பக்கங்கள்

புதன், 31 ஆகஸ்ட், 2016

‘மெட்ராஸ் ஹை கோர்ட்’ முதல் ‘தமிழ்நாடு உயர்நீதிமன்றம்’ வரை


1967ஆம் ஆண்டு ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்பதை ‘தமிழ்நாடு’ என்று அறிஞர் அண்ணா மாற்றினார் அப்போதிருந்தே மெட்ராஸ் ஹை கோர்ட் என்பது சென்னை உயர்நீதிமன்றம் என்று அழைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது, ஆனால் நூற்றாண்டு கால பாரம்பரியம் என்று கூறி மத்திய அரசும்,
நீதித்துறையைச் சார்ந்தவர்களும், தமிழார்வலர்களின் கோரிக்கையை புறக்கணித்து வந்தனர். இந்த நிலையில் ஜூலை அய்ந்தாம் தேதி கூடிய மத்திய அமைச்சரவை மெட்ராஸ் ஹை கோர்ட் என்பதை சென்னை உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. வர வேற்கத்தக்க மாற்றம் இது.  இதுகுறித்து திராவிடர் கழகம் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே வந்திருக்கிறது. குறிப்பாக 2010 மார்ச்சு 4ஆம் தேதி   தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை முக்கியமானது.
‘‘நமது தமிழ்நாட்டில் இயங்கிவரும் உயர்நீதிமன்றம் குறித்து இரண்டு பிரச் சினைகள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளன.
ஒன்று, சென்னை மாநிலம் (விணீபீக்ஷீணீs ஷிtணீtமீ) என்றிருந்த பெயர் அதிகார பூர்வமாக சட்ட ரீதியாக தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டும்கூட, மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என்று வழங்கப்படுவது மாற்றப்படவேண்டும். தமிழ்நாடு உயர்நீதி மன்றம் என்று மாற்றம் செய்யப்படவேண் டும் என்பதாகும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், உயர்நீதிமன்றத்தின் வாயிலில் உள்ள விளம்பரப் பலகையில் ஓவியர் ஒருவர் மூலம் மாற்றம் செய்யப் படவேண்டிய மிக எளிதான செயல் இது. ஆனால், இதுகூட இதுவரை செய்யப்பட வில்லை.
2008 ஆம் ஆண்டிலேயே இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் தமிழ் மன்றம் தங்களது கோரிக்கையை எழுத்து மூலமாகக் கொடுத்திருந்தும் இது வரை அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்பட வில்லை. ஆர்ப்பாட்டங்கள்  மதுரையிலும், சென்னையிலும் இதற்காக நடத்தப்பட்ட துண்டு. மற்ற மற்ற மாநிலங்களில் எல்லாம் அந்தந்த மாநிலங்களின் தாய்மொழியில் மாநிலப் பெயரை முன்னிறுத்தி விளம்பரம் செய்யும்பொழுது,
தமிழ்நாட்டில் மட்டும் பெயர்ப் பலகை தமிழில் எழுதப்பட அனுமதி மறுப்பதும், அதிகாரபூர்வமான தமிழ்நாடு மாநிலப் பெயரில் உயர்நீதி மன்றம் அழைக்கப்படத் தயக்கம் காட்டு வதும் ஏன் என்று விளங்கவில்லை. கடு மையான போராட்டத்தை கைக்கொண் டால்தான் காரியம் நடக்கும் என்று கருதுகிறார்கள் என்று நினைக்க இடம் இருக்கிறது. அதுபோலவே, உயர்நீதிமன் றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கவேண்டும் என்ற வேண்டு கோளாகும். இதுகுறித்தும் 2000ஆம் ஆண்டுமுதலே குரல் எழுப்பப்பட்டு வருகிறது.
திராவிடர் கழக வழக்குரைஞரணி கலந்துரையாடல் கூட்டம் சென்னை-பெரியார் திடலில் 30.7.2016அன்று நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள்
1) இரங்கல் தீர்மானம்: திருநெல்வேலி வழக்குரைஞர் சங்கத்தலைவர் முத்துராம லிங்கம் அவர்களின் மறைவையொட்டி ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்படுகிறது.
2) மெட்ராஸ் அய்க்கோர்ட் என்று அழைக்கப்படும் தமிழ்நாட்டின் உயர் நீதிமன்றம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக் கான உயர்நீதிமன்றமாகும். ஆங்கிலேயர் காலத்தில் பேரரசரின் ஆணையினால் உருவாக்கப்பட்டதால் இந்நீதிமன்றம் சார்ட்டட் அய்க்கோர்ட் என்ற சிறப்பு சலுகை பெற்றது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தென்னிந்தியாவில் அமைக்கப் பட்ட முதல் நீதிமன்றமானதால் அன்றைய தலைநகரமான மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என்ற பெயரில் நிறுவப்பட்டது.
இந்தியா விடுதலை பெற்று மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு மாநிலத் தின் உயர்நீதிமன்றமும் அம்மாநிலத்தின் பெயருடன் அழைக்கப்படுகிறது. எனவே சென்னை உயர்நீதிமன்றமும், அதன் மதுரை கிளையும் இனி தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என்றும் தமிழ்நாடு உயர்நீதி மன்ற மதுரை கிளை என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
3) சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆங்கிலத்தோடு தமிழ்மொழியும் வழக்காடு மொழியாக சட்டப்படியாக அறிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டு களாக வழக்குரைஞர்களாலும், பொதுமக் களாலும், தமிழக அரசாலும், தமிழ்மொழி பாதுகாப்பு அமைப்புகளாலும் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளாலும் வைக் கப்பட்ட கோரிக்கையானது  குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறாத நிலையில் இன்னமும் நிலுவையில் உள்ளது.
இதனால் ஆங்கிலம் தெரியாத வழக்காடிகளும், தாய் மொழியில் வாதிட விரும்பும் வழக்குரை ஞர்களும் பெரும் இன்னலுக்கு ஆளாகி றார்கள். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தமிழில் தன் வழக்கை வழக்காட வந்த ஒரு வழக்காடியை, தமிழில் வழக்கு நடத்த சட்டத்தில் இடமில்லை என்று கூறி இரக்க மற்ற முறையில் அவ்வழக்கைத் தள்ளுபடி செய்திருப்பது கண்டனத்திற்குரியது.
எனவே குடியரசுத் தலைவர் அலுவல கத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள தமிழ் வழக்காடு மொழி கோரிக்கைக்கு அவசர, அவசியம் கருதி, உடனடியாக ஒப்புதல் வழங்குமாறு குடியரசுத் தலைவரையும், அதற்கு விரைந்து ஆவன செய்யுமாறு மத்திய, மாநில அரசுகளையும் இக்கூட்டம் வலியுறுத்துகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பி னர்களையும் இப்பிரச்சினையில் ஆக்கபூர் வமாக செயல்படுமாறும் இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தமிழ்நாடு உயர்நீதிமன்றம் பெயர் மாற்ற தீர்மானம் - தமிழக சட்டசபையில் நிறைவேற்றம்
ஆகஸ்ட் 1 சென்னை உயர்நீதிமன்றம் என்பதை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என்று மாற்றக் கோரி, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த தனித் தீர்மானம், ஒருமனதாக நிறைவேற்றப்பட் டது. சட்டசபையில் இன்று முதல்வர் ஜெயலலிதா தனி தீர்மானம் கொண்டு வந்து பேசினார். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க் குடி! உலகில் எத்தனையோ மொழிகள் பேசப்படுகின்றன.
இருந்தாலும், பல்வேறு மொழிகளுக்கு இல்லாத சிறப்பு அன்னைத் தமிழ் மொழிக்கு உண்டு. வார்த்தைக்கு பஞ்சமில்லா மொழி, தமிழ் மொழி. தமிழ்ச் சொல்லுக்கு தனி ஓசையுண்டு! எண்ண மெல்லாம் ஈர்க்கும் திறனுண்டு! இன்னும் எத்தனையோ சிறப்புகள் உண்டு! இயல், இசை, நாடகம் என்று முத்தமிழாய்ப் பிரித்து மொழியில் தனித் தன்மையை பழந்தமிழ் பெரியோர்கள் உண்டாக்கினர். யாழின் இனிமையோ, குழலின் நாதமோ என்று வியந்திடும் வண்ணம் அழகிய சொற் களைக் கொண்ட மொழி தமிழ் மொழி. மெட்ராஸ் மாநகர் என்பது 1996-ஆம் ஆண்டைய சட்டத்தின் மூலம் சென்னை மாநகர் என பெயர் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. அதன்படி, சென்னை என்பது சென்னை மாநகரை மட்டுமே குறிக்கும்.
சென்னை மாநகரில் அமைந்துள்ள உயர் நீதிமன்றம் தமிழ்நாடு முழுமைக்குமான உயர்நீதிமன்றமாக விளங்குவதாலும்; 1956ஆம் ஆண்டு மொழிவாரி அடிப்படை யில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, பெயரிடப் பட்டதன் காரணமாக, அந்தந்த மாநிலங் களில் உள்ள உயர்நீதிமன்றங்கள் அந்தந்த மாநிலங்களின் பெயரிலேயே அழைக்கப் படுவதாலும், தற்போது மெட்ராஸ் உயர் நீதிமன்றம் என அழைக்கப்படும் உயர்நீதி மன்றத்தின் கிளை மதுரையில் செயல்பட்டு வருவதாலும்;
தமிழ்நாடு முழுமைக்குமான உயர்நீதிமன்றத்தை சென்னை உயர்நீதி மன்றம் என அழைக்கப்படுவது பொருத்த மற்றதாக இருக்கும் என்பதாலும், தற்போது மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என அழைக் கப்படும் உயர்நீதிமன்றம், 'தமிழ்நாடு உயர்நீதிமன்றம்'  என அழைக்கப்படுவதே சரியானது என்பதால், மக்களவையில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள சட்ட முன்வடிவில் சென்னை உயர்நீதி மன்றம் என்பதற்குப் பதிலாக தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்று மாற்றம் செய்யப்பட வேண்டுமென மத்திய அரசை இந்த மாமன்றம் கேட்டுக் கொள்கிறது.
இந்தத் தீர்மானத்தை இம்மாமன்றம் ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும் என்று அனைத்து மாண்புமிகு உறுப்பினர் களையும், பேரவைத் தலைவர் வாயிலாகக் கேட்டுக் கொண்டு அமைகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானத்தை வரவேற்று உறுப்பினர்கள் பேசினார்கள். இந்தத் தீர்மானத்தை தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஆதரித்தன. இதைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது. இதனிடையே சென்னை உயர்நீதிமன்றம் என்பதை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என்று மாற்றக் கோரி சட்ட சபையில் இயற்றிய சிறப்புத் தீர்மானத்தின் மீது நடவடிக்கை தேவை என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் தமிழக சட்டசபையில் இயற்றிய தீர்மானத்தின் நகலையும் இணைத்துள்ளார். இதன் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் ஜெயலலிதா, தனது கடிதத் தில் வலியுறுத்தியுள்ளார்.
-விடுதலை ஞா.ம.20.8.16

திங்கள், 15 ஆகஸ்ட், 2016

கலைகளில் ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பு!

- சு.அறிவுக்கரசு
கற்றுக்கொண்டு செய்யும் தொழில்கள் அத்தனையும் கலை என்பார்கள். தமிழ்நாட்டில் விளங்கிய தொழில்கள் அறுபத்து நான்கையும் ஆயகலைகள் அறுபத்து நான்கு என்று “சுக்ரநீதி’’ எனும் நூலில் எழுதிவைத்துக் கொண்டு, அவற்றைக் கற்பிக்க ஒரு கடவுள், அதுதான் சரஸ்வதி என்றும் ஏற்படுத்திவிட்டனர். மற்போரும் கலை, நெய்வதும் கலை, சிலை செய்வதும் கலை, ஓயியம் வரைவதும் கலை, செருப்பு தைத்தல், உடை வெளுத்தல், மயிர் மழித்துத் திருத்தல், பாடுதல், ஆடுதல் என அனைத்துமே கலைகள்தாம்! இதை அறியாது இசை, நடனம், இசைக் கருவிகளை இசைத்தல் போன்ற சிலவற்றை மட்டுமே கலைகள் எனக் கொண்டாடிவரும் அவலம் தற்போது!

“விண்பொர நிவந்த வேயா மாடத்து...’’ எனப் பெரும்பாணாற்றுப்படை கூறும் வானுயர் கட்டடங்களைக் கட்டுவதும் கலையே! நெசவாளர் நெய்வதும் கலை! செய்வதும் (துணி) கலை! “பாம்பு உரி அன்ன’’ பருத்தித் துணியும் “நூலாக் கலிங்கம்’’ எனப்படும் பட்டுத்துணி “கொட்டைக் கரைய பட்டு உடை’’ செய்தலும் கலையே! “சோறு அமைவு உற்ற நீர் உடைக் கலிங்கம்’’ என மதுரைக் காஞ்சி பேசும் உடை, கஞ்சி போட்டுக் காய்ந்த உடை என்பதாகும். இதனைச் செய்யும் _ உடை வெளுக்கும் _ தொழில் கலைகளிலே ஒன்று!
இவ்வாறெல்லாம் வகைப்படுத்திய தமிழர், தம் மொழியையும் வகைப்படுத்தி இயல், இசை, கூத்து என்றனர்.
பண்ணோடு இசைத்தது பாடல். இசைக் கருவிகளின் துணையோடு பாடுதலும் இசைத்தமிழ் வகையே! பாட்டு, பாடல் என்பவை பாடப்படுபவை. இனிய ஓசையுடன் இசைக்கப்படும் பண்ணோடு கூடிய பாடல் படிக்கப்படுவதல்ல. “பாட்டுப் படித்தேன்’’ எனும் திரைப்படப் பாடல் சரியல்ல! பண்பாடியோர் பாணர் எனப்பட்டனர். பாணர் வீட்டுப் பெண்டிர் பாடினிகள். இவர் தவிர, ஏர்க்களம் பாடுவோர், போர்க்களம் பாடுவோர், பரணி பாடுவோர் என்போரும் உண்டு. இவர்கள் பொருநர் எனப்பட்டனர். பொருநர் குடும்பப் பெண்கள் விறலியர் ஆவர். விறல் என்றால் வெற்றி, திறமை எனப் பொருள்.
கூத்தர் என்போர் இருவகை. கூத்து ஆடுபவர் கூத்தர். ஒரு வகையினர் ஏதேனும் ஒரு கதையை ஆடிக்காட்டுவர். மற்றொரு வகையினர் ஒரு பாடலைப் (பாடாமலே) உடல் அசைவுகளாலேயே உணர்த்துவர். முந்தைய வகைக் கூத்து நாடகம் எனப்படுகிறது. பிந்தைய வகையை நடனம் என்கின்றனர்.
“கூத்தரும், பாணரும், பொருநரும், விறலியும் ஆற்றிடைக் காட்சி உழறத் தோன்றிப் பெற்றப் பெருவளம்...’’ என்று தொல்காப்பியம் இவர்கள் பற்றிக் கூறும். (பொருள்_புறத்திணை 36) இசையையும் கூத்தையும் வாழ்க்கையாகக் கொண்ட தமிழர் பரிபாட்டு, கலிப்பாட்டு ஆகிய இருவகைப் பாடல்களால் பாடி, ஆடினர் என்பதையும் தொல்காப்பியம் (பொருள் _ அகத்திணை) 53ஆம் பாடல் தெரிவிக்கிறது. பரிபாடலில் இசைக்கூறான பண்ணும் மறுகூறான தாளம் எனும் துள்ளல் கலிப்பாவிலும் நிறைந்து வெளிப்படுகின்றன என்பர் ஆய்வாளர்கள்.
தாளம் ஏழு வகைகள், அய்ந்து இனங்கள், அய்ந்து நடைகள் என்று 175 பெருக்கங்கள் உள்ளன எனவும் மேலும் பின்னங்கள் உள்ளன என்பதும் தமிழ் இசைப் பேரறிஞர் தம் கூற்றாகும்.
நிலப்பகுதியை நான்காகப் பிரித்து, முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் எனப் பெயரிட்ட தமிழர், நிலத்துக்குரிய பண்களையும் வகைப்படுத்தினர். யாழின் பகுதி என்றனர். முல்லை யாழ், குறிஞ்சி யாழ், மருத யாழ், நெய்தல் யாழ் என்றனர். நிலவகைகளுக்குரிய கருப்பொருளைக் கூறும் தொல்காப்பியம் யாழையும் பறையையும் குறிப்பிடுகின்றது. கைகளால் தட்டுவதை பாணி என்றும் கால்களால் தட்டுவதை தாளம் (தாள் +அம்) என்றும் பாடினர்.
தமிழரின் இசை இன்னிசை எனப்பட்டது. “நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞான சம்பந்தன்’’ எனும் பாடல் வரியால் அறியலாம். ஞானசம்பந்தனும் கூட இன்னிசை என்றே ஏழு இடங்களில் பாடியுள்ளான். தனியாகப் பாடுவது இன்னிசை (மெலடி). கூட்டாகவோ பல்வேறு கருவிகளின் இசையுடனோ இசைந்து பாடுவது கூட்டிசை (ஹார்மனி). இவ்வகை இங்கில்லை. மேலை நாடுகளில்தான்.
ஆரியர்கள், “தமிழரிடத்தில் இருந்த பல அரிய விஷயங்களையும் மொழிபெயர்த்துத் தமிழர் அறியும் முன்னரே அவற்றைத் தாம் அறிந்தவர் போலவும் வடமொழியில் இருந்தே தமிழுக்கு அவை வந்தன போலவும் காட்டினர்’’ என்று தமிழ் மொழியின் வரலாறு எழுதிய பரிதிமால் கலைஞர் எனும் சூரிய நாராயண சாஸ்திரியார் எழுதினார். இன்றைய இந்திய இசை முறைகள் யாவும் ஆரியர்களின் சாம வேதத்திலிருந்து தோன்றியவை எனக் கதை கட்டினர். நம் தமிழ் இசையின் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் எனும் ஏழு இசை வகைகளுக்கு மாற்றாக ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என ஸப்த ஸ்வரங்கள் என்றாக்கினர். இதனை நாராயண சாஸ்திரி விளக்கினார்.
தொல்காப்பிய காலத்திலிருந்தே வடநாட்டுக்கும் சென்று இசைக்கலையைப் பரப்பிய பாணர்களின் இசையை, “மார்க்க இசை’’ என மாற்றினர். பாணரை ‘கந்தர்வர்’ எனக் கூறி ஏமாற்றினர். பாணர் யாழ் இசைத்துப் பாடியதால் யாழோர் எனப் பெயர் பெற்றதை மறைத்துவிட்டனர். யாழை மறைத்து வீணை என்றாக்கினர். செங்கோட்டி யாழ்தான் வீணை எனப்பட்டது என்று நிறுவினார் க.வெள்ளைவாரணர்.
தக்கணப் பீடபூமி எனப்படும் பகுதியில் உள்ள தவ்லதாபாத் எனும் ஊரைச் சேர்ந்த சாரங்கதேவர் என்பார் 13ஆம் நூற்றாண்டில் எழுதிய சங்கீத ரத்னாகரம் எனும் நூலை அடிப்படையாகக் கொண்டு கர்நாடக சங்கீதம் எனும் இசையை உண்டாக்கினர். தமிழ்ப் பண்களை ஆரியர்கள் மேளகர்த்தாக்கள் என்றாக்கினர் என்கின்றார் ஆய்வாளர் தி.இலக்குமணப் பிள்ளை. ஆளத்தியை ஆலாபனையாகவும் பண், சம்பூர்ணம் எனவும் பண்ணியல் திறம் ஷாடவம் எனவும் திறம் அவ்டவம் எனவும் திறத்திறம் சதுர்த்தம் என்றும் சமஸ்கிருதத்தில் மாற்றப் பட்டுள்ளதை ரசிகமணி டி.கே.சி. அவர்களின் கருத்து உறுதி செய்கிறது.
தமிழ் இசையில் தொடக்க இசைகள் 11 ஆயிரத்து 900 இருந்தன என்பதை அகத்தியம், தொல்காப்பியம் போன்றவற்றிலிருந்து அறியலாம். இவ்வகையில் ஆழ்ந்த அறிவும் ஆராய்ச்சியும் இல்லாதவர்கள் அவசர கோலத்தில் எதையோ எழுதி வைத்துவிட்டு ஆரோகணம் என்று சரிகமபதநிச என்கிறார்கள். அதையே திருப்பிச் சொல்லி அவரோகணம் என்று கூறிவிடுகிறார்கள். சாரங்கதேவர் எழுதிய தேவாரவர்த்தனீ எனும் நூலில்கூடத் தேவாரத்தில் காணப்படும் பண்களைக் குறித்துள்ளார். 12 சுரங்களுக்கு 22 சுருதிகள் (அலகு) என்று தவறாகக் குறிப்பிட்டுள்ளார் என்று தமிழ் இசைவாணி டாக்டர் சேலம் ஜெயலட்சுமி குறிப்பிடுவார். இந்த அம்மையார் தமிழச்சி என்பதால் எவ்வாறெல்லாம் புறக்கணிப்பு செய்யப்பட்டார் என்பது வரலாறாகியுள்ளது.
பழமையானவையாகவும் சிறப்பானவையாகவும் அமைந்தவற்றைத் தமக்குச் சொந்தம் எனக் காட்டிடும் சுயநலப் பேராசையால் மொழிமாற்றம் செய்து சமஸ்கிருதப் பெயர்களைச் சூட்டியதால் பல அருமையான தமிழ் வழக்குகள் சுவடின்றி அழிக்கப்பட்டன.
இதைத்தான் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்,  “எந்நூலும் தமிழ் நூலே எனல் மறைக்க இழிநூலால் கலப்படத்தைச் செய்தோம்’’ எனப் பார்ப்பனர் இறுமாப்புடன் கூறினர் என்று கண்ணகி புரட்சிக் காப்பியத்தில் பாடி வைத்துள்ளார்.
நாயக்கர்கால ஆட்சியில் 13, 14ஆம் நூற்றாண்டுகளில் தெலுகு மொழிக்காரர்களின் ஆதிக்கமும் ஆட்சியும் நடைபெற்றபோது இத்தகையத் தில்லுமுல்லுகள் அரங்கேறின. தமிழ் ஆண்டுக் கணக்குமுறை முதற்கொண்டு மாற்றப்பட்டு 60 ஆண்டுச் சுழற்சி ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. (சின்னமனூர் செப்பேடு காண்க).
தமிழிசைப் பாடல்களுக்கு அண்மைக்கால முன்னோடிகளான தமிழிசை மூவர்களான முத்துத் தாண்டவர், மாரிமுத்தாப் பிள்ளை, அருணாசலக் கவிராயர் ஆகியோர்க்குப் பதில் தெலுகு மொழிப் பாடல்களை எழுதிய தியாகையர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி என்போர் முன்னிறுத்தப்பட்டமை, தமிழர் இசை மேன்மையை ஒதுக்கி, ஆரியரைப் புகுத்தி முன்னிறுத்திய மோசடியாகும். பொருள் விளங்காத மொழியில் மூக்கடைத்துப் பாடும் சங்கீதம், கச்சேரிகள் திருவையாறிலும், சென்னையில் திருவையாறு என்றும் மார்கழிக் குளிரில் பாடப்படுகின்றன. குளிர்காலத்தில் வெள்ளைத்துரைமார்களைக் குஷிப்படுத்தக் கையாண்ட முறை இன்னும் நீடிக்கிறது. கடல் கடக்கக் கூடாது என்று சாஸ்திரத்தில் எழுதிவைத்துக் கொண்டு, அதை முதலில் மீறிய பார்ப்பனர்கள்.
சிலப்பதிகாரம் எனும் காப்பியம் தமிழின் அய்ம்பெரும் காப்பியங்களில் ஒன்று. இயற்றப்பட்ட காலம் கி.பி.2ஆம் நூற்றாண்டு. நடனமாடும் முறை, நடன வகைகள் போன்ற பலவற்றைச் சிறப்புடன் பாடிய நூல். இருவகைக் கூத்துகள் எனப்படும் அகக்கூத்து, புறக்கூத்து. இதில் விளக்கப்பெறும் ஆடல்கள் பதினோரு வகைப்படுமாம். அவை 1.(மாயவன்) ஆட்டம், 2.(சிவனின்) கொடு கொட்டி, 3.(கந்த
னின்) குடை ஆட்டம், 4.(கண்ணனின்) குடக்கூத்து, 5.(சிவனின்) பாண்டரங்கம், 6.(திருமாலின்) மல்லாடல், 7.(முருகனின்) துடியாடல், 8.(இந்திராணியின்) கடையக்கூத்து, 9.(மன்மதனின்) பேடு ஆட்டம், 10.(துர்க்கையின்) மரக்கால் கூத்து, 11.பாவைக்கூத்து என்பன. கொட்டு, அசை, தூக்கு, அளவு எனத் தாளம் அல்லது பாணி நான்கு வகை. பிண்டி என்பது ஒற்றைக்கை அவிநயம். பிணையல் என்பது இருகை இணைதல். எழில் விளங்கக் காட்டுதல் எழிற்கை. தொழில் விளங்கக் காட்டுதல் தொழிற்கை. ஒற்றைக் கை கூடை எனப்படும். இரட்டைக்கை வாரம் எனப்படும். மகளிர் கைகளைப் பிணைத்து ஆடும் ஆட்டம் குரவைக் கூத்து. நானிலங்களில் முல்லை நிலமக்கள் ஆடுவது ஆய்ச்சியர் குரவை. குறிஞ்சி நிலமக்கள் ஆடுவது குன்றக் குரவை.
மருதநிலத்தார் ஆடுவது ஊர்சூழ்வரி எனப்படும். நெய்தல் நிலத்தார் ஆடுவது கானல்வரியாம். திரிந்த நிலமான பாலை சார்ந்தோர் ஆடுவது வேட்டுவ வரி எனவும் கூறப்பட்டுள்ளது. வரி என்றால் வரிக்கூத்து. இவற்றின் வகை எட்டு என்கிறது காப்பியம். கண்கூடுவரி, கானல்வரி, உள்வரி, புறவரி, கிளர்வரி, தேர்ச்சிவரி, காட்சிவரி, எடுத்துக்கோள் வரி ஆகியன இவற்றையெல்லாம் நன்கு பயின்று, பின் பயிற்றுவிக்கும் ஆசான்தான் நடனக்கலை ஆசிரியன்.
நடனத்திற்குரிய யாழிசையும் குழலிசையும் பாடலிசையையும் மத்தள ஓசையையும் ஓங்கி இணையப் புரிபவர் நடன ஆசிரியரே! குரல், இளி என்கிற இருவகைச் சுரத்தில் இசைக்கவல்லவராகப் புல்லாங்குழல் இசைப்பவர் இருக்க வேண்டும். சுட்டு விரல் முதலாக விட்டுப் பிடிப்பதை வர்த்தனை எனவும் சிறுவிரல் முதலாக விட்டுப் பிடிப்பதை அவரோகணம் எனவும் காப்பியம் கூறுகிறது. யாழ் மீது இளி எனும் நரம்பினை வைத்து இசைத்தல் வண்ணப்பட்டை என்கிறது. யாழ் வாசித்தலுக்கான இலக்கணமாக பதினான்கு கோவை குறிப்பிடப்படுகிறது. செம்பாலை, படுமலைப் பாலை, செவ்வழிப்பாலை, அரும்பாலை, கோடிப்பாலை, விளரிப்பாலை, மேல் செம்பாலை ஆகியவற்றின்படி ஏழு சுரங்களைக் கலந்து மேவி மெலிவு நான்கு, சமம் ஏழு, வலிவு மூன்று என்பனவே கோவையாகும் என்கிறது சிலப்பதிகாரம். நடனத்திற்கான இசை எவ்வாறிருக்க வேண்டும் என விரித்துரைத்துள்ளது.
பின்னர் நடன அரங்கின் அமைப்பு கூறப்படுகிறது. ஏழுகோல் அகலம், எட்டுக்கோல் நீளம், ஒரு கோல் உயரம் உள்ளது நடன அரங்கு, கோல் என்பது 24 பெருவிரல் கொண்ட அளவு. அரங்கின் நான்கு பக்கமும் தூண்கள், மேல்வரை நான்கு கோல் உயரத்தில் எனவும், உள்ளே வரவும் வெளியே போகவும் தனித்தனி வாயில்கள் கொண்டும் இருக்க வேண்டும் என்கிறது காப்பியம்.
மாதவி அந்தரக்கொட்டு, முகம் எனும் வகைக் கூத்தாடினாள்; உக்கிரம், துருவை, ஆபோகம், பிரகலை எனும் நான்கு உறுப்புகளில் மூன்றினை எடுத்து ஏகதாளத்தில் முடித்து, அழகிய மண்டில நிலையால் கை குவித்து அவிநயம் பிடித்து ஆடினாள். பஞ்சதானப் பொலிவின்படி ஆடினாள். இயல்தமிழின் அய்ந்து பாகுபாடுகளையும் நால்வகை பண்களையும் பதினோரு வகைக் கூத்துகளையும் ஆடினாள் என்கிறது சிலப்பதிகாரம்! “கடல் ஆடுகாதை’’யில் இப்பதினோரு வகைக் கூத்துகளையும் பட்டியல் இடுகிறது.
“கானல்வரி’’யில் இசைக்கலைபற்றி விளக்கப்படுகிறது. நுட்பங்கள் எட்டு வகையாம். பண்ணல், பரிவட்டணை, ஆராய்தல், தைவரல், செலவு, விளையாட்டு, கையூழ், குறும்போக்கு ஆகியன.
இசையும் எட்டு வகையாம். வார்தல், வடித்தல், உந்தல், உறழ்தல், உருட்டல், தெருட்டல், அள்ளல், பட்டடை என்பனவாம். பதினான்கு கோவை உடைய சகோட யாழில், இசைக்கும்போது இசை கெடுக்கும் பகை நரம்புகள் புகும் என எச்சரித்து அவற்றை செம்பகை, ஆர்ப்பு, அதிர்வு, கூடம் எனவும் விவரிக்கிறது. “வேனிற்காதை’’யில் மாதவியின் இசைச் சிறப்பைப் பாடும்போது, அகநிலை மருதம், புறநிலை மருதம், அருகியல் மருதம், பெருகியல் மருதம் ஆகிய நால்வகைப் பண்களைப் பற்றியும் ஏற்றம், இறக்கம், விளம்பல் எனும் மூன்று நிலைகளைப் பற்றியும் குறிப்பிடுகிறது.
“புதஞ்சேரி இறுத்த காதை’’யில் யாழின் வகைகள் கூறப்படுகின்றன. 21 நரம்புடையது பேரியாழ், 19 நரம்புடையது மகரயாழ், 14 நரம்புடையது சகோடயாழ், 7 நரம்புடையது செங்கோட்டு யாழ் எனப்படுமாம். இசைத்தலையே தொழிலாகக் கொண்ட பாணர்கள் பயன்படுத்திப் பண்பாடியது செங்கோட்டு யாழ்!
“.... பாடலும் எழாலும் பண்ணும் பரணியும் அரங்கு விலக்கே ஆடல் என்று அனைத்தும் ஒருங்குடன் தழீஇ உடம்படக் கிடந்த வரியும் குரவையும் சேதமும் என்ற இவை தெரிவுறு வகையான் செந்தமிழ் இயற்கையில் ஆடிநல் நிழலின் நீடு இருங்குன்றம் காட்டுவார் போல்...’’ எழுதப் பெற்ற சிலப்பதிகாரக் காப்பியம் இசையும் நடனமும், பாடலும் ஆடலும் தமிழர்க்கே உரியன என்பதைச் சிறப்பித்துக் கூறியிருப்பினும் ஆரியர் தமதென்று தமிழ் மன்னர்கள் துணைகொண்டு கூறினர்.
கூடலூர் ஞானியார் அடிகள் கூறியவாறு “பண்டைத் தமிழர்களிடமிருந்துதான் இசையின் நுணுக்கங்களும் பாகுபாடுகளும் தோன்றி வளர்ந்து ஆரியர் கைப்படலாயின...’’ என்பதையும் நோக்க வேண்டும். சிலப்பதிகாரம் கி.பி.இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. கி.பி.அய்ந்தாம் நூற்றாண்டைச் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட “நாட்டிய சாஸ்திரம்’’ எனும் நூலில்தான் சங்கீதம், நாடகம் பற்றிய குறிப்புகள் உள்ளன. இதனை தஞ்சை இசைப் பேரறிஞர் பொன்னையா (பிள்ளை) அவர்கள் ஒப்பிட்டுக் காட்டியுள்ளார். “இந்திய இசையின் கதை’’யை எழுதிய அறிஞர் கோசுவாழி, “ஆரிய இசைத் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி மாற்றங்கள் அவர்களுடைய சொந்தக் கண்டுபிடிப்புகள் அல்ல; பலரும் இதில் பங்களிப்பு செய்துள்ளனர். அடுத்தவர் கண்டு பிடிப்புகளைக் கற்பதும் கடைப்பிடிப்பதும் ஆரியர் பழக்கம்தான்’’ என்கிறார். கற்றது சரி, கடைப்பிடிப்பதும் சரியே! தன்னைப் பார்த்துதான் தமிழர் பின்பற்றினர் என்பது சரியல்லவே! மோசடியாகுமே!
எதையெடுத்தாலும் ரிஷி சொன்னது, முனிவர் கூறியது என்று சொந்தம் கொண்டாடுவது பார்ப்பனர் பழக்கம்! சிந்து வெளிப்பகுதியில் கண்டெடுத்த உருவங்களில் ஒன்று, மூச்சுப் பயிற்சி செய்யும் உருவம். இதனை யோகா எனப் பெயர் சூட்டி, இதனைச் சொன்னவர் பதஞ்சலி எனும் ரிஷி எனக் கூறிப் பதஞ்சலி யோகா என்றாக்கிவிட்டனர். அதைப்போலவே கிடைத்த மற்றொரு உருவம் நடன மங்கை. கோயில்களில் நடனமாடும் மங்கையர்போல இது உள்ளது என்கிறது புதிய என்சைக்-ளோபீடியா பிரிட்டானிகா தொகுப்பு 17. பார்ப்பனர் இதனைப் பரதமுனிவரின் பரதநாட்டியமாடும் மாது எனச் சொந்தம் கொண்டாடிப் பார்த்தனர். பரத முனிவரால் கற்பிக்கப்பட்டது பரத நாட்டியம் என்றார் பத்மாசுப்ரமணியம் என்கிற பார்ப்பனப் பெண். பரதநாட்டியம் என்று சொல்லிக் கொடுத்தார் ருக்மணி அருண்டேல் எனும் பார்ப்பன நடனமாது. இதனைச் சொல்லிக்கொடுத்து உலகப் புகழ் அடைந்தார் பாலசரஸ்வதி! தஞ்சை நால்வர் மறைக்கப்பட்டனர். தமிழரின் ஆடற்கலைபற்றி மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்காப்பியம் கூறுகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட குறளில் கூத்து பற்றிய செய்திகள் உள்ளன. பார்ப்பனரின் நாட்டிய சாஸ்திரத்தின் வயது 1500 ஆண்டுகள்தானே!
நன்செய் நிலத்தையும் வேளாளர், வணிகர், மன்னர் முதலியோரை ஏற்றிப் போற்றிப் பாடும் ஏர்க்களப் பாட்டு பார்ப்பனரிடத்தில் உண்டா? உழுவதையே பாபத் தொழில் என்று கூறி, யாரோ விளைவித்ததை ஊரை ஏமாற்றி உண்டு ஏப்பமிடும் பார்ப்பனர் எப்படி அறிவர்?
போர்க்களத்தைப் போற்றிப் பாடுதல் போர்க்களம் பாடுதல் எனும் வகை. இவ்வகை கர்னாடக சங்கீதத்தில் உண்டா? போரில் வெற்றி பெற யாகம் நடத்தித் தம் வருமானத்தைப் பெருக்கிக் கொள்வர், அவ்வளவே!
அதைப்போல, போரில் வெற்றிபெற்ற மன்னரைப் புகழ்ந்து பாடும் பரணி பாடுதல் உண்டா? தமிழிசையிலே இருப்பதைப் போலவோ, மேலைநாட்டு இசையில் இருப்பதைப் போலவோ சாந்தம், கோபம், காதல், சோகம் எனப் பலப்பல உள்ள உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் இசை வகைகள் கர்னாடக சங்கீதத்தில் இல்லை என்பதை காலஞ்சென்ற ஜெயகாந்தன் தனது “பாரிசுக்குப் போ’’ எனும் கதையில் பட்டவர்த்தனமாக எழுதிப் பார்ப்பனரின் கோபத்துக்கு ஆளானாரே! ஆக, புனைகதை மாந்தர்களைப் பற்றிய புளுகுகளை விவரிக்கும் பாடல்களைக் கிழங்கள் கூடும் நாலுகால் மண்டபத்தில் பாடுவதும் பதினாறுகால் மண்டபத்தில் தையா, தக்கா என்று ஆடுவதும்தான் பார்ப்பனரின் சாஸ்திரீய சங்கீதமும் நிருத்ய சாஸ்திரமும்! மனிதகுலம் முழுமைக்கும், எல்லாப் பிரிவினர்க்கும், இன்பம் அளிக்கும் நோக்குடனும், பொழுதை மகிழ்ச்சியுடன் கழிக்கும் நோக்குடனும் களிப்படையச் செய்திடவும் கையாண்டவை இசை, நாட்டிய வகைகள் தமிழர்களின் சிறப்புக்குரிய கண்டுபிடிப்பே!
ஒருவனை விரும்பும் ஒருத்தி. அவளை மணக்கும் நோக்கில் பரிசப் பணத்துடன் வருகிறான் வேறொருவன். வந்தவனை மணக்கத் தாம் தயாரில்லை எனத் தெரிவிக்கும் அவள், “மன்னர் குழீஇய விழவினாலும் / மகளிர் தழீஇய துணங்கையானும் யாண்டும் காணேன்’’ எனக் கூறுவதாகக் குறுந்தொகை (பாடல் 31) கூறுகிறது. ஆண்களும் பெண்களும் கூடிக் கூத்தாடும் இடம் இருந்தை இதன்மூலம் அறியலாம். “யானும் ஓர் ஆடுகள மகளே / பீடுகெழ குரிசிலும் ஓர் ஆடுகள மகனே’’ என்றும் அப்பாடல் கூறுகிறது. இவர்கள் இருவரும் ஆடிப்பாடி மகிழும் இணைதான் என்பதையும் கூறி ஆடலும் பாடலும் தமிழர் வாழ்வில் ஓர் அங்கம் என்பதனைத் தெரிவிக்கிறது. ஆரிய வாழ்க்கை முறையில் இச்சீரிய முறை உண்டா? தூங்கும்போது தூக்கிச் செல்வதும், மயக்கம் கொடுத்து உறவு கொள்ளுதலும் தானே ஆரிய மணமுறைகளில் அசிங்கம் பிடித்தவை! பேசியோ, பழகியோ இணையும் முறை அவர்களுக்கு அன்னியம்தானே! பின் எப்படி ஆடலும் பாடலும் அவர்களின் வாழ்வில் இடம்பெறும்?
தொல்காப்பியப்படி, ஒவ்வொரு நிலத்துக்குமான தாளக் கருவியாகப் “பறை’’ வருகிறது.
தோல்கருவியான பறை புனிதமற்றதா-யிற்றே! இசைப்பவரும் புனிதமற்றவர்தானே! இவற்றுக்கு இடம் கர்நாடக சங்கீதத்தில் கிடையாதே! “எழுவகைக் கூத்தும் இழிகலத்தோரை ஆட வகுத்தனன்’’ எனறுதானே அகத்தியம் கூறுகிறது? அத்தகு குலத்தோர் ஆடலுக்கும் பாடலுக்கும் இவர்கள் ஏன் சொந்தம் கொண்டாடுகிறார்கள்? சொந்தம் கொண்டாடிடக் கூடாது என்பதற்காகவே தங்களது நூல்கள் முதல் நூல்கள் எனவும் தமிழர்தம் நூல்கள் வழி நூல்கள் எனவும் கரவாகக் கற்பித்து வைத்துவிட்டனர் எனவே, தமிழருடையவை எவை? ஆரியம் எப்படி அபகரித்தது? அவற்றை மீட்டு, ஆரிய மோசடியை வெளிப்படுத்தி, தமிழர் சிறப்பை மீண்டு காலத்திற்கேற்ப, தேவைக்கேற்ப செம்மை செய்து பயன்படுத்துவதே நமது சிறப்புகளை நிலைநிறத்துவதற்கான வழியாகும்.
-உண்மை,16-31,1.16

ஆட்சியில் ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பு!

- கோவி.லெனின்
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என சட்டம் இயற்றுகிறது அரசு. அர்ச்சகராக விரும்புவோருக்கு அதற்குரிய ஆகமப் பயிற்சியும் அளிக்கிறது. அதனை எதிர்த்து சிலர் வழக்கு தொடுக்கிறார்கள். ஆகமவிதிப்படிதான் அர்ச்சகர் நியமனம் செய்யப்படவேண்டும் எனத் தீர்ப்பளிக்கிறது உச்சநீதிமன்றம். ஆகம விதி என்பது அரசியல் சட்ட விதிகளைவிட வலிமை வாய்ந்ததா? இந்தியாவைப் பொறுத்தவரை அரசியல் சட்டம் என்பது வருணாசிரமம்-ஆகமம்-அய்தீகம் -மதப் பழக்கவழக்கம் இவற்றிற்கு கீழேதான்!  இந்த இந்தியாவுக்குள்தான்  தமிழகம் இன்று அடங்கியிருக்கிறது. தனக்கென்று தனித்துவமான  ஆட்சி முறையை ஒரு காலத்தில் கொண்டிருந்த தமிழகம், அதனை இழந்து ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகிகிவிட்டது.

ராகுல சாங்கிருத்தியாயன் தனது வால்காவிலிருந்து கங்கை வரை நூலில் திராவிடர் வாழ்வையும் ஆட்சி நிர்வாகத்தையும் பற்றி நிறையவே குறிப்பிட்டிருக்கிறார். ஆரியர்கள் வடக்கிலிருந்து இங்கு வந்து, திராவிட மன்னனை சந்தித்தபோது,  தனது அமைச்சரவையில் உள்ளவரிடம் மன்னன் ஏதோ எழுதிக் கொடுக்க, அவர்  அதை  எடுத்துச் சென்று திரும்பும்போது, ஆரியர் எதிர்பார்த்து வந்திருந்த பொருளைக்  கொண்டு வந்து கொடுத்ததையும் தெரிவித்திருக்கிறார். இது ஆரிய மன்னனுக்கு ஆச்சரியமானதாகத் தெரியும். வாயால்  சொல்லாமல் எப்படி ஒரு பொருளைப்பெற  முடிகிறது என்பதுதான் அந்த  ஆச்சரியத்திற்கானக்  காரணம். ஆரியர்களின் மொழிக்கு எழுத்துரு  கிடையாது. திராவிடத்தின் மூத்த மொழியான தமிழ் அப்போதே எழுத்து வடிவத்தைக் கொண்டிருந்த  செம்மொழியாக சிறந்து விளங்கியது என்பதும்-அந்த  மொழியைச் சேர்ந்த  ஆட்சியாளர்களின் நிர்வாகத் திறன் ஆரியர்கள் அறியாத ஒன்றாக இருந்தது என்பதுமே ராகுல சாங்கிருத்தியாயன் மூலம் நாம் அறிந்துகொள்ளும் செய்தியாகும்.
வாழ்வியல் சார்ந்த நிலப்பரப்பை நிர்வகிப்பதில் பழந்தமிழர்கள் தனித்துவமானத் தன்மைகளைக் கொண்டிருந்தனர். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நால்வகை நன்னிலங்களை வகுத்து, இவை திரிந்து பாலை உருவாகும் எனும் ஐந்தாவது நிலப்பகுதியையும் குறிப்பிட்டனர். நிலவளத்தைக் காக்க நீர்மேலாண்மை என்பதும் தமிழர்களின் சிறப்பம்சமாக இருந்தது. ஆறு, வாய்க்கால், ஏரி, குளம், ஊருணி என ஒன்றுடன் ஒன்று இணைந்த நீர் வலையம் (நெட்வொர்க்) உருவாக்கப்பட்டிருந்தது. கடலில் கலக்கும் காவிரித் தண்ணீரைத் தேக்கிவைத்து, அதன் மூலம் வயல்களுக்குப் பாசனம் செய்யும் நோக்குடன் கட்டப்பட்ட கல்லணை இதற்குப் பெருஞ்சான்றாக விளங்குகிறது.
மன்னர் ஆட்சிதான். எனினும், மக்களின் நலன் காக்க வேண்டும் என்பது முதன்மையானதாக இருந்தது. ஆட்சியை அவ்வப்போது இடித்துரைக்கும் அமைச்சர்களும் புலவர்களும் கொண்ட அவை அமைந்திருந்தது. போர் உண்டு. பெரும்பாலும் அது தன் எல்லையினைப் பாதுகாப்பதற்கும், அல்லது எது தனது எல்லை என்ற உரிமையை நிலைநாட்டுவதற்குமாக நடந்துள்ளன. தமிழர்களின் வீரத்தைத் தொல்காப்பியப் புறத்திணை இயல் எடுத்துக் கூறுகின்றது. தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை என்ற நால்வகைப் படைகள் இருந்துள்ளன. வீரர் அல்லாதவர்கள், புறமுதுகிட்டு ஓடுவோர், காயம்பட்டோர், முதியோர், இளையோர், இவர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்கிற போர்க்கள நீதியை தமிழ்  இலக்கியமான புறநானூறு சுட்டிக்-காட்டுகிறது. அகநானூறு, குறுந்தொகை உள்ளிட்டவற்றில்  தமிழரின் அகவாழ்வு இலக்கணங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன. இயற்கையுடன் இணைந்து-மனித வளர்ச்சிக்-கேற்ற நிர்வாகத்திறன் கொண்ட ஆட்சியும் அதன் கீழ் வாழ்ந்த மக்களையும் பழந்தமிழர் இலக்கியத்திலிருந்து அறிய முடிகிறது. இத்தகைய ஆட்சியிலும் வாழ்க்கையிலும் பின்னர் ஊடுருவியது ஆரியம்.
சிலப்பதிகாரத்தில் மாமுது பார்ப்பனனையும் தீவலத்தையும் சுட்டிக்காட்டுகிறார்  இளங்கோ அடிகள். இதன்வாயிலாக  1800 ஆண்டுகளுக்கு முன்பே ஆரியத்தின் தாக்கம் இந்த மண்ணில் ஏற்பட்டுவிட்டதையும் அதனுடன் தொடர்ந்து நடக்கும் பண்பாட்டுப் போரையும் தமிழகத்தின்  வரலாறு நெடுக காணமுடியும். ஆரியத்தை ஆதரிக்கும் ஆட்சிகளே சிறப்பான ஆட்சிகள் என்று வரலாறு பதியப்பட்டுள்ளது. ஆரியத்திற்கு மாற்றாக ஆட்சி செய்து மக்கள் நலன் காத்த மன்னர்கள் பலரும் அரக்கர்களாக சித்திரிக்கப்பட்டனர்.
தமிழகத்தில் களப்பிரர் ஆட்சி செய்த  காலம் இருண்டகாலம் எனப்படுகிறது. உண்மையில் களப்பிரர் காலத்திற்கு முன்னரே வடமொழியின் ஆதிக்கமும் ஆரியத்தின் தாக்கமும் தமிழக மன்னர்களின் ஆட்சியில் ஊடுருவத் தொடங்கிவிட்டன. களப்பிரரும் வேற்று மொழியினர்தான். அவர்கள் சமண, சாக்கிய சமயங்களைப் பின்பற்றியவர்கள் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அதன் பொருட்டு, அவர்களின் நிர்வாக முறை இருந்தது. களப்பிரர் காலத்தில்தான் தமிழில் பல அரிய இலக்கண, இலக்கிய நூல்கள் எழுதப்பட்டன. நாலடியார் போன்ற பதினெண்கீழ்க்கணக்கு நுல்களும், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்களும் இக்காலத்தில் எழுதப்பட்ட சமண சாக்கிய சமயச் சார்புடைய தமிழ் நூல்களே. எனினும், களப்பிரர் காலத்தை இருண்ட காலம் என்கிறவர்கள் உண்டு. (புத்த மதத்தை தழுவி, போர்களைத்  தவிர்த்து, மக்கள் நலனுக்கானத் திட்டங்களை செயல்படுத்திய  அசோகரின் ஆட்சியை பொற்காலம்  என்று சொல்வ-தில்லை.  மவுரியப் பேரரசு காலத்தில் பல அறிவியல் நூல்கள் இயற்றப்பட்டன. ஆயினும், ஆரியத்தின் வழியில் ஆட்சி நடத்திய குப்தர்கள் காலமே இந்திய வரலாற்றில் பொற்காலம் எனப்படுகிறது)
கி.பி. 470இல் வச்சிரநந்தி அமைத்த திரமிளசங்கம் சமண சமய வளர்ச்சிக்கு உறுதுணையாக நின்று இத்தகைய நூல்கள் வெளிவர உதவியது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. (திரமிளர் என்பது தமிழர் என்ற சொல்லின் திரிபு என்கின்றனர் ஆய்வாளர்கள். கடலியல் ஆய்வாளரான ஒரிசா பாலுவின் விளக்கம்  மாறுபட்டுள்ளது. திரை மீளர்..அதாவது, அலைகடலில் பயணித்து மீண்டு வந்தவர்களே திரமிளர் என்கிறார். இந்தத் திரமிளரே பின்னர் திராவிடர்  ஆயினர் என்பது அவரது கூற்று. தமிழர்களே உலகின் முன்னோடி  கடலோடிகள் என்பதால் அவர்கள்தான் திரமிளர்கள் -திராவிடர்கள்  என்கிற  பார்வை இந்த  ஆய்வில்  வெளிப்-படுகிறது) களப்பிரர் ஆட்சியால் தமிழகத்தில் புதிய பொலிவு ஏற்பட்டது, மொழி வளர்ச்சியேற்பட்டது என்பதையும் வரலாற்றை முழுமையாக ஆய்வு செய்பவர்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால், களப்பிரர் காலத்தை இருண்டகாலம் என்றும், அவர்களைவிட அதிகளவில் சமஸ்கிருத மொழியைக் கையாண்டு, ஆரியத்தினை கடைப்பிடித்த  பல்லவ மன்னர்களின் ஆட்சி, கலைப்பொலிவு மிகுந்தது என்றும் வரையறுக்கப்-படுவதை நாம் காணலாம்.
பல்லவர்களைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவர்கள்  பிற்காலச் சோழர்கள். இவர்களில்  மாமன்னனான ராஜராஜசோழன் ஆட்சிக்-காலத்தில் தஞ்சை பெரியகோவில் கட்டப்பட்டு, ஆரியப் பார்ப்பன மேலாண்மைக்கு வழிகாணப்-பட்டது.. உழைக்கும் மக்கள் அனைவருக்குமான அரசாக இருந்த தமிழக ஆட்சி நிலைமாறி, சதுர்வேதி மங்கலங்கள் எனப் பார்ப்பனர்களுக்கு நிலங்கள்  தாரை வார்க்கப்பட்டன. கோவில் நிர்வாகமாக இருந்தாலும், அரசவை முடிவுகளாக இருந்தாலும் பார்ப்பனர்களின் ஆளுகைக்குட்பட்டன. கரிகாலச்சோழன் காலத்தில் (கி.பி.2ஆம் நூற்றாண்டு) கல்லணை கட்டப்பட்டது. ராஜராஜசோழன், ராஜேந்திர  சோழன் காலங்களில் (கி.பி.11ஆம் நூற்றாண்டு) தஞ்சையிலும் கங்கைகொண்ட சோழபுரத்திலும் பெரிய கோவில்கள் கட்டப்பட்டன. கரிகாலன் காலத்திலும் சேரன் செங்குட்டுவன், பாண்டியன் நெடுஞ்செழியன் காலத்திலும் தங்கள் எல்லைகளைத் தீர்மானிப்பதற்கான போர்களே நடந்தன. ஆனால் பிற்கால சோழமன்னர்கள் காலத்திலோ நாடுகளைப் பிடிக்கும் வேட்கையுடன் கடல் கடந்து படை கொண்டுசென்று போர்கள் நடத்தப்பட்டு வெற்றிமுரசு கொட்டப்பட்டது. இத்தகைய போர்களில் உயிர்ச்சேதங்கள் மிக அதிகமாக நடந்ததுடன், போர்ச்செலவை ஈடுகட்டும் விதத்தில் வரிச்சுமைகள் அதிகரிக்கப்பட்டன. வலிமை, வீரம், படைத்திறன் இவையே போரின் வெற்றியென்று திண்ணமாய் நம்பி திட்டமிட்டு ஆட்சி நடத்திய தமிழ் மன்னர்களை, யாகம் செய்யச் சொல்லி, யாகத்தின் மூலம் வெற்றியைக் குவிக்கலாம் என்று ஏராளமான பொருட்களை வீணடித்து யாகம் செய்யச் செய்தனர் ஆரியர்கள். வீரம் மிகுந்த தமிழர் நெஞ்சில் யாகம் என்ற மூடம் புகுந்தது. இதன் வழி யாகம் செய்யும் ஆரியர்க்கு மதிப்பும், செல்வாக்கும், முன்னுரிமையும் கிடைத்து, அவர்கள் கட்டுப்பாட்டில் தமிழ் மன்னர்கள் வந்தனர்.
மனிதர்களைவிட மதங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டன. சைவமா, வைணவமா, சமணமா என்ற போட்டியில் மனிதர்களின் உயிர்கள் பலி வாங்கப்பட்டன. கல்வி, வேலை, பெண்கள் நலன் உள்ளிட்ட  அனைத்தும் மனுதர்மத்திற்கு ஆட்பட்டன. இந்த நிலை பிற்காலப்  பாண்டியர்கள், நாயக்கர்கள், மராட்டிய மன்னர்கள் ஆட்சிக்காலத்திலும் நீடித்தன.  மணிநீரும்  மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையது  அரண் என இயற்கை சார்ந்த நாட்டையும், குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன் அடிதழீஇ நிற்கும் உலகு என மக்களின் நலன் கருதி ஆட்சி  செய்யும்  மன்னனையே உலகம் சார்ந்து நிற்கும் என்கிற நிர்வாக முறையையும் வலியுறுத்திய திருக்குறளின் மேன்மையை, ஆரிய ஆதிக்கத்தின் விளைவாக சாணக்கியனின் அர்த்தசாஸ்திரம் ஆக்கிரமித்தது. அதன்படி ஆட்சி செலுத்தத் தொடங்கிய பல்லவர் ஆட்சிக் காலத்தையும், பிற்காலச் சோழர் ஆட்சியையும் பொற்காலம் என்றனர். திருக்குறளில் உழவுக்கும் உழவருக்கும் முதன்மை தரப்பட்டுள்ளது. சாணக்கியரின் அர்த்த சாத்திரத்தில் அப்படியில்லை.  மக்களை அச்சுறுத்தி வேலை  வாங்கியாவது நிலத்தி-லிருந்து பெரும் வருவாய் பெறவேண்டுமென்று சாணக்கியர் போதித்துள்ளார். மக்களிடையே நிலவும் சாதி வேற்றுமையை அடிப்படையாகக் கொண்டு அதன் வழியான சமத்துவ நிர்வாகத்தை அர்த்த சாத்திரம் வலியுறுத்துகிறது.  திருக்குறளோ பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தத்துவத்தின் மூலம் சாதி பாகுபாடற்ற சமத்துவத்தை நிலை நாட்டுகின்றது. திருக்குறளில் அறமே முதன்மையானது. அதன் வழி நின்றே பொருளியலும் அதற்குட்பட்ட ஆட்சித் திறனும் விளக்கப்படுகிறது. அர்த்த சாத்திரம், மன்னனின் வெற்றியே முதன்மை-யானது என்றும் அந்த  வெற்றிக்காக அறத்தை  மீறுவதும் போர் தர்மமே என்பதை அடிப்படையாகக் கொண்டது. வரிவிதிப்புக் கொள்கைகளிலும் திருக்குறளும் அர்த்த சாஸ்திரமும் முற்றிலும் வெவ்வேறானவை. அரசனின் அதிகாரத்திற்குப் பணிவதைவிட, மக்களே மனமுவந்து வரிசெலுத்தும் நிலைமை  வேண்டுமென்பது வள்ளுவர் கருத்து. மக்களை வருத்தி, அச்சுறுத்தி வரி வாங்குவது அரசனின் கடமை என்கிறது அர்த்தசாஸ்திரம்.  மக்களின் மூடநம்பிக்கையையும், மதப் பற்றையும், அறியாமையையும் பயன்படுத்தி அரசின் கஜனாவை நிரப்பலாம் என்றும்,  மது,   -பாலியல் தொழில் உள்ளிட்ட வழிகளிலும் அரசன் தனது களஞ்சியத்தை நிரப்புதற்கு முயலவேண்டு-மென்று அர்த்த சாத்திரம் கூறுகின்றது. இதற்கு நேர்மாறானது  திருக்குறள் நெறி.
மேலும் அர்த்தசாஸ்திரத்தில், தெருவில் சாம்பல் முதலானவற்றைப் போட்டால் அரைக்கால் வெள்ளிப் பணம் அபராதம். தெருவில் சேறாகத் தண்ணீர் தேங்கு மாறு விட்டால் கால் வெள்ளி அபராதம். இவையே ராஜ வீதியில் நடந்தால் இருமடங்கு அபராதம்.  புண்ணிய ஸ்தலங்கள், புண்ணிய தீர்த்தங் கள், ஆலயங்கள், அரண்மனை முதலானவற்றின் அருகில் இயற்கைக் கடன்களைக் கழிப்பவனுக்கு அபராதம் விதிக்கவேண்டும். இறந்த விலங்குகளின் உடல்களை நகரத்தின் நடுவில் போடுபவருக்கு அபராதம். இறந்த மனிதர்களின் உடலை மாற்றுப்பாதையில் கொண்டு சென்றாலும் அபராதம் என்றெல்லாம் மக்களை அச்சுறுத்தி வரிவிதிப்பு செய்ய வழி சொல்லப்பட்டுள்ளது. மக்களைவிட அரண்-மனையும் கஜானாவுமே முக்கியம் என்கிற தத்துவத்தின் அடிப்படையில் நடைபெற்ற அரசுகளைத்தான் இந்திய வரலாற்றில் பொற்கால ஆட்சி என்கிறார்கள். கோவில், யாகம், பூஜை, புனஸ்காரம் இவற்றிற்கே அத்தகைய ஆட்சிகளில் முக்கியத்துவம்  கொடுக்கப்பட்டன. பிறநாட்டு ஆட்சியாளர்கள் படையெடுத்து வந்த நேரங்களில்கூட போர்க்கருவிகளைத் தயார் செய்யாமல் யாகங்கள் நடத்தி தப்பித்துவிடலாம் என்கிற அளவிற்கு மன்னராட்சி முறை மாறிப்போயிருந்தது. இதனால் பல அரசுகள் எளிதாக வீழ்ந்தன. ஆக ஆட்சியில் ஆரியம் புகுந்ததன் விளைவாய் மனிதம் கைவிடப்பட்டு, வீரம் புறந்தள்ளப்பட்டு, கருவூலத்தை நிறப்புவதும், யாகம் செய்வதும் முதன்மையானது. இது ஆரியம் நிகழ்த்திய மிகப்பெரும்  பண்பாட்டுப் படையெடுப்பாகும். தமிழர் ஆட்சியில் நீதி என்பது உயிருக்கும் மேலாய் நின்றது. தன் மகனேயாயினும் தண்டனைதான் என்ற சமநீதி சமுதாயத்திற்குக் கிடைத்தது. ஆனால் ஆரியம் ஆட்சியில் நுழைந்த பின் ஜாதிக்கொரு நீதி என்ற அநீதி நடப்பிற்கு வந்து அதுவே செயற்பாட்டிலும் பின்பற்றப்பட்டது. கொலை செய்தாலும் ஆரியர் மட்டும் தண்டிக்கப்படாத அநீதி அதன்படி நிலைநாட்டப்பட்டது.
ஆட்சியில் அமைச்சுப் பணி முழுமையும் தமிழரிடமிருந்த நிலைமாறி, மெல்ல மெல்ல ஆரிய பார்ப்பனர்களால் கைப்பற்றப்பட்டு, பின்னாளில் பெரும்பாலும் ஆரியர்களே அமைச்சராகும் அவலம் வந்தது. அதன்வழி ஆரியர் விருப்பப்படி ஆட்சி என்றாகி அவர்களின் ஆதிக்கம் மேலோங்கி, தமிழன் நான்காம் தர, அய்ந்தாம் தர குடிமக்களாக ஒதுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, நசுக்கப்பட்டான்.
மக்கள் பணி, மக்கள் பாதுகாப்பு, மக்கள் நலம் என்ற ஆட்சியின் நோக்கம் மாற்றப்பட்டு, ஆலயப் பணி, கடவுள் தொண்டு, பூசை, விழா, கோயில் என்று ஆரியப் பண்பாடு ஆட்சியின் நோக்காயிற்று.
பிரிட்டிஷார்தான் தற்போதுள்ள இந்தியாவை ஏறத்தாழ ஒற்றை ஆட்சிக்குள் கொண்டு வந்தனர். அவர்களின் அதிகார  மய்யத்திலும் ஆரியம் சேவகம் செய்து, அடித்தட்டு மக்களை ஆட்டிப்படைத்தது. சுதந்திர இந்தியாவிலும் இதே நிலைதான். ஆரியத்திற்கு எதிராக  ஜோதிராவ் பூலே, அயோத்திதாசர், அண்ணல் அம்பேத்கர் உள்ளிட்ட பலரின் குரல்கள் ஒலித்தன. ஆரிய எதிர்ப்பையும் சமூக நீதி விடுதலையையும் முன்வைத்து தமிழகத்தில் மகத்தான இயக்கம் தோன்றியது. அதுவே திராவிடர் இயக்கம். அதனை வலிமைப்படுத்தி _- எளிய மக்களுக்கான உரிமைப் போராட்டத்தை உறுதியுடன் நடத்தியவர் தந்தை  பெரியார். சமூகத்தில் அது தாக்கத்தை ஏற்படுத்தி, மறுமலர்ச்சியை உண்டாக்கியதுடன், அரசியலிலும்  புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தியது. அதன் விளைவே, அறிஞர் அண்ணா தலைமையில் அமைந்த அரசு. அதன் மூலம் சமூக மாற்றத்திற்கான பல திட்டங்களும் சட்டங்களும் வகுக்கப்பட்டன. எனினும், முக்கியமான அதிகாரங்கள் பலவும் இப்போதும் ஆரியத்தின் கையிலேயே உள்ளன. முழுமையான உரிமை- உண்மையான விடுதலை- ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சம அதிகாரம் என்பது இன்னமும் எட்டப்படவில்லை.
மத்திய அரசுப்பணிகளில் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்காக 27% இடங்கள் சட்டப்பூர்வமான முறையில் ஒதுக்கப்-பட்டிருந்தாலும் நடைமுறையில் கடந்த 20 ஆண்டுகாலமாக 7% முதல் 12% அளவிலான இடங்களே கிடைத்து வருகின்றன என்றால், இந்திய அரசியல் சட்டத்தை மீறிய ஆரியத்தின் அதிகாரமே இங்கு கோலோச்சியிருப்பது விளங்கும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலைப் பெற்றிருக்கும் ஆரிய அதிகாரத்திற்கு எதிரானப் போராட்டங்கள் தொடர்ந்த படியே உள்ளன.

-உண்மை,16-31.1.16

தமிழர் வாழ்வியலில் ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பு!

- சிகரம்
தமிழர் வாழ்வு என்பது ஆரியர் வருகைக்குமுன் தரணிக்கே வழிகாட்டும் வகையில் தரமுடையதாய், நாகரிகம் மிகுந்ததாய் இருந்தது. ஆனால், ஆரியர் வந்து கலந்து ஆதிக்கம் செலுத்தியபின் எல்லாம் தகர்ந்தது; அவர்களின் பண்பாட்டை நோக்கி நகர்ந்தது.
திருமணம்: மண வயது வந்த ஆணும் பெண்ணும் தனிமையில் சந்தித்து, காதல் வளர்த்து பின் அவர்களே கைப்படத் தொடுத்த மாலையை அணிவித்து இல்வாழ்வைத் தொடங்கினர்.
ஜாதி, மதம், உறவு என்ற எந்த வட்டத்திலும் அவர்கள் சிக்க வாய்ப்பே இல்லை. காரணம் அன்றைக்கு தமிழரிடம் அப்பாகுபாடுகள் இல்லை.
”யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும்எம் முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி யறிதும்?
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடைய நெஞ்சம் தாம்கலந் தனவே”
(குறுந்தொகை - 40)
என்ற பாடல் இவ்வுண்மையை விளக்கி உறுதி செய்கிறது.
அதேபோல், சோதிடப் பொருத்தம் போன்ற மூடநம்பிக்கைகள் ஏதும் இன்றி, அறிவிற்குகந்த பொருத்தங்களையே கருத்தில் கொண்டனர்.
பிறப்பே, குடிமை, ஆண்மை, ஆண்டோடு,
உருவு, நிறுத்த காம வாயில்,
நிறையே, அருளே, உணர்வொடு, திருஎன
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே.
(தொல் _ பொரு _ 1219)
1. நற்குடிப் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.
2. பிறந்தால் போதாது. அந்நற்குடிக்கேற்ற நல்லொழுக்கம் இருவரிடமும் இருக்க வேண்டும். பிறப்பு வேறு, குடிமை வேறு எனப் பிரிக்கிறார்.
3. இருவரிடமும் ஆண்மை _ ஆளுமை ஒத்திருக்க வேண்டும்.
4. அகவை ஒப்புமை வேண்டும். காலத்திற்கு ஒப்ப வயது ஒப்புமை பார்க்க வேண்டும்.
5. உருவு _ வடிவ ஒப்புமையும் வேண்டும். பார்ப்பவர் பொருத்தமான சோடி என்னும்படி உயரம், பருமன் இருக்க வேண்டும்.
6. நிறுத்த காம வாயில் என்பது தொல்லாசான் சிந்தித்துச் சொன்ன அரிய கருத்து. உடலில் அமைந்த காம நுகர்வுக்கான உடல், உள்ளக் கூறுகள். ஒருவர் மிக்க காமவெறியுடையவராகவும் மற்றவர் அளவாகத் துய்ப்பவராகவும் இருந்தால் ஒத்துவராது.
7. நிறை _ மனத்தைத் திருமணமான பின் கண்டவாறு ஓடவிடாது தடுத்து நிறுத்துதல். நிறுத்துதல் நிறை. மறை பிறர் அறியாது நிறுத்தல். இது மன நிறை, அடக்குதல், தடுத்து நிறுத்துதல் யாவும் அடங்கும்.
8. அருளுடைமையும் அதன் அடிப்படையான அன்பும் உடையவர்களாக இருவரும் திகழ வேண்டும்.
9. உணர்வு _ ஒருவரை ஒருவர் அறிதல்; புரிந்து கொள்ளுதல்; உலகியலறிதல் வேண்டும்.
10.திரு _ செல்வம்.
இப்பொருத்தங்களே இணையர்க்கிடையே பார்க்கப்பட்டது.
பிற்காலத்தில் வந்த திருமண நிகழ்வில்கூட மூடச்சடங்குகள் எதுவும் இல்லை.
“உழுந்துதலைப் பெய்த கொழுங்களி மிதவை
பெருஞ்சோற் றமலை நிற்ப நிரைகால்
தண்பெரும் பந்தர்த் தருமணல் ஞெமிரி
மனைவிளக் குறுத்து மாலை தொடரிக்
கனையிருள் அகன்ற கவின்பெறு காலைக்        
கோள்கால் நீங்கிய கொடுவெண் டிங்கள்
கேடில் விழுப்புகழ் நாடலை வந்தென
உச்சிக் குடத்தர் புத்தகல் மண்டையர்
பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர்
முன்னவும் பின்னவும் முறைமுறை தரத்தரப்        
புதல்வற் பயந்த திதலையவ் வயிற்று
வாலிழை மகளிர் நால்வர் கூடிக்
கற்பினின் வழாஅ நற்பல உதவிப்
பெற்றோற் பெட்கும் பிணையை யாகென
நீரோடு சொரிந்த ஈரிதழ் அலரி        
பல்லிருங் கதுப்பின் நெல்லொடு தயங்க
வதுவை நன்மணம் கழிந்த பின்றைக்
கல்லென் சும்மையர் ஞெரேரெனப் புகுதந்து
பேரிற் கிழத்தி யாகெனத் தமர்தர
ஓரிற் கூடிய உடன்புணர் கங்குல்.”
(அகநாநூறு - மருதம் - 86)
தனிமையில் சந்தித்து காதல் வளர்த்து இல்வாழ்வில் இணைந்து வாழ்ந்த தமிழர்கள்  மத்தியில் சிலர், சில காலம் வாழ்ந்து, பின் இப்பெண்ணுக்கும் எனக்கும் தொடர்பில்லை யென்று கைவிடும் நிலை வரவே பலர் அறிய மேற்கண்டவாறு திருமணத்தை நடத்தினர்.
விடியற்காலை மணற்பரப்பில் மணப்பெண்ணை அமர்த்தி, நீராட்டி, புத்தாடை அணிவித்து, இல்வாழ்வில் மணமக்களை ஈடுபடுத்தினர். உளுந்தங்களி விருந்தாக வழங்கினர். மற்றபடி தாலி, மந்திரம், நெருப்பு வளர்த்தல் போன்ற எச்சடங்கும் இல்லை.
ஆனால், ஆரியர் நுழைந்து கலந்து அவர்கள் பண்பாட்டுத் திணிப்பு நிகழ்ந்த பின், தமிழர் மணமுறை முற்றாக மாறியது.
அவர்களால் திணிக்கப்பட்ட ஜாதி, மதம், சோதிடம், சடங்கு, தீ வளர்த்தல், புரோகிதர் மந்திரம் சொல்லல் போன்றவை மணநிகழ்வில் புகுத்தப்பட்டன.
இணையர் தேர்வில் ஜாதி முதன்மையாகப் பார்க்கப்படும் அவலம் வந்து சேர்ந்தது. இன்றைக்கு ஜாதி மாறி திருமணம் செய்ய முயன்றால் பெற்ற பிள்ளையையே கொல்லும் ஜாதிவெறிக் கொலைகள் நடக்கும் அளவுக்கு ஆரியப் பண்பாட்டு நுழைவு தமிழர்களைச் சீரழித்துள்ளது.
திருமணத்திற்கு முன் ஆரியர் புகுத்திய சோதிடப் பொருத்தம் பார்க்கும் மடமை வளர்ந்தது. செவ்வாய் தோஷம், மூலம், கேட்டை என்று ஆரியர் நுழைத்த மூடநம்பிக்கைகள் பலரின் வாழ்வைப் பாழடித்து வருகிறது.
பெண்ணை பொருளாகக் கருதி தானம் கொடுக்கும் கன்னிகாதானம் என்ற ஆரிய பண்பாடு தமிழர் மத்தியில் நுழைந்து அவர்களின் பண்பாட்டை சிதறச் செய்தது.
திருமணத்தின்போது புரோகிதர் மந்திரம் கூறல், தீவலம் வருதல், நெருப்பிலே நெய்யூற்றி புகைப் பரவச் செய்து, அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல் போன்ற ஆரியச் சடங்குகள் தமிழர் திருமணங்களில் பின்பற்றப்பட்டன. பெண்ணுக்குத் தாலி அணிதல், மிஞ்சி அணிதல், ஆணுக்கு பூணூல் போடுதல் என்று அறிவுக்கொவ்வாத பல மண வினைகள் புகுத்தப்பட்டன.
குழந்தைத் திருமணம்: நான்கு வயது, அய்ந்து வயதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் முடிக்கும் அவலமும் ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பால் வழக்கில் வந்தது. இதனால் நான்கைந்து வயதிலே விதவையாகும் கொடுமையும் வந்தது.
வளையல் காப்பு: பெண் கருவுற்றால் அவருக்கு நல்லுணவுகள் கொடுத்து தாயும் சேயும் நலமுடனிருக்க வழிசெய்த தமிழரின் வாழ்க்கைமுறையில், தாயையும் சேயையும் காக்க வளையல் காப்பு அணியும் மூடநம்பிக்கையை ஆரியர்கள் சடங்காக்கி, அந்நிகழ்வினும் மந்திரம் ஓதி பணம் பறிக்க வழிகண்டனர். இச்சடங்கு பெண்ணைப் பெற்றோருக்கு பெருஞ்செலவைத் தரும் சுமையாக மாறியுள்ளது.
கருமாதி, திதி: இறந்தவர்களைப் புதைக்கும் பண்பாடே தமிழனுடையது. அதன்வழி சுற்றுச்சூழல் மாசடைவதில்லை. அவ்வாறு உடலை அடக்கம் செய்யும்போது எச்சடங்கையும் தமிழர் செய்ததில்லை. ஆனால், இறப்பிலும் மூடச் சடங்குகளைப் புகுத்தி தமிழன் பண்பட்ட பகுத்தறிவு வாழ்க்கை முறையைப் பாழாக்கினர்.
இறந்தவர்களுக்கு நடுகல் வைத்து மரியாதை செலுத்துவது மட்டுமே தமிழரின் மரபாயிருந்த நிலையில் கருமாதிச் சடங்கையும், கருமாதி மந்திரத்தையும் புகுத்தி தமிழர் வாழ்வியலைக் கெடுத்து, தங்கள் வருவாய்க்கு வழிதேடிக் கொண்டனர்.
ஆண்டுக்கொரு முறை திதி என்ற ஒரு சடங்கை உருவாக்கி அன்றைக்கும் தமிழரிடம் வருவாய் ஈட்டினர். அதிலும் மந்திரம் படையல் என்று பலதை நுழைத்து இறந்தவர் காக்கையாக வருவார்கள் என்று கதைகட்டினர்.
ருது சடங்கு: பெண் வயதுக்கு வந்தால், அவளை மஞ்சள் கலந்த நீரில் குளிப்பாட்டி தூய்மையாக்கி புத்தாடை அணிவிப்பது தமிழர் மரபாய் இருந்ததை மாற்றி, அதில் பல சடங்குகளைப் புகுத்தி, அதற்கு ருது சாதகம் என்று ஒரு சோதிடத்தை எழுதி அதற்கு ஒரு பலாபலன் சொல்லி மக்கள் மூளையை மழுங்கடித்தனர். பெண்ணைப் பெற்றோருக்கு இச்சடங்கும் ஒரு பெருஞ்செலவாக மாறியது.
காதுகுத்தல்: காதில் துளையிட்டு அணிகலன் அணிவது தமிழர் மரபாய் இருந்தது. ஆனால், அதிலும் மூடச்சடங்கைப் புகுத்தி, கோயிலில்தான் குத்த வேண்டும், தலை-முடியைக்கூட கோயிலில்தான் மழிக்க வேண்டும் என்று ஒரு மடமையைப் புகுத்தி எல்லாவற்றிற்கும் சடங்கு, செலவு என்ற ஒரு பண்பாட்டுச் சீரழிவை உருவாக்கினர். அறிவார்ந்த தமிழர் வாழ்வியலில் அவலங்கள் புகுத்தப்பட்டன.
புதுமனை புகல்: வாழ்வதற்குரிய வீட்டை விருப்பத்திற்கு ஏற்ப அமைத்து, வாழ்ந்து வந்த தமிழரிடையே, கிரகப் பிரவேசம் என்ற ஒரு சடங்கை உருவாக்கி, அதிலும் தீ வளர்த்து, பசுமாட்டை வீட்டுக்குள் நுழையவிட்டு, பூசணிக்காயை நடுத்தெருவில் உடைத்து பல மூடச் செயல்களை செய்யச் செய்கின்றனர்.
வீட்டைக் கட்டும்போது வசதிக்கேற்ப கட்டி வாழ்ந்த தமிழனிடம் ‘வாஸ்த்து’ என்ற மடமையைப் புகுத்தி, அறிவுக்கும், வசதிக்கும், விருப்பத்திற்கும் பொருத்தமில்லா வீட்டை அமைக்கும்படிச் செய்துவிட்டனர்.
சகுனம் பார்த்தல்:
“கொக்கொக்கக் கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த விடத்து’’
என்ற குறளுக்கு ஏற்ப அறிவுக்குகந்த வகையில் எதை, எப்போது, எப்படிச் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு வாழ்ந்த தமிழர் வாழ்வில் இராகுகாலம், எமகண்டம், குளிகை, மரண-யோகம், அமிர்த்யோகம் என்று பலவற்றைப் புகுத்தி ஒவ்வொரு நாளும் பலமணி நேரம் பாழாகும்படிச் செய்தனர். குறிப்பிட்ட நேரத்தில் செய்தால் கேடு வரும்; இன்னின்ன நேரத்தில் செய்தால் நன்மை வரும் என்று, நேரந்தான் நல்லது, கெட்டது, வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கிறது என்ற அடிப்படையில் மூடநம்பிக்கையைத் தமிழர் மூளையில் ஏற்றி முடக்கிப் போட்டது ஆரிய பண்பாடு.
பல்லி கத்துவது, பறவை எதிர்ப்படுவது, பூனை குறுக்கே போவது, மனிதர் எதிரில் வருவது எல்லாம் நடக்கப் போவதை அறிவிக்கும் சகுனம் என்ற மூடநம்பிக்கையைத் திணித்தனர். கணவனை இழந்த பெண் எதிரே வந்தால் கேடுவரும், சுமங்கலி வந்தால் நன்மை வரும், வாணியன் வந்தால் கேடு, வண்ணான் வந்தால் நல்லது என்று காட்சியெல்லாம், காரிய முடிவைக் காட்டும் என்ற மூடக் கொள்கையை மூளையில் பதியவைத்து பூனைக்கும், பல்லிக்கும் அஞ்சும்படிச் செய்தனர்.
உண்மை,16-31.1.16

தமிழில் ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பு!

- பேராசிரியர் டாக்டர் காளிமுத்து
உலகம் இதுவரை எத்தனையோ படையெடுப்புகளைக் கண்டிருக்கிறது. வாள்முனையில் மக்கள் வாழ்வை மண்ணோடு மண்ணாக்கிய ‘மாமன்னர்களை’ உலக வரலாறு எடுத்துக்காட்டுகின்றது. வெட்டுண்ட தலைகள், வேல்பாய்ந்த நெஞ்சுகள், வெருண்டோடிய மன்னர்கள், வீழ்ந்துபட்ட பேரரசுகள் என்று வரலாற்றின் ஒவ்வொரு பக்கத்திலும் அரச படையெடுப்பகளைக் காண முடிகிறது.
இத்தகைய நிகழ்வுகள் எதுவுமே இல்லாமல் திராவிட இனத்தின் மீது ஒரு படையெடுப்பு நடந்தேறி நிலைத்து நின்று கொண்டிருக்கின்றது இன்றுவரை! புல்லும் பூணூலும், செந்நிறமும் சிவந்த இதழ்களும் இப்பூவுலகின் தொன்மைக் குடிமக்களைத் துயரத்தில் ஆழ்த்திவிட்டன.
கைபர் _ போலன் கணவாய்களின் வழியாக _ மய்ய ஆசியாவிலிருந்து ஆடுமாடுகளை ஓட்டிக்கொண்டு இந்தியத் துணைக் கண்டத்திற்குள் ஆரியர்கள் நுழைந்த காலந்தொட்டு இன்றுவரை திராவிட மக்களின் பண்பாட்டை, மொழியை, கலையை நாகரிகத்தைச் சிதைப்பதிலேயே கவனமாக இருந்து வருகின்றனர். தொல்காப்பியர் அய்யாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆரியர்களின் அழிவு வேலைகளைச் சுட்டிக்காட்டி எச்சரிக்கை செய்திருக்கிறார். ஆரியச் சொற்கள் பலவற்றைத் தமிழில் கலந்து தமிழை ஆரிய மயமாக்கி விடுவார்களோ என்று கவலைப்பட்ட தொல்காப்பியர் சமற்கிருதச் சொற்களைத் தமிழில் எழுத நேரிடும்போது வடமொழி எழுத்துக்களால் அவற்றை எழுதித் தமிழில் ஊடாட விடக் கூடாது என்றும், அவற்றைத் தமிழ் எழுத்துக்களைக் கொண்டே எழுத வேண்டும் என்றும் அவர் தெளிவாக விதிகளை வகுத்துக் கொடுத்துள்ளார். க்ஷ, ஜ, ஸ, ஷ, ஹ போன்ற எழுத்துக்கள் சமற்கிருதச் சொற்களைத் தமிழில் கலப்பதற்காகவே கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றைக் கொண்டுதான் எண்ணற்ற சமற்கிருதச் சொற்களைத் தமிழில் கலந்தார்கள். (‘ரஸம்’ என்று எழுதுவதற்குப் பதிலாக ‘ரசம்’ என்று எழுதலாம்; மேஜை என்பதனை ‘மேசை’ என்று எழுதலாம்). இதனால் சாறு என்ற சொல்லும் மிசைப் பலகை என்ற சொல்லும் வழக்கிழந்து போய்விட்டன. ‘விவாஹம்’ என்ற சமற்கிருதச் சொல்லைப் பார்ப்பனர்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தனர். இதனால் ‘மன்றல்’, ‘மணம்’, ‘தேவை’ முதலான இயல்பான தமிழ்ச் சொற்கள் மறையத் தொடங்கின. (திராவிடர் கழகம் இப்போது ‘மன்றல்’ விழா என்று அந்தச் சொல்லுக்கு உயிர் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. தூய தமிழ்ச் சொல்லான சலம் என்பதை ஜலமாக்கினர். சோற்றைச் ‘சாதம்’ என்றும், வெப்பத்தை உஷ்ணம் என்றும், சுரம் என்பதை ‘ஜுரம்’ என்றும், காட்சி என்பதைக் காட்க்ஷி என்றும், பறவையைப் பட்க்ஷி என்றும், சமற்கிருதச் சொற்களைத் தமிழில் நுழைத்துத் தமிழ்ச் சொற்களை வழக்கிலிருந்து அகற்றினார்கள்.
மக்களின் உடல் உறுப்புக்களின் பெயர்களை வடமொழியில் மாற்றினார்கள். தலையைச் சிரம் என்றும், கையைக் கரம் என்றும், காலைப் பாதம் என்றும், முட்டியை முஷ்டி என்றும், புட்டத்தை புஷ்டம் என்றும், தலைமயிரைக் கேசம் என்றும், உடம்பைத் ‘தேகம்’ என்றும் சமஸ்கிருதத்தில் மாற்றித் தமிழர்களை வஞ்சித்தார்கள்.
சேரன் செங்குட்டுவன், பாண்டியன் நெடுஞ்செழியன், சோழன் நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, பூங்குன்றன், குமணன், கூலவாணிகன் சீத்தலைச் சாத்தன், இளங்கோ, கரிகாலன், பொன்னிவளவன், அமுதன், மருதன், பூங்குழலி, தேன்மொழி, கனிமொழி போன்ற அழகிய தமிழ்ப் பெயர்கள் இன்று ஷண்முகம், ஈஸ்வரன், ரமேஷ், சுரேஷ், முருகேஷ், நாகேஷ், ஜலஜா, மலஜா என்று வாயில் நுழையா வடமொழிப் பெயர்களைத் தமிழ்க் குழந்தைகள் தாங்கித் தள்ளாடுகின்றன.
தமிழ்நாட்டின் ஊர்ப் பெயர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்கவை _ ‘எப்போதும் வென்றான்’, பொன்விளைந்த களத்தூர், மணல்மேடு, ஏரியூர், ஆற்றூர். இப்படிப்பட்ட ஊர்களின் பெயர்கள் எல்லாம் பார்ப்பனரின் பண்பாட்டுப் படையெடுப்புக்குத் தப்பி நிற்கும் சில ஊர்கள்! மயிலாடுதுறையை ‘மாயூரம்’ என்றும், பழமலையை விருத்தாசலம் என்றும், ‘திருமரைக்காடு’ என்பதனை வேதாரணியம் என்றும், ‘நீலமலை’ நீலகிரி என்றும், ஏலமலை ‘ஏலகிரி’, பண்ணன் ஆண்டமலை வராக கிரி என மாற்றப்பட்டுப் ‘பன்றிமலை’ என்றும் சமற்கிருத மயமாக்கப்பட்டுவிட்டன.
தமிழரின் இசை கர்நாடக சங்கீதமாகி விட்டது. “பரதநாட்டியம்’’ தமிழ் நாட்டியத்தை ஆரியர்கள் தமதாக்கினர்.  தமிழர்தம் உணவக ங்கள் ‘வசந்தபவன்’ என்றும், ‘ஆரியபவன்’ என்றும், ‘பிராமணாள் சாப்பிடும் இடம்’ என்றும் பெயர் சூட்டப்பெற்றன.
தமிழன் உடுத்திய வேட்டி ‘வேஷ்டி’-யாகிவிட்டது; அவன் தோளில் தொங்கிய துண்டு ‘அங்க வஸ்திரமாகி விட்டது. வடக்கில் இருந்த தமிழ்ப் பெயர் தாங்கிய பல இடங்கள் சமற்கிருத மயமாக்கப் பட்டுவிட்டன. எ.டு: திருநகர் என்பது சிரீநகர் என மாற்றப்-பட்டிருக்கிறது.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுந்த தமிழ் இலக்கியங்களின் பாடுபொருள் ‘மக்கள் வாழ்க்கை’; மக்களின் வாழ்வியலே படைப்-பாளிகளின் மய்யப் பொருளாக இருந்தது. ஆனால் இதே காலப் பகுதியிலும் இதற்கு முன்னரும் வடமொழியில் தோன்றிய இலக்கியங்கள் மக்களைப் பாடவில்லை; மாறாகக் கண்ணுக்குப் புலப்படாத கடவுளரைப் பற்றிப் பாடின; அறிவுக்குப் பொருந்தாத கற்பனைகளை இலக்கியம் என்று அங்கே எழுதி மூடநம்பிக்கைகளை மக்களிடையே ஆரியர்கள் விதைத்தார்கள். தமிழ்மக்களின் அகத்திணை இலக்கியங்களுக்கு ஈடாக உலகில் எந்த மொழியிலும் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மையாகும். சாதி, மதம், இனம், மொழி, நாடு _ இவற்றைக் கடந்து நிற்கும் இயற்கை இலக்கியங்கள் நம்முடைய அகத்திணை இலக்கியங்கள். இவை மக்களின் காதல் வாழ்வை இயற்கைப் பின்புலத்தில் எடுத்தியம்புகின்றன.
ஆரியர்களின் பண்பாட்டுப் படையெடுப்பு அமைதியாக நடந்தது. இதன் விளைவாகத் தமிழ் இலக்கியத்தின் பாடுபொருள் _ கருப் பொருள் மாற்றப்பட்டது. மக்களின் காதல் வாழ்வு கைவிடப்பட்டுக் கடவுளரின் காம விளையாட்டுகள் கருப்பொருள்களாயின. கி.பி.இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் தமிழ் இலக்கியத்தின் போக்கே முற்றிலும் மாறிப் போயிற்று. பழந்தமிழ் மக்களின் இயற்கையோ-டொன்றிய அகத்திணைக் கோட்பாடு அகற்றப்பட்டு அவர்கள் அதுவரை அறிந்திராத _ அவர்களுக்குப் புறம்பான _ மனித நேயத்திற்கு எதிரான கன்னிகாதானங்களைச் சிறப்பித்துப் பாடும் புராணங்களை எழுதும் நிலையை ஆரியப் பார்ப்பனர் உருவாக்கி வைத்தனர்.
கி.பி.இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் ஆரியப் பார்ப்பனரின் வைதீக மதம் செல்வாக்குப் பெற்ற காரணத்தால் தமிழ் மக்களுக்கான கல்வி நிலையங்கள் ஆள்வோரின் கவனத்தில் படாமல் மறைந்து போயின. இதனால் அறிவுத் துறையில் தமிழ் தழைத்-தோங்க முடியவில்லை. பக்திப் பாடல்களால் _ தேவாரம், திருவாசகம், ஆழ்வார் பாடல்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை, சிவகசிந்தாமணி, கம்பராமாயணம், பெரியபுராணம் முதலான மூடநம்பிக்கைகளைக் கொண்ட பாடல்களால் தமிழ் அறிவை மழுங்கடித்தனர். ‘தமிழைப் பக்தியின் மொழி’ என்று கூறிப் பார்ப்பனரும் அவர்தம் அடிவருடிகளும் பெருமைப்பட்டுக் கொண்டனர். ஆரியம் தமிழில் புகுந்ததால் ஏற்பட்ட தீய விளைவு இது!
“மற்ற மக்கள் எல்லாரும் காட்டுமிராண்டி-களாக வாழ்ந்த காலத்தில் கப்பல் ஓட்டி வாணிபம் நடத்திய தமிழர் மரபில் இன்று ஒரு நியூட்டன் தோன்ற முடியவில்லை; ஓர் எடிசன் தோன்ற முடியவில்லை; ஒரு மார்க்கோனி தோன்ற முடியவில்லை. ஏன்? தமிழில் ஆரியம் புகுந்ததால்தான் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்’’ என்று தந்தை பெரியார் தமிழர்-களின் தொன்மை வரலாற்றையும் அண்மை வரலாற்றையும் ஒப்பிட்டுக் காட்டி நமக்கு உணர்வூட்டுகிறார்.
ஆரியர்களின் மனுதரும சாத்திரத்தைத் தென்னாட்டில் ஆதிக்கம் செலுத்த அனுமதித்த அற்றை நாள் அரசர்களின் அறியாமையை எண்ணி அழுவதா சிரிப்பதா என்று தெரிய-வில்லை. குலத்துக்கொரு நீதி கூறும் மனுதருமமே இன்றுவரை இந்தியத் துணைக் கண்டத்து மக்களை ஆட்சி செய்து வருகின்றது. அதேநேரத்தில் பிறப்பின் அடிப்படையில் மக்கள் அனைவரும் நிகர் என்னும் வள்ளுவரின் திருக்குறளை ஆரியர்கள் மக்களிடமிருந்து மறைத்து விட்டார்கள். பரிமேலழகரைப் போன்று திருக்குறளுக்கு உரையெழுதிய சிலரும் மனுதருமக் கருத்துக்களைப் புகுத்தியே குறளுக்கு உரை வரைந்தனர். இவ்வாறு ஆரியத்தின் தாக்குதலுக்கு உள்ளான திருக்குறளை எடுத்து ஆராய்ந்து ‘இது மனுதருமத்திற்கு எதிராக எழுந்த நூல்’ என்று அதற்கென்று மாநாடு நடத்தித் திருக்குறளை மக்களிடையே கொண்டு சென்றார் தந்தை பெரியார்.
ஈராயிரம் ஆண்டுகளாகத் திருவள்ளுவருக்குப் பூணூல் போட்டு, அவர் ஆதி என்ற புலைச்சிக்கும் பகவான் என்ற பார்ப்பானுக்கும் பிறந்தவர் என்று கதை எழுதி வைத்திருந்தார்கள் பார்ப்பனர்கள். 1967_ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா முதலமைச்சர் ஆனவுடன் வள்ளுவர் மார்பிலிருந்து பூணூலை அகற்றிவிட்டுத் திருவள்ளவருக்குச் சிலை வைத்தார்.
இந்த உலகம் இனியது; இதில் வாழ்வது மகிழ்ச்சிக்குரியது. இறப்புக்குப்பின் உடல் அழிந்து போகிறது. அவ்வளவே. இது தமிழர் வாழ்வில் வேரூன்றிய சிந்தனை. இதனை மாற்றி இறப்புக்குப்பின் மறுஉலகம் ஒன்று இருக்கிறது. அங்கு நரகம், சொர்க்கம், ஊர்வசி, ரம்பை, மேனகை முதலானவர் வந்து வாசலில் நின்று நம்மை வரவேற்பர். பார்ப்பனர்க்குத் தீங்கிழைத்தால், அவர்கள் செய்த குற்றத்திற்-காகத் தண்டனை கொடுத்தால், நரகத்தில் விழ நேரிடும். கொதிக்கும் எண்ணெய்க் கொப்-பறையில் வறுத்தெடுப்பார்கள் என்ற கருத்தியல் அடிப்படையிலேயே நூல்கள் எழுதப்பட்டன. இவற்றையெல்லாம் தந்தை பெரியார் அம்பலப்படுத்திக் காட்டினார்.
கருநாடகத்தில் வழங்கிய தமிழில் ஏராளமான சமற்கிருதச் சொற்களைக் கலந்து அதனைக் கன்னட மொழியாக்கிவிட்டனர். இதைப் போன்றே ஆந்திராவிலும் மலை-யாளத்திலும் வழங்கிவந்த தமிழோடு எண்ணற்ற சமற்கிருதச் சொற்களைக் கலந்து அவற்றை முறையே தெலுங்காகவும் மலை-யாளமாகவும் மாற்றிவிட்டனர். இம்மொழிகளில் உள்ள சமற்கிருதச் சொற்களை நீக்கிவிட்டால் அவை அருமையான தமிழாகிவிடும் என்று தந்தை பெரியார் எடுத்துக்காட்டுகிறார். தமிழ் பேசிய சேர நாட்டில் சமற்கிருதம் கலந்து மலையாளமானதே இதற்கு நல்ல சான்று.
ஆரியர்கள் எங்கே சென்றாலும் முதலில் மொழி அழிப்பு வேலைகளில்தான் ஈடுபடுவார்கள். மராட்டிய மாவீரன் என்று போற்றப்பட்ட சிவாஜியின் காலத்தில் மராட்டிய மொழியில் ஆயிரக்கணக்கான சமற்கிருதச் சொற்களைக் கலந்து அதனை உருமாற்றிய கதையை மஜும்தாரைப் போன்ற வரலாற்றுப் பேராசிரியர்கள் எடுத்துக் காட்டுகின்றனர்.
மேலும், தமிழ் யாப்பு மரபிலும் ஆரியப் பார்ப்பனர் தங்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர். பாக்களில் சிறந்ததான வெண்பா ஆரிய பார்ப்பனர்களுக்கு உரியதென்றும், ஆசிரியப்பா அரசர்க்குரியது என்றும், கலிப்பா வைசியர்க்குரியது என்றும், வஞ்சிப்பா சூத்திரர்க்குரியது என்றும் பாக்களிலும் வர்ணம் பிரித்துப் பாழாக்கினர்.
இவ்வாறு வளம்கொழிக்க வாழ்ந்த தமிழ், ஆரியரின் பண்பாட்டுப் படையெடுப்பால் பல இடையூறுகளை எதிர்கொள்ள நேர்ந்தது. என்றாலும், இடையூறுகளைப் படுகுழியில் தள்ளிவிட்டுத் தமிழ் மீண்டும் புத்தெழுச்சி பெறுவதற்குத் தந்தை பெரியார் காவலரண் போல நின்று தமிழைக் காத்து வளர்த்தார். இந்தி எதிர்ப்பு, சமற்கிருத எதிர்ப்புப் போராட்டங்களைத் தந்தை பெரியார் தலைமையேற்று நடத்தியிருக்காவிட்டால் தமிழ் இப்போது இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயிருக்கும். இவற்றையெல்லாம் தமிழ் இளைஞர்கள் எண்ணிப் பார்த்து எதிர்காலத்தைச் சீரமைக்கத் தமிழர் தலைவரின் தலைமையில் அணிதிரள வேண்டும் என்பதே தமிழர் திருநாளில் நாம் வைக்கும் வேண்டு-கோளாகும்.
-உண்மை,16-31.1.16

சமுதாயத்தில் ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பு!

- நேயன்
தமிழர் சமுதாயம் உலக அளவில் தொன்மையும், நுண்மையும், திண்மையும் உடைய சமுதாயமாய் அய்யாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திகழ்ந்தது. கலை, பண்பாடு, நாகரிகம், அறிவியல், மருத்துவம், அரசியல், உடற்திறன், காதல், வீரம், மனிதம், மாண்பு என்று அனைத்திலும் உலக அளவில் உயர்ந்து நின்றதோடு, பிறருக்கு வழிகாட்டியும் நின்றது.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்!’’
தமிழர் வாழ்வின் அடிப்படையே மனிதநேயம்தான். மனித நேயத்திற்கு மாறான எந்தவொரு செயல்பாடும் சிந்தனையும் தமிழ்ச் சமுதாயத்தில் இல்லை. அதன்படி, சமத்துவம், சமஉரிமை, சமநீதி, சமவாய்ப்பு உலக நோக்கு, உறவு போக்கு அவர்களிடம் மேலோங்கி நின்றது.
சமுதாயத்தில் குறுகிய மதிற்சுவர்களை அவர்கள் எழுப்ப விரும்பவில்லை. உலக மக்கள் அனைவரையும் உறவாக எண்ணினர். உலகையே ஒரு ஊராகக் கருதினர். அதன் வெளிப்பாடுதான் “யாதும் ஊரே யாவரும் கேளிர்!’’ என்ற ஒப்பற்ற கொள்கை முழக்கம்.
உலகில் எல்லா இடமும் நம் ஊர்தான். உலகில் வாழும் அனைவரும் நம் மக்கள்தான் என்ற தமிழர் வாழ்வியல் தத்துவம் தமிழரைத் தவிர வேறு யாரிடமும் அப்போது இல்லை. இத்தத்துவத்தின் அடிப்படையில்தான் தமிழர் தங்கள் சமுதாய அமைப்பை நிறுவினர்.
ஜாதியற்ற சமுதாயம்:
தமிழர் வாழ்வில் ஜாதியென்பதே இல்லை. மக்கள் தாங்கள் செய்த தொழில் அடிப்படை-யில் பிரிந்து செயல்பட்டனரே ஒழிய, ஜாதி என்ற பகுப்போ, உணர்வோ அவர்களிடம் இல்லை.
1. அந்தணர்
அரசர், வணிகர், வேளாளர் ஆகிய முத்தரப்பு தமிழ் மக்களில், இல்வாழ்வு நடத்தி, அறிவும் வாழ்க்கை அனுபவமும் பெற்ற சிலர், குடும்பத்தைப் பிள்ளைகளிடம் ஒப்படைத்து விட்டு, மக்களுக்குத் தொண்டாற்றும் பொருட்டு வீட்டைவிட்டு வெளியேறி சமுதாயத் தொண்டாற்றியவர்களே அந்தணர்கள் ஆவர்.
இவர்களில் அரச குடும்பங்களில் இருந்து வந்தவர்களும் உண்டு. வணிகப் பிரிவிலிருந்து வந்தவர்களும் உண்டு. வேளாளர் பிரிவிலிருந்து வந்தவர்களும் உண்டு.
“காமஞ் சான்ற கடைக்கோட் காலை
ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி
அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே’’
_ தொல்காப்பியம் -_ கற்பியல்_51
சுருங்கக் கூறின், அனுபவ அறிவும், பொதுநல நாட்டமும் உடைய, இல்வாழ்க்கையை விட்டு பொதுத் தொண்டாற்ற முன்வந்த தமிழ்ப் பெரியவர்களே அந்தணர்கள். இவர்கள் தனிப் பிரிவினர் அல்ல.
“அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்’’
என்ற வள்ளுவர் குறளும் இதற்குச் சான்று பகரும்.
அந்தணர்கள் ஓரிடத்தில் நிலைத்துத் தங்காமல், ஊர் தோறுஞ் சென்று மக்களுக்கு நல்ல வழிகளை எடுத்துக் கூறி வந்தனர். இவ்வாறு ஊர்தோறும் அலைந்து திரிய வேண்டியிருந்ததால், வெய்யிலுக்குக் குடையும், செருப்பும், நீர் கொண்டு செல்ல செம்பும், ஊன்றுகோலும், படுத்துறங்க பாயும், நல்வழி கூறும் அறநூல்களையும் (புத்தகங்களையும்) தங்களுடைய உடமையாகக் கொண்டிருந்தனர். இதைக் கீழ்க்கண்ட தொல்காப்பிய வரிகள் நன்கு விளக்குகின்றன.
“நூலே காகம் முக்கோல் மணையே
ஆயுங் காலை அந்தணர்க் குரிய’’
_ தொல்காப்பியம் -_ மரபி_70
அரசர் போர் செய்வதற்காக நகரை விட்டு செல்லும் வேளைகளில் அந்தணப் பெரியவர்கள் அரசுப் பணிகளையும் கவனித்து வந்தனர்.
“அந்த ணாளர்க் கரசுவரை வின்றே’’
_ தொல்காப்பியம் -_ மரபி_82
2. அரசர்:
தமிழ் மக்களுக்குத் தலைமையேற்று அவர்களை ஆண்டவர்களே அரசர்கள் ஆவர். தமிழ்நாட்டில் ஆட்சி முறை ஏற்பட்ட காலத்திலிருந்தே சேர, சோழ, பாண்டியர் என்ற அரச மரபினரால் தமிழகம் ஆளப்பட்டு வந்தது. இப்பேரரசுகளுக்கு உட்பட்ட சிற்றரசர்களும் இருந்தனர். பேரரசர்களால் அமர்த்தப்படும் வணிகரும், வேளாளரும் சிற்றரசர்கள் ஆவர். இதில் வேளாளர்களே அதிகம்.
அரசு என்பதற்கு “காவல்’’ என்று பொருள். அரசர் என்றால் ‘காவலர்’ என்பதாகும். அதாவது, நாட்டையும் மக்களையும் காக்கின்றவர் என்று பொருள். எனவே, அரசர் என்பது ஒரு சாதியல்ல.
3. வணிகர்:
நெல், கம்பு, சோளம், கேழ்வரகு, தினை, சாமை, வரகு போன்ற தானியங்களையும், அவரை, கடலை, துவரை, கொள்ளு போன்ற பயிறு வகைகளையும் மற்றைய பயனுடைய பொருட்களையும் வணிகம் செய்த தமிழ் மக்களே வணிகர் எனப்பட்டனர்.
4. வேளாளர்:
பயிர்த்தொழில் செய்து அனைத்து மக்களுக்கும் உணவு கிடைக்க வகை செய்த தமிழ்மக்களே வேளாளர் என்றழைக்கப்-பட்டனர். இவர்கள் அரசர்களுக்கும் பெண் கொடுத்து உறவு கொண்டு வாழ்ந்திருக்கின்றனர்.
இளஞ்சேட் சென்னியின் மனைவி அழுந்தூர் வேளின் மகள் ஆவாள். அவனுடைய மகன் கரிகாலனின் மனைவி நாங்கூர் வேளின் மகள். சேரன் செங்குட்டுவனின் மனைவி கொங்குவேள் ஒருவனின் மகள்.
எனவே, அந்தணர் என்பதும், அரசர் என்பதும், வணிகர் என்பதும், வேளாளர் என்பதும் தொழில் பிரிவுகளே! சாதிப் பிரிவுகள் அல்ல என்பதற்கு மேற்கண்ட திருமண உறவுகளே நல்ல சான்றுகளாகும். சாதிப் பிரிவுகளாக இருந்திருந்தால் திருமண உறவு ஏற்பட்டிருக்காது அல்லவா?
மூடநம்பிக்கையற்ற சமுதாயம்:-
தமிழரிடையே கடவுள், சடங்கு, யாகம், பூசை போன்ற எந்த மூடநம்பிக்கையும் இல்லை.
நிலத்தலைவர் வணக்கம்: தங்களை ஆண்டு, பாதுகாக்கும் நிலத்தலைவர்களை தமிழர்கள் மதித்து, அவர்களை வணங்கினர்.
குலப்பெரியோர் வணக்கம்: தங்கள் குடும்பத்தில், சிறப்புடன் வாழ்ந்து புகழ்பெற்ற பெரியோரை நடுகல் நட்டும், வீட்டுக்குள் அவர்களது பொருட்களை வைத்தும் வணங்கினர்.
வீரர் வணக்கம்: நாட்டைப் பாதுகாத்து, சாதனை புரிந்து, நாட்டுக்காக, மக்களுக்காக உயிர்விட்ட வீரர்களுக்கு நடுகல் நட்டு மரியாதை செலுத்தினர். குதிரை வீரராயின் அந்த நடுகல்லின் இருபுறமும் குதிரைச் சிலைகளை வைத்தனர்.
பத்தினிப் பெண்டிர் வணக்கம்: காதல், வீரம், கற்பு என்பது தமிழரின் உயிர்க் கொள்கைகள். அவ்வகையில் இம்மூன்றிலும் சிறந்து விளங்கிய ஆண், பெண் இருவரையும் தமிழர் மதித்தனர்.
தமிழர் சமுதாயம் தாய்வழிச் சமுதாயம். பெண்தான் சொத்துக்கு உரியவள். பெண்தான் குடும்பத்தின் ஆட்சியாளர். பெண் நிலையாக குடும்பத்தில் இருப்பாள். ஆண்தான் பெண்ணிருக்கும் இடத்தைத் தேடிச் சென்று வாழவேண்டும்.
இந்தச் சமுதாய அமைப்பின்படி பெண்ணிற் சிறந்தவர்களின் அடையாளமாகக் கல்நட்டு வணங்கினர்.
இப்படி அறிவிற்குகந்த தமிழரின் சமுதாய வாழ்க்கை ஆரியப் பண்பாட்டுப் படை-யெடுப்பால் தலைகீழாய் மாறியது.
ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பும் மாறிய தமிழ்ச் சமுதாய வாழ்வும்
அயல்நாட்டிலிருந்து பிழைக்க வந்து, மெல்லமெல்ல பரவிய ஆரிய பார்ப்பனர்கள் தமிழர்களின் ஆட்சியாளர்களை வசப்படுத்தி, அவர்களின் அதிகார வழி தங்கள் பண்-பாட்டையும், ஆதிக்கத்தையும் நுழைத்தனர்.
கடவுள்களை உருவாக்கல்:
தமிழரிடையே இருந்த நிலத்தலைவர் வழிபாட்டை கடவுள் வழிபாடாக்கினர். மலைநிலத் தலைவனை முருகனாக்கினர்; காட்டுநிலத் தலைவனை கண்ணன், திருமால் என்று ஆக்கினர்; மருதநிலத் தலைவனை இந்திரனாக்கினர்; நெய்தல் நிலத் தலைவனை வருணனாக்கினர்.
தமிழரிடையே இருந்த நன்றியின்பாற்பட்ட உறுப்பு வழிபாட்டை சிவலிங்க வழிபாடாக்கினர்.
பத்தினிப் பெண்டிர் வழிபாட்டை அமம்மன் (காளி, மாரி) வழிபாடாக்கினர்.
வீரர் வழிபாட்டை, குலப்பெரியோர் வழிபாட்டை சிறுதெய்வ வழிபாடாக்கினர். ஒவ்வொன்றுக்கும் ஒரு புராணக் கதையை எழுதி மக்களை மடையராக்கி ஏற்கும்படிச் செய்தனர்.
ஜாதிகளை உருவாக்கல்:
அரசர்களை அண்டி செல்வாக்கு பெற்ற ஆரிய பார்ப்பனர்கள், கடவுள்களை உருவாக்கி மக்களிடமும் செல்வாக்கு பெற்று ஆதிக்கம் செலுத்தினர். உயர் தகுதி பெற்றனர்.
தமிழரிடையே மதிப்பும், உயர்வும் பெற்ற ஆரியர்கள் அந்த மதிப்பையும் உயர்வையும் நிலையாக உறுதிப்படுத்திக் கொள்ளவும், தங்களுக்குப் பாதுகாப்பு தேடிக் கொள்ளவும் ஒற்றுமையாய் உள்ள தமிழர்களைப் பிரித்து வைக்கவும் திட்டமிட்டனர்.
இந்த முடிவின்படி, தமிழரைப் பிரிக்க அவர்களிடையே சாதிப் பாகுபாட்டை உருவாக்குவதே சரியான வழியென்று முடிவு செய்தனர்.
தமிழர்களிடையே இருந்த இயற்கை வணக்கத்தையும், பெரியவர்கள் வழிபாட்டையும் கடவுள் வழிபாடாக மாற்றிய ஆரியர்கள், அதே வகையில் தமிழர்களிடையே இருந்த தொழில் அடிப்படையிலான பாகுபாட்டையும் சாதி-களாக ஆக்க முடிவு செய்தனர்.
ஆரம்பத்தில் தமிழர்கள் செய்து வந்த பார்ப்புத் தொழிலை ஆரியர்கள் தங்களுடை-யதாக ஆக்கிக் கொண்டு பார்ப்பனர்கள் ஆனதுபோல, நாளடைவில் அந்தணப் பணியையும் மேற்கொண்டு செய்ய ஆரம்பித்தவர்கள் அந்தணர்கள் என்றாலே ஆரியர்கள்தான் என்றாகிவிட்டனர்.
தமிழர்கள் அந்தணர் பணி செய்யும்போது அவர்கள் சமுதாயப் பணியினைச் செய்தனர். ஆனால், ஆரியர்கள் அந்தணர் பணி செய்ய ஆரம்பித்தபின், அந்தணர் பணியை சமயப் பணியாக்கிவிட்டனர். கடவுள் பணி, கடவுள் கொள்கையைப் பரப்புதல், சடங்குகள் செய்தல், யாகங்கள் நடத்துதல் போன்றவை அந்தணர்-களுக்கு உரியது என்று ஆக்கிவிட்டனர்.
ஆரியர்கள் அந்தணர்கள் ஆனபிறகு தமிழரிடையே இருந்தத் தொழில் பிரிவு மூன்றாக ஆனது.
அதாவது, அரசர், வணிகர், வேளாளர் என்ற பிரிவுகளே தமிழரிடம் இருந்தன.
இந்நிலையில், கடவுள் பணி செய்கின்றவர்கள், அரசு புரிகின்றவர்கள், வணிகம் செய்கின்றவர்-கள், வேளாண்மை செய்கின்றவர்கள் என்கிற தொழில் பிரிவுகள் தமிழ்நாட்டில் நிலவின.
அதாவது, ஆரியர்கள் செல்வாக்கடைந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டில் 1. தமிழர், 2.ஆரியர் என்ற இரு இனப்பிரிவும், தமிழர்களிடையே 1.அரசர், 2.வணிகர், 3. வேளாளர் என்ற தொழில் பிரிவும் காணப்பட்டன.
சாதியை உருவாக்கி தமிழர்களிடையே பிரிவினையை ஏற்படுத்தத் திட்டமிட்ட ஆரியர்கள். இந்த நான்கு பிரிவையும் (1.ஆரியர், 2.அரசர், 3.வணிகர், 4.வேளாளர்) நான்கு வருணங்களாக ஆக்கத் திட்டமிட்டனர்.
தமிழர்களிடையே முன்கூட்டியே புராண நம்பிக்கையையும், கடவுள் நம்பிக்கையையும் உருவாக்கியிருந்த ஆரியர்கள். அந்த நம்பிக்கை-களின் அடிப்படையில் சாதியைப் பிரிக்கவும் முடிவு செய்தனர்.
பிரம்மாவின் முகத்தில் பிறந்தவர்கள் ஆரியர்கள் என்றும், தோளில் பிறந்தவர்கள் அரசர்கள் என்றும், தொடையில் பிறந்தவர்கள் வணிகர்கள் என்றும், காலில் பிறந்தவர்கள் வேளாளர்கள் என்றும் கதையைச் சொல்லி வந்தனர்.
மேற்கண்ட பிரிவுகளுக்கு முறையே 1.பிராமணன், 2.ஷத்திரியன், 3.வைசியன், 4.சூத்திரன் என்று வருணப் பெயரைச் சூட்டினர்.
பிரம்மனுக்குத்தான் நான்கு முகம் என்-கின்றாயே ஏனடா நான்கு சாதியினரும் நான்கு முகத்தில் பிறக்கக் கூடாது என்று ஆரியனைப் பார்த்து கேட்கின்ற அளவிற்கு அன்றைய தமிழனுக்கு விழிப்புணர்ச்சி இல்லாமல் போய்விட்டது. பக்தியினால் பகுத்தறிவுப் பார்வையின்றி போய்விட்டான்.
இன்றைக்குக்கூட எல்லாத் தமிழர்களுக்கும் அந்தக் கேள்வியைக் கேட்கக்கூடிய அளவிற்கு விழிப்புணர்ச்சி வரவில்லையே!
பிரம்மனால் மேற்கண்ட நான்கு குலங்களும் உருவாக்கப்பட்டன என்று கூறியது மட்டுமல்ல. ஒவ்வொரு குலத்தவரும் தத்தம் தொழிலையே செய்ய வேண்டும்; ஒருவன் தன் குலத்தை இப்பிறவியில் மாற்ற முடியாது; எல்லா குலத்தினும் உயர்ந்தது பிராமண குலமே. காரணம் பிராமணன் முகத்தில் பிறந்தவன்; கடவுளுக்குத் தொண்டு செய்யத் தகுதி படைத்தவன் என்று சாஸ்திரங்களில் சட்டங்-களையும் உருவாக்கினர்.
கடைச்சங்க காலத்தில் ஆரியர்களால் உருவாக்கப்பட்ட இந்த வருணப் பிரிவு (குலப்பிரிவு) 16ஆம் நூற்றாண்டில் நல்ல வலுப்பெற்றது.
ஆரியர்கள், மற்ற மூன்று பிரிவினர்களிடமும் முறையே, தீண்டாமை (Untouchability), அண்டாமை (Unapproachability), காணாமை (Unseeabilty) என்ற மூன்றுவித நடை-முறைகளைக் கடைப்பிடித்தனர்.
தொழில் அடிப்படையில் மட்டுமே வேறு-பட்டிருந்த தமிழர்களை, ஆரியர்கள் தங்கள் சுயநலத்திற்காக பல சாதியினராகப் பிரித்து அவர்கள் ஒற்றுமையைக் குலைத்தனர். இவ்வாறு ஆரியர்களால் உருவாக்கப்பட்ட சாதிப் பிரிவுகள் நாளடைவில் மேலும் மேலும் சிதைந்து பல்வேறு சாதிகள் உருவாயின. ஒருவருக்கு ஒருவர் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற எண்ணமும், ஒருவருக்கொருவர் திருமண உறவு வைத்துக் கொள்வதில்லை என்ற வழக்கமும் வலுவடைய ஆரம்பித்தன.
-உண்மை,16-31.1.16