பக்கங்கள்

ஞாயிறு, 25 அக்டோபர், 2015

தமிழ்ப் பதிப்பின் தலைமகன்

ஆங்கிலேயர் வருகையாலும் அய்ரோப்பிய கிறித்தவப் பாதிரி மார்கள் முயற்சியாலும் நூல்கள் அச்சு ஊர்தியேறி உலா வந்தன. தமிழ்நூல் ஒன்றுதான் முதன் முதலாக இந்திய மொழிகளிலேயே அச்சேறிற்று என்பது வரலாறு. அந்நூல் 1557 _ இல் கொல்லத்தில் அச்சடிக்கப்பட்டது. அந்நூலின் பெயர் தம்பிரான் வணக்கம். (Doctrina Christam) என்பது. இது, பதினாறு பக்கங்கள் மட்டும் கொண்ட சமய வினா விடை அமைப்பையுடையது. போர்ச்சுக்கீசிய மொழியிலிருந்த இந்நூற்செய்தியைத் தமிழில் மொழி பெயர்த்தவர் ஹென்றி குவிஸ் என்னும் பாதிரியாராவார். தமிழ் நூல்களை அச்சுவயப்படுத்தும் பணியில் முன்நின்ற வரலாற்றுப் பெருமகனாக ஆறுமுக நாவலர் அவர்களே நமக்குத் தெரிகின்றார். கிறித்தவச் சமயத்தைப் பரப்ப கிறித்தவக் குருமார்கள் கையாண்ட அச்சு முயற்சியே ஆறுமுக நாவலர் அவர்கட்குச் சைவம் பரப்ப வழிகாட்டியாய் இருந்தது. இன்றைய உலகம் உற்று நோக்கும் தமிழீழத்தின் யாழ்ப்பாணத்தில் பிறந்த ஆறுமுக நாவலர் அவர்களை ஒட்டியே, தாமோதரர் வாழ்வும் பல்வேறு ஒற்றுமைகளுடன் தொடர்ந்தது.
தாமோதரர் கல்வியும், பணியும் யாழ்ப்பாணத்தில் உள்ள சிறுப்பிட்டி என்னும் சிற்றூரில் 12.9.1832 _ ஆம் நாளில் வைரவநாதர் _ பெருந்தேவி ஆகியோர்க்கு மகனாய்ப் பிறந்தார் தாமோதரர். இவருடன் உடன்பிறந்தவர் எழுவர். இவருள் மூத்தவர் சி.வை.தா. சி.வை.தாவின் தந்தையார் ஓர் ஆசிரியர். ஆதலால் தொடக்கக் கல்வி யும் அறநூல்கள், நிகண்டு நூல்கள் போன்றனவும் தந்தை வழியே இவருக்குக் கிடைத்தன. மேனிலைக் கல்வியைத் தந்தவர் சுன்னாகம் முத்துக்குமர நாவலர்.
தமிழ்க் கல்வியில் வேரூன்றிய தாமோதரர், 12 _ ஆம் அகவையின் 1844 தொடங்கி 1852 முடிய எட்டாண்டுகள் தெல்லிப்பழை மிசன் பாடசாலை, வட்டுக் கோட் டைக் கல்வி நிலையம், யாழ்ப்பாணப் பல்கலைக் கல்லூரி ஆகியவற்றில் ஆங்கிலக் கல்வியைக் கற்றார்.
1852 _ இல் கல்வி முடித்த கையோடு 20 ஆம் அகவையில் கோப்பாய் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் தாமோதரர் ஆசிரியரானார். 1856 இல் ஆறுமுக நாவலரின் ஆங்கில ஆசிரியரும் கிறித்தவ மறைநூல் விவிலியத்தை ஆறுமுக நாவலர் கொண்டு தமிழில் மொழிபெயர்ப்புச் செய்வித்து வெளியிட்டவரும் ஆகிய பெர்சிவல் பாதிரியார் சென்னையில் தொடங்கிய தினவர்த்த மானிக்கு ஆசிரியர் பொறுப்பேற்றார்.
சென்னை வாழ்வில் 1856 _ இல் புகுந்த தாமோதரர் 1857 _ இல் சென்னை மாநிலக் கல்லூரியின் தமிழாசிரியப் பொறுப் பேற்றார். அத்துடன் அதே ஆண்டு அங்குத் தொடங்கிய பி.ஏ. பட்ட வகுப்பில் சேர்ந்து தேர்வெழுதிச் சென்னைப் பல்லைக் கழகத்தின் முதல் பட்ட தாரியானார்.
கள்ளிக்கோட்டை அரசினர் கல்லூரிக்குச் சென்னை மாநிலக் கல்லூரியிலிருந்து பணிமாற்றம் பெற்றுச் சென்ற தாமோதரர், தம் 39 _ ஆம் அகவையில் 1871 _ இல் பி.எல். பட்டமும் பெற்றார். 50 ஆம் அக வையில் 1882 ஆம் ஆண்டு அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற சி.வை.தா. 1884 _ இல், தாம் பெற்றிருந்த சட்டக்கல்வியின் சிறப்பால் புதுக்கோட்டை அரசின் முறைமன்ற நடுவரானார். அப்பணி யிலிருந்து 1890 _ இல் ஓய்வு பெற்றார். 1895 _ இல் பெருமக்கள் பலரின் வாழ்த்துக்களுடன் இராவ் பகதூர் பட்டம் பெற்றார். 1901 சனவரி 1 ஆம் நாள் புரசைவாக்கத்தில் தம் 68 ஆம் அகவையில் இயற்கை எய்தினார்.
பதிப்பித்த நூல்களும் அருமைப்பாடும்
சி.வை.தாமோதரரின் பலநிலை தமிழ்ப்பணிகளில் முதன்மையானது அவரின் தமிழ்நூல் பதிப்புப் பணியே. அவரால் பதிப்பித்து வெளியிடப் பட்ட நூல்களும் ஆண்டுகளும் பின்வருமாறு அமைகின்றன.
1. நீதிநெறி விளக்கம் _ 1854, 2. தொல். சேனாவரையம் _ 1868, 3. வீர சோழியம் பெருந்தேவனார் உரை யுடன் _ 1881, 4. இறையனார் களவி யல் _ 1883, 5. தணிகைப்புராணம் _ 1883, 6. தொல். பொருள். நச் _ 1885, 7. கலித்தொகை _ 1887, 8. இலக்கண விளக்கம் _ 1889, 9. சூளாமணி _ 1889, 10. தொல். எழுத்து _ 1891, 11. தொல். சொல்(நச்) _ 1892.
அச்சில் வெளிப்போந்த நூல்களாக இவை அமைய, தாமோ தரர் 1898 _ இல் அக நானூற்றை வெளியிடும் நிலைக்கு அணியப் படுத்தி வைத்திருந்த உண்மையையும் அவர் வரலாற்றுவழி அறிகிறோம்.
சி.வை.தா வெளியிட்ட 11 நூல்களில் தொல்.எழுத்து மகாலிங்க அய்யர் பதிப்புத் தவிர, பிற அனைத்தும் அவரால் மட்டுமே முதன்முதலாக அச்சேற்றப்பட்டன என்பதை நாம் நினைக்க வேண்டும்.
தமிழ்ப் பற்றே பதிப்புப் பணிக்கு அடிப்படை  சி.வை.தாமோதரர்க்கு உயிரு ணர்வில் கலந்து நிறைந்திருந்த தமிழ்ப்பற்றே தமிழ்நூல் பதிப்பு முயற்சிக்குத் தூண்டுகோலாய் இருந் திருக்கின்றது. ஓலைச் சுவடிகளாக இருந்த தமிழ் நூல்களெல்லாம் அழிந்தொழிவதைக் கண்டு அவற்றை அச்சுவடிவில் கொண்டுவர அந் நாளில் யாரும் பெருமுயற்சி செய்யவில்லை. அரிய பணியானதால் எளிதாக யாரும் அப்பணியை மேற்கொண்டு விட முடியவில்லை. யாரும் இப்பணியைச் செய்ய முன் வரவில்லை. ஆயினும் இப்பணி மிக இன்றியமையாததோர் மூலப்பெரும் பணி என்பதை நம் தாமோதரர் அறிந்தபடியால், தாமே அப்பணியைச் செய்து பார்ப்பதென முடிவு கொண்டார்.
நல்ல தமிழ் நூல்களுக்கு வந்த விதியையும் கையெழுத்துப் பிரதி களின் கதியையும் அவை அடைந் திருக்கும் ஸ்திதியையும் பார்த்துச் சகிக்க மாட்டாமையொன்றே என்னை இத்தொழிலில் வலிப்பது
பல பெரும் வித்துவான்கள் இந்நூலை (தொல்காப்பியத்தை) அச்சிட விரும்பியதும் முயன்றதும் இரண்டொரு பிரதிகள் தேடிப் பார்வையிட்டதும் தமக்கு நிகழ்ந்த சந்தேகங்களான இதனை அச்சிடின் தம் பெயர்க்குக் குறைவு நேரிடு மென்றுதம் முயற்சியைக் கை விட்டதும் அடியேன் பூரணமாக அறிவேன். ஆதலால், பண்டிதர், கவிராஜ பண்டிதர், மகாவித்துவான், புலவர் என்றின்ன பெரும் பட்டச் சுமையைத் தலைமேலேற்றிக் கொள்ளாது இன்னும் பலகாலந் தமிழ் படித்தற்கு உரிமை பூண்டு நிற்கும் என் போலியரே இதில் கை யிடுவது பேரவசியமாயிற்று.
மாசு மறுவற்ற தமிழ்ப்பற்றாளர் சி.வை.தா.வின் இக்கூற்றுக்களைத் தமிழின உரிமை மீட்புப் பெருந் தலைவர் தந்தை பெரியார் உரைத்த ஈ.வெ.ராமசாமி என்கின்ற நான் திராவிட சமுதாயத்தை உலகத்தி லுள்ள மற்ற உயர்ந்த சமுதாயம் போல் ஆக்கும்  பொறுப்பை மேற்கொண்டுள்ளேன். இதைச் செய்து முடிப்பதற்கு எனக்கு யோக்கியத்தை இருக்கிறதோ இல்லையோ வேறுயாரும் இதைச் செய்ய முன் வராத காரணத்தால் நானே இப்பொறுப்பை மேற் கொண்டுள்ளேன். இதுவொன்றே எனக்குப் போதுமான தகுதியென்று நான் கருதுகின்றேன். என்ற கருத் துரையுடன் பெரிதும் ஒப்பு நோக்க வேண்டும்.
சி.வை.தாமோதரனார் காலத்தில் தொல்காப்பியம் பொருளதிகாரம் பதிப்பிக்க முயன்றோர் இரண்டொரு பிரதிகளே தேடிப் பணி தொடங்கிக் கைவிட்ட நிலையில் நம் தாமோதரர் தேடித் தொகுத்து வைத்திருந்த சுவடிகள் பன்னிரண்டாகும். அவை, திருநெல்வேலிப் படி, 2. மதுரைப் படி, 2. தஞ்சைப் படி, 3. சென்னைப் பட்டினப் படி, 3. யாழ்ப்பாணப் படி, 2. என்பனவாகும். இப்படிகளெல் லாம் யார் யாரிடமிருந்து பெறப்பட்டன என்பதைச் சி.வை.தா. தொல். பொருள் பதிப்புரையில் குறித்துள்ளார்.
திரவிய லாபத்தை எவ்வாற்றானும் கருதி முயன்றிலேன். கை நஷ்டம் வராதிருப்ப தொன்றே எனக்குப் போதும். இது வரையிற் பதிப்பித்த நூல்களால் எனக்குண்டான நஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல. இவ்வித முயற்சியிற் கையிடுவோர் நஷ்டமுறா திருத்தற் பொருட்டுச் சர்வகலா சாலைப் பரீட்சையிற் தேறி ஆங் காங்கு பெரும் உத்தியோகம் வகித்திருப்போர் தத்தம் சுய பாஷையில் அச்சிடப்படும் பூர்வ கிரந்தங்களில் ஒரு பிரதி வாங்குதல் அவர் கடமை, என்றெண்ணு கின்றேன் என்று மனம் வெதும்பி நைகிறார் தமிழ்த்தாமோதரர்.
திருட்டு வேலை செய்கின்ற ஒருவன் தன்னைப் போலவே எல் லோரும் திருட்டு வேலை செய்யட் டும் என்று சொல்ல மாட்டான். ஆனால் நற்பணிகள் செய்யும் ஒருவனோ தான் செய்யும் பணிகளில் இன்பமும் பிறர்க்கும் இம் மன் பதைக்கும் நலமும் விளைவது கண்டு எல்லோரும் இப்பணியைச் செய்ய வேண்டும் என உலகோர்க்கு அழைப்பு விடுப்பான். மனத்தள விலும் எல்லோரும் இப்பணியைச் செய்தால் உலகம் எப்படியிருக்கும் என்று கருதிக்கொண்டே கரைவான். நம் தாமோதரர் செய்த பணியோ பொதுப்பணி. உலகத் தமிழ் மக் களுக்கு மூலமாகிய அடிப்படைப் பணி. அத்தகைய அரும்பணியை அதன் முழுத்தன்மையும் கருதிச் செய்யத் தொடங்கிச் செய்தவர். ஆதலால், தாம் செய்யும் பணியைத் தமிழ மன்பதையும் செய்யவேண்டு மெனத் துடியாய்த் துடித்து வேண்டு கோள் விடுக்கின்றார்.

தமிழ்ப் பதிப்பின் தலைமகன் (2)

7.9.2013  அன்றைய தொடர்ச்சி....
சங்க மரீஇய நூல்களால் வகுக்கப் பட்ட எட்டுத்தொகை பத்துப்பாட் டுள் எட்டுத்தொகையில் இக் கலித்தொகையும் பத்துப்பாடலுள் திருமுருகாற்றுப்படையுமே இப் பொழுது அச்சில் வந்தன. எஞ்சிய பதினாறனையும் பெயர் மாத்தி ரையானே அறிந்தாற் போதுமா? இவைகளைத் தங்கள் தங்களால் நன்கு மதிக்கப்பட்ட சில வித்து வான்களைக் கொண்டு பரிசோதிப் பித்து வெளியில் வரச் செய்யத்தக்க சீமான்கள் யாரும் இல்லையா! தமிழின் அருமையுணர்ந்த பெரி யோர், மடாதிபதிகள் என்றின்னோர் இவற்றில் கடைக்கண் சாத்துமாறு சரஸ்வதி அனுக்கிரகிப்பாளாக என்பன தாமோதரரின், உள்ள வேட்கையில் சிறு துளிகளேயாகும்.
இவரது (சி.வை.தாமோதரர்) தமிழார்வம் இவர் உள்ளத்தில் மங்கள ஒளியாய்த் திகழ்ந்து ஒரு காலைக் கொருகால் வளர்ந்து முடிவில் பேரொளிப் பிழம்பாகச் சுடர்விட்டு எரிந்தது என்று பிற் காலத்தில் பதிப்புத்துறையில் அரும் பணியாற்றிய வையாபுரிப்பிள்ளை சி.வை.தாவின் உணர்வைத் தொட்டுக் காட்டுவார்.
பிறவிப்பணியே பதிப்புப் பணிதான் உயிர்கள் யாவுமே அறிவுக் கூறு டையன. ஆயின் மாந்தனே அறிவுக் கூர்மையன். ஒவ்வொரு மாந்தனும் கூர்தலறப்படி ஒவ்வொன்றில் கூர் மையாகப் பிறக்கின்றான். அவ் வொன்று என்னவென்று ஒவ்வொரு வரும் தத்தமக்குள் கண்டாக வேண்டும். இயற்கையும் ஒவ்வொன் றில் ஒவ்வோருயிரையும் அவ்வொவ் வொன்றிற்காக இயக்கி வருகின்றது. இஃது மெய்ம்மம். மாந்தப் பிறப்பு இவ்விலக்கு நோக்கியே இயங்கியாகல் வேண்டும். மாடு, மனை, மக்கள், வீடு, உறவு சொத்து என்பன யாவும் ஒவ்வொருவரின் குறிக்கோளுக்கு உறுதுணையே அல்லாமல் அவை முதன்மையாகா. இவ்வகையில், சி.வை.தாமோதரரின் வாழ்க்கையை ஊன்றி நோக்கினால் அவர், தமிழ்நூல் பதிப்புப் பணிக்காகவே பிறந்தவர்; பிறப்பிக்கப்பட்டவர் என்பதை உணரலாம். ஓர் அறிஞன் தன்பணியை எங்குத் தொடங் கினானோ அல்லது எங்குத் தொடங் கும்படி இயற்கை பணித்ததோ அங்கேயே அங்கிருந்தே தன் பணியை முறையாய்த் தொடர்ந்து, தான் மேற் கொண்ட பணியையும் தன்னையும் செழுமைப்படுத்திக் கொள்வான்.
1887 _ இல் கலித்தொகையைப் பதிப்பித்து வெளியிடும் சி.வை. தாமோதரர்க்கு அப்போது அகவை 55. முதல் நூலாக நீதிநெறி விளக் கத்தை 1854 _ இல் வெளியிட்டபோது தாமோதரருக்கு அகவை 22. இளம் அகவையான 22_இல் பதிப்புப் பணியைத் தொடக்கிய சி.வை.தா. அதற்கும் முந்தைய கழியிளம் பருவத்திலேயே தமிழ் ஏடுகளைத் தேடும் பணியை மேற்கொண்டிருந் தார் என்பதை அவரின் கலித் தொகைப் பதிப்பு முன்னுரைவழி அறிந்தோம்.
யான் முப்பத்தைந்து வருஷத்தின் முன் (அஃதாவது 1887 இலிருந்து முப்பத்தைந்தாண்டு முன்பு) பிரமாதீச வருஷம் ஒரு தரம் அருமையான தமிழ் நூல்களைத் தேடி யாழ்ப்பாணத் திலிருந்து இக்கண்டத்தில் வந்து நடமாடியபோது கூடலூரில் மஞ்சக் குப்பத்தில் சண்முக உபாத்தியாய ரென்றோர் வயோதிகரும் புதுச் சேரியில் நெல்லித் தோப்பில் சொக் கலிங்கம் பிள்ளை என்றோர் தமிழ்ப் பண்டிதரும் கலித்தொகை வைத் திருந்தது என் ஞாபகத்திற்கு வர அந்த இடங்களில் சென்று விசாரித்தேன்.
சி.வை.தா. 1887_க்கு முப்பத்தைந்து ஆண்டுக்கு முன் அஃதாவது 1852 _ இல் 20 அகவையராயிருந்தார். அப் பொழுதே அவர் தமிழ் நூல்களின் அருமை உணர்ந்தவராய் இருந்த படியினாலேயே முப்பத்தைந்தாண்டு கடந்த 55 ஆம் அகவையிலும் பழைய நினைவு நிற்கும்படித்தாய் இருந்த தென்பதை இதன்வழி அறிகின்றோம்.
தாமோதரர் 1856 _ இல் தினவர்த் தமானிக்காகத் தம் 24 ஆம் அகவை யில் சென்னைக்கு வந்து சேர்ந்ததன் முன் 1852 ஆம் ஆண்டாகிய 20 ஆம் அகவையில் முதன்முதலாகச் சென்னை வந்திருப்பார்போல் தெரிகின்றது. இவ் விருபதாம் அகவையில் வந்த வருகை, அவர் கலித்தொகை முன்னுரையில் சுட்டியுள்ளதுபோல் தம் தந்தை யாருடன் மேற்கொண்டிருந்த வருகையாகத் தெரிய வருவதால் அதுவே முதல் வருகை என்று கொள்ளலாம். 1856 _ ஆம் ஆண்டின் தினவர்த்தமானிப் பணியைத் தாண்டி 1857 _ இல் மாநிலக் கல்லூரித் தமிழா சிரியப் பணியேற்றபின் உள்ளே உறைந்து கிடந்த தமிழ்நூல் தேடும் வேட்கை மேலும் கிளர்ந்தெழ அடிப் படையாய் அமைந்திருக்க வேண்டு மெனக் கொள்ளலாம். சிறுஅகவை யிலேயே இவையிவை செய்யத்தக்க பணிகள் என மனங்கொண்டிருந்த தாமோதரர்க்கு வாய்ப்பும் வசதியும் வரும்போது வேகம் பிறந்தது இயல்பேயாகும்.
1857 _ இல் மாநிலக் கல்லூரித் தமிழாசிரியப் பணியேற்றபோது தமிழ் கற்பிப்பதற்கு தூய தமிழ் இலக்கண நூலாக ஒன்றும் இல் லாதுபோன மனக் குறைவில்தான் தாமோதரர் தொல்காப்பியப் பதிப் புப்பணியைத் தொடங்கியிருப்பார் போல் தெரிகின்றது. மழவை மகா லிங்க ஐயரின் தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியம் 1848 _ ஆம் ஆண்டளவில் வெளியாகி யிருக்க, ஏனைய சொல்லும் பொரு ளும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து கிடந்ததும் தாமோதரர்க்குத் தொல்காப்பியப் பதிப்பு முதன் மையாகப்பட்டிருக்க வேண்டும். தாமோதரர், பல நூல்களைப் பதித்து வெளியிட்டிருப்பினும் அவர் பெரிதும் விரும்பி உழைத்துப் பாடுபட்டு வெளியிட்டவை தொல் காப்பியமும் கலித்தொகையுமே என லாம். நூற்பதிப்பு வெளியீட்டிலும் பழந்தமிழ் நூற்பதிப்பே அவரைப் பெரிதும் செய்யத் தூண்டிய பதிப் பென்று நாம் கருத வேண்டியுள்ளது.
சி.வை.தாமோதரர் காலம் வரும்வரை எவரும் பழந்தமிழ் நூற்சுவடிகளைத் தேடிப்பதிப்பிக்கும் பணியை மேற்கொள்ளவில்லை. தாமோதரனார்க்கு முன்னர்த் தமிழில் வெளிவந்த பதிப்புப் பணிகள் இவையிவை என்றும், இவற்றுள் தாமோதரர் மேற் கொண்ட தமிழ் நூற்பணி எத்த கையதென்றும் வையாப்புரிப் பிள்ளை மிகத் தெளிவாகத் தம் தமிழ்ச்சுடர் மணிகள் நூலில் தாமோதரர் பற்றிக் கூறுமிடத்துத் தொகுத்துத் தந் துள்ளார்.
ஸ்ரீ ஆறுமுக நாவலர் சைவசமய நூல்கள், குறள், பாரதம் வெளியிடுவ தோடு அமைந்துவிட்டார்கள். வித்வான் தாண்டவராய முதலியார் திவாகரம் முதலிய நூல்களையும் பள்ளி மாணவர்களுக்கு வேண்டும் வசன நூல்களையும் அச்சியற்று வதில் ஒடுங்கிவிட்டார்கள். மழவை மகாலிங்க ஐயர் தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தை நச்சினார்க்கினி யார் உரையோடு பதிப்பித்து வேறு சில நூல்களையும் வெளியிட்டு அத்துடன் நின்றுவிட்டார்கள். களத் தூர் வேதகிரி முதலியார் நாலடி, நைடதம் முதலிய நூல்களை வெளியிட்டு அவ்வளவில் திருப்தி யுற்றார்கள். திருத்தணிகை விசாகப் பெருமாளையர் முதலியோர் குறளுக் குத் தெளிபொருள், பிரபுலிங்கலீலை, சூடாமணி நிகண்டு முதலியவற்றைப் பிரசுரித்து அவ்வளவில் தங்கள் முயற்சியைச் சுருக்கிக் கொண் டார்கள். திருவேங்கட முதலியார் இராசகோபாலப்பிள்ளை முதலான வர்கள் இராமாயணம் வெளியிடு வதிலும் நாலடி முதலியன பதிப் பித்தலிலும் ஈடுபட்டு நின்றனர். ஸ்ரீ உ.வே. சாமிநாத ஐயரவர்கள் அப்பொழுதுதான் சீவகசிந்தாமணிப் பதிப்பு முயற்சியில் போராடிக் கொண்டிருந்தார்கள். ஆகவே, நமது பிள்ளையவர்கள் தன்னந்தனியராய்ப் பண்டைத் தமிழ்ச் செல்வப் புதையலைத் தமிழ் மக்களுக்கு அகழ்ந்தெடுத்து உதவும் பெரும் முயற்சியை மேற்கொண்டனர்.
காரணம், சமய நூல்களெல்லாம் மடங்களாலும் சமயப் பற்றாளர் களாலும் பேணப்பட்டிருந்த நிலையில் பழந்தமிழ் நூற்சுவடிகள் புறக்கணிக்கப்பட்டுக் கிடந்தன. சமயப் பித்தங்கொண்ட ஈசான தேசிகர் திருவாவடு துறையின் மடத்துப்புலவர். இவர் சமய நூல் களை விட்டுவிட்டு சமயம் சாராத நூல்களைக் கற்போர் இழிவானவர் என்ற கருத்தினை இலக்கணக் கொத்து முன்னுரையில் எழுதியுள்ளார்.




தமிழ்ப் பதிப்பின் தலைமகன் (3)

21.9.2013  அன்றைய தொடர்ச்சி....
தேவாரம், திருவாசகம், திரு விசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம், சிவஞானபோதம், சிஞானசித்தியார், சிவப்பிரகாசம், பட்டினத்துப் பிள்ளையார் பாடல் முதலிய இலக்கியங்களையும் ஒரு பொருளாக எண்ணாது, நன்னூல், சின்னூல், அகப்பொருள், காரிகை, அலங்காரம் முதலிய இலக்கணங் களையும் பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, பதினெண் கீழ்க்கணக்கு இராமன் கதை, நளன் கதை, அரிச் சந்திரன் கதை முதலிய இலக்கியங் களையும் ஓர் பொருளாக எண்ணி வாணாள் வீணாள் கழிப்பர். அவர் இவைகளிருக்கவே அவைகளை விரும்புதல் என்னெனின், பாற் கடலுள் பிறந்து அதனுள் வாழும் மீன்கள் அப்பாலை விரும்பாது வேறு பலவற்றை விரும்புதல் போல் அவரதியற்கை என்க.
மேற்சொன்ன கருத்து ஈசான தேசிகர்க்கு மட்டும் உரிய தனிப் பட்ட கருத்து என்று கொள்ளாமல், அக்காலத்தில் மடங்களுக்கும் மடங்களில் இருந்த சமயப் புலவர் கட்குமே உரியதொன்றாக இருந் திருக்க வேண்டும் போல் தெரிகிறது. ஈசான தேசிகர் சங்கப் பனுவல்களைக் கட்டாயம் படித்திருக்கவே மாட் டார். ஏனென்றால் சங்கப் பாடல் களைப் பயில்வது பாற்கடலில் பாலைக் குடிக்காமல் அதில் மிதக்கும் அழுக்குகளை உண்பதொக்கும் என அவரே கூறியிருப்பதால் அவர், சங்க இலக்கிய மூக்குச்சளியை உண்டிருக்க மாட்டார் என நம்பலாம்.
சமயப் பற்று மிகுந்தவரே நம் தாமோதரர் என்றாலும் தமிழின், தமிழரின் தனிப்பெரும் மாண்பு களைச் சமற்கிருதம் விரவாத தனித் தமிழ் நூல்களாகப் பழந்தமிழ் நூல்களே இருந்தபடியால் அவற்றை மீட்டலே தமிழுக்கும் தமிழர்க்கும் செய்யும் அடிப்படைப் பணிகளில் முதன்மை என்று கருதியிருக்கின்றார்.
தொல்காப்பியம் பொருளதிகாரப் பதிப்பை 1855 _ இல் சி.வை.தா. வெளி யிடுகிறார். அப்பொழுது அப்பதிப் புரையில் சென்னைப் பட்டணத்தில் இற்றைக்கு ஐம்பது அறுபது வருஷத்தின் முன்னிருந்த வரதப்ப முதலியாரின் பின், எழுத்துஞ் சொல்லுமேயன்றித் தொல்காப்பியப் பொருளதிகாரத்தை உரை உதார ணங்களோடு பாடங் கேட்டவர்கள் மிக அருமை. முற்றாய் இல்லை யென்றே சொல்லலாம். வரதப்ப முதலியார் காலத்திலும் தொல் காப்பியங் கற்றவர்கள் அருமை யென்பது அவர் தந்தையார் வேங்க டாசல முதலியார் அதனைப் பாடங் கேட்கும் விருப்பமுடையரானபோது பிறையூரிற் திருவாரூர் வடுகநாத தேசிகர் ஒருவரே தொல்காப்பியம் அறிந்தவராக இருக்கிறாரென்று கேள்வியுற்றுத் தமது ஊரைவிட்டு அதிக திரவியச் செலவோடு அவ்வி டம் போய் இரண்டு வருஷமிருந்து பாடங்கேட்டு வந்தமையானும், வரதப்ப முதலியார் ஒருவரே பின்பு அதனைத் தந்தைபாற் கேட்டறிந்தவ ரென்பதாலும், அது காரணமாக அவருக்குத் தொல்காப்பிய வரதப்ப முதலியாரென்று பெயர் வந்தமை யானும், பின்பு அவர் காலத்திலிருந்த வித்துவான்கள் தமக்கு யாதாயினும் இலக்கண சமுசயம் நிகழ்ந்துழி அவரையே வினவி நிவாரணஞ் செய் தமையானும் நிச்சயிக்கலாம்.
தமிழ்நாட்டில் தாமோதரர் காலத்தில் தொல்காப்பியக் கல்வி எந்நிலையில் இருந்தது என்பதை அவரின் இவ்வெழுத்து வழியாக அறியலாம். கலித்தொகைப் பதிப்பின் முன்னுரையில் தமிழ்ச் சுவடிகளின் அந்நாளைய நிலையைத் தாமோதரர் மிக விரிவாக விளக்குகிறார். அவ் விளக்கங்களை நாம் காணும்போது அவர் குறிப்பிடும் சுவடிகள் பலவும் பழந்தமிழ் நூற் சுவடிகளாகவே இருந்திருக்க வேண்டுமென்று நாம் அறிகின்றோம். இந்நாளில் ஏற்பட்டிருக்கும் தமிழ், தமிழிய இயக்கங்களுக்கும் முயற்சிகளுக்கும் பழந்தமிழ்ச் சுவடிகள் நூல்வடிவம் பெற்றமையே பெருங்காரணமாகும். ஆனால், அச்சுவடிகள் இருந்த நிலைமையை நேரிற் கண்டு மனம் நொந்தவர் நம் தாமோதரரே ஆவார்.
பழைய சுவடிகள் யாவுங் கிலமாய் ஒவ்வொன்றாய் அழிந்து போகின்றன. புது ஏடுகள் சேர்த்து அவற்றை எழுதி வைப்பாரும் இலர். துரைத்தனத்தாருக்கு அதின்மேல் இலட்சியமில்லை. சரஸ்வதியைத் தம்பால் வகிக்கப் பெற்ற வித்துவான்களை அவள் மாமி எட்டியும் பார்க்கின்றாள் இல்லை. திருவுடையீர்! நுங்கருணை இந்நாட் தவறினால் பின்பு தவம் புரிந்தாலும் ஒரு தரம் அழிந்த தமிழ் நூற்களை மீட்டல் அரிது. யானை வாய்ப்பட்ட விளம்பழத்தைப் பின் இலண்டத்துள் எடுத்துமென்? ஓடன்றோகிட்டுவது.
எத்தனையோ திவ்விய மதுர கிரந்தங்கள் காலாந்திரத்தில் ஒன்றன் பின் ஒன்றாய் அழிகின்றன. சீமான் களே! இவ்வாறு இறந்தொழியும் நூல்களில் உங்களுக்குச் சற்றாவது கிருபை பிறக்கவில்லையா? ஆச் சரியம்!! ஆச்சரியம்!! அயலான் அழி யக் காண்கினும் மனந்தளும்பு கின்றதே! தமிழ் மாது நும் தாயல் லவா? இவள் அழிய நமக்கென் என்று வாளா இருக்கின்றீர்களா! தேசாபிமானம் மதாபிமானம் பாஷாபிமானம் என்று இவையில் லாதார் பெருமை பெருமையாமா! இதனைத் தயைகூர்ந்து சிந்திப்பீர் களாக!
என் சிறுபிராயத்தில் எனது தந்தையார் எனக்கு கற்பித்த நூல்கள் இப்போது தமிழ்நாடெங்கும் தேடியும் அகப்படவில்லை. ஒட்டித் தப்பியிருக்கும் புத்தகங்களும் கெட் டுச் சிதைந்து கிடக்கும் நிலைமை யைத் தொட்டுப் பார்த்தாலன்றோ தெரிய வரும். ஏடு எடுக்கும்போது ஓரம் சொரிகிறது. கட்டு அவிழ்க் கும்போது இதழ் முரிகிறது. ஒன்றைப் புரட்டும்போது துண்டு துண்டாய் பறக்கிறது. இனி எழுத்துக்களோ என்றால் வாலும் தலையுமின்றி நாலுபுறமும் பாணக்கலப்பை மறுத்து மறுத்து உழுது கிடக்கின்றனது.
1887 _ இல் கலித்தொகைப் பதிப் புரையில் 55 ஆம் அகவையில் இவ்வாறெழுதும் தாமோதரர் திடீரென்று ஒரு நாளில் தமிழ்ச் சுவடிகள் இருந்த நிலைகண்டு எழுதியன அல்ல இவை. தம் இருப தாம் அகவை தொடங்கி தமிழ்ச் சுவடிகள் இருந்தநிலை அனைத் தையும் உளங்கொண்டு கொதிப் புற்று அழுது எழுதியனவே இவை. 1882 _ ஆம் ஆண்டாகிய 20 ஆம் அகவையிலேயே ஏடு தேடிய தாமோதரர் 1854 ஆம் ஆண்டாகிய 24 ஆம் அகவையில் நீதிநெறி விளக்கம் பதிப்பித்து விடுகின்றார். பதிப்புலகின் தந்தை எனப்படும் உ.வே.சாமிநாதர் பிறப்பு ஆண்டு 1855 ஆகும். சாமி நாதர் சீவக சிந்தா மணியைப் பதிப்பித்து வெளியிட்ட ஆண்டு 1887. உ.வே.சா.அவர்கட்கு அப்பொழுது அகவை 32. உ.வே.சா. ஏடு தேடி அலையத் தொடங்கிய ஆண்டுகட்கு 35 ஆண்டு கட்கு முன்பே அஃதாவது 35 ஆண்டுகளாக நம் தாமோதரர் தன்னந்தனியராய்ச் சுவடி தேடி அலைந்திருக்கின்றார்.






தமிழ்ப் பதிப்பின் தலைமகன் (4)



28.9.2013  அன்றைய தொடர்ச்சி....
ஏடு தேடிய இன்னல் தாமோதரனாரின் தன்வரலாற்று நூல் எதுவும் நமக்குக் கிடைக்க வில்லை. அவரும் எழுதியதாகத் தெரியவில்லை. உ.வே.சா. அவர்களின் என் சரித்திரம் போன்றதொரு நூல், தாமோதரருக்கு இருந்திருக்குமேல் அவர் காலத்திய தமிழ், தமிழர் நிலை நமக்கு மிகத் தெளிவாய்த் தெரிந் திருக்கும். அத்துடன் அவற்றிற் கிடையே உழன்ற தாமோதரர் துயர மும் முழுமையாய் நமக்குத் தெரிந் திருக்கும். ஆயினும், கலித்தொகைப் பதிப்பின் முன்னுரையில் ஏடுதேட அவர் பட்டபாடுகளை, அவர் குறித்திருப்பது கொண்டு அவரின் பேருழைப்பையும் பேருணர்வையும் நாம் அறியலாம். ஒருவர், தாம் ஒரு வினையின்போது பட்டபாடு களனைத்தையும் சொல்லிவிடுவ தென்பது முடியாது. தாங்க முடியாத துயர அழுத்தங்களால் அவதிப் பட்டோர், வாய்திறந்து பேசும் போதும் கைகுவித்து எழுதும்போதும் தாம் பட்ட துயரத்தைச் சொல்லில் சொல்லவே முடியாதென்பர். நம் தாமோதரர் கலித்தொகை ஏடு தேடிய பாடுகளைச் சொல்கிறார் பாருங்கள்.
கலித்தொகைப் பிரதிகள் தேட யான் பட்ட கட்டம் வாயினாற் கூறும் அளவைத்தன்று. முதன்முதல் யான் பார்த்தது புதுவை நயனப்ப முதலியாரது. மூல பாடப்பிரதி. அது தலையுங்கடையுமின்றி குறைப்பிரதி. மேலும், பெரும்பாலும் எழுத்துக்கள் சிதைந்து ஒரு பாட்டின் சேருறுப் பாவது முற்றும் வாசிக்க முடியாமற் கிடந்ததாற் படிப்பதற்கே வெறுப் புண்டாய் நீக்கிவிட்டேன்.
பின்னர்த் தொல்காப்பிய பரிசோ தனைக்காகத் தேடியபோது ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரவர்கள் பிரதி அகப் பட்டது. அது கொண்டு கலித் தொகை அருமையுணர்ந்து அது எப்படியும் உலகிற்குப் பயன்பட வேண்டுமென்னும் அவாவுற்று ஸ்ரீ ஆதீன மடாதிபதிகளுக்கு விண்ணப் பம் செய்து கொண்டேன். காருண் ணியமும் கலாபரி பாலனமுமே தமது திருமேனியாகக் கொண்டு விளங்கும் திருவாவடுதுறைச் சற்குரு நாத சுவாமிகள் உடனே தங்கள் மடத்துப் பிரதியுடன் வேறு இரண்டு பிரதி தென்றேசத்தினின்று வருவித்தனுப்பி அச்சிட்ட பிரதியும் 20 எடுத்துக் கொள்வதாக உத்தரவு செய்தது இப் பேருபகாரத்திற்கு யானே அடிமை யாவதன்றி வேறு யாது கைம்மாறு உளது?
யாழ்ப்பாணத்து மல்லாகம் விசுவ நாத பிள்ளையவர்கள் புத்திரரும் தமிழ்க்கலை விநோதம் தமக்குப் பொழுது போக்காக உடையவரு மான ஸ்ரீ கனக சபைப் பிள்ளைய வர்கள் தமது பிரதியும் திருமணம் செல்வ கேசவராய முதலியார், மயிலை இராமலிங்கம் பிள்ளை பிரதியும் தயை செய்தார்கள். சென்னைப் பிராசிய கிரந்த மண்டபத்துந் தஞ்சை சரஸ்வதி மகாலிலும் இங்கும் அங்கும் சிதறுண்ட சில ஒற்றைகளை சேர்த் துக் கட்டி ஓரொருபிடியேடு கலித் தொகை என்று அபிதானஞ் சூட்டி வைக்கப்பட்டிருந்தது. இவற்றாற் பிரயோசனமிரா தென்று நீக்கிவிட்டு வேறு எவ்விடத்தும் பிரதி அகப் படாமையால் அகப்பட்ட பிரதி களை வைத்துக்கொண்டு அச்சிட ஆரம்பித்தனன். போகப்போக ஒன்றொன்றாக ஆங்காங்கு முடிவு பெற்று நான்காவது முல்லைக் கலிமுடியுமுன்னந் திருவாவடுதுறைப் பிரதி ஒன்றொழிய ஏனையேட்டின் அனைத்துந் தலைகட்டிக் கொண் டன. இத்தசையில் யாது செய்வ தென்று தெரியாது மயங்கி வேலையை நிறுத்தி இன்னும் பிரதி தேடும்படி ஓரொருதிசைக் கொரு வராகக் குறைவதெனாது குடாது மூன்றற்கும் மூன்று பெயரை அவ்வத் திசையிலுள்ள தக்க உத்தியோகஸ் தர்கள் பெரிய மனுஷர்களுக்குக் கடிதமெழுதி அனுப்பி விடாது திக்கிற்கு யானே பிரயாணமானேன்.
சி.வை.தா. குடந்தைக் கருகிலுள்ள கருப்பூரில் இருந்து கொண்டு இக்கலித்தொகைப் பதிப்புப் பணியை மேற்கொண்டிருந்தார். ஆதலால், அவர் கடலூர், திண்டிவனம், புதுவை முதலிய பகுதிகட்குச் செலவு மேற் கொண்டதை வடதிசைப் பயணமாகக் குறிப்பிடுகின்றார். அவ்வாறு  அவர் வடதிசையைத் தேர்ந்தெடுத்தற்குக் காரணம் ஒன்று உள்ளது. மாந்த மூளை கணினியைப் போல ஒரு நிகழ்வின்போது அத்துடன் தொடர் புடைய பழைய நிகழ்வுகளையெல் லாம் உடன்கொண்டு வந்து நிறுத்தி நிகழ்காலத்துடன் அசைபோட வைக் கும் இயல்புடையது. தெளிந்த சிந்தையுடையோர்க்குக் கண்ணாடி போல் அனைத்தும் எப்பொழுதும் துலக்கமாகத் தெரியும். இவ்வகையில் சி.வை.தா. 1852 _ இல் அஃதாவது 1887_க்கு முப்பத்தைந்தாண்டுகட்கு முன் கடலூரில் மஞ்சக்குப்பத்தில் ஓரிடத்தில் கலித்தொகை ஏட் டினைக் கண்டிருக்கின்றார். 1852 இன் 20 அகவை நினைவு 1887 இன் 55 ஆம் அகவையில் தொடர்கிறது. இதுவே இவர் வடதிசை தேர்ந்த தற்குக் காரணம்.
யான் முப்பத்தைந்து வருஷத்தின் முன் பிரமாதீச வருஷம் ஒருதரம் அரு மையான தமிழ் நூல்களைத் தேடி யாழ்ப்பாணத்தினின்று இக்கண்டத் தில் வந்து நடமாடியபோது கூட லூரில் மஞ்சக்குப்பத்தில் சண்முக உபாத்தியாயரென்றோர் வயோதி கரும் புதுச்சேரியில் நெல்லித் தோப்பிற் சொக்கலிங்கம் பிள்ளை யென்றோர் தமிழ்ப்பண்டிதரும் கலித்தொகை வைத்திருந்தது என் ஞாபகத்திற்கு வர அந்த இடங்களிற் சென்று விசாரித்தேன். முன்னையவர் இருந்த இடமும் தென்பட்டிலது. பின்னையவர் இருந்த இடத்தில் விசாரித்து, அவர் வமிசத்தில் அவரது தௌகித்திரியுங் குடும்பமும் அடுத்த ஊரில் இருப்பதாகக் கேள்வியுற்று ஆங்கடைந்து தௌகித்திரியின் நாயகனை வினவியபோது, அவர் ஏதோ ஒரு கட்டுச் சுவடிகள் பூர் வார்ச்சிதமாக வைத்திருக்கின்றோம். நமக்கு அவற்றின் பெயருந் தெரியாது. தங்களுக்கு வேண்டியதாயிருந்தாற் பார்த்து எடுத்துக் கொள்ளலா மென்று மகா உதாரத்துவத்தோடு ஏட்டுக்கட்டை அளித்தவர். ஏடுகள் இருந்த நிலமை கண்டு யானுற்ற பரிபாவத்திற்கு என் விழியினின்று பெருகிய கண்ணீரே சாட்சி. கலித் தொகையும் அங்கும் இங்கும் மிக ஊனம் அடைத்திருந்தும் எனக்கு வேண்டிய நெய்தற்கலியிருந்தமையால் மிக மகிழ்வோடு வாங்கி வந்தேன்.
அப்பால் திண்டிவனத்திலும் ஒரு பிரதி அகப்பட்டது. அதில் நெய்தற் கலியின் முதற்பாகம் இருந்தது. திரிகோணமலை ஸ்ரீ த.கனகசுந்தரம் பிள்ளையவர்கள் சென்னைப் பிராசிய கிரந்த மண்டபத்தில் தான் நெய்தற்கலி பார்த்தேனென்று உறுதியாகச் சொன்னமையால் மீளவும் அவ்விடஞ் சென்று முன் யான் நீக்கி வைத்த ஏடுகளில் இப் பொழுது எனக்கு வேண்டிய நெய் தற்கலி உடையவாயிருத்தல் கண்டு அளவற்ற சந்தோஷமடைந்தேன். அஃதல்லாமல் பின்னும் ஒரு பிரதி நெய்தற் கலி 23 ஆம் செய்யுள் வரைக்கும் அம்மண்டபத்தே அகப் பட்டது. அதனை எனது பிரதியோடு ஒத்துப் பார்வையிட்டு ஆங்காங்குக் கண்ட பாட பேதங்களைக் குறித்துக் கொண்டோம்.

தமிழ்ப் பதிப்பின் தலைமகன் (4)

5.10.2013  அன்றைய தொடர்ச்சி....
திருத்தணி குருசாமி ஐயர் கிரகத் திற் சென்று, சென்னையில் மிகப் பெயர் பெற்றிருந்த வித்துவானாகிய அவரது பிதாமகன் ஸ்ரீ சரவணப் பெருமாளையருடைய புத்தக நாமாவளியைப் பார்வையிட்டதில் அவரது கலித்தொகைச் சுவடி கோயமுத்தூரில் ஒருவர் கையிற் போயிருப்பதாகத் தெரியவந்தது. அதனைச் சின்னாள் இரவலாக வாங்கியனுப்பும்படி அவ்வூரிற் பெரிய மனுஷர் சிலருக்குக் கடிதம் விடுத்தேன்.
அவர்கள் அரவின் கடிகை அரதனத்திற்கும் ஆழிவாய் இப்பியுண் முத்திற்கும் அவை உயிரோடிருக்குங்காறும் ஆசை கொளல் வேண்டாவாறு போல, இம்மஹானுடைய சீவதிசையில் இவர் கைப்பட்ட புஸ்தகங்களைக் கண்ணாற் பார்க்கும் அவாவினை ஒழிகவென்று பதிலெழுதினார். சிவனே! சிவனே! இதுவுங் கலித் தொகையைப் பிடித்ததோர் கலித் தொகையோ என்று உளம் நொந் தேற்குக் கடைசியில் அதுவும் மற் றைப் பெரும்பான்மைய பிரதிக ளொப்ப நெய்தல் வளம் பெறாது முல்லையோடு முடிந்த பிரதியெனக் கேள்வியுற்றுச் சஞ்சலம் ஒழிந்தேன்.
ஸ்ரீ இராமசாமி சாஸ்திரிகள், ஸ்ரீ கோபாலகிருஷ்ணமச் செட்டியார், ஸ்ரீ வைத்தியலிங்க செட்டியார் முதலிய உத்தியோகஸ்தர்களும் ஸ்ரீ வெங்கட்டரமண சாஸ்திரிகள், ஸ்ரீ திருச்சிற்றம்பலம் பிள்ளை, ஸ்ரீ விசுவ லிங்கம் பிள்ளை, ஸ்ரீ சொக்கலிங்க கவிராயர் முதலிய வித்துவான்களும் யான், கடிதவாயிலாகக் கேட்டுக் கொண்டபடி, தங்கள் தங்களால் ஆன பிரயாசைப்பட்டும் பிரதி கிடைக்காமையால் அவர்களிடம் யான் அனுப்பி வைத்த மூவரும் வெறுங்கையராய் வந்து சேர்ந்தார்கள். குறைப் பிரதியாயினும் முழுப்பிரதி யாயினும் அகப்பட்ட இப்பத்துப் பிரதிகளையும் கொண்டு கலித் தொகை பதிப்பித்தேன்.
சி.வை.தாமோதரர் கலித்தொகைப் பதிப்பிற்கு ஏடு தேடிப்பட்ட இன்னல் கள் முழுவதையும் மேற்காட்டிய நீண்ட அவரின் உரைப்பகுதி சுட்டி விட்டதென்று கூறிவிட முடியாது. இப்பதிப்பு முன்னுரையால் அவர் பட்ட பாட்டின் ஒரு கூற்றையே நாம் அறிவதாகக் கொள்ள வேண்டும்.
பதிப்புப் பாடு எல்லோரும் நல்லது செய்யத்தான் ஆசைப்படுகிறார்கள். ஆனால் செய்வதில்லை. காரணம் மனம், ஆசைப்பட்டதை எட்டிப் பிடிக்க மிகுந்த இன்னல்களை சந்திக்க வேண்டும். இவ்வின்னல் வகையினை (1) மெய் வருத்தம், (2) பசித் துன்பம், (3) தூக்கக் கலக்கம், (4) பிறர் தீமையால் வரும் அயர்வு, (5) செய்யும் செயலின் களைப்பு, (6) ஏளனமாய் இழித்தும் பழித்தும் உழைப்பிலார் சொல்லும் அவமதிப்புத் துயர் என்று இவற்றை மெய் வருத்தம் பாரார் பாடல்வழி வரிசைப்படுத்தலாம். செயல் செய்ய மிக வேகமாய்க் கிளம்புவோர் இவ்வின்னல் ஆறினுள் ஒவ்வொன்றாய்ச் சந்திக்கும் அளவி லேயே பணியிலிருந்து ஒதுங்கிக் கொள்வர். ஆறுவகை இன்னல்களை யும் அருமை உடைத்தென்று அசாவாமை  வேண்டும் என்ற உணர்வுடன் ஏற்று எதிர்கொள் வோர் உலகில் மிகச் சிலரே. அச் சிலருள் ஒருவரே, நம் தாமோதரர் அவர் எடுத்துக் கொண்ட பணி பிறர் எவரும் செய்ய நினைக்காதது. கார ணம், அவர் செய்ய மேற்கொண்ட பணியில் ஆறுவகையான இன் னல்கள் உண்டு.
உடல் உழைப்பு, மூளை உழைப்பு என்ற இரண்டில் மூளை உழைப்பு, உடல் நலத்தை உள்முகமாக அரிப் பது. அறிவு வெகுவேகமாகச் செல் லும் விரைவுப் பிறப்பினது. அவ் வறிவு செல்லும் திசையில் தடைகள் முட்டுப்படுமானால் அவ்வேகம் உடலையும் உள்ளத்தையும் தாக்கும். தமிழ்ச் சுவடிப் பதிப்புப் பணியிலோ, காணும் இடமும் தொடும் இடமும் தடை தடையாகவே தோன்ற வாய்ப்புண்டு. இன்று நாம் படிப் பதுபோல் தெளிவான எழுத்துக் களும் விளக்கங்களும் சுவடியில் இருந்த பாடல்களில் இருந்ததில்லை. உ.வே.சாமிநாதர், தன் என் சரித்திரத்தில் தமிழ்ச்சுவடிகளில் இருந்த எழுத்துக்களைப் பற்றிக் கூறுகையில்,
இது கொம்பு, இது சுழி என்று வேறு பிரித்து அறிய முடியாது. மெய்யெழுத்துக்களுக்குப் புள்ளியே இராது. ரகரத்துக்கும் காலுக்கும் வேற்றுமை தெரியாது. சரபம் சாபமாக தோற்றும். சாபம் சரபமாகத் தோற்றும். ஓரிடத்தில் சரடு என்று வந்திருந்த வார்த்தையை நான் காடு என்றே பலகாலம் எண்ணியிருந்தேன். தரனென்பதைத் தான் என்று நினைத்தேன்.
சுவடிகளில் தமிழ் எழுத்துக்கள் இருந்த நிலைமைக்கு ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ப தாகவே உ.வே.சா. அவர்கள் கூறி யுள்ள பகுதி கொண்டு நாம் அறிய வேண்டும். தாமோதரரும் இச்சுவடி களை வாசிக்கப்பட்ட பாட்டைத் தம் வீர சோழியப் பதிப்புரையில் சொல்லி வருந்துகின்றார்.
விரலை வாலென்றும் கட்டிலைக் கடலென்றும் பஞ்சபாண்டவரைப் பிஞ்சுப் பாகற்காய் என்றும் மாற்றி எழுதி வைத்தால் அம்மொழியைச் சரிப்படுத்தல் இலேசாகுமா?
ஒரு தேசத்தில் வழங்கி வரும் பிரதி களை மாத்திரம் பார்த்தார்க்கு இம் மாறுபாட்டின் பெருக்கந் தோன்றாது. மதுரைப் பிரதி திருநெல்வேலிப் பிரதிக்கு வேறு. யாழ்ப்பாணத்துப் பிரதி இவ்விருதேசப் பிரதிகட்கும் வேறு. தஞ்சாவூர்ப் பிரதி முதன் மூன்றற்கும் வேறு. சென்னைப் பட் டணப் பிரதிகள் இவை எல்லா வற்றிற்கும் வேறு.
இலக்கணக் கொத்துடையார், நூலாசிரியர் உரையாசிரியர் போத காசிரியரென வகுத்த மூவகை ஆசிரி யரோடு யான் பரிசோதனையா சிரியரென இன்னுமொன்று கூட்டி இவர் தொழில் முன்மூவர் தொழி லினும் பார்க்க மிகக் கடியதென்றும் அவர் அறிவு முழுதும் இவர்க்கு வேண்டியதென்றும் வற்புறுத்திச் சொல்லுகின்றேன். தூக்கினாலன்றோ தெரியும் தலைச்சுமை? பரிசோதனை யாசிரியர் படும் கஷ்டமும் ஓர் அரிய பழைய நூலைச் சுத்த மனச் சாட்சியோடு பரிசோதித்து அச்சிட் டார்க்கன்றி விளங்காது. இவை யெல்லாம் அனுபவத்தாலன்றி அறியப்படாப் பொருள்கள். ஒன்றற்கொன்று ஒவ்வாத இருபது இருபத்தைந்து பிரதிகளையும் அடுக்கி வைத்துக் கொண்டு என் கண்காணச் சிந்தாமணி பரிசோதனை செய்து பதிப்பித்த கும்பகோணம் வித்தி யாசாலைத் தமிழ்ப்பண்டிதர் ஸ்ரீமத் வே.சாமிநாதையரைக் கேட் டால் இந்நால்வகையாசிரியர் தார தம்மியம் சற்றே தெரியலாம். எனக்கு அவரும் அவருக்கு நானும் சாட்சி.
ஓலைச் சுவடிகளில் உள்ள பாடல்கள், மூல ஆசிரியன் எழுதிய தன்று. தொடர்ந்து படிக்கும் பல் லோரும் படியெடுத்துக்கொண்டு படிப்பதற்கு எழுதியனவே அவை. அவ்வாறு எழுதுவோர் தம் அறியா மையாலும் விருப்பு வெறுப்பாலும் தாறுமாறாய் எழுதிவிடுவது உண்டு. இவற்றாலேயே ஓலைச் சுவடிகளில் உண்மை காண்பது கடினமாகி விடுகின்றது. தாமோதரர் தாம் பட்ட பாட்டை உ.வே.சாமிநாதர் மட்டும் விளக்கிக் கொள்ளமுடியும் என்றும் அதற்குக் காரணம் தம்மைப் போன்றே அவரும் உழைக்கத் தொடங்கி உழைத்து வருகின்றார் என்பதையும் அறிந்தமையேதான். நாம் அழிவோம். நம்  சொத்தும் சுற்றமும் இல்லாமலும் போகும். ஆனால் நம்மொழி என்றும் இருக்கும். எனவே நாம் நிலையாகக் கால வெள்ளத்தில் கரைந்து போகாமல் நிற்க வேண்டுமேல் நிலையான மொழியில்  நம்மைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். அப் படித் தம்மைத் தத்தம் மொழியில் சேர்த்துக் கொண்டவர்களே உலகில் சிலராவது இறவாது வாழ்ந்து வருகின்றனர். தாமோதரர் உழைத் தது, தமிழை நிலைநிறுத்த உழைத்த உழைப்பு. ஆதலால் அவர், தமி ழுள்ள அளவும் நிலை நிற்பார். தமிழ்ப் பதிப்பின் தலைமகன் என்ற பெருமை என்றும் அவர்க்குண்டு.
நன்றி: புதிய பார்வை மே 1-15 (2013)
- நிறைவு
12.10.2013,விடுதலை ஞா.ம.

சனி, 17 அக்டோபர், 2015

அகரச் சுவடியா? அரிச்சுவடியா?

Image result for அரிச்சுவடிImage result for அரிச்சுவடி
-கல்பாக்கம் வ.வேம்பையன்

தமிழ் நெடுங்கணக்கு அடங்கிய சுவடி அரிச்சுவடி என்று அழைக்கப்-படுகிறது. கணக்கு எழுத்தையும், இலக்கி-யத்தையும் குறிக்கும். அதனால், எழுத்தையும் இலக்கியத்தையும் ஆராய்-பவருக்கு கணக்காயர் என்று பெயர்.
நெடும் என்பது நீண்ட எழுத்துத் தொகுதியைக் குறிக்கும். நீண்ட என்பது முழுமை எனும் பொருள் தரும். உயிர் எழுத்து, மெய் எழுத்து, ஆய்த எழுத்து, உயிர்மெய் எழுத்து என்று தமிழ் எழுத்து முழுவதையும் சுட்டுவதால், தமிழ் நெடுங்கணக்கு என்று வழங்கப்-படுகிறது.
அரி என்றால் திருமால்,  என்று பொருள். சுவடி என்பது பல ஏடுகள் கொண்டது. தமிழ் எழுத்துகள் உள்ள சுவடிக்கும். திருமாலுக்கும்  என்ன தொடர்போ?
அகரச் சுவடி என்பதே பொருத்தம். எப்படி? கரம், காரம், கான் என்பவை எழுத்துகளுக்குச் சாரியைகளாக வரும். சாரியை என்பது, சார்ந்து இயைந்து நிற்பது. இது காதுக்கு இனிமை தருவ-தற்கு வருவது. அ+கரம்=அகரம். அகரம் +சுவடி = அகரச்சுவடி அ என்னும் எழுத்தை முதலாகக் கொண்டுள்ள சுவடி புத்தகம் என்பது பொருள்.
எழுத்தெனப்படுப அகர முதலா னகர இறுவாய் முப்பஃதென்ப
என்று கி.மு. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த தொல்காப்பியர் தாம் யாத்த தொல்காப்பியம் என்னும் நூலில் கூறியுள்ளார். அகர முதல எழுத்தெல்-லாம் என்று கி.மு. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த வான்புகழ் வள்ளுவர் தம் திருக்குறள் நூலில் எழுதியுள்ளார்.
அகரம் முதல என வள்ளுவர் தொடங்கி இருப்பதில் ஒருதனிச் சிறப்பு இருக்கிறது. எழுத்துக்கு எல்லாம் முத-லாகத் திகழும் அ என்னும் எழுத்தை மட்டும் அவர் குறிப்பிடவில்லை. தமிழ் அகரம் என்னும் எழுத்தில் உள்ள அ என்பது உயிர் எழுத்து, க என்பது வல்லினம், ர என்பது இடையினம், ம் என்பது மெல்லினம்.
அகரம் என்னும் ஒரே சொல்லில் தமிழ் மொழியின் அமைப்பையே சுட்டிக் காட்டியிருக்-கிறார் என்று டாக்டர் சங்கரராசு நாயுடு 1981 ஆம் ஆண்டு மதுரையில் நடந்த அய்ந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில் திருக்குறள் கருத்தரங்கில் விளக்கம் தந்துள்ளார்.
நம்மாழ்வார் காலத்திற்குப்பின் தமிழ் நெடுங்கணக்கு அரிச்சுவடி என்று பெயர் பெற்றுவிட்டது என, மொழி ஞாயிறு பாவாணர் தமிழர் மதம் (பக்கம் 120) என்னும் நூலில் கூறியுள்ளார். நம்மாழ்-வார் காலம் கி.பி. 9 ஆம் நூற்றாண்டு என்று இலக்கிய வரலாறு இயம்புகிறது.
இதிலிருந்து என்ன தெரிகிறது? மதம், கடவுள் செல்வாக்குப்பெற்றிருந்த காலத்தில் அகரச் சுவடி என்பது அரிச்-சுவடி என்று மாற்றப்பட்டுவிட்டது. ஆங்கிலக் கல்வி முறை நமது நாட்டில் நடைமுறைக்கு வருவதற்கு முன்பும் பின்பும்கூட சிறுவர்களைப் பள்ளியில் சேர்க்கும்போது ஹரி ஓம் நம என்று அவர்களைச் சொல்லச் செய்து, எழுத்து கற்பித்த வழக்கம் இதற்குத் தக்க சான்றாகும்.
ஒரு பொருளின் அடிப்படைகூட அறியாதவனை You do not know ABCD of the Subject   என்று சொல்கிறோம். இதே போல் அனா, ஆவன்னா கூடத் தெரியாது என்று சொல்லி வந்த தமிழர்-களை மதச் செல்வாக்கும் கடவுள் செல்வாக்கும் அரிச்சுவடி என்று சொல்லும்படி செய்துவிட்டன.
ஆங்கிலேயர் ஏன் ஆண்டவன் பெயரைச் சொல்லவில்லை? சேர்க்க-வில்லை? மொழிவேறு, மதம் வேறு, கடவுள் வேறு, அரசு வேறு என்னும் தெளிவு பெற்றவர் ஆங்கிலேயர்.
இந்த நாட்டில் உள்ள ஆரியரோ மதம், கடவுள், மொழி, அரசு அனைத்-தையும் போட்டுக் குழப்பி, தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்ள எதுவும் செய்யத் தயங்காதவர்கள். மறைப்பு, மாற்றம், திரிபு, திருத்தம், சிதைவு, சீரழிவு, அழிப்பு ஒழிப்பு, செய்-வதில் வல்லவர்கள் ஆரிய இனத்தவர்.
தமிழ் மொழி மறைப்பு, தமிழ்நாடு மறைப்பு, தமிழ் இன மறைப்பு, தமிழ் நாகரிக மறைப்பு, தமிழ்க்கலை மறைப்பு, தமிழ் முதல் நூல் மறைப்பு, தமிழ்த் தெய்வ மறைப்பு, தமிழர் சமய மறைப்பு, தமிழ்த் தேவார மறைப்பு, தமிழ்ப் பொருளிலக்கண மறைப்பு, தமிழ்ச் சொல் மறைப்பு தமிழ்ச் சொற் பொருள் மறைப்பு, தமிழ்க் கருத்து மறைப்பு தமிழ் எழுத்து மறைப்பு,
தமிழ் முக்கழக மறைப்பு, தமிழ் வரலாறு மறைப்பு என்று ஆரியர்கள் மறைத்த வரலாற்-றைத் தமிழ் வரலாறு என்னும் நூலில் விளக்கிக் கூறியுள்ளார் மொழி ஞாயிறு பாவாணர்.
ஊர்ப் பெயர், தெய்வத்தின் பெயர், ஆள் பெயர் முதலிய அனைத்தையும் சமஸ்கிருதமயமாக ஆரியர்கள் மாற்றி-விட்ட வரலாற்றைத் தொகுக்க முயன்-றால், அது ஒரு தனி நூல் ஆகி விடும் என்று அஞ்சி விடுத்துள்ளேன்.
இதுகாறும் கூறியவற்றால் அகரச் சுவடி என்பதே காலத்திற்கும், கருத்-திற்கும், அறிவுக்கும், ஆராய்ச்சிக்கும், பொருத்தமும் பொருளும் உடையது என்பது தெளிவாகும்.
தந்தை பெரியாரின் வழியைப் பின்பற்றி, தமிழ்மொழியை மதம், கடவுள் சேற்றிலிருந்து மீட்போம் என்று சூளுரை மேற்கொள்வோம்.
பெரும் புகழ்க் காப்பியர், வான்புகழ் வள்ளுவர் வழியைப் போற்றி அகரச் சுவடி என்றே எழுதுவோம், பேசுவோம்.
-விடுதலை ஞா.ம.2.5.15

வெள்ளி, 2 அக்டோபர், 2015

மதுரை அருகில் திருப்புவனம் கீழடி, வணிக நகராக திகழ்ந்தது கண்டுபிடிப்பு



திருப்புவனம், செப்.4_ சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி பள்ளிச்சந்தை புதுர் என்னுமிடத்தில் மத்திய தொல்பொருள் துறை நீண்ட நாட்களாக மிகப்பெரிய அகழ் வாராய்ச்சி மேற்கொண்டுள்ளது.
பண்டைய வணிக நகரமான மதுரையின் ஆதாரங்களைத் தேடி மேற்கொள்ளப்படும் இந்த அகழ் வாராய்ச்சியில், கலைநயம் மிக்க பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது. பண்டைக் காலத்தில் மருத்துவ பொருட்களை பாதுகாப்பாக வைத் திருப்பதற்காக தயாரிக்கப்பட்ட பானை என கூறப்படுகிறது. இந்த அகழ்வாராய்ச்சியில் மூன்று உறை கிணறுகள் வெவ்வேறு காலகட் டத்தைச் சேர்ந்தவை கண்டுபிடிக்கப் பட்டுள்ளன
துவரை 42 அகழ்வாராய்ச்சி குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இதில் இருந்து கல் மணி, கண்ணாடி மணி, தாயக்கட்டை,செவ்வக வடிவ கட்டைகள் எடுக்கப்பட்டுள்ளன. கி.மு., முதலாம் நுற்றாண்டை சேர்ந்த கட் டடங்கள் என கண்டறியப்பட் டுள்ளன.இதில் நீண்ட சுவர் உடைய கட்டடமும் அடக்கம். தமிழகத் திலேயே இதுவரை நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் இங்குதான் கலைநயம் மிக்க பானை கண்டறியப் பட்டுள்ளதாக மத்திய தொல்பொருள் ஆராய்ச்சியாளர் அமர்நாத் ராம கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில்,' கடந்த மார்ச் சில் தொடங்கப்பட்ட இந்த அகழ் வாராய்ச்சி வரும் செப்டம்பர் 20ம் தேதியுடன் முடிவடைகிறது. அதன் பின் இதுவரை கண்டறியப்பட்ட பொருட்களை ஆவணப்படுத்த உள் ளோம். இந்த அகழ்வாராய்ச்சியில் மிகப்பெரிய பானை கண்டுபிடித் துள்ளோம்.
பழங்காலத்தில் இதில் மருத்துவ பொருட்களை வைத்திருக்கலாம் என எண்ணுகிறோம். அழகிய வேலைப் பாட்டுடன் கூடிய இப்பானையை மிகப்பெரிய செல்வந்தர்கள், ராஜாக் கள் போன்றவர்களால் தான் வைத் திருக்க முடியும், மற்றவர்களிடம் இருக்க வாய்ப்பில்லை. இதுபோன்ற பானைகள் தமிழகத்தில் கிடைத்த தில்லை. இதுகுறித்து மேலும் ஆராய உள்ளோம். இதுவரை 13 பிராமிய எழுத்துக்களை கண்டு பிடித்துள் ளோம். ஆதன், ஏதன், உத்திரன், கிஷன் ஆகிய தனிநபர் எழுத்துக்களுடன் கூடிய பொருட்களை கண்டறிந் துள்ளோம்.
இதன் மூலம் மதுரைக்கு வெகு அருகில் கீழடி வணிக நகரமாக திகழ்ந்துள்ளது என தெரியவந்துள் ளது. மேலும் இங்கு அகழ்வாராய்ச் சியை தொடர வேண்டும் என மத்திய தொல்பொருள் துறைக்கு பரிந்துரை செய்துள்ளோம், அனுமதி கிடைக்கும் பட்சத்தில் அடுத்த மார்ச் மாதம் பணி களை தொடர உள்ளோம், என்றார்.
-விடுதலை,4.9.15