பக்கங்கள்

வியாழன், 31 ஜனவரி, 2019

ஜனவரியை தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு மாதமாக அறிவித்த அமெரிக்க மாகாணம்

வடக்கு கரோலினா, ஜன.31 ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு மாதமாக அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியில் தமிழர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். எனவே அதனைச் சிறப்பிக்கும் விதமாக ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு மாதமாக அறிவிக்க வேண்டும் என அங்குள்ள தமிழ்ச்சங்கம் மாகாண ஆளுநருக்கு கோரிக்கை விடுத்திருந்தது.

அதன் தொடர்ச்சியாக மாநில ஆளுநராக உள்ள ராய் கூப்பர் தமிழ்ச்சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, நடப்பு ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு மாதமாக அறிவித்தார்.

இதற்கான அரசாணையை வெளியிட்டு அவர் கூறியதாவது:

தமிழர்களின் அடையாளம் தமிழ் மொழி. உலகில் நெடுங் காலமாக பேசப்பட்டும் எழுதப்பட்டும் வரும் சிறப்பைக் கொண்ட மொழிகளுள் ஒன்று தமிழ். வடக்கு கரோலினா மாநிலத்தின் வளர்ச்சியில் தமிழர்கள் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளனர்.  அவர்கள் தமது சிறப்பு மிக்க தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் இங்கு பாதுகாத்து வளர்த்துள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

- விடுதலை நாளேடு, 31.1.19

வெள்ளி, 25 ஜனவரி, 2019

தமிழ்மொழி காக்கும் போரில் உயிர் நீத்த ஈகிகளின் பட்டியல்:

1938, 1965ஆம் ஆண்டு ஆரிய ஆதிக்க வர்க்கத்தின் ஆரசுகளின் இந்தி மொழி திணிப்பை எதிர்த்து தமிழ்மொழி காக்கும் போரில் உயிர் நீத்த தியாகிகளின் பட்டியல்:

1. நடராசன்,
இறப்பு: 15.1.1939, சென்னை சிறையில் உயிர் நீத்தார்.

2. தாளமுத்து,
இறப்பு: 12.3.1939, சென்னை சிறையில் உயிர் நீத்தார்.

3. கீழப்பழுவூர் சின்னச்சாமி,
பிறப்பு: 30.7.1937, இறப்பு: 25.1.1964, காலை 4.30 மணிக்கு திருச்சியில் தீக்குளித்தார்.

4. கோடம்பாக்கம் சிவலிங்கம்,
இறப்பு: 25.1.1965, சென்னையில் தீக்குளித்தார்.

5. விருகம்பாக்கம் ஏ.அரங்கநாதன்,
பிறப்பு: 27.12.1931, இறப்பு: 27.1.1965, கோடம்பாக்கம் தொடர்வண்டி திடலில் தீக்குளித்தார்.

6. சிவெகங்கை இராசேந்திரன்,
மாணவர். பிறப்பு: 16.7.1945,  இறப்பு: 27.1.1965, சிதம்பரம் அண்ணாமலை நகரில் காவலரால் சுடப்பட்டு இறந்தார்.

7. கீரனூர் முத்து,
பிறப்பு: 15.1.1943, இறப்பு: 4.2.1965, கீரனூரில் நஞ்சுண்டு மாண்டார்.

8. சத்தியமங்கலம் முத்து, பிறந்த ஆண்டு: 1943, இறப்பு: 11.2.1965, சத்தியமங்கலத்தில் தீக்குளித்தார்.

9. ஆசிரியர் வீரப்பன், பிறப்பு: 1.4.1938, இறப்பு: 12.2.1965, அய்யம்பாளையத்தில் தீக்குளித்தார்.

10. விராலிமலை சண்முகம்,
பிறப்பு: 11.8.1943, இறப்பு: 25.2.1965, விராலிமலையில் நஞ்சுண்டு இறந்தார்.

11. கோவை பீளமேடு தண்டபாணி,
பி.ஈ.படித்தவர், பிறந்த ஆண்டு: 1944, இறப்பு: 2.3.1965, பீளமேட்டில் நஞ்சுண்டு இறந்தார்.

12. மாயவரம் சாரங்கபாணி, பி.காம்.மாணவர், பிறந்த ஆண்டு: 1945, இறப்பு 15.3.1965, மயிலாடுதுறையில் தீக்குளித்தார்.

ஜனவரி:25

செந்தமிழுக்கு ஒரு தீங்கு வந்த பின்னும் இந்த தேகம் இருந்ததொரு லாபமுண்டோ?

என்ற பாவேந்தருடைய வரிகளுக்கு ஏற்ப நம் தாய் மொழியாம் செந்தமிழ் மொழிக்கு தீங்கு என்றவுடன் தன் உயிர் தந்து தமிழ் மொழி காத்த மொழிப்போர் தியாகிகளுக்கு

வீரவணக்கம்!!!!!வாழ்க தமிழ்...

புதன், 23 ஜனவரி, 2019

தமிழுக்குத் தொண்டாற்றும் ஆசிரியை



அன்றைய பணிகளை முடித்துவிட்டுக் காத்திருக்கிறார்கள் பள்ளிக் கல்வி இயக்குநரகத்தில் பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளர்கள். ஆசிரியர் கனகலட்சுமி வந்தவுடன் புத்தகத்தில் உயிர் எழுத்து, மெய்யெழுத்துகளை உச்சரித்துக்கொண்டேஎழுதத் தொடங்கினர்.

