பக்கங்கள்

செவ்வாய், 5 மார்ச், 2019

கீழடியில் கிடைத்த தொல்பொருள்கள் 2500 ஆண்டுகள் பழைமையானது

சிவகங்கை, பிப்.27  சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழாய்வு செய்த போது கிடைத்த தொல் பொருள்களை நவீன தொழில்நுட்ப முறையில் சோதனை செய்ததில் சுமார் 2500 ஆண்டுகள் பழை மையானது என தெரிய வந்துள்ளது என தமிழ்நாடு அரசின் முதன்மைச் செய லரும், தொல்லியல் துறை ஆணையரு மான த.உதயச்சந்திரன் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் பூவந்தியில் உள்ள மதுரை சிவகாசி நாடார் பயோ னியர் மீனாட்சி பெண்கள் கல்லூரியில் தமிழக கல்வெட்டியல் மற்றும் தொல் லியல் துறை சார்பில் பயிலரங்க தொடக்க விழா மற்றும் புகைப்படக் கண்காட்சி தொடக்க விழா நடைபெற்றது.

தொல்லியல் துறை  ஆணையர் த.உதயச்சந்திரன் கருத்தரங்கைத் தொடக்கி வைத்து பேசியது: தமிழகத்தில் ஏற்கெனவே அகழாய்வுப் பணிகளில் கிடைத்துள்ள தொல் பொருள் களை இன்றைய நவீன தொழில் நுட்பம் மற்றும் அறிவியல் ரீதியாக ஆராய்ச்சி செய்து உலக அரங்கில் தமிழ்ச் சமூகம் மிகத் தொன்மையான சமூகம் என்பதை வெளிக் கொண்டு வரப்படும்.

கீழடியில் தற்போது நவீன தொழில் நுட்பக் கருவியான டிரோன் மூலம் பூமிக்கடியில் 7 முதல் 10 மீட்டர் ஆழம் வரை ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தேவையான இடங் களில் மட்டுமே அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. கீழடியில் விலங்கின் எலும்புகள் கிடைத்துள்ளன. அவை டிஎன்ஏ ஆய்வுக்கு உட்படுத்தப் படும். திருவள்ளூர் மாவட்டம் அத்திரம் பாக்கத்தில் பழங்கால மனிதர்கள் பயன் படுத்திய கற்காலக் கருவிகள் கண் டெடுக்கப்பட்டன.

இதை ஆராய்ச்சி செய்த போது சுமார் 15 லட்சம் ஆண்டுகள் பழைமையானது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இது இந்திய அளவில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் மிக பழைமையான நாகரிகத்தை எடுத்துக் காட்டுகிறது.

அமெரிக்காவில் புளோரிடா என்னும் பகுதியில் செயல்பட்டு வரும் பீட்டா ஆய்வகம் கீழடி பகுதியில் கிடைத்த தொல்பொருள்களை ஆய்வு செய்ததில் 2500 ஆண்டுகள் பழைமையானது என ஆய்வு முடிவாகத் தெரிவித்துள்ளது. ஆகவே கீழடி பகுதி சார்ந்துள்ள வைகையாற்றங்கரையின் நகர, நாகரிகம் சுமார் 2500 ஆண்டுகள்  பழைமையானது என தெரிய வந்துள்ளது என்றார்.

- விடுதலை நாளேடு, 27.2.19

வெள்ளி, 1 மார்ச், 2019

’திருக்குறள் மனுதர்மத்தின் சாரமா?’- க.கலைமணி

பார்ப்பனர் நாகசாமியின் ஆங்கில நூலுக்குப் பதிலடி!


க.கலைமணி




“எதிர்த்து அழிக்கமுடியாத ஆரியம் அணைத்து அழித்துவிடும்.’’ அவ்வாறே பவுத்தத்தை அழித்தார்கள். திருக்குறளை  அணைத்து தமது மனுதர்மச் சிந்தனைகளைப் புகுத்தும் முயற்சியில் முன்பு பரிமேலழகர் இருந்தார். அப்பணியை மேற்கொண்டுள்ளார் மேனாள் தொல்பொருள் ஆய்வுத் துறை இயக்குநர் நாகசாமி என்ற பார்ப்பனர். அவர்  “திருக்குறள் மனுதர்மத்தின் சாரம்’’ கருத்தை உள்ளடக்கிய ஆங்கிலத்தில் நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். பார்ப்பனர் நாகசாமியின் இந்த விஷமத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னைப் பெரியார் திடலில் 7.11.2018 அன்று மாலை 7 மணிக்கு சிறப்புப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் வரவேற்புரையாற்றினார். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை வகித்தார். முனைவர் மறைமலை இலக்குவனார், எழுத்தாளர் பழ.கருப்பையா, திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுபவீரபாண்டியன் ஆகியோர் உரையாற்றினர். மன்றத்தின் மாநிலத் துணைத் தலைவர் கோ.ஒளிவண்ணன் நன்றி கூறினார்.

சுபவீ அவர்கள், அந்தணர் என்ற சொல்லுக்கு நாகசாமி எழுதியுள்ளதை விளக்கி வேறு குறளில் வள்ளுவர் கூறும் விளக்கத்தையும் கூறினார். நாகசாமியின் இந்த நூல் விமர்ச்சிக்கப்படுவதைவிட கொளுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார், உரை ஓர் ஆய்வுரையாக அமைந்திருந்தது என்றே சொல்லவேண்டும். “நாகசாமி நூலுக்கு ஒரு மறுப்பு நூல் எழுத வேண்டும் என்று தாய் உள்ளக் கனிவோடு ஆசிரியர் பெருந்தகை எனக்கு அன்புக் கட்டளை இட்டுள்ளார். அந்தப் பணியை விரைவில் முடிப்பேன் என்று சொன்னபோது மிகப் பெரிய வரவேற்பு பார்வையாளர்கள் மத்தியில். தர்ம சாத்திரங்களை எழுதியவர்கள் பார்ப்பனர்கள். அற நூல்கள் தமிழருக்குரியவை. சமஸ்-கிருதத்தில் தர்க்க நூல்கள் உண்டு. அவை எல்லாம் மறைக்கப்பட்டு தர்ம சாஸ்திரங்கள் என்னும் வருணதர்மத்தை வலியுறுத்தும் நூல்களை தூக்கிக் பிடிக்கக் கூடாது’’ என்றார் பேராசிரியர் மறைமலை இலக்குவனார்.

எழுத்தாளர் பழ. கருப்பையா அவர்கள், “இன்றைக்கு நாகசாமிகள் எழுதுகிறார்கள் என்றால் இதற்கு மூலம் பரிமேலழகர்தான். பரிமேலழகர் பார்ப்பனத்தனத்துடன் பல இடங்களில் நடந்து கொண்டுள்ளார். நாகசாமியின் இந்த நூலைப் பற்றி _ பார்ப்பன ஆதிக்கப் பண்பாட்டைப் பற்றி எல்லாக் கட்சித் தலைவர்களும் பேச வேண்டும். எல்லாக் கட்சிகளிலும் உள்ள இலக்கிய அணிகளும் கண்டிக்க வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தமது உரையில் “நாகசாமிக்கு இவ்வளவு பச்சையாகத் தமிழர்களை எதிர்த்து உண்மைக்குப் புறம்பாக பச்சைப் பார்ப்பனத் தனத்துடன் நூல் எழுதும் துணிவு எப்படி வந்தது? நாகசாமி என்ற ஒரு தனி மனிதர் இப்படியொரு நூலை எழுதியுள்ளார் என்று தவறாகக் கருதக்கூடாது. திட்டமிட்டே ஒரு வட்டாரம் _ ஒரு லாபி இதனைச் செய்கிறது. இந்த வேலையைச் செய்வதற்காகவே கோடிக்கணக்கில் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்-பட்டுள்ளது. ஏன் ஆங்கிலத்தில் திருக்குறளைப் பற்றிப் பொய்யும், புனை சுருட்டுமாக எழுதுகிறார்? உலகம் பூராவும் பரப்புவதற்குத்தான். பார்ப்பனர்களின் இந்தச் சூழ்ச்சிகளை எல்லாம் பெரியாரின் ஈரோட்டுக் கண்ணாடி போட்டுப் பார்த்தால்-தான் புரியும்.

குறளில் கடவுள் இல்லை, மதம் இல்லை, ஜாதி இல்லை, கோயில் என்ற வார்த்தை இல்லை. சங்க இலக்கியங்களிலும் முப்பால், நாற்பால் கிடையாது. குறளுக்கு மரியாதை வந்துவிடக் கூடாது. குறள் மூலம் தமிழினத்துக்கு சிறப்பு ஏற்பட்டு விடவும் கூடாது. அதற்கு ஒரே வழி அந்தக் குறள் என்பது மனுதர்மத்தைப் பார்த்துக் காப்பியடித்தது என்று சொல்லிவிட்டால் தீர்ந்தது கதை _ இதுதான் பார்ப்பனர்களின் அணுகுமுறை _ சூழ்ச்சி முறை’’ என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

-  உண்மை இதழ், 16-30.11.18