இதழியல் தமிழ்
"திராவிட இயக்கத்தின் போராட்டத்துக்கு இதழ்கள் கருவிகளாகப் பயன்பட்டன. எவரும் துப்பாக்கி தூக்கவில்லை; எழுதுகோல் தான் அவர்களின் இணையில்லா வேல்! இதழ்களையே போர்க்கருவிகளாகப் பயன் படுத்தி திராவிட இயக்கம் வெற்றி பெற்றது" என்று இதழாளர் அ.மா.சாமி கூறுகிறார்.
1916 நவம்பர் 20 ஆம் நாள் "தென்னிந்திய நல உரிமைச்சங்கம்" என்னும் அரசியல் கட்சி தொடங்கப்பட்டது. அதன் பிரச்சார ஆயு தங்களாக “Justice” எனும் ஆங்கில ஏடும், "திராவிடன்" எனும் தமிழ் ஏடும் "ஆந்திரப் பிரகாசிகா" எனும் தெலுங்கு ஏடும் தொடங் கப்பெற்றன. “Justice” எனும் ஆங்கில ஏடு மக் களிடம் பெற்றிருந்த செல்வாக்கு காரண மாகத் தென்னிந்திய நல உரிமைச் சங்கம், நீதிக்கட்சி என்றே அழைக்கப்பட்டது. நீதிக் கட்சி சார்பாக 1917ஆம் ஆண்டு தோன்றிய நாளிதழே "திராவிடன்" ஆகும்.
8 பக்கங் களில் வெளிவந்தது. தொடக்கத்தில் அதன் ஆசிரியர் திரு.என்.பக்தவத்சலம் ஆவார். 1923ஆம் ஆண்டில் திரு.ஏ.சண்முகம்பிள்ளை அதன் ஆசிரியராக இருந்தார். 1927ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சில காலம் வரையில் தந்தை பெரியார் ஆசிரியராக இருந்தார். தந்தை பெரியாருக்குப் பிறகு, திரு.சனக சங்கர கண்ணப்பர் ஆசிரியராக இருந்து, பத்திரிகை நிறுத்தப்படும் வரை (1931) அதனை நடத்தி வந்தார்.
பேராசிரியர் மா.ரா.இளங்கோவன் எழுதிய "முதல் நாளிதழ்கள் மூன்று" என்னும் நூலில், "திராவிடன் நாளிதழ் சாதிப்பாகுபாடுகளைப் போக்குவதிலும், மக்களிடையே மண்டிக் கிடந்த மூட நம்பிக்கைகளை அகற்றுவதிலும் பேரார்வம் காட்டியது" என்று குறிப்பிடப்பட் டுள்ளது. தமிழில் வெளிவந்த முதல் மூன்று நாளிதழ்களில், "திராவிடன்" நாளிதழும் ஒன்றாகும்.
"திராவிடன்" நாளிதழ் தோன்றுவதற்கான காரணத்தைக் கூற வந்த தந்தை பெரியார்,
"படித்திருந்த பிராமணரல்லாதார் சிலர், .தாங்கள் ஏன் தாழ்த்தப்பட்டுக்கிடக்கின்றோம் என்று யோசனை செய்து பார்த்ததில், இப் பிராமணப் பத்திரிகைகளும், கட்டுப்பாடான பிராமண சூழ்ச்சிகளுமே இதற்குக் காரணம் என்று கண்டுபிடித்து, தாங்களும் மற்றவர் களைப் போல முன்னேறுவதற்குத் தங் களுக்கும் பிரச்சாரத்திற்கு ஒரு பத்திரிகை வேண்டும் என்று கருதி. "திராவிடன்" பத்திரிகையை ஏற்படுத்தினார்கள்."
- என்று திராவிடன் (மலர் 13 இதழ் 196) இதழில் எழுதியுள்ளார்.
தாம் நடத்திய "குடியரசு" (30.1.1927) இதழி லும் "திராவிடனை ஆதரிக்க வேண்டும்” என்ற தலைப்பில் ஒரு வேண்டுகோளையே விடுத்துள்ளார் தந்தை பெரியார்.
“.... நமக்குப் பெரிய ஆபத்தாயிருப்பது பார்ப்பனப் பத்திரிகைகளே. அப்பத்திரிகை களின் செல்வாக்கு, நம் நாட்டை அடியோடு முற்றுகை போட்டுக்கொண்டிருக்கிறது...