தாய் மொழிக்கு முக்கியத்துவம்


சென்னை செனாய் நகரில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின்  இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார் முனைவர் கனகலட்சுமி. சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள கசடறக் கற்க கற்பிக்க தமிழ் வாசிக்க எழுத 45 நாட்கள்  புத்தகம் தமிழ் படிக்க, எழுதத் தெரியாத மாணவர்களுக்காக எழுதப்பட்டுள்ளது. அதேபோல் கணக்குப் பாடத்தை ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் எளிமையாகப் புரிந்துகொள்ளும்வகையில் கணக்கு கையேடு என்ற புத்தகத்தையும் வெளியிட்டுள்ளார்.

இந்தப் புத்தகங்களின் பயன்பாடு குறித்துப் பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள தொடக்கப் பள்ளி மாணவர்களிடம் ஆய்வு நடத்தப் பட்டது. ஆய்வின் முடிவில்  ஒன்றாம் வகுப்பு மாண வர்கள்  தமிழ் வாக்கியங்களைப்  பிழையில்லாமல் எழுதவும் சரளமாகப் படிக்கவும் செய்துள்ளனர். அதேபோல் இவரின் புத்தகங்களை வைத்துத் தமி ழகத்தில் உள்ள தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது.

தமிழ் எழுத்தின் ஒவ்வொரு வளைவுக்கும்  வரிவடிவங்களுக்கான ஒலி வடிவ முறை உண்டு. ஆனால், நாம் ஒலிவடிவங்களை மறந்ததன் விளைவு  பிள்ளைகளுக்குத் தமிழை எழுதக் கற்றுத் தருவதற்குப் பதிலாக ஓவியம் போல் வரையவே கற்றுக்கொடுக்கிறோம். இது மாற வேண்டும் என்ப தற்காகத்தான் தமிழ் இலங்கியங்களில் தமிழ் எழுத்துக்கள் குறித்துச் சொல்லப்பட்டிருப்பதை ஆய்வுசெய்து புத்தகமாக வெளியிட்டுள்ளேன் என்கிறார் கனகலட்சுமி. தற்போது முதியோர் கல்விக்கு  இந்தப் புத்தகம் எந்த அளவுக்குப் பய னுள்ளதாக இருக்கும் என் பதற்கான முன்னோட்ட வகுப்புகள் சென்னை பள்ளிக் கல்வி இயக்கு நரகத்தில் நடத்தப்பட்டு வருகிறது.

குழந்தைத் தொழிலாளர்களுக்கான முதல் பள்ளி


கனகலட்சுமியின் சொந்த ஊர் கோவில்பட்டி. பள்ளிப் படிப்பு முடிக்கும்வரை சராசரி மாணவி யாகவே இருந்திருக்கிறார். அம்மா சுப்புலட்சுமி இறந்துவிட்ட நிலையில் அப்பாவின் கனவை நன வாக்கவே ஆசிரியர் பயிற்சிப் படிப்பில் சேர்ந்தார். குடும்பத்தின் முதல் பட்டதாரியான இவர், ஆசிரியர் பயிற்சியில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். தனியார் பள்ளியில் ஆசிரியராக ஓராண்டு பணி யாற்றினார். பின்னர் ராமநாதபுரத்தில் உள்ள கடுக்காய் வலசை கிராமத்திலுள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பணியாற்றினார். மாணவர் களுக்குப் புரியும்வகையில் எளிமையாகக் கற்பித் ததால் போகலூர் ஒன்றியத்தின் ஆசிரியர் பயிற்றுநுர் பொறுப்புக்கு உயர்த்தப்பட்டார்.

இந்நிலையில்  அனைவருக்கும் கல்வித் திட் டத்தின்கீழ் அப்பகுதியில் உள்ள செங்கல் சூளை களில் உள்ள குழந்தைகளை மீட்டெடுத்துள்ளார். தமிழகத்திலேயே ராமநாதபுரம் மாவட்டத்தில் முதன்முறையாகக்  குழந்தைத் தொழிலாளர் களுக்கான பள்ளியை இவர் தொடங்கினார்.

உலக சாதனை


இவரது புத்தகத்தைக்கொண்டு திருவண் ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் எளிமையான முறையில்  தமிழைக் கற்பிக்கும் முறை குறித்துப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தலைமையில் 1,56,170 அரசுப் பள்ளி மாணவர்கள் ஒரே நேரத்தில் தமிழை வாசிக்கச் செய்து உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். இந்தச் சாதனை யைச் சாத்தியப்படுத்தியதற்காக அமெரிக்காவின் உலக சாதனை நிறுவனம் சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் மொழி குறித்து ஆராய்ச்சி மேற்கொள் வதற்காகவே தனக்கு வந்த பணி உயர்வையெல்லாம் தவிர்த்திருக்கிறார். வாழ்வின் இறுதிவரை தமிழ் மொழிக்குத் தொண்டாற்ற வேண்டும் என்பதே லட்சியம் என்கிறார் ஆசிரியை கனகலட்சுமி.கனகலட்சுமி.

- விடுதலை நாளேடு, 22.1.19

ஞாயிறு, 20 ஜனவரி, 2019

இலங்கையின் மன்னார் நகரில்தமிழர்களின் எலும்புக்கூடுகள் குவியல்

தமிழர்களின் எலும்புக்கூடுகள் குவியல் குவியலாக கண்டெடுப்பு




கொழும்பு, ஜன. 20- இலங்கை ராணு வத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் கடந்த 2009ஆ-ம் ஆண்டு நடந்த இறுதிப் போரில் ஏராளமான புலிகள் கொல்லப் பட்டனர்.

போரின்போது ஏராளமான தமிழ் மக்களும் கொல்லப்பட்டதாக புகார்கள் எழுந்தன. குறிப்பாக தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாகாணத்தில் ஏராள மான பேரை ராணுவம் கொன்று குவித் ததாக பரவலான குற்றச்சாட்டு எழுந் தது. மன்னார் நகரில் ஏராளமான தமி ழர்கள் வசித்து வந்தனர். இங்கு தமிழ் பேசும் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களும் இருந்தனர். இந்த நகரம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. போரின் போது இங்கு இலங்கை ராணு வம், விடுதலைப்புலிகள் மீது கடும் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வடக்கு மாகாணத் திலுள்ள மன்னார் நகரில் கடந்த ஆண்டு கூட்டுறவு சங்க கட்டடம் கட்டுவதற்கு பள்ளம் வெட்டியபோது அங்கு ஏராள மான எலும்புக்கூடுகள் குவியல் குவி யலாய் கண்டெடுக்கப்பட்டன.

ராணுவம் நடத்திய வேட்டையில் கொல்லப்பட்ட மக்களின் எலும்புக் கூடுகள் இவை என்ற புகார் எழுந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

கடந்த செப்டம்பர் முதல் அங்குள்ள எலும்புக்கூடுகளை மீட்கும் பணியில் சிறப்பு சட்ட மருத்துவ நிபுணர் சமிந்த ராஜபக்ச தலைமையிலான குழவினர் ஈடுபட்டுள்ளனர். இலங்கை அரசின் உத்தரவின் பேரில் இந்தக் குழு அங்கு பணியாற்றி வருகிறது. இதுவரை அங்கு 300 எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப் பட்டுள்ளன.

சில இடங்களில் ஒன்றன் மீது ஒன்றாக எலும்புக்கூடுகள் குவியல் குவியலாய் அடுக்கி வைத்தது போல கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதனால் இலங்கை அரசுக்கு கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. போரின்போது வடக்கு மாகாணப் பகுதி மக்களை இலங்கை ராணுவத்தினர் கொன்று இங்கு புதைத்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு களில் 12 வயதுக்குட்ட 23 சிறுவர்களின் எலும்புக்கூடுகளும் அடங்கும். ராஜ பக்சே தலைமையிலான குழுவில் மருத் துவ நிபுணர்கள், சட்ட நிபுணர்கள், தடயவியல் நிபுணர்கள், தொல்பொருள் ஆய்வுத் துறையினரும் இடம் பெற்று உள்ளனர். தோண்டியெடுக்கும் பணிக ளைப் பார்வையிட பத்திரிகையாளர் களும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து சமிந்த ராஜபக்ச கூறும் போது, "ஏராளமான எலும்புக் கூடுகள் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது வரை 125 நாட்களுக்கும் மேலாக இங்கு அகழாய்வுப் பணி செய்துள்ளோம். இந்த சம்பவத்தை நாங்கள் ஒரு குற்ற சம்பவமாகவே பார்க்கிறோம். ஒரு வேளை இது மயானமாக இருந்தால், புதைக்கப்படும் சடலங்கள் கிடைமட்ட மாக இருக்கும். ஆனால் இங்கு உடல் களைக் கொன்று குவித்து அப்படியே பள்ளத்தில் தள்ளிவிட்டது போலுள்ளது.

கண்டெடுக்கப்பட்ட எலும்புகள் தற்போது நீதிமன்ற வளாகத்தில் வைக் கப்பட்டுள்ளன. மேலும் அமெரிக்கா வின் மியாமியிலுள்ள ஆய்வகத்துக்கும் சில எலும்புக் கூடுகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஆய்வு முடிவு வரும் வரை வேறு எந்தத் தகவலையும் தெரிவிக்க இயலாது" என்றார்.

ஆனால் இலங்கை ராணுவம் மன்னார் பகுதியில்  யாரையும் கொன்று புதைக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளது

-  விடுதலை நாளேடு, 20.1.19

செவ்வாய், 15 ஜனவரி, 2019

தைத்திங்கள் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!


ஆண்டுகள் வரலாற்றைத் தொடர்ச்சி யாகப் பதிவு செய்யப் பயன்பட வேண்டும். அவை குழப்பத்திற்கு இடமின்றி இருத்தல் வேண்டும். தமிழர் வரலாற்றில் காலக்குழப்பம் இருப்பதற்குத் தொடராண்டு முறை இல்லாதது முக்கியக் காரணமாகும்.
பழந்தமிழரிடையே வியாழ ஆண்டு என் கிற அறுபதாண்டு கணக்குமுறை இருந்துள் ளது என்பதை வரலாற்றில் அறிய முடிகிறது. இந்த அறுபதாண்டு கணக்கு முறையைப் பின்னாளில் ஆரியர்கள் தாங்கள் கையகப் படுத்திக் கொண்டு ஆரியமயமாக்கி 60 ஆண்டுகளுக்கும் சமஸ்கிருதப் பெயர்களைச் சூட்டி, காலப் போக்கில் தமிழரின் ஆண்டு முறையையும், வானியல் கலையையும், அய்ந்திற அறிவையும் அழித்து ஒழித்தனர். தமிழரிடையே தொடராண்டு முறை இல்லாமல் போனதால் இன்று நாம் காணுகின்ற பல்வேறு தாக்குறவுகளும் பின்னடைவுகளும் தமிழினத்திற்கு ஏற்பட்டு விட்டது.
இந்தக் குழப்பத்தை நீக்க அய்ந்நூறு தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள் மறைமலை அடிகளார் தலைமையில் 1921ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஒன்று கூடி ஆராய்ந்தார்கள். திருவள்ளுவர் பிறந்த ஆண்டை கி.மு.31 எனக் கொண்டு, திருவள் ளுவர் பெயரில் தொடர் ஆண்டை ஏற்படுத் துவதென முடிவு செய்தனர். இழந்த தொன் மைச் சிறப்புக்குரிய தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமென அவர்கள் அறிவித்தனர். சைவம், வைணவம், புத்தம், சமணம், கிறித்தவம், இசுலாம் எனப் பல்வேறு சமயத்தைத் தழுவிய அந்த அய்ந்நூறு சான்றோர்கள் தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்ததற்குச் சரியான காரணம் சான்றுகளும் இருக்கின்றன.
தை முதல் நாள்தான் தமிழ்ப் புத் தாண்டு என்பதற்கு ஈராயிரம் ஆண்டு களுக்கும் முற்பட்ட கழக இலக்கியங் களில் காணப்பெறும் சான்றுகள் சில:
1. தைஇத் திங்கள் தண்கயம் பாடியும் - நற்றிணை
2. தைஇத் திங்கள் தண்ணிய தரினும் - குறுந்தொகை
3. தைஇத் திங்கள் தண்கயம் போல் - புறநானூறு
4. தைஇத் திங்கள் தண்கயம் போல - அய்ங்குறுநூறு
5. தையில் நீராடித் தவம் தலைப்படு வாயோ - கலித்தொகை
தை பிறந்தால் வழி பிறக்கும். தை மழை நெய் மழை முதலான பழமொழிகள் தமிழ் மக்கள் நாவில் இன்றும் பயின்று வருகின்றன. இவை வாழையடி வாழையாக வாய் மொழிச் சான்றாக அமைந்துள்ளன.
இனி, தை முதல் நாளே புத்தாண்டு என்பதற்கு உரிய வானவியல் அடிப்படை யிலான காரணத்தைக் காண்போம். பூமி ஒரு முறை கதிரவனைச் சுற்றி வரும் காலமே ஓர் ஆண்டாகும். இச்சுழற்சியில் ஒருபாதிக் காலம் கதிரவன் வடதிசை நோக்கியும் மறுபகுதிக் காலம் தென்திசை நோக்கியும் செல்வதாகக் காணப்படுகிறது. இதனால் ஓராண்டில் சூரியனின் பயணம், வடசெலவு (உத்ராயணம்) என்றும் தென் செலவு (தட்சாயணம்) என்றும் சொல்லப்படும். தை முதல் ஆனி வரை ஆறு மாதம் வடசெல வும் ஆடி முதல் மார்கழி வரை தென் செலவுமாகும். அந்த வகையில், கதிரவன் வடசெலவைத் தையில்தான் தொடங்கு கிறது. இந்த வானியல் உண்மையை அறிந்த பழந்தமிழர் தைத் திங்களைப் புத்தாண்டாக வைத்தது மிகவும் பொருத்தமானதே.
இப்படியும் இன்னும் பல அடிப்படை உதாரணங்களாலும் தை முதல் நாளை அய்ந்நூறு தமிழ்ச் சான்றோர்கள் புத்தாண்டாக அறிவித்தனர். தமிழ்நாடு அரசு அதனை ஏற்றுக் கொண்டு 1972 முதல் அரசுப் பயன் பாட்டிலும் ஆவணங்களிலும் நடைமுறைப் படுத்தி வருகிறது.
பத்தன்று நூறன்று பன்னூ றன்று
பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு, தை முதல் நாள்,
பொங்கல் நன்னாள்!
என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடலும் தமிழருக்குத் தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாள் என்பதைத் தெளிவாக்குகிறது.
தமிழ் மொழி, இன, சமய, கலை, பண்பாடு, வரலாற்று மீட்பு வரிசையில் பிற இனத் தாரின் தாக்குதலால், படையெடுப்பால், மறைப்புகளால், சூழ்ச்சிகளால் இடைக் காலத்தில் சிதைக்கப்பட்ட தமிழரின் வானி யல் கலையை அய்ந்திரக் (சோதிடம்) கலையை நாம் மீட்டெடுக்க வேண்டும். அப்போது தான் தமிழரின் செவ்வியல் நெறியை நிலைப் படுத்த முடியும்.
- லெட்சுமணன், ஈப்போ
நன்றி: முகம், சனவரி 2019
- விடுதலை ஞாயிறு மலர், 12.1.19

தமிழர் திருநாள்

- தந்தை பெரியார் -
திராவிடத்தின் ஆதிமக்களான தமிழர்க ளுக்கு தமிழர்களுக்குரிய பண்டிகை என்ப தாக ஒன்றைக் காண்பது என்பது மிக அரிதாக உள்ளது.
இதன் காரணம் என்னவென்றால் கலாச்சாரத் துறையில் தமிழனை ஆதிக்கம் கொண்டவர்கள் தங்களது கலாச்சாரங்களை தமிழனிடம் புகுத்துகிற வகையில் முதல் பணியாக - தமிழ்நாட்டின் தமிழனின் கலாச் சாரங்களை, பழக்க வழக்கங்களை அடியோடு அழித்து, மறைத்து விட்டார்கள். இதனால் தமிழனுக்குரிய கலாச்சாரம் எது என்று அறிவதுகூட மிகக் கடினமான காரியமாக ஆகிவிட்டது. தமிழனின் கலாச்சாரப் பண்பு கள் அழித்து ஒழித்து மறைக்கப்பட்டுவிட்டன என்பது மாத்திரமல்லாமல், தமிழனுக்கு வரலாறு (சரித்திரம்) என்பதுகூட இல்லாமல் அழிக்கப்பட்டுவிட்டன.
எனவே, இன்று தமிழன் கலாச்சாரம், பண்பு, வரலாறு அற்ற ஒருஅடிமை ஜீவனாக விளங்குகிறான். இப்படி விளங்குவது மாத் திரமல்லாமல் இன்று தமிழன் கொண்டாடும் - நடக்கும் கலாச்சாரப் பண்பு, வரலாறு என்பவைகள் எல்லாம் தமிழனுக்கு இழிவும் அடிமைத் தன்மையும் தந்து அவற்றை நிலைநிறுத்துபவைகளாகவே இருந்து வருகின்றன.
தமிழனுக்குள்ள கலைகள் என்பனவெல் லாம் தமிழனை அடிமையாக்குவதாகவே இருந்து வருகின்றன. தமிழனுக்கு அடியோடு சமயம் என்பதே இல்லாமல் போய்விட்டது எனலாம். மக்களுக்கு விழா முக்கியமான தேவையாகும். விழாவை முன்னிட்டு மக்க ளுக்கு மகிழ்ச்சி, ஓய்வு, மக்களுடன் அளவ ளாவுதல், கவலையற்ற கொண்டாட்டம் கொள்ளுதல், அன்பு, ஆசைப் பரிமாற்றம், சுயேச்சையான களியாட்டம் முதலியவை களை அனுபவிக்க முடிகின்றது. இவைகள் ஏற்படுவதால்தான் இவற்றை விழா என்று கூறுகிறோம்.
அரசாங்க விடுமுறைக்கு உரிய பண்டிகை கள் போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், மகா சிவராத்திரி, தமிழ் வருடப்பிறப்பு, ஆவணி அவிட்டம், கோகுலாஷ்டமி, சரஸ்வதி பூசை, தீபாவளி முதலியனவும் விடுமுறை இல்லாத பண்டிகைகள் - பிள்ளையார் சதுர்த்தி, கார்த்திகை தீபம், பங்குனி உத்தரம், தைப்பூசம் இந்தப்படி யான இன்னும் பல உள.
இவைகளில் தமிழனுக்கு தமிழ் சமுதாயத்திற்கு தமிழன் பண்பிற்கு தமிழன் வரலாற்று நடப்புக்கு, தமிழனின் அறிவு ஆராய்ச்சிப் பொருத்தத்திற்கு ஏற்ற விழா அல்லது பண்டிகை என்பதாக எதையா வது சொல்ல முடிகிறதா?
தமிழனின் இழிவுக்கு மறக்க முடியாத, முக்காலத்திற்கும் ஏற்ற நிலையில் ஓர் எடுத்துக்காட்டைக் கூறவேண்டுமானால் தமிழனுக்கு காலத்தைக் காட்டக் கூடிய சொல், சாதனம், அமைப்பு என்பது இல்லை என்றே கூறலாம்.
கிருஸ்துவர்கள், காலத்தைக் காட்ட இருப்பது கிருஸ்துவ ஆண்டு (கி.பி.) இருக்கிறது. முஸ்லிம்களுக்கும் காலத் தைக் காட்ட இஸ்லாம் ஆண்டு (ஹிஜ்ரி) இருக்கிறது. இதுபோல் தமிழனுக்கு என்ன இருக்கிறது? இதற்குத் தமிழனின் ஆதாரம் என்ன இருக்கிறது?
மற்றும் இப்படித்தான் தமிழனுக்கு  கடவுள், சமயம், சமய நூல், வரலாற்றுச் சுவடி, இலக்கியம் முதலியவை என்று சொல்ல, எதுவும் காண மிக மிகக் கஷ்ட மாக இருக்கிறது.
இப்படிப்பட்ட நிலையில், தமிழர் விழா (பண்டிகை) என்பதாக நான் எதைச் சொல்ல முடியும்? ஏதாவது ஒன்று வேண்டுமே, அதை நாம் கற்பிப்பது என்பதும், எளிதில் ஆகக் கூடியது அல்லவே என்று கருதி பொங்கல் பண்டிகை என்பதை தமிழன் விழாவாகக் கொண்டாடலாம் என்று முப்பது ஆண்டுகளுக்கு முன் நான் கூறினேன் - மற்றும் யாராவது கூறியும் இருக்கலாம்.
இந்தப் பண்டிகையும் (Harvest Festival) அறுவடைத் திருவிழா என்ற கருத்தில்தானேயொழிய, சங்கராந்திப் பண்டிகை, போகிப் பண்டிகை, இந்திர விழா என்று சொல்லப்படும் கருத்தில் அல்ல.
இந்தப் பொங்கல் பண்டிகையை தமிழர் எல்லோரும் கொண்டாட வேண்டும்.
- விடுதலை, 30.1.1959
- விடுதலை ஞாயிறு மலர்,12.1.19

அமெரிக்காவில் வரும் ஜூலை மாதம் 10ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு

சென்னை, ஜன.13  பத்தாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் வரும் ஜூலை மாதம் 4-ஆம் தேதி தொடங்கி 7-ஆம் தேதி வரை நான்கு நாள்கள் நடைபெற உள்ளது.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் 5 ஆண்டுகளுக்கு முன்பு உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது. அதன்பிறகு இப் போது நடைபெற உள்ளது குறிப்பிடத் தக்கது. தமிழ் ஆராய்ச்சிக்கான சர்வதேச சங்கம் இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளது. முதன்முறையாக அமெரிக்காவில் நடைபெற உள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை, தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.
இந்தத் தகவலை மாநாட்டு ஏற்பாட் டாளர்களில் ஒருவரான கால்டுவெல் சென்னையில் (12.1.2019) தெரிவித்தார். தமிழ்மொழி, தமிழின் தொன்மை, தமிழ் இலக்கியம், தமிழர் கலாசாரம் உள் ளிட்டவை குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும்.
தமிழறிஞர்கள் உள்பட சுமார் 6 ஆயிரம் பேர் இந்த மாநாட்டில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது. மாநாட்டையொட்டி தமிழறிஞர் ஜி.யு.போப்பின் 200-வது பிறந்த நாளை முன்னிட்டு கீழடி பற்றிய சிறப்பு விவாதமும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை வடஅமெரிக்க தமிழ்ச்சங்க கூட்டமைப்பு செய்துள்ளது.
-விடுதலை நாளேடு, 13.1.19

வெள்ளி, 11 ஜனவரி, 2019

கருப்பா? கறுப்பா?



தமிழண்ணல்


கருப்பு: கரிய நிறத்தை நேர் பொருளாய்க் குறிக்கும் சொல் கருப்பு.

கறுப்பு: சினம், வெறுப்பு, அவன் எந்த நேரமும் கறுவுகிறான். கறுத்தோர் - பகைவர், கறுப்பு என்பதற்கு நேர் பொருள் ‘நிறம்' அன்று, சீற்றத்தால் கறு கறு என்று முகம் கறுத்தலும் சிவத்தலும் உண்டு. அவை நிழற்பொருளாக அரிதிற் பயன் பட்டன.

‘கறுப்பின்கண் மிக்குள்ளது அழகு' - என்ற இலக்கண உதாரணத்திற்கு, அட்டக் கறுப்பிலும் ஓர் அழகுண்டு என்பதாம். உரிச்சொல் இலக்கணத்தில்,

பயிலாதவற்றைப் பயின்றவை சார்த்தி

தத்தம் மரபிற் சென்று நிலை மருங்கின்

எச்சொல்லாயினும் பொருள் வேறு கிளத்தல் (782)

பயிலாதவை - அடிக்கடி பயன்படுத் தாத அருஞ்சொற்கள், அவற்றை அடிக்கடி பயன்படுத்தும் சொற்களுடன் சார்த்தி, எச்சொல்லாயினும் வேறு நிழற்பொருளை யும் தருதல் பாவலர்க்கு இயல்பு.

கருப்பு என்பது - கரிய நிறம், 'வெளிப் படு சொல்லே கிடைத்தல் வேண்ட' என்பார் தொல்காப்பியர் (783)

கருப்பு நிறம் என்பது உலகறிந்த பொருள். 'துங்கக் கரிமுகத்துத் தூமணியே, கரு நெடுங்கண்ணி , கருவிழி, கரிகாலன், கருங்கனி நாவல், கருங்கார் குறிஞ்சி, கருங்குழலி, கார் வண்ணன், கரிது, கரி, காரி இவற்றில் தொடர்புடைய சொற்கள் எல் லாம் கருப்பு என்பதிலிருந்து கிடைக் கின்றன.

கறுப்பு


‘கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள்' தொல்.855), வெகுளி - கடுங்கோபம், இது சினத்தல், பகைத்தல். நிற்கறுத்தோர் அரணம் போல - பகைத்தவரின் கோட்டை போல 'நீ சிவந்து இருத்தி' (பதிற்-13) நீ சினந்து முற்றுகையிட்ட. நிறத்துஉரு - நிறம் வேறு படல் கோபத்தால்). சீற்றத்தால் நிறமாற்ற மேற்படல் இயல்பு, கறுத்தோர் - பகைவர், மேகம் வானில் திரண்டு கறுப்பதுண்டு', நிறம் மாறி, கறுத்துக் கொண்டு வரும். ‘வானம் மாமலை வாழ்சூழ்பு கறுப்ப' குறிஞ்சி -22). இது கருநிறம் மட்டுமன்று; மிகமுற்றிய கருநிறம், ‘கவ்வை கறுப்பு' (அகம்.366) எள்ளின் இளங்காய் முற்றிய நிலை. அது கருநிறமாய் மாறி வருவது காட்டும். கவ்வை - எள்.

சினம் முற்றிய நிலையில் முகம் கறுத்துப் போகும். அல்லது கண்ணும் கன்னமும் எல்லாம் சிவந்து போகும், பயிர் முற்றிய நிலையில் நிறம் மாறிக் காட்டும். இது கருப்பு அன்று என்பதற்கே ஆசான் ‘நிறத்து உரு' என்று குறிப்பிட்டுள்ளார். எச்சொல்லா யினும் வேறு பொருள் கிளத்தல் என்றபடி வந்தது இது. இது இடமும் சூழலும் நோக்கிக் கொள்ளப்பட வேண்டியது.

கருநிறத்தைக் குறிக்கும் கருப்பு நிலையானது. கறுப்பு, சிவப்பு இடம், சுழல் போன்றவற்றால் 'நிறத்துரு' - தோற்றம் பெறும், பிறகு மாறிவிடும், கறுப்பண்ணசாமி என்றது கடுங்கோபக்காரசாமி என இடம் நோக்கிப் பொருள் கொள்ளவே ஆகும்.

‘நின் புதல்வர் நால்வரினும் கரிய செம்மல் ஒருவனை என்னுடன் அனுப்பு' என்றுதான் விசுவாமித்திரர், தயரதனிடம் கேட்கிறார்.

இன்றைய நிலையில் கருப்புப் பணம் என்பதற்கு இடையின ‘ரு' போடுவதுதான் பொருத்தமாக அமையும்.‘கறுப்புப் பணம்' என்று எழுதினால் உண்மையான பொருள் பொருந்தி வராது.

- விடுதலை ஞாயிறு மலர், 15.12.18

திருக்குறள் மனுதர்மத்தின் சாரமா?


மலைத் தேனும் மலமும் ஒன்றாகுமா?




(நாகசாமி எனும் பார்ப்பனர் திருக்குறள் மனுதர்மத்தின் சாரம் என்னும் தலைப்பில் ஆங்கிலத்தில் நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். திருக்குறள்


- ஓர் உலகப் பொதுமறை.

இதற்கு - சாதி, மதம், இனம், மொழி, நாடு என எந்தவொரு எல்லையும் கிடையாது. சமயச் சாயம் பூச முடியாதது. எல்லாச் சமயங்களும் சொந்தம் கொண்டாடும் ஒரே நூல்  - திருக்குறள். இது ஓர் இமயமலை. பூணூல் கொண்டு கட்டித் தூக்கிவிடலாம் என்பது மடமை; இதற்கு சவுக்கடி கொடுப்பது எனது கடமை).


 

திருக்குறள் மனுதர் மத்தின் சாரமா? - மலைத்

தேனும் மலமும் ஒன்றென் றாகுமா?

அறிவுடை யோரே ஓர்சொல் கேளீர்! - இதை

ஆய்ந்து தெளிந்தே உண்மை தேர்வீர்!

 

நாக சாமி எனுமோர் திருடன் - குறளை

மனுதர்ம சாரம் என்ற குருடன்! காகக் குரலும் குயிலின் குரலும் - தெரியா

கடைந்தெ டுத்த மாபெரும் மூடன்!

 

மனுதர் மத்தின் ஆணிவேர் அறுக்க - நல்ல

வாய்ப்பு தந்த நாகமே நன்றி!

மனிதனை மனித னாகவே மதியா - மனுவை

மனிதன் மதியான்; மதிக்குமே பன்றி!!

 

முகத்தி லிருந்து பார்ப்பான் பிறந்தான் - இரு

தோள்களி லிருந்து சத்திரியன் பிறந்தான்

அகன்ற தொடையில் வைசியன் பிறந்தான் - அடிப்

பாதத் திலிருந்தே சூத்திரன் பிறந்தான்!

 

என்றே பகவர்வது மனுதர்ம நூலே! - பிறப்பில்

ஏற்றத் தாழ்வினைக் கற்பித்த குரலே!

ஒன்றே பிறப்பென 'பிறப்பு ஒக்கும் - எல்லா உயிர்க்கும்' என்றிங் குரைப்பது குறளே!

 

என்முன் வந்து நீயும் நில்லடா! - இந்த இரண்டும் ஒன்றா பதில் சொல்லடா?

 

வர்ண பேதம் பிரம்மா செய்தான் - என்றே

மனுதர்ம நூலும் சொல்வது கண்டேன்!

வர்ண பேதம் நானே படைத்தேன் - என்றே

கண்ணன் கீதையில் சொல்வதும் கண்டேன்!

 

வர்ண பேதம் விதைத்தவன் யாரடா? - மாந்தருள்

பிரிவினை சொல்பவன் கடவுளா கூறடா?

 

உழவுத் தொழிலை இழிதொழில் என்றது - மண்ணின்

ஒப்பிலா இழிநூல் மனுதர்ம நூலே!

உழுதுண்டு வாழ்வா ரேவாழ் வார் என - உழவை

உயர்த்திப் பிடிப்பது திருக்குறள் நூலே!

 

என்முன் வந்து நீயும் நில்லடா! - இந்த

இரண்டும் ஒன்றா பதில் சொல்லடா?

 

சாதி குலதர் மத்தைக் கூறும் - மூல

சதிநூல் தானே மனுதர்ம நூலே!

சாதி குலதர் மம்என் றிங்கே - எதையும்

சாரா உலகநூல் திருக்குறள் தானே?

 

என்முன் வந்து நீயும் நில்லடா! - இந்த

இரண்டும் ஒன்றா பதில் சொல்லடா?

 

பட்டினிக் கிடந்தால் திருட லாமாம்! - சொல்வது

பார்ப்பான் நூலான மனுதர்ம நூலே!

பட்டினிக் கிடப்பது தாயே எனினும் - சான்றோர்

பழிப்பது செய்யேல் என்பது குறளே!

 

என்முன் வந்து நீயும் நில்லடா!

இந்த இரண்டும் ஒன்றா பதில் சொல்லடா ?

 

வேள்வி தன்னை உயர்த்திப் பிடித்தே - பார்ப்பான்

மேன்மை ஆதல் மனுதர்ம நூலே!

வேள்வி செய்வது வெட்டி வேலை - அதையே

வேண்டாம் என்பது திருக்குறள் நூலே!

 

என்முன் வந்து நீயும் நில்லடா! - இந்த

இரண்டும் ஒன்றா பதில் சொல்லடா?

 

அறம்பொருள் இன்பம் வீடென் றிங்கே - நான்காய்

அடுக்கி வைப்பது மனுதர்ம நூலே!

அறம்பொருள் இன்பம் என்று மூன்றுடன் - வீட்டின்

அடையாளம் இலாதது திருக்குறள் நூலே!

 

என்முன் வந்து நீயும் நில்லடா! - இந்த

இரண்டும் ஒன்றா பதில் சொல்லடா?

 

மண்ணில் ஆணை உயர்த்திடும் மனுதர்மம் - ஆனால்

ஆண்பெண் சமமே என்றிடும் திருக்குறள்!

பெண்ணை விபசாரி என்பது மனுதர்மம் - தெய்வமாய்ப்

பெண்மையைப் போற்றிப் புகழ்வது திருக்குறள்!

 

என்முன் வந்து நீயும் நில்லடா! - இந்த

இரண்டும் ஒன்றா பதில் சொல்லடா?

 

உலகப் பொதுநூல் திருக்குறள் ஒன்றே! - இதை

உரிமை கொண்டாட திருடுதல் வீணே!

உலவும் கதிரோன் உருவைத் தொட்டால் - நீயும்

உருத்தெரியாமல் மறைவாய் தானே?

 

சவாலை ஏற்றுப் புலியிடம் வருவாயா? - இல்லை

சந்து பொந்தில் எலிபோல் நுழைவாயா?

 

கடலளவு நீரெனக் கைவசம் இருக்கு - உன்றன்

மனுதர்மத் தோலை உரித்துக் காட்ட!

கடுகளவே உரித்துப் போட்டேன் இன்று! - இன்னும்

காண வேண்டின் வந்தால் நன்று!

 

உடனே வாரும்; இலையேல் ஓடும்!

வந்தால் உடலின் ஒண்பது ஓட்டையும் மூடும்!!

-  விடுதலை ஞாயிறு மலர், 17.11.18

செவ்வாய், 1 ஜனவரி, 2019

தமிழ் திங்களும் இணையான புழக்கத்திலுள்ள திங்கள்(மாதம்)களும்

தமிழ் திங்கள்கள்
...............................
1.சுறவம்(தை) ,
2.கும்பம்(மாசி),
3.மீனம்(பங்குனி),
4.மேம்(சித்திரை) ,
5.விடை(வைகாசி),
6.ஆடவை(ஆனி),
7.கடகம்(ஆடி) ,
8.மடங்கல்(ஆவணி),
9.கன்னி(புரட்டாசி),
10.துலை(ஐப்பசி ) ,
11.நளி(கார்த்திகை),
12.சிலை(மார்கழி). 

தமிழ் மாதங்கள் - சமற்கிருதம் - திரிபு மாதங்கள்:
``````````````````````````````````````````````````````````
1. சுறவம் - புனர்தை - தை
2. கும்பம் - மகசி - மாசி
3. மீனம் - பல்குணா - பங்குனி
4. மேழம் - சைத்திரம் - சித்திரை
5. விடை - வைசாகி - வைகாசி
6. ஆடவை - மூலன் - ஆனி
7. கடகம் - உத்திராடம் - ஆடி
8. மடங்கல் - அவிட்டம் - ஆவணி
9. கன்னி - புரட்டாதி - புரட்டாசி
10. துலை - அகவதி - ஐப்பசி
11. நளி - கிருத்திகா - கார்த்திகை
12. சிலை - மிருகசீரச - மார்கழி

கிழமைகள்
...............
1.ஞாயிறு,
2.திங்கள்,
3.செவ்வாய்,
4.அறிவன்,
5.வியாழன்,
6.வெள்ளி,
7.காரி