பக்கங்கள்

வியாழன், 2 செப்டம்பர், 2021

பாராட்டத்தக்க அறிவிப்பு சிலம்பொலி செல்லப்பன், தொ.பரமசிவன் உள்ளிட்ட 6 தமிழ் அறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை


அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

சென்னை,செப்.1- சிலம்பொலி செல்லப்பன், பரமசிவன் உள்ளிட்ட 6 தமிழ் அறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.

சட்டப்பேரவையில் தமிழ்வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துப் பேசிய பின்னர் வெளியிட்ட அறிவிப்புகள்: இன்றைய தலைமுறையினரை திருக்குறள் சென்றடையும் வகையில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் ‘தீராக் காதல் திருக்குறள்’ என்ற பெயரில் கலை வடிவங்களுடன் ஊடகங்களில் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். வெளிநாடு, வெளி மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்க ரூ.1 கோடியில் தமிழ் பரப்புரைக் கழகம் உருவாக்கப்படும்.

பள்ளிகளில் திறனறி தேர்வு நடத்தி ஆண்டுதோறும் 1,500 மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ.1,500 ஊக்கத்தொகை 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

தமிழ் அறிஞர்கள் சிலம்பொலி செல்லப்பன், தொ.பரமசிவன், இளங்குமரனார், முருகேச பாகவதர், சங்கரவள்ளி நாயகம், செ.ராசுஆகியோரின் நூல்கள் நாட்டுடைமை யாக்கப்பட்டு பரிவுத்தொகை வழங்கப்படும்.

சங்க இலக்கிய வாழ்வியல், ஓவியங்களாகவும், எளிய விளக்கத்துடனும் ‘காபி டேபிள்’ புத்தகமாக வெளியிடப் படும். கோயில்களில் தேவாரம், திருவாசகம், திவ்யப்பிரபந்தம் ஆகியவற்றுடன் திருக்குறள் வகுப்புகளும் நடத்தப்படும்.

தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்களின் பிறந்த நாளன்று இலக்கியக் கூட்டங்கள் நடத்த ரூ.15 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும். தமிழில் பெயர் எழுதும்போது முன் எழுத் தையும் (இனிஷியல்) தமிழிலேயே எழுதும் நடைமுறை ஊக்குவிக்கப்படும்.

முனைவர் ஆய்வு (பிஎச்.டி)சுருக்கம் மற்றும் ஆய்வுத் தொகுப்புகள் தமிழில் தொகுக்கப்பட்டு தமிழ் இணையக்கல்வி கழகத்தின் வாயிலாக இணையதளத்தில் வெளியிடப்படும்..