பக்கங்கள்

செவ்வாய், 29 நவம்பர், 2016

திருக்குறள் தொடர்பான செய்திகள்:


-------------------------------------
1. திருவள்ளுவர் ஆண்டின் தொடக்கம் தை முதல் நாள்.

2. திருவள்ளுவர் ஆண்டை அறிவித்தவர் மறைமலை அடிகள்.

3. திருவள்ளுவர் ஆண்டுக்கு அரசக்கட்டளை வழங்கியவர் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர்.

4. திருக்குறளுக்கு முதலில் உரை வரைந்தவர் மணக்குடவர்.

5. திருக்குறளுக்குப் பத்தாவதாக உரை எழுதியவர் பரிமேலழகர்.

6. திருக்குறளுக்கு வழங்கப்படும் பெயர்கள் நாற்பத்து நான்கு.

7. திருக்குறளுக்கு உரை எழுதிய பெருமக்கள் இருநூற்று ஆறு.

8. திருக்குறளுக்கு வந்துள்ள மொழிபெயர்ப்புகள் நூற்று ஆறு.

9. திருக்குறளை இலத்தீனில் வழங்கியவர் வீரமாமுனிவர்.

10. திருக்குறளை ஆங்கிலத்தில் அருளியவர் போப்பையர்.

11. திருக்குறளுக்காக முதலில் மாநாடு நடத்தியவர் தந்தை பெரியார்.

12. குமரியிலிருந்து தில்லி வரை செல்லும் தொடர்வண்டியின் பெயர் திருக்குறள் விரைவான்.

13. குமரிக்கடலில் நிற்கும் திருவள்ளுவர் சிலையின் உயரம் 133 அடி.

14. நெல்லையில் அமைந்துள்ளது திருவள்ளுவர் ஈரடுக்கு மேம் பாலம்.

15. சென்னை நுங்கம்பாக்கத்தில் நிறுவப்பட்டது வள்ளுவர் கோட்டம்.

16. திருக்குறள் சோவியத்து நாட்டில் கிரெம்ளின் மாளிகையின் நிலவறையில் உள்ளது.

17. திருக்குறள் இலண்டனில் விவிலியத் திருநூலுக்கு இணையாக வைக்கப்பட்டுள்ளது.

18. திருக்குறளை அண்ணல் காந்திக்கு அறிமுகம் செய்தவர் சோவியத்து எழுத்தாளர் தால் சுதாய்.

19. திருக்குறளுக்குத் தங்கக்காசு வெளியிட்டவர் எல்லீசர்.

20. திருக்குறள் உரை வேற்றுமை வழங்கியவர் பேராசிரியர் இரா. சாரங்கபாணி.

21. நரிக்குறவர் பேசும் வக்கிரபோலி மொழியில் திருக்குறளைத் தந்தவர் கிட்டு சிரோன்மணி.

22. திருக்குறளின் பெருமையினை உலக அறிஞர் ஆல்பர்ட்டு சுவைட்சர் போற்றிப் புகழ்ந்துள்ளார்.

23. வெண்பா யாப்பில் என்றும் பயன் தரும் செய்தியை வழங்குவதால், திருக்குறள் வெள்ளிப்பையில் இட்ட தங்கக்கனி என்பர்.

24. திருக்குறளை 1812 ஆம் ஆண்டு முதலில் அச்சிட்டு வழங்கியவர் ஞானப்பிரகாசன்.

25. வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்று பாராட்டியவர் பாரதியார்.

26. வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே என்று பாராட்டியவர் பாரதிதாசன்.

27. திருக்குறளின் முதற்பெயர் முப்பால்.

28. திருக்குறளில் நூற்று முப்பத்து மூன்று அதிகாரங்கள் உள்ளன.

29. திருவள்ளுவர் நட்பு பற்றி 171 பாக்கள் உள்ளன.

30. திருக்குறளில் கல்வி பற்றி 51 பாடல்கள் உள்ளன.

31. திருக்குறளில் இடம் பெறாத உயிரெழுது ஔ

32. திருக்குறளில் இல்லாத எண் ஒன்பது.

33. திருவள்ளுவர் கடவுளை இறைவன் என்கிறார்.

34. திருக்குறளுக்கு உரிய சிறப்புப் பெயர் உலகப் பொதுமறை.

35. திருக்குறளில் உயிரினும் மேலானதாகப் போற்றப்படுவது ஒழுக்கம்.

36. காலமும் இடமும் கருதிச் செயலாற்றினால் உலகை வெல்லலாம்.

37. திருக்குறளை அனைத்துச் சமயங்களும் ஏற்றுப் போற்றுகின்றன.

38. திருக்குறள் தமிழ்த்தாயின் உயிர்நிலை என்பார் கவிமணி.

39. திருவள்ளுவமாலை திருக்குறளுக்கு எழுந்த புகழ்மாலை.

40. திருக்குறள் பொய்யில் புலவன் பொருளுரை எனப் போற்றப்படுகிறது.

41. திருக்குறளை முதலில் பயிற்றுவித்தவர் வள்ளலார் இராமலிங்கம்.

யார் இந்த எல்லீஸ்?

முகநூலில் " பாமரன் " : கற்றது தமிழ்
                                                 =============
என்றேனும்….

சென்னையிலுள்ள எல்லீஸ் சாலையில் நடந்தோ…. ஆட்டோவில் கடந்தோ…..
போகும்போது யோசித்திருக்கிறேனா?
.
யார் இந்த எல்லீஸ்?
.
எதற்காக சம்பந்தமேயில்லாமல் தமிழகச் சாலை ஒன்றிற்கு இந்தப் பெயர் என்று?
.
வெட்கமாக இருந்தது எனக்கு.
.
சில வருடங்கள் முன்பு வெளிவந்த “திராவிடச் சான்று” என்கிற நூலைப் படிக்கும்வரை.
.
அப்போதுதான் தெரிந்தது இந்த வீணாப் போன ”வந்தேறி” வெள்ளக்காரன் தமிழ்நாட்டில் வந்திறங்கி தமிழ் மீது கொண்ட காதல் கதை.
.
பச்சையாச் சொல்லனும்ன்னா…. “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்”ன்னு எழுதிய கால்டுவெல்லுக்கு நாற்பதாண்டுகளுக்கு முன்னமே தமிழின் பெருமையைப் பறையடித்துச் சொன்னவன்தான் இந்த எல்லீசன்.
.
இந்தியா என்கிற நாடு உருவாவதற்கு முன்னமே தமிழ் நாட்டைக் கண்டுணர்ந்தவன் அவன்.
.
அதனால்தான் தனது சக வெள்ளையர்களுக்குச் சொன்னான் :

“ஆங்கிலேய அதிகாரிகள் தென்னிந்திய மொழிகளின் அடிப்படையை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக தமிழை…. அதுதான் மற்றவற்றுக்கெல்லாம் மூலமே….” என்று. பொட்டில் அடித்துச் சொன்னான் எல்லீசன்.
.
இந்த மனிதன்தான் சென்னை கோட்டையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் கல்லூரியையே நிறுவியவன். அதாவது 204 ஆண்டுகளுக்கு முன்பு.
.
அத்தோடு நிற்காமல் அங்கொரு அச்சகத்தையும் நிறுவி தமிழ், தெலுங்கு எழுத்துருக்களை உருவாக்கக் காரணமாக இருந்த மனிதன்.
.
அந்த மனிதனின் உழைப்பில் உருவானதன் தொடர்ச்சிதான் நான் எழுதும் இந்த மொக்கை எழுத்தையும் நீங்கள் இன்றைக்கு வாசித்துக் கொண்டிருப்பது.
.
சரி…
.
இதற்கு மேல் நீட்டிப்பது உங்களுக்கும் பிடிக்காது….
.
எனக்கும் பிடிக்காது….
.
அந்த மனிதன்தான் சென்னையில் குடிநீர்ப்பஞ்சம் வந்தபோது சென்னையைச் சுற்றி இருபத்தி ஏழு கிணறுகளை உருவாக்கியவன். உருவாக்கியதோடு நிற்காமல் கிணற்றின் சுற்றுச் சுவர்களில் திருக்குறளை செதுக்கி வைத்தவன். அவன் தான் அன்றைய சென்னை கலெக்ட்ராக இருந்த இந்த எல்லீசன்.
.
அத்தோடு நிற்காமல் திருவள்ளுவரின் உருவம் பொறித்த தங்க வராகன்களை உருவாக்கியவன்.
.
என்னடா இவன்……
எல்லீஸ் என்று ஆரம்பித்து எல்லீசன் என்று எழுதிக் கொண்டிருக்கிறானே… ஒருவேளை இவன் ஒரு தமிழ் பைத்தியமாக இருப்பானோ என்று  நீங்கள் எண்ணினால்…..

Exactly You are Correct….

ஆம்..
.
அவன் தமிழ் மீது கொண்ட காதலால்….

”என் பெயரை ஒருபோதும் எவரும் எல்லீஸ் என்று அழைக்கக் கூடாது. என் பெயரை என்றும் எவரும் தமிழின் ஒலிநயத்திற்கேற்ப…. எப்போதும் எல்லீசன் என்றே அழைக்க வேண்டும்….” என்று சொல்லி இராமநாதபுரத்தில் தனது நாற்பத்தி ஒன்றாம் வயதில் செத்துப் போனான்.
.
ஆனால் நாமோ…
.
கடைக்குப் பெயர் வைத்தாலும்… சரி….
.
குழந்தைக்குப் பேர் வைத்தாலும்…. சரி…
.
அம்மாஸ்…
.
பாட்டீஸ்….
.
ஆச்சீஸ்….என்றும்…..
.
“ஸ்”ஐயும் ”ஜ்”ஜையும் “ஷ்”யையும் வைத்துப் பெயர் சூட்டிக் கொண்டிருக்கிறோம்….
.
எங்கிருந்தோ வந்து…….
தமிழ்மீது காதல் கொண்டு எல்லீஸ் ஆக இருந்து எல்லீசன் என்றாகி……
அநாதையாகச் செத்துப்போன எல்லீசன் எங்கே?
.
நாமெங்கே?
.

செவ்வாய், 15 நவம்பர், 2016

தமிழ் உணர்வைத் தட்டி எழுப்புகிறோம்

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று அந்த அலுவலகம் முழுவதும் தமிழால் ததும்பி வழிகிறது. மொழிக்காகவும் இன உணர்வுக்காகவும் பேராட, பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் பேத்தி இசைமொழி ஓர் அமைப்பைத் தொடங்கி, செயல்படுத்திவருகிறார்.

தேநீரா, குளம்பியா என்று தேமதுரத் தமிழில் உபசரித்த இசைமொழி, தமிழ் ஆர்வமுள்ள 11 பெண்கள் இணைந்து, தமிழகப் பெண்கள் செயற்களம் தொடங்கினேம். தற்போது 64 உறுப்பினர்கள் எங்கள் அமைப்பில் இருக்கிறார்கள். ஆரம்பத்தில் எல்லோருக்கும் தமிழ்ப் பெயர் சூட்டினோம். அனைவரையும் தமிழில் கையெழுத்திட வேண்டும் என்று வலியுறுத்தினோம் என்கிறார்.

நம் அடையாளத்தை ஏன் பிறமொழியில் எழுத வேண்டும் என்று கேள்வி எழுப்பி, கையெழுத்தையும் பெயரையும் தமிழில் மாற்ற விரும்புகிறவர்களுக்கு உதவி யும் செய்துவருகிறது இந்த அமைப்பு.

களத்தில் இறங்கிச் செயலாற்றுவதற்காகவே தமிழகப் பெண்கள் செயற்களம் தொடங்கப்பட்டது. செம்மொழி மாநாட்டின்போது, ஒருமாதம் முழுவதும் சென்னையின் பல இடங்களுக்கும் நடந்தே சென்று கடைகள், வணிக நிறுவனங்களின் பெயர்களைத் தமிழில் மாற்றினோம். நகரத்தில் சுமார் 10 ஆயிரம் கடைகளின் பெயர்கள் மாற்றப் பட்டன.

தற்போது ஆங்கிலத்தில் பெயர் வைத்து வரு கின்றனர்.  மீண்டும் இந்த முயற்சியைத் தொடங்கிவிட்டோம் என்பவர், கோயில்களில் தமிழில்தான் வழிபாடு நடத்த வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து, இணையத்திலும் நேரடியாகவும் ஒரு கோடி மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி யிருக்கிறார். தமிழில்தான் வழிபாடு, தேவைப்பட்டால் பிறமொழி வழிபாடு நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி நீதிமன்றத்தை நாடவிருக்கிறார் இசைமொழி.

வண்டி எண் மாற்றம்

வாரா வாரம் உறுப்பினர்களை ஒன்று திரட்டி சமூகப் பிரச்சினைகளை விவாதித்து, அடுத்த கட்ட நடவடிக் கைகளை ஆலேசிக்கிறார். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் வண்டி களின் எண்களைத் தமிழ்ப்படுத்தும் வேலைகளைச் செய்துவருகிறார்கள். இதுவரை 3500-க் கும் மேற்பட்ட வண்டிகளின் எண்களைத் தமிழில் மாற்றியி ருக்கிறார்கள். இதற்காகச் சென்னையில் முகாம்கள் நடத்திவருகிறார்கள்.

தமிழர் வரலாற்றை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கில், நான்கு தொகுதிகளாகத் தமிழர் வரலாற்றைத் தொகுத்திருக்கிறார்கள். வரலாற்றை எளிமைப்படுத்தி, படங்களுடன் வெளியிட்டு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளனர். மாணவர்களுக்கு வினாடி-வினா போட்டியும் நடத்தி வருகிறார்கள்.

தமிழர் கலை

தமிழர் கலைகளை ஊக்குவிக்கும் வகையில் தப்பாட்டம், சிலம்பாட்டம், பறையாட்டம், தமிழிசைப் பயிற்சியை அய்ந்து மய்யங்களில் இலவசமாக வழங்கி வருகிறார்கள். 250 மாணவர்களுக்கு நம் வரலாறு என்ற தலைப்பில் பாடத்திட்டம் அமைத்து, பயிற்சி வழங்கியி ருக்கிறார்கள். துரித உணவுகளை எதிர்த்து விழிப்பு ணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.

திருவள்ளுவருக்கு மாலையிட்டு, பொங்கல் முதல் நாளில் தமிழ்ப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை மிகப் பெரிய அளவில், குடும்பத்துடன் கொண்டாடிவருகிறோம். இந்த அமைப்பில் உள்ளவர்கள், தங்கள் குடும்பத்தினர் பெயர்களைத் தமிழில் மாற்றியதுடன், குழந்தைகளுக்குத் தமிழ்வழிக் கல்வியும் வழங்கி வருகின்றனர்.

தொன்மையான தமிழ் மொழி ஏன் அழிகிறது என்ற கேள்விக்குப் பதிலாகத் தமிழகப் பெண்கள் செயற்களம் சார்பில் தொடங்கப்பட்டதுதான் தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி. பத்து ஆண்டுகளாக நடத்தப்பட்டுவருகிறது. வரலாறு தெரியாத எந்த இனமும் வெற்றிபெற முடியாது.

அதனால் தமிழர் என்ற உணர்வைத் தட்டி எழுப்ப முயற்சி செய்கிறேம் என்ற இசைமொழியின் குரலில் மாற்றத்துக்கான தேடல் அழுத்தமாக ஒலிக்கிறது.

-விடுதலை,15.11.16

வெள்ளி, 11 நவம்பர், 2016

'ஓபரா மினி' தலைவர் லார்ஸ் பாயில்சன் பேட்டி

-விடுதலை ஞா.ம.,,27.2.16

சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் வந்தது எப்படி?



1909ஆம் ஆண்டு மார்ச் மாதம்...
சென்னைப் பல்கலைக் கழகப் பேரவையின் (செனட்) சிறப்புக் குழுக் கூட்டம் நடைபெறுகின்றது. அக்குழுவி ன் ஒருங்கிணைப்பாளரான பி.ஆர். சுந்தரம் அய்யர், ஒரு தீர்மானத்தை முன் மொழிகின்றார். கல்லூரி இடைநிலை வகுப்பில் (மிஸீtமீக்ஷீனீமீபீவீணீtமீ சிஷீuக்ஷீsமீ) தமிழ் ஒரு பாடமாக இருக்க வேண்டியதில்லை என்பதும், அதற்காக ஒரு தேர்வை நடத்திக் கொண்டிருக்க வேண்டிய தில்லை என்பதும்தான் அத்தீர்மானம் மாறாக, சமஸ்கிருதத்தை ஊக்குவிக்க வேண்டும் என்பதும், அத்தீர்மானத்தின் பிற்பகுதி.
அவையில் சில எதிர்ப்புகள் எழு கின்றன. ஆதரித்துப் பேச எழுகின்றார் ஜி.நாகோஜிராவ். “இந்நாட்டின் இலக் கியம், தத்துவம், சமயம் அனைத்தும் சமற்கிருத மொழியோடுதான் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன. எனவே, வட்டார மொழிகளை விட்டு விட்டு, சமற்கிருத மொழிக்கே ஊக்கம் தரப்பட வேண்டும்’’ என்கிறார் ராவ்.
சென்னை மாநிலக் கல்லூரியின் ஆங்கிலத் துறைப் பேராசிரியராக அன்று இருந்த மார்க்ஹன்டர், இது போன்ற முடிவுகளை எடுக்கும் முன் நிதானம் தேவை என்கிறார். டி. ராமகிருஷ்ண பிள்ளை செத்த மொழி யான வட மொழிக்கு ஏன் ஊக்கம் தர வேண்டும்? தமிழ் உள்ளிட்ட திராவிட மொழிகள் கட்டாயம் பாடமாக இருக்க வேண்டும்’’ என்கிறார்.
இறுதியில் தீர்மானம் வாக்கெடுப் பிற்கு வீடப்படுகிறது. தீர்மானத்திற்கு ஆதரவாக 22 வாக்குகளும், எதிராக 15 வாக்குகளும் கிடைத்ததால், சுந்தரம் அய்யர் முன்மொழிந்த தமிழுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படு கின்றது.
நீதிக்கட்சி என்று அறியப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கம் தோன்றியபின்தான். நிலைமை மாறு கின்றது. அக்கட்சியின் சார்பில், பனகல் அரசர் என்று அழைக்கப்பட்ட இராம ராயநிங்கர், வைஸ்ராயிடம் ஒரு மனு அளிக்கின்றார். “சமற்கிருதத்தோடு பல் வேறு சமூக, சமய முரண்களைக் கொண்டிருப்பதால், பார்ப்பனரல்லாத சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்குத் திராவிட மொழிகளே முதன்மை யானவை, வடமொழி அன்று’’ எனக் குறிப்பிட்டு, மீண்டும் தமிழ்ப்பாடம் கொண்டு வரப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றார்.
நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர், 1924 பிப்ரவரியில், சென்னை, பச்சையப் பன் கல்லூரியில், தமிழ்க் கழகம் சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில்,  அன்றைய அமைச்சர், டி.என். சிவஞானம் பிள்ளை தமிழ்ப் பாடத்தின் தேவையை வலியுறுத்திப் பேசுகின்றார்.
இறுதியில், 1926ஆம் ஆண்டு இடை நிலை வகுப்பிற்கு மீண்டும் தமிழ் ஒரு பாடமாகக் கொண்டு வரப்படுகின்றது.
திராவிடம், தமிழுக்கு எதிரானது என்ற பொய்யும், புனைவும் கட்டவிழ்த்து விடப்படும். இத்தருணத்தில், மேற் காணும் செய்தி ஒரு பேருண்மையை நமக்கு உணர்த்துகிறது. அய்யரும், ராவும் அழிக்க முயன்ற தமிழை, திரா விட இயக்கம்தான் மீட்டெடுத்துள்ளது என்னும் உண்மை புலனாகின்றது.
(சான்று: ஜிலீமீ விணீபீக்ஷீணீs விணீவீறீ ஜிலீமீ பிவீஸீபீu முதலான ஆங்கில நாளேடுகள் வெளி யிட்டுள்ள செய்திகளின் அடிப்படையில், கே. நம்பி ஆரூரன் எழுதியுள்ள ஜிணீனீவீறீ ஸிமீஸீணீவீssணீஸீநீமீ ணீஸீபீ ஞிக்ஷீணீஸ்வீபீவீணீஸீ ழிணீtவீஷீஸீணீறீவீsனீ மற்றும் முனைவர் அ. இராமசாமி எழுதியுள்ள “அண்ணாவின் மொழிக் கொள்கை’’ ஆகிய நூல்கள்)
-விடுதலை ஞா.ம.27.2.16

வியாழன், 10 நவம்பர், 2016

மைல் கல்லில் தமிழ் எண்கள் கண்டுபிடிப்பு

திருப்பூர், நவ.9 ஆங்கிலேயர்கள், தமிழ் எண்களை பயன்படுத்தி யிருப்பதற்கான ஆதாரமாக, திருப்பூர் அருகே, 200 ஆண்டு பழமையான, தமிழ் எண்களுடன் கூடிய மைல் கல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தமிழ் எழுத்துக்கள் மட்டுமன்றி, ‘ய’ ‘க’ ‘உ’ என, தமிழ் எண்களும் நடைமுறையில் இருந்தன.

தற்போது நடைமுறையில் உள்ள எண்களை பின்பற்ற துவங்கியதும், தமிழ் எண்களை எழுதும் வழக்கம் குறைந்து, பலருக்கும் அது தெரியாத சூழலே உள்ளது.ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், தமிழ் சொற் றொடரில், தமிழ் எழுத்துக்களையே பயன்படுத்தி வந்துள்ளனர். ரோடுகளில், ஊரின் தூரத்தை, தமிழ் எண்களிலேயே குறிப்பிட்டு வந்துள்ளனர்.இது தொடர்பாக, 200 ஆண்டு பழமையான மைல் கல், திருப்பூர் மாவட்டம், பல்லடம், ஜெ.கிருஷ்ணாபுரம் பகுதியில் கிடைத்துள்ளது.

திருப்பூர், ‘வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மய்யத்தை’ சேர்ந்த ரவிக்குமார் கூறியதாவது: மைல் கற்கள் வைக்கும் நடைமுறை, தமிழகத்தில், கி.பி., 10ஆம் நூற்றாண்டில் துவங்கியது. இதில், ரோமன், அராபிக் மற்றும் தமிழ் எண்களில் எழுதப்பட்ட மைல் கல் கிடைத்துள்ளது.

இக் கல்லில், இன்றைய அரபி மற்றும் தமிழ் எண்கள் காணப் படுகின்றன. பல்லடம், 11 மைல் என்பது, பல்லடம், ‘ய’ ‘க’ என்றும்; பல்லடம், 4 என்பது, பல்லடம் ‘ச’ எனவும் எழுதப் பட்டுள்ளது. மைல் கற்கள், 70 செ.மீ., உயரம்; 50 செ.மீ., அகலம் கொண்டுள்ளன. தற்போது, கி.மீ., குறிக்கப்படும் அளவு, அன்று மைல் கணக்கில் நடைமுறையில் இருந்தது. ஆங்கிலேயர் கூட, தமிழ் எண்களை பயன்படுத்திய நிலையில், தற்போது, இந்நடைமுறை பின்பற்றப்படாதது வருத்தமளிக்கும் செயலாகும். இவ்வாறு, ரவிக்குமார் கூறினார்.
-விடுதலை,9.11.16

திங்கள், 7 நவம்பர், 2016

திருவள்ளுவர் ஆண்டு வரலாறு

தமிழருக்குத் தமிழில் தொடர் ஆண்டு இல்லாத குறையை உணர்ந்த தமிழ் அறிஞர்கள். சான்றோர்கள், புலவர்கள் 1921ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க் கடல் மறைமலைஅடிகள் தலைமையில் கூடி ஆராய்ந்தார்கள்.
திருவள்ளுவர் இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகள் முன்பு பிறந்தவர் என்றும் அவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவது என்றும் அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது என்றும் முடிவு செய்தார்கள்.
திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை; இறுதி மாதம் மார்கழி புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள் கிழமைகள் வழக்கில் உள்ளவை.
திருவள்ளுவர் ஆண்டு முறையைத் தமிழ்நாடு அரசு ஏற்று 1971ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு நாட்குறிப்பிலும் 1972 முதல் தமிழ்நாடு அரசிதழிலும் 1981 முதல் தமிழ்நாடு அரசின் அனைத்து அலுவல்களிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது.
திருவள்ளுவர் ஆண்டு முறையைத் தமிழர்கள் தம் வாழ்வில் வழக்கில் பின்பற்றியும் பரப்பியும் வருகிறார்கள்.
இங்ஙனம்
தமிழ் வளர்சசிப்
பண்பாட்டுத் துறை
தமிழ்நாடு அரசு
ஆதாரம்: முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.வி.-இன் ‘வள்ளுவரும் குறளும்’ (பக்.13) 1953
02 தை 2030     
16-01-1999           
சென்னை
-விடுதலை ஞா.ம.,9.1.16

ஞாயிறு, 6 நவம்பர், 2016

சங்கராபரண ராகம் - அதன் சார்பான செய்தியும் சிந்தனையும்


மு.வி.சோமசுந்தரம்
‘ஈதல் இசைபட வாழ்தல்' என்ற குறள் ஒலி, தொண்டறத்திற்குத் தூண்டு கோலாக அமையும் ஒலி. நம் ஆசிரியர் அவர்கள் இதனை வலியுறுத்திக் கூறாத நிகழ்ச்சி இல்லை. ஈதல் மூலமாக மானிடத்தை மகிழ வைத்து புகழைப் பெற்று புறத்தே மகிழமுடிகிறது. அகத்தே மகிழவும் மனஅமைதியைப் பெறவும் துணையாக வருவதும் இசையே.

இசையின் சிறப்பை வியந்து, உயர்த்திக் கூறாத உள்ளங்களைக் காண முடியாது. சமநிலை வீரம் காட்டி, புண் பட்டு வீழ்ந்து கிடந்த வீரனின் மனைவி காஞ்சி பண்ணிசைத்து அந்த மறவ னுக்கு இருந்த உடல் துன்பத்தை மறக்கச் செய்தாள். அவனைக் கொத்த வந்த பற வைகளும் விலகிச் சென்றன என்று புற நானூற்று பாடல் ஒன்று விவரிக்கின்றது.
மனிதனுக்கு மட்டுமா இசை இத மாக இருந்தது? இல்லையே மலர்களும் மயங்குகின்றனவே. புதலும் வரிவண்டு ஊதவாய் நெகிழ்ந்தனவே.
வண்டுகள் இசைபாடும் பொழுது புதர்களில் மடிந்து இருக்கும் மொட் டுகள் மலர்ந்து காட்சியளிக்கின்றன என குறுந்தொகைப்பாடல் பகர்கின்றது.

இத்தகைய வல்லமை படைத்த இசைக்கு சொந்தக்காரர்கள் தமிழர் என்பதில் சற்றும் சந்தேகம் வேண்டாம். ஏழிசையும் எம்முடையது என்று தமிழர் என்றும் முழங்கலாம். ஆனால் இம்முழக்கத்தின் முனையை முட மாக்கிய முப்புரி பூண்ட ஆரியப் பார்ப் பனர், சூழ்ச்சி வழியில் தமிழிசைக்கு குழிபறித்து மூடி அதன் வட மண்மேல் கர்நாடக சங்கீதம் என்ற கொடியைப் பறக்கவிட்டனர். பழி அஞ்சாது அழிப் பதையே தொழிலாக ஒரு திறமையாக கொண்ட பார்ப்பனரின் பாசக்கயிற்றைப் பற்றி (எமதர்ம ராஜாவின் ஏவுகணை) பரிதிமாற் கலைஞர் கூறுவதைக் காண்போம்.
தமிழர்களிடமிருந்த பல அரிய விடயங்களை மொழிபெயர்த்துத் தமிழர் அறியுமுன்னரே அவற்றைத் தாமறிந்தன போலவும் காட்டினர் (தமிழ் மொழி யின் வரலாறு பக்கம் 27) இந்த உண் மையை கருணாமிர்த சாகரம் என்ற நூல். இசைத் தமிழிலி ருந்தே எல்லா இசை வகைகளும் வடமொழிக்கண் சென்றன என்று செப்புகின்றது.

மேலும் தமிழிசைக்கு முகவரிகளான முப்பெரும் இசை மேதைகளான, சீர்காழி முத்துத்தாண்டவர், தில்லை யாடி அருணாச்சலக் கவிராயர், தில்லை மாரிமுத்தாப்பிள்ளை போன்றோரை ஆரியத் திரைபோட்டு எண்ண இருட்டில் தள்ளிவிட்டார்கள்.
இம்மூன்று இசை வல்லுநர்களை முக்காடிட்டதல்லாமல், தமிழிசை யையே மேடையைவிட்டு முட்டித் தள்ள வும் தயங்கவில்லை என்பதை 1940இல் திருவையாற்றில் நடந்த தியாகராசர் இசை கச்சேரியில் தமிழில் பாட்டு பாடிய தண்டபாணி தேசிகரை இழித்து, மேடையை விட்டகற்றி, மேடை தீட்டுபட்டது என்று தர்ப்பைப் புல் கூச்ச லிட்டது. இந்த நிகழ்வை முத்தமிழ றிஞர் கலைஞர் ஈரோட்டில் பெரியார் குடியரசு குடிலில் குடியிருந்த காலத்தில் ‘தீட்டாய்டுத்து’ என்ற கட்டுரையை எழுதி பெரியாரின் மனம் குளிர வைத்தார்.

குளிர்காலம் வந்துவிட்டது. சென்னை சபாக்களில் சலங்கையொலியும், கீர்த்தனை கச்சேரிகளும் சக்கைபோடு போடும், மயிலாப்பூர், மாம்பலம் மடிசார் மாமிகளும், சுடிதார் செல்வி களும், கீழ்பாச்சி கிழவர்களும் வானவில் சட்டை வாலிபர்களும், காலை, மாலை நிகழ்ச்சிகளுக்குக் குவியும் கோலாகலக் காட்சியைக் காணலாம். சபாஷ்! சபாஷ் என்ற ஒலியும், தாளம் தட்டும் ஒலியும் அரங்கத்தை ஆட்கொள்ளும்.
அவாள் ராகம், தமிழருக்குப் பண் அவர்களுக்கு, கல்யாணி, அரிகாம்போதி, சங்கரா பரணம், தமிழருக்கு முறையே மருதப் பண், பாலைப்பண், குறிஞ்சிப்பண்
இனி குறிஞ்சிப்பண் என்னும் சங்கராபரணம் ராகத்தைப் பற்றிய ஒரு சுவை கூட்டும் செய்தியைப் பார்ப்போம். இந்த அருமையானதொரு செய்தியை திரு. பி.கோலப்பன், தி இந்து (ஆங்கிலம்) 1.12.2015 இதழில் வழங்கியுள்ளார். நன்றி

மராட்டியர் ஆட்சிக்குத் துணையாக விளங்கிய மன்னர் சரபோஜி தஞ்சையில் வாழ்ந்த காலம். அந்த காலத்தில் நரசய்யர் என்று அறியப்பட்ட நரசிம்ம அய்யர், பாடகர் என்ற புகழ் படைத் தவர். அவர் பாடும் பாடல்களில் சங்கராபரண ராகத்தில் பாடப்பெறும் பாடல்கள் தனிசிறப்பையும் பாராட்டு களையும் பெற்றதாக விளங்கின. சங்கராபரண ராகம், நரசய்யரின் பெரிய சொத்தாகக் கருதப்பட்டது.

நரசய்யருக்கு, ஒரு காலகட்டத்தில் பண நெருக்கடி ஏற்பட்டது. இராம பத்திர மூப்பனார் செல்வாக்குப் பெற்ற பெரிய செல்வந்தர். கபிஸ்தலம் என்ற ஊரில் வாழ்ந்து வந்தார். இவர், இந்திய நடுவண் அரசில் அமைச்சராக இருந்த ஜி.கே.வாசன் அவர்களின் மூதாதையர்.
நரசய்யர், இராமபத்திர மூப்பனா ரிடம்  உதவி நாட சென்றார். மூப் பனாரின் இல்லத்தில் அன்பு விருந் தினராக சில நாட்கள் தங்கிய பிறகு, தயக்கத்துடன் தன் தேவையை மூப்பனா ரிடம் கூறினார். தனக்கு 80 பொற் காசுகள் தேவைப்படுகிறது என்று கூறி னார். மூப்பனார் மனதில் அனுதாபப் பட்டார். ஆனால் அதனை வெளிப்படுத் தாமல், அவர் கேட்ட பொற்காசுகளுக்கு ஈடாக ஏதேனும் ஆபரணத்தை அடகு வைக்கத் தயாரா என்று வினவுகிறார். நரசய்யர் என்னிடம் உள்ள ஆபரணம் சங்கராபரணம் ஒன்று தான் என்றார்.

நான் வெறும் 80 பொற்காசுகளைத் திருப்பித் தரும் வரையில், எங்கும் சங்கராபரண ராகத்தில் பாடுவதில்லை என்ற உறுதி அளித்ததுடன் எழுத்து மூலமும் எழுதிக் கொடுத்தார். சங்கரா பரணம் அடகு வைக்கப்பட்டது. (இந்த செயலுக்கு சரியான ஆதாரம் இல்லை)

நரசய்யர் கொடுத்த வாக்கு நெடு நாட்களுக்குக் காப்பாற்றப்பட்டே வந்தது. ஆனால் கும்பகோணத்தில் நடக்க இருக்கும் அப்புராயர் என்னும் பெரிய மனிதர் வீட்டுத் திருமணத்தில் நரசய்யர் கச்சேரி செய்ய வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அப்பு ராயர், ஆங்கில அரசு அலுவலகத்தில் பணியில் இருந்தவர். ஆங்கில அதிகாரி வாலிஸ் என்பவருக்கு நண்பரும் கூட,
நரசய்யர் தான், தன்னுடைய ஆபரணத்தை அடகு வைத்த நிலைமை யைக் கூறி அப்புராயர் விருப்பத்தை நிறைவேற்ற முடியாத நிலையை விளக்கினார். இதனைக் கேட்ட அப்புராயர், அடகுக்கான தொகையுடன் அவரின் ஊழியரை கபிஸ்தலம் அனுப்பி ஆபரணத்தை மீட்டுவரும்படி அனுப்பினார்.

மூப்பனார், நரசய்யருடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தைத் திருப்பிக் கொடுத்த துடன், அப்புராயரை சந்திக்கவும் கும்பகோணம் விரைந்தார். நரசய்யருக்கு நிறைய பணம் கொடுத்து, நடந்ததை மறந்துவிட அனைவரிடமும் வேண்டிக் கொண்டார். தான் இதை ஒரு விளை யாட்டாக செய்ததாகக் கூறினார். அத்துடன், மகிழ்ச்சியுடன் பணத்தைக் கொடுக்க தயாராக இருந்ததாகவும், தனக்கு மிக வேண்டியவரின் நிலையை அறிந்து அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறினார். நரசய்யர் போன்ற சிறந்த கலைஞர்களுக்கு உதவாத பணத்தால் என்ன பயன் என்ற கருத்தையும் தெரிவித்தார்.

பெருங்கூட்ட மணவிழாவில் நரசய்யர் தன் சங்கராபரண ராக இசை மூலம் அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கச் செய்தார். அப்புராயர் குடும்ப இசை வாணராகி விட்டார். மேலும் மன்னர் சரபோஜி, நரசய்யரின் இசை ஞானத்தால் ஈர்க்கப்பட்டு, சங்கராபரண நரசய்யர் என்ற பட்டத்தை வழங்கி சிறப்பு செய்தார்.
நரசய்யர் பற்றிய இந்த செய்தியைத் தமிழ் தாத்தா என்று கூறப்பட்டு வரு பவருமான உ.வே.சாமிநாத அய்யர் தாம் எழுதிய கட்டுரையில் கூறியுள்ளார்.

கேட்பாரற்றும், கண்டு கொள்ளா மலும் முடங்கி கிடந்த ஓலைச்சுவடி களை, கரையானுக்கு உணவாகாமல் காத்து, தமிழ் இலக்கிய சொத்தை ஆர்வத்துடனும், ஊக்கத்துடனும், ஊர்ஊராக சென்று அச்சில் கொண்டு வந்த அரும்பணியை செய்தவர் உ.வே.சாமிநாத அய்யர். வீரமா முனிவர் ஜி.யு.போப், சமீபத்தில் மறைந்த ஜப் பானிய தமிழறிஞரும் தமிழுக்கு பற்றின் காரணமாக தொண்டு செய்தவர்களே.
திரியாக இருந்த நூல் சுடராக ஒளி வீச உதவும் எண்ணெய் போல், தமிழ் தாத்தா என்று அறியப்பட்ட உ.வே. சாமிநாத அய்யருக்கு, ஊக்கமும், ஆதர வும், தமிழ் அறிவையும் வழங்கியவர் களின் பெருமையையும், பெரிய உள்ளத் தையும், தமிழ்ப் புலமையையும் கொசுறு செய்தியாகத் தான் அக்ரகார கரவு உள்ளம் கூறுவது வழக்கமாக உள்ளது. ஆனாலும் நன்றி உணர்வோடு உ.வே.சா. அவரின் என் சரித்திரம் என்ற நூலில் அவருக்கு ஏணியாக இருந்த பெருமான்களின் சான்றாண்மையைக் கூறத் தவறவில்லை.

திருசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, தியாகராச செட்டியார், மேலகரம் சுப்பிரமணிய தேசிகர், வி.கனகசபை பிள்ளை ஆகியோர் குறிப்பிடத்தக்க தமிழ்ப்பெரியவர்கள்.
மீனாட்சி சுந்தரம்பிள்ளை தமிழ்க் கடலாக விளங்கியவர். அவரிடம் பாடம் கேட்க ஏங்கியவர் பலர். உ.வே.சா அவரிடம் குருகுல மாணவனாக இருந்து தமிழமுது உண்டவர்.
மீனாட்சி சுந்தரனாரின் மறைவுக்குப் பின் திருவாவடுதுறை மடத்தின் 16ஆவது ஆதீனமாக இருந்தவர் சுப்பிரமணிய தேசிகர். அவர் உ.வே.சா-வுக்கு வேண்டிய உதவிகளை நல்கி, பாதுகாப்பு வழங்கினார். திருவாவடு துறையில் புதிய வீடு கட்டிக் கொடுத் தார். அவருடைய வீட்டிற்கு தேவை யானவற்றைத் தட்டுப்பாடின்றி பெற உறுதி செய்தார். மடத்தில் இருந்த சீடர்கள் ஆதீனத்தின் உதவிக்கு விருப்பம் காட்டாவிட்டாலும் தேசிகர், அதன் அவசியத்தை அவர்களுக்கு விளக்கினார்.
கும்பகோணம் கல்லூரியில் உ.வே.சா ஆசிரியர் பணி பெற தியாகராச செட் டியார் காரணமாக இருந்தார். தேசிகர், உ.வே.சா  மடத்தை விட்டு, கல்லூரிப் பணியில் சேருவதில் உடன்பாடு இல்லை. பிறகு அவரே பரிந்துரைக் கடிதமும், நடத்தை சான்றிதழும் வழங் கினார். படரும் கொடிக்கு கொழு கொம்பாக எனக்கு தேசிகர் அவர்கள் இருந்தார் என்று உ.வே.சா தன் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
அஞ்சல்துறையில் பணியாற்றினா லும் தமிழ் இலக்கியத்தில் மூழ்கி, பல ஊர்களுக்குச் செல்லும்போது கிடைக் கும் ஏட்டுச் சுவடிகளையும், கல்வெட் டுகளையும் படி எடுத்தவர் வி.கனக சபைப்பிள்ளை (1855-_1906). அவர் உழைப் பால் பெற்ற சங்க காலத்தமிழர்களின் வாழ்வியல் சிறப்பை விளக்கும் நூலை ஆங்கிலத்தில், ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்கள் (Tamils Eighteen Hundred Years Ago) என்ற தலைப்பில் வெளியிட்டார்.
ஓலைச்சுவடிகளைத் தொகுக்கவும், படி யெடுக்கவும், குறிப்புகள் எழுதுவதுமாக 20 ஆண்டுகள் உழைத்தார். அந்த உழைப்பில் தொகுக்கப்பெற்ற அவ் வளவு ஏடுகளையும் உ.வே.சாமிநாதய்ய ருக்கு வழங்கினார். உ.வே.சா. தமிழ் தாத்தா என்று பூசுரர் உலகில் புகழுடன் உலா வருகிறார்.

இந்த வேளையில், உ.வே.சாவின் தன் நலத்தைப் பற்றியும், இன உணர்வு பற்றியும் படித்த செய்தியைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். உ.வே.சா நூல்கள் அச்சிடும் பணி நடைபெறு கிறது. அச்சகத்தில், தமிழகத்தில் சிறந்த எழுத்தாளராக அறியப்பட்ட வல்லிக்கண்ணன் பணியிலிருந்தார். உ.வே.சா எழுத்தில் சில பிழைகளைக் கண்டு அதனைத் திருத்தி முறைப்படுத்தி அச்சிட்டார்.
இதனை, உ.வே.சா விடம் அச்சக மேலாளர் கூறி இளைஞன் வல்லிக்கண்ணனை உ.வே.சா-வுக்கு அறிமுகப்படுத்தினார். உ.வே.சா. பாராட்டினார். பிறகு உ.வே.சாவிடம் ஒரு நாள் இளைஞன் அவரிடம் தமிழ் கற்க விரும்புவதாகக் கூறி பரிந்துரைத் தார். பார்ப்போம் என்று கூறிப் போனார். சில காலம் கழித்து மீண்டும் கேட்கப்பட்டது. வசதி இல்லை - விருப்ப மில்லை என்று அதன் காரணத்தைக் கூறி ஏற்றுக் கொள்ளவில்லை.
ஏணியாகவே தமிழர் இருந்து வந்துள்ளனர். ஏணிப்படி ஏறி புகழ் மொட்டை மாடியில் தாத்தாக்கள் தமிழ்த்தென்றல் காற்றுவாங்கி வலம் வருகிறார்கள்.
-விடுதலை, ஞா.ம.,2.4.16

சாயல்குடி அருகே 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய இரும்பு உருக்காலை: அகழாய்வு செய்ய கோரிக்கை




சாயல்குடி அருகே 2,000 ஆண்டு களுக்கு முந்தைய இரும்பு உருக்காலையை தொல்லியல் துறையி னர் அகழாய்வு செய்து வரலாற்றை வெளிக்கொணர வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சாயல்குடியில் இருந்து சூரங்குடி செல்லும் பழைய மங்கம்மாள் சாலையில் தரைக்குடி அருகில் உள்ளது கொக்கரசன்கோட்டை. இந்த ஊரில் பச்சைத் தண்ணீர்க் காரி என்ற மாலைக்காரி அம்மன் கோயில் பல்லாங்குறிச்சி கண் மாய்க் கரையில் அமைந்துள்ளது.

இங்கு ராமநாதபுரம் தொல்லியல் மற்றும் வரலாற்று பாதுகாப்பு மய்ய நிறுவனர் வே.ராஜகுரு, ஒருங்கி ணைப்பாளர்கள் ஜெயசீலன், அற் புத ராஜ் ஆகியோர் மேற்பரப்பாய்வு செய்தனர். அப்போது 2,000 ஆண்டு கள் பழமையான சங்க காலத்தைச் சேர்ந்த சுடுமண்ணால் செய்யப்பட்ட இரும்பு உருக்காலையின் உடைந்த பகுதிகள், இரும்பு தாது, கழிவுப் பொருட்கள், கருப்பு, சிவப்பு, பழுப்பு நிற பானை ஓடுகள், குறியீடு உள்ள பானை ஓடு, சுடுமண்ணால் செய்யப்பட்ட தாய்த் தெய்வ உருவப் பொம்மை, கெண்டியின் நீர் ஊற்றும் மூக்குப்பகுதி ஆகியவற்றை கண்டு பிடித்தனர்.

இதுகுறித்து வே.ராஜகுரு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கி.மு.1000 முதல் கி.மு.300 வரை யிலான பெருங்கற்காலத்தில்தான் மனிதன் இரும்பைக் கண்டுபிடித் தான். இதனால் இந்த பெருங் கற்காலத்தை இரும்புக்காலம் எனவும் அழைப்பார்கள். கொக்கர சன்கோட்டையில் இரும்பு தாதுப் பொருட்கள், இரும்புக் கழிவுகள், சுடுமண்ணால் செய்யப்பட்ட இரும்பு உருக்கு ஆலையின் உடைந்த பகுதிகள் கிடைத்துள்ளதால் இங்கு இரும்பு உருக்கும் தொழிற்சாலை இருந்திருப்பது உறுதியாகிறது. அக்காலத்து மக்கள் இரும்பு தாதுப் பொருட்களை உருக்காலைகள் மூலம் உருக்கி, அதில் இருந்து கத்தி, கோடாரி, ஈட்டி போன்ற ஆயுதங் களை உருவாக்கி உள்ளனர்.

இரும்புத் தாது இப்பகுதியில் அதிக அளவில் கிடைத்திருக்கலாம். மேலும் சங்ககாலப் பானை ஓடுகள் என அழைக்கப்படும் கருப்பு, சிவப்பு பானை ஓடுகள் இங்கு கிடைப்பதால் இரும்பு உருக்காலை சங்க காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம்.

இரும்பை தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தி ருக்கிறார்கள். சங்க காலத்தில் இரும்புத் தொழில் சிறப்புற்று இருந்ததை அகநானூறு, புற நானூறு, பெரும்பாணாற்றுப்படை ஆகியவை தெரிவிக்கின்றன. இரும்புத் தாதுவில் இருந்து இரும்பை உருக்கி எடுக்கும் சுடுமண்ணால் செய்யப்பட்ட உலைக்களங்கள் நிலத்துக்கு மேல் உருவாக்கப்பட்டி ருக்கும். அத்தகைய இரும்பு உருக்கு ஆலையின் பகுதிகள் ராமநாதபுரம் மாவட்டத்தில் கிடைப்பது இதுவே முதல்முறை.
தடித்த கருப்பு, சிவப்பு பானை ஓடு ஒன்றின் விளிம்புப் பகுதியில் தாமரைப்பூ போன்ற குறியீடு காணப்படுகிறது. மட்கலயங்களை வாங்கி பயன்படுத்தியவர்கள் தங்க ளது உடைமை எனக் குறிக்க குறி இடுவது உண்டு. இவற்றை உடைமைக் குறி என்பர். தற் காலத்திலும் பாத்திரங்களில் பெயர் பொறிக்கும் வழக்கம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தலை உடைந்த நிலையில் உள்ள சுடுமண்ணால் செய்யப்பட்ட அரைவட்ட வடிவத்தில் சிறிய அளவிலான பெண் உருவம் இங்கு கிடைத்துள்ளது. இது தாய் தெய்வ மாக இருக்கலாம். இவ்வுருவம் மேலாடையின்றி இடுப்பில் ஆடை அணிந்து கையை விரித்து அமர்ந்த நிலையில் உள்ளது. இத்தகைய சுடுமண் சிற்பங்கள் வீட்டு வழி பாட்டுக்கு பயன்படுத்தப்பட் டவையாக இருக்கலாம்.

சுடுமண்ணால் செய்யப்பட்ட கெண்டியின் நீர் ஊற்றும் மூக்குப் பகுதி இங்கு கிடைத்துள்ளது. இதன் தலைப்பகுதியில் தாமரை இதழ் போன்ற அமைப்புடன் நடுவில் துவாரமும் உள்ளது. இதை தயாரித்து சுடுவதற்கு முன் பானை அல்லது குடுவையின் உடல் பகுதியில் பொருத்தியுள்ளனர்.

பாண்டியர் ஆட்சிக்காலத்தில் அளற்று நாடு என அழைக்கப்பட்ட பகுதியில் இவ்வூர் இருந்துள்ளது. இங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள திருமாலுகந்தான் கோட்டை யில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த செஞ்சடைநாத ஈசுவரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் பாண்டியர் காலத்தைச் சேர்ந்த 21 கல்வெட்டுக்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு தொல்லியல் துறையினர் அகழாய்வு செய்தால் இவ்வூரின் வரலாற்றை முழுமையாக வெளிக்கொணரலாம் என்றார்.
-விடுதலை,18.6.16

வியாழன், 3 நவம்பர், 2016

சங்க கால கொற்கைப் பாண்டியன் மாறன் பெயர் கொண்ட வித்தியாசமான நாணயம்


நாணயத்தில் சங்க கால கொற்கைப் பாண்டியன் மாறன் பெயர் பெறிக்கப்பட் டிருப்பதாக தென்னிந்திய நாணயவியல் ஆய்வுக் கழகத் தலைவர் இரா.கிருஷ்ண மூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதுதெடர்பாக அவர் மேலும் தெரிவித் துள்ளதாவது:
தமிழ் - பிராமி
எழுத்து முறையில்
பல ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு கிடைத்த நாணயம் ஒன்று உருவங்கள் ஏதும் தெரியாத அளவுக்கு கறுப்பு நிறத்தில் கடினமான மாசு படிந்திருந்தது. பல நாட்கள் மெதுவாக சுத்தப் படுத் தினேன். அந்த நாணயத்தின் முன் புற மத்தியில் சிதைந்த நிலையில் ஒரு உருவம் உள்ளது. சிதைந்த உருவத்தின் மேல், தமிழ் - பிராமி எழுத்து முறையில், இரண்டு எழுத்துக்கள் தென்படுகின்றன.
அந்த உருவத்தின் கீழ்பகுதியில் நீள் சதுர வடிவில் ஒரு தொட்டி இருக்கிறது. தொட்டியின் மேல் விளிம்பைத் தொட்டு இரண்டு ஆமைகள் ஒன்றை ஒன்று எதிர் நோக்கி இருப்பது போல் அச்சாகியுள்ளது.
அதேபோல், தொட்டியின் கீழ் விளிம் பைத் தொட்டு இரண்டு ஆமைகள் உள் ளன. முழு உருவம் அச்சாகவில்லை. இந்த நான்கு ஆமைகளுக்கு மத்தியில் இடப் பக்கம் நோக்கி, ஒரு சிறிய ஆமை உள்ளது.
மவுரிய பிராமி
எழுத்து முறையில்
தொட்டியின் வெளியே வலப் பக்கம் நாணயத்தின் விளிம்பை ஒட்டி, வேலி யிட்ட மரச்சின்னம் உள்ளது. நாணயத்தின் இடது பக்கம் மேல் மூலைப்பகுதியில் மவுரிய பிராமி எழுத்து முறையில், மா என்று உள்ளது.
மத்தியிலுள்ள சின்னத்திற்கு மேலாக, ற என்ற எழுத்து வலப்பக்கத்திலிருந்து இடப் பக்கமாக நாணயத்தின் மேல் விளிம்பை ஒட்டி சாய்ந்த நிலையில் இருக்கிறது. இந்த எழுத்து நின்ற நிலையில்தான் இருந்திருக்க வேண்டும். இடப்பற்றாக்குறையால் சாய்ந்த நிலையால் இவ்வாறு அச்சிடப்பட்டுள்ளது. இந்த எழுத்து, தமிழ் - பிராமி வகையை சேர்ந்தது.
கடைசியாக, வலது பக்கம் மூலையில் மேல் விளிம்பை ஒட்டி, ‘ன்’ என்ற எழுத்து உள்ளது. இதுவும் தமிழ் பிராமி வகையைச் சேர்ந்தது.
இந்த நாணயத்தில் இருப்பது போல் தொட்டியும், அதில் நான்கு பெரிய ஆமை கள், ஒன்றை ஒன்று எதிர்நோக்கி இருக்கும் நாணயத்தை, மதுரையை ஆண்ட சங்க கால பாண்டியர்கள் வெளியிட்டுள்ளனர்.
அந்தத் தொட்டியின் மேல் பகுதியில், யானை ஒன்று வலப் பக்கம் நோக்கி நிற்பது போல் அச்சாகியுள்ளது. அந்த நாண யத்தின் பின்புறத்தில் கோட்டு வடிவ மீன் சின்னம் அழகாக உள்ளது. இந்த நாணயம் குறித்து, நான் வெளியிட்டுள்ள பாண்டியன் பெருவழுதி நாணயங்கள் என்ற நூலில் பார்க்கலாம்.
இந்த நாணயம் போல் மாறன் பெயர் பொறிப்பு நாணயத்தில் சிதைந்த நிலையில் உள்ள உருவம் யானையின் உருவமாக இருக்கலாம்.
மாறன் பெயர் கொண்ட நாணயத்தின் பின்புறம்:
இரண்டு பெரிய மீன்கள், ஒன்றை ஒன்று எதிர் நோக்கி நின்ற நிலையில் உள்ளன.
நான் ஏற்கெனவே செழியன் நாணயம் பற்றி எழுதியுள்ள கட்டு ரையில், இரட்டை மீன்கள் சங்க கால கொற்கை பாண்டியர் களின் சின்னம் என்று குறிப்பிட்டிருக் கிறேன்.
மேலும், அக்கட்டுரையில் பேரரசன் அசோகன் தன் கிர்னார் கல்வெட்டில் சோழ, பாண்டிய, சத்திய புத்திர, சேர, தாமிர வருணி என்ற நாடுகள், தன் நாட்டின், தென் எல்லைக்கு அப்பால் இருந்ததாகக் கூறி உள்ளதைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறேன்.
இக்கல்வெட்டின் காலம், கி.மு., மூன் றாம் நூற்றாண்டாக இருக்கலாம். கொற் கையை தலைநகராகக் கொண்ட பாண்டி யர்களின் நாடு தாமிரவருணி நாடாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளேன். இந்த நாணயத்தின் காலம் கி.மு., மூன்றாம் நுற்றாண்டாக இருக்கலாம்.
இதுபோன்ற சங்க கால நாணயச் சான்றுகள், வருங்காலத்தில் கிடைத்தால், தமிழகத்தின் தொன்மை வரலாறு பற்றி, மேலும் அறிவதுடன், அக்காலத்தை நிர்ண யம் செய்யவும் உதவிடும் என்று நம்பு கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-விடுதலை ஞா.ம.,3.9.16

உலகெங்கிலும் தமிழ் சொற்களில் 30,000 ஊர் பெயர்கள்


கடல்சார் ஆய்வாளர் ஒரிசா பாலு தகவல்

ராமநாதபுரம், ஜூன் 8 உலகெங் கிலும் தமிழ்ச் சொற்களில் 30,000 ஊர்ப் பெயர்கள் உள்ளதாக ஒருங்கிணைந்தகடல்சார்ஆய் வாளர் ஒரிசா பாலு தெரிவித் துள்ளார்.
உலக சுற்றுச்சூழல் தினம் ஆண்டுதோறும் ஜுன் முதல் வாரம் கடைபிடிக்கப்படுகிறது. 1972 ஆம் ஆண்டு அய்.நா. சபையால் அறிவிக்கப்பட்டு ஆண்டுதோறும் வெவ்வேறு கருத்துக்களுடன் கொண்டாடப் பட்டு வருகிறது. இதைமுன் னிட்டு ராமநாதபுரம் அருகே எட்டிவயலில் உள்ள நம்மாழ்வார் அரங்கில் உலகச் சுற்றுச்சூழல் தினக் கருத்தரங்கம் ஞாயிற் றுக்கிழமை நடைபெற்றது.

இதற்குராமநாதபுரம்முன் னோடி விவசாயி தரணி முரு கேசன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ஒருங் கிணைந்த கடல்சார் ஆய்வாளர் ஒரிசா பாலு கலந்து கொண்டு பேசியதாவது:

கடல் நீரோட்டங்களைப் பயன்படுத்திஆமைகள்இனப் பெருக்கத்துக்காக 180 நாள்கள் பயணம் செய்கின்றன. ஆமை களைப் பின்பற்றி கடல் நீரோட்டங்களைக் கண்டறிந்து பசிபிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், மத்திய தரைக் கடல், தென் கிழக்கு ஆசியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளுக்கும் தமிழர்கள் கடல் வழிப் பயணம் மேற்கொண்டனர்.
முந்நீர், பழந்தீவு, பன்னீராயிரம் என சோழர் காலக் கல் வெட்டுகள் கூறுகின்றன. இந்த 20 ஆயிரம் தீவுகளில் 9,000 தீவு கள் நீரில் மூழ்கி விட்டன. இவற்றை சோழர்கள் எப்படிக் கணக்கிட்டார்கள்என்பது வியப் புக்கும், ஆய்வுக்கும் உரியது. உலகெங்கிலும் கப்பல் கட்டுமானத்துக்கு மற்றவர்கள் 2 மரங்களைப் பயன்படுத்த, தமி ழர்கள் 20 வகையான மரங்களைப் பயன்படுத்தியுள்ளனர்பாறை களில் மோதினால் உடையா மல் இருக்க கப்பலின் அடிப் பகுதியில் கழற்றி விடும்படியான கட்டமைப்பைக் கொண்ட தொழில் நுட்பத்தை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே தமிழர்கள் பின்பற்றி வந்துள்ளனர்.

உலகெங்கிலும் தமிழ்ச் சொற் களில் 30,000 ஊர்ப் பெயர்கள் உள்ளன. பிரேசிலில் உறை, வசி, ஊர் என அழைக்கப்படும் பகுதிகள் உள்ளன. ஜப்பானில் குரில் என்ற பகுதியில் மருதை என்ற ஊர் உள்ளது. சீனாவில் 5 ஊர்கள் பாண்டியன் என்ற பெயரில் அமைந்துள்ளன.

கொரியாவின் அரசியாக பாண்டிய இளவரசி ஒருவர் இருந்துள்ளார்.கி.பி.45இல் இந்தோனேசியாவை சிறீ மாறன் என்ற தமிழ் மன்னன் ஆண் டுள்ளான். ஆஸ்திரேலியாவில் குமரி, நான்மாடல், துங்காவி என்ற பெயரில் ஊர்கள் உள்ளன. பெரு, சிலியில் நெடுங்கற்கள் நிறைந்த பகுதிகள் வால்பாறை என அழைக்கப்படுகின்றன. பழந் தமிழரின் கடல் பயணங்களை இவை உறுதிப்படுத்துகின்றன என்றார்.

கருத்தரங்கில் நூற்றுக்கும் மேற்பட்டோர், விவசாயிகள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.
-விடுதலை,8.6.16