பக்கங்கள்

வியாழன், 30 மே, 2019

திருக்குறளை மலம் என்று விமர்சித்தாரா பெரியார்?

'துக்ளக்கின்' கோணல் பார்வை....


கி.தளபதிராஜ்


மயிலாடுதுறை


நடைபெற்று முடிந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து ஆடிட்டர் குருமூர்த்தி தமிழ் 'இந்து' பத்திரிக்கைக்கு ஒரு பேட்டியளித்துள்ளார். அதில் 'தமிழகம் மோடியை நிராகரித்து விட்டது. இது பெரியார் பூமி!; திராவிட பூமி!" என்று வைகோ, கனிமொழி உள்ளிட்டோர் கூறி வருகின்றனரே? என்ற கேள்விக்கு, 'தமிழகம்' பெரியார் பூமி என்றால் இது திருவள்ளுவர் பூமி இல்லையா? தமிழையும், தமிழர்களையும் காட்டு மிராண்டிகள். திருக்குறள் மலம் என்றெல்லாம் விமர்சித்தவர் பெரியார். எனவே, தமிழகத்தை பெரியார் பூமி என்பதை யாரும் ஏற்க மாட்டார்கள்" என்று பதில ளித்திருக்கிறார்.

பெரியார் மலம் என்று திருக் குறளை எப்பொழுதேனும், எங்கே யாயினும் விமர்சித்திருக்கிறாரா? பெரியார் மலம் என்று எதைச் சொன்னார்?

மதத்தில் இருந்து தமிழ் வில கினாலொழிய தமிழுக்கும், தமிழ ருக்கும் சுயமரியாதை உண்டாகாது. புராணங்களிலிருந்து தமிழுக்கு இலக்கியம் எடுப்பது மலத்திலிருந்து அரிசி பொறுக்குவது மாதிரியாகும்.

கம்பராமாயணம் அரிய இலக் கியமாய் இருக்கிறதாகச் சொல்லு கிறார்கள். இருந்து என்ன பயன்? ஒருவன் எவ்வளவுதான் பட்டினிக் கிடந்தாலும் மலத்தில் இருந்து அரிசி பொறுக்குவானா? அது போல் தானே கம்பராமாயணம் இருக்கிறது. அதில் தமிழ் மக்களை எவ்வளவு இழிவாக குறிப்பிடப்பட் டிருக்கிறது? சுயமரியாதையை விரும்புகிறவன் எப்படி கம்பராமா யண இலக்கியத்தைப் படிப்பான்? இன்று கம்பராமாயணத்தால் தமிழ் மக்களுக்கு இலக்கியம் பரவிற்றா? இழிவு பரவிற்றா என்று நடுநிலையில் இருந்து யோசித்துப் பாருங்கள்! ('குடி அரசு' 26.1.1936) என்று இந்து மதப் புராணங் களையும், கம்பராமாயணத்தின் யோக்கியதையையும் மலத்தோடு ஒப்பிட்டு விளாசுகிறார் பெரியார். இப்படி ஆரியப் புராணங்களை விமர்சித்ததைப் புரட்டிப் போட்டு, பெரியார் திருக்குறளை மலம் என்று சொன்னதாக புளுகியிருக்கிறார்

"எதற்காக இலக்கியம்? அதனால் நமக்கு என்ன பயன்? நம் புத்திக்கு எட்டிய முறையில் தமிழர் பண் புக்குக் கலைக்குத் தகுந்தவாறு ஏதேனும் இலக்கியங்கள் இருக் கிறதா?" என்ற பெரியார் இராமா யணம், பாரதம், பகவத்கீதை, பெரிய புராணம், உள்ளிட்ட அனைத்து இலக்கியங்களையும் கடுமையாக சாடினார். மதமும், மவுடீகமும் மண்டிக்கிடக்கும் இவற்றைத் தவிர அறிவு வளர்ச்சிக்குத் தேவையான எந்த புதிய இலக்கியங் களும் தமி ழில் படைக்கப்படாமல் இருப்பதை வேதனையோடு சுட்டிக்காட்டி, தமிழ்மொழி காட்டுமிராண்டி மொழியாகவே இருக்கிறது என்று பேசினார்.

