பக்கங்கள்

வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 14 மார்ச், 2018

மயிலை சீனி. வேங்கடசாமி

(16.12.1900 - 8.7.1980)


சீனி.வேங்கடசாமி ஒரு தமிழறிஞரும், எழுத்தாளருமாவார். தமிழக வரலாறு பற்றி பல அரிய ஆய்வு நூல்களை எழுதியவர்.

வேங்கடசாமி சென்னையின் மயிலாப்பூர் பகுதியில் 1900 இல் பிறந்தார். அவரது தந்தை ஒரு சித்த மருத்துவர். வேங்கடசாமியின் மூத்த அண்ணன் தந்தையைப் போல சித்த மருத்தவரானார். இரண்டாவது அண்ணன் சீனி. கோவிந்தராஜன் ஒரு தமிழறிஞர். திருக்குறள் காமத்துப்பால் நாட்கள், திருமயிலை நான்மணி மாலை ஆகிய படைப்புகளை எழுதியவர். வேங்கடசாமி கோவிந்தராஜனிடம் தமிழ் பயின்றார். பின் மகா வித்வான் சண்முகம் பிள்ளை, பண்டித சற்குணர் ஆகியோரிடம் தமிழ் படித்தார். பின்னர் நீதிக்கட்சி நடத்திய திராவிடன் இதழின் ஆசிரியர் குழுவில் பணிக்குச் சேர்ந்தார். ஓவியக்கலையில் கொண்ட ஆர்வத்தால் சில காலம் எழும்பூர் ஓவியப் பள்ளியில் படித்தார். குடும்பப் பொருளாதாரச் சூழல் காரணமாக ஆசிரியர் பயிற்சி பெற்று சாந்தோம் மாநகராட்சிப் பள்ளியில் ஆசிரியராகப் பணிக்குச்  சேர்ந்தார். தனது விடுமுறை  நாள்களில் தமிழகமெங்குமுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களுக்கும், வழிபாட்டுத் தலங்களுக்கும் சென்று ஆய்வு செய்தார். தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல் ஆகிய துறைகளில் அரிய களப்பணியாற்றினார். தென்னிந்திய எழுத்து முறைகள் யாவற்றையும் கற்றுத் தேர்ந்தார். பிராமி, கிரந்தம், தமிழ் என அனைத்து எழுத்துமுறை கல்வெட்டுகளைப் படித்து ஆராயும் திறன் பெற்றார். கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளையும் கற்றறிந்திருந்தார். இந்து சமய வரலாற்றாளர்கள் அதிகம் கவனம் செலுத்தாத சமண, புத்த சமய கோயில்களையும் தொல்லியல் களங்களையும் ஆய்வு செய்தார். இரு முறை (1963-64) சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

வேங்கடசாமியின் தமிழ்ப்பணியை பாரதிதாசன் பின்வருமாறு பாராட்டியுள்ளார்:
தமிழையே வணிகமாக்கித்

தன்வீடும் மக்கள் சுற்றம்
தமிழிலே பிழைப்பதற்கும்
தலைமுறை தலைமுறைக்குத்
தமிழ் முதலாக்கிக் கொண்ட
பல்கலைத் தலைவன் எல்லாம்
தமிழ்ச் சீனி வேங்கடத்தின்
கால்தூசும் பெறாதார் என்பேன்

2000ஆம் ஆண்டு தமிழக அரசு சீனி.வேங்கடசாமியின் நூல்களை நாட்டுடைமை ஆக்கியது.

- உண்மை இதழ், 16-31.12.17

வெள்ளி, 2 மார்ச், 2018

ஆட்சி மொழிக்காவலர் கீ.இராமலிங்கனார்



                                           


                                                           (பிறப்பு: 12.11.1899)

ஆட்சி மொழிக்காவலர் என அன்புடன் அறிஞர்களால் அழைக்கப் பெற்றவர். ஆங்கிலத்திலும் உருதுவிலும் வடமொழிச் சொற்களாலும் புரைமண்டிக்கிடந்த ஆட்சிமொழிச் சொற்களுக்கு தமிழில் சொல்கண்ட பெருந்தகையர். ஆட்சித்துறை தமிழ், ஆட்சிமொழி அகராதி எனும் நூல்களைத் தொகுத்தவர். தமிழ் ஆர்வலர். தெ.பொ.மீ மற்றும் திரு.வி.க. ஆகியோரின் சீடர். தமிழ் திருமண வழிபாட்டு முறைக்கெனத் தனியே ஒரு நூலை எழுதி தொடர்ந்து பலருக்கும் தமிழில் திருமணம் செய்வித்தவர்.

சென்னையை அடுத்த திருவள்ளூருக்கு அருகே கீழச்சேரி எனும் கிராமத்தில் பிறந்தவர். தந்தை இரத்தினம், தயார் பாக்கியம்மாள். இருவருக்கும் அய்ந்து பிள்ளைகள் தொடர்ந்து ஒவ்வொன்றாக மரணிக்க ஆறாவது மகவாய்ப் பிறந்தவர் இராமலிங்கனார். கீழச்சேரியிலிருந்த திண்ணைப் பள்ளிக்கூடத்தில் தன் தமிழ்க் கல்வியைத் துவக்கிய இராமலிங்கனார் பின் மாதா கோவில் பள்ளியில் பயின்றார். சென்னை வந்தவர் அங்கு சிந்தாதிரிப்பேட்டை சீயோன் பள்ளியிலும் இராமலிங்கர் மடத்திலுமாகப் படித்துத் தேறினார். தேவாரப் பாடவகுப்புகளிலும் கலந்துகொண்டு பயின்றார். வெஸ்லி கல்லூரியிலும் பின் பச்சையப்பன் கல்லூரியிலுமாகப் படித்துப் பட்டம் தேர்ந்தார். பின் அரசுப் பணியில் இருந்துகொண்டே தொடர்ந்து தேர்வுகள் எழுதி தன்னை வளர்த்துக் கொள்வதில் முனைப்புக் காட்டினார். பின் முதுகலைப் பட்டமும் முதுகலைஞர் பட்டமும் பெற்றார். அரசுப் பதவிகளில் அவர் சாதாரண எழுத்தர் பதவிகளில் பணிபுரிந்தபோதும் அதில் உபயோகப்படுத்தப்பட்டு வந்த பல ஆங்கில மற்றும் வடமொழிகளுக்குத் தமிழ்ச் சொல்லைக் கண்டுபிடிக்கும் பணியில் அவரது தமிழ் ஆர்வம் அவரை உந்தித் தள்ளியது.
அவர் வகித்த பதவிகள் அனைத்தும் மக்களோடு நெருங்கிய தொடர்புடைய பதவியாக இருந்த காரணத்தால் ஒவ்வொரு ஆங்கிலச் சொல்லுக்கும் தமிழ்ச் சொல்லைக் கண்டுபிடித்தார். சிதம்பரம் நகராட்சியில் இவர் ஆணையராகப் பதவி வகித்த காலத்தில் அனைத்து வடமொழி மற்றும் ஆங்கிலப் பெயர்களையும் தமிழில் மாற்றினார். 

கலெக்டரை ஆட்சியர் என்றும், கமிஷனரை ஆணையர் என்றும், முனிசிபாலிட்டியை நகராட்சி, சேர்மனை தலைவர், கவுன்சிலரை நகர் மன்ற உறுப்பினர் என்றும் மாற்றிக்காட்டிய பெருமை கீ.இராமலிங்னாரையே சாரும். இசைச் சக்ரவர்த்தி நயினார் பிள்ளை வரலாறு, நகராட்சி முறை, தமிழ் ஆட்சிச் சொற்கள், ஆட்சித்துறைத் தமிழ், ஆட்சிச் சொல் அகராதி, தொழிலாளர் சட்டத் தொகுப்பு, தமிழ்த் திருமணம் போல பதினைந்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
இதில் தமிழ்த் திருமணம் எனும் நூலை ஆங்கிலத்திலும் எழுதியிருக்கிறார்.

(நவம்பர் 12 இவரது பிறந்தநாள்)

- உண்மை இதழ், 1-15.11.17