... சாதாரணமாக "திராவிடன்" பத்திரிகை எவ்வளவு கஷ்ட நஷ்டங்களுக்கு இடையில் நடத்தப்பட்டு வருகிறது என்பதை யாராவது உணர்கிறார்களா? அது யாருடைய நன் மைக்கு நடத்தப்படுகிறது என்பதை யாராவது அறிகிறார்களா? . கட்டின பெண்டை தெரு வில் அலையவிட்டு, தாசி வீடு காத்துத்திரிவது போல், திராவிடனை விட்டு விட்டுப் பார்ப் பனப் பத்திரிகைகளைக் கட்டி அலைவதை மறந்து, நமது மானத்தைக் காப்பாற்ற உதவி செய்ய வேண்டும் என்பதாகத் தாழ்மையோடு கேட்டுக்கொள்ளுகின்றோம். இதுவே, நமது மக்கள் எல்லோருக்கும் சுயமரியாதை ஏற்படச் சரியான மார்க்கமாகும்" என்பதே தந்தை பெரியார் "குடியரசு" இதழ் மூலம் விடுத்த வேண்டுகோளாகும்.
இதழாளர் பெரியார்
குடிஅரசு, புரட்சி, பகுத்தறிவு, விடுதலை, உண்மை ஆகிய தமிழ் இதழ்களின் மூலம் சுய மரியாதைச் சிந்தனைகளை விதைத்தவர் தந்தை பெரியார். Revolt, The Modern Rationalist என்னும் ஆங்கில இதழ்களையும் கருத்துப் பரவலுக்காக அவர் நடத்தியுள்ளார். 2-5-1925 அன்று "குடியரசு" மாத இதழை பெரியார் தொடங்கினார். அதன் பதிவு எண்.241 தனிப் பிரதி விலை உள்நாடு 1 அணா. வெளிநாடு 1லு அணா. "புரட்சி" ஞாயிறு தோறும் 20 பக்கங்களுடன் வெளிவந்தது. அதன் பதிவு எண். வி2992. தனிப்பிரதி விலை ஒரு அணா தொடக்கத்தில் சா.ரா.கண்ணம்மாள் அவர் களால் வெளியிடப்பட்டது. முதலில் ஈ.வெ. ராமசாமி பின்னர் ஈ.வெ. கிருஷ்ண சாமி ஆசிரியர்களாக இருந்துள்ளனர். உண்மை விளக்க அச்சகத்தில் அச்சிடப்பட் டது. "பகுத் தறிவு" இதழ், அறிவை வளர்க்கும் ஒரு மாத வெளியீடாகும். தனிப்பிரதி விலை 1லு அணா,
"அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
என் உடைய ரேனும் இலர்"
என்னும் திருக்குறள் ஒவ்வொரு இதழ் முகப்பிலும் இடம் பெற்றது. உண்மை விளக்க அச்சகத்தில் அச்சிடப்பட்டு, ஈ.வெ.கிருஷ் ணசாமியால் வெளியிடப்பட்டது.
"உண்மை" பகுத்தறிவு மாத இதழாக வெளிவந்தது. (1970) விலை 25 காசு. ஆண்டுச் சந்தா ரூ.3.00 பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பாக திருச்சி, புத்தூர் அறிவுக்கடல் அச்சகத்தில் திருமதி. ஈ.வெ.ரா.மணியம்மையார் அவர்களால் அச்சிடப்பட்டு, புலவர் கோ.இமயவரம்பன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளியிடப்பட்டது.
"தலையங்கம் என்பது இதழின் உடலும் உயிரும் ஆகும். இதழாசிரியர் சிக்கல்களை ஆய்வதுடன், தெளிவாக, துணிவாக, பயன் விளையும் வகையில் தமது கருத்தினை வெளியிடல் வேண்டும்" என்பார் வினோத் மேத்தா.
குடிஅரசு (22.8.1928) இதழின் தலையங்கம்:
"ஆண்மை என்னும் பதமே பெண்களை இழிவுபடுத்தும் முறையில் உலக வழக்கில் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது என்ப தைப் பெண்கள் மறந்துவிடக்கூடாது. பெண்களால் ஆண்மை என்ற தத்துவம் அழிக்கப்பட்டால் அல்லாது பெண் விடுதலை இல்லை என்பது உறுதி. .
...பெண்கள் விடுதலை பெறுவதற்கு இப்போது ஆண்களைவிடப் பெண்களே பெரிதும் தடையாய் இருக்கிறார்கள். ஏனெ னில், தங்களுடைய இயற்கைத் தத்துவங் களின் தன்மையையே தங்களை ஆண் களுக்கு அடிமையாகக் கடவுள் படைத்திருப் பதின் அறிகுறியாயப் பெண்கள் கருதிக் கொண்டிருக்கிறார்கள்” என்று “பெண் விடுதலை" பற்றிய கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது.
‘குடிஅரசு’ (29.7.1928) இதழின் தலையங்கம்:
“பல்லாவரத்துப் பண்டிதர்" என்னும் தலைப்பில், ஒரு கூட்டத்தில் மறைமலைடிய களார் தந்தை பெரியாரையும் சுயமரியாதை இயக்கத்தையும் கடுமையாகத் தாக்கிப் பேசி யதாக இதழ்களில் வெளிவந்த செய்தியை அடிப்படையாகக் கொண்டு ஓர் எச்சரிக்கை விடுப்பதாக அமைந்தது. அதற்கு மறைமலை யடிகளார் “தங்களுக்காவது, தங்கள் இயக் கத்தைச் சார்ந்த அன்பர்களுக்காவது எவ் வகையான தீங்கும் செய்ய அல்லது செய் விக்க வேண்டுமென்று யான் எண்ணியதும் இல்லை; யாண்டும் சொல்லியதுமில்லை, தாங்கள் என்னை வேறாக நினைத்து என்மீது வருந்துதல் வேண்டாம்" என்று 24.8.1928 நாளிட்ட கடிதம் மூலம் தனது கருத்தைத் தெரிவித்தார். அக்கடிதத்திற்கு குடிஅரசு (2.9.1928) இதழின் தலையங்கத்தில் பதில் தெரிவிக்கப்பட்டது.
"திரு. வேதாசலம் அவர் கள் தமிழ்நாட்டில் செல்வாக்கும் மதிப்பும் பெற்ற பண்டிதர் என்பதாக நாம் கருதி வந்ததால், பத்திரிகைகளிலும் நிரூபங்களிலும் கண்டவற்றுக்குச் சமாதானம் எழுதுவது என்பது நமக்குச் சற்று சங்கடமாகவே இருக்கிறது. .திரு.வேதாசலம் அவர்களிட மிருந்து ஏதாவது ஒரு தகவல் கிடைத்தால் அதை ஆதாரமாக வைத்தே அவ்விஷயங் களை நழுவ விட்டு விடலாம் என்றும் கருதி எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம்" என்று அப்பதில் அமைந்தது. "குடிஅரசு" எதிர் பார்த்தது போல, மறைமலையடிகளாரிடமி ருந்து பதிலும் வந்தது என்பது குறிப்பிடத் தக்கது.
குடிஅரசு (17.6.1928) இதழின் தலையங்கம்:
“நவசக்தி முதலியாரின் நாணயம்" என் னும் தலைப்புடன் அமைந்தது. அதற்கு "நவசக்தி" இதழில் "குடிஅரசின் குதர்க்கம்" என்னும் தலையங்கம் திரு.வி.க. அவர்களால் எழுதப்பெற்றது. அதில், நவசக்தியில் தோன் றிய "சீர்திருத்தம்" என்னும் கட்டுரை பொது நெறி பற்றி எழுதப்பட்டதே தவிர, குடிஅரசின் ஆசிரியரையோ, அதன் இயக்கத்தையோ உளம் கொண்டு எழுதவில்லை" என்று குறிப்பிட்டிருக்கிறார். "இப்படி திரு.முதலியார் எழுதி மறையப்பார்ப்பார் என்று நாமும் நண்பர்களும் முன்னமே நினைத்ததுதான்" என்று "குடிஅரசு" தலையங்கம் கருத்துத் தெரிவித்தது. இவற்றின் மூலம், தனித்தமிழ றிஞர் மறைமலையடிகளார்.