ஆரியத்தின் பிடியிலிருந்து நம் மக்களை மீட்க புராண, இதிகாசக் கு ப்பைகளை புதைகுழிக்கு அனுப்ப முயற்சித்த அதே பெரியார் தான் 1949 ஜனவரி 15, 16 ஆகிய இரண்டு நாட்கள் அறிஞர் பெருமக்களை யெல்லாம் அழைத்து பெரியதொரு மாநாட்டை திருக்குறளுக்காகவே நடத்தினார். அந்த மாநாட்டில் கலந்து கொள்ள 'விடுதலை' மூலம் பெரியார் தமிழறிஞர்களுக்கெல் லாம் வேண்டுகோள் விடுத்தார்!

'திராவிடர் கழகம் அதில் நல்ல பங்கு கொள்ள வேண்டும் என்பது எனது ஆசை. ஏனென்றால், தமிழர் களுக்கு ஆரியக் கலைகள், ஆரிய நீதி நெறி ஒழுக்கங்கள் அல்லாமல் வேறு இல்லை என்பது மாத்திர மல்லாமல், இவைகளில் ஆரியர் வேறு தமிழர் வேறு என்று பாகு படுத்துவது தவறு என்றும் கூறுவ தோடல்லாமல், குறள் முதலிய தமிழர் பண்பு, ஒழுக்கம், நெறி ஆகியவைகளைக் காட்டும் தமிழ் மறைகள் பலவும் ஆரியத்தில் இருந்து ஆரிய வேத, சாஸ்திர, புராண, இதிகாசங்களில் உள்ளதைத் தொகுத்து எழுதப்பட்டவையே என்றும், பெரும் அளவுக்கு ஆரி யர்கள் பிரச்சாரம் செய்வது மாத் திரமல்லாமல் பல்வகைத் தமிழர் களைக் கொண்டும் அப்படிப்பட்ட பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.

குறளைப் பொறுத்தவரை என் னுடைய கருத்து ஆரிய கலை, பண்பு, ஒழுக்க ம், நெறி முதலியவை யாவும், பெரிதும் தமிழர்களுடைய கலை, பண்பு, நெறி, ஒழுக்கம் முதலியவை களுக்குத் தலைகீழ் மாறுபட்டதென் பதும், அம்மாறுப்பாடுகளைக் காட் டவே சிறப்பாக குறள் உண்டாக்கப் பட்டது என்பதும் உறுதியான கருத்தாகும். குறளிலும் சிற்சில இடங்களில் ஆரியப் பண்பு கலப்பு இருக்கின்றது என்று இன்று பல பெரியார்கள் கருதுகிறார்கள். அதற் கேற்றப்படி சில எடுத்துக்காட்டு களையும் காட்டுகிறார்கள்.

ஏதோ சில இருக்கலாம் என்றே வைத்துக் கொள்ளலாம். அப்படிப் பட்டவைகளை நாம் இக் காலத்துக் கும், குறளாசிரியரது பெரும்பாலான கருத்துக்கும், ஒப்பிட்டுப் பார்த்து நல்ல கவலையுடன் சிந்தித்தோ மேயானால் ஏதாவது நம் கருத்துக்கு ஏற்ற தெளிபொருள் விளங்கும் என்றே கருதுகிறேன்.  விளங்கா விட்டாலும் அவை குறளின் தத் துவத்துக்கு முரண்பாடானது என்றாவது தோன்றலாம். அதுவும் இல்லாவிட்டால் நம் பகுத்தறிவுப் படி பார்த்து, கொள்வதைக் கொண்டு,  விலக்குவதை விலக்கலாம்.

நீண்ட நாள் நம் கலைகள், பண் புகள் எதிரிகளின் இடையிலேயே காப்பு அற்றும், நாதி அற்றும் கிடந் ததாலும் அன்னிய கலை, பண்பு ஆட்சிக்கு நாம் நிபந்தனை அற்ற அடிமைகளாக இருந்ததாலும், நம் கலைகளில் இப்படிப்பட்ட தவறு தல்கள் புகுவது, நேருவது இயற்கை யேயாகும். ஆதலால் அப்படிப்பட்ட ஏதோ சிலவற்றிற்காக நம்முடைய மற்றவைகளையும் பறி கொடுத்து விட வேண்டும் என்பது அவசியமல்ல.

எனவே, குறள் தத்துவத்தை விளக்கிடவென்றே நடத்தப்படும் இம் மாநாட்டில் நாம் பங்கு கொண்டு தத்துவங்களை உணர்ந்து, தமிழ்ப் பாமர மக்கள் இடையில் அந்தத் தத்துவங்கள் புகும்படி செய்ய வேண்டியது நம் கடமை யாகும். திராவிடர் கழகம் என்பது சமுதாய முன்னேற்றத்திற்காகவே இருப்பதால், அதன் சமுதாயக் காரியங்களுக்கு குறள் தத்துவம் பெருமளவுக்கு அவசியமாகும். ஆத லால், குறள் மாநாட்டைத் தமிழர்கள், திராவிடர் கழகத்தார் நல் வாய்ப் பாகக் கொண்டு கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்" என்று எழுதினார். தந்தை பெரியார் தனது மாநாட்டு உரையில்,

"திருக்குறள் ஆரிய தர்மத்தை மனுதர்மத்தை அடியோடு கண்டிப் பதற்காகவே ஏற்பட்ட நூல் என் பதையும் நீங்கள் உணர வேண்டும். அதுவும் மக்களுக்கு வெறும் தர் மங்களை மட்டும் உபதேசிக்க எழுதப்பட்ட நூல் என்று என்னால் கொள்ள முடியவில்லை. மக்கள் நல்வாழ்க்கைக்குக் கேடாக வந்து சேர்ந்த ஆரிய அதர்மத்தை ஒழிப் பதை நோக்கமாகக் கொண்டு, ஒரு மறுப்பு நூலாகவே திருக்குறள் எழு தப்பட்டதாகவே என்னால் கருத முடிகிறது. திருக்குறள் ஆரியக் கொள்கைகளை மறுக்க அவைகளை மடியச் செய்ய அக்கொள்கைகளில் இருந்து மக்களைத் திருப்ப எழுதப் பட்ட நூல் என்றுதான் நான் கருதுகிறேன்.

மனுதர்மம் வருணாச்சிரம தர்மத்தை வற்புறுத்தி மக்களில் நான்கு ஜாதிகள் பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் உண்டு என்று உபதேசிக்கிறது. திருக்குறள் மக்கள் அனைவரும் ஒரே இனந்தான் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிறது.

"திருவள்ளுவர் காலம் பொது உடைமைக் காலமோ, சமதர்மக் காலமோ அல்ல. ஆனால், வள்ளுவர் சிறந்த பொது உடைமைக்கார ராகவே விளங்குகிறார். அதனால் தான் நம் போற்றுதலுக்கு ஆளா கிறார்" என்று குறிப்பிட்டு விட்டு "இத்தகைய தனிச் சிறப்பு வாய்ந்த திருக்குறளை அனைவரும் போற்றி அதன்படி நடந்து நல்வாழ்வு வாழ வேண்டுமென்றும், நாட்டின் மூலை முடுக்குகள் தோறும்கூட திருவள் ளுவர் கழகங்கள் தோற்றுவிக்கப் பட்டு, திருக்குறள் கருத்துகள் பரப் பப்பட வேண்டும்" என்றும் பேசினார்.

('விடுதலை' 17.1.1949)

பெரியாரின் திருக்குறள் ஆதரவை அன்றைக்கே பேரறிஞர் அண்ணா , இலக்குவனார், நாவலர் நெடுஞ்செழியன் போன்றோர் எடுத்து இயம்பியுள்ளனர்.

பேரறிஞர் அண்ணா


'மக்கள் வாழ்வு நலிந்திருக்கக் கண்ட பெரியார், அவர்தம் வாழ்வை நலப்படுத்த நூற்கள் பல தேடிப் பார்த்த போது, தான் கண்ட பாரதம், பாகவதம், பகவத் கீதை, இராமயணங்கள், வேதங்கள், உப நிஷத்துகள் இவையாவும் பல கேடுகளைத் தம்மிடத்தே கொண்டு ஆரியப் பிரச்சாரத்தால், புரட்டுகள் வெளித் தோன்றாமல் இருந்து வருபவைகள்.  திராவிடர் வாழ்வுக்கு உண்மையில் பெரிது ம் கேடு செய்து வருபவை இவைகளே என்று கண்டு தான் இதுகாறும் அவற்றிலுள்ள புரட்டுகளை எடுத்தோதி வந்து இன்று மக்களுக்கு அவற்றின் மீதுள்ள பற்றுதல் வெகுவாகக் குறைந்திருக்கும் இந்த வேளையில் திருக்குறள் என்ற ஒப்பற்ற நீதி நூலை மாநாடு கூட்டி திராவிடர் களுக்கு எல்லாத் தமிழர்களுக்கும் தருகிறார் தந்தை பெரியார்.

இனி திராவிடன் ஒவ்வொருவன் கையிலும் குறள் எப்போதும் இருத் தல் வேண்டும். திராவிடன் கையில் குறள் இருப்பதை பகவத் கீதை ஏந்தித் திரியும் பார்ப்பனர்கள் காண்பார்களாகின் பார்ப்பனீயம் படுகுழியில் புதைக்கப்படப் போ வது நிச்சயம் என்பதை உணர்ந்து நமக்கும் மேலாக திருக்குறளைப் போற்றிப் புகழ முற்படுவதோடு அல்லாமல் தம் அகம்பாவத்தையும், மூட நம்பிக்கைகளையும் கை விட் டேயாக வேண்டும் என்ற தீர் மானத்துக்கு வந்து விடுவார்கள்'

சி.இலக்குவனார்


"குறள் மொழிப்படி திருக்குறளை அனைத்துலகுக்கும் எடுத்தோதி அதற்குச் சிறப்பை உண்டாக்கித் தர இப் பெரியார் ஒருவராலேயே முடியும் என்பதை உணர்ந்தே, இயற்கையானது திருக்குறளை பெரியார் அவர்களிடம் ஒப்படைத் திருக்கின்றதென்றும், இயற்கை கூட வள்ளுவர் கட்டளைப்படியே நடக்கிறதென்பது வள்ளுவர்க்குப் பெருமை தருவதாகும்" என்றும் எடுத்துக் கூறி, "அரசியல் நெறியை எடுத்துக் கூறும்போது கூட, வள்ளுவர் அறம் வழுவாது உயர் நெறிகளை எடுத்தோதி இருக்கிறார் என்றும், இன்றைய சர்க்கார் உண்மையிலேயே மதச் சார்பற்ற சர்க்காராக வேண்டுமானால், திருக்குறள் அதற்கேற்ற வழிகாட்டி என்றும் கூறி, பழந்தமிழனான வள்ளுவன், புரட்சித் தமிழ் மகனான வள்ளுவன், சீர்திருத்தக்காரனான வள்ளுவன் எழுதிய குறளை யாவரும்  படித்து அதன்படி நடந்து இன்ப வாழ்வு வாழ்தல் வேண்டும்"

நாவலர் இரா. நெடுஞ்செழியன்


"பெரியார் இன்று குறளைக் கையில் ஏந்தியுள்ளார். பலப்பல நூல்களை ஒதுக்கிக் கொண்டே வந்த பெரியார், குறளை மட்டும் கையில் ஏந்தியிருக்கும் காரணம் என்ன? திருக்குறள் உலகப் பொது நூல். பெரியாரின் உலகப் பொது இயக்கத்திற்கு ஏற்ற உலகப் பொது நூல் திருக்குறளே! எனவேதான் அது பெரியாரின் கையிலே வீற்றியிருக்கிறது."

(1949 திருக்குறள் மாநாட்டு உரைகள்)

(தொடரும்)

-  விடுதலை நாளேடு, 30.5.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக