பக்கங்கள்

வியாழன், 28 நவம்பர், 2019

செங்காந்த மலர்
காந்தள் , செங்காந்தள் , வெண்காந்தள் மலர் :
ஓர் அலசல் .
                ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, 

#சங்க இலக்கியங்களில் எட்டுத்தொகையில் 
அனைத்து நூல்களிலும் 64 இடங்களில் 
இடம் பெற்றுள்ளது காந்தள்மலர் .

#பத்துப்பாட்டில், மதுரைக்காஞ்சி, முல்லைப்பாட்டு, நெடுநெல்வாடை நீங்களாக மற்ற 7 நூல்களிலும் ,
12 இடங்களிலும் இடம் பெற்றுள்ளது.

#தமிழ்நாட்டின் அரசுமலராகவும் 
இது ஏற்கப்பட்டுள்ளது.

#கண்களைப் பறிக்கும் ஒளிரும் வண்ணங்களை உடைய கொடியினம். இத்தாவரத்தை ‘கண்வலிப்பூ’ என்றும்
அழைக்கின்றனர். 

#மேலும் இக்கொடியின் வேர்ப் பாகம் 
கலப்பையைப் போன்றிருப்பதால் இதைக்
 ‘கலப்பைக் கிழங்கு’ எனவும் அழைக்கின்றனர்.

#இத்தாவரத்தின் கிழங்கினை கார்த்திகை 
மாதங்களில் தோண்டி எடுப்பதால் இதனை ‘கார்த்திகைக் கிழங்கு’ எனவும் அழைப்பார்கள்.

#இலக்கியங்கள் காந்தல் மலர்களை 
அடையாளம் காட்ட  கீழ்க்கண்டவாறு 
குறிப்பிடுகின்றன :

*வளை உடைந்தன்ன வள் இதழ்க் காந்தள்.

*தீயின் அன்ன ஒண் செங்காந்தள்.

*செழுங் குலைக் காந்தள் கை விரல் பூப்பவும்
பல் துடுப்பு எடுத்த அலங்கு குலைக் காந்தள்.

*கைபோல் பூத்த கமழ் குலைக் காந்தள்.

*உடைவளை கடுப்ப மலர்ந்த காந்தள்

#சங்க இலக்கிய ஆசிரியர்கள்  காந்தள் மலரை அடைமொழியுடன் இருசொல் பெயரில் 
கீழ்கண்டவாறுபதிவு செய்துள்ளனர் 

#அப்பெயர்களைக் கீழே காணலாம் :

*ஒண்செங் காந்தள்        கபிலர்
*கமழ்பூங் காந்தள்         கபிலர்
*நறவுகுலை காந்தள்      கபிலர்.
*நாறுகுலைக் காந்தள்     கபிலர்

*போது அவிழ் காந்தள்     மருதனார்.

*அலங்குகுலைக் காந்தள்  தங்காற் 
பொற் கொல்லனார்.

சினைஒண் காந்தள் ,மதுரைக் கணக்காயனார்.

*சுடர்ப்பூங் காந்தள்          நக்கீரர்.

*முகைஅவிழ்ந்த காந்தள்   கம்பூர் கிழான்.

*வள்இதழ்க் காந்தள்         பெருங்கௌசிகனார்

*தண்நறுங் காந்தள்          பரணர்
                            
#சங்கஇலக்கியங்களில் காந்தள் பெயர் 
உள்ள  பாடல் அடிகள் : 

#பத்துப்பாட்டு
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

1.குறிஞ்சிப் பாட்டு
ஒண்செங் காந்தள், ஆம்பல், அனிச்சம் - 62
விண் பொரும் சென்னிக் கிளைஇய காந்தள் - 196
பட்டினப்பாலை
காந்தள் அம் துடுப்பின் கவிகுலை அன்ன - 153
மலைபடுகடாம்
தீயின் அன்ன ஒண் செங் காந்தள் - 145
காந்தள் துடுப்பின் கமழ் மடல் ஒச்சி - 336
வளை உடைந்தன்ன வள் இதழ்க் காந்தள் – 519

2.பெரும்பாணாற்றுப்படை
நாடு பல கழிந்த பின்றை நீடுகுலைக்
காந்தள் அம் சிலம்பில் களிறு படிந்தாங்குப் - 371,371

3.திருமுருகாற்றுப்படை
சுரும்பும் மூசாச் சுடர்பூங் காந்தட் – 143

4.சிறுபாணாற்றுப்படை
செழுங் குலைக் காந்தள் கை விரல் பூப்பவும் – 167

5.பொருநராற்றுப்படை
நெடு வரை மிசைய காந்தள் மெல் விரல் - 33
கொழுங் காந்தள் மலர் நாகத்து - 209

#எட்டுத்தொகை
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

1.அகநானூறு:

நெடும் பெருங் குன்றத்து அமன்ற காந்தள் -4-15
பழம் தூங்கு நளிப்பின் காந்தள்அம் பொதும்பில் -18-15
முந்தூழ் ஆய் மலர் உதிர, காந்தள் -78-8
ஒண் செங் காந்தள் அவிழ்ந்த ஆங்கண் -92-9
வேங்கை விரிஇணர் ஊதி காந்தள் -132:11
பல் துடுப்பு எடுத்த அலங்கு குலைக் காந்தள்  - 108:15
திருமணி உமிழ்ந்த நாகம் காந்தள் -138-17
கடவுட் காந்தளுள்ளும், பலஉடன் -152-17
போந்தை முழுமுதல் நிலைஇய காந்தள் -238-17
காந்தள் அம் சிறுகுடிக் கௌவை பேணாது -312-5
சினையொண் காந்தள் நாறும் நறு நுதல்- 338:7
உயர் வரை மருங்கின் காந்தள்அம்சோலைக்368:8

2.ஐங்குறுநூறு:

நறுந்தண் சிலம்பின் நாறுகுலைக் காந்தள் - 226:2
நறும்புகை சூழ்ந்து காந்தள் நாறும் -25:2
மலர்ந்த காந்தள் நாறிக் -259:5
சிலம்பு கமழ் காந்தள் நறுங்குலை அன்ன - 293:1
கலித்தொகை
காந்தள் கடி கமழும், கண் வாங்கு, இருஞ் சிலம்பின் -39(3):15
எடுத்த நறவின் குலை அலங்காந்தள்  - 40(4):11
தகையவர் கைச் செறித்த தாள்போல் காந்தள்  - 43(7):8
கடி சுனை கவினிய காந்தள் அம் குலையினை- 45(9):2
உயர் முகை நறுங் காந்தள் நாள்தோறும் புதிது ஈன - 53(17):5
அடுக்கம் நாறு அலர் காந்தள் நுண் ஏர் தண் ஏர் - 59(23):3

3.குறுந்தொகை

குருதிப் பூவின் குலைக் காந்தட்டே  - 1.-4
காந்தள் வேலி ஓங்கு மலை நல் நாட்டுச் - 76-1
வேங்கையும் காந்தளும் நாறி - 84-4
காந்தள்அம் சிலம்பில் சிறுகுடி பசித்தெனக் - 100-3
முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல் - 167:1
கொண்டலின் தொலைந்த ஒண் செங் காந்தள் - 185:6
சிலம்புடன் கமழும் அலங்கு குலைக் காந்தள் - 239:3
அருவி ஆர்ந்த தண் நறுங் காந்தள்  -  259:2
காந்தள்அம்  கொழு முகை, காவல்செல்லாது - 265:1
ஒண் செங் காந்தள் அவிழும் நாடன்    - 284:3
காலை வந்த முழுமுதற் காந்தள் - 361:4
காந்தள் அம் சிறுகுடிக் கமழும் - 373:7

4.நற்றிணை

மா மடல் அவிழ்ந்த காந்தள்அம் சாரல் - 14:7
காந்தள் ஊதிய மணி நிறத் தும்பி - 17:10
நின்ற வேனில் உலந்த காந்தள் - 29:1
பறியாக் குவளை மலரொடு காந்தள் 34-2
காந்தள்அம் சிறுகுடிப் பகுக்கும் - 85:10
காந்தள் வள் இதழ் கவிகுளம்பு அறுப்ப - 161-7
மலைச் செங் காந்தட் கண்ணி தந்தும் - 173:2
போது பொதி உடைந்த ஒண் செங் காந்தள் - 176:6
அகல் இலைக் காந்தள் அலங்கு குலைப் பாய்ந்து - 185:8
மெல் விரல் மோசை போல, காந்தள் - 188 -4
செம் புடைக் கொழு முகை அவிழ்ந்த காந்தள் - 294:7
யாங்கு ஆகுவம்கொல்?-தோழி!-காந்தள்
   கமழ் குலை அவிழ்ந்த நயவருஞ் சாரல் - 313:6,7
முலை வாய் உறுக்கும் கை போல், காந்தட்
   குலைவாய் தோயும் கொழு மடல் வாழை - 355:2,3
அலங்கு குலைக் காந்தள் தீண்டி, தாது உக - 359:2
காந்தள்அம் கொழு முகை போன்றன சிவந்தே - 379:13
குருதி ஒப்பின் கமழ் பூங் காந்தன்  - 399:2

5பதிற்றுப்பத்து
சிவந்த காந்தள் முதல்சிதை மூதில் - 15:11
அலங்கிய காந்தள் இலங்குநீரழுவத்து - 21:36
காந்தளங் கண்ணிக் கொலைவில் வேட்டுவர் - 30:9
மலர்ந்த காந்தள் மாறாதூதிய - 67:19
காந்தளங்கண்ணிச் செழுங்குடிச் செல்வர் - 81:22

5.பரிபாடல்

மன்றல மலர மலர் காந்தள் வாய் நாற - 8:26
சினை வளர் வேங்கை கணவிரி காந்தள் - 11:20
நீர் அயல் கலித்த நெரி முகைக் காந்தள் - 14:13
போர் தோற்றுக் கட்டுண்டார் கை போல்வ--கார் தோற்றும்
    காந்தள் செறிந்த -18:34-35
கைபோல் பூத்த கமழ் குலைக் காந்தள் - 19:76

6.புறநானுறு

உடைவளை கடுப்ப மலர்ந்த காந்தள் - 90:1
யாம்தன் தொழுதனம் வினவக் காந்தள் - 144:8
கறிவளர் அடுக்கத்து மலர்ந்த காந்தள் - 168:2

எனக்கூறப்பட்டுள்ளது. 

#மேற்கண்ட ‘காந்தள்’ Gloriosa superba என்னும் தாவரவியல் பெயரைக் கொண்டதாகக்
கண்டறியப் பட்டுள்ளது.

#காந்தள் மலரை அதன் தோற்றத்தை
ஒப்பு நோக்கி , கை விரலாகப் பாவித்து
கம்பன் தன் இராமகாதையில் இப்படிக்
குறிப்பிடுகிறான்.
"காந்தளின் மலர்ஏறிக் கோதுவ கவின் ஆரும்
மாந்தளிர் நறு மேனி மங்கை நின்மணிக்கை
ஏந்தின எனல் ஆகும் இயல்பின (2003)

மேலும் சில இடங்களிலும் இந்த ஒப்புமையைக்
கையாண்டிருக்கிறான் கம்பன்.

#காந்தள்மலர் #தமிழ்ஈழத்தின் தேசிய மலராக
அறியப்படுகிறது. மாவீரர்களுக்கு இம்மலர் மூலம்
அஞ்சலி செலுத்தப்படுகிறது.

#தமிழ்நாட்டின் தனிச்சிறப்புமிக்க இம்மலர்
கார்த்திகைத் திங்களில் புத்துக்குலுங்குகின்ற
#குறிஞ்சி நிலப்பூவாகும்.

#இம்மலர் ,செடி, தண்டு , வேர் ஆகியவை
மருத்துவ குணம் கொண்டவை என்றும் 
கூறப்படுகிறது.
.
#இம்மாமலர் போற்றுவோம்.

(பல்வேறு தரவுகளின் தொகுப்பு இது)
                   * * * * * * * * * * * *
- துலாக்கோல் சோம நடராஜன் முகநூல் பதிவு, 28.11.19

"பொன்காட்டும் கடிக்கொன்றை மருங்கு நின்ற புனற் காந்தள் கை காட்டும் " (அப்பரடிகள்)
-கவி கல்யாண ராமன் முகநூல் கருத்து

எனது கருத்து
ஜிம்பாப்வே நாட்டு மலராகவும் உள்ளது.

வியாழன், 21 நவம்பர், 2019

சென்னை மாநிலத் தமிழர் மாநாடு; தமிழர் யார்? பார்ப்பனர் தமிழரல்ல 1&2

தலைவர் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் கர்ஜனை

(வாசக நேயர்களே,

ஊன்றிப் படித்துப் பயன்பெற வேண்டிய முக்கியப் பகுதி இது.

இதுபற்றி தங்களது கருத்தினை சுருக்கமாக எழுதி அனுப்புமாறு வேண்டுகிறோம்.

திராவிடர் இயக்கம் - 80 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாடு அரசியல் களத்தின் முக்கிய நிகழ்வுகள் - வரலாறு பற்றிய காலக்கண்ணாடியாக - திராவிடத்தின் தேவைக்கான நுண்ணாடியாக இது அமையும் ஒன்று. இதற்கான தேவை - பயன் - நுகர்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் பெரிதும் வரவேற்கப்படுகிறது. - ஆசிரியர்)

 

அருந்தமிழ் தோழர்களே!

இந்த நான்காவது சென்னை மாகாணத் தமிழ் மகாநாட்டிற்கு தலைமை வகிக்க என்னை அழைத்து என்னை பெருமைப் படுத்தியதற்காக என் மனமுவர்ந்த நன்றி உங்களுக்கு உரித்தானது. அவ்வண்ணமே எனது நன்றியை உங்களுக்குச் செலுத்துகிறேன்.

இம்மகாநாட்டை மாகாண தமிழர் மகாநாடென்று குறித்திருப்பதால் தமிழர் என்னும் பதத்தின் உண்மைப் பொருளை நாம் சரியாக அறிகிறோமாவென்று சற்று சந்தேகத்திற்கு இடந்தருகிறது என்பதற்குட்பட்ட வரையில் தமிழன் என்கிற பதத்திற்கு ஓர் அர்த்தமே பொருத்தமானது. யார் ஒருவர் தொன்றுதொட்டு தலைமுறை தத்துவமாக தமிழ் மொழியைத்தாய் மொழியாகக் கொண்டு அம்மொழியை பிரதானமாக அனுட்டித்து போற்றி வரு வாரோ அவரே தமிழர் ஆவாரே அன்றி மற்றொருவருக்கும் அப்பதம் பொருத்தமாகாது. அன்னிய நாட்டினர் தமிழ்மொழியில் பெரும் ஆராய்ச்சி செய்து தேர்ச்சிபெற்று புலமைத்தன்மை அடைந்திருப்பினும், தமிழ் மொழிக்கு என்ன அரும்பெரும் தொண்டு புரிந்திருப்பினும் அவர் தமிழர் ஆகமாட்டார்.

தமிழர் யார்

நம் நாட்டில் வீரமாமுனிவர் என்று போற்றப்பட்ட, மதுரை சேசுசபையைச் சேர்ந்த பெஸ்கிசாமியாரும் ஆங்கில பாதிரியாராகிய போப்பய்யரும் நமது மொழியில் மிகவும் புலமை அடைந்தவர்கள் என்பது எல்லோரு மறிந்தவிடயம். வீரமாமுனிவர் இயற்றிய தேம்பாவணியும், போப்பய்யரின் தமிழ் இலக்கணமும், மிகவும் பெருமை வாய்ந்த தமிழ் நூல்களாக இன்றும் மதிக்கப்பட்டு வருகிறது. ஆயினும் வீரமாமுனிவராவது, போப்பய்யராவது தமிழ ரென்று கருதப்படுவார்களா? அவ்வாறே வெளிநாட்டி லிருந்து நம்மிடத்தில் குடியேறியவர்கள், எவ்வளவு காலங்களுக்குமுன் நம்மிடம் வந்து சேர்ந்தவர்களாயினும், இந்நாட்டிலேயே எப்போதுமிருக்கும் நோக்கத்துடன் உள்ளவர்களாயினும் நம் தமிழ் மொழியை தன் மொழியாகக் கொள்ளாமல் இருப்பின் அவர்கள் தமிழர்கள் ஆகமாட்டார்கள். அவசிய நிமித்தமும் தன் சவுகரியத்தை உத்தேசித்து நம் மொழியைப் பழக்கவழக்கத்தில் வைத்துக் கொண்டிருக்கும் ஒரு காரணத்தைக் கொண்டு மாத்திரம் தமிழராக மாட்டார்கள்.

பார்ப்பனர் தமிழரா?

குறிப்பாக நம் நாட்டில் பார்ப்பனர்கள் தமிழர் ஆவார்களா ஆகமாட்டார் என்பதுதான் என் முடிவு. நம் நாட்டில் அநேக நூற்றாண்டுகளாக இருந்திருந்தும் நம்முடன் கலவாமல் தங்களை ஒரு தனிப்பட்ட வகுப்பினராகவே வைத்துக் கொண்டது மாத்திரமல்லாமல் தாங்களே ஏனையோரை விட மேல் வகுப்பினர் என்று சொல்லிக்கொண்டு தம் சொந்த மொழி வடமொழியாகிய ஆரிய மொழியே என்றும் அம்மொழி நம்மொழியாகிய தமிழ் மொழியை விட மேன்மைப்பட்டதென்றும், அது ஒரு தெய்வீக மொழியென்றும், அம்மொழியே கடவுள் வணக்கத்திற்கும் மற்றுமுள்ள அவர்களுடைய சடங்கு களுக்கும் பொருத்தமானதென்றும், தமிழ்மொழி இக் காரியங்களுக்கு பொருத்தமற்றதென்றும், அதை இழிவு படுத்தி பேசுபவர்கள் எவ்விதத்தில் தமிழரென்று அழைக்கப் பட பொருத்தமுள்ளவர் களென்று எனக்கு விளங்கவில்லை. ஆகவே பார்ப்பனர்கள் தமிழர் ஆகமாட்டார்கள் என்று சொல்வது மிகையாகாது.

தமிழ் நாடு எது?

மேலும், தமிழ்நாடு என்பது எந்த நாடென்று நிர்ணயிப் பதற்கு ஆராய்ச்சி வேண்டியதில்லை. சென்னை நகரிலிருந்து குமரி வரையில் மலையாளத்துக்கு கிழக்கே உள்ள நாடே தற்காலத்திய தமிழ் நாடு என்று சந்தேகத்திற்கிடமில்லாமல் கூறலாம். நாம் இந்நாட்டிற்கு இப்போது இந்தியமாக்கடலில் மூழ்கிக்கிடக்கும் ஓரிடத்திலிருந்து வடக்கே வந்தோமா அல்லது ஆரியர்கள் வருகிறதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாக மத்திய ஆசியாவிலிருந்து தெற்கே வந்தோமா என்கிற விஷயம் சரித்திர ஆராய்ச்சிக்காரர் நிர்ணயிக்க வேண்டிய காரியம்.

தமிழர் எவருக்கும் அடிமைப்பட்டவரல்ல

ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளாக இந்நாட்டிலேயே நாம் வாழ்ந்து வந்திருக்கிறது நம் நாடே நம்நாடென்பதும் இந்நாட்டு மக்கள் நாமே என்பதும் யாரும் மறுக்க முடியாத விடயம். வடஇந்தியாவில் பல்வேறு மக்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து ஒவ்வொருவரையும் பின்வருபவர் அடக்கி, ஒருவர் ஒரு காலத்திலும் மற்றொருவர் வேறொரு காலத்திலும் ஆதிக்கம் புரிந்து வந்ததாகவும் சரித்திர மூலமாகவும் அறிகிறோம். தமிழர் வடநாட்டு ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்ததில்லை. ஆனால் நாமும், நம்மைச் சேர்ந்த மற்றொரு திராவிட வகுப்பினரும், ஒரு காலத்திலும் இந்த வடநாட்டு ஆதிக்கங்களில் ஒன்றிற்காவது நாம் உட்பட்டிருந்ததாகத் தெரியவில்லை.

இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன் சந்திரகுப்தர் என்னும் சக்கரவர்த்தியால் ஒரு புகழ்பெற்ற ஆட்சி வடநாட்டில் நடத்தப்பட்டதாகவும் அவருடைய பேரனாகிய அசோக சக்கரவர்த்தி காலத்தில் அவருடைய ஆட்சி ஏறக்குறைய இந்தியா முழுவதிலும் இன்னும் வெளிநாட்டிலும் பரவியிருந்ததாகவும் தெரிகிறது.

வடநாட்டார் அந்நியரே

ஆனால் அக்காலத்திலும்கூட நம் நாட்டில் நம் மூவரசர்களாகிய, சேர, சோழ, பாண்டிய மன்னர்களே அரசு புரிந்து வந்ததாகவும் தெரிகிறது. இதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப்பிறகு முகம்மதியர்கள் வடஇந்தியாவில் புகுந்து தங்கள், ஆதிக்கத்தை நிலைநிறுத்தி டெல்லி மாநகரத்தைத் தலைநகரமாகக் கொண்டு ஒரு பரவிய ஆட்சியை மொகல் சக்கரவர்த்திகள் நடத்தி வந்திருக் கிறார்கள். அக்காலத்திலும் தென்னாட்டாராகிய நாம் அந்த ஆதிக்கத்திற்கு உட்படாமல் தனிப்பட்ட வகையிலேயே நம்முடைய காரியங்களை நடத்தி வந்திருக்கிறோம். ஆங்கில ஆட்சி நம் நாட்டில் நிலைபெற்ற பிறகே நாமும் வட நாட்டினரும் ஒரே ஆதிக்கத்திற்கு உட்பட்டி ருக்கின்றோமே தவிர அதற்குமுன் எந்தக் காலத்திலும் நமக்கும் வடநாட்டினருக்கும் யாதொரு கலப்புமிருந்ததாகத் தெரியவில்லை. தற்காலத்திலும் தென்னாட்டு திராவிடர் களுக்கும் வடநாட்டு ஆரியர்களுக்கும் ஒத்துமையையோ, சம்பந்தத்தையோ காட்டக்கூடிய காரியம் ஒன்றே. அது எதுவெனில் நம்மிருவரும் ஒரே வெளிநாட்டு ஆதிக்கத்திற்கு உள்பட்டிருக்கிறதே ஆகும். மற்ற எல்லாக் காரியங்களிலும் நாம் வேறு அவர்கள் வேறு வகுப்பினராகவே காணப் படுகிறோம். மக்கள் பேசும் மொழியிலோ சாப்பிடும் உணவிலோ, உடுத்தும் உடையிலோ, மற்ற பழக்க வழக்கங்களிலோ, நாம் வேறு அவர்கள் வேறாகவே இருக் கிறோம். மேலும் பூர்வீகக் கலை, நாகரீகம், இவ்விஷயங் களைப் பற்றி விசாரிப்போமானால் வடநாட்டு ஆரியர் களுக்கும் அய்ரோப்பிய ஆரியர்களுக்கும் வெளிப்படும் சம்பந்தம் கூட நம்மவர்களுக்கும் வட நாட்டாருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை.