தமிழ்த்தென்றல் திரு.வி.க. ஆகிய இருவரும் "குடிஅரசு" இதழோடு கருத்துப்போர் நிகழ்த்தியுள்ளார் கள் என்னும் வரலாற்றுப் பதிவு நமக்குத் தெரியவருகிறது. "புரட்சி" (26.11.1933) இதழின் தலையங்கமே, "புரட்சி தோன்றியதற்கான காரணத்தைக் கூறுகிறது. "குடிஅரசை ஒழிக்கச் செய்த முயற்சியால் புரட்சி தோன்ற வேண்டியதாயிற்று. "புரட்சி"யைப் புரட்சியில் பற்றுள்ள மக்கள் யாவரும் வரவேற்பார்கள் என்பதில் சிறிதும் அய்யமில்லை. "சகல முத லாளி வர்க்கமும், சர்வ சமயங்களும் அடி யோடு அழிந்து, மக்கள் யாவரும் சுயமரியா தையுடன் ஆண், பெண் அடங்கலும் சர்வ சமத்துவமாய் வாழச் செய்ய வேண்டும் என்பதற்காக புரட்சி செய்யவே, "புரட்சி தோன்றியிருக்கிறது" என்பதுவே அத்தலை யங்கத்தின் சுருக்கம்.
"உண்மை (4.1.1970) இதழின் தலையங்கம் தந்தை பெரியாரே தீட்டியது. "உண்மை என்னும் பெயரால் ஒரு மாதப்பத்திரிகை 1970ஆம் ஆண்டு முதல் துவக்குகிறேன். அதற்குக்கொள்கை, மக்களைப் பகுத்தறிவு வாதிகளாக ஆக்க வேண்டும் என்பதாகும். உண்மையின் தொண்டு எதிர்நீச்சல் தொண் டேயாகும். உண்மை நாத்திகப் பத்திரிகை தான் அதற்காக யாரும் பயப்படாதீர்கள் நாத்திகம் கூடாததல்ல; இல்லாததல்ல; நடக்க வேண்டாததுமல்ல" என்று "உண்மை" இதழ் பற்றிய உண்மை உரைக்கப்பட்டுள்ளது. 1.1.1973 முதல் சென்னை பெரியார் திடலில் திராவிடன் அச்சகத்தில் அச்சிடப்பட்டு வெளிவந்தது. ஆண்டுச் சந்தா ரூ.5/-
"உண்மை" (14.9.1973) இதழின் தலையங்கம்:
தந்தை பெரியாரின் வாக்கு மூலமாகவே அமைந்து சிறக்கிறது. எனக்கு (நான் பிறந்து) நாளது செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி யோடு 93 ஆண்டு முடிவடைந்து, 94 ஆம் ஆண்டு முதல் நாள் தோன்றிவிட்டது. 93 ஆண்டு என்றால் நான் பிறந்து, மாதங்களில் 1116 மாதங்கள் நாட்களில் 34045 நாள்கள் பிறை களில் (அமாவாசைகளும்) 1635 ஏற்பட்டு மறைந்து விட்டன.
எனவே நான் 93 ஆண்டு வாழ்ந்ததை வீண்வாழ்வு என்று கருதவில்லை என் பணிகளை வீண்பணி என்றும் கருதவில்லை. இனிமேலும் வாழ்வதைத்தான் கஷ்டமாகக் கருதுகிறேன். என் உடல் நிலைமை மிக மோச மாகி விட்டது. நினைவு சரியாக இல்லை. மறதி அதிகம்; கண், காது சரியாக இல்லை. கால்கள் நடக்கவே முடிவதில்லை, அசதி அதிகம். மற்றபடி மகிழ்ச்சியோடு இதை முடிக்கிறேன்" என்று அந்தத் தலையங்கம் தந்தை பெரியாரே பேசுவதுபோல அமைந்துள்ளது.
1.1.1976 முதல் "நிறுவனர் தந்தை பெரியார்". உண்மை மாதம் இருமுறை இதழாக வெளி வருகிறது.
ஆசிரியர்: கி.வீரமணி. "சமுதாய மாற்றத் துக்கான ஒரு வாழ்வியல் இதழ்" என்னும் குறிப்பு இதழில் இடம் பெற்றுள்ளது.
குடிஅரசு (18.11.1928) தலையங்கம், "பாஞ் சால சிங்கம்" என்னும் தலைப்பில் லாலா லஜபதிராய் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தது.
"புரட்சி" (11.2.1934) இதழின் தலையங்கம், "பத்திரிகாசிரியர் ஏ.ரங்கசாமி அய்யங்கார் மரணம்" என்னும் தலைப்பில் "சுதேசமித் திரன்" ஆங்கிலப் பத்திரிகை "தி இந்து" ஆகிய வற்றின் வாயிலாக ஏ. ரங்கசாமி அய்யங்கார் மக்களுக்கு ஆற்றிய மகத்தான தொண்டினை நினைவு கூர்ந்து, அவர்தம் குடும்பத்தார் களுக்கு மனமார்ந்த துக்கத்தைத் தெரிவித்துக் கொண்டது. இந்த இரண்டு இரங்கல் தலை யங்கங்களும் தந்தை பெரியாரின் உயர்ந்த உள்ளத்தை உலகுக்கு உணர்த்துவதாக உள்ளன.
பகுத்தறிவு, புரட்சி, உண்மை ஆகிய இதழ்களின் முகப்புகளில் கவிதைகளைத் தாங்கி வெளிவந்தவையும் உண்டு. "பகுத் தறிவு" (1.4.1938) இதழின் முகப்பில் கைம்மை நீக்கம் என்னும் தலைப்பில் பாரதிதாசன் பாடல் இடம் பெற்றுள்ளது.
பல்லவி
நீ எனக்கும், உனக்கு நானும் -இனி
நேருக்கு நேர் தித்திக்கும் பாலும் தேனும் (நீ)
சரணம்-1
கைம் பெண் என் றெண்ணம் கொண்டே
கலங்கி னாயோ, கற்கண்டே
காடு வேகுவதை ஒரு மொழியினில்
மூடி போட முடியுமோ? உரையடி (நீ)
புரட்சி (18.2.1934) இதழின் முகப்பில் "தொழிலாளர் வாழ்வு" என்னும் தலைப்பில் தோழர் ப.ஜீவானந்தம் கவிதை இடம் பெற்றுள்ளது.
பல்லவி
ஏழைத்தொழிலாளர் வாழ்வு இன்பம் சூழ்கவே
இன்பம் சூழ்கவே-புவித் துன்பம் வீழ்கவே.
"உண்மை (14.9.1970) இதழின் முகப்பில் "நம் பெரியார் வாழ்கவே!" என்னும் தலைப்பில் பாவேந்தர் பாரதிதாசன் கவிதை இடம் பெற்றுள்ளது.
"....தமிழன் மானம் தவிடுபொடி ஆகையில்
வாழாது வாழ்ந்தவன் வடுச்சுமந்து சாகையில்
ஆ! என்று துள்ளி மார்பு தட்டிச்
சாவென்று வாழ்வொன்று பார்ப்பேன் என்று
பார்ப்பனக் கோட்டையை நோக்கிப் பாயும் இவ்
வருஞ்செயல் செய்வார் அல்லால்
பெரியர் எவர்? நம்
பெரியார் வாழ்கவே"
பகுத்தறிவு (1.8.1938) இதழின் முகப்பில் “சுதந்திர கீதம்” என்னும் தலைப்பில் கோலா லம்பூர் க.இராஜகோபால் பாடிய பாடல் இடம் பெற்றுள்ளது.
பல்லவி
சுயமரியாதை வேண்டும்-மக்கள்
சுதந்திரம் பெற வேண்டும் வேறென்ன வேண்டும்? (சுய)
அநுபல்லவி
அடிமை வாழுலகினில்
அகன்றிட வேண்டும்
அறியாமை யொழிய வேண்டும் வேறென்ன வேண்டும்? (சுய)
இவ்வாறு பல இதழ்களின் முகப்புகளில் பலர் எழுதிய கவிதைகள் இடம் பெற்றுள்ளன.
குடிஅரசு, புரட்சி இதழ்களில் மக்களை விழிப்படையச் செய்யும் சொற்றொடர்கள் இடம் பெற்று எழுச்சியை ஊட்டுகின்றன.
சூத்திரன் என்று உன்னைச் சொல்லிக் கொள்ளாதே
சூத்திரன் என்றால் "வேசிமகன் என்று பொருள்"
- குடிஅரசு 15.1.1928 பக்கம் 12
விழிமின் எழுமின்
பார்ப்ப னியத்தை ஒழிமின்"
-குடிஅரசு 1.4.1928 பக்கம் 18
சுயமரியாதை பெற்றால்
சுயராஜ்யம் பெறலாம்"
-குடிஅரசு 12.8.1928 பக்கம் 16
கடவுளை வணங்கத்
தரகர் வேண்டுமா?"
-குடிஅரசு 4.11.1928 பக்கம் 15
புத்தி உடையவனே புத்தன்
சிந்திப்பவனே சித்தன்"
-உண்மை 14.9.1970
கடவுளை மற, மனிதனை நினை!
- உண்மை 14.6.1971
அனைத்து இதழ்களிலும் தரமான பல கட்டுரைகள் வெளிவந்துள்ளன.
சாமிசிதம்பரனார் எழுதிய "பிறனில்
விழையாமையும் திருவள்ளுவரும்"
என்னும் கட்டுரை குடிஅரசு 15.7.1928 இதழில் 4ஆம் பக்கம் வெளிவந்துள்ளது. சாமிசிதம்பரனார் எழுதிய "பொறுமையும் திருவள்ளுவரும்" என்னும் கட்டுரை "குடி அரசு" 5.8.1928 இதழில் 6 ஆம் பக்கத்தில் வெளி வந்துள்ளது. இங்ஙனம் சுய சிந்தனை யைத் தூண்டும் வகையில் வெளிவந்துள்ள அரிய கட்டுரைகள் பலவாகும்.
"பகுத்தறிவு" (1.5.1938) இதழில் வெளிவந்த "கிண்டல் துணுக்கு" சிந்திக்கத் தூண்டும் வகை யில் உள்ளது. கே.தில்லை நடராஜன் என்பவர் பிரார்த்தனை, என்னும் தலைப்பில் எழுதி யுள்ளார்.
கந்தன்: கடவுளுக்குப் பிரார்த்தனை செலுத்துபவர்கள் மயிரை மட்டும் கொடுப்ப தேன்? கண், காது, மூக்கு, கை, கால் இவை களில் ஒன்றை ஏன் கடவுளுக்குச் சமர்ப்பிக் கலாகாது
நந்தன்: மயிரைச் சிறைத்தால் வளர்ந்து விடும், மற்றவை வளருமா? கையை வெட்டி னால் மறுபடியும் முளைக்கப்பண்ண சர்வ சக்தி வாய்ந்த கடவுளாலும் முடியாதென்பதை பக்தர்கள் உணர்ந்திருக்கலாம்.
குடிஅரசு, புரட்சி இதழ்களில் மாநாட்டு உரைகள் இடம் பெற்றுள்ளன. குடிஅரசு 27.5. 1928 இதழில் (பக்கம்9) "செங்கற்பட்டு ஜில்லா போர்டு ஆரம்ப ஆசிரியர் மாநாடு திரு.ஈ.வெ. ராமசாமி நாயக்கரின் அக்கிராசனப் பிரசங் கம்" என்னும் தலைப்பில் பேச்சு வெளி வந்துள்ளது.
"ஆசிரியர்களே! நான் அறிந்த வரையில் தற்கால ஆசிரியர்கள் என்கிறவர்கள் ஒருவித தொழிலாளிகளே. ஆதலால் இம்மாதிரி மாநாட்டுக்கு, உபாத்தியாயத் தொழிலாளர் மாநாடு என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். எவ்வளவு பெரிய கல்வியும் ஒரு தொழிலாகப் போய்விட்டதேயல்லாமல் பகுத் தறிவுக்கு ஒரு சிறிதும் பயன்படுவதாக இல்லை" என்று பேசி ஆசிரியர்களைச் சிந்திக்கத் தூண்டினார்.
புரட்சி 3.12.1933 இதழில் (பக்கம் 3) "கோவை ஜில்லா சுயமரியாதை மாநாடு பெண்கள் மாநாடு டாக்டர் நாயுடு, முதலியார் விஜயம்" என்னும் தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. (நாயுடு என்றால் "தமிழ்நாடு" ஆசிரியர் டாக்டர் பி.வரதராஜூலு நாயுடு "முதலியார்" என்றால் நவசக்தி ஆசி ரியர் திரு.வி.கலியாணசுந்தரனார் ஆவார்) மாநாட்டில் லெனின், நாகம்மையார் உருவப் படங்கள் திறந்து வைக்கப்பட்டன. டாக்டர் வரதராஜூலு நாயுடு தலைமை உரையும், திரு.வி.கலியாணசுந்தர முதலியார், படங் களைத் திறந்து வைத்து நிகழ்த்திய உரையும் இதழில் இடம் பெற்றுள்ளன.
