந்தும் புதுநாளாகக் கொண்டாடியும் வருவதால் அதுவே ஆண்டின் தொடக்கமாகும்.

ஆனால், விக்கிரமாதித்தன் என்னும் வடபுல மன்னன் பெயரான் அமைந்த விக்கிரம சகம் என்னும் ஆண்டு முறையின்படி, மேழ(சித்திரை) மாத முதல்நாளே ஆண்டின் தொடக்கமாகக் கொள்ளப்பட்டு, இக்காலத்தில் அதுவே தமிழ்ப் புத்தாண்டு நாள் எனக் கொண்டாடப்படுகின்றது.

வேளாண்மைத் தொழிலுக்கான வாய்க்கால் வெட்டு, எருவடி முதலான வேலைகள் பெரும்பாலும் மேழ(சித்திரை) மாதத்தில் தொடங்கி நடைபெற்றுப் போரடி, வைக்கோற்போர் என பெரும்பாலும் மீனம்(பங்குனி) மாதத்தில் நிறைவடைதலின் , மேழம் முதல் மீனம் ஈறான பன்னிரு மாதக் காலப்பகுதி ஓராண்டாக மக்களிடையே வழக்கூன்றியிருக்கிறது, அது, கல்வியாண்டு, கணக்கியல் ஆண்டு என்பன போல் வேளாண்மை ஆண்டாம்.
ஆயினும் அதுவே எல்லா நிலைக்கும் ஏலாது.

அன்றியும், விக்கிரம சகயாண்டு ‘பிரபவ’ முதல் ‘அட்சய’ ஈறான பெயர்களைக் கொண்ட அறுபதாண்டு வட்டமாகச் சுழன்று வருவதால், நெடுங்கால வரலாற்றுக்கும் அது பயன்படுமாறில்லை.
மேலும் ‘பிரபவ’ முதலான அறுபது பெயர்களும் சமற்கிருதமே யன்றித் தமிழ்சொற்கள் அல்ல.      ‘ஆண்டுப் பிறப்பு’ என்பதில் உள்ள பிறப்பை மகப்பேறெனத் தவறாகக் கொண்டு ‘அட்சய’ ஈறான அவ்வறுபதும் குழந்தைகள் என்றும், அவை பெண்கோலம் பூண்ட நாரதனும் அவன் பாட்டனான கண்ணனும் கூடியதனால் உடனேயும் தொடர்ந்தும் பிறந்தன என்றும் கூறும் தொன்ம(பாகவத)க் கதையும் மிகவும் இழிவானதாக இருக்கிறது.

ஆகவே தமிழ்ப் பேரறிஞர்கள் கடந்த எண்பத்தைந்து ஆண்டுகட்கு முன், சென்னைப் பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் தவத்திரு மறைமலையடிகளார் தலைமையில் கூடி நிறுவிய தொடராண்டான திருவள்ளுவர் ஆண்டே தமிழாண்டாகக் கொள்ளத்தக்கது; இன்று தமிழுணர்வாளர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

திருவள்ளுவர் ஆண்டான தொடராண்டின் தொடக்கம், இப்போது பெருவாரியாக வழங்கிவரும் கிரிகேரியன் ஆண்டெனப்படும் ஆங்கில ஆண்டிற்கு முப்பத்தோராண்டு முற்பட்டது.
அக் கிறித்துவ ஆண்டு கி.மு –கி.பி என வழங்கப்படுதல் போல் திருவள்ளுவர் ஆண்டும் தி.மு–தி.பி என வழங்கப் பெறும்.
இவ்வாண்டு கி.பி.2019 ஆதலின் இதற்குச் சம்மான திருவள்ளுவராண்டு தி.பி.2050 ஆகும்.

ஆகவே, மேழ(சித்திரை) முதல் நாளைத் தொடக்கமாகக் கொண்டதும் தமிழாண்டு என வழங்கப்பட்டு வருவது போலியானதும் பெரும் பயனற்றதும் தமிழுக்கு அயலானதும் ஆகும்! எனவே, தமிழாண்டெனக் கடைப்பிடிக்கத் தக்கது தொடாராண்டான திருவள்ளுவர் ஆண்டே என்பதும்
இத் தமிழாண்டின் தொடக்கம் பொங்கல் திருநாளான சுறவ (தை) முதல் நாளே என்பது தெள்ளத் தெளிவாம்.

தமிழ் மாதங்கள் - சமற்கிருதம் - திரிபு மாதங்கள்:
``````````````````````````````````````````````````````````````````````````````````````

1. சுறவம் - புனர்தை - தை
2. கும்பம் - மகசி - மாசி
3. மீனம் - பல்குணா - பங்குனி
4. மேழம் - சைத்திரம் - சித்திரை
5. விடை - வைசாகி - வைகாசி
6. ஆடவை - மூலன் - ஆனி
7. கடகம் - உத்திராடம் - ஆடி
8. மடங்கல் - அவிட்டம் - ஆவணி
9. கன்னி - புரட்டாதி - புரட்டாசி
10. துலை - அகவதி - ஐப்பசி
11. நளி - கிருத்திகா - கார்த்திகை
12. சிலை - மிருகசீரச - மார்கழி
--------------------------------
குறிப்பு: தமிழாண்டு தொடர்பாக மேலும் தெளிவு பெற,
புலவர் இறைக்குருவனார் ஐயா எழுதிய நூல் இருக்கிறது. அதன் தேவைக்கான தொடர்புக்கு:

இறை பொற்கொடி அம்மா,
திருவள்ளுவர் தமிழ்வழிப் பள்ளி,
இராசாராம் தெரு,
அரங்கநாத புரம்,
சென்னை-600100
பேச:9841633927