பக்கங்கள்

புதன், 24 ஜூலை, 2024

பழந்தமிழரின் 47 வகையான நீர்நிலைகள் – தெரிந்துகொள்வோம்!


 01. அகழி – (Moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்.

02. அருவி – (Water fall) மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது.
03. ஆழிக்கிணறு – (Well in Seashore)கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு
04. ஆறு – (River) – பெருகி ஓடும் நதி.
05. இலஞ்சி -(Reservoir for drinking and other purposes)பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம்.
06. உறை கிணறு -(Ring Well)மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வளையமிட்ட கிணறு.
07. ஊருணி -(Drinking water tank)மக்கள் பருகும் நீர் நிலை.
08. ஊற்று – (Spring) பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது.
09. ஏரி -( Irrigation Tank) வேளாண்மை பாசன நீர் தேக்கம்.
10. ஓடை (Brook) அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் – எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்.
11. கட்டுக்கிணறு (Built-in -well) – சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்கட்டிய கிணறு.
12. கடல் – (Sea) சமுத்திரம்.
13. கம்வாய் (கம்மாய்) -(Irrigation Tank) பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்.
14. கலிங்கு – (Sluice with many Ventures)ஏரி முதலிய பாசன நீர் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன் எச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்ட பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு.
15. கால் – (Channel) நீரோடும் வழி.
16. கால்வாய் – (Supply channel to a tank ) ஏரி, குளம் ஊருணி இவற்றிக்கு நீர் ஊட்டும் வழி.
17. குட்டம் – (Large Pond) பெருங் குட்டை.
18. குட்டை – (Small Pond) சிறிய குட்டம். மாடு முதலியன் குளிப்பாட்டும் நீர் நிலை.
19. குண்டம் – (Small Pool) சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை.
20. குண்டு – (Pool) குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்.
21. குமிழி – (Rock cut Well) நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு.
22. குமிழி ஊற்று – (Artesian fountain)-அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று
23. குளம் – (Bathing tank) ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப்பயன்படும் நீர் நிலை.
24. கூவம் – (Abnormal well) ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு.
25. கூவல் – (Hollow) ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்.
26. வாளி – (stream) ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர் வெளிச் செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை.
27. கேணி –( large well) அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங் கிணறு.
28. சிறை – (Reservoir) தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை.
29. சுனை – (Mountain Pool ) மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை.
30. சேங்கை – (Tank with duck weed) பாசிக்கொடி மண்டிய குளம்.
31. தடம் – (Beautifully constructed bathing tank) அழகாக நாற்புறமும் கட்டப்பட்ட குளம்.
32. தளிக்குளம் – (tank surrounding a temple) கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற நீர் நிலை.
33. தாங்கல் – (Irrigation tank) இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை குறிக்கும்.
34. திருக்குளம் – (Temple tank) கோயிலின் அணித்தே அமைந்த நீராடும் குளம். இது புட்கரணி எனவும் பெயர் பெறும்.
35. தெப்பக்குளம் -(Temple tank with inside pathway along parapet wall)ஆளோடியுடன் கூடிய, தெப்பம் சுற்றி வரும் குளம்.
36. தொடு கிணறு – (Dig well) ஆற்றில் அவ்வப்பொழுது மணலைத்தோண்டி நீர் கொள்ளும் இடம்.
37. நடை கேணி – (Large well with steps on one side) இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங் கிணறு.
38. நீராவி – (Bigger tank at the center of Building hall) மய்ய மண்டபத்துடன் கூடிய பெருங் குளம். ஆவி என்றும் கூறப்படும்.
39. பிள்ளைக்கிணறு -(Well in middle of a tank) குளம் ஏரியின் நடுவே அமைந்த கிணறு.
40. பொங்கு கிணறு – (Well with bubbling spring) ஊற்றுக்கால் கொப்பளித்துக்கொண்டே இருக்கும் கிணறு.
41. பொய்கை – (Lake) தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை.
42. மடு – (Deep place in a river) ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம்.
43. மடை – (Small sluice with single venturi) ஒரு கண்ணே உள்ள சிறு மதகு.
44. மதகு – (Sluice with many ventures) பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ளது.
45. மறு கால் – (Surplus water channel) அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்.
46. வலயம் – (Round tank) வட்டமாய் அமைந்த குளம்.
47. வாய்க்கால் – (Small water course) ஏரி முதலிய நீர் நிலைகள்.

தமிழ் எழுத்துகளில் கூட பார்ப்பன – சூத்திர எழுத்து என்ற வருணாசிரமம்”



 பேராசிரியர் வெள்ளையன்

தமிழிலே பேசுகின்ற நான் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய தந்தை பெரியார் அவர்களின் கருத்தையும் இங்கே கூறிக் கொள்ள விரும்புகிறேன். ஒலி வடிவத்தை மாற்ற வேண்டுமென்று தந்தை பெரியார் சொல்லவில்லை. வரி வடிவத்தை மாற்ற வேண்டுமென்று தான் தந்தை பெரியார் கூறுகிறார். பெரும் பெரும் புலவர்கள் பேராசிரியர்கள் மகா வித்வான்கள் மஹாமஹோபாத்தியாயர்கள் போன்றவர்களுக் கெல்லாம் தோன்றாத இந்தச் சிந்தனை நம் வெண்தாடி வேந்தரின் எண்ணத்தில் தான் பிறந்தது.
247 எழுத்துக்களையும் 29 எழுத்துக்களாகச் சுருக்கிக் காட்டுகின்ற ஆராய்ச்சியை எந்தத் தமிழ்ப் பேராசிரியரும் சிந்தித்துப்பார்க்காத அந்தக் காலத்திலேயே கும்பகோணம் அரசினர் கல்லூரியிலும், பச்சையப்பன் கல்லூரியிலும் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பே தந்தை பெரியார் அவர்கள் விளக்கியுள்ளார்கள்.

பன்னிரண்டு உயிர் எழுத்தையும் 5 எழுத்தாக ஆக்கிக் காட்டிய மாமேதை நமது அய்யா தந்தை பெரியார் அவர்கள். அய், ஔ என்ற இரண்டு எழுத்துகளையும் அய், அவ் என்றே எழுதினால் எந்தக் குந்தகமும் வந்து விடாது. அ, இ, உ, எ, ஒ, என்ற ஒவ்வொரு எழுத்துக்களோடு கால் வாங்குகின்ற குறியை, அதாவது என்ற குறியைச் சேர்த்து எழுதினால், அ- என்பதை ஆ என்று ஒலிக்கலாம் இ-, என்பதை ஈ என்று ஒலிக்கலாம், இப்படியே மற்ற உயிர் எழுத்துக்களுக்கும் சேர்த்துக் கொள்ளலாம், ஆங்கிலத்தை போலவே தமிழிலும் 5 உயிர் எழுத்துக்கள் என்று ஆகிவிடும். இன்னும் சில குறியீடுகளையும் உரு வாக்கிக் கொண்டால், 131 வரி வடிவங்களை 29 ஆகச் சுருக்குவதற்கு வழி இருக்கிறது என்பதை தந்தை பெரியார் அவர்கள் வெளியிட்டுள்ள “எழுத்துச் சீர்திருத்தம்” என்ற நூலைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.


247 எழுத்துக்களும், பேதம் வளர்த்திடப்பெரும் பெரும் புராணங்களும் இதிகாசங்களும் தமிழிலே ஏராளமாக இருப்பதால் தான் இதனைக் காட்டு மிராண்டி மொழி என்று தந்தை பெரியர் அவர்கள் கூறி வருகின்றார்கள் என்று நான் நினைக்கின்றேன்.
இதிகாசத்திலும் புராணத்திலும் மட்டும்தான் நம்மை இழிவு செய்திருக்கிறார்கள் என்பதல்ல இலக்கணத்திலும் கூட நம்மை இழிவு படுத்தியிருக்கிறார்கள். “வச்சணந்தி மாலை” எனப்படும் வெண்பாப்பாட்டியல் என்னும் நூல், எழுத்துக்களில் கூட, பார்ப்பன எழுத்து, அரச எழுத்து, வணிகர் எழுத்து, சூத்திர எழுத்து என்று வருணப்பாகுபாட்டை வகுத்துக் காட்டுகிறது.

உயிர் எழுத்துக்கள் பன்னிரெண்டும் முதலில் உள்ள மெய்கள் ஆறும் பார்ப்பன எழுத்துக்களாம் அடுத்துள்ள மெய்கள் ஆறும் சத்திரிய எழுத்துக்களாம்; அடுத்த 6இல் ழ, ள ஆகிய இரண்டும் சூத்திர எழுத்துக்களாம், மற்ற நான்கும் வணிக ஜாதி எழுத்துக்களாம். இப்படி எழுத்துக்களிலே கூட ஜாதிப் பாகுபாட்டைப் புகுத்தியுள்ளார்கள். இதை பார்க்கின்ற பகுத்தறிவு மேதையாம் எங்கள் அய்யா தந்தை பெரியார் காட்டு மிராண்டி மொழி என்று ஏன் கூறமாட்டார்? தந்தை பெரியார் அவர்களின் எரிப்புப் போராட்டத்திற்கு உரியவைகளில் இதுவும் ஒன்று என்று கூறி பேராசிரியர் வெள்ளையன் தன்பேச்சை முடித்துக் கொண்டார்.

( திருச்சி சிந்தனையாளர் பேரவையின் சார்பாக 27.9.1970இல் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவில் திருச்சி சிந்தனையாளர்
பேராசிரியர் வெள்ளையன் உரை )

செவ்வாய், 9 ஜூலை, 2024

நில அளவைகள் அறிவோம் – பழந்தமிழரின் அளவை முறைகள்…!

 

விடுதலை ஞாயிறு மலர்
நில அளவை
100 ச.மீ – 1 ஏர்ஸ்
100 ஏர்ஸ் – 1 எக்டேர்
1 ச.மீ – 10 .764 ச அடி
2400 ச.அடி – 1 மனை
24 மனை – 1 காணி
1 காணி – 1 .32 ஏக்கர்
144 ச.அங்குலம் – 1 சதுர அடி
435.6 சதுர அடி – 1 சென்ட்
1000 ச லிங்க்ஸ் – 1 சென்ட்
100 சென்ட் – 1  ஏக்கர்
1 லட்சம் ச.லிங்க்ஸ் – 1  ஏக்கர்
2.47 ஏக்கர் – 1 எக்டேர்
1 எக்டேர் = 2.5 ஏக்கர் (2.47 ஏக்கர் )
1 ஏக்கர் = 4840 குழி (Square Yard)
100 சென்ட் = 4840 சதுர குழிகள்
1 சென்ட் = 48.4 சதுர குழிகள்
1 ஏக்கர் = 4067.23 சதுர மீட்டர் (Sq. Meter )
1 ஏக்கர் = 43560 சதுர அடி
1 குழி (Square Yard) = 0.8361 சதுர மீட்டர் (Square Meter)
1 ச.மீ(Square Meter) = 1.190 குழி
1 குழி = 9 சதுர அடி
1 ச.மீ(Square Meter) = 10.76 சதுர அடி
1 குந்தா (Guntha) = 121 குழி = 101.17 சதுர மீட்டர்
1 குந்தா (Guntha) = 33 அடி * 33 அடி = 1089 சதுர அடி
100 குழி = ஒரு மா
20 மா = ஒரு வேலி
3.5 மா = ஒரு ஏக்கர்
6.17 ஏக்கர் = ஒரு வேலி
16 சாண் = 1 கோல்
18 கோல் = 1 குழி
100 குழி = 1 மா
240 குழி = 1 பாடகம்
20 மா = 1 வேலி
முகத்தல் அளவைகள்
ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லீட்டர்.
ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லீட்டர்.
ஒரு கலம் = அறுபத்து நாலரை லீட்டர்.
ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லீட்டர்.
ஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு.
ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லீட்டர்.
ஒரு பாலாடை = முப்பது மில்லி லீட்டர்.
ஒரு குப்பி = எழுநூறுமில்லி லீட்டர்.
ஒரு அவுன்ஸ் = முப்பத்தியொரு கிராம்.
முன்னூற்று அறுபது நெல் = ஒரு சோடு.
அய்ந்து சோடு = ஒரு அழாக்கு.
இரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு.
இரண்டு உழக்கு = ஒரு உரி.
இரண்டு உரி = ஒரு நாழி.
எட்டு நாழி = ஒரு குறுணி.
இரண்டு குறுணி = ஒரு பதக்கு.
இரண்டு பதக்கு = ஒரு தூணி.
மூன்று தூணி = ஒரு கலம்.
நிறுத்தல் அளவைகள்
மூன்றே முக்கால் குன்றி மணி எடை = ஒரு பணவெடை.
முப்பத்தி ரெண்டு குன்றி மணி எடை = ஒரு விராகன் எடை.
பத்து விராகன் எடை = ஒரு பலம்.
இரண்டு குன்றி மணி எடை = ஒரு உளுந்து எடை.
ஒரு ரூபாய் எடை = ஒரு தோலா.
மூன்று தோலா = ஒரு பலம்.
எட்டு பலம் = ஒரு சேர்.
நாற்பது பலம் = ஒரு வீசை.
அய்ம்பது பலம் = ஒரு தூக்கு.
இரண்டு தூக்கு = ஒரு துலாம்.
ஒரு குன்றி எடை = நூற்றி முப்பது மில்லி கிராம்.
ஒரு பணவெடை = நானூற்றி எண்பத்தெட்டு மில்லி கிராம்.
ஒரு தோலா = அண்ணளவாக பன்னிரண்டு கிராம்
   (துல்லியமாக 11.7 கிராம்)
ஒரு பலம் = முப்பத்தி அய்ந்து கிராம்.
ஒரு வீசை = ஆயிரத்தி நானூறு கிராம்.
ஒரு விராகன் = நான்கு கிராம்.
கால அளவுகள்
இருபத்தி நான்கு நிமிடங்கள் = ஒரு நாளிகை.
இரண்டரை நாழிகை = ஒரு மணி.
மூன்றே முக்கால் நாழிகை = ஒரு முகூர்த்தம்.
அறுபது நாழிகை = ஒரு நாள்.
ஏழரை நாழிகை = ஒரு சாமம்.
ஒரு சாமம் = மூன்று மணி.
எட்டு சாமம் = ஒரு நாள்.
நான்கு சாமம் = ஒரு பொழுது.
இரண்டு பொழுது = ஒரு நாள்.
பதினைந்து நாள் = ஒரு பக்கம்.
இரண்டு பக்கம் = ஒரு மாதம்.
ஆறு மாதம் = ஒரு அயனம்.
இரண்டு அயனம் = ஒரு ஆண்டு.
அறுபது ஆண்டு = ஒரு வட்டம்.

செவ்வாய், 2 ஜூலை, 2024

திருக்குறளில் கடவுள் வாழ்த்தா?

 

சுவடுகள் : திருக்குறளில் கடவுள் வாழ்த்தா?

டிசம்பர் 01-15 2019

தந்தை பெரியார் கூறும் முடிவு!

கி.வீரமணி

தந்தை பெரியார் அவர்கள் ஓர் முழுப் பகுத்தறிவுவாதி. எதையும் தனது பகுத்தறிவுக்கேற்ப சிந்தித்து, தெளிந்து, அனுபவ முத்திரைகளோடு, சுயசிந்தனைக்கேற்ப எதையும் மக்களுக்கு எடுத்துக் கூற அவர்கள் தயங்கியதே இல்லை.

ஒரு கருத்தினைக் கூறும்போது, ஆசாபாசங்களுக்கு அடிமையாகாமல், ஒரு விஞ்ஞானியின் பார்வையோடு கூறும் அவர்கள், அதன் விளைவு எதிர்ப்பாக இருக்கும் என அஞ்சிப் பின் வாங்கும் பழக்கமுடையவர் அல்லர். எதிர் நீச்சலுக்கு ஆளாக நேரிடுமே என்கிற அச்சத்துக்கு அவர்கள் என்றும் ஆளாகாதவர் ஆவார்கள்.

தமிழ் இலக்கியங்களில் அய்யா அவர்களது கண்ணோட்டத்தில் பெரும் அளவுக்கு (முழு அளவுக்கு என்று கூற முடியாவிட்டாலும்) தப்பித்தது வள்ளுவரின் திருக்குறள் மட்டும்தான்.

திருக்குறளில் ‘கடவுள் வாழ்த்து’ என்று முதல் அதிகாரம் தொடங்குகிறதே என்கிறபோது, பகுத்தறிவாளர்கள் அதனை எப்படி நோக்குகிறார்கள் என்பது ஒரு நியாயமான சந்தேகமே ஆகும்.

‘கப்பல் ஓட்டிய தமிழன்’ வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள், குறளை ஆராய்ச்சி செய்த அறிஞர்களில் ஒருவர். பழுத்த கடவுள் நம்பிக்கையாளர்.

அவர்கள், ‘திருக்குறளில் உள்ள கடவுள் வாழ்த்து’ என்பது இடைச்செருகலாக இருக்க வேண்டும் என்று எழுதியுள்ளார்.

தந்தை பெரியார் அவர்கள் எதையும் தனது சுயசிந்தனையோடு சிந்தித்துப் பேசக் கூடியவர் _ எழுதக் கூடிய பகுத்தறிவாளர் _ என்பதால், திருக்குறளின் அவரது கருத்து _ குறிப்பாக கடவுள் வாழ்த்து பற்றி அவரது கருத்து _ என்னவென்பதை முதலில் தெரிந்து கொள்வோம்.

(ஈரோட்டைச் சேர்ந்த மேனாள் ‘விடுதலை’ உதவி ஆசிரியர் திரு.ராமானுஜம் அவர்கள் தந்த ஒரு பழைய கட்டுரை)

24.11.1948 “விடுதலை’’யில் “திருவள்ளுவர் ஆஸ்திகரா? _ நாஸ்திகரா?’’ என்னும் தலைப்பில் தந்தை பெரியார் அவர்களால் எழுதப்பட்டது. அதனைப் படியுங்கள்.

தந்தை பெரியார் கட்டுரை

திருவள்ளுவர் ஆஸ்திகரா? – நாஸ்திகரா ?

– தந்தை பெரியார்

ஆஸ்திகர் என்றால், கடவுள் உண்டு என்பவர். நாஸ்திகர் என்றால் கடவுள் இல்லை என்பவர்.

“கடவுள் என்றால் என்ன?’’

“இரு! இரு!! அங்கேதான் பிரேக் போட்டிடுச்சி!’’

“என்னப்பா கடவுள், கடவுள் என்று உலகிலே அறிவாளி, மடையன் எல்லோருமே பேசுகிறார்கள், கடவுள் என்றால் என்ன என்று கேட்டால் பிரேக் மாட்டிக்கிச்சி என்கின்றாயே!’’

“சரி சொல்லுகிறேன் கேள்! கடவுள் என்றால் கடவுள்தானே?’’

“கடவுள் என்றால் கடவுள்தான்’ என்று சொல்லுகிறாயே! இது உனக்காவது புரிகிறதா?’’

“அட! என்னப்பா! நீ சுத்த சூனாமானாவாய் இருக்கிறே! அதுதான் கடவுள் என்றால் ஒருத்தருக்கும் விளக்க முடியாது, எவராலும் புரியாது, யாராலும் தெரிந்து கொள்ள முடியாது, எவருக்கும் எட்டாது என்றெல்லாம் கூடை கூடையாய்ச் சொல்லியிருக்கிறார்களே _ பெரியோர்கள்! கடவுள் போன்றவர்கள்! அப்படி இருக்க நீ கடவுள் என்றால் என்ன என்று கேட்கிறாயே! உனக்குக் கொஞ்சமாவது புத்தியிருக்கிறதா? சூனா மானா என்கிறது சரியாய் இருக்கிறதே’’

“சரி, கோபித்துக் கொள்ளாதே! கடவுள் சங்கதி இப்படி இருக்கும்போது, நீ என்னை வந்து, “திருவள்ளுவர் கடவுள் உண்டு என்பவரா? இல்லை என்பவரா?’’ என்று கேட்கிறாயே, நீ திருவள்ளுவரை மடையன் என்று நினைத்தது மாத்திரமல்லாமே என்னைக்கூட மடையன் என்று நினைத்துக் கொண்டுதானே இப்படிக் கேட்கிறாய்?’’

“எப்படிக் கேட்கிறேன்?’’

“அப்படியா? நாம் இப்படி கடவுள் உண்டா, இல்லையா என்று கேட்டால் இவன் ஏதாவது ஒரு பதில் சொல்லுவான். கடவுள் இருக்கிறது என்றாலும் மாட்ட வைத்துக் கொள்ளலாம். அதாவது காட்டு என்று கேட்கலாம்.  இல்லை என்றாலும் மாட்ட வைத்துக் கொள்ளலாம். அதாவது எதை இல்லை என்று சொன்னாய் என்று மாட்ட வைத்துக் கொள்ளலாம் என்றுதானே இப்படிக் கேட்டாய்?’’

“இல்லேப்பா! நான் அப்படி ஒன்றும் நினைக்கவில்லை; உண்மையாகவே கேட்டேன்.’’

“அப்போ நீ என்னை மடையன் என்று நினைத்துக்கொண்டு கடவுள் உண்டா _ இல்லையா என்று கேட்டிருக்காவிட்டால், பிறகு நீ ஒரு மடையனாக இருந்து இந்தக் கேள்வி கேட்டிருக்க வேண்டும்.’’

“நானா மடையன்? ஜாக்கிரதையாகப் பேசு’’

“நீ சும்மா வெறும் மடையனல்ல; அடி மடையனாக இருக்க வேண்டும்.’’

“அடி மடையன் என்றால் என்ன?’’

“அடி மடையன் என்றால் அஸ்திவாரத்திலேயே மடையன் என்று அருத்தம்.’’

“என்னப்பா இப்படி பேசிறே? உலகமெல்லாம் அடிபடும் இந்தக் கடவுள் என்கிற சங்கதி பற்றி திருவள்ளுவர் கருத்து என்ன என்று கேட்டதற்கு, எனக்கு இத்தனை மடையன் பட்டம் கட்டி விட்டாயே? இதுதானா தெரியாதவனுக்குத் தெரியப் பண்ணுகிற மாதிரி?’’

“சரி, அப்படிக் கேளு; சொல்லுகிறேன். திருவள்ளுவர் குறள் 1330 பாட்டுக் கொண்டது. அதில் அவர் ஒரு பாடலில்கூட கடவுள் என்கிற வார்த்தையை  _ சொல்லை உபயோகப்படுத்தவே இல்லை.’’

‘நிஜமாவா?’

‘ஆம் நிஜமாகத்தான்’

“கடவுள் வாழ்த்து என்று ஒரு அதிகாரம் இருக்கிறதே’’

“ஆம்; முதல் அதிகாரத்துக்குக் கடவுள் வாழ்த்து’’ என்ற தலைப்புதான் கொடுக்கப் பட்டிருக்கிறதே ஒழிய, அந்த அதிகாரத்திலுள்ள 10 பாட்டுகளிலும் ஒரு அதிகாரத்தில்கூட கடவுள் என்ற வார்த்தையே காணக் கிடையாது!

“பொறு பொறு சற்று ஞாபகப்படுத்திப் பார்க்கிறேன் _ சரி கடவுள் என்கிற சொல் குறளில் இல்லை என்பது சரிதான். ஆனால், தெய்வம் என்கிற வார்த்தைகள்தான் பல இருக்கின்றனவே. அப்போது அவர் தெய்வத்தை ஒப்புக் கொண்டார் என்று ஆகவில்லையா?’’

“1330 குறள் பாட்டுகளில் தெய்வம்  என்ற வார்த்தைகள் ஆறே ஆறு இடங்களில் காணக் கிடக்கின்றன. அதாவது 43, 50, 55, 619, 702, 1023 ஆகிய ஆறு எண்கள் கொண்டவைகளில். ஆனால், அவைகள் கடவுளைக் குறிக்கின்றனவா என்பது கவனிக்கப்பட வேண்டியதாகும். அதாவது இன்று இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள், சைவர், வைணவர், ஸ்மார்த்தர், மாத்துவர், பார்ப்பனர் முதலியோர் கருதிக் கொண்டிருக்கும் கடவுள்களைக் குறிக்கின்றனவா அல்லது வேறு எதையாவது குறிக்கின்றனவா என்று பார்க்க வேண்டும்’’

“கடவுளைக் குறிக்கின்றன என்பதில் சந்தேகம் உண்டா?’’

“சந்தேகமாய் இருக்கலாம். நான் காரணம் சொல்லுகிறேன், கேள்:!’’

திருவள்ளுவர் குறளில் உள்ள முதலாவது பெருமை என்னவென்றால், அவை பெரிதும் கூடுமான வரை தூய தமிழ் மொழியில் அதுவும் உயிர் எழுத்துகளை அதிகமாகக் கொண்டு ஆக்கப்பட்டிருப்பதாகும்.

அப்படிப்பட்ட தமிழ்ப் பற்றுள்ள அந்த நூலில் காணப்படும் தெய்வம் என்ற சொற்கள் கடவுளைக் குறிப்பதானால் கடவுள் என்றே வள்ளுவர் குறிப்பிட்டிருப்பார். தெய்வம் என்ற சொல் தமிழாக இருக்க முடியாது. ஏனெனில் அச்சொல்லின் முதல் எழுத்தாகிய ‘தெ’ என்பது வடமொழி ஒலி கொண்ட சொல் ஆகும். அந்தத் தொடர் வரவேண்டிய சொல்லுக்குத்தான் அவர் பயன்படுத்தி இருப்பார்.

அன்றியும் 43ஆவது குறளில் தென்புலத்தார் என்ற சொல்லோடு சேர்ந்து வரும் தெய்வம் என்ற சொல்லுக்குப் பிதிர்கள் _ தேவர்கள் என்கிற பொருள் காணப்படுகிறது. இதுவும் இல்வாழ்க்கைக்காரனுக்குத்தான் முக்கியமாகக் கொள்ளப்படுகிறது.

50ஆவது குறளில் தெய்வம் என்ற சொல் ‘வானுறையும்’ என்ற சொல்லை அடைமொழியாகக் கொண்டு வானவர்களைக் குறிக்கும் தன்மையில் வழங்கப்பட்டிருக்கிறது.

55ஆவது குறளில் “தெய்வம் தொழா அள்’’ என்றதில் தெய்வம் கணவனைவிட தாழ்ந்தது என்ற கருத்தில் கையாளப்பட்டிருக்கிறது.

619ஆவது குறளில் “தெய்வத்தால் ஆகாதெனினும்’’ என்றதில் தெய்வம் மனிதனுடைய முயற்சியைவிட தாழ்ந்தது என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

702ஆவது குறளில் “தெய்வத் தோடொப்பக் கொளல்’’ என்ற தொடரில் தெய்வம் என்ற சொல் அறிவாளிக்குச் சமம் என்ற உவமையில் சொல்லப்பட்டிருக்கிறது.

1023ஆவது குறளில் “தெய்வம் மடிதற்றுத் தான்முந்துறும்’’ என்று இயற்கைக்கு ஒப்பிட்டுச் சேர்க்கப்பட்டிருக்கிறது. அதாவது நல்ல காரியம் செய்தால் கண்டிப்பாய் வெற்றி கிடைக்கும் என்ற கருத்தில். அன்றியும் தெய்வம் என்ற சொல் மேலும், தேவர், தேவன், வானோர் என்பன போன்ற ஆரியர் கூறும் காரணங்கள் எதற்கும் உருப்பொருளாக பிரதிப்  பொருளாகவே பெரிதும் காணப்படுகிறது-.

மற்றும் இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது என்னவென்றால், திருக்குறளில் முதலாவது அத்தியாயமாகிய கடவுள் வாழ்த்து என்ற தலைப்பைக் கொண்ட அத்தியாயத்துப் 10 குறள்களிலும் கடவுள் என்ற சொல் காணப்படவில்லை என்றாலும், தெய்வம் என்ற சொல்லும் காணப்படவில்லை என்பதாகும்.

எனவே, வள்ளுவர் கடவுளை ஏற்றுக் கொண்டவராகக் காணப்படவில்லை என்பதோடு, அவர் கையாண்டிருக்கும் தெய்வம் என்ற சொல் கடவுளைக்  குறிக்கும் பிரதிச் சொல்லாகவும் கருத முடியாது என்பதும் கூறப்பட்டுள்ளது’’ என்று முடிவு கூறுகிறார் தந்தை பெரியார்.