பக்கங்கள்

பெயர் பலகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெயர் பலகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 16 பிப்ரவரி, 2019

அரசு அலுவலகங்கள், கடைகளில் தமிழில் பெயர் பலகை அரசாணை அமல்படுத்தப்பட்ட விவரம் தெரிவிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை, பிப்.16 அரசு அலுவலகங்கள், தனியார் கடைகளில் தமிழில் பெயர் பலகை வைப்பது தொடர்பாக, அரசின் அரசாணையை அமல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, தமிழ் ஆட்சி மொழி மற்றும் பண்பாட்டுத்துறை செயலர் மார்ச் 8இல் பதிலளிக்க வேண்டுமென உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ராமநாதபுரத்தை சேர்ந்த   திருமுருகன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்கள்,  தனியார்  கடைகள்,  தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்துவிதமான அலுவலகங்கள்,  கடைகளில்  தமிழக அரசின் அர சாணைப்படி,  5:3:2 என்ற விகிதத்தில்  தூய தமிழ்,  ஆங்கிலம்,  பிறமொழியில் எழுதப்பட்ட பெயர் பலகைகள் தான் கடைகளுக்கு முன் வைத்திருக்க வேண்டும்.  இந்த அரசாணையை அமல்படுத்தக் கோரி உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

ஸ்டோர்ஸ், பேக்கரி,  மெடிக்கல் ஷாப், சில்க்ஸ், ஓட்டல்  என ஆங்கில வார்த்தைகளை தமிழில் எழுதி உள்ளனர். இவற்றை மாற்றி  அங்காடி, அடுமனை,  மருந்துக்கடை,  பட்டு மாளிகை,  உணவகம் என தமிழில்  பெயர்  இருக்க வேண்டும். ஆனால் அந்த ஆங்கில வார்த்தைகளை தமிழில் மொழி பெயர்த்து எழுதியுள்ளனர். எனவே, தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்கள்,  தனியார்  கடைகள்,  தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்துவிதமான அலுவலகங்கள்,  கடைகளில்  அரசின் அரசாணைப்படி,  5:3:2 என்ற விகிதத்தில் தூய தமிழில் கடையின் பெயர் பலகை  எழுத உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அனைத்து விதமான அலுவலகங்கள்,  கடைகளில்  தமிழக அரசின் அரசாணைப்படி,  தூய தமிழில் பெயர் பலகை  எழுத வேண்டும் என்ற அரசாணையை அமல் படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழ் ஆட்சி மொழி மற்றும் பண்பாட்டுத்துறை செயலர்  மார்ச்  8ல்  பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
- விடுதலை நாளேடு, 16.2.19

செவ்வாய், 18 டிசம்பர், 2018

தலைமைச் செயலகத்திலேயே தமிழ் கிடையாதா

*"விடுதலை" நாளிதழ் தலைப்புரை (18.12.2018)*
-------------------------------------------------------
*"தலைமைச் செயலகத்திலேயே தமிழ் கிடையாதா?"*

தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள், தமிழில் இடம்பெற வேண்டும். தேவையானால், தமிழின் எழுத்து அளவை விட சிறிதாக, ஆங்கிலத்தில் பெயர் இடம்பெறலாம் என, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து, பல ஆண்டுகள் ஆகி விட்டன.

ஆனால் அதை, தனியார் நிறுவனங்கள் மீறி வந்த நிலையில், தற்போது தமிழக அரசு செயல்படும் தலைமைச் செயலகத்திலேயே, தமிழ் புறக்கணிக்கப் படும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளதை, அறிய முடிகிறது. சென்னை, தமிழக அரசின் தலைமைச் செயலக வளாகத்தில் அமைந்துள்ளது, நாமக்கல் மாளிகை. இங்கு, அரசு துறை செயலர்களுக்கான அலுவலகங்கள் உள்ளன. 10 மாடி கட்டடத்தில், எங்கும் தமிழ் சொற்களே இல்லை எனும் அளவிற்கு, அனைத்திலும் ஆங்கிலமே இடம் பெற்று உள்ளது.

இதுகுறித்து, தமிழ் அறிஞர்கள் கூறியதாவது:

தமிழகத்தில், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டம், 1947 - 15 மற்றும், 1958ஆம் ஆண்டு, தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் சட்டம், 42 பி ஆகியவற்றின் படி, நிறுவனத்தின் பெயர் பலகைகள், தமிழில் இருக்க வேண்டும்.ஆங்கிலத்திலோ, பிற மொழியிலோ, பெயர்ப்பலகை எழுதும் அவசியம் ஏற்பட்டால், தமிழ், ஆங்கிலம், பிறமொழி என, முறையே, 5 : 3 : 2 என்ற அளவில், எழுத்து அளவு இருக்க வேண்டும் என, விதி உள்ளது. இதை, தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை கண்டுகொள்வதில்லை. இதனால், தமிழகத்தில் உள்ள, 50 சதவீத வணிக நிறுவனங்களில், ஆங்கிலம் மட்டுமே இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து, தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநரிடம், நாங்கள் புகார் அளித்தோம். இந்நிலையில், தமிழக அரசு செயல்படும் தலைமைச் செயலகத்திலேயே, ஆங்கிலம் மட்டுமே இடம்பெற்றுள்ளது, அதிர்ச்சியை அளிக்கிறது. மேலும், அங்கிருந்து அனுப்பப்படும் அறிக்கை மற்றும் கடிதங்களும், ஆங்கிலத்திலேயே உள்ளன. நம் தாய் மொழியை புறக்கணித்து, பிற மொழிக்கு, நம் அரசு அக்கறை காட்டுகிறதோ... என, சந்தேகம் எழுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது குறித்து, தலைமைச் செயலக அதிகாரிகள் கூறியதாவது:

தமிழ் வளர்ச்சித் துறையின் துணை இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர்கள், அவர்களின் பகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கடை உரிமையாளர்களிடம், சட்டத்தை எடுத்துக் கூறி, ஒரு மாதத்திற்குள், தமிழில் பெயர்ப்பலகை வைக்க வேண்டும் என, வலியுறுத்தி உள்ளனர்.

தமிழில், பெயர்ப்பலகை வைத்த கடை உரிமை யாளருக்கு, பாராட்டுப் பத்திரங்களை வழங்கி வருகிறோம்.

தலைமைச் செயலகத்தில், தற்போது புதிய பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. விரைவில், தமிழிலும் பெயர் பலகை வைக்க, நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

- (தினமலர், 06.12.2018)

தினமலரிலேயே இப்படியொரு செய்தி வெளி வந்துள்ளது.

தமிழ்மொழியை செம்மொழியாக்க சட்டம் கொண்டு வந்தால் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக் கெடுத்து ஓடும்; ஏழை நெசவாளர் வீட்டுத்தறி நிற்காமல் இயங்கும்; ஒரு வேளை கஞ்சிக்கே வழி இல்லாதவர்களுக்கு மூன்று வேளை மட்டன் பிரியாணி கிடைக்கும் ('தினமலர்' வார மலர் 13.6.2004) என்று கேலி செய்த தினமலரே சுட்டிக் காட்டும் அளவுக்குத் தமிழ் நாட்டில், அதுவும் அரசின் தலைமைச் செயலகத்தில் தமிழைக் காண முடியவில்லை என்று எழுதுகிறது என்றால் இந்த நிலை மிகவும் தலையிறக்கம் தான்! தமிழ் வளர்ச்சித்துறை என்ன செய்கிறது? செய்தி விளம்பரத்துறை என்னதான் செய்து கொண்டுள்ளது? நம் மக்களிடம் பெரும்பாலும் சி.பி.எஸ்.இ. மனப் பான்மைதான் கோலோச்சுகிறது!