திராவிடர் இந்தியரா?

இன்னும் ஆழ்ந்துபார்ப்போமானால் திராவிட மக்களாகிய நாம் இந்தியர்கள் அல்லவென்றே சொல்ல வேண்டும். இந்தியர் என்று ஒரு பதம் ஏற்படுவதற்கே காரணம், நம் நாட்டிலிருந்து ஆயிரம் மைல்களுக்கு மேற்பட்ட தூரத்திலுள்ள பஞ்சால தேசத்தில் ஓடும் இந்தஸ் நதியே அந்த நதியின் பெயர் இந்தஸ் என்று இருந்தபடியால் அதை அடுத்தாற் போல் உள்ள நாட்டிற்கு இந்தியாவென்னும் பெயர் வழங்கப்பட்டது. அந்த நாட்டில் குடியேறி இருந்த மக்கள் கிழக்கே போகப் போக அந்த பெயரும் அவர் களுடனே நகர்ந்து சென்றது. ஆகவே காலக்கிரமத்தில் விந்தியமலை தொடர்புக்கு வடக்கே உள்ள நிலப்பிரிவு முழுவதிலும் இந்தப் பெயர் வழக்கத்தில் வந்தது. அம்மக்களின் ஆதிக்கத்தின் கீழ் ஒருக்காலும் வராத நம் நாட்டிற்கு அது பொருத்தமாகாது. ஆயினும் 2000 ஆண்டுகளுக்குமுன் வடஇந்தியாவின் மேல் படையெடுத்து வந்த அலெக்சாண்டர் தீ கிரேட் என்னும் ஒரு தளகர்த்தனின் சரித்திரத்தை எழுதிய கிரேக்கர் சரித்திர ஆசிரியர்கள் வடநாட்டைப் பற்றி எழுதும் போது இந்தியாவென்று எழுதினமையால் இந்தியதேசம் இருக்கிற விடயம் மேல் நாட்டார் அறிந்துகொள்ள வசதி ஏற்பட்டது. ஆயிரக்கணக் கான மைல்களுக்கப்பால் உள்ள மேல்நாட்டார்கள் ஒரு பகுதிக்கும் மற்றொரு பகுதிக்கும் உள்ள வித்தியாசங்களை அறியாமையால் இமயமலைத் தொடர்புக்கு தெற்கே உள்ள நாடு முழுமைக்கும் இந்தியாவென்று ஒரு பொதுப் பெயர் கொடுத்து அப்பெயர் இப்பொழுது நம் நாட்டிற்கும் வழங்கப்பட்டுவிட்டது.

ஆரியக்கூட்டுறவால் வந்த வினை

இவ்விதம் இரு வகுப்பினரும் தனிப்பட்ட முறையில் வளர்ந்து வந்தபோதிலும் நாளடைவில் இரு வகை கலைகளுக்கும் மொழிகளுக்கும் தொடர்பு ஏற்பட்டு வடநாட்டு நாகரிகத்தாலும், வடமொழியாலும் நம் நாகரிகமும் நம் மொழியும் சீர்குலைந்து போனதென்பது மறுக்க முடியாத உண்மை. இவ்விதம் சீர்குலைந்தமைக்கு தனித்தமிழ் தேய்ந்து மற்ற திராவிட நாடுகளில் தெலுங்காகவும், கன்னடமாகவும், மலையாளமாகவும் இருந்து வருகிறதே போதிய சான்றாகும். நாம் பேசி வரும் தமிழே வடமொழியில் கலப்புற்று கெடுதலடைத்திருப்பதை தெற்றென விளக்கும்.

நாகரிகத்தைப் பார்ப்போமானால் சிறு வயதிலேயே பெண்களை மணம் செய்விப்பதும், ஆண்களை இழந்த பெண் மக்களை மறுமணமில்லாமல் வைப்பதும் தீண்டாமைப் பேயை நாட்டில் ஆடவிட்டிருப்பதும், நமக்குள்ளாகவே சாதி என்னும் பேரால் அனேக பிரிவுகளை ஏற்படுத்தி இருப்பதும், நமக்கு ஏற்பட்டிருக்கும் பெருஞ்சீர்கேட்டின் பல அடையாளங்களாகும்.

இவ்வுண்மைகளை நான் வற்புறுத்திச் சொல்வதன் நோக்கம் நாமும் நம்மைச் சார்ந்த மற்ற திராவிட மக்களும் பூர்வீகம் தொட்டு வடநாட்டாருக்கு வேறுபட்ட வகுப்பினர். அவர்களுடன் நாம் கலந்து கொள்ளுவதனால் நமக்கு இடையூறுகள் ஏற்படுமே தவிர வேறில்லை, நம் நாடு ஒரு தனிப்பட்ட நாடு என்பதை நாமெல்லோரும். உணர வேண்டுமென்பதற்கே.

- விடுதலை - 28.12.1938

- விடுதலை நாளேடு 13 11 19

சென்னை மாநிலத் தமிழர் மாநாடு; தமிழர் யார்? பார்ப்பனர் தமிழரல்ல (2)

தலைவர் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் கர்ஜனை

(வாசக நேயர்களே,

ஊன்றிப் படித்துப் பயன்பெற வேண்டிய முக்கியப் பகுதி இது.

இதுபற்றி தங்களது கருத்தினை சுருக்கமாக எழுதி அனுப்புமாறு வேண்டுகிறோம்.

திராவிடர் இயக்கம் - 80 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாடு அரசியல் களத்தின் முக்கிய நிகழ்வுகள் - வரலாறு பற்றிய காலக்கண்ணாடியாக - திராவிடத்தின் தேவைக்கான நுண்ணாடியாக இது அமையும் ஒன்று. இதற்கான தேவை - பயன் - நுகர்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் பெரிதும் வரவேற்கப்படுகிறது. - ஆசிரியர்)

நமது சுயராஜ்யம் திராவிட ராஜ்யமே

ஆகவே நாம் சம்பந்தப்பட்ட வரையில் சுயராஜ்ஜியம் என்கிற வார்த்தைக்கு அர்த்தம் இருக்குமேயாகில் அந்த ராச்சியம் தமிழ் அல்லது திராவிட ராச்சியமாக இருக்க வேண்டும். ஆதிக்கத்தை நடத்துகிறவர்கள் திராவிடர்களாய் இருந்தால் மட்டுமே அது உண்மையில் சுயராச்சியம் ஆகும். இப்போது சென்னையில் நடைபெற்று வரும் ராச்சியம் அப்பேர்ப்பட்ட ராச்சியம் ஆகுமாவென்று பார்ப்போ மானால் இல்லையென்று திண்ணமாகச் சொல்லலாம்.

நமது மாகாணத்தில் ஆதிக்கம் செலுத்திவரும் பத்து பேர் கொண்ட மந்திரிசபையில் 4 பேர் பார்ப்பன ஆரியர்கள். இச்சபையில் தலைமை வகித்து தான் ஒருவரே அதிகாரி மற்றவர்கள் பொம்மைகள் என்று பொதுமக்கள் கருதக்கூடிய விதத்தில் நடந்துவரும் முதல் மந்திரி ஒரு பார்ப்பன ஆரியர். இப்படி அமைக்கப்பட்டிருக்கும் மந்திரி சபை தாங்கள் செய்யும் காரியங்களில் வாக்காளர்களாகிய தமிழர்களாகிய உங்கள் நோக்கத்தை எதிர்பார்க்கிறார்களா? இல்லை. எல்லாக் காரியங்களிலும் காங்கிரசின் நிர்வாகக் கமிட்டியாரின் அபிப்பிராயத்தையும் தீர்மானங்களையும் எதிர்பார்த்தே நடத்துகிறார்கள். இந்த நிர்வாகக் கமிட்டியின் அங்கத்தினர்கள் அனைவரும் ஆரியரே. திராவிடர்கள் அல்லவென்பது உலகமறிந்த உண்மை. இக்காரியக் கூட்டத்தாராவது தாங்களே சுயேச்சையாக ஒரு முடிவுக்கு வருகிறார்களா? எல்லாக் காரியங்களிலும் அவர்களுக்கு அறிந்த மட்டும் தந்தையாயிருப்பவர் காங்கிரசில் அவர் 4 அணா அங்கத்தினர்கூட அல்லவென்று உங்களுக்குத் தெரியும். ஆகவே இப்போது நமது மாகாணத்தில் நடைபெற்று வரும் ஆதிக்கம் சுயராஜ்யம் என்று சொன்னால் மக்களை ஏமாற்றுவதாகாதா? இவ்வாட்சி பார்ப்பனர் ஆட்சியென்றால் மிகையாகுமா? இவ்வாட்சியை திராவிட மக்கள் மேல் ஆரியர் நடத்தும் ஆதிக்கமென்றால் பொருத்தமாகாதென்று யாராகிலும் சொல்ல முடியுமா?

பார்ப்பன ஆட்சிப்பலன்

இவ்வாட்சியினரின் செய்கைகளில் சிலவற்றை மட்டில் பரிசீலனை செய்து அவைகள் திராவிட மக்களின் முன்னேற்றத்துக்கு ஒத்ததாய் இல்லாவிடினும் எவ்வளவு தூரத்திற்கு தற்கால நிலையையாவது பாதுகாத்து அவர் களுடைய தன் மதிப்பைக் கெடுக்காமலாவது இருக்குமா வென்று பார்ப்போம். தமது ஆதிதிராவிட சகோதார்களைச் சில காலமாக ' ஹரிஜன் ஹரிஜன்" என்று காங்கிரஸ்வாதிகள் அழைக்கிறார்களே. அதைப்பற்றி சற்று யோசிப்போம். ஏர்வாடா சிறையில் அரசியல் சூழ்ச்சியில் பேர்போன காந்தியார் ஒடுக்கப்பட்ட வகுப்பினரை தேர்தலில் பொதுத்தொகுதியில் கொண்டு வந்து மாட்டக்கருதி உண்டு பண்ணிய வார்த்தையாகும் இந்த 'ஹரிஜன்' என்னும் பதம். நமது மந்திரிமார்கள் அதிகாரத்துக்கு வந்தது முதல் இந்த வார்த்தையை சர்க்கார் உத்தரவுகளிலும் சட்டசபை நடவடிக்கைகளிலும் எந்தெந்த சந்தர்ப்பம் கிடைக்குமோ அப்போதெல்லாம் உபயோகிக்கிறது மாத்திரமல்லாமல் சட்டங்களில் முதல் கொண்டு இவ்வார்த்தையைப் புகுத்தி இருக்கிறார்கள். மக்கள் எந்த வகுப்பைச் சேர்ந்தவர்களென்று நாளடைவில் அறியாமல் போவதற்கு அவர்கள் பெயரை மாற்றி அவர்களுக்கு ஒரு புதுப்பெயர், அதிலும் சொந்த மொழியில்லாமல் அன்னியமொழியில் கொடுக்கிறதைவிட தகுந்தவழி வேறுண்டா? அடுத்தப்படியாக எல்லோருக்கும் "ஸ்ரீ" இப்போது பட்டம் அளித்திருக்கிறார்களே அதுதான் என்ன! தமிழ் மக்களாகிய நமக்கு வடமொழியிலுள்ள "ஸ்ரீ"யை உபயோகிப்பதின் பொருத்தமென்ன? பொருத்த மில்லை யேல் அதன் நோக்கமென்ன? அடுத்தாற்போல் சமஸ்கிருதத்தை ஒத்து வந்த இந்தி மொழியை நம்மேல் சுமத்துவதின் நோக்கமென்ன? இச்செய்கைகள் ஒவ் வொன்றும் தனிப்பட்ட செய்கைகளா அல்லது ஒரு நோக்கத் துடன் நடைபெற்று வருகின்றவைகளா? என்னோக்கத்துடன் இக்காரியங்கள் நடத்தப்பட்ட போதிலும், முடிவில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாய் நாம் பாதுகாத்தவந்திருக்கும் நமது தமிழக கலையையும் தமிழ் நாகரிகத்தையும் நாம் தமிழரென்கிற உணர்ச்சியையும்கூட சாகடிக்கும் தன்மையும் உடையதல்லவா?

அடக்குமுறைக் கொடுமை

இந்தி சம்மந்தமாக இன்னும் விரிவாய் எடுத்து சொல்கிறது அவசியமில்லையென்று நினைக்கிறேன். எவ் விதம் அதை புகுத்த மந்திரியார் முயற்சித்து வருகிறா ரென்பதும் அதை எதிர்ப்போருக்கு விரோதமாக அடக்கு முறையை அனுஷ்டித்து வருவதும் அது சம்பந்தமாக நூற்றுக்கணக்கான நமது மக்கள் ஆண்கள், பெண்கள் கைக்குழந்தைகள் முதற்கொண்டு சிறைக்கு அனுப்பப் பட்டிருப்பதும் விசேடமாக நமது பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதும். உங்களெல் லோருக்கும் தெரிந்த காரியம். என்ன குற்றத்திற்காக இவர்களெல்லாம் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றால், செம்மொழியாகிய தமிழ் வாழ விரும்பி, நம் கலையையும், நம் நாகரிகத்தையும் காப்பாற்ற வேண்டு மென்ற கவலை கொண்ட ஒரே குற்றமே. இம்மந்திரி மார்களுக்கு நான் சொல்லவேண்டியது ஒன்றேதான். நீங்கள் எந்த காலத்திற்கும் அதிகாரம் வகித்திருக்கப் போகிறதில்லை. நீங்கள் கணக்குப் கொடுக்கவேண்டிய நாள் தினந்தோறும் நெருங்கி வருகிறது அப்போது உங்களுக்கு தமிழ் மக்கள் தக்க பதிலளிப்பார்கள்'' என்பதே தான்.

நாம் செய்ய வேண்டுவன

முடிவாக நம் நாகரிகத்தையும் நம் கலையையும் காப்பாற்றி வளர்க்க வேண்டுமானால் என்னென்ன விடயங்கள் அவசியம் என்பதைப்பற்றி சில வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன்.

முதன் முதலாக நம் மக்களிடம் உள்ள படிப்பினையை விலக்க வேண்டும். தொன்று தொட்டு நமது கிராமங்களில் இருந்து வந்த பழைய திண்ணைப்பள்ளிக் கூடங்களுக்கு புத்துயிர் கொடுத்து பழைய முறையில் அப்பள்ளிகளை நடத்தி வருவோமானால் எல்லா மக்களையும் குறுகிய காலத்துக்கள் படித்தவர்களாக ஆக்குகிறது கூடுமான காரியம் என்பது என்னுடைய முடிவு. பணச்செலவும் பொறுக்கக்கூடியதாகவே இருக்கும்.

நான்கு ஆண்டு அளவில் பள்ளியில் தங்கும் பிள்ளைகள் நன்றாக எழுதப்படிக்கும் திறமை வாய்ந்தவர்களாகக் கூடும். நமது பள்ளிகளில் எந்த தரப்பள்ளியாயினும் ஆரம்பக்கல்வி முதற்கொண்டு பல்கலைக்கழங்கள் வரை தமிழ்ப்படிப்புக்கு முதலிடம் கொடுக்க வேண்டியது அத்தியாவசியம். தமிழுக் கென்று ஒரு பல்கலைக்கழகம் இருக்க வேண்டும். இப்போதுள்ள பல்கலைக்கழகங்களிலொன்றாவது அதற்கு உபயோகப்படாமல் போகுமாயின் ஒரு தனிப்பட்ட பல்கலைக்கழகம் ஏற்படுத்த வேண்டும். அக்கழகம் எவ்வகைப் பட்டதாயினும் அதை மேற்பார்ப்பவர்கள் தமிழில் தேர்ச்சி அடைந்து திறமை வாய்ந்த தமிழர்களாகவே இருக்க வேண்டும். எந்த நாட்டிற்கும் தன்னைத்தானே காப்பாற்றிக்கொள்ளுத்திறமை அவசிய மாகையால் அதற்காக ஒரு தரைப்படையும் ஒரு கடல்படையும், ஒரு ஆகாயப்படையும் அவசியம்.

இது சம்பந்தமாக நாம் உடனே செய்ய வேண்டியது நமது மாகாண படையைத் திரும்பவும் புதுப்பிக்க வழிதேட வேண்டும். தமிழர்களின் முக்கிய தொழில் பயிர்த்தொழி லானதாலும் அவர்கள் அனேகமாய் கிராமவாசி களாகையாலும், கிராம முன்னேற்றத்திற்கு வேண்டிய விடயங்களைக் கவனிக்க வேண்டும். பயிர்ச் செயலில் புதுவழிகளை அனுசரிப்பது மாத்திரமல்லாமல் விளையும் பொருள்களை தக்க விலைக்கு விற்கவேண்டியது அவசிய மாகையால் அதற்குள்ள வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும். போக்குவரத்து வழிகளைச்சீர்ப்படுத்தவேண்டும். நம் நாட்டிலுள்ள துறைமுகங்களை சீர்திருத்தம் செய்ய வேண்டும். அதன் காரணமாய் வியாபாரக் கப்பல்களும் கடைசியாக சண்டைக் கப்பல்களும் ஏற்படுகிறதற்கு வசதிகள் உண்டு பண்ண வேண்டும்.

கிராம கைத்தொழில்களை ஆதரிக்க வசதிகள் ஏற்பட வேண்டும். அத்தொழில்கள் நாடெங்கும் ஒரே தொழிலா யில்லாமல் இடத்துக்கேற்ற தொழிலை ஆதரிக்கவேண்டும். நான் மேற்கூறிய காரியங்கள் ஒரே தினத்தில் ஏற்படக் கூடியவை அல்ல. நாளடைவில் அமலுக்கு கொண்டுவர வேண்டியவை. உடனே இப்போதே நாம் கவனிக்க வேண்டிய விடயத்தைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லி என் முன்னுரையை முடித்துக் கொள்ளுகிறேன்.

நமது போர்

நாம், இப்போது அரசு புரிந்து வரும் மந்திரிசபையாருடன் போர்புரிந்து வருகிறோம். அப்போரின் நோக்கம் என்னவெனில் பல்லாயிரமாண்டுகளாய் நமக்கென்று நம் முன்னோர் பாதுகாத்து நம்மிடம் ஒப்படைத்திருக்கும் நமது பழையமொழி, கலை, நாகரிகம், நம்முடைய தனிப்பட்ட வாழ்வு இவைகளைக் காப்பாற்றவே இப்போரில் ஈடுபட்ட தன் பலனாய் நான் முன் சொல்லியது போல நமது அரும்பெரும் தலைவர் ஈ.வெ.ராமசாமிப் பெரியாரும் இன்னும் சுமார் 600 தமிழ் மக்களும் சிறையில் அடைபட்டு வருந்துகின்றனர். இவ்விதம் அடக்குமுறையை அனுசரிப்பதால் நமது தைரியத்தைக் கலைத்து நம்மைத் தோல்வியடையும்படி செய்யலாமென்று முதன் மந்திரி கனம் ராஜகோபாலாச்சாரியார் நம்புகிறார் போலும். நாம் ஒற்றுமையாகவும் திடத்துடனும் இந்த ஆபத்தை எதிர்த்துப் போர்புரிய வேண்டியது நமது கடமையாகும். இப்போருக்கு வேண்டிய திரேக பலத்தையும் மனதிடத்தையும் நம்மெல்லோருக்கும் கொடுக்க வேணுமாய் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.

- விடுதலை - 28.12.1938

-  விடுதலை நாளேடு 15 11 19

தமிழின் பெருமையும் - பழமையும் வடமொழியால் வந்த கேடு வித்வான் மா. இராஜமாணிக்கம் விளக்கம்

(வாசக நேயர்களே,

ஊன்றிப் படித்துப் பயன்பெற வேண்டிய முக்கியப் பகுதி இது.

இதுபற்றி தங்களது கருத்தினை சுருக்கமாக எழுதி அனுப்புமாறு வேண்டுகிறோம்.

திராவிடர் இயக்கம் - 80 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாடு அரசியல் களத்தின் முக்கிய நிகழ்வுகள் - வரலாறு பற்றிய காலக்கண்ணாடியாக - திராவிடத்தின் தேவைக்கான நுண்ணாடியாக இது அமையும் ஒன்று. இதற்கான தேவை - பயன் - நுகர்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் பெரிதும் வரவேற்கப்படுகிறது. - ஆசிரியர்)

 

சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் (24.8.1938) தமிழ் மாணவர் கழகத் திறப்பு விழாவைச் செய்த வித்வான் மா.இராசமாணிக்கம் பி.ஓ.எல். அவர்கள் செய்த சொற் பொழிவின் சாரம்:

தமிழின் பழமை

நம் தாய்நாடாகிய இந்தியா முழுவதும் ஆரியர் வருகைக்கு முன் தமிழ் பரவி இருந்ததென்பது ஆராய்ச்சி யாளர் துணிபாகும். திராவிட மொழிகள் அனைத்திலும் பழமையானது தமிழ்மொழி என்பதும் அவ்வாசிரியர் கொள்கை. தென்னிந்தியாவிலுள்ள தெலுங்கு, தமிழ், மலை யாளம், கன்னடம், துளுவம், குடகு என்னும் ஆறு செப்பஞ்செய்யப்பட்ட பல மொழிகளும், துடா, கோட்டா, கோண்ட், கூ, ஓராயன், இராஜ் மஹால் என்னும் செப்பஞ்செய்யப் படாத ஆறு இந்திய மொழிகளும் ஆக  இப்பன்னிரண்டும் தமிழ் மொழிக்கே நெருங்கிய உறவு முறையில் இருந்தாலும், இவற்றில் பழமையானது தமிழாக இருத்தலாலும் பண்டைத் தமிழே இவற்றிற்குத் தாய்மொழி எனக்கூறல் தவறாகாது. மேலும், சிந்துப் பிரதேச ஆராய்ச்சிகளிலிருந்தும்

பலுஜிஸ்தானத்தில் பேசப்படும் பிராகிமொழியிலிருந்தும் தமிழ் மொழி இந்தியா முழுவதும் அல்லாமல் பலுஜிஸ்தான வரை யிலும் ஆரியர் வருகைக்கு முன் பரவியிருந்தது என்பதை நிரூபித்துக் காட்டலாம்.

ஆரியர் கி.மு. 2600க்கு முன் இந்தியாவில் இல்லை யென்பது சர்.ஜான் மார்ஷல் முதலிய ஆராய்ச்சியாளர் துணிபு. எனவே கி.மு. 2600 முன் வரையில் நம் தாய் மொழியாகிய தமிழ் நம் தாய்நாடாகிய இந்தியா முழுவதும் பரவியிருந்தது என்பதை தமிழராகிய நாம் அறிந்து மகிழ்தல் வேண்டும். ஆரியர் வந்தவுடன் அவர்கள் மொழியாகிய வடமொழியை வட இந்தியாவில் இருந்த தமிழ் மக்கள் பேச நேரிட்டது. தமிழ் மக்களுடைய உச்சரிப்பு, பேச்சு முறை முதலியவற்றால் வடமொழியின் உச்சரிப்பும், பேச்சு முறையும் கெட்டதோடு தமிழ் மொழியின் உச்சரிப்பும் பிறவும் கெட்டு நாளடைவில் தமிழ் அழிநிலையை அடையத் தொடங்கியது. பெருவாரியான தமிழ் மக்களு டைய கூட்டுறவால் வேதகால வடமொழியே கெட்டு விட்டது. முதல் வேதமாகிய ரிக் வேதத்திலேயே இக்கெடு தலை காணலாமென்பது ஆராய்ச்சியாளர் முடிவு (டாக்டர் சனிதிகுமர்சட்டர்ஜி வரைந்துள்ள "வங்க மொழியின் தோற்றமும் வளர்ச்சியும்") நாளடைவில் வடமொழி தமிழர் கலப்பால் கேடுற்றுப் பிராக்கிருத மொழிகளாக மாறிவிட்டது. அவற்றில் ஒன்றுதான் புத்தர் பேசிவந்த பாலி பாஷை. இப்பிராகிருத மொழிகளும் நாளடைவில் கிரேக்கர், பராணீகர், துருக்கியர், ஆப்கானியர், மங்கோலியர் முதலிய பல நாட்டு மக்கள் தொடர்பால் (அவர் தம் மொழிகளின் கலப்பால் கெட்டு இன்று வழங்கப்படும் வங்காளி, பஞ்சாபி, சிந்தி, இந்தி, குஜராத்தி, மராத்தி, முதலிய வட இந்திய மொழிகளாகப் பரிணமித்தன. இவற்றிற்கு ''இந்திய ஆரிய மொழிகள்" என்பது இன்று வழங்கும் பெயராகும்.

வடமொழி கலப்பால் வருங்கேடு

இவ்வாறு வட இந்தியா முழுவதும் பல்வேறு நாட்டு மக்கள் குடி புகுந்து பல்வேறு மொழிகளைப் பேசத் தலைப்பட்டதும் பல்வேறு நாகரிகமும் வளரவே, தமிழ் மொழியோ, தமிழரோ இருத்தற்கு இடமில்லையாயிற்று. ஆயினும் இம்மொழிகளின் கலப்பால் கொலையுண்ட தமிழை வட இந்தியாவிலுள்ள கோண்ட், க, ஓராயரன், இராஜ்மஹால், பிராஹி முதலிய மொழிகளில் இன்னும் காணலாம். தமிழர் பழக்க வழக்கங்கள் சிலவும் இம் மொழிகளைப் பேசும் மக்களிடம் இன்னும் காணலாம்.

வட இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகள் தோன்றவே வட இந்தியாவுக்கு அடுத்த ஆந்திரநாடு ஆரிய நாகரிகத்திற்கு உள்ளாகி அங்கிருந்த மொழியும் வடமொழிக் கலப்புடையதாக ஆகி விட்டது. தெலுங்கில் உள்ள எல்லாச் சொற்களும் தமிழ்ச் சொற்களுக்குப் பெரிதும் பொருத்த முடையனவாகக் காணப்படினும் இன்றைய தெலுங்கு மொழி வடமொழியின் உதவியில்லாமல் இயங்க முடியாத பரிதாப நிலைக்கு வந்து விட்டது. இதே நிலைமை சுமார் கி.மு. 500 வருடங்களுக்கு முன்னரே கன்னட மொழிக்கும் நேர்ந்து விட்டது, அதே பரிதாப நிலை கி.பி. 8ஆம் நூற்றாண் டுக்குப் பிறகு மலையாளம், குடகு, துளுவம் முதலிய மொழி களுக்கும் ஏற்பட்டு விட்டது. அதாவது விந்திய மலைக்குத் தென்பாலிருந்த தமிழ் வடமொழிக் கலப்பேற்று தெலுங்காக வும், கன்னடமாகவும், மலையாளமாகவும். குடகு ஆகவும், துளுவமாகவும் மாறிவிட்டது.

தமிழின் பரிதாப நிலைமை

ஆனால், இந்தப் பெரிய மாறுதல் நமது தமிழ்மொழிக்கு உண்டாகவில்லை. ஏனெனில் தூய இரத்தவோட்டமுடைய அக்காலத்தமிழ் மக்கள் தம் தாய்மொழியை வடமொழிக் கலப்பு ஏற்படாமல் இயன்றவரையிலும் தடுத்து வந்தனர் என்பதை சங்க இலக்கியங்களைப் பயின்றார் நன்கு உணரக்கூடும். தொல்காப்பிய முதலிய சங்க நூல்களில் நூற்றுக்கு நான்கு சொற்களே உடமொழிச் சொற்களாகக் கூறலாம். பிற்காலத்திய சிலப்பதிகாரம், மணி மேகலை ஆகிய நூல்களில் - வடநாட்டு மதங்களாகிய பவுத்தமும், சமணமும் பரவிய காலத்தில் (கி.பி. முதல் இரண்டு நூற்றாண் டுகளில்) நூற்றுக்கு பத்துப் பதினைந்து வடசொற்கள் தமிழ் மொழியில் நுழைந்து விட்டன என்பதைத் தமிழ் அறிஞர் நன்குணர்வர். பின்னர்த் தேவார திருவாசக காலங்களிலும் (கி.பி. மூன்று முதல் எட்டு நூற்றாண்டுகள் முடிய) நாலாயிரப் பிரபந்தம் பாடப்பெற்ற காலங்களிலும் வட சொற்கள் நூற் றுக்கு இருபதுக்கு மேலாகத் தமிழ் மொழியில் இடங்கொண்டு விட்டன. பின்னர் வந்த வைணவ ஆச்சாரியர்கள் காலத்தில் வடமொழியும் தமிழ் மொழியும் கலந்த மணிப்பிரவாள நடைதோன்றிற்று. அந்நடையே அன்று முதல் இன்று வரை யில் கதாகலாட்சேபங்களிற் பாகவதர்களாலும், வைணவ அடியார்களாலும் பேசப்பட்டு வருகின்றது. பின்னர் வந்த கம்பராமாயணம் முதலிய நூல்களிலும், புராணங்களிலும், வடமொழிச் சொற்கள் மிகுதியாகக் கலப்புண்டன. வில்லி புத்தூராழ்வார் பாரதத்தில் நூற்றுக்கு அய்ம்பதுக்கு மேலாகவே வடசொற்கள் நுழைந்து விட்டன. இதற்குப் பிற்பட்ட காலத்தில் விஜயநகர அரசர்கள் ஆட்சி தமிழகத்தில் ஏற்பட்ட போதும் மகாராட்டிர ஆட்சி ஏற்பட்ட போதும் முறையே தெலுங்கு மொழிகளும், மகாராஷ்டிர மொழி களும் ஒரு சில உருது மொழிகளும் தமிழில் கலக்கலாயின. இவற்றின் பயனாய்க் குமரகுருபர சுவாமிகள் போன்ற சைவ ஆசாரியர் பாடிய பிரபந்தங்களிலும் 'சலாம், சொக்காய் போன்ற உருது சொற்கள் இடங்கொண்டு விட்டன. இவை போல் இடங்கொண்ட சொற்கள் பலவாகும். இது உரை கூறியவற்றால் பண்டைக் காலத்திலிருந்து தமிழ் மொழியில் வடமொழிச் சொற்களும் பிறமொழிச் சொற்களும் புகுந்து அவற்றின் பயனாய் நாம் தமிழ் மொழிச்சொற்களை இழந்து நிற்கின்ற பரிதாப நிலையையும், தமிழ் மொழி தன் தூய்மையை இழந்து நிற்கின்ற கேவல நிலையையும் நன்றாக அறியலாம்.

தாய் மொழிக் கவலையில்லாததால் வந்த கேடு

சுமார் 150 ஆண்டுகளாக ஆங்கிலம் அரசியல் மொழி யாக இருந்து வருவதும் அதனால் எழுதப்படும் தமிழும் பேசப்படும் தமிழும் எந்த அளவில் கெட்டிருக்கின்றது என்பதை அறிவுடையோர் நன்கு உணரக்கூடும். நமது பேச்சு மொழி பெரிதும் ஆங்கிலச்சொற்களையே கொண் டிருக்கிறது என்பதை நீங்களே அறிவீர்கள். எழுத்து முறையிலேயும் பீச்சு, பார்க், லைட் அவுஸ், ஹார்பர், ஹவர் (மணி) முதலிய நூற்றுக் கணக்கான சொற்கள் புகுந்து விட்டன என்பதை வெட்கத்தோடு கூறவேண்டிய நிலையில் இருக்கி றோம். சுருங்கக் கூறின் தமிழன் என்ற உணர்ச்சி இல்லா மையால் தான் நாம் நமது தாய்மொழிப் பற்றிய கவலையில்லாமல் விலங்கினும் கேடு கெட்ட தன்மையில் இருந்து வந்திருக்கிறோம். மேற் கூறிய பல மொழிகளின் கலப்பால் நமது நாகரிகமே மிகப்பெரிய அளவில் மாறுபட்டு விட்டது என்பதையும் சங்க நூல்களைப் படித்த தமிழறிஞர் நன்கு அறியக்கூடும். பண்டைத் தமிழர்கள் திருமணத்தில் வட மொழி மந்திரங்களில்லை; தீவலம் வருதல் இல்லை; தட் சணை பெற புரோகிதன் இல்லை; இது முற்றிலும் தமிழர்க்கே உரிய திருமணம'' என்று காலஞ்சென்ற சரித்திரப் பேராசிரிய ரான தோழர் பி.மு.சீனிவாச அய்யங்கார் கூறியுள்ளதை ("பண்டைத் தமிழர் சரித்திரம்'") உண்மைத் தமிழர்களாகிய நீங்கள் கவனித்தல் வேண்டும். அப்பண்டை மணமுறை இன்று இல்லாமற் போனதற்குக் காரணம் யாது? என்பதை நீங்களே உணருங்கள். மொழிக்கலப்பால் நாகரிகக்கலப்பும் ஏற்படும் என்பது இவ்வொன்றைக் கொண்டே உணரப்படும் நம் தமிழ்ப்பண்டிதர் தம் குழந்தைகட்குத் திருஷ்டி தோஷம் முதலியவை நீங்க முஸ்லிம் மத குருக்களிடம் சென்று வரு தலை நீங்கள் அறிவீர்கள். இந்தத்திருஷ்டி தோஷம் முதலிய வற்றை நீக்குவதற்கு நம் மதப்பெரியார்களோ கடவுளரோ பயன் அற்றவர்களா? இங்ஙனம் பலதுறைகளிலும் கருத் தூன்றிப் பார்க்கும் பொழுது தமிழர் நாகரிகம் உருக்குலைந்து விட்டது என்பதை அறிவுடையோர் மறுத்தல் இயலாது. போதாக்குறைக்கு ஆங்கில நாகரிகம் ஓர் அளவில் நன்மை செய்திருப்பினும் அது தமிழர் நாகரிகத்தையே பெரிதும் மாற்றிவிட்டது என்று அழுத்தமாகக் கூறலாம். இதற்குத் தமிழர் தம் அறிவீனமே காரணமாகும்.

என்ன செய்ய வேண்டும்?

நமது தமிழ் மொழி தூய்மையடைய வேண்டுமானால் நமது நாகரிகம் ஓரளவாவது நிலைத்திருக்க வேண்டுமானால் தமிழராகிய நாம் ''தமிழர்' என்ற அழுத்தமான உணர்ச்சி யோடு பண்டைத் தமிழர் கையாண்ட முறைகளை இக்காலத் திற்கேற்ற அளவில் கையாண்டு ஒரு மனப்பட்டவர்களாய் அரசியல் வேறுபாடுகளைக் களைந்து எறிந்து தமிழ் உணர்ச்சியோடு வாழ்வோமாயின் தமிழ்நாடும், தமிழ் மொழியும், தமிழ் நாகரிகமும் இன்றுள்ள அளவிலாவது நிலை பெற்றிருக்கக்கூடும். இன்றேல் "தமிழன் இறந்து விட்டான்; தமிழ்மொழி இறந்து விட்டது; தமிழ் நாடும் மறைந்து விட்டது" என்ற கேவல எண்ணத்துடன் விலங்கி னங்களாய் நடைப்பிணங்களாய் உயிருள்ள வரையில் ஊசலாடித் திரியும் கொடிய நிலையே ஏற்படும். இதனை நன்குணர்ந்து தமிழர் செந்நெறிப்பற்றி நடப்பாராக! தமிழ் நாடு, தமிழர், தமிழ் வாழ்வதாக!

- 'விடுதலை', 27.8.1938

-  விடுதலை நாளேடு, 11 11 19

வெள்ளி, 8 நவம்பர், 2019

திருக்குறளில் இந்து கடவுள்கலா?

*திருக்குறளில் இந்து கடவுள்கள் பெயர் இருப்பதாக பதிவிட்ட எச்ச.ராஜா.. உண்மை என்ன?*

தமிழக பாஜக கட்சியின் டுவிட்டர் பக்கத்தில், திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு எதிராக இணையத்தில் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். தமிழக பாஜக திருவள்ளுவரை அவமானப்படுத்திவிட்டது. அவருக்கும் கூட மத சாயம் பூசிவிட்டது என்று குறிப்பிட்டு பலர் இணையத்தில் தமிழக பாஜகவிற்கு எதிராக டிவிட் செய்து வருகிறார்கள். திமுக தலைவர் ஸ்டாலின், மார்க்சிஸ்ட் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பல தலைவர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், இன்று காலை தஞ்சை மாவட்டம் வல்லம் அருகே திருவள்ளுவர் சிலை மீது மர்ம நபர்கள் சாணி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு பல்வேறு கட்சித்தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், இதற்கு பாஜகவே காரணம் என்ற குற்றச்சாட்டையும் அரசியல்வாதிகள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் முன்வைத்து வருகிறார்கள்.

இதற்கிடையே நேற்று டிவிட்டரில் கீழ்காணும் பதிவை பகிர்ந்திருந்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, திருக்குறளில் இந்து மத கடவுள்கள் பெயர் இருப்பதாக கூறினார்.

எச்.ராஜா பகிர்ந்துள்ள அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள குறள்களை நாம் நியூசு தரப்பில் வாசித்து அதன் பொருள் விளக்கத்தை ஆராய்ந்தோம். அதில் எச்.ராஜாவின் பதிவில் கூறியதை போல் எந்த இந்துமத கடவுள்களின் பெயரும் குறிப்பிடப்படவில்லை என்பது உறுதியாகிறது.

எச்.ராஜா குறிப்பிட்டுள்ள குறள்களையும் அதன் விளக்கத்தையும் தற்போது காண்போம்.

குறள் 610:

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்

தாஅய தெல்லாம் ஒருங்கு

பொருள்:

சோம்பல் இல்லாதவர் அடையும் பயன், சோர்வில்லாத ஒரு மன்னன், அவன் சென்ற இடமனைத்தையும் தனது காலடி எல்லைக்குள் கொண்டு வந்ததைப் போன்றதாகும்.

குறள் 1103:

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு

பொருள்:
தாமரைக் கண்ணான் உலகம் என்றெல்லாம் சொல்கிறார்களே, அது என்ன! அன்பு நிறைந்த காதலியின் தோளில் சாய்ந்து துயில்வது போல அவ்வளவு இனிமை வாய்ந்ததா?.

குறள் 84:

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து

நல்விருந்து ஓம்புவான் இல்.

பொருள்:

மனமகிழ்ச்சியை முகமலர்ச்சியால் காட்டி விருந்தினரை வரவேற்பவர் வீட்டில் அமர்ந்து செல்வம் எனும் திருமகள் வாழ்வாள்.

குறள் 167:

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்

தவ்வையைக் காட்டி விடும்.

பொருள்:

செல்வத்தை இலக்குமி என்றும், வறுமையை அவளது அக்காள் மூதேவி என்றும் வர்ணிப்பதுண்டு. பொறாமைக் குணம் கொண்டவனை அக்காளுக்கு அடையாளம் காட்டிவிட்டுத் தங்கை இலக்குமி அவனைவிட்டு அகன்று விடுவாள்.

குறிப்பு: திருமகள் என இக்குறள்களில் செல்வத்தையே வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

குறள் 179:

அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறிந் தாங்கே திரு

பொருள்:

பிறர் பொருளைக் கவர விரும்பாத அறநெறி உணர்ந்த அறிஞர் பெருமக்களின் ஆற்றலுக்கேற்ப அவர்களிடம் செல்வம் சேரும்.

குறள் 519:

வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக

நினைப்பானை நீங்கும் திரு

பொருள்:

எடுத்த காரியத்தை முடிப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பவரின் உறவைத் தவறாக எண்ணுபவரை விட்டுப் பெருமை அகன்று விடும்.

குறள் 617:
மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளான் தாமரையி னாள்.

பொருள்:
ஒருவனுடைய சோம்பலில் கரிய மூதேவி வாழ்கின்றாள், சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் வாழ்கின்றாள். திருமகள், மூதேவி எனப்படும் சொற்கள் முறையே முயற்சியில் ஊக்கமுடையவரையும், முயற்சியில் ஊக்கமற்ற சோம்பேறியையும் சுட்டிக் காட்டிப் பயன்படுவனவாகும்.

குறள் 920:
இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு

பொருள்:
இருமனம் கொண்ட பொதுமகளிருடனும், மதுவுடனும், சூதாட்டத்தினிடமும் தொடர்பு கொண்டு உழல்வோரைவிட்டு வாழ்வில் அமைய வேண்டிய சிறப்பு அகன்றுவிடும்.

குறள் 1062:
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்

பொருள்:
பிச்சையெடுத்துதான் சிலர் உயிர்வாழ வேண்டும் என்ற நிலையிருந்தால் இந்த உலகத்தைப் படைத்தவனாகச் சொல்லப்படுபவனும் கெட்டொழிந்து திரியட்டும்.

குறள் 25:
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி

பொருள்:
புலன்களை அடக்க முடியாமல் வழிதவறிச் சென்றிடும் மனிதனுக்குச் சான்றாக இந்திரன் விளங்கி, ஐம்புலன்களால் ஏற்படும்ஆசைகளைக் கட்டுப்படுத்தியதால் வான்புகழ் கொண்டவர்களின் ஆற்றலை எடுத்துக் காட்டுகிறான்.

குறள் 269:
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்குல்

பொருள்:
எத்தனைத் துன்பங்கள் வரினும் தாங்கிக் குறிக்கோளில் உறுதியாக நிற்கும் ஆற்றலுடையவர்கள் சாவையும் வென்று வாழ்வார்கள்.

குறள் 326:
கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணுங் கூற்று.

பொருள்:
கொலை செய்யாமையை வாழ்வில் அறநெறியாகக் கொண்டவரின் பெருமையை வியந்து, சாவுகூட அவர் உயிரைப் பறிக்கத் தயங்கி நிற்கும்.

குறள் 765:
கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்ற லதுவே படை.

பொருள்:
உயிரைப் பறிக்கும் சாவு எதிர்கொண்டு வந்தாலும் அஞ்சாமல் ஒன்றுபட்டு எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடையதற்கே படை என்ற பெயர் பொருந்தும்.

குறள் 1083:

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு

பொருள்:
கூற்றுவன் எனப்படும் பொல்லாத எமனை, எனக்கு முன்பெல்லாம் தெரியாது; இப்போது தெரிந்து கொண்டேன். அந்த எமன் என்பவன் பெண்ணுருவத்தில் வந்து போர் தொடுக்கக்கூடிய விழியம்புகளை உடையவன் என்ற உண்மையை.

குறள் 1085:
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து

பொருள்:
உயிர்பறிக்கும் கூற்றமோ? உறவாடும் விழியோ? மருட்சிகொள்ளும் பெண்மானோ? இளம் பெண்ணின் பார்வை இந்த மூன்று கேள்விகளையும் எழுப்புகிறதே.

இத்தனை குரள்களிலும் திருமால், இந்திரன், எமன், ப்ரம்மதேவர் என்ற பெயர் ஒரு இடத்தில் கூட வரவில்லை. மரணம் குறித்து வரும் இடத்தில் எல்லாம் எமன், கூற்றுவன் என பொருளறிஞர்கள் விளக்கம் எழுதியுள்ளனர். ஆனால், வள்ளுவர் எமன் என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லக். இந்து மதத்தினர் எமன் என்பதை போல், இஸ்லாமியர்கள் உயிர் எடுக்கவரும் வானவரை இஸ்ராயீல் என அழைக்கிறார்கள். அதே போல், சில இடங்களில் பொருளறிஞர்கள் கடவுள் குறித்து வரும் இடத்தில் திருமால், இந்திரன் என்னும் சொற்களை புரிதலுக்காக பயன்படுத்தியுள்ளார்கள். காரணம், இந்துக்கள் அதிகமுள்ள சமுதாயத்தில் அவர்களது தெய்வங்களை குறிப்பிட்டால் தான் புரியும் என்ற காரணத்தால் கூட இருக்கலாம். மேலும், பொருளறிஞர்களும் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்களாக உள்ளதாலும், அதன் தாக்கம் இருந்திருக்கும். மாறாக வள்ளுவர் எழுதியுள்ள குறலில் எச்.ராஜா குறிப்பிட்டதை போல் எந்த மதத்தின் கடவுள் பெயரும் இல்லை என்பதே தெளிவாகிறது.

இந்து மத வேதங்கள் பலவும், பிறப்பின் அடிப்படையில் நால் வர்ண ஏற்றத்தாழ்வை முன்வைக்கின்றன. அப்படி இருக்கையில் எச்.ராஜா கூறுவதை போல், திருக்குறள் இந்துமத கருத்தை பிரதிபலிப்பதாக இருந்தால், அவர் பிறப்பால் அனைவரும் சமம் என்ற சமுத்துவ கருத்தை வலியுறுத்தும் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற குறளை எழுதி இருக்க மாட்டார்.
- ரமேஸ் கோவ்ந்தரஜ் முகநூல் பதிவு
8.11.19

திங்கள், 4 நவம்பர், 2019

கடவுள்_வாழ்த்து எனும் அதிகாரம் #திருவள்ளுவர்_எழுதியது_இல்லை !

திருக்குறளில் உள்ள #கடவுள்_வாழ்த்து எனும் அதிகாரம் #திருவள்ளுவர்_எழுதியது_இல்லை !

இப்படி சொல்பவர் பெரியாரோ அல்லது கடவுள் நம்பிக்கை இல்லாத அறிஞர் ஒருவரோ அல்ல.

திருக்குறளை ஆய்வு செய்து திருக்குறளில் உள்ள இடைச்செருகல்களை ஆதாரங்களுடன் நிறுவியவர் #வ_உ_சி அவர்கள்.ஆம் இந்திய சுதந்திர போராட்ட தியாகி என புகழப்படும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களேதான். வ.உ.சி.கடவுள் நம்பிக்கை அதிகம் உள்ளவர் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

திருக்குறளில் #கடவுள்_வாழ்த்து எனும் அதிகாரம் மட்டுமல்ல,#வான்_சிறப்பு, #நீத்தார்_பெருமை ஆகிய அதிகாரங்களும் திருவள்ளுவர் எழுதியவை அல்ல.அவை #இடைச்செருகல்களே என்று ஆய்வு செய்து கூறுகிறார் வ.உ.சி.“அவை திருவள்ளுவர் காலத்திற்குப் பிற்காலமும் முந்திய உரையாசிரியர்கள் காலத்திற்கு முற்காலமுமாகிய இடைக் காலத்துப் புலவர் ஒருவரால் பாடிச் சேர்க்கப் பட்டவையென்றும் யான் கருதுகிறேன்” என்று கூறுகிறார்.

பரிமேலழகர் என்பவர் எழுதிய திருக்குறள் உரை ஆரிய சார்பானதாக இருப்பதை ஏற்க மறுத்து (அப்போது சுயமரியாதை இயக்கமோ,பகுத்தறிவு கருத்துக்களோ வீரியமாக பேசப்படாத காலம் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.) ஏற்கும்படி இருக்கும் மணிகுடவர் எழுதிய திருக்குறள் உரையிலிருந்து திருக்குறள் அறத்துப்பால் மணிக்குடவர் பதிப்பு எனும் தலைப்பில் 140 பக்கங்கள் கொண்ட நூலை 1917  ஆம் ஆண்டு பதிப்பித்தார் வ.உ.சி.

1930 - 1932 களில் வெளிவந்த ''தமிழ்ப் பொழில்'' (துணர் 5/மலர் 6) எனும் இதழில் பாயிர ஆராய்ச்சி எனும் தலைப்பில் (பக்கம்: 232-237)எழுதியுள்ள கட்டுரையில் வ.உ.சி.அவர்கள் இந்த ஆய்வுகளை தொடராக எழுதியுள்ளார்.

பாயிர ஆராய்ச்சி எனும் ஆய்வு கட்டுரையில் வ.உ.சி அவர்கள் திருக்குறளின் இடைச்செருகல்கள் குறித்து எழுதியுள்ள கருத்துக்களின் சாரம் :

திருக்குறளின் இம்மூன்று அதிகாரங்களும் தற்காலத்தில் மிகவும் புகழ் பெற்றவை. கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை ஆகிய இம் மூன்று அதிகாரங்களிலுள்ள முப்பது குறட்பாக்களையும் திருவள்ளுவர் எழுதியிருக்க முடியாது என்பதற்கு காரணங்களை முன் வைக்கிறார் வ.உ.சி.

1.            கடவுள் வாழ்த்து,வான் சிறப்பு, நீத்தார் பெருமை பாடல்களில் பிற பாடல்களைப்போலச் சொற்செறிவும் பொருட்செறிவும் இல்லை.

2.            கடவுள் வாழ்த்து,வான் சிறப்பு, நீத்தார் பெருமை ஆகிய பாடல்களின் பொருள்கள் பல தடைகளுக்கு இடம் கொடுக்கின்றன.

3.            மெய்யுணர்தல், துறவு என்ற தலைப்புகளில் நூலின் உள்ளே அதிகாரங்கள் இருப்பதால் இதற்கு முரணான தலைப்புகளான கடவுள் வாழ்த்து, நீத்தார் பெருமை ஆகியவற்றை நூலின் தொடக்கத்தில் அதாவது பாயிரத்தில் வைத்திருப்பது பொருத்தமானதல்ல.

4. மெய்யுணர்தல் எனும் தலைப்பிலுள்ள அதிகாரத்தில் கடவுளுக்குக் கூறியுள்ள இலக்கணங்களைக் கொண்டு பார்க்கும்போது அவற்றையும் இம்மூன்று அதிகாரங்களையும் ஒருவரே எழுதியிருக்க முடியாது. (வ.உ.சியின் இக்கருத்து விரிவான ஆய்வுக்குரியது).

5.            துறவு மற்றும் நீத்தார் பெருமை ஆகிய அதிகாரங்களில் உள்ள பாடல்களை ஒப்பிட்டுப் பார்த்தால், இரண்டையும் ஒருவரே இயற்றியிருக்க முடியாது.

6.            மழையைச் ‘சிறப்பிற்றணிப்பாருமில்லை, வறப்பிற்றரிவாருமில்லை.” எனவே, ‘வான் சிறப்’பைக் கூறுவதால் பயன் ஒன்றுமில்லை.

7.  திருக்குறள் 10 என எண்ணிக்கையில் இருக்கும் போது 10ன் மடங்குகளாக 130 அதிகாரமும் 1300 குறள்கள் மட்டுமே இருந்திருக்க வேண்டும்.

---------------------------------------------------------------------------------

திருவள்ளுவரே கடவுள் வாழ்த்தை எழுதி இருக்கிறார் கடவுள் இருப்பதை ஏற்றுக்கொண்டார் என ஏமாற்றி வந்தவர்கள் இப்போது திருவள்ளுவருக்கு காவிச்சாயம் பூச முயலும் அயோக்கியத்தனமான முயற்சியில் இறங்கியிருக்கும் இவ்வேளையில் கடவுள் வாழ்த்து,வான் சிறப்பு, நீத்தார் பெருமை ஆகியவை திருக்குறளே அல்ல.அவை திருவள்ளுவர் எழுதியவையும் அல்ல.இந்த 3 அதிகாரங்களும் இடச்செருகல்களே என்கிற வ.உ.சி.அவர்களின் ஆய்வுக்கட்டுரையை நாம் மீள வாசிக்க வேண்டியதும் அதனை பரப்புவதும் அவசியமாகும்.
- பரிமல ராஜன் முகநூல் பதிவு, 4.11.19

தமிழ் எண் வடிவங்கள்

தமிழ் எண் வடிவங்கள்
* ௧ = 1
* ௨ = 2
* ௩ = 3
* ௪ = 4
* ௫ = 5
* ௬ = 6
* ௭ = 7
* ௮ = 8
* ௯ = 9
* ௰ = 10
* ௰௧ = 11
* ௰௨ = 12
* ௰௩ = 13
* ௰௪ = 14
* ௰௫ = 15
* ௰௬ = 16
* ௰௭ = 17
* ௰௮ = 18
* ௰௯ = 19
* ௨௰ = 20
* ௱ = 100
* ௱௫௰௬ = 156
* ௨௱ = 200
* ௩௱ = 300
* ௲ = 1000
* ௲௧ = 1001
* ௲௪௰ = 1040
* ௮௲ = 8000
* ௰௲ = 10,000
* ௭௰௲ = 70,000
* ௯௰௲ = 90,000
* ௱௲ = 100,000 (lakh)
* ௮௱௲ = 800,000
* ௰௱௲ = 1,000,000 (10 lakhs)
* ௯௰௱௲ = 9,000,000
* ௱௱௲ = 10,000,000 (crore)
* ௰௱௱௲ = 100,000,000 (10 crore)
* ௱௱௱௲ = 1,000,000,000 (100 crore)
* ௲௱௱௲ = 10,000,000,000 (thousand crore)
* ௰௲௱௱௲ = 100,000,000,000 (10 thousand crore)
* ௱௲௱௱௲ = 1,000,000,000,000 (lakh crore)
* ௱௱௲௱௱௲ = 100,000,000,000,000 (crore crore)
௳ = நாள்
௴ = மாதம்
௵ = வருடம்
தமிழ் எண்வரிசையும் அளவீட்டு முறைகளும்
ஏறுமுக எண்கள்
1 = ஒன்று -one
10 = பத்து -ten
100 = நூறு -hundred
1000 = ஆயிரம் -thousand
10000 = பத்தாயிரம் -ten thousand
100000 = நூறாயிரம் -hundred thousand
1000000 = பத்துநூறாயிரம் – one million
10000000 = கோடி -ten million
100000000 = அற்புதம் -hundred million
1000000000 = நிகர்புதம் – one billion
10000000000 = கும்பம் -ten billion
100000000000 = கணம் -hundred billion
1000000000000 = கற்பம் -one trillion
10000000000000 = நிகற்பம் -ten trillion
100000000000000 = பதுமம் -hundred trillion
1000000000000000 = சங்கம் -one zillion
10000000000000000 = வெல்லம் -ten zillion
100000000000000000 = அன்னியம் -hundred zillion
1000000000000000000 = அர்த்தம் -?
10000000000000000000 = பரார்த்தம் —?
100000000000000000000 = பூரியம் -?
1000000000000000000000 = முக்கோடி -?
10000000000000000000000 = மஹாயுகம் -????????????????
இறங்குமுக எண்கள்
1 – ஒன்று
3/4 – முக்கால்
1/2 – அரை கால்
1/4 – கால்
1/5 – நாலுமா
3/16 – மூன்று வீசம்
3/20 – மூன்றுமா
1/8 – அரைக்கால்
1/10 – இருமா
1/16 – மாகாணி(வீசம்)
1/20 – ஒருமா
3/64 – முக்கால்வீசம்
3/80 – முக்காணி
1/32 – அரைவீசம்
1/40 – அரைமா
1/64 – கால் வீசம்
1/80 – காணி
3/320 – அரைக்காணி முந்திரி
1/160 – அரைக்காணி
1/320 – முந்திரி
1/102400 – கீழ்முந்திரி
1/2150400 – இம்மி
1/23654400 – மும்மி
1/165580800 – அணு –> ≈ 6,0393476E-9 –> ≈ nano = 0.000000001
1/1490227200 – குணம்
1/7451136000 – பந்தம்
1/44706816000 – பாகம்
1/312947712000 – விந்தம்
1/5320111104000 – நாகவிந்தம்
1/74481555456000 – சிந்தை
1/489631109120000 – கதிர்முனை
1/9585244364800000 – குரல்வளைப்படி
1/575114661888000000 – வெள்ளம்
1/57511466188800000000 – நுண்மணல்
1/2323824530227200000000 – தேர்த்துகள்
அளவைகள்
நீட்டலளவு
10 கோன் – 1 நுண்ணணு
10 நுண்ணணு – 1 அணு ==> 10 Ångströms = 1 nanometer ?!!
8 அணு – 1 கதிர்த்துகள்
8 கதிர்த்துகள் – 1 துசும்பு
8 துசும்பு – 1 மயிர்நுணி
8 மயிர்நுணி – 1 நுண்மணல்
8 நுண்மணல் – 1 சிறுகடுகு
8 சிறுகடுகு – 1 எள்
8 எள் – 1 நெல்
8 நெல் – 1 விரல்
12 விரல் – 1 சாண்
2 சாண் – 1 முழம்
4 முழம் – 1 பாகம்
6000 பாகம் – 1 காதம்(1200 கெசம்)
4 காதம் – 1 யோசனை
பொன்நிறுத்தல்
4 நெல் எடை – 1 குன்றிமணி
2 குன்றிமணி – 1 மஞ்சாடி
2 மஞ்சாடி – 1 பணவெடை
5 பணவெடை – 1 கழஞ்சு
8 பணவெடை – 1 வராகனெடை
4 கழஞ்சு – 1 கஃசு
4 கஃசு – 1 பலம்
பண்டங்கள் நிறுத்தல்
32 குன்றிமணி – 1 வராகனெடை
10 வராகனெடை – 1 பலம்
40 பலம் – 1 வீசை
6 வீசை – 1 தூலாம்
8 வீசை – 1 மணங்கு
20 மணங்கு – 1 பாரம்
முகத்தல் அளவு
5 செவிடு – 1 ஆழாக்கு
2 ஆழாக்கு – 1 உழக்கு
2 உழக்கு – 1 உரி
2 உரி – 1 படி
8 படி – 1 மரக்கால்
2 குறுணி – 1 பதக்கு
2 பதக்கு – 1 தூணி
பெய்தல் அளவு
300 நெல் – 1 செவிடு
5 செவிடு – 1 ஆழாக்கு
2 ஆழாக்கு – 1 உழக்கு
2 உழக்கு – 1 உரி
2 உரி – 1 படி
8 படி – 1 மரக்கால்
2 குறுணி – 1 பதக்கு
2 பதக்கு – 1 தூணி
5 மரக்கால் – 1 பறை
80 பறை – 1 கரிசை
96 படி – 1 கலம்
120 படி – 1 பொதி.

www.puthiyaseithi.net

ஞாயிறு, 3 நவம்பர், 2019

தமிழ்நாடென்பது இந்தியா முழுவதும், சுமத்திரா, ஜாவா முதலிய தீவுகளை உள்ளடக்கிய பெரும் நிலப்பரப்புமாயிருந்தது.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், தொப்பி
பரிதிமாற் கலைஞர்
தமிழ்நாடென்பது இந்தியா முழுவதும், சுமத்திரா, ஜாவா முதலிய தீவுகளை உள்ளடக்கிய பெரும் நிலப்பரப்புமாயிருந்தது. இதற்குக் ‘குமரி நாடு' என்பது பெயர்.
***
வடமேற்கே பல்லாயிரக் காவதத்திற்கு அப்புறமுள்ள தும், அய்ரோப்பா கண்டத்தி னொரு பகுதியுமாகிய ‘ஸ்காந்தி நேவியம்' என்ற இடத்தி னின்றும் ‘ஆரியர்' என்ற சாதியார் புறப்பட்டு, நாலா பக்கங்களினுஞ் சென்று சேர்ந்தனர். அவ்வாரியருள் ஒரு பிரிவினர் மத்திய ஆசி யாவின் மேற்குப் பாகத்திலுள்ள ‘துருக்கிஸ்தானம்' என்ற இடத்திற்றங்கினர். இவ்விடந் தங்கிய ஆரியர்களே ‘கைபர் கணவாய்' வழியாக இந்தி யாவினுள் புகுந்தனர். அவர் கள் அவ்வாறு புகுந்தமை தமிழர்களது நன்மைக்கோ அன்றி தீமைக்கோ? இதனை யறிவுடையோர் எளிதிலு ணர்ந்து கொள்வார்கள்.
***
தமிழர்க்கு ஆரியர் இந்தி யாவிற்கு வருமுன்னரே, எழுதப் படிக்கத் தெரியும். ‘எழுத்து', ‘சுவடி'யென்பன தனித் தமிழ்ச் சொற்களாதலுங் காண்க. இதனால் அகத்திய முனிவர் தமிழ்ப் பாஷைக்கு நெடுங்கணக்கு வகுத்தனரென் பதும், ஆரியரோடு கலந்த பிறகே தமிழர் தங்கள் பாஷைக்கு நெடுங்கணக்கு ஏற்படுத்திக் கொண்டனரென் பதும் பொருந்தாமையறிக.
***
வடமொழி தமிழோடு மருவு முன்னே, அம்மொழியினின்று பாகத பாஷைகள் பல கிளைத்துத் தனி பிரிந்தன. இதற்கிடையில்தான் தமிழ் மொழியினின்று தெலுங்கு, மலையாளம், கன்னடந் துளு வமென்னும் வழிமொழிகள் கிளைத்தன.
***
வடமொழியாளர் தமிழர் களது ஒழுக்க வழக்கங்களை யுணர்ந்து அவற்றிற்கேற்ப வடமொழியில் நூல்கள் வகுப் பான் புகுந்தனர். அவர்களெல் லாம் ஆன்ம நூற் பயிற்சி மிக்குடையாராயும், கலை யுணர்ச்சி சான்றவராயு மிருந் தமைபற்றித் தமிழரது திவ்விய ஸ்தலங்களுக்குப் புராணங்கள் வகுத்தனர்; தமிழர்களிடத் தில்லாதிருந்த ‘அந்தணர், அரசர், வணிகர், வேளாளர்' என்ற நால்வகைச் சாதி முறையை மெல்ல மெல்ல நாட்டி விட்டனர்.
***
இவ்வளவையும் கூறுபவர் சூரிய நாராயண சாஸ்திரி என்பார்.
பிற்காலத்தில் பரிதிமாற் கலைஞர் என்று தமிழில் பெயர் மாற்றம் செய்து கொண்டவர்.(பார்ப்பனர் களுள் விதிவிலக்காக இவர் ஒருவர்தான் தமிழில் பெயர் மாற்றம் செய்துகொண்டவர்) இக்கருத்துகள் இடம்பெற்ற நூல்‘‘தமிழ் மொழியின் வர லாறு.'' இன்றைக்கு அவரின் நினைவு நாள் (2.11.1903).
- மயிலாடன்
- விடுதலை நாளேடு, 2.11.19

வெள்ளி, 1 நவம்பர், 2019

ஆஸ்திரேலியாவில் இராவணனை எரிப்பதற்கு எதிர்ப்பு!

"எங்கள் மனதைப் புண்படுத்த வேண்டவே வேண்டாம்!"

ஆஸ்திரேலிய அரசுக்கு ஆஸ்திரேலிய வாழ் தமிழர்கள் கோரிக்கை

சிட்னி,அக்.27 எங்கள் மூதாதையர் இராவணனை எரித்து எங்களைப் புண் படுத்த வேண்டாம் என்று ஆஸ்திரேலிய அரசுக்கு ஆஸ்திரேலியாவில் வாழும் தமிழர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இராவணன் தமிழர்களின் மரியாதைக் குரிய வணங்கும் மூதாதையர்களில் ஒருவ ராக இருப்பதால் அவரது உருவ பொம் மையை எரிக்கும் நிகழ்வு தமிழர்களை வேதனை கொள்ளவைக்கிறது, தசரா நிகழ்விற்கு எதிராக ஆஸ்திரேலியா நட வடிக்கை எடுக்கவேண்டும் என்று ஆஸ் திரேலிய தமிழர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ஆஸ்திரேலிய அரசுக்கு ஆஸ்திரேலிய தமிழர்கள் அனுப்பியுள்ள கோரிக்கை மனு வருமாறு:

"உலகம் முழுவதிலும் வாழும் தமி ழர்கள் இராவணனை தங்களின் முன் னோர் என்றே பார்க்கின்றனர். தமிழர் களின் வாழ்க்கையில் இராவணனுக்கு என்று மரியாதை என்றுமே உள்ளது. அவர் மதிப்பிற்குரியவராகக் கருதப்படு கிறார். தமிழ் இனத்தின் மரியாதைக்குரிய மூதாதையர்களில் ஒருவராக இருப்பதால் உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் அவருக்கு மிகுந்த மரியாதை செலுத்து கிறோம்.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் பல பகுதிகளில் தசரா என்னும் திருவிழா கொண்டாட்டத்தின் போது தீமைக்கு எதிரான வெற்றியைக் குறிக்க இராவணன்  உருவ பொம்மை எரிக்கப்படுகிறது. அதே நேரத்தில், இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் அங்கு வாழும் மக்கள் இராவணனை கடவுளாக வணங்குகிறார்கள். இந்தியா வின் பூர்வகுடிகளுக்கான பல பழமையான கோவில்களில் இராவணன் முக்கிய தெய்வமாக வணங்கப்பட்டு வருகின்றார். தமிழகம், ஆந்திரா, கேரளா, மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட் ஒடிசா மற்றும் சத்தீஸ்கரிலும், தென்கிழக்கு மராட்டியப் பகுதிகளிலும் இராவணனுக்கு கோவில் கள் உள்ளன. இராவணனை சமத்துவத்தின் அடையாளமாகத் தமிழர்கள் கருதுகின்றனர்.

'இராவணன் தகனம்' என்ற பெயரில் தீமைக்கு எதிரான வெற்றியைக் குறிக்கும் அடையாளம் என்று கூறி இராவணன் வடிவத்தை  எரித்து வருகின்றனர். இது தமிழர்களின் வாழ்வியலோடு வேரூன்றிய உணர்வுகளை அவமானப்படுத்தும் கொடுஞ் செயல்களில் ஒன்றாகும். ஆஸ்திரேலியா போன்ற ஒரு பன்முக கலாச்சார நாடு தமிழர்கள் உட்பட பல இனக்குழுக்கள் அளித்த பங்களிப்புகளால் வளர்ச்சி பெற்றுள்ளது. இங்கு 'இராவணன் தகனம்' என்ற பெயரில் தசரா அன்று இராவணன் பொம்மையை எரிப்பது மற்றும் பட் டாசுகள் வெடித்து மாசு ஏற்படுத்தும் தீபாவளி போன்ற மூடப்பழக்க வழக்க கதைகள் அடிப்படையிலான  திருவிழாக் களை அனுமதிப்பது  ஆஸ்திரேலியாவின் பன்முக கலாச்சாரத்திற்கு எதிரானது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலும், ஆஸ்திரேலிய அரசாங்கம் இதுபோன்ற ஒரு முட்டாள்தனமான திருவிழாக்கள் கொண்டாட  அனுமதிக்கக் கூடாது. இனி வரும் காலங்களில் மற்றும் எதிர்காலத்தில் எந்தவொரு சந்தர்ப்பத் திலும் இராவணனின் உருவப் பொம் மையை எரிப்பதை தடுத்து நிறுத்துமாறும்,  இது போன்ற செயலுக்கு ஊக்கமளிப்பதை நிறுத்துமாறும்  ஆஸ்திரேலிய அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.

உலகெங்கிலும் உள்ள மிகச் சிறந்த இனக்குழுக்களில் ஒன்றான தமிழர்களை வேதனைக்குள்ளாக்கும் நோக்கில் எங்கள் மூதாதையர் இராவணன் உருவப் பொம் மையை எரிப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

தமிழர்களின் மனதை வேதனைப் படுத்தும் இத்தீய கொண்டாட்டம் தடை செய்யப்பட்டு நிறுத்தப்பட வேண்டும், ஆஸ்திரேலியாவில் வாழும் தமிழர்களின் உள்ளத்தை இது புண்படுத்துகிறது. ஆஸ்திரேலியாவில் உள்ள அரசப் பிரதிநிதிகள் இந்தி பேசும் மக்கள் கொண்டாடும் இந்த விழாவை  ஆதரிக்கவும் ஊக்கு விக்கவும் கூடாது. நாங்கள் இந்துக்களை இந்தியர்களை எங்கள் சகோதரர்களாகப் பார்க்கிறோம், ஆனால் அவர்கள் விழா என்ற பெயரில் எங்களின் மரியாதைக்குரிய மூதாதையரை தீயவர் என்று கூறி எரித்துக் கொண்டாடுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்; இராவணனை எரிக்கும் நிகழ்வைத் தவிர வேறு எந்த விழாவிற்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம்.

மத நம்பிக்கை என்ற பெயரில் மரணத்தையும் கொண்டாடுவது என்பது மனிதாபிமானமா? நீங்கள் கொண்டாடும் நபரின் மீது மரியாதை உள்ளவர்களின் தலைமுறைகள் வேதனைப்படுமல்லவா? உங்களின் செயல் நியாமா? நாங்கள், ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழர்கள், அனைத்து இனத்தவர்களையும் நேசிக் கிறோம், பிற கலாச்சாரங்களையும் மதிக் கிறோம்,  அதே போல் நீங்களும் எங்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

இந்த கோரிக்கைக்கு ஆஸ்திரேலிய அரசின் அனைத்து அரசப் பிரதிநிதிகளும் ஆதரவு தர வேண்டும்" என்றும் கூறி கோரிக்கை மனுவை ஆஸ்திரேலிய தமி ழர்கள் அளித்துள்ளனர். மேலும் இணை யம் வழியாக உலகம் முழுவதிலும் அவர் களது கோரிக்கைக்கு ஆதரவும் கோரியுள்ளனர்.

- விடுதலை நாளேடு 27 10 19