பக்கங்கள்

சனி, 31 டிசம்பர், 2016

ஆதிச்சநல்லூரில் புதைந்து கிடக்கும் தமிழர் வரலாறு


“ஆதிச்சநல்லூர், மறைந்து கிடக்கும் தமிழர்களின் வரலாற்று பொக்கிஷம்,'' என, மானிடவியல் மற்றும் உயிர் படிவயியல் துறை அறிஞர் ப.ராகவன் கூறினார்.

திருநெல்வேலியில் இருந்து, 24 கி.மீ., தொலைவில், தாமிரபரணி ஆறின் வலது கரையில், தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந் துள்ளது, ஆதிச்சநல்லூர் இடுகாடு. அங்கு, 1904இல், அலெக்சாண்டர் ரியா என்பவராலும், 2004இல், இந்திய தொல்லியல் துறையின் சார் பில், சத்தியமூர்த்தி என்பவராலும், இரண்டு முறை அகழாய்வுகள் செய்யப்பட்டு உள்ளன.

180 தாழிகள் : அலெக்சாண்டர் ரியாவின் ஆய்வு முடிவுகளும், தொல்பொருட்களும், சென்னை, எழும்பூர் அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 2004இல், ஆதிச்ச நல்லூரில், 16 சதுர மீட்டர் பரப்பளவில் செய் யப்பட்ட அகழாய்வில், 180 தாழிகள் கிடைத் தன. அவற்றில், இறந்த உடல்களின் முழு எலும்பு சட்டகங்களும், சில பாகங்களின் எலும்புகளும் வைக்கப்பட்டிருந்தன. அந்தத் தாழிகளில் இருந்த எலும்புக்கூடுகள், 2,500 ஆண்டுகளுக்கு முன் இறந்த தமிழர்களு டையதாக இருக்கலாம் என கருதப்பட்டது. இந்நிலையில், எலும்புகளை பல்வேறு அறி வியல் ஆய்வுக்கு உட்படுத்திய, மானிடவியல் அறிஞர் ராகவனின் முதல் கட்ட முடிவுகள், வேறு மாதிரியாக உள்ளன.

அவர் கூறியதாவது: கடந்த, 2,500 ஆண்டுகளுக்கு முன், தமிழர்கள் கடல் வணிகத்தில் மிகச் சிறந்து விளங்கினர் என் பதை, ஆதிச்சநல்லூரில் கிடைத்த எலும்புகள் தெள்ளத்தெளிவாக உணர்த்துகின்றன. ஆதிச்சநல்லூரின் நிலப்பரப்பு மிகப்பெரியது. அதில், அகழாய்வு செய்யப்பட்ட இடம், வெறும், 5 சதவீதத்திற்கும் குறைவு தான். தாமிரபரணி ஆற்றின் கரையில், பல நாடு களைச் சேர்ந்த வணிகர்கள், மாலுமிகள், பய ணிகள் இருந்துள்ளனர். அவர்களுக்காகவும், அவர்களுடன் திருமண உறவு வைத்த தமிழர்களுக்காகவும், தனி இடுகாடு இருந்துள்ளது. தொல்லியல் துறை அகழாய்வு செய்த இடம், வெளிநாட்டவர்களுக்கான இடுகாட்டுப் பகுதி என்பதை, ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அங்குக் கிடைத்த மண்டை ஓடுகள் மற்றும் பற்களின் அமைப்பு, 'கொக்கசாய்டு' என்ற வெள்ளை நிறமுடைய அய்ரோப்பியர் மற்றும் மத்திய ஆசியர்களு டையது. 'நீக்ராய்டு' என்ற கறுப்பு நிறமுடைய ஆப்ரிக்கர்; 'மங்கோலாய்டு' என்ற, மஞ்சள் நிறமுடைய சீனா, ஜப்பான், வியட்நாம், கம் போடியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தோர்; 'ஆஸ்ட்ராலாய்டு' எனும் ஆஸ்திரேலியா வைச் சேர்ந்தவர்களுடையதாகவும் உள்ளன. மிகக் குறைந்த அளவில், கலப்பினத்தவர் உள்ளனர்.

ஊட்டச்சத்து குறைபாடு: கொக்கசாய்டு - 35 சதவீதம்; நீக்ராய்டு - 15; மங்கோலாய்டு - 30; ஆஸ்ட்ராலாய்டு - 6; கலப்பினத்தவர் - 2 சதவீதம் பேரின் மண்டை ஓடுகள் கிடைத் தன. அவர்களில், பெண்களை விட ஆண் களே அதிகம். ஒரே தாழியில், ஒரே குடும் பத்தைச் சேர்ந்த, ஆண், பெண், குழந்தையின் உடல்களும் புதைக்கப்பட்டுள்ளன. சில கர்ப்பிணிகளும், குறைமாத குழந்தைகளும் புதைக்கப்பட்டிருக்கின்றனர். அவற்றில், கருவாக 2 சதவீதம்; குழந்தைகளாக - 3; வளரிளம் பருவத்தினர் - 7; வயது வந்தோர் - 20; முதியோர் - 37 சதவீதம் உள்ளனர். ஆக, சிறு வயது மரணம் குறைவாகவே இருந்துள் ளது. இறந்தவர்களில், 40 சதவீதம் பேர் நோயால் இறந்துள்ளது தெரிகிறது. அதிலும், தொற்றுநோயால் - 50 சதவீதம், மரபியல் நோய்களால் - 30; ஊட்டச்சத்து பற்றாக் குறையால் - 20 சதவீதம் பேர் இறந்துள்ளனர். அந்த இடங்களில் வீரர்களின் ஈட்டி உள்ளிட்ட ஆயுதங்களும், வெளிநாட்டில் மட்டுமே வாழக்கூடிய உயிரினங்களின் எலும்புகளும், தாவர பாகங்களும் புதைபடிவங்களாகக் கிடைத்துள்ளன.

ஆதிச்சநல்லூர், தாமிரபரணியின் நன்னீர் பகுதி. அந்த நதி கடலில் கலக்கும் புன்னைக் காயல் பகுதியில் - 3 கி.மீ. வரை கடல் உள்வாங்கியதை, கடலுக்கடியில் கிடைக்கும் புதைபடிவங்கள் நிரூபிக்கின்றன. பாண்டியர் களின் கொற்கை, மிகச் சிறந்த துறைமுகமாக இருந்திருக்கிறது.

வரலாற்று பொக்கிஷம் : தாமிரபரணி கரை, புன்னைக்காயல், ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட இடங்களில் அகழாய்வு செய்து, ஒப்பீட்டு முடிவுகளை ஆராய்ந்தால், தமிழர்களின் மிக முக்கியமான அயல்நாட்டு வணிக, அரசியல் தொடர்புகள், சமூக அமைப்பு உள்ளிட்டவற்றுக்கான விளக்கம் கிடைக்கும். வெளிநாட்டில் இருந்து வந்தவர் கள், தமிழகத்தில் கிடைத்த பட்டு, வாசனை திரவியங்கள், பவளம், முத்து, மூலிகைகள் உள்ளிட்டவற்றை வாங்கிச் சென்றுள்ளனர். அவர்களும், பல பொருட்களை விற்றுள் ளனர். அந்த வகையில், ஆதிச்சநல்லூர் முழுமையாக பாதுகாக்கப்பட வேண்டிய இடம். அது, அகழாய்வு மற்றும் ஒப்பீட்டு ஆய்வுகள் செய்யப்பட வேண்டிய, தமிழர் களின் தனித்துவமான வரலாற்று பொக்கிஷம். இவ்வாறு அவர் கூறினார்.

-விடுதலை ஞா.ம.,26.11.16

ரிக் வேதத்தில் தமிழ்ச்சொல்

பழம் என்ற திராவிடச் சொல் ரிக் வேதத்தில்  இடம் பெற்றுள்ளது. (Ripe Fruit)  ரிக் (20). ரிக் வேதத்தில் உள்ள வேளாண் தொடர்பான சொற்கள் சீதா, சிரா, பலம் போன்ற சொற்கள் பிற அய்ரோப்பிய மொழிகளில் இல்லை. ஆகவே ஆசிய மொழிகளுக்கு முந்திய  (Pre-Arya)  திராவிட மொழிச்சொற்கள் இவை என கருதப்பட வேண்டும்.

ஆதாரம்: ஆரியரைத் தேடி (ஆங்கிலம்)

ஆசிரியர்: ஆர்.எஸ். சர்மா, தகவல்: சக்குபாய்
-விடுதலை ஞா.ம.,5.7.14

வெள்ளி, 23 டிசம்பர், 2016

எழுத்தில் சீர்திருத்தம்

தமிழ்பாஷை எழுத்துக்கள் வெகு காலமாகவே எவ்வித மாறுதலும் இல்லாமல் இருந்து வருகின்றன.

உலகில் உள்ள பாஷைகள் பெரிதும் சப்தம், குறி, வடிவம் எழுத்துக்கள் குறைப்பு, அவசியமான எழுத்துக்கள் சேர்ப்பு ஆகிய காரியங்களால் மாறுதல் அடைந்து கொண்டே வருகின்றன. கால வர்த்தமானங்களுக்கு ஏற்ப பாஷைகளும், சப்தங்களும், உச்சரிப்புகளும், வடிவங்களும் மாறுவது இயல்பேயாகும்.

வார்த்தைகள் கருத்தை வெளியிடுவதற்கு ஏற்பட்டவைகள் என்பது போலவே எழுத்துக்கள் சப்தத்தை உணர்த்த ஏற் பட்டவைகளேயாகும். ஆனால் நம் பண்டிதர்களுக்கு தாராளமாய் அறிவைச் செலுத்த இடமில்லாமல் மதம் பழக்க வழக்கம் ஆகியவைகள் குறுக்கிட்டு விட்டதால், எழுத்துகளுக்கும் அதன் கோடுகளுக்கும், வடிவங்களுக்கும் தத்துவார்த்தம் கற்பிக்க வேண்டிய அவசிய மேற்பட்டு எழுத்துக்களையே தெய்வமாகவும், தெய்வ வடிவமாகவும் கருத வேண்டிய நிலை நம் நாட்டில் ஏற்பட்டு விட்டது.

தற்காலம் எத்தனையோ புதிய பாஷைகள் வந்து நமது தமிழ் பாஷையில் புகுந்து கொண்டன. அவைகளை இனிவிலக்க முடியவே முடியாது. விலக்குவதும் புத்திசாலித் தனமாகாது. அப்பேர்ப்பட்ட வார்த்தைகளைச் சரியானபடி உச்சரிக்க நமக்குப் பழக்கத்தில் எழுத்துக்கள் இல்லாமல் பாஷையையும் உச்சரிப்பு அழகையும் கொலை செய்கின்றோம்.

விஷ்ணு என்பதை விட்டுணு என்றும், விண்டு என்றும் உச்சரிப்பதில் பெருமை அடைகின்றோம். பாஷாபிமானப் பட்டமும் பெறுகின்றோம். அதற்கு இலக்கணம் இருக்கிறது என்கின்றோம். அதோடு சப்தங்கள் மாறி விடுவதால் கருத்தும், அர்த்தமும் மாறுவதில்லை என்று கருதுகின்றோம். அது போலவே சில எழுத்துக்கள் பழைய பழக்கம் வழக்கம் என்பதற்காக மாற்றக்கூடாது என்று இல்லாமல், சவுகரியத் துக்காக மாற்ற வேண்டியது அவசியம் என்றால் அறிஞர்கள் அதற்கு இடம் கொடுத்துத் தான் ஆக வேண்டும்.

சுமார் 70, 80 வருஷ காலத்துக்கு முந்திய பதிப்புகளிலும், எழுத்துகளிலும் ஈ என்கின்ற எழுத்தானது இ எழுத்தையே மேலே சுழித்த வட்ட வடிவத்தில் இருந்து வந்திருக்கிறது. இன்னும் 400,500 வருஷங்களுக்கு முந்தின கல் எழுத்துக்கள் அனேகம் வேறு வடிவத்தில் இருந்திருக்கிறது.

இப்பொழுது அவைகள் மாற்றமடைந்ததற்குக் காரணங்கள் கேட்பாரும் இல்லை; சொல்லுவாரும் இல்லை. அதனால் சப்தமோ, அர்த்தமோ, பாஷையின் அழகோ கெட்டுப் போனதாகக் குறை கூறுவாரும் காணப்பட வில்லை. அதுபோலவே இப்போதும் சில எழுத்துக் களின் வடிவங்களை மாற்ற வேண்டியதும், சில எழுத்துக்களைக் குறைக்க வேண்டியதும்,

சில குறிகளை மாற்ற வேண்டியதும் அவசியம் என்றும், அனுகூலம் என்றும் பட்டால் அதைச் செய்யவேண்டியதுதான் அறிவுடைமையே ஒழிய அதன் தத்துவார்த்தத்துக்கு ஆபத்து வருகின்றதே என்பது அறிவுடை மையாகாது என்பது நமது கருத்து.

ஆகவே இப்போது ணா, றா, னா ஆகிய எழுத்துக்களும் ணை, லை, ளை, னை ஆகிய எழுத்துக்களும், மற்ற கா, நா, ரா முதலாகிய எழுத்துக்களைப் போலும் டை, நை, ழை, முதலிய எழுத்துக்களைப் போலும், ஆகாரத்துக்கு  குறியையும் அய்காரத்துக்கு  குறியையும் பெறாமல் தனி வடிவத்தைக் கொண்டு இருப்பதை மாற்றி ணா, றா, னா, ணை, லை, ளை, னை போல உபயோகித்து பிரசுரிக்கலாம் என்று கருதியிருக்கின்றோம்.

இதன் பயனாய் அச்சு கோர்ப்பதற்கு எழுத்து கேசுகளில் (அறைகளில்) 7 கேசுகள் (அறைகள்) குறைகின்றது என்பதோடு பிள்ளை களுக்கும் இந்த ஏழு எழுத்துகளுக்கு தனிவடிவம் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போகும் சவுகரியம் ஏற்படுகின்றது. இன்னமும் தமிழ் பாஷை எழுத்துக்களில் அனேக மாறுதல்கள் செய்ய வேண்டி இருந்தாலும்,

இப்போதைக்கு இந்தச் சிறு மாறுதலை அனுபவத்திற்குக் கொண்டு வரலாம் என்று கருதி அந்தப்படியாகவே எழுத்துக்களை உபயோகித்து அடுத்தாற்போல் பிரசுரிக்கப் போகும் குடிஅரசு பத்திரிகையைப் பிரசுரிக்கலாம் என்று இருக்கிறோம். இதை வாசகர்களும் மற்றும் தமிழ் பாஷை பத்திரிகைக்காரர்களும், தமிழ் பண்டிதர்களும் ஆதரிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கிறோம்.

- பகுத்தறிவு - கட்டுரை - 30.12.1934
-விடுதலை,3.10.15

மனுவாதிகளிடம் மல்லுகட்டிய மெக்காலே


ஒரு தொலைக்காட்சி விவாதம் ஒன்றில், மெக்காலே கல்வித் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. ஒரு பார்ப்பனர் தனது அதிபுத்திசாலித் தனமான வாதத்தில் - பானை செய்பவன் மகன் பானை செய்தால் என்ன தவறு என்றும், எல்லா தொழில்களும் தெய் வமே என்றும்,

குழந்தைத் தொழி லாளர்கள் வீட்டில் செய்யும் தொழி லுக்கு சம்பளம் பெறாததால் அது தொழில் என்றே சொல்லக் கூடாது என்றும் சொல்லிக் கொண்டிருந்தார். சரி, அவர் அப்படித்தான் சொல்வார்! இந்தப் பதிவு அதற்கல்ல.

அவர் கடைசியாக மெக்காலே கல்வித் திட்டம் அடிமைகளை உரு வாக்கும் ஆங்கில அரசின் ஒரு திட்டம் என்றும், குருவிடம் சென்று எல்லா வித்தைகளையும் பயின்ற குருகுல கல்வி மேலானது என்றும் உளறினார்.

மெக்காலே கல்வித் திட்டம் 
குறித்து சில தகவல்கள்

மெக்காலே இந்தியக் கல்வி குறித்து இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை என்று பார்ப்பனீயம் அவிழ்த்துவிட்ட மிகப்பெரிய பொய் இன்றுவரை நிலைத்து நிற்கிறது.

அந்தப் பொய்யுரையானது, அவர் இந்தியாவின் எல்லா பகுதிகளுக்கும் சென்றதாகவும், ஒரு திருடனையோ, பிச்சைக்காரனையோ எங்கும் காண முடியவில்லை என்றும் இந்த தேசம் அவ்வளவு பண்பாடு நிறைந்ததாகவும், ஆன்மீக வளம் பொருந்தியதாகவும் உள் ளது. எனவே, அதை அடிமைப்படுத்த நாம் அவர்களின் தொன்மையான கல்வி முறையை ஒழித்துவிட்டு ஆங்கில வழிக் கல்வியைப் பயன்படுத்தலாம்.

மெக்காலே மேற்கண்டவாறு இங்கி லாந்து நாடாளுமன்றத்தில் உரையாற் றியதாகக் கூறினார். உண்மை என்ன வென்றால் அவர்கள் கூறும் 2-.2.-1835ஆம் தேதி அவர் இங்கிலாந்தில் இல்லை. இந்தியாவில்தான் இருந்தார். அவர் சொன்னது அவருடைய நாட்குறிப்பில் இருக்கும் என்று தோண்டிப் பார்த் தாலும் எந்தக் குறிப்பும் இல்லை.

உண்மையில் நடந்ததென்ன?

இந்தியாவில் கல்வியை அறிமுகப் படுத்தும் பொறுப்புடன் வந்த ஆங்கி லேயர் மெக்காலே இந்து சனாதன வாதி களுடன் மூன்றுகட்ட பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறார். அத்தனைக்கும் ஆவணங்கள் உள்ளன.

முதல் கட்டத்தில் மெக்காலே இந் தியர்கள் அனைவருக்கும் கல்வி கொடுக்க வேண்டும் என வாதிடுகிறார். ஆனால், சனாதன வாதிகள் அதை மறுத்து கல்வி பார்ப்பனர்களுக்கும் மற்றும் மேல் ஜாதி யினருக்கும் மட்டுமே என்று வாதிடுகின் றனர்.

பல கட்ட பேச்சுவார்த்தைகளுக் குப் பிறகு மெக்காலேயின் திட்டப்படி, அனைவருக்கும் கல்வி என்பதை சனாதனவாதிகளை ஏற்றுக்கொள்ளச் செய்கிறார். இரண்டாவது கட்டமாக எத்தகைய கல்வி என்ற பிரச்சினை. மெக்காலே கணக்கும், அறிவியலும் கற்பிக்கப்பட வேண்டுமென்கிறார்.

சனா தனவாதிகள் வேத, புராண, இதிகாசங் கள்தான் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என வாதிடுகின்றனர். பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப்பின் வரலாற் றுச் சக்கரத்தைப் பின்னோக்கி ஓட்ட முடியாது என பிடிவாதமாக மெக்காலே சனாதனிகளின் கருத்தினை எதிர்த்து அரசு ஆணை ஒன்றைப் பெற்று வந்து இந்தியாவில் கல்வியைப் புகுத்தினார்.

பார்ப்பனர்கள் இதை எதிர்த்தும் இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்கு மனு அனுப்பியும் பயனின்றி போகவே மெக்காலே வெற்றி பெற்றார்.

மூன்றாவதாக பயிற்சிமொழி ஆங் கிலமா, சமஸ்கிருதமா என்ற வாதத்தில் மெக்காலே வென்று ஆங்கிலத்தைப் பயிற்சி மொழி ஆக்கினார்.

வரலாற்றைச் சற்று திரும்பிப் பார்த்தால் இந்தியாவில் அனைவருக் கும் கல்விக்காக மெக்காலே எவ்வளவு சனாதனிகளிடம் (பார்ப்பனர்களிடம்) போராடியுள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது.

(முகநூலில்: துணைத்தளபதி மார்ஜோஸ்)
-விடுதலை,26.9.15

சங்க கால கொற்கைப் பாண்டியன் மாறன் பெயர் கொண்ட வித்தியாசமான நாணயம்

நாணயத்தில் சங்க கால கொற்கைப் பாண்டியன் மாறன் பெயர் பெறிக்கப்பட் டிருப்பதாக தென்னிந்திய நாணயவியல் ஆய்வுக் கழகத் தலைவர் இரா.கிருஷ்ண மூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதுதெடர்பாக அவர் மேலும் தெரிவித் துள்ளதாவது:

தமிழ் - பிராமி 
எழுத்து முறையில்

பல ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு கிடைத்த நாணயம் ஒன்று உருவங்கள் ஏதும் தெரியாத அளவுக்கு கறுப்பு நிறத்தில் கடினமான மாசு படிந்திருந்தது. பல நாட்கள் மெதுவாக சுத்தப் படுத் தினேன். அந்த நாணயத்தின் முன் புற மத்தியில் சிதைந்த நிலையில் ஒரு உருவம் உள்ளது. சிதைந்த உருவத்தின் மேல், தமிழ் - பிராமி எழுத்து முறையில், இரண்டு எழுத்துக்கள் தென்படுகின்றன.

அந்த உருவத்தின் கீழ்பகுதியில் நீள் சதுர வடிவில் ஒரு தொட்டி இருக்கிறது. தொட்டியின் மேல் விளிம்பைத் தொட்டு இரண்டு ஆமைகள் ஒன்றை ஒன்று எதிர் நோக்கி இருப்பது போல் அச்சாகியுள்ளது.

அதேபோல், தொட்டியின் கீழ் விளிம் பைத் தொட்டு இரண்டு ஆமைகள் உள் ளன. முழு உருவம் அச்சாகவில்லை. இந்த நான்கு ஆமைகளுக்கு மத்தியில் இடப் பக்கம் நோக்கி, ஒரு சிறிய ஆமை உள்ளது.

மவுரிய பிராமி 
எழுத்து முறையில்

தொட்டியின் வெளியே வலப் பக்கம் நாணயத்தின் விளிம்பை ஒட்டி, வேலி யிட்ட மரச்சின்னம் உள்ளது. நாணயத்தின் இடது பக்கம் மேல் மூலைப்பகுதியில் மவுரிய பிராமி எழுத்து முறையில், மா என்று உள்ளது.

மத்தியிலுள்ள சின்னத்திற்கு மேலாக, ற என்ற எழுத்து வலப்பக்கத்திலிருந்து இடப் பக்கமாக நாணயத்தின் மேல் விளிம்பை ஒட்டி சாய்ந்த நிலையில் இருக்கிறது. இந்த எழுத்து நின்ற நிலையில்தான் இருந்திருக்க வேண்டும். இடப்பற்றாக்குறையால் சாய்ந்த நிலையால் இவ்வாறு அச்சிடப்பட்டுள்ளது. இந்த எழுத்து, தமிழ் - பிராமி வகையை சேர்ந்தது.

கடைசியாக, வலது பக்கம் மூலையில் மேல் விளிம்பை ஒட்டி, ‘ன்’ என்ற எழுத்து உள்ளது. இதுவும் தமிழ் பிராமி வகையைச் சேர்ந்தது.

இந்த நாணயத்தில் இருப்பது போல் தொட்டியும், அதில் நான்கு பெரிய ஆமை கள், ஒன்றை ஒன்று எதிர்நோக்கி இருக்கும் நாணயத்தை, மதுரையை ஆண்ட சங்க கால பாண்டியர்கள் வெளியிட்டுள்ளனர்.

அந்தத் தொட்டியின் மேல் பகுதியில், யானை ஒன்று வலப் பக்கம் நோக்கி நிற்பது போல் அச்சாகியுள்ளது. அந்த நாண யத்தின் பின்புறத்தில் கோட்டு வடிவ மீன் சின்னம் அழகாக உள்ளது. இந்த நாணயம் குறித்து, நான் வெளியிட்டுள்ள பாண்டியன் பெருவழுதி நாணயங்கள் என்ற நூலில் பார்க்கலாம்.

இந்த நாணயம் போல் மாறன் பெயர் பொறிப்பு நாணயத்தில் சிதைந்த நிலையில் உள்ள உருவம் யானையின் உருவமாக இருக்கலாம்.

மாறன் பெயர் கொண்ட நாணயத்தின் பின்புறம்:

இரண்டு பெரிய மீன்கள், ஒன்றை ஒன்று எதிர் நோக்கி நின்ற நிலையில் உள்ளன.

நான் ஏற்கெனவே செழியன் நாணயம் பற்றி எழுதியுள்ள கட்டு ரையில், இரட்டை மீன்கள் சங்க கால கொற்கை பாண்டியர் களின் சின்னம் என்று குறிப்பிட்டிருக் கிறேன்.

மேலும், அக்கட்டுரையில் பேரரசன் அசோகன் தன் கிர்னார் கல்வெட்டில் சோழ, பாண்டிய, சத்திய புத்திர, சேர, தாமிர வருணி என்ற நாடுகள், தன் நாட்டின், தென் எல்லைக்கு அப்பால் இருந்ததாகக் கூறி உள்ளதைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறேன்.

இக்கல்வெட்டின் காலம், கி.மு., மூன் றாம் நூற்றாண்டாக இருக்கலாம். கொற் கையை தலைநகராகக் கொண்ட பாண்டி யர்களின் நாடு தாமிரவருணி நாடாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளேன். இந்த நாணயத்தின் காலம் கி.மு., மூன்றாம் நுற்றாண்டாக இருக்கலாம்.

இதுபோன்ற சங்க கால நாணயச் சான்றுகள், வருங்காலத்தில் கிடைத்தால், தமிழகத்தின் தொன்மை வரலாறு பற்றி, மேலும் அறிவதுடன், அக்காலத்தை நிர்ண யம் செய்யவும் உதவிடும் என்று நம்பு கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-விடுதலை ஞா.ம.,3.9.16

திங்கள், 19 டிசம்பர், 2016

தமிழைப் பற்றி தமிழர் - பார்ப்பனர் கருத்துகள்


06-11--1943, குடியரசிலிருந்து...
மனோன்மணியம் ஆசிரியர் பி. சுந்தரம் பிள்ளை தமிழைப் பார்த்து சொல்லுகிறார். ஆரியம் போலுலக வழக்கழிந்தொழிந்து சிதையா உன் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே. என்று சொல்லுகிறார். இது ஒரு தமிழ் மகனால் சொல்லப்பட்டது.
இனி சுப்பிரமணியபாரதி தமிழ்த்தாயே சொல்லுவதாக சொல்லுவதைப் பாருங்கள்.
உயர் ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன் என்று சொல்லுகிறார். இது ஒரு ஆரிய மகன் - பார்ப்பனரால் சொல்லப்பட்டது.
என்ன செய்தாலும் ஜாதிப்புத்தி போகாதய்யா ராஜகோபால மாலே என்று பெரியார் கூறிய அனுபவமொழியை உறுதிப்படுத்த இவை உதவுகின்றன போலும்.
சுந்தரம் பிள்ளை அவர்கள், பேச்சு வழக்கில் இல்லாமல் அழிந்துபட்ட வடமொழிபோல் உன் (தமிழின்) கதி ஏற்பட்டு விடாமல் என்றும் ஒன்றுபோல் இளமைத்தன்மையுடன் விளங்குகிறாய் என்று போற்றுகிறார்.
பாரதியோ போற்றாவிட்டாலும், தமிழ்த்தாய்,
“உயர்ந்த மொழியான ஆரிய (வட) மொழிக்கு சமானமாக ஒரு காலத்தில் வாழ்ந்தேன்.” இப்போது சீரழிந்து கெட்டுப்போய்விட்டேன் என்பது ஆக புலம்புவதாகத் தாழ்வுபடுத்திக் காட்டுவதோடு, ஆரியம் இன்றும் மேன்மையாக இருப்பதாகவும் தமிழ்த்தாயைக் கொண்டே சொல்லச் செய்கிறார்.
ஆகவே சுப்பிரமணிய பாரதியின் தமிழ்ப்பற்றை அவரது நாளைக் கொண்டாடும் பண்டித முண்டங்கள் இதிலிருந்தாவது உணர்வார்களாக.
இனத்தின் பேரால் பார்ப்பனரும், மதத்தின் பேரால் இஸ்லாமியரும், வகுப்பின் பேரால் சட்டக்காரர்களும் ஆகிய இவர்களுக்கு எவ்வளவுதான் இரத்தக்கலப்பு ஏற்பட்டாலும் புத்திக் கலப்பு மாத்திரம் ஏற்படவே ஏற்படாது. ஒரே புத்திதான்.
அதாவது முறையே தங்கள் இனம், மதம், வகுப்பு ஆகியவைகளை சிறிதுகூட விட்டுக் கொடுக்காமலும் அவைகளையே உயர்வென்று பேசும் அபிமானமும் வேறு எவனாவது தாழ்த்திச் சொன்னால் ரோஷப்படும் குணமும் கொண்ட உயர்ந்த புத்தி மாறவே மாறாது. தமிழனுக்கு அவைமாத்திரம் கிடையாது.
கம்பனைப் போல் ஒரு கை கூழுக்கு என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். இதனால்தான் அவர்கள் மேன்மையாய் வாழுகிறார்கள். இவர்கள் கீழ்மையாய் (சூத்திரர்களாய்) வாழுகிறார்கள். தமிழைக் குறைகூற வேண்டாம் என்று எந்த சமஸ்கிருதப் பண்டிதர்கள் வாயிலிருந்தாவது ஒரு வார்த்தையாவது வந்திருப்பதாக ஒரு பண்டிதராவது காட்ட முடியுமா?
ஆனால் எத்தனை தமிழ்ப் பண்டிதன் சமஸ்கிருதத்தின் திருவடிகளே தஞ்சம் என்று சகஸ்ரநாம அர்ச்சனை செய்கிறார்கள். கணக்குச் சொல்ல வேண்டுமா? இதைச் சொல்லவே வெட்கமாக இருக்கிறது. இனி அதைச் சொல்ல என்னமாயிருக்கும்? தயவு செய்து மன்னியுங்கள்.
-விடுதலை,17.6.16