அம்மாநாட்டில் திரு.வி.கலியாணசுந்தர னார், "சுயமரியாதை இயக்கத்திற்கு நாயக்கர் அவர்கள் தந்தையாவார்; நான் தாயாவேன். நாங்களிருவரும் மாயவரம் சமரச சன்மார்க் கக் கூட்டத்தில் சேர்ந்து பெற்ற பிள்ளையே சுயமரியாதை இயக்கமாகும். அக்குழந்தை தாயுடன் வாழாது, இதுகாறும் தந்தையுடன் சேர்ந்து வாழுகிறது என்றாலும் அதன் வளர்ச் சியைக் கண்டு யான் பெரு மகிழ்ச்சியடை கின்றேன்" என்று குறிப்பிட்டுப் பேசியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
"குடியரசு" இதழ்களில் ஒடுக்கப்பட்ட, அழுத்தப்பட்ட "சாதிகளின்" நிகழ்வுகள் முக்கி யத்துவம் கொடுத்து வெளியிடப்பட்டுள்ளன. "குடிஅரசு" 15.1.1928 இதழில் "பதினோறாவது ஆதிதிராவிட மகாநாடு நிறைவேற்றிய தீர் மானங்கள் என்னும் தலைப்பில் செய்தி வெளிவந்துள்ளது.
"குடிஅரசு" 17.6.1928 இதழில் (பக்கம் 1) "கொங்குவேளாள சமூகத்தாருக்கு ஓர் வேண்டுகோள்" என்னும் தலைப்பில் செய்தி வெளிவந்துள்ளது.
"குடிஅரசு" 15.7.1928 இதழில் (பக்கம் 7) "அருப்புக்கோட்டை ஜூலை 4,5,6 தேதிகளில் நடைபெற்ற 12ஆம் நாடார் சமூக மாநாடு. பொறையாறு திரு.கனகசபை நாடார் அக்கிராசனப்பிரசங்கம்" என்னும் தலைப் பிட்டு வெளிவந்த செய்தியில் நாடார் சமூக வாலிபர்கள் மாநாட்டில் (5ஆம் தேதி) திரு.வி.கலியாணசுந்தர முதலியார் மற்றும் நாடார் சமூகத் தொண்டர்கள் மாநாட்டில் (6ஆம் தேதி) திரு.ஈ.வெ.ராமசாமி நாயக்கரும் கலந்து கொண்டார்கள் என்ற விவரமும் இடம் பெற்றுள்ளது.
"குடிஅரசு 14.10.1928 இதழில் "தென்னிந் திய மருத்துவர் மூன்றாவது கான்பரன்ஸ் - மூன்றாவது அறிக்கை" டாக்டர் எம்.பி.சங்கர சுப்பு பிள்ளை, பத்தமடை (சேர்மாதேவி) என்னும் செய்தி வெளிவந்துள்ளது.
"குடிஅரசு 2.9.1928 இதழில் "பினாங்கு மருத்துவ குலசங்கம்" பற்றிய செய்தி வெளி யாகியுள்ளது.
"குடிஅரசு இதழ்களில் நூல் மதிப்புரை களும் இடம் பெற்றன. "குடியரசு 6.5.1928 இதழில் (பக்கம்.17) "சோளர் சரித்திரம் முதற் பக்கம்-கள்ளர் சரித்திரம்" இந்நூல் பண்டிதர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்களால் இயற்றப்பட்டது.
"குடிஅரசு 28.10.1928 இதழில் (பக்கம்15)
(1) "தப்பிலி” இந்நூல் திரு.மு. சி. பூரண லிங்கம் பிள்ளை, பி.ஏ.எல்.டி அவர்களால் எழு தப்பட்டது. இதனை திருக்குறள் ஆராய்ச்சி நூல் என்றே கருதலாம். இதன் விலை 10 அணா.
(2) இராவணன் ஆங்கிலநூல்: இதனை எழுதியவர் திரு.மு.சி.பூரணலிங்கம் அவர்கள். இந்நூல் இராவணன் தமிழ் மகன் என்பற் கான ஆதாரங்களைக் கொண்டுள்ளது.
"புரட்சி 11.2.1934 இதழில் (பக்கம்4) "ஏழை கள் சிரிக்கிறார்கள். இதயம் எப்படி இருக்கிறது? என்ற சிறுகதை வெளிவந்துள்ளது. அதை எழுதியவர் பாரதிதாசன் ஆவார்.
பகுத்தறிவு 6.1.1925 இதழில்தான் தமது எழுத்துச்சீர்திருத்தத்தை முதன் முதலாக நடைமுறைக்குக் கொண்டு வந்தார் தந்தை பெரியார்.
1.6.1935 முதல் "விடுதலை" வாரம் இரு முறை இதழாக நீதிக்கட்சி சார்பில் வெளி வந்தது. அதன் ஆசிரியர் டி.ஏ.வி.நாதன். விலை, அரையணா 3.7.1937 முதல் சென்னை யிலிருந்து நாளிதழாக வெளிவந்தது. அப்போது அதன் ஆசிரியர் பண்டிதர் எஸ்.முத்துசாமிப் பிள்ளை. 1939ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா "விடுதலை" இதழின் ஆசிரியராக இருந்தார். 1941ஆம் ஆண்டு அண்ணா விலகிக் கொண்டார்.
"விடுதலை" ஆசிரியராக அண்ணா இருந்த காலத்தில்தான், "மறைந்தாயோ செல்வமே' என்ற தலைப்பில் ஏ.டி.பன்னீர் செல்வத்தைப் பற்றித் தலையங்கம் எழுதினார். மேலும் அண்ணா எழுதிய "அதிர்ச்சி வைத்தியம்" "கல்கத்தா காய்ச்சல்" போன்ற தலையங்கங்கள் புகழ் பெற்றவை. அண் ணாவின் எழுத்தால் விடுதலை படிப்போர் எண்ணிக்கை பெருகியது.
12.9.1943 முதல் 30.9.1945 வரை யுத்தப் பிரச்சாரத்திற்காக விடுதலை இதழ் வழங்கப் பட்டது. அப்போது அதன் ஆசிரியர் குத்தூசி குருசாமி.
யுத்தப் பிரச்சாரத்திற்கு வழங்கப்பட்ட "விடுதலை" இதழ். மீண்டும் 6.6.1946 முதல் தந்தை பெரியாரின் பொறுப்புக்கு வந்தது. அப்போது அதன் ஆசிரியர் கே.ஏ.மணி (மணியம்மையார்) பதிவு எண்.4739 தற் பொழுது "விடுதலை" ஆசிரியர் கி.வீரமணி. கவிஞர் கலி.பூங்குன்றன் பொறுப்பாசிரியராக இருந்து கவனித்துக்கொள்கிறார்.
"பெரியார் பிஞ்சு" என்னும் சிறுவருக் கான பகுத்தறிவு இதழும் பெரியார் திடலி லிருந்து வெளிவந்து கொண்டிருக்கிறது.
தந்தை பெரியாரின் இதழ்களில் பல வடசொற்கள் இடம் பெற்றுள்ளன. அக்கி ராசனப் பிரசங்கம், விஜயம், கஷ்ட நஷ்டம், அய்தீகம், ஆக்ஷி முதலானவை சில எடுத்துக்காட்டுகள். ஆனாலும் தந்தை பெரியாரின் தமிழ்நடை ஒரு தனிநடை மக்களுக்குப் புரியும் எளிய நடை.
"பெரியார் அவர்கள் மிகுதியான அளவுக்குத் தமிழை இந்த நூற்றாண்டில் பயன்படுத்திய பெருமைக்குரியவர். அவர் கையாண்ட மொழிநடை தனித்தமிழ் மொழி நடை அல்ல; அது மணிப்பிரவாளமொழி நடையும் அல்ல, அது வேறு ஒரு நடை" என்று தமிழறிஞர் முனைவர் பொற்கோ கூறுவது உளங்கொள்ளத் தக்கதாகும்.
"...வாக்கு வன்மையிலும் வாதத் திறமை யிலும் பெரியாருக்கு இணையானவர் தமிழ் நாட்டில் இன்னொருவர் உண்டா என்பது சந்தேகம். எழுதுவதில்தான் என்ன? சில பிழைகளுடன் எழுதினாலும், அவர் எழுது வது நேரே வாசகர்களின் உள்ளத்தில் போய்த் தைக்கும்" என்று "ஆனந்த விகடன்" இதழ் தந்தை பெரியாரின் எழுத்து வன்மையை எடுத்துக் கூறுகிறது. இதழாளர் பெரியார் என்றென்றும் மக்கள் இதயங்களில் இருப்பார்.
- நன்றி: “தமிழாலயம்”
நவம்பர் - டிசம்பர் 2016
-விடுதலை,ஞா.ம.,29.10.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக