பக்கங்கள்

சனி, 30 டிசம்பர், 2017

வாழ்த்துக்கள் சரியா?- தமிழ் அறிவோம்.


தமிழ் அறிவோம்.

ஒருவர் வாழ்த்துக்கள் என்கிறார் ..இன்னொருவர் வாழ்த்துகள் என்கிறார்.

இரண்டில் எது சரியானது? அடுத்து பொங்கல் வரவிருக்கிறது. பொங்கல் வாழ்த்துக்கள் சொல்ல வேண்டுமா , வாழ்த்துகள் சொல்ல வேண்டுமா?

இதைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் குற்றியலுகரம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

உ என்ற ஓசையில் சில சொற்கள் முடிகின்றன அல்லவா? ( பசு , பந்து போன்றவை ) . இவை தன் இயல்பான நிலையில் இருந்து குறைந்து ஒலித்தால் குற்றியலுகரம். அதிகரித்து ஒலித்தால் முற்றிய லுகரம்.

இந்த குற்றிய லுகரத்திலேயே பல வகைகள் இருக்கின்றன..

நெடில் தொடர் குற்றியலுகரம் - உதாரணம் : மாடு , பாகு
ஆயுதத் தொடர் குற்றியலுகரம் - உதாரணம் : எஃகு
உயிர்த் தொடர் குற்றியலுகரம் - உதாரணம் : வரகு, வரவு, செலவு, மிளகு
வன் தொடர் குற்றியலுகரம் - உதாரணம் : கொக்கு , மக்கு, பாக்கு, சாக்கு
மென் தொடர் குற்றியலுகரம் - உதாரணம் : சங்கு, பங்கு, பந்து, அம்பு, வம்பு
இடைத் தொடர் குற்றியலுகரம்- உதாரணம்: எய்து, அல்கு

எந்த சொற்களுக்கு பின் க் ச் ப் என்ற புள்ளி வைத்த எழுத்து வரும் என எளிதாக நினைவு வைத்து கொள்வது எப்படி?

இலக்கணம் எல்லாம் இல்லாமல் எளிதாக பார்க்கலாம்.

1 நெடில் எழுத்தில் ஆரம்பிக்கும் இரண்டு சொல் சொற்களுக்கு பின் , புள்ளி வைத்த எழுத்து வராது..

உதாரணம்.. மாடு , ஆடு ....    இதில் ஆடுகள் , மாடுகள் என்று வருமே தவிர ஆடுக்கள் , மாடுக்கள் என்று வராது..

2 பசு , மரு, கணு போன்று குறில் எழுத்தில் ஆரம்பிக்கும் சொற்களுக்கு பின் ,புள்ளி வைத்த எழுத்து வரும்..

பசுக்கள், மருக்கள், கணுக்கள் ( பசுகள், கணுகள் என எழுத்தக் கூடாது  )

2 குறில் எழுத்துக்கு பின் வரும் உகார எழுத்துக்கு பிறகு புள்ளி வைத்த எழுத்து வராது..

செலவு, வரவு-  செலவுகள், வரவுகள் என்று எழுத வேண்டும்

3 க் ச் ட் த் ப் ற் போன்ற எழுத்துகளுக்கு பின் வரும் உகார எழுத்தை தொடர்ந்து புள்ளி வைத்த எழுத்து வராது..

வாக்கு - வாக்குகள் ( வாக்குக்கள் அன்று )

கணக்கு - கணக்குகள் 

நாக்கு - நாக்குகள்

வாத்து- வாத்துகள்

வாழ்த்து  - வாழ்த்துகள் ( வாழ்த்துக்கள் என்பது தவறு )

உதாரணமாக தோப்புகள் என்பது தோப்பு என்ற சொல்லின் பன்மை.

தோப்புக்கள் என்றால் தோப்பில் இருந்து உருவாக்கப்பட்ட கள் என அர்த்தம்

அதே போல வாழ்த்துக்கள் என்று சொன்னால், புதிய வகை கள் என்ற அர்த்தம்தான் தொனிக்கும்.

வாழ்த்துகள் என்பதே வாழ்த்து என்பதன் பன்மை வடிவம்

சரியா?

-தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகம் கட் செவி பதிவு

செவ்வாய், 26 டிசம்பர், 2017

கீழடி அகழாய்வு முழுமையாய், முனைப்பாய்,இடையறாது நடைபெறவேண்டும்.


பிச்சை எடுத்து பிழைக்க வந்த ஆரியக் கூட்டம், நாங்கள்தான் இந்த மண்ணுக்கு உரியவர்கள், நாங்கள் அயல்நாட்டிலிருந்து வந்தவர்கள் அல்ல என்ற பச்சைப் பொய்யைக் கூறி, வரலாற்றையே மோசடியாய் திரிக்க முயன்றது.

சிந்து சமவெளி அகழாய்வு

அந்நிலையில், சிந்து சமவெளியில் நடத்தப்பட்ட அகழாய்வுகள், ஆரியர்கள் இந்தியாவிற்கு பிழைக்க வருவதற்கு முன்பே சிறந்த நாகரிக நகர வாழ்வை வாழ்ந்தவர்கள் தமிழர்கள் (திராவிடர்கள்) என்பதை உறுதி செய்தது.

தோண்டத் தோண்ட தொன்மங்கள் தமிழர்க்குச் சாதகமாக வரவே, ஆய்வை முடக்கி, அறிந்தவற்றையும் மறைத்து சதி செய்தனர் ஆரியப் பார்ப்பனர்கள்.

இந்தியாவெங்கும் அகழாய்வு நடத்தினால், ஏராளமாய், தமிழர்க்கு ஆதரவாய்த் தடயங்கள் கிடைக்கும் என்பதால், ஆரியப் பார்ப்பன ஆதிக்கம் நிறைந்த மத்திய அரசு இம்முயற்சியில் தொடர்ந்து இறங்கவும் இல்லை, ஆர்வம் காட்டவும் இல்லை.

என்றாலும், தொல்லியல் துறையினர் தம் கடமைகளைச் செய்ய சிறுசிறு முயற்சிகள் மேற்கொள்ளும் போதெல்லாம், பெரிய அரிய ஆதாரங்கள் எல்லாம் நமக்குக் கிடைக்கின்றன.

தமிழகத்தில் ஆதிச்சநல்லூரில் அகழாய்வு மேற்கொண்டபோதும், பூம்புகாரில் அகழ் ஆய்வு, கடலாய்வு மேற்கொண்டபோதும் தமிழரின் சிறப்பு, தொன்மை, மேன்மை உணர்த்தும் பல அரிய தடயங்கள் கிடைத்தன.

காவிரிப்பூம்பட்டனம் அகழ் ஆய்வுக்குப் பின் 40 வருடங்கள் கழித்து இப்போதுதான் மத்திய தொல்லியல்துறை தமிழகத்தில்ஆய்வு நடத்தியிருக்கிறது. ஆக, நாற்பது ஆண்டுகள் தமிழ் இனத்தின் சிறப்பு வெளியிடக்கூடாது என்றே மத்திய அரசு திட்டமிட்டே ஆய்வுகளை முடக்கியுள்ளது என்பது விளங்குகிறது.

கீழடி ஆய்வின் சிறப்பு

மதுரைக்கு தென்கிழக்கில் 15 கி.மீட்டர் தூரத்தில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது கீழடி என்னும் ஊர். அண்மையில் அங்கு அகழாய்வு செய்தபோது 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழரின் நகர நாகரிகம் அங்கு இருந்தது தற்போது தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளைவிட கீழடி அகழ்ஆய்வு தனிச் சிறப்புடையது. சிந்து சமவெளி நாகரிகத் தடயங்களைவிட மிக அரிதான தடயங்கள் இங்குக் கிடைத்துள்ளன. இதனை அறிந்துதான் மத்திய பி.ஜே.பி. அரசு உடனே கீழடி அகழ்ஆய்வை முடக்கியது.

கீழடியில் தூண்கள், தொழிற்சாலைகள், கட்டுமானங்கள் கொண்ட ஒரு நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹரப்பா நாகரிகத்தின் காலகட்டத்தில், தமிழகத்திலும் அதே நகர நாகரிகம் இருந்தமை இதன்வழி புலப்பட்டது என்பதோடு, தமிழர்கள் இந்தியா உட்பட தாங்கள் வாழ்ந்த அனைத்துப் பகுதிகளிலும், நகர வாழ்வு வாழ்ந்தனர் என்பதும் தெரியவந்தது.

கீழடியில் 70க்கும் மேற்பட்ட தமிழ் பிராம்மி எழுத்துகள் கிடைத்துள்ளன. ரோம், ஆப்கான், எகிப்து போன்ற நாடுகளுடனான தமிழர் தொடர்பும் இந்த ஆய்வின்வழி வெளிப்பட்டுள்ளது.

110 ஏக்கர் பரப்பளவில் இந்த அகழாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று தெரியவந்துள்ளது.

வரிசை வரிசையாகக் கால்வாய்கள்; அதன் முகப்பிலே பெரும் தொட்டிகள்; தொட்டிக்குள் தண்ணீர் உள் செல்லவும் வெளி வருவதற்குமான அமைப்புகள்; கால்வாய் தடத்தை ஒட்டிச் சிறியதும் பெரியதுமான ஆறு உலைகள்; கால்வாயின் ஆரம்பப் பகுதியில் வட்டக் கிணறுகள்; மூடிய வடிகால்கள், திறந்த வடிகால்கள், சுடுமண் குழாய்களினால் ஆன வடிகால்கள் என மூன்று விதமான வடிகால் அமைப்புகள்  என்றவாறு ஒரு முழுமையான நகர அமைப்பை உறுதி செய்யும் சான்றுகள், தென்னிந்தியாவில் முதன் முறையாகக் கீழடியில்தான் கிடைத்திருக்கிறது.

பத்திற்கும் மேற்பட்ட வீடுகள் அல்லது கட்டிடங்கள் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டு, அதன் மேற்கூரைகள் ஓடுகளால் வேயப்பட்டு இருந்திருக்கலாம் எனவும், வீடுகளின் அருகே பட்டினப்பாலையில் குறிப்பிடப்படும் சுடுமண் உரைகேணிகளும் இருந்திருக்கலாம் எனவும் இங்கு கிடைத்துள்ள சான்றுகள் மூலம் அறிய முடிகிறது. மேலும், ஆப்கானிஸ்தானில் கிடைக்கும் சூது பவளத்திலான மணிகளும், ரோமாபுரியைச் சார்ந்த மட்பாண்டங்களும், வட இந்திய பிராகிருத எழுத்துக்களும் கிடைத்துள்ளன. தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கருப்பு, சிவப்பு நிறங்களிலான ஏறத்தாழ 1,000 கிலோகிராம் எடையளவுக்கு மண் ஓடுகளும் அகழ்வாராய்ச்சியில் கிடைத்திருக்கின்றன.

சிந்து சமவெளி நாகரிகத்தில்கூட மட்பாண்டங்கள் வெளிப்புறத்தில் சுடப்பட்டதைக் குறிக்கும் வகையில், அவற்றின் வெளிப்புறம் கருநிறத்தில் இருந்தன. ஆனால், கீழடியில் கிடைத்த மட்பாண்டங்கள் உட்புறத்திலிருந்து சுடப்பட்டதைக் குறிக்கும் விதமாக அவற்றின் உட்புறம் கருநிறத்தில் இருக்கிறது. கீழடியில் வாழ்ந்த சமூகம் தொழில்நுட்பரீதியில் முன்னேறிய சமூகமாக இருந்திருப்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது.

கீழடியில் தொழிற்பட்டறைகள் இருந்ததற்கான அடையாளங்களும் கண்டறியப் பட்டுள்ளன. நெசவுக்குரிய தக்கையில் துவங்கி எண்ணற்ற எளிய தொழில்நுட்பக் கருவிகள் கண்டறியப்பட்டுள்ளன. கீழடியில் கண்டறியப்பட்ட சுமார் 5,300-க்கும் மேற்பட்ட பொருட்களில், வணிகம், கலை, தொழில்நுட்பம், எழுத்தறிவு ஆகியவற்றின் சான்றுகளைக் காண முடிகிறது. மொத்தத்தில், ஒரு மேம்பட்ட நாகரிகத்தைக் கொண்ட சமூக அமைப்பாக கீழடி இருந்துள்ளது.

இது தொடக்க நிலை ஆய்வு மட்டுமே!

தற்போது வரை நடந்துள்ள ஆய்வுகள் தொடக்க நிலை ஆய்வுகள்தான். 2% ஆய்வு மட்டுமே நடத்தப்பட்டுள்ளது. இன்னும் 98% ஆய்வுகள் செய்யப்பட வேண்டியுள்ளன. இரண்டு வருடங்களாக நடந்த ஆய்வில் 5,300 தொல்பொருள்கள் கிடைத்துள்ளன.

பொறுப்பான அதிகாரி மீது வெறுப்பு காட்டும் மத்திய அரசு!

அமர்நாத் இராமகிருஷ்ணா என்ற பொறுப்பும், ஆர்வமும் உள்ள அதிகாரியின் முயற்சிதான் கீழடியில் நடந்த சிறப்பான ஆய்வுக்கு முதன்மையான காரணம். இவர் முயற்சியில் பல அரிய தடயங்கள் கிடைக்கவே, இவரை விட்டால் தமிழரின் தொன்மைச் சிறப்புகளைத் தோன்டி எடுத்து உலகறியச் செய்து விடுவார் என்று அதிர்ச்சியடைந்த பி.ஜே.பி. அரசு, அவரை அஸ்ஸாமுக்குப் பணி மாற்றம் செய்தது. மூன்றாண்டுக்கு மேல் பணியாற்றியதால் மாற்றிவிட்டோம் என்று ஒரு காரணத்தை மத்திய அரசு கூறியது. ஆனால் 3 ஆண்டுகளுக்கு மேல் மத்தியத் துறைகளில் எத்தனை அதிகாரிகள் உள்ளனர்? அவர்களையெல்லாம் மாற்றாதபோது இவரை மட்டும் மாற்றியது ஏன்? என்று சமூகப் போராளி திருமுருகன் காந்தி அவர்கள் காட்டமாகக் கேட்டார்.

ஆய்வுப் பணிகள்: 

முதல்கட்ட ஆய்வுப் பணிகள்:

2015ஆம் ஆண்டு மார்ச் முதல் செப்டம்பர் வரை முதல் கட்ட ஆய்வுப் பணி நடத்தப்பட்டது. 43 அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அவை 4 அடி அகலம் 4 அடி நீளம் உள்ளவை.

இரண்டாம் கட்ட ஆய்வு:

2016ஆம் ஆண்டு இரண்டாம் கட்ட ஆய்வு 59 அகழ் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. 102 பள்ளங்கள் தோண்டப்பட்டன. தமிழகத்தின் மிகப் பெரிய அகழ் ஆய்வு இது. இந்த ஆய்வின்போதுதான் நகர்ப்புற நாகரிகத்திற்கான தடயங்கள் கிடைத்தன. கழிவு நீர் செல்லும் பாதைகள் கண்டுபிடிக்கப்பட்டன. செங்கல் மேடைகள், ஆறு உலைக் கூடங்கள் கண்டறியப்பட்டன. இவை உற்பத்தித் தொழில் நடந்தமைக்கான ஆதாரங்கள்.

நிதி முடக்கமும் நிதிக் குறைப்பும்

மத்திய அரசு கீழடி ஆய்வை எப்படியாவது முடக்கி, சீர்குலைத்து உண்மை உலகிற்குத் தெரியாமல் செய்ய வேண்டும் என்பதற்காக, ஆய்வுக்குரிய நிதியை வழங்காமல் முடக்கியது. அண்மையில் இந்த ஆய்வுக்கான நிதியையும் குறைத்திருப்பது மிகப்பெரிய துரோகமாகும்.

இல்லாத சரஸ்வதி நதியைக் கண்டறியவும், அந்த நதிதான் சிந்துவெளி நாகரிகத்திற்குத் தொடக்கம் என்று உண்மைக்கு மாறான மோசடிப் பிரச்சாரம் செய்யவும் மத்திய அரசு திட்டமிடுவது பச்சையான ஆரிய ஆதிக்கத் தனமாகும்.

அயோத்தியில் இராமன் அருங்காட்சியகம் அமைக்க ரூ.151 கோடியை கொட்டிக் கொடுக்கும் இந்த காவி அரசு ஓர் உண்மை வரலாற்றை அறிய நிதி ஒதுக்காதது கடுமையான கண்டனத்துக்குரியதாகும்.

மூன்றாம் கட்ட ஆய்வு:

“மூன்றாம் கட்டத்திற்கான திட்ட முன்மொழிவை (Proposal) நான்தான் உருவாக்கினேன். அதற்கான அனுமதியும் எனக்குக் கிடைத்தது. தற்போதைய நிலவரம் குறித்த அறிக்கை (Status report) தாக்கல் செய்யப்படவில்லை என்று காரணம் காட்டி ஏற்பட்ட தாமதத்தைத் iதாண்டி, மார்ச்சில்தான் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், மிகத் தீர்மானகரமான அகழ்வாராய்ச்சிக் கட்டத்தின் மத்தியில் என்னை, துரதிருஷ்டவசமாக, மாறுதல் செய்துவிட்டனர். நான் ஏமாற்றமடைந் திருக்கிறேன். இருந்தாலும், அகழ்வாராய்ச்சியை புதிய குழுவினர் முன்னெடுத்துச் செல்வார்கள் என்றும், இன்னும் சிறந்த, இன்னும் பழமையான ஆதாரங்களைக் கண்டுபிடிப்பார்கள் என்றும் நம்புகிறேன்’’ என்று இந்த ஆய்வின் அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணா தெரிவித்துள்ளது கருத்தில்கொள்ள வேண்டிய முக்கியச் செய்தியாகும்.

கண்டெடுத்த பொருள்கள் கர்நாடகத்திற்கு ஏன் செல்ல வேண்டும்?

கீழடி அகழாய்வில் கண்டெடுத்த அரிய தொல்பொருள்களை மைசூருக்கு மாற்ற முயற்சிகள் நடப்பது மோசடி, சதித் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

தமிழ்நாடு அரசின் கல்வி அமைச்சர் மாண்புமிகு செங்கோட்டையன் அவர்கள், கீழடி அகழாய்வுப் பொருட்களை அங்கேயே ஆய்வு செய்யவும், பாதுகாக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்திருப்பது ஆறுதல் அளிக்கும் செய்தியாகும்.

வழக்கமாக, மத்திய பி.ஜே.பி அரசின் மிரட்டலுக்குப் பயந்து இந்த முடிவை தமிழக அரசு மாற்றிக் கொள்ளக் கூடாது. அப்படிச் செய்தால் அது மாபெரும் மக்கள் கிளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

கீழடியில் கண்டெடுக்கப்படும் பொருட்களை அங்கேயே அருங்காட்சியகம் அமைத்து பாதுகாக்க வேண்டும். ஆய்வுகளும் அங்கேயே  செய்யப்பட வேண்டும்.

கீழடி ஆய்வாளர் சு.வெங்கடேசன் கருத்து!

“காவிரிப் பூம்பட்டினம் அகழ்வாராய்ச்சிக்குப் பிறகு நாற்பது வருடங்கள் கழித்து இப்போது தான் மத்தியத் தொல்லியல் துறை தமிழகத்தில் ஆய்வு நடத்தி இருக்கிறது. அகழ்வு ஆய்வின் போது 5300 தொல்பொருட்கள் கிடைத்திருக்கிறது. மத்தியத் தொல்லியல் துறையின் அகழ்விட அருங்காட்சியகம் இதுவரை நாற்பது இடங்களில் இருக்கிறது. ஆனால் ஒன்றே ஒன்றுதான் தமிழகத்தில், அதுவும் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இருக்கிறது. பெங்களூருவுக்கு எடுத்துச் செல்லப்பட்டால் இவையனைத்தும் அங்கே மைசூருவில் இருக்கும் குடோனில்தான் வைக்கப்படும். கீழடி ஆராய்ச்சிகள் பற்றி மக்களுக்குத் தெரிய வேண்டும் எனில், அந்த இடத்திலேயே அருங்காட்சியகம் வைப்பதுதான் சிறந்தது.” 

நான்காம் கட்ட ஆய்வு - நீதிமன்றம் உத்தரவு:

இது தொடங்கப்பட வேண்டும். இதை உடனே தொடங்கச் சொல்லி மதுரை நீதிமன்றம் கடுமையான உத்தரவை இட்டுள்ளது. திருமதி கனிமொழி தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு இடப்பட்டுள்ளது.

¨    தொல்லியல் துறைக்கான உரிமம் உடனே (இரண்டு வாரத்தில்) புதுப்பிக்கப்பட வேண்டும்.

¨    நான்காம் கட்ட அகழாய்வை உடன் நடத்த வேண்டும்.

¨    அகழாய்வுப் பணி சார்ந்து மாநில அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது.

சென்ற ஆண்டு (டிசம்பர் மாதம்) திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இந்திய வரலாற்றுப் பேராயத்தின் மாநாட்டில் கீழடி அகழாய்வு தொடர வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றட்டிருக்கிறது.  அந்த அமர்வுக்குத் தலைமை வகித்த வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர், கீழடியானது தமிழகத்தில் கிடைத்துள்ள மிக முக்கியமான கண்டுபிடிப்பாகும். இதன் மூலம் தமிழக வரலாற்றை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். அதற்கான ஆய்வு மேலும் தொடர வேண்டும் என்று உரையாற்றியிருக்கிறார்.

எனவே, கீழடி ஆய்வை இனி முடக்க முயல்வது மிகப்பெரும் எதிர்விளைவை ஏற்படுத்தும் என எச்சரிக்க விரும்புகிறோம்.

ஆகவே, கீழடி ஆய்வை முழுமையாய், வெளிப்படையாய், விரைவாய் நடத்தி உண்மை கண்டறிந்து உலகிற்குத் தெரிவிக்க வேண்டியது மத்திய மாநில அரசுகளின் கட்டாயக் கடமையாகும். 

- உண்மை இதழ்,1-15.10.17

அழிந்துவரும் மொழிகள்!


இந்தியாவில் தற்போதுள்ள 130 கோடி மக்களால் 780 மொழிகள் பேசப்படுவதாக இந்திய மக்களின் மொழி ஆய்வு நிறுவனம் ((Peoples Linguistic Survey of India) PLSI தெரிவிக்கிறது. தற்போது பேசப்பட்டு வரும் மொழிகளில் குறைந்தது 400 மொழிகள் இன்னும் 50 ஆண்டுகளில் அழிந்துவிடும் நிலையில் இருப்பதாகக் கூறுகிறது.

ஒரு மொழி அழியும்போது அம்மொழி சம்பந்தப்பட்ட அல்லது அம்மொழி பேசும் மக்களால் பாதுகாக்கப்பட்ட கலாச்சாரமும் அழிக்கப்படுகிறது என்று கூறுகிறார் இந்நிறுவனத்தைச் சேர்ந்த திரு. தேவ்வி (Mr.Devy) என்பார்.

இந்நிறுவனத்தைச் சேர்ந்த அறிஞர்களும் ஆசிரியர்களும் இந்தியாவின் மரபுரிமையான பல்வேறுபட்ட கலாச்சாரங்களைப் பாதுகாக்கும் நோக்குடன் இந்தியாவின் பல பகுதிகளிலும் பேசப்படும் மொழிகளைப் பற்றிய தகவல்களை ஆவணப்படுத்தியுள்ளனர். இவற்றில் மிகவும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள மொழிகளாக பழங்குடியின மக்களின் மொழிகளே உள்ளதாகக் கூறுகின்றனர்.

இம்மக்களின் குழந்தைகள் பெரும்பாலும் கல்விக் கூடங்களுக்குச் செல்வதில்லை. அப்படிச் சென்றாலும் அவர்களுக்கு அவர்களின் மொழியில் கல்வி கற்பிக்கப்படாமல் இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளில் ஏதாவதொன்றிலேதான் கற்பிக்கப்படுகிறது.

உதாரணமாக பீகாரில் 1000 ஆண்டுகளுக்கு மேலாகப் பேசப்பட்டுவரும் ஒரு மொழி ‘மைதிலி’ ஆகும். இதைப் போன்று பல்வேறு மொழிகள் உள்ளன என்றாலும் அவை காலத்தை வென்று வாழ்வது கடினமே எனக் கூறுகிறார் அரசியல் அறிஞர் ‘ஆசிஸ் நந்தி’ அவர்கள்.

உலகில் தற்போது உயிருடன் உள்ள 6000 (ஆறாயிரம்) மொழிகளை ஆவணப் படுத்துகின்ற வேலையில், மக்களின் மொழி ஆய்வு நிறுவனம் (PLSI) ஈடுபட்டுள்ளதாகத் திரு. தேவ்வி (Mr.Devy) கூறுகிறார். இந்த ஆவணம் 2025இல் வெளியிடப்படலாம் என்றும் கூறுகிறார்.

- உண்மை இதழ், 1-15.10.17

வியாழன், 21 டிசம்பர், 2017

பார்ப்பனர்களில் ஒரு சிலர் தமிழுக்கு நீங்காத கடும் வைரிகளாக இருக்கின்றனர் என்று தம்மிடம் சாமிநாதய்யரவர்கள் சொன்னார்

உ.வே.சா.வே ஒப்புதல்!
தென் இந்தியாவிலுள்ள பிராமணர் ஒரு வகுப்பாராகவே இருந்து கொண்டு, தமிழைத் தாழ்த்தியடக்கியும், சமஸ்கிரு தத்தை ஆதரித்து உயர்த்தியும் வருகின்றனர் எனவும், சென்னை, அண்ணாமலை என்னும் இரு பல்கலைக் கழகங்களிலும் பிராமணர் வலுத்த கட்சியாயிருந்து அத் துணை பலமாகத் தமிழுக்குத் தடை செய்துவருவதால், தமிழர்கள் தங்கள் தாய்மொழியின் நிலையை உயர்த்துவதற்கு ஒன்றுமே செய்ய முடியாதவராயிருக் கின்றனர். 

பார்ப்பனர்களில் ஒரு சிலர் தமிழுக்கு நீங்காத கடும் வைரிகளாக இருக்கின்றனர் என்று தம்மிடம் சாமிநாதய்யரவர்கள் சொன்னார் என்று வருந்தி கூறியமை ‘செந்தமிழ்ச் செல்வி’ சிலம்பு 47, பரல் 9 இல் காண்க.

(உ.வே. சாமிநாத அய்யர் இவ்வாறு பண்டிதமணி மு.கதிரேசன் செட்டி யாரிடம் கூறிய செய்தியை ‘செந் தமிழ்ச் செல்வி' இதழில் (ஏப்ரல் 1974) தெரிவிப்பவர் அவ்விதழ் ஆசிரியர் திரு. வ.சுப்பைய்யா)

- விடுதலை நாளேடு ஞாயிறுமலர், 25.11.17

வியாழன், 14 டிசம்பர், 2017

சங்ககாலப்பெயர்களில் சாதியில்லை!

சங்ககாலப்பெயரில் 473 பேர் கிடைத்தது.

ஒருவர் கூட தன் பெயருக்குப் பின்னால் வன்னியர் - தேவர்- கவுண்டர் - நாடார் - ஐயர்- ஐயங்கார் என்று போட்டிருக்கவில்லை.

சங்கம் மருவிய காலப்பெயர்களையும் பார்த்தேன்.

கண்ணங்கூத்தனார்,மதுரை – கார் நாற்பது
கண்ணன் சேந்தனார் – திணைமொழி ஐம்பது
கணிமேதாவியார் - திணைமாலை நூற்றைம்பது
கணிமேதையார் – ஏலாதி
கபிலர் – இன்னா நாற்பது
காரியாசான் – சிறுபஞ்சமூலம்
கூடலூர் கிழார் – முதுமொழிக்காஞ்சி
சமணமுனிவர்கள் – நாலடியார்
திருவள்ளுவர் – திருக்குறள்
நல்லாதனார் – திரிகடுகம்
புல்லங்காடனார், மாறோக்கத்து முள்ளிநாட்டுக் காவிதியார் மகனார் - கைந்நிலை
பூதஞ்சேந்தனார் – இனியவை நாற்பது
பொய்கையார்– களவழி நாற்பது
மாறன் பொறையனார் – ஐந்திணை ஐம்பது
முள்ளியார், பெருவாயில் – ஆசாரக்கோவை
முன்றுறையரையனார் – பழமொழி
மூவாதியார் - ஐந்திணை எழுபது
விளம்பிநாகனார் – நான்மணிக்கடிகை

ஊகூம்.... இங்கும் சாதிப் பெயரைக் காணோம்.

அட பக்தி இலக்கிய காலத்திலாவது தேடுவோம் என்று தேடிப்பார்த்தேன்...

அங்கும் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்றும், அப்பர், சம்பந்தர், சுந்தரன் என்றே பெயர்கள் இருக்கின்றனவே ஒழிய பெயரோடு ஜாதி ஒட்டினை இணைத்துக் கொண்டு திரியும் கேவல காரியத்தை யாரும் செய்ததாக எந்தச் சான்றுமே கிடைக்கவில்லை.

ஆக,  நம் மூதாதையர் யாரும் செய்திராத அசிங்கத்தினை பாரம்பர்யம் என்றும், கலாச்சாரம், என்றும், குல வழக்கம் என்றும் முன்னோர்கள் மீது பொய்ப்பழி போட்டுக்கொண்டு சாதியைச் சுமந்து திரிகிறார்கள் சம கால வன்முறையாளர்கள் என்பதே தெளிவாய்த்தெரிகிறது.

படித்தது.
- வெற்றி வேந்தன்.கே, முகநூல் பதிவு,
14.12.17

தமிழ் மொழியை காட்டுமிராண்டி மொழி என்றாரா பெரியார்?

PERIYAR FAQS

தமிழ் மொழியை காட்டுமிராண்டி மொழி என்றாரா பெரியார்?

ஆம். அவர் சொன்னதைப் புரிந்துக் கொள்ள அந்தக் காலச் சூழலையும் பார்க்க வேண்டும். எங்கும் கம்ப ராமாயண, பெரிய புராண, கந்த புராண முன்னெடுப்புக்கள், சொற்பொழிவுகள் நடந்து கொண்டிருந்த காலம் அது. தமிழ் என்றாலே இது போன்ற புராணங்களே என்னும் நிலை இருந்தது. வடமொழி தமிழில் கலந்து அத்தோடு ஆரிய நால்வருணப் பாகுபாட்டுமுறையும் இலக்கியத்திலும் இலக்கணத்திலும் ஆழ்ந்த தாக்கத்தைச் செலுத்தி வந்தமையை தமிழ் வரலாறு காட்டுகிறது. சங்க இலக்கியங்களைவிடப் புளுகுப் புராணங்களும், வழுநிறைந்த இதிகாசங்களும் பெருமை வாய்ந்தவையெனத் தமிழ்ப்புலவர்களே தலையில் வைத்துக் கொண்டாடும் மனப்போக்கு வேரூன்றிவிட்ட காலத்தில்தான் பெரியார் வருகிறார்.தொன்மங்களைச் சிதைத்து போலித் தரவுகளையும் , புராணக் குப்பைகளையும் சேர்ப்பதை எதிர்த்தார். போலியாய் ஒரு கதையைக் கூறி அதன் மூலம் மொழிக்குப் பெருமை வருவதைக் கண்டித்தார். மொழியில் அறிவியல் தரவுகள் குறைந்து போய் புராணக் குப்பைகள் நிறைந்து வருவதைக் கண்டித்து "தமிழில் ஆரீயம் புகுந்ததால் தான், மற்ற மக்களையெல்லாம் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலத்தில் கப்பலோட்டி வாணிகம் நடத்திய தமிழர் மரபில், இன்று ஒரு நியூட்டன் தோன்ற முடியவில்லை. ஒரு எடிசன் தோன்ற முடியவில்லை. ஒரு மார்க்கோனி தோன்ற முடியவில்லை என்பதை அறிந்து கொள்ள வேண்டும். தமிழைப் புதுமொழியாக்கச் சகல முயற்சிகளும் எடுத்துக் கொள்ள வேண்டும். " என்றார். தமிழ் ஏன் சிறந்தது என்ற கேள்விக்கு " அது என் தாய்மொழிப் பற்றுதலுக்காக என்று அல்ல. அது என் நாட்டு மொழி என்பதற்காக அல்ல. சிவ பெருமானால் பேசப்பட்டது என்பதற்காக அல்ல. அகத்திய முனிவரால் திருத்தப்பட்ட தென்பதற்காக அல்ல. மந்திர சக்தி நிறைந்தது. எலும்புக் கூட்டைப் பெண்ணாக்கிக் கொடுக்கும் என்பதற்காக அல்ல. பின் எதற்காக? இந்திய நாட்டுப் பிற எம் மொழியையும் விடத் தமிழ், நாகரீகம் பெற்று விளங்குகிறது. தூய தமிழ் பேசுதல் மற்ற வேறுமொழிச் சொற்களை நீக்கிப் பேசுவதால் நம்மிடையேயுள்ள இழிவுகள் நீங்குவதோடு மேலும் மேலும் நன்மையடைவோம் என்பதோடு நம் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப நம் மொழி அமைந்திருக்கிறது." என்று கூறி கலப்பிலாதத் தனித் தமிழ் பேசச் சொன்னார். தமிழ் மொழியிலிருந்து மதத்தைப் பிரித்து விட்டால் சங்க காலத் தமிழ் கிடைக்கும் என்றார் பெரியார். "தமிழும் ஒரு காலத்தில் உயர்ந்த மொழியாகத்தான் இருந்தது. இன்று அது வட மொழிக்கலப்பால் இடது கைப்போல் பிற்படுத்தப் பட்டது. இந்நோய்க்கு முக்கிய காரணம் மதச் சார்புடையோரிடம் தமிழ் மொழி சிக்கிக் கொண்டதுதான். தமிழில் இருந்து சைவத்தையும் ஆரியத்தையும் போக்கிவிட்டால் நம்மை அறியாமலே நமக்குப் பழந்தமிழ் கிடைத்து விடும். மதத்திற்கு ஆதாரமாயிருந்து வருவன வெல்லாம் வடமொழி நூல்களே ஒழிய தமிழ் மொழி நூல்களில் தற்சமயம் நம் நாட்டில் இருந்து வரும் மதத்திற்கு எவ்வித ஆதாரமும் இல்லையயன்பது இங்கு கவனிக் கத்தக்கது." பாவாணரின் மாணவரும், தமிழ்த் தேசியத் தந்தையுமான பாவலரேறு பெருஞ்சித்திரனார் பெரியாரின் இந்தக் கூற்றுக்குச் சரியான விளக்கம் தருகிறார்.
-Tamil Rajendran முகநூல் பதிவு,13.12.!7