பக்கங்கள்

வெள்ளி, 19 அக்டோபர், 2018

தமிழைப்பழைய நிலையிலேயே வைத்திருக்கலாமா?


தமிழைப்பழைய நிலையிலேயே வைத்திருக்கலாமா?


 


 

பெரியார் நடத்திய ஏடுகளில் தமிழ்ப் பெயர்கள்

பெரியாரின் கருத்துகள் கடுமையாக இருந்தனவே தவிர, பெரியார் தமிழ் மொழிக்கு உரிய இடத்தை வழங்கத் தவறவில்லை. அவர் இயற்கை எய்தும் வரையும் தமிழ் மொழி, தமிழினம், தமிழ்நாடு என்கிற உரத்த சிந்தனையிலேயே வாழ்ந்தவர் பெரியார். 1925ஆம் ஆண்டு மே மாதம் 2ஆம் தேதி பெரியார் ‘குடிஅரசு’ எனும் வார ஏட்டைத் தொடங்கிய விவரம் பெரியாரை அறிந்த அனைவருக்கும் தெரியும்.

‘குடிஅரசு’ எனும் பெயர் பற்றி பெரியார், ஜனநாயகம் என்பது வடமொழிச் சொல். அதை வேண்டாமென்று ஒதுக்கி ‘குடிஅரசு’ என்ற பெயரை வைத்தேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இப்படி பெரியார் ஏட்டிற்குத் தமிழ் பெயராகச் சூட்டியது ‘தமிழ் எதிர்ப்பு’ ஆகுமா? பெரியாரின் இச்செயலினை நமது எதிரிகள் யாராவது அறிந்திருப்பார்களா? என்றால் இருக்காது.

பெரியார் உலக மனிதர் என்று மேலே குறிப்பிட்டோம் அல்லவா? தாய் மொழி என்பது எது? என்பதற்கு அவர் தந்துள்ள விளக்கம் இதுவரை எவரும் கூறாததாகும். தந்தை ஒரு மொழி பேசுபவராகவும், தாய் ஒரு மொழி பேசுபவராகவும் இருக்கிறபோது தந்தை மொழியா? தாய்மொழியா? இருமொழி ஒருவருக்கு எப்படித்தாய் மொழியாக இருக்கமுடியும்? இந்த இடத்தில் தாய்மொழி எனும் பற்றுக் கோடு காணாமல் போய்விடுகிறது. பெரியார், ஒருவனுக்குத் தாய்மொழி என்பது பிறந்த பழகிய வாய்ப்பினால் புகுத்தப்பட்டது (‘விடுதலை’ 15.10.1962) என்கிறார். இங்கே தந்தை மொழியும் தாய் மொழியும் வீட்டு மொழியாகி - பழகிய வாய்ப்பினால் கிடைத்த நாட்டின் மொழி தாய்மொழி ஆகிவிடும் என்கிறார் பெரியார்.

பழகிய வாய்ப்பினால் தாய்மொழி

வங்காளி ஒருவர் கேரளப் பெண்ணை மணக்கிறார். தமிழ்நாட்டில் வாழுகிறார். குழந்தை பிறக்கிறது. வளர்கிறது. அக்குடும்பம் தமிழைக் கற்று வாழ்கிறது. தமிழ் குடும்பம் ஆகிவிட்டது. தாய், தந்தையர்க்குப் பிறகு அக்குழந்தையும் அதனைச் சார்ந்தவர்களும் தமிழராகிவிட்டனர். தாய் தந்தையரின் தாய்மொழிகள் இங்கே காணாமல் போய்விட்டன. ஆகவே பெரியார் சொல்வது-போல பழகிய வாய்ப்பினால் தாய் மொழி புதிதாகவும் தோன்றிவிடுகிறது.

எனவே, தமிழ்மொழி பேசுவதை வைத்து ஒருவரை தமிழர் என்று கூறிவிட முடியாது. தமிழ் பேசத் தெரியாததால் தமிழர் இல்லை என்றும் சொல்ல முடியாது-. அதேபோல் இங்கிலாந்து சென்ற தமிழ்க் குடும்பப் பிள்ளைகளுக்குத் தமிழே தெரியாமல் போய்விடுகிறது-.

தமிழ் மொழி பற்றி பெரியார்

“தாய்மொழியைப் பாதுகாத்தல் ஒவ்வொருவருடைய கடமையாகும். நம் தமிழ்மொழி தாய்மொழி என்ற மட்டிலும் அல்லாமல் எல்லா வளப்பங்களும் கொண்ட சிறந்த மொழி. இந்தியாவிலேயே பழமை வாய்ந்த பண்பட்ட மொழியாகும்’’ (‘விடுதலை’ 20.06.1959) என்றார் பெரியார். இதுமட்டுமில்லை. இதைவிடவும் தமிழர்களுக்கு அவர் புகட்டும் கருத்தைப் பாருங்கள்.

“மொழி உணர்ச்சி இல்லாதவர்களுக்கு நாட்டு உணர்ச்சியோ, நாட்டு நினைவோ எப்படி வரும். நம் பிற்காலச் சந்ததிக்காவது சிறிது நாட்டு உணர்ச்சி ஏற்படும்படி செய்ய வேண்டுமானாலும் மொழி உணர்ச்சி சிறிதாவது இருந்தால்தான் முடியும். அன்றியும், சமுதாய இன உணர்ச்சி சிறிதாவது இருக்க வேண்டுமானாலும் மொழி உணர்ச்சி இருந்தால்தான் முடியும்’’ (‘விடுதலை’, 25.07.1972)

பெரியாரின் மேற்கண்ட இரு கருத்துகளும் அவர் தமிழ்மொழி மீது வைத்திருந்த பற்றையும் மதிப்பையுமே எடுத்துக்காட்டுகிறது. பெரியார் மொழிப்பற்று இல்லாதவராக இருந்தும் தாம் பிறந்ததும், பேசுவதும், எழுதுவதும், தமது கருத்தை வெளிப்படுத்தி பகிர்வதற்கானதுமான தமிழ்மொழி மீது அவருக்கு உள்ள ஆழமான ஈடுபாடு. இன உணர்ச்சி சிறிதாவது இருக்க வேண்டுமானால் மொழி உணர்ச்சி இருந்தால் தான் முடியும் என்கிறார் பெரியார். இவ்வளவு ஆழமாகத் தமிழ் மொழியைப் பார்க்கிறவர் தமிழுக்கு எதிரானவராக எப்படி இருக்க முடியும்?

தமிழைப் பழைய நிலையிலேயே வைத்திருக்கலாமா?

தமிழை எவ்வெவ்வகையில் உயர்த்த வேண்டும்? அதற்குள்ள பழம் பெருமை மட்டும் போதுமா? அதன் இலக்கிய, இலக்கண பெருமிதங்கள் இக்காலச் சூழலில் தமிழ் மக்களின் வாழ்வுக்கு உதவுமா? வாழ்க்கை முறைக்கு ஏற்றதாய் இருக்க, உலகத்தோடு தொடர்பு கொள்ள, விரைந்து செயல்பட, பணியாற்ற நாம் மொழியை ‘பழைய’ நிலையி-லேயே வைத்திருக்கக் கூடாது என்பதே பெரியாரின் சிந்தனையாக இருந்தது.

பெரியார் தமிழ் மொழியைப் பற்றி கருத்துச் சொல்கிறபோது தமக்குத் தோன்றுகிற கருத்தை எடுத்து வைக்கிறவர் இல்லை. படித்துவிட்டு மட்டும் கருத்தைக் கூறாமல் வாழ்நிலையில் தமிழர்கள் படும் துன்பங்கள், இடையூறுகள், தடைகள் எல்லாவற்றையும் நேரில் பார்த்து அறிந்து தமது கருத்தை முன் வைப்பவர் அவர்! ஆகவேதான் மொழியையும் பழமையிலிருந்து மீட்டெடுக்க வேண்டும் என்று அவர் எழுதினார்; பேசினார்.

தமிழை விரும்புவது ஏன்?

“நமது மேன்மைக்கு, நமது தகுதிக்கு, நமது முற்போக்குக்கு ஏற்ற மொழி, தமிழைவிட மேலான ஒரு மொழி இந்நாட்டில் இல்லை என்பதற்காகவே தமிழை விரும்புகிறேனே தவிர, அது அற்புத அதிசயங்களை விளைவிக்கக் கூடியது என்பதற்காக அல்ல. அற்புதச் சக்திகள் நிறைந்த மொழி என்று பிடிவாதம் செய்வது அறியாமைதான்! அது தமிழ் மாண்புகூட அல்ல. தமிழில் அதிசயம், மந்திரம், சக்தி முதலிய சொற்களே இல்லை.’’

ஆகவே தான் பெரியார், 20.01.1935ஆம் நாளிட்ட ‘குடிஅரசு’ தலையங்கத்தில் எழுத்துச் சீர்திருத்தங்களைப் பற்றி எழுதினார். தமிழ்மொழியை முன்னேற்றம் அடையச் செய்ய வேண்டும். அதன்வழி தமிழர்களை உயர்த்த வேண்டும் என்கிற ஆதங்கத்தில் பெரியார் சொல்வதைக் கேளுங்கள்.

“தமிழ் மொழியில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் பல என்பதைப் பற்றி பலருக்கு அபிப்ராயம் இருந்தாலும் எவரும் தைரியமாய் முன்வராமலேயே இருக்கிறார்கள். இவ்வளவு பெரிய காரியத்திற்கு பாஷாஞானம், இலக்கண ஞானம், பொதுக்கல்வி ஆகியவை இல்லாத ஒரு சாதாரண மனிதன் முயற்சிக்கலாமா? என்பது ஒரு பெரிய கேள்வியாக இருக்கலாம். ஆனால், தகுந்த புலமையும் பாஷாஞானமும் இலக்கண அறிவும் உள்ளவர்கள் எவரும் முயற்சிக்கா விட்டால் என்ன செய்வது? தவம் செய்வதா? அல்லது ஜபம் செய்வதா?"

இது பெரியாரின் குரல். ஆகவே அவர் முதன் நிலையில் தமிழில் சில எழுத்துச் சீர்திருத்தங்களை மேற்கொண்டார். அவர் செய்தவைகளில் இன்று சிலவற்றை நாம் ஏற்றுக் கொண்டு நடைமுறைப்-படுத்தி வருகின்றோம். இப்படிப்பட்ட பெரியாரைத் தமிழ்மொழிக்கு எதிரானவர் என்று கூறுகிறார்களே?

பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம்

1947இல் பெரியார் ‘ஐ’, ‘ஔ’ பற்றிய எழுத்துகளை ‘அய்’, ‘அவ்’ என்று எழுத வேண்டும் என்று முடிவு எடுத்தார். இது குறித்தும் அவர் விளக்கமாக எழுதினார். பெரியாரின் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் குறித்து அறிஞர் சோமலே எழுதியதை அப்படியே கீழே தருகின்றோம்.

“பத்திரிகையின் தேவைக்கு ஏற்ப எழுத்துச் சீர்திருத்தம் செய்ய வந்தவர் பெரியாரே. பெரியாரின் சிந்தனைப் போக்கினைத் தொடர்ந்து இந்தியா, இலங்கை, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து வந்த பேராளர்கள் யாழ்ப்பாணத்தில் 1972 இறுதியில் நிகழ்ந்த உலகத் தமிழ் மாநாட்டில் கட்டுரைகள் வாசித்துள்ளனர். பெரியாருடைய எழுத்துச் சீர்திருத்தத்தை ஏற்பதே தமிழக அரசு அவருக்கு நாட்டக் கூடிய நினைவுச் சின்னமாகும்.’’ (‘தமிழ் இதழ்கள்’: சென்னைப் பல்கலைக் கழக வெளியீடு)

அறிஞர் சோமலே பெரியார் பற்றி எடுத்துக் கூறுகிற கருத்துத் தமிழுக்கு எதிரானது ஆக முடியுமா? பெரியாரது எழுத்துச் சீர்திருத்தம் தமிழின் மேன்மையை நோக்கியது ஆகுமே தவிர, அதனைச் சிறுமைப்படுத்தியதாகவோ தமிழ்--மொழிக்கு எதிரானதாகவோ கொள்ள முடியுமா? பெரியாரின் கருத்துகளைப் பார்ப்பனர்கள் திரிக்கிறார்கள். நம்மில் இருக்கிற விபீஷணாழ்வார்களும் அவர்களது கருத்து-களுக்குத் துணை போகிறார்கள். பெரியாரால் தமிழ் மொழி குறித்து எடுத்து வைக்கப்பட்ட கருத்துகள் எத்தகைய நோக்கம் கொண்டவை என்பதைத் தமிழர்களாய் இருப்பவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். எனவே, பெரியார் தமிழுக்கு எதிரானவர் அல்ல. அவர் தமிழை உலகத் தரத்துக்கு உயர்த்த பாடுபட்டவர்!

(தொடரும்...)

- நேயன்

- உண்மை இதழ்- 16-31.10.18

ஞாயிறு, 14 அக்டோபர், 2018

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (19) ஆரியரின் பொய்களை மறுத்து எழுதப்பட்டதே குறள்!

- தந்தை பெரியார்

நேயன்

 


2000 ஆண்டுகளுக்கு முன்பு இப்படிப்பட்ட கருத்துக்கள் தோன்றியிருந்தது என்றால் நம்முடைய நாடு எவ்வளவு மேலான நாடாக அன்று இருந்திருக்க வேண்டும்? வள்ளுவர் குறளை எழுதிய காலம் தமிழ்நாடு ஆரிய ஆதிக்கத்தில் அமிழ்ந்து கிடந்த காலம், குறள் தோன்ற வேண்டிய அவசியம் கூட ஆரிய ஆதிக்கம் தோன்றிய மக்களை அழித்து நமது கலாசாரத்தை ஒழித்துக் கொண்டிருந்த நிலையைத் தடுப்பதற்குத்தான் வள்ளுவர் குறளை எழுதினார். குறளில் காணப்படும் தத்துவங்கள் அத்தனையும் இதைத்தான் எடுத்துக்காட்டுகின்றன.

நம் நாட்டில் குறளாசிரியருக்கு முன்பு அதே மாதிரிக் கருத்துகளை சித்தார்த்தர் என்ற பெயரை கொண்ட புத்தர் பரப்பியிருக்கிறார். அதற்கு 500 ஆண்டுகளுக்கு முன்பே இக்கருத்துகளை எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

சாதாரணமாகப் பழங்காலம் என்றால், காட்டுமிராண்டிக் காலம் என்றே சொல்லலாம். அதுவும் ஆரியக் கருத்துகள் முழுக்க முழுக்க காட்டுமிராண்டித்தன்மை கொண்டவைகளேயாகும்! அந்தக் காலத்திலேயே இப்படிப்பட்ட கருத்துகள் தோன்றி காட்டுமிராண்டித்தன்மையை ஒழிக்க முயற்சித்திருக்கின்றன; என்றாலும்,  அக்காட்டுமிரண்டித்தன்மையின் வேகம்தான் இன்னும் நம்மைக் காட்டுமிராண்டிகளாக்கி அதே நிலையில் வைத்திருக்கிறது.

ஆரியர்கள் நம்மை வெற்றி கொண்டார்கள் என்று சொல்லுவது எல்லாம் பல அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் சொல்லுவது எல்லாம், படையெடுப்பினால் போரிட்டு வெற்றி கொண்டார்கள் என்பதல்ல. கலாச்சாரங்களை தங்கள் கருத்துகளை இப்படிப்பட்ட கருத்துக்களை நம்மக்களுக்குள் புகுத்தித்தான் வெற்றி கொண்டார்கள்.  எவ்வளவு மோசமாக இருந்து அவர்கள் புகுத்தியிருந்தால் அப்படிப்பட்ட கருத்துகளைக் கண்டிக்க என்றே இப்படிப்பட்ட அறிவாளிகள் தோன்றியிருக்கக் கூடும். ஆரியர்கள் வேகமாகப் புகுத்திய அந்தக் கருத்துகளை புத்தர், வள்ளுவர் எதிர்த்திருக்கிறார்கள்.

புத்தர், வள்ளுவர் போன்றவர்கள் ஆரிய ஆதிக்கத்தை அதன்வழி முறைகளைப்பற்றிச் சிந்தித்ததில் இருந்து, இக்காட்டுமிராண்டிக் கருத்துக்கள் அறிவுக்கும், ஆராய்ச்சிக்கும் பொருந்தாத ஆபாசமான தன்மைகள் உலகில் மற்றும் பல பாகங்களில் முன்பே இருந்திருக்கின்றன என்று தெரிய வருகிறது.

நான் வள்ளுவரை நாத்திகராகக் கொண்டுதான் காண்கின்றேன். அவர் என் கண்ணுக்கு பெரிதும் நாத்திகராகவே காணப்படுகின்றார். மனிதன் ஓர் விஷயத்தைச் சொன்னான் என்றால், அதை மட்டம் என்கின்றோம். மனிதன் ஓர் நல்ல விஷயம் கூறி இருக்கின்றான் என்றால் அவனை மனிதத்தன்மைக்கு மேம்பட்டவன்; தெய்வீகத்தன்மை உடையவன் என்பதை எல்லாம் ஒட்ட வைத்து விடுவது என்பதுதான் நம் நாட்டில் நடந்து வந்திருக்கின்றது. தெய்வீகத்தன்மை உடையவர் கூறியது என்றால், ஆராயவே மனிதன் பயப்படுகின்றான். ஆராயவே முன்வருவதில்லை.

மனிதன் தான் அடைய முடியாது என்று எண்ணுவதை, தனக்குத் தெரியாததை, தனக்கு அதாவது, மனிதத்தன்மைக்கு மேம்பட்டது என்று எண்ணுகின்றான். அதுபற்றி ஆராய்வதே பாவம் என்று அல்லவா கூறுகின்றான்! அது எப்படி ஒப்புக்கொள்வது?

வள்ளுவர் எந்த இடத்திலும் தன்னை மனிதத் தன்மைக்கு மேம்பட்டவர் என்று எங்கும் காட்டிக் கொள்ளவே இல்லை.

இப்படிப்பட்ட வள்ளுவரை மனிதத்தன்மைக்கு மேம்பட்டவர் என்று காட்ட பித்தலாட்டமான கதையும் கட்டிவைத்திருக்கின்றார்கள்.

அவர் ஒரு பறைச்சிக்கும், பார்ப்பானுக்கும் பிறந்தவர் என்றும், அதுவும் கலவி முடிந்து உடன் பிறந்தவர் என்றும், அதற்கும் அந்தப் பார்ப்பானின் நிபந்தனைபேரில் அதை பறைச்சியும் மற்றக் குழந்தைகளையும் பிறந்து உடனேயே, பிறந்த இடத்திலேயே போட்டுவிட்டுச் சென்றதுபோல வள்ளுவரையும் போட்டுவிட்டு சென்று விட்டார்கள் என்றும், வேறு யாராலோ எடுத்து வளர்க்கப்பட்டு பல அதிசய அற்புதம் செய்தார் என்றெல்லாம் எழுதி வைத்துள்ளார்கள்.

திருவள்ளுவர் எந்த இடத்திலும் சாதாரணத்தன்மையைவிட தன்னை மனிதத்தன்மைக்கு மேம்பட்டவர் என்று காட்டிக் கொள்ளவே இல்லை.

அவர் தன்னை ஓர் அறிவியல்வாதி என்றுதான் காட்டிக் கொள்கிறார். தன் கருத்துக்குச் சரி என்றுபட்டதை எடுத்துச் சொல்வதல்லாமல், தன்னை ஓர் கடவுள் நம்பிக்கைவாதியாக எங்கும் காட்டிக் கொள்ளவே இல்லை.

அவர் எங்கும் கடவுளைப் பற்றி கூறியவரும் அல்ல. எந்த சமயத்தைச் சார்ந்தவரும், நம்பியவரும் அல்ல.

குறள் ஓர் சமய நூல் அல்ல; அது ஓர் அறிவு நூல். அவர் கடவுளைப் பற்றிக் கூறி இருப்பதாக முதல் அத்தியாயத்தையே கடவுள் வாழ்த்து என்று பேர் வைத்து விட்டார்கள். நான் மேலே கூறிய அப்படிப்பட்ட அறிவியல்வாதியா தமது நூலில் கடவுளுக்கு முதல் இடம் கொடுத்திருப்பார்?

புத்தரும் வள்ளுவரும்

2500  ஆண்டுகளுக்கு முன்பு புத்தர் என்பவர் தோன்றி,  பார்ப்பான் கற்பித்த கடவுள் மோட்சம், நரகம் முதலிய பித்தலாட்டங்களை எல்லாம் கண்டித்து மக்களுக்கு பகுத்தறிவு உணர்ச்சி உண்டாக்கப் பாடுபட்டார். இப்படிப் பாடுபட்ட அவரும், அவரது மார்க்கமும் பார்ப்பனர்களால் தந்திரமாக ஒழிக்கப்பட்டுவிட்டது.

அடுத்து வள்ளுவர் தோன்றினார். அறிவு சம்பந்தமான கருத்துகளை எல்லாம் குறளாகப் பாடினார். இவரது குறளும் மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லாமல் குப்பையில் தள்ளப்பட்டுக் கிடக்கும் வண்ணம் செய்துவிட்டார்கள். இந்த நாட்டில் இராமாயணத்திற்கும், கதைக்கும் இருக்கின்ற பெருமை இப்படிப்பட்ட அறிவு சம்பந்தமான குறளுக்கு நாட்டில் மதிப்பு இல்லை. இந்த புராணக் கதைகளை மக்கள் தெரிந்து இருக்கும் அளவு குறளை தெரிந்து இருக்கமாட்டார்கள்.

இவர்களுக்குப் பிறகு எவருமே தோன்றவே இல்லை; தோன்றிய ஆழ்வார்கள், நாயன்மார்கள், அவதாரப் புருஷர்கள் என்பவர்கள் எல்லாம் நம்மை என்றென்றைக்கும் மடையர்களாகவும், பார்ப்பானுடைய கடவுளுக்கு அடிமையாகவும் ஆக்கவே பாடுபட்டார்கள். அதன் காரணமாகவே, பார்ப்பானால் ஆழ்வார்கள், நாயன்மார்கள் என்று சுத்த அடிமுட்டாள்கள், காலிகள் எல்லாம் விளம்பரப்படுத்தப்பட்டு உள்ளனர்.

அடுத்து, ஏதோ சித்தர்கள் என்று பல பேர்கள் இருந்து இருக்கின்றார்கள். இவர்களும் சந்திலே பொந்திலே இருந்து கொண்டு ஏதோ இரண்டொரு வார்த்தைகள் கூறி இருப்பார்கள். மற்றபடி எவனும் வெளிவந்து பாடுபட முன்வரவே இல்லை. நாங்கள்தான் பாடுபடுகின்றோம்.

(தொடரும்...)

- உண்மை இதழ், 16-31.8.18

வெள்ளி, 12 அக்டோபர், 2018

தாய்மொழியிடத்து அன்பில்லாதவர்க்கு தாய்நாட்டின் மீதும் பற்று இருக்காது!

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை ( 21 )

தாய்மொழியிடத்து அன்பில்லாதவர்க்கு தாய்நாட்டின் மீதும் பற்று இருக்காது!
தாய்மொழியிடத்து அன்பில்லாத வர்களுக்குத் தாய்நாட்டின் மீதும் அன்பிராது. எனவே, ஒவ்வொரு தமிழ் மாணவனும் தமிழ் கற்க வேண்டும்.

ஜாதிபேதம் தமிழரிடம் இல்லை. எகிப்து, கிரேக்கம், ரோம் முதலிய நாடுகளோடு அன்றைக்கே வணிகத் தொடர்பு கொண்டவர்கள் தமிழர்கள்.

தமிழ்ப் பெண்களும் கல்வியில் புலமை பெற்று விளங்கினர்.

தமிழர்கள் அஞ்சாது வீரப்போர் புரியும் ஆற்றல் உள்ளவர்கள்.

நம் தாய்நாட்டுத் தமிழர்கள் ஒவ்வொருவரும் தாய்மொழியாம் தமிழைக் கட்டாயம் கற்று சிறப்புப் புலமை அடைய வேண்டும். இதனால் தமிழ் வளர்ச்சி அடையும், தாய் நாடான தமிழ்நாடு சிறப்புற்றோங்கும்.

(‘குடிஅரசு’ - 18.12.1943)


என்று தமிழ் தமிழர் மேன்மையை எடுத்தியம்பும் கட்டுரையைக் ‘குடிஅரசு’ இதழில் வெளியிட்ட பெரியாரா தமிழுக்கும், தமிழர்க்கும் எதிரானவர்? தமிழர்கள் சிந்திக்க வேண்டும்.

இவை மட்டுமல்ல, தமிழுணர்ச்சியைத் தமிழைப் பரப்ப வழிகளையெல்லாம் ‘குடிஅரசில்’ வெளியிட்டார்.

1.            தமிழர் தமிழ்ப் பெயர் இட வேண்டும்.

2.            தமிழ்நாட்டுப் பிரிவு, ஊர், தெரு, வீடு பெயர்கள் தமிழில் இருக்க வேண்டும்.

3.            வீட்டிலும் கடைத்தெருவிலும், அலுவலகங்களிலும், வழிப் போக்கிலும் ஆங்கிலச் சொல்லும், சமஸ்கிருதமும் தமிழில் கலப்பதைத் தவிர்க்க வேண்டும்.

4.            தமிழில் இல்லாதவற்றிற்கு ஆங்கிலச் சொல்லைக் கலக்கலாம்.

5.            தமிழில் இல்லாதவற்றிற்குப் புதிய சொல் உருவாக்க வேண்டும். அறிஞர்கள் உருவாக்கும் புதுச் சொல்லைப் பொது மக்கள் பயன்படுத்த வேண்டும்.

6.            கோயில்களிலும், விழாக்களிலும் தமிழே ஒலிக்க வேண்டும்.

7.            தமிழைப் பிழைபட வழங்குபவரைத் திருத்த வேண்டும்.

என்று சென்னை தமிழறிஞர் கழகத்தின் கோரிக்கைகளை 04.12.1943 ‘குடிஅரசு’ ஏட்டில் பெரியார் வெளியிட்டு தமிழைத் தூக்கி நிறுத்த முயன்றார்.

சென்னை சாந்தோம் சாலையில் அமைந்த முத்தமிழ் நிலையம் அழைப்பை ஏற்றுச் சென்று பெரியார் ஆற்றிய உரையில்,

“நீங்கள் ஆரம்பித்திருக்கும் இந்த அமைப்பிற்கு தமிழனிடத்தில் உண்மைப் பற்றும், தமிழும் தமிழரும் மேன்மை அடைய வேண்டும் என்ற உண்மை கவலையும் உள்ள ஒவ்வொரு சுத்தமான தமிழ் மகனும் ஆதரிக்கக் கடமைப்பட்டவர் ஆவார்கள்.

உங்கள் கழகம் வெற்றியடைய தளராத முயற்சி, ஒற்றுமை, கட்டுப்பாடு என்பவைகளோடு, ஒழுக்கம், நாணயம் என்பவைகளும் தக்கபடி கவனித்துப் பின்பற்ற வேண்டியதாகும். இம்மாதிரி பணிகளுக்கு என்னாலான உதவியைச் செய்ய எப்போதும் காத்திருக்கிறேன்.

தமிழ்நாட்டு இளைஞர்களும், நாட்டுப்பற்று, மொழிப்பற்று, தன்மானப் பற்று உண்மையாய்க் கொண்ட செல்வவான்களும் உங்களுக்கு உதவ வேண்டியது அவர்களது கடமையாகும்’’ என்று பேசினார் பெரியார்.

                                    (‘குடிஅரசு’ - 08.01.1944)


மேலும், தமிழன் தலைநிமிர்ந்து தன்மானத்தோடும், கல்வியும், அறிவும், உயர்வும் பெற்று வாழ வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் தட்டியெழுப்பிக் கொண்டேயிருந்தார்.

“ஏ தமிழா! உன்னுடைய நாட்டில் நீ தாசி மகனா? உனது செல்வத்தாலும், உழைப்பாலும் கட்டப்பட்ட பொது இடங்களில் உனக்கு உரிமை இல்லையா? உனது நாட்டில் உன்னை நம்பி வைத்திருக்கும் உணவுச் சாலையில் நீ தீண்டப்படாதவன் என்று உனக்கொரு தனியிடம் ஒதுக்கி வைப்பதா?’’ என்று அடிக்கடி உணர்வூட்டினார்.

                                    (‘குடிஅரசு’ - 04.12.1943)

“தமிழ்நாட்டில் தமிழ்ப் பாட்டுக்கள் பாடப்பட வேண்டும்; தமிழில் இசை இருக்க வேண்டும் என்று கூறுபவர்களை முட்டாள்கள் எனக் கூறுவோருக்குத் தமிழ்நாடு இடங் கொடுத்துக் கொண்டிருக்கிறது. தமிழர்களிடையில் தமிழ்நாட்டில் தமிழ் இசைக்கு எதிராக இருப்பவர்கள், எதிராக வேலை செய்பவர்கள், தமிழில் பாட மறுப்பவர்கள், தமிழர்களின் இக்கோரிக்கையை ஏளனம் செய்பவர்கள் யார்? ஆரியர்கள்தானே. இவர்களைத் தவிர, இத்துணிவுடன் தமிழர்களின் உப்பைத் தின்றுவிட்டு, தமிழ்நாட்டில் வாழ இடம் பெற்று, தமிழர்களின் உழைப்பால் உடலை வளர்த்துக் கொண்டு, தமிழர்களையும் அடிமைப்படுத்தி, தாழ்ந்தவர்களாக்கி, தமிழ் கலைகளுக்கு ஆரிய மேற்பூச்சிட்டு, தமிழோடு வடமொழியைக் கலந்து கெடுத்து, தமிழர்களின் வாழ்வைச் சீர்குலைத்து, தமிழ்நாட்டைத் தங்களுடைய அடிமை நாடாக ஆக்கி வைத்துக் கொள்வதற்கு (பன்னூற்றாண்டு காலமாக) பெரும் துணிவு ஆரியர்களைத் தவிர்த்து வேறு யாருக்கு இருக்க முடியும்?

இந்த ஆரிய வர்க்கத்தார் தமிழரிடையே தங்கள் சதிச் செயல்களை நிறைவேற்றி, தமிழர்களையும் தமிழ்நாட்டையும் அடிமைப் படுகுழியில் ஆழ்த்திக் கொண்டு வருவதற்கு, இவ்வளவு துணிவாக அவர்கள் செயல்படுவதற்குத் தமிழர்களின் தைரியம் இன்மையே காரணம். ஓரிரு எதிர்ப்புகள் இருப்பினும் அது போதிய அளவு இல்லை. படித்த தமிழர்கள்கூட ஆரியத்திற்கு அடிவருடிகளாகவே இருந்து வருகின்றனர்; தமிழர்க்குத் துரோகமும் செய்கின்றனர். ஒரு சிலர் விலாங்குமீன்போல் இரு பக்கமும் நடிக்கின்றனர். தங்கள் தாய்நாட்டிற்கும், தாய்மொழிக்கும் எதிராக உள்ளவர்கள் எவராயினும் அவர்களை வீழ்த்த, விரட்டியடிக்க முன்வர வேண்டும். எவர் பாராட்டுக்கும், புகழ் மொழிக்கும் இச்சை வைக்காமல் உழைத்தால்தான் இதைச் சாதிக்க முடியும்.

1.            தமிழ்ப் பாட்டுக்கள் முழுக்க முழுக்க தமிழ் மொழியில் இருக்க வேண்டும். 100க்கு 99 வடமொழி வார்த்தைகள் கலந்ததாக இருக்கக் கூடாது.

2.            புராண மூடநம்பிக்கைகளைக் கொண்ட பாடல்களாக இருக்கக் கூடாது.

3.            நல்ல தமிழில், இயற்கை எழில்களையும், தமிழரின் வீரத்தையும், அன்பையும், சமத்துவத்தையும், மானத்தையும், நேர்மை, நீதி நெறிகளையும், தமிழ்நாட்டுப் பற்றையும், மொழிப் பற்றையும், ஒற்றுமையையும், வரலாற்று அறிவையும் உள்ளடக்கி இருக்க வேண்டும்.

4.            வாழ்வியல் கேடுகளை அகற்றி, அறிவூட்டக் கூடியதாக இருக்க வேண்டும்.

இவற்றைச் செய்ய தமிழர்கள் துணிவு கொள்ளாதவரை, தமிழ்நாட்டுச் செல்வர்கள் இதற்குத் தொண்டாற்ற முன்வராத வரையில் நம் முயற்சி வெற்றி பெறாது.

தமிழர்கள் இனியேனும் உணர்வு பெற்று, உற்சாகமடைந்து, துணிவு கொண்டு, தங்கள் மொழியையும், நாட்டையும் நயவஞ்சகர்களிடமிருந்து காக்க வேண்டும். தமிழ் இசையின் பெயராலும், பிற வகையிலும், தமிழர்களையும் தமிழ் மொழியையும் குலைப்பதற்குச் செய்யப்படும் முயற்சிகளை வேருடன் களைந்து, தமிழ் உயர்வு பெறும் வகையில் வழிகாண வேண்டும். முன் வாருங்கள் தமிழர்களே! அதற்குத் தருணம் இதுதான்.’’

(25.12.1943 - ‘குடிஅரசு’ - தலையங்கம்)

(தொடரும்...)

- உண்மை இதழ், 1-15.10.18

வியாழன், 11 அக்டோபர், 2018

நெறி எனக் கேட்டால் குறள் நெறி என்பீர்!

நேயன்

 


“விஞ்ஞானம்,  அறிவு,  தன்மான உணர்ச்சி இவையின்றேல் பட்டம் பல பெற்றாலும், பணம் பல கோடி சேர்த்தாலும் பயன் இல்லை.’’

ஆகவே,  நீங்கள் அறிவுள்ளவர்களாக வாழ இஷ்டப்பட்டால் மூட நம்பிக்கைகள் நிறைந்த புராண காரியங்களைக் கை விடுங்கள். வகுப்புள்ள மதத்தை விட்டு வெளியேறுங்கள். புராணக் கதைகளைக் கேட்பதை விட்டு ஒதுங்கி நில்லுங்கள். புராணக் காட்சிகளைக் காண்பதில் வெறுப்புக் கொள்ளுங்கள்.

இராமாயணப் பிரசங்கம் என்றால், பெரிய புராணப் பிரச்சாரம் என்றால், புரிந்தாலும், புரியா விட்டாலும் தலைவணங்கி கேட்டுக் கொண்டிருப்பது என்கிற தலைமுறை தத்துவத்தனமான, மானமற்ற முட்டாள் தனத்தை விட்டொழியுங்கள்.

அறிவோடு வாழ வேண்டுமென்றால் பொருட்காட்சி சாலைக்குக் செல்லுங்கள். வெளியூர் சென்று ஆங்காங்குள்ள தொழிற் சாலைகளைக் காணுங்கள். மற்ற மதக்காரர்கள் நடப்பதை பாருங்கள். ஆங்காங்குள்ள மக்களோடு பழகி ஒற்றுமை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அவ்வப்போது கண்டு பிடிக்கப்பட்டு வரும் விஞ்ஞான உண்மைகளை அறிந்து கொள்வதில் ஆசை கொள்ளுங்கள். அரைத்த மாவையே, அரைத்துக் கொண்டிருப்பது எப்படி வீண் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கிறதோ, அதுபோல் கும்பிட்ட குழவிக்கல்லையே கும்பிட்டுக் கொண்டிருப்பதும் வீண் என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள். உங்கள் சூத்திரப்பட்டம் நீங்கவேண்டும் என்பதை முக்கியமாகக் கொள்ளுங்கள். நீங்கள் எவ்வளவுதான் உயர்ந்த பதவியிலிருந்தாலும், எவ்வளவுதான் பணம் படைத்திருந்தாலும் உங்கள் சூத்திரப்பட்டம்  நீங்காதவரை, நீங்களும், உங்கள் மனைவி, மக்களும் சமுதாயத்தில் உயர்வான யோக்கியதை அற்றவர்களாகவே, பார்ப்பனர்களுக்குத் தாழ்ந்தவர்களாகவே கருதப்படுவீர்கள் என்பதை உணர்ந்து இவ்விழிப்பட்டம் ஒழிய எங்களோடு சேர்ந்து உழையுங்கள். பத்திரிகை வாயிலாகவும், சித்திரங்களின் வாயிலாகவும், சட்ட வாயிலாகவும், படக் காட்சிகளின் வாயிலாகவும், நாடகங்கள் வாயிலாகவும், மேடை பிரசங்கள் வாயிலாகவும் கதாகாலட்சேபங்கள் வாயிலாகவும் உங்களை என்றென்றும் பார்ப்பனரின் அடிமை மக்களாக வைத்திருக்க இன்று பலமான சூழ்ச்சி செய்யப்பட்டு வருகிறது என்பதை உணர்ந்து, உறுதியோடு பணியாற்ற முன்வாருங்கள். முதலமைச்சர் ஓ.பி.இராமசாமி ரெட்டியார் போன்ற பிறவி அடிமைகள், மற்றும் வயதாகிவிட்டவர்கள் தெரிந்தே பார்ப்பனருக்கு அடிமையாகி பிழைக்கத் துணிந்த மானமற்ற ஈனர்கள், எக்கேடுகெடினும் இளைஞர்களாவது இம்முன் னேற்றத்துக்கு பாடுபட முன் வாருங்கள். உங்களுக்காகவே இல்லா விட்டாலும், உங்களின் பிற்கால சந்ததிகளின் முன்னேற்றத்திற்காகவேனும் நீங்கள் மூட நம்பிக்கையை ஒழிக்க முன்வாருங்கள். இழிஜாதிப் பட்டம் ஒழிக்க முன்வாருங்கள். கல்சாமிக்கு கைதூக்கி தண்டனிடாதீர்கள். நெற்றியில் மதக்குறி தீட்டிக் கொள்ளாதீர்கள்.

என்ன மதத்தினர் என்று கேட்டல், “வள்ளுவர் மதம்”

என்று சொல்லுங்கள் உங்கள் நெறியென்னவென்றால், “குறள் நெறி” என்று சொல்லுங்கள். குறள் நெறி என்று சொல்வீராயின், உங்கள் முன் எந்த பிற்போக்குவாதியும், எப்ப டிப்பட்ட சூழ்ச்சிக்காரனும் முன் நிற்கக் கூசி ஓடிவிடுவான். குறளை எவனாலும் மறுத்துக்கூற முடியாது.

அவ்வளவு இயற்கைக்கும், அறிவுக்கும் இயைந்ததாக இருக்கிறது அது. எனவே, குறளைப்படியுங்கள். அதன் வழிப்படி நடவுங்கள். அதையே எங்கும் பிரச்சாரம் செய்யுங்கள். உங்களுக்கு மனத்தூய்மை ஏற்படும். முன்னேற்ற அறிவில் ஆசையும், நம்பிக்கையும் ஏற்படும்.

ஆரியப் பித்தலாட்டத்திற்குச் சரியான மருந்து, சரியான மறுப்பு திருக்குறள்தான். இதை நான் மட்டுமே கூறவில்லை. திருவள்ளுவர் மாலையிலேயே பல புலவர்கள் கூறியுள்ளார்கள், ஆரியப்புரட்டை வெளியாக்கி, மடமையைப் போக்கும் நூலே திருக்குறள் என்று எனவே, குறள் வழிபட்டு நீங்கள் புத்தறிவு பெற்ற புது மனிதராகுங்கள். _- ‘விடுதலை’, 31.12.1948.

ஆனால், திருவள்ளுவர் குறளோ இவற்றை ஆரியத்தை, ஆரிய தர்மத்தை அப்படியே மறுக்க எழுதப்பட்ட நூலாகக் காணப்படுகிறது. கடவுள் வாழ்த்தில்கூட வள்ளுவர் ஒழுக்கத்தையும், அறிவையும், பற்றற்ற தன்மையையும்தான் கடவுளாகக் காட்டியுள்ளார். கடவுளை அறிஞன் என்கிறார். பிறப்பு - இறப்பு அறுத்தோன் என்கிறார். ஆசை அறுத்தோன் என்கிறார். அவர் ஒரு இடத்திலாவது கடவுளை அயோக்கியனாகவோ, ஒழுக்க ஈனம் உடையவனாகவோ, வஞ்சகனாகவோ, விபசாரியாகவோ சிருஷ்டித்திருக்கவில்லை.

திருவள்ளுவர் கூறியுள்ள கருத்துக்களில் ஒன்றேனும் ஒழுக்கக் குறைபாடுள்ளதாகக் காணப்படாது. அறிவுள்ளவர் யாரும் மறுக்க முடியாத,  வெறுக்க முடியாத கருத்துக்களை அமைத்துத்தான் அவர் குறளை இயற்றியுள்ளார்.

குறளை ஊன்றிப் படிப்பவர்கள் எல்லோரும் நிச்சயம் சுயமரியாதை உணர்ச்சி பெறுவார்கள். அரசியல் ஞானம், சமூக ஞானம், பொருளாதார ஞானம் ஆகிய சகலமும் அதில் அடங்கியிருக்கிறது.

குறளை முஸ்லிம்கள், கிறித்தவர்கள் உட்பட யாரும் ஆட்சேபிக்க மாட்டார்கள். மாமிசம் சாப்பிடுவது மறுக்கப்பட்டிருக்கிறது என்னலாம். காய்கனி, தானியம் இவை அபரிமிதமாகக் கிடைக்குமானால்,  மாமிசம் தின்ன வேண்டிய அவசியம்தான் என்ன இருக்கிறது? மகம்மது நபி அவர்களால் கூறப்பட்டுள்ள பல கருத்துகளைக் குறளில் அப்படியே காணலாம். முஸ்லிம்களுக்கு எதிராக அதில் ஒன்றுமே காண முடியாது. அது மனு தர்மத்துக்கு உண்மையான விரோதி நூல் என்று திடமாகவே சொல்லலாம். மனுதர்ம சூத்திரங்களுக்கு நேர்மாறான கருத்துக்களைக் கொண்ட குறள் அடிகளை ஏராளமாகத் திருக்குறளிலிருந்து எடுத்துக் காட்டலாம்.

மனித சமுதாயத்திற்கே நல்வழி காட்டி நன்னெறியூட்டி நற்பண்புகளையும், ஒழுக்கங்களையும் கற்பிக்கும் வகையில் எழுதப்பட்ட நூல்தான் திருக்குறள்.

எனவேதான், எல்லா மக்களும்,  எல்லா மதத்தவரும்  எங்கள் குறள், எங்கள் மதக்கருத்தை ஒப்புக் கொள்ளும் குறள் என்றெல்லாம் அதைப் போற்றி வருகிறார்கள். எனவேதான், அதன் ஆசிரியரைக்கூட சில மதத்தினர் தம்மவர்கள் என்று உரிமை பாராட்டிக் கொள்கிறார்கள். ஜைனர் தம்மவர் என்று கூறி அவரை மொட்டைத் தலையராகக் காட்டுகிறார்கள். சைவர்கள் அவரைத் தம்மவர் என்று கூறி ஜடா முடியுடன் விபூதிப் பட்டையுடன் காட்டுகிறார்கள். அவரோ எம்மதமும் இல்லாதவராகவே தோன்றுகிறார். ஒரு இடத்தில் `மயிரும் வைத்துக் கொள்ள வேண்டியதில்லை. மொட்டையும் அடித்துக் கொள்ள வேண்டியதில்லை. யோக்கியனாய் இருக்கவேண்டுமானால் என்று கூறியிருக்கிறார். அப்படியான பெரியாரை வைணவர்கள் தம்மவர்தான் என்று கூறிக் கொண்டு வடகலை நாமம் போட்டுக் காட்டுகிறார்கள். அவரை ஆழ்வாரில் ஒருவராகவும் ஆக்கி விடுகிறார்கள். அவருக்கு வடகலை நாமம் போட்டது மகாமகாக் கொலைபாதகத்தனமாகும்.

திருவள்ளுவர் தவிர்த்த வேறு யாரையும் மற்ற மதத்தவர்கள் இம்மாதிரி மதிப்பதில்லையே. இதிலிருந்தே தெரியவில்லையா, குறளில் காணப்படும் திராவிடப் பண்பு எத்தகையது என்று. இப்படிப்பட்ட திருக்குறளை விரும்புவதைவிட்டு நம் நாட்டவர்கள் இராமாயணத்தை வைத்துக்கொண்டு கூத்தடிக்கிறார்களே அது நியாயமா?

(தொடரும்)

- உண்மை இதழ், 16-30.6.18