தமிழ் வளர்ச்சிக்கென்று ஓர் அமைச்சர் இருக்கிறாரே - 'தினமலர்' செய்தி அவர் கவனத்துக்கு வரவில்லையா?

எது எதற்குத்தான் போராடுவது என்று தெரிய வில்லை....

ஒவ்வொன்றுக் காகவுமா போராட முடியும்? ஒட்டு மொத்த ஆட்சி மாற்றமே நிலையான தீர்வு.

*நன்றி : "விடுதலை" நாளிதழ் தலைப்புரை 18.12.2018*

ஞாயிறு, 16 டிசம்பர், 2018

பெயர் பலகைகளில் தமிழில் எழுதுவதை ஊக்குவிக்க வேண்டும்: ஆட்சியர்

கிருஷ்ணகிரி, டிச.9  கிருஷ்ணகிரியில் ஆட்சியர் அலுவல கத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஆட்சி மொழி கருத்தரங்கு நிறைவு விழா நடந்தது. இதற்கு ஆட்சியர் பிரபாகர் தலைமை தாங்கினார். அகரமுதலி திட்ட இயக்குனர் செழியன், தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் ஜெயஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கலெக்டர் பிரபாகர் பேசியதாவது:-


தமிழகத்தில் ஆட்சி மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என தமிழ் அறிஞர்களும், தலைவர்களும், பல போராட்டங்ளை நடத்தி 1956ஆம் ஆண்டு தமிழ் ஆட்சி மொழி சட்டம் இயற்றப்பட்டது. அதிக அளவில் மக்களுக்கும், அரசிற்கும் இடையே நிர்வாக நடைமுறைகள் ஒளிவுமறைவின்றி நடைபெறவும், பல்வேறு அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தமிழில் மட்டுமே கையொப்பம் இட வேண்டும் என 1978ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டுள்ளது. எனவே அரசு துறையில் பணியாற்றும் அலுவலர்கள் பணி யாளர்கள், தமிழில் மட்டுமே கை யொப்பம் இட வேண்டும்.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள், உணவகங்கள், வணிக நிறுவனங்கள், பெயர் பலகைகளில் தமிழில் எழுதுவதை ஊக்குவிக்க வேண்டும். அலுவலர்கள் கோப்புகளை பராமரிக்கும் போது தவறு இல்லாமல் அலுவலக குறிப்பு கடித போக்குவரத்து பதிவேடுகள், சிறப்பாக கையாண்டு புதிதாக உள்ள சொற்களை தமிழில் சிறப்பாக எழுதி கோப்புகளை கையாள வேண்டும். மொழியின் வாழ்வும் வளர்ச்சியும், பயன்பாட்டை பொருத்தே அமையும் என்பதால் எங்கும், எதிலும் தமிழ்மொழியை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தொடர்ந்து அலுவலக கோப்புகளை தமிழில் சிறப்பாக கையாண்ட மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கருக்கு கலெக்டர் பிரபாகர் கேடயம் வழங்கி பாராட்டினார்.


-  விடுதலை நாளேடு, 9.12.18

திங்கள், 10 டிசம்பர், 2018

தமிழில் பெயர் பலகை வைக்கும் அரசாணையை அமல்படுத்தாததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முதன்மை செயலருக்கு தாக்கீது

மதுரை, டிச.10  தமிழில் பெயர் பலகை வைக்கும் அரசாணையை அமல்படுத்தாததால், தொடரப் பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அரசு முதன்மை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றக் கிளை உத்தர விட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், மோர்பண்ணையை சேர்ந்த வழக் குரைஞர் திருமுருகன், உயர்நீதி மன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்திலுள்ள பெரும்பாலான வணிக நிறுவ னங்கள், பன்னாட்டு நிறுவனங் கள் தங்களின் நிறுவன பெயர் பலகைகளை தமிழில் வைக் காமல் ஆங்கிலத்தில் மட்டுமே வைத்துள்ளன.

கருநாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் பெயர் பலகைகள் அனைத்தும் அந்த மாநில மொழியிலேயே வைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் 1987 அரசாணைப் படி ஆட்சி மொழியான தமிழ் மொழியை, அனைத்து அரசு அலுவலகங்கள், தனியார் கடைகள் மற்றும் நிறுவனங்களில் முதல் மொழியாக பயன்படுத்த வேண்டும். ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழிகளை பயன்படுத்து வதாக இருந்தால் தமிழ் மொழி யின் கீழ் 5:3:2 என்ற விகிதத்தில் பயன்படுத்த வேண்டும்.

ஆனால், இந்த அரசாணையை தமிழகத்தில் யாரும் பின்பற்ற வில்லை. இது தமிழ் மொழியை அவமதிக்கும் செயல். எனவே, அரசாணையை பின்பற்றி பெயர் பலகைகளை உரிய விகிதப்படி தமிழ் மொழியில் வைக்க உத்தர விடக்கோரி ஏற்கெனவே மனு செய்திருந்தேன். அதில், அர சாணையை முறையாக அமல் படுத்த தமிழ் பண்பாடு மற்றும் கலாசாரத்துறை முதன்மை செயலர் 4 மாதத்திற்குள் நட வடிக்கை எடுக்க கடந்தாண்டு ஜூலையில் உத்தரவிடப்பட்டது.

ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இதற்கு காரணமான அதிகாரி மீது நீதிமன்ற அவமதிப் பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.  இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமி நாதன் ஆகியோர், மனு குறித்து தமிழ் மொழி மற்றும் கலாச் சாரத் துறை முதன்மை செயலர் வெங்க டேசனுக்கு தாக்கீது அனுப்ப உத் தரவிட்டு, விசாரணையை டிச.19க்கு தள்ளி வைத்தனர்.

-  விடுதலை நாளேடு, 10.12.18

செவ்வாய், 13 நவம்பர், 2018

தமிழில் பெயர் பலகை: ஆய்வுக்கு உத்தரவு



திண்டுக்கல், நவ. 13- 'தமிழக கடைகள், உணவகங்கள், வணிகநிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழில் உள்ளதா...' என, ஆய்வு செய்து, அறிக்கை அனுப்ப அலுவலர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக கடைகள், உணவ கங்கள் மற்றும் வணிக நிறுவ னங்களின் பெயர் பலகைகள் தமிழில் இருக்க வேண்டும். மேலும், 5:3:2 விகிதாச்சார அடிப்படையில் தமிழ், ஆங்கி லம் மற்றும் பிற மொழிகளில் பெயர் இடம் பெற வேண்டும். இவை அனைத்தும், ஒரே பெயர் பலகையில் இருக்க வேண்டும். ஆனால், பல நிறுவன பெயர் பலகைகள் ஆங்கிலம் மற்றும் பிற மொழி களில் எழுதப்படுகின்றன. அந் நிறுவனங்களிடம், 50 ரூபாய் மட்டுமே அபராதமாக வசூலிக் கப்படுகிறது. அதனால், பலரும் தமிழில் பெயர் பலகை வைக்காமல் அலட்சியமாக உள்ளனர். எனவே, தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனரகம் புதிய உத்தரவை பிறப்பித்து உள்ளது.

அதில், தமிழ் வளர்ச்சித் துறை அலுவலர்கள், மாதந்தோ றும் அரசு அலுவலகங்கள் மற் றும் 100 கடைகள், வணிக நிறு வனங்களில் ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப வேண்டும். தமிழில் பெயர் பலகை வைக் காத, நிறுவனங்களின் விவரம் தொழிலாளர் துறை ஆணைய ருக்கு அனுப்பப்படும். அவர் கள் மூலம் வழக்கு பதிவு செய் யப்படும் என, உத்தரவிடப் பட்டுள்ளது.

- விடுதலை நாளேடு, 13.11.18