பக்கங்கள்

சனி, 29 செப்டம்பர், 2018

தமிழ் மீது வன்மம்

கேள்வி: தமிழ் மொழியை செம்மொழியாக்க சட்டம் கொண்டு வந்தால் என்னென்ன பயன்?

பதில்: காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். ஏழை நெசவாளர் வீட்டுக் கட்டுத்தறி நிற்காமல் இயங்கும். ஒரு வேளை கஞ்சிக்கே வழி இல்லாதவருக்கு மூன்று வேளையும் மட்டன் பிரியாணி கிடைக்கும் ('தினமலர்' வார மலர் 13.6.2004).

இந்தளவு  தமிழ் மீது வன்மம் கொண்டவர்கள்தான்  பார்ப்பனர்கள்!

வெள்ளி, 28 செப்டம்பர், 2018

அமெரிக்காவில் தமிழ் பேசுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு



மும்பை, செப்.22  அமெரிக்காவில் அதிகமானவர்களால் பேசப்படும் இந்திய மொழிகளில் தொடர்ந்து இந்தி முதலிடத்தில் இருந்து வருகிறது. தொடர்ந்து குஜராத்தி, தெலுங்கு, தமிழ் மொழிகள் உள்ளன.

2010ஆம் ஆண்டு புள்ளிவிபரத்துடன் ஒப்பிடுகையில், 2017ஆம் ஆண்டில் தெலுங்கு பேசுவோரின் எண்ணிக்கை 86 சதவீதம் அதிகரித்துள்ளது. அமெரிக்கா வெளியிட்டுள்ள புள்ளிவிபரத்தின்படி, 2017ஆம் ஆண்டில் அமெரிக்காவில் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. 5 ஆண்டுகளுக்கும் மேல் வசிப்பவர்களின் எண்ணிக்கை 21.8 சதவீதமாக உள்ளது. ஆங்கிலம் தவிர பிற மொழிகள் பேசுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் வசிக்கும் 30.5 கோடி பேரில் 6.7 கோடி பேர் வெளிநாட்டு மொழிகள் பேசுபவர்களாக உள்ளனர். இந்தி பேசுவோரின் எண்ணிக்கை 8.63 லட்சமாகவும், குஜராத்தி பேசுவோரின் எண்ணிக்கை 4.34 லட்சமாகவும், தெலுங்கு பேசுவோரின் எண்ணிக்கை 4.15 லட்சமாகவும் உள்ளது. தெலுங்கு பேசுவோரின் எண்ணிக்கை 86 சதவீதமும், இந்தி பேசுவோரின் எண்ணிக்கை 42 சதவீதமும், குஜராத்தி பேசுவோரின் எண்ணிக்கை 22 சதவீதமும் அதிகரித்துள்ளது.

பெங்காலி பேசுவோரின் எண்ணிக்கை 57 சதவீதமும், தமிழ் பேசுவோரின் எண்ணிக்கை 55 சதவீதமும் அதிகரித்துள்ளது. இந்தியர்கள் மட்டுமின்றி வங்கதேசத்தினரும் பெங்காலி பேசுகிறார்கள். அதே சமயம் தமிழ் மொழி அதிக வெளிநாட்டினரால் பேசப்படும் மொழியாக உள்ளது. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா நாட்டினரும் தமிழ் பேசுகிறார்கள்

ஒலிமாசை கட்டுப்படுத்த அதிக ஒலி எழுப்பும் கருவிகளுக்கு தடை நீடிக்கும்

மும்பை, செப்.22 விநாயகர் சதுர்த்தி மற்றும் சில முக்கிய நிகழ்ச்சியின் போது விதிமுறைகளை மீறி அதிக ஒலிமாசு ஏற்படுத்தப்படுவதாக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதை விசாரித்த உயர்நீதிமன்றம் விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி நிகழ்ச்சிகளின் போது அதிக ஒலி எழுப்பும் டி.ஜெ. உள்ளிட்ட கருவிகளுக்கு தடை விதித்தனர். இதை எதிர்த்து ஒலி மற்றும் ஒளி கூட்டமைப்பு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த மனு நீதிபதிகள் சாந்தனு கேம்கர் மற்றும் சாரங் கோட்வால் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் வாதிட்ட வழக்குரைஞர் “டி.ஜெ. உள்ளிட்ட கருவிகள் 100 டெசிபலுக்கு மேல் ஒலி எழுப்பும் திறன் கொண்டவை. ஆனால் பெரும்பாலான பகுதிகளில் 50 முதல் 75 டெசிபல் ஒலியும், இரவு நேரங்களில் 40 முதல் 70 டெசிபல் ஒலியும் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே ஒலி மாசு சட்டங்களை மீறும் இந்த கருவிகளை பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது” என கூறினார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அமர்வு, விநாயகர் சதுர்த்தி மற்றும் நவராத்திரி நிகழ்ச்சிகளில் அதிக ஒலி எழுப்பும் கருவிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்துவிட்டனர்.

ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக சட்டம், விதிகள் உருவாக்கப்படும்போது, அதை கண்டிப்பாக பின்பற்றவேண்டும் என்று மனுதாரர்களுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும் மனு மீது விரிவான பதில் அளிக்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டனர்.

ரூ 100 அய் தொடப்போகும் பெட்ரோல் விலை

புதுடில்லி, செப்.22 பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை தினம் மாற்றி அமைக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு உரிமை அளித்ததில் இருந்து தினமும் விலை உயர்வு ஏற்படுவதால் மக்கள் கடும் துயரம் அடைந்துள்ளனர்.   இன்று பெட்ரோல் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இன்று டில்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.82.32 ஆகவும், சென்னையில் ரூ.85.48 ஆகவும் கொல்கத்தாவில் ரூ.84.07 ஆகவும் உயர்ந்தது. இந்த விலை உயர்வு டில்லி, மும்பை கொல்கத்தா நகரங்களை விட சென்னையில் அதிகம் இருந்தது. இந்த ஆண்டுத் தொடக்கத்தில் பெட்ரோல் விலை டில்லியில் லிட்டருக்கு ரூ.64.97 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் முடிந்து அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல்வாரம் வரை நாடு முழுவதும் தொடர்ந்து விழாக்கள் நடைபெறுவதால் வரும் 5 மாதங்களுக்கு விலை உயருமே தவிர குறைவதற்கான எந்த ஒரு வாய்ப்பும் இல்லாமல் போய்விட்டது. இதனால் இன்னும் சில வாரங்களில் மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ 100-அய் தொட்டுவிடும்.  சென்னையில் அக்டோபர் இறுதி அல்லது நவம்பர் முதல்வாரத்தில் ரூ 100 அய்த் தொட்டு விடும் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

தொடர்ந்து பொய் பேசிவரும் நிர்மலா சீதாராமன்

ப. சிதம்பரம் குற்றச்சாட்டு

புதுடில்லி, செப். 22  நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருகிறது, மும்பையில் விரைவில் பெட்ரோல் விலை ரூ100-அய் தொட்டுவிடும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் தொடர்ந்து பொய்யான தகவலைக் கூறிவருகிறார். இதற்கு மத்திய  முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் நிர்மலா சீதாராமனின் பொய்யை அம்பலப்படுத்தியுள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில்  இவ்விலை உயர்வு குறித்து பேசிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், எண்ணெய் பொருட்கள் மீது மாநிலங்கள் தான் அதிக வரி விதிக்கின்றன. இவற்றில் பாதி வரியைத் தான் மத்திய அரசு விதிக்கிறது. எனவே முதலில் விலை குறைப்பில் ஈடுபட வேண்டியவர்கள் மாநில அரசுகள் தான் என்று கூறினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் டுவிட்டரில் பதிவிட்டுள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது உண்மையா?  வாருங்கள் உண்மையைத் தெரிந்துகொள்ளலாம் என்று கூறியிருந்தார்.

மேலும், கடந்த 2017-&2018 ஆம் ஆண்டில் மத்திய அரசு ரூ.2,84,442 கோடி வரி வசூல் செய்துள்ளது. அதேசமயம் மாநில அரசு ரூ.2,08,893 கோடி வரி வசூல் செய்துள்ளது. இதில் மத்திய அரசு தான் அதிக லாபம் பார்த்துள்ளது. இதில் மாநிலங்களுக்கு வரி இழப்புத்தான் ஏற்பட்டுள்ளது. புள்ளி விவரங்களைப் பார்த்தாலே தெரியும். அப்படியிருக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இப்படி பேசுவது ஏன் என்று கூறியுள்ளார். மேலும் இந்த இரண்டில் எது அதிகம் என்று நீங்களே கூறுங்கள் என்றும் பதிவிட்டுள்ளார்.

- விடுதலை நாளேடு, 22.9.18

சனி, 22 செப்டம்பர், 2018

தமிழி எழுத்து வடிவம் :

தமிழ் மொழியின் தொன்மையான எழுத்து வடிவங்களை அறிந்து கொள்ளக் குகைக் கல்வெட்டுகள் பெரிதும் உதவுகின்றன. இக்கல்வெட்டுகளில் எழுதப் பெற்றுள்ள எழுத்து வடிவங்களுக்குப் பெயரிடுவதில் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. ஒரு சிலர் தமிழி என்று குறிப்பிடுகின்றனர். வேறு சிலர் தமிழ்-பிராமி என்று குறிப்பிடுகின்றனர்.

• தமிழின் தனித்தன்மை

தமிழகக் குகைக் கல்வெட்டு எழுத்துகள் வடஇந்திய பிராமி எழுத்துகளில் இருந்து சிற்சில நிலைகளில் வேறுபடுகின்றன. அவ்வேறுபாடுகள் தமிழின் தனித்தன்மைக்கு உரியவை ஆகும். இந்த வேறுபாட்டைக் கருத்தில் கொண்டு "தமிழி" என்று தனிப்பெயர் இடுதலே சிறப்புடைத்து என்பார் கல்வெட்டு "அறிஞர் நாகசாமி". இவர் தம் கருத்துக்கு அரணாக இரு சான்றுகளை எடுத்துக் காட்டி விளக்குகின்றார்.

கி.மு. முதல் நூற்றாண்டைச் சார்ந்த "சமவயங்க சுத்த" என்னும் நூலில் 18 வகையான எழுத்துகளின் பெயர்கள் பட்டியல் இடப்பெற்று உள்ளன. அவற்றுள் "தமிழி" என்பதும் ஒன்று.

பிராகிருத மொழியினர் தமிழ் எழுத்துகளைத் தமிழி, திராவிடி என்று குறிப்பிடுகின்றனர். திராவிடி என்பது பிற்காலப் பெயர். இப்பெயர் கி.பி.5,6 ஆம் நூற்றாண்டுகளுக்குரிய நூலாகக் கருதப் பெறுகின்ற லலித விஸ்தாரம் என்னும் நூலிலேயே இடம் பெற்றுள்ளது.

எனவே குகைக் கல்வெட்டு எழுத்துகளைத் தமிழி என்றே குறிப்பிடுவோம். தமிழி எழுத்து வடிவங்களைக் கீழே இடம் பெற்றுள்ள படத்தில் காணலாம்.
காண்க : (தமிழ் இணைய பல்கலைக்கழகம்) http://www.tamilvu.org/courses/degree/a051/a0514/html/a051414.htm

வெள்ளி, 21 செப்டம்பர், 2018

பிழை இன்றி எழுதுவீர்(7)

கவிஞர் நினைவிற்கு


எந்தன், உந்தன் என்று தமிழில் சொற்களே இல்லை. இதை முன் ஒருமுறை விளக்கியுள்ளோம். இவ்வாறு உள்ள பிழைச் சொற்களைப் படித்தவர்களே எழுதுவ தென்றால், இராஜகோபாலாச்சாரியாருக்கும் இவர் களுக்கும் என்ன வேறுபாடு?

எம் என்பது பன்மைச் சொல். அதனோடு பன்மைக் குரிய தம் என்பதுதான் சேரும். எனவே எந்தம் என்று எழுத வேண்டும். உந்தம் என்பதும் அப்படியே.

என் என்பதும் உன் என்பதும் ஒருமைக்குரியவை. இவற்றோடு ஒருமைக்குரிய தன் சேர வேண்டும். எனவே என்றன், உன்றன் என எழுத வேண்டும்.

போக, வர, இருக்க என இவ்வாறு வரும் சொற் களுக்குச் செய் என்னும் வாய்பாட்டு வினையெச்சம் அல்லது (சுருக்கமாய்) செயவெனெச்சம் என்பார்கள். இவற்றிற்கு முன் வல்லெழுத்துக்கள் அவையாவன க, ச, த, ப என்பவை வந்தால் மிக வேண்டும். எப்படி?

போக + கண்டான் = போகக் கண்டான். வரச் சொன்னான், இருக்கின்றான், எனப் பகிர்ந்தான் என.

க, ச, த, ப என்று கூறினால் (க) கா, கி முதலிய வற்றையும் (ச) சா, சி முதலிய வற்றையும் (த) தா, தி முதலியவற்றையும் குறிக்கும். கவிதை எழுதக் கசடறக் கற்க.

என்பது அகவலடி. இதில் எழுத என்னும் செயவெனெச் சத்தின் முன் க என்ற வல்லெழுத்து வந்ததால் எழுதக் கசடற என மிகுந்தது. அறக்கற்க என்பதில் அற என்பது செயவெனெச்சம்! அதன் முன் ‘க்‘ என்னும் வல்லெழுத்து : வந்ததால் அறக்கற்க என மிகுந்தது.

அழகுக் கழகு கூட்டுவார் போலக் குழந்தைக்குப் பன்மணி இழைகள் கூட்டினர்.

என்பது அகவலின் இரண்டடி. முதலடியின் கடைசியில் உள்ள போல என்பது செயவெனெச்சம். அதன்முன் இரண்டாம் அடியின் முதலிலுள்ள வல்லெழுத்து வந்தது. அதனால் போல + குழந்தை, போலக் குழந்தை என மிகுந்தது.

கவிஞர்கள் சிலர் - பாட்டில் வரும் ஓரடிக் கடைசிச் சொல்லையும் அடுத்த அடியில் வரும் முதற் சொல்லையும் தொடர்புபடுத்திப் பார்ப்பதே இல்லை. அப்படியானால் இவர்கட்கும் சுதேசமித்திரன், தினமணிக்கும் என்ன வேறுபாடு?

அகரத்தை, அதாவது ‘அ’ என்பதை ