பக்கங்கள்

வியாழன், 24 அக்டோபர், 2019

‘திராவிடம்’ என்பது சமஸ்கிருதச் சொல்லா?

கால்டுவெல் கூற்றை கண்மூடி ஏற்பதா?

- மஞ்சை வசந்தன்
----------------------------------------------
“தமிழ்” என்ற பெயருக்கு நிகரான சமஸ்கிருதப் பெயர் “திராவிட என்பதாகும்” என்கிறார் கால்டுவெல்.

கால்டுவெல் இருண்டுகிடந்த மொழி வரலாற்றில் சிறு ஒளியேற்றியவர் என்பதை நாம் ஏற்கலாமே ஒழிய கால்டுவெடுல்லின் அனுமானங்கள் (யூகங்கள்) ஏற்கத்தக்கன அல்ல.

சிலர் கண்ணை மூடிக்கொண்டு கால்டுவெல்லை கரைத்துக் குடித்தவர்கள்போல், எதற்கெடுத்தாலும் கால்டுவெல் என்று காட்டுகின்றனர். ஆனால், அது தவறு.

தமிழ் என்பது உலக மொழிகளுக்கெல்லாம் மூலமொழி. உலக மொழிகள் ஆங்கிலம், கிரேக்கம், சமஸ்கிருதம் உட்பட எல்லாம் தமிழிலிருந்து வந்தவை என்பதற்கு ஏராளமான ஆதாரங்களும், ஆய்வு முடிவுகளும் உள்ளன. அந்தந்த மொழியினரே அதை ஏற்கின்றனர்.

அப்படிப்பட்ட மூலத் தொன்மொழியைக் குறிக்கும் “தமிழ்” என்ற சொல்லே சமஸ்கிதத்திலிருந்து வந்தது என்கிறார் கால்டுவெல்.

“தமிழ்”, “திராவிட” என்ற இரு சொற்களும் முற்றிலும் வேறுபடுவனவாகத் தோன்றினாலும், பிறப்பியல் முறையால் அவை ஒரு தன்மைய என்ற முடிவையையே நான் கொள்கிறேன். அவை இரண்டையும் ஒன்றெனவே கொண்டால், தமிழ் என்ற சொல்லிலிருந்து திராவிடம் என்ற சொல்லைத் தோற்றுவிப்பதைக் காட்டிலும், ‘தமிழ்’ என்ற சொல்லை திராவிட என்ற சொல்லிலிருந்து தோற்றுவிப்பதே எளிதாம் என்பது புலனாம்’’ என்கிறார் கால்டுவெல்.

ஒரு தலைசிறந்த ஆய்வாளர் என்று போற்றப்படுபவர், ஒரு மொழி சார்ந்த முதன்மையான ஆய்வில், அதுவும் அம்மொழியின் பெயர் சார்ந்த ஆய்வில் யூகங்களின் அடிப்படையில் கருத்துக் கூறியிருப்பது ஏற்புடைத்தன்று.

இவரின் முடிவுப்படிப் பார்த்தால் தமிழ் மொழியின் பெயரே (தமிழ் என்பதே) சமஸ்கிருதத்திலிருந்து வந்தது என்றாகிறது. தமிழ் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழைமை உடையது. சமஸ்கிருதம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு உட்பட்டது. அதுவும் தமிழிடம் பிச்சை பெற்று உருவாக்கப்பட்து. அப்படிப்பட்ட, பிற்காலத்தில் கட்டமைக்கப்பட்ட மொழியின் சொல்லிலிருந்து தமிழ் என்ற சொல் வந்தது என்பது நகைப்பிற்குரியது.

“தமிழ்” திராவிடம் என்று திரிந்ததா? திராவிடம் என்பதிலிருந்து தமிழ் வந்ததா? என்பதே கால்டுவெல் ஆய்வது.

அப்படி ஆய்வு செய்பவர் இன்னின்ன காரணங்களால் திராவிடம் என்பதிலிருந்து தமிழ் வந்தது என்று நிறுவ வேண்டும். அதற்கு கால வரிசைப்படியான ஆதாரங்களைக் காட்ட வேண்டும். ஆனால், அப்படி ஏதும் காட்டாமல், “தமிழ் என்ற சொல்லை திராவிடம் என்ற சொல்லிலிருந்து தோற்றவிப்பதே எளிதாம் என்பது புலனாம்” என்று கால்டுவெல் கூறுவது ஆய்வுக்கும் அழகல்ல; ஆய்வாளருக்கும் அழகல்ல.

இது  ‘எளிது’, ‘கடினம்’ என்ற அடிப்படையில் செய்யப்பட வேண்டிய ஆய்வா?

ஆய்வு என்பது அரிதின் முயன்று, ஆதாரங்களைத் திரட்டி, அய்யம் திரிபு அற அறிவிக்கப்பட வேண்டிய பொறுப்பு அல்லவா? கால்டுவெல் வார்த்தைகளே அவர் ஆய்வின் நுனிப்புல் மேய்வைக் காட்டுகிறது!

அது மட்டுமல்ல, கால்டுவெல் ஆய்வு தலைகீழ் ஆய்வு.

திராவிட என்பது தமிழிலிருந்து திரிந்தது என்பதே நேரானது. இதை மொழி ஞாயிறு தேவநேயப்பாவணர் அணுஅணுவாய் நுணுகி ஆய்வு செய்து தெளிவுபடுத்தியுள்ளார்; தெரியப்படுத்தியுள்ளார்.

“இக்கால மொழியியலும், அரசியலும் பற்றித் தமிழும், அதனின்றும் திரிந்த திராவிடமும் வேறு பிரிந்து நிற்பினும், பழங்காலத்தில் திராவிடம் என்பதெல்லாம் தமிழே. திராவிடம் என்று திரிந்தது தமிழ் என்ற சொல்லே.”

“தமிழ் - தமிழம் - த்ரமிள - திரமிட - திரவிட - த்ராவிட - திராவிடம் என்று திரிந்தது என்கிறார்.

அது மட்டுமல்ல, சமஸ்கிருத மொழியில் ‘திராவிட’ என்பதற்கு வேர்ச் சொல்லே இல்லை! இதை ஆய்வாளர்கள் ஆழமாய் உள்ளத்தில் கொள்ள வேண்டும்.

அது மட்டுமல்ல, ‘தமிழ்’ என்பது காலகாலமாக எப்படி திரிந்து திராவிடம் ஆனது என்பதற்கான காலச் சான்றுகள் வலுவாக உள்ளன.

1.            மகாவம்சம் என்ற பாலி இலக்கியத்தில் வரும் தமிள (Damila) என்ற சொல் தமிழைக் குறிக்கிறது.

2.            ஸ்வேதாம்பர சைனர் என்ற பிராகிருதி இலக்கியத்திலும் தமிள என்ற சொல் காணப்படுகிறது.

தமிட என்ற சொல் சைனர்களின் பிராகிருத மொழி இலக்கியத்தில் தவிள என்றும், ஆரம்பக் காலச் சமஸ்கிருத இலக்கியங்களில் தவிட என்றும் குறிக்கப்படுகிறது. பிற்காலத்தில் சம1கிருதம் இந்தியாவில் நன்கு வேரூன்றிய காலத்தில் தமிள, தமிட ஆகிய சொற்கள் த்ரமிள, த்ரமிட என்று சமற்கிருத உச்சரிப்பைப் பெற்றன. இதற்கு ஆதாரமாகப் பின்வரும் எடுத்துக்காட்டுகளைக் கூறலாம்.

3.            த்ரமிள என்ற சொல் வடஇந்தியாவில் பாதாமி அருகில் உள்ள மகா கூடத்துக் கற்றூண்களில் காணப்படுகிறது. இத்தூண்கள் கி.பி.597-608இல் செதுக்கப்பட்டவை.

இச்சொல் பழைய மலையாள, சமற்கிருத புராணங்களிலும், தாராநாத்தின் புத்தமத வரலாற்றிலும் காணப்படுகிறது.

த்ராவிள என்ற சொல் சைனக் கணங்கள் என்ற நூலிலும் காணப்படுகிறது.

5.            த்ரமிட என்ற சொல் தமிழ்த் திருவாய் மொழியின் சமற்கிருத மொழி பெயர்ப்பிலும் காணப்படுகிறது. பிரம்ம சூத்திரத்துக்கு உரை எழுதிய ஒருவரைக் குறிப்பிடும்போது இராமானுஜர் த்ரமிட என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார்.

இந்தத் தடயங்களை வைத்து நேர் நோக்கினால், தமிழ் திராவிடமாகத் திரிந்த பரிணாமம் புரியும். ஆனால், கால்டுவெல் தலைகீழாய் நோக்கி முடிவு கூறியது தவறு - பிழை ஆகும்.

“தமிழ்” - “திராவிட” சொல்லாய்வில் மட்டுமல்ல, பல சொற்களின் ஆய்விலும் தவறான முடிவை கால்டுவெல் வெளியிட்டுள்ளார்.

சோழர், பாண்டியர், கேரளர், ஆந்திரர், கலிங்கர் போன்ற தென்னிந்திய பெயர்கள் எல்லாம் சமஸ்கிருத சொற்களே என்கிறார்.

இவர் முடிவுப்படி எல்லாம் சமஸ்கிருதத்திலிருந்து பெப்றறவை என்கிறார். இவையும் தலைகீழ் முடிவுகளே!

கால்டுவெல்லின் முடிவுகளை பல மொழியில் ஆய்வாளர்கள் ஏற்காது மறுத்துள்ளனர். கால்டுவெல்லின் பிழையான ஆய்வு முடிவுகளை எடுத்துக்காட்டியுள்ளனர்.

ஒரு நூற்றாண்டுக்கு மேலாக, மொழியியலாளர் மராத்தி மொழி சமஸ்கிருத மொழியிலிருந்து தோன்றியதாகவும், சில கன்னட, தெலுங்குச் சொற்களைத் தவிர்த்து இம்மொழி வேறு எந்தத் தென்னிந்திய மொழிகளுடனும் தொடர்பற்றது என்றும் எண்ணி இருந்தனர். இதற்குக் காரணம் கால்டுவெல் என்ற அறிஞர் சமற்கிருதத்திலிருந்து தோன்றிய மொழிகளுள் மராத்தியும் ஒன்று என்று கூறியதே. அதனால்தான் பெரும்பாலான மராத்திய மொழிற் சொற்கள் சமற்கிருதத்திலிருந்து தோன்றியவை என்று நம்பினர். சில அடிப்படைச் சொற்கள் சமற்கிருத உச்சரிப்பை ஒத்திருப்பதால் அவை சமற்கிருதத்திலிருந்து தோன்றியவை என்று எண்ணினர். ஆனால், சொற்றொடர் அடிப்படையில் பார்க்கும்போது வேறு விதமாக இருக்கிறது.

மகாராட்டிரத்தின் பெரும்பாலான இடப் பெயர்களைத் தமிழ் மூலம்தான் விளக்க முடியும். காரணம், வரலாற்றுக் காலத்துக்கு முன் மகாராட்டிரத்தில் வசித்த மக்கள் தமிழ் போன்ற ஒரு மொழியைப் பேசி இருக்க வேண்டும். நாட்டுப்புறப் பண்பாடு, கிராமக் கடவுளர்கள் வழிபாட்டு முறைகளில் காணப்படும் சொற்கள் முழுமையாகத் தமிழுடன் தொடர்புடையனவாக உள்ளன. பெரும்பாலான இச்சொற்கள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. இதிலிருந்து மராத்தியில் காணப்படும் சொற்களின் பழமை நன்கு புலப்படுகிறது.

மராத்திய மொழியில் காணப்படும் கன்னட, தெலுங்குச் சொற்கள் தென்னிந்தியக் குடும்ப மொழிகளின் பொதுச் சொற்களே. இருப்பினும் அவைகள் உச்சரிப்பிலும், தொடரியலிலும் கன்னடம், தெலுங்கை விடத் தமிழ் வேர்ச் சொற்களோடு அதிகம் ஒத்திருக்கின்றன.

மகாராட்டிரத்தின் பெரும்பாலான கிராம மக்களின் நடைமுறைச் சொற்களும், சமற்கிருத இலக்கியச் சொற்களை விடத் தமிழ் நாட்டுப்புறச் சொற்களுடன் மிகவும் தொடர்புடையனவாக உள்ளன. படிக்காத இம்மக்களின் மொழிநடை தமிழ் மூலத்தைக் காட்டும் குறிப்புகள் என்று நிச்சயப்படுத்திக் கொள்ளலாம்.

பழங்கால மராத்தி மொழி தொல்காப்பியத் தமிழ் இடையே உள்ள பலவிதமான ஒற்றுமைகளை இலக்கணம் தொடரியல் மூலமாக விளக்க முடியும். இவைகள்  உண்மையில் மராத்தியியலில் உள்ள, சமற்கிருத மொழியால் விளக்க முடியாத இருட்டுகளைப் போக்கும் ஒளி என்றால் மிகையாகாது.

பல சமற்கிருத மொழிச் சொற்களின் பொருளையும் மூலத்தையும் உணர்த்தும் மொழியாக மராத்தி மொழியைக் கொள்ளலாம். மராத்திய மொழியைச் சமற்கிருதம் - தமிழ் ஆகியவற்றை இணைக்கும் மொழியாகவும் கொள்ளலாம். சமற்கிருதம், மராத்தி, தமிழ் ஆகிய மொழிகளில் பெரும்பாலான சொற்கள் பொதுவானவை. இச்சொற்கள் இடையே, உச்சரிப்பு, தொடரியல்களில் ஒற்றுமை இருந்தாலும் நேரடியாக விளக்க முடியாது.

விஸ்வநாத கைரேவுக்கு முன்னர்த் தேவநேயப் பாவாணர் என்ற தமிழறிஞர் இதுபற்றி விரிவாக விளக்கியுள்ளார்.

தமிழிலிருந்து முதலில் திரிந்த மொழி தெலுங்கே என்றும், அது திரிந்துதான் பிற வடநாட்டு மொழிகளானதாகக் கூறுகிறார். ஒரு காலத்தில் கொடுந்தமிழாக இருந்த மொழிகள் ஒரு பிரிவு தமிழர் விந்தியமலைக்கு அப்பால் குடியேறியபோது திரவிடம் என்னும் கிளைமொழிகளாகத் திரிந்து விட்டதாகவும், அவ்வாறு திரிந்த மொழிகளே சூரசேனி, மாகதி, மகாராட்டிரம் போன்ற பிராகிருத மொழிகள் என்கிறார். அவை மேலும் திரிந்து இக்கால இந்தி, வங்காளி, மராத்தி, குசராத்தியாகி விட்டதாகக் கூறுகிறார். இவற்றின் அடிப்படைச் சொற்கள் தமிழாயிருப்பதுடன் தொடரமைப்பிலும் இவை தமிழையே முற்றிலும் ஒத்திருக்கின்றன என்கிறார். அதனால்தான் மராத்தியும், குசராத்தியும் ஒரு காலத்தில் திராவிட மொழிகளாய்க் கொள்ளப்பட்டு, பஞ்ச திரவிடத்தின் இரு கூறுகளாய்க் குறிக்கப்பட்டதென்கிறார்.

அவர் வட திரவிடத்திலும், ஆரியத்திலும் மூவிடப் பெயர்களில், தன்மைப் பெயரடி மகரமாயிருத்தற்குத் தோற்றுவாய் செய்தது தெலுங்குப் பன்மைச் சொல்லே என்கிறார்.

சில தெலுங்குச் சொற்களின் முதலிலுள்ள உயிர்மெய் இடை ரகரம் செருகப்படும் என்கிறார்.

எ.கா.:

தமிழ்               தெலுங்கு

பொழுது          ப்ரொத்து

மண்டு              ம்ரண்டு

இவ்வழக்கே வடசொல் திரிபுகளுக்கு வழிவகுத்ததாகக் கூறுகிறார்.

எ.கா.

தமிழ்           வடமொழி

தமிழ்              த்ரமிள

படி                        ப்ரதி

பதிகம்              ப்ரதீக

மதங்கம்        ம்ருதங்க

மெது             ம்ருது

 

தமிழ்ப் பண்டிதர்களின் தவறுகள்:

தந்தை பெரியார் அவர்கள் அடிக்கடிச் சுட்டிக்காட்டியதுபோல, தமிழ்ப் பண்டிதர்கள் பலரும் ஆழமான, நுட்பமான, வரலாற்று அடிப்படையிலான ஆய்வுகளைச் செய்யாது, நுனிப்புல் மேய்கின்றவர்களாக இருப்பது வேதனைக்குரியது.

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு’’

என்ற வள்ளுவரின் வழிகாட்டுதல்படி ஆய்வுகளையும், முடிவுகளை ஏற்க வேண்டும். கண்ணை மூடிக்கொண்டு ஏற்பது வரலாற்றுப் பிழையாகும்.

எடுத்துக்காட்டாக, தமிழ்ப் பண்டிதர்களில் பலர் ஜுரம், ஜலம், பங்கஜம், ஹிருதயம், ஹிமயம் போன்ற பல சொற்களை சமஸ்கிருதச் சொற்கள் என்று கூறி, அவற்றைத் தமிழ்ப்படுத்துகிறோம் என்று, ‘சுரம்’, ‘சலம்’, ‘பங்கயம்’, ‘இதயம்’, ‘இமயம்’ என்று எழுதுகிறார்கள். இது முற்றிலும் தவறான முடிவு.

இவை போன்ற சொற்கள் சமஸ்கிருதச் சொற்கள் அல்ல. அவை தமிழ்ச் சொற்களை சமஸ்கிருதச் சொற்களாக மாற்றிக் கொண்ட சொற்கள்.

“சுரம்’’ என்ற தூயத் தமிழ்ச் சொல்லை, ‘ஜு’ என்ற சமஸ்கிருத எழுத்தைப் போட்டு ஜுரம்  என்று ஆக்கிக் கொண்டனர். ‘சலம்’ என்ற தூயத் தமிழ்ச்சொல்லை ‘ஜ’ என்ற சமஸ்கிருத எழுத்தைப் போட்டும், ‘பன்கயம்’ என்ற தூயத் தமிழ்ச் சொல்லை ‘ஜ’ என்ற சமஸ்கிருத எழுத்தைப் போட்டும், ‘குருதி ஆயம்’ என்ற தூயத் தமிழ்ச் சொல்லை ‘ஹி’ என்ற சமஸ்கிருத எழுத்தைச் சேர்த்துத் திரித்தும், ‘இமயம்’ என்ற தூயத் தமிழ்ச் சொல்லை ‘ஹி’ என்ற சமஸ்கிருத எழுத்தைப் போட்டும் சமஸ்கிருதச் சொல்லை ஆக்கிக் கொண்டனர். இதை அறியாது, அதை மீண்டும் தமிழ்ப் படுத்துகிறேன் என்பது அறியாமையின் அடையாளமாகும்.

ஒரு சொல் எந்த மொழிக்கு உரியது என்பதை உறுதி செய்ய வேர்ச் சொல் ஆய்வு கட்டாயம். இவைபோன்ற சொற்களுக்கு தமிழில்தான் வேர்ச்சொல் உண்டே ஒழிய சமஸ்கிருதத்தில் இல்லை.

எடுத்துக்காட்டாக:- ‘சுரம்’ என்ற தமிழ்ச் சொல்லின் வேர்ச்சொல் ‘சுர்’ என்பது. ‘சுர்’ என்பது சூட்டைக் குறிப்பது. நெருப்புப் பட்டால் ‘சுர்’ என்று சுட்டுவிட்டது என்பர் என்பதை இங்கு இணைத்து நோக்கித் தெளிய வேண்டும். ‘சலம்’ என்ற தூய தமிழ்ச் சொல், நீர் ‘சல சல’ வென்று ஓடுவதால் வந்த காரணப் பெயர். சமஸ்கிருதத்தில் இதற்கான வேர்ச்சொல் இல்லை. இப்படியே மற்றைய சொற்களும்.

‘அரசன்’ என்ற தூய தமிழ்ச் சொல்லையே ராஜன் என்று இடவலமாக்கி நெடிலாக்கல் முறையில் சமஸ்கிருத சொல்லாக மாற்றினர்.

அதாவது, அரசன் என்பதில் முதல் இரண்டு எழுத்தை இடவலமாக மாற்றினால் ர+அ=ர. இதை நெடிலாக்கினால் ‘ரா’. ‘ரா’ என்பதுடன் ‘சன்’ என்ற இரண்டு எழுத்தையும் சேர்த்தால் ராசன். அதில் ‘ச’ வை வட எழுத்து ‘ஜ’வாக மாற்றி ராஜன் என்று ஆக்கினர். இதை அறியாது ராஜன் என்பதைத் தமிழ்ப்படுத்துகிறேன் என்று ‘ராசன்’ என்று எழுதுவது அறியாமை! தமிழில் அரசன் என்று எழுதுவதே சரி. இராசன் என்று எழுதுவது தப்பு.

எனவே, உலக மொழிக்கெல்லாம் மூலமொழியான தமிழின் தொன்மையும், வளமையும், அது அளித்த கொடையம் அறியாது, எல்லாம் சமஸ்கிருதத்திலிருந்து வந்ததாகக் கருதுவது ஆழ்ந்த ஆய்வறிவின்பாற்பட்டதல்ல என்பதை அறிய வேண்டும்.

எனவே, திராவிடம் என்பது தமிழ் என்பதன் திரிபேயன்றி, திராவிடம் என்பதிலிருந்து தமிழ் வந்ததல்ல!

=====

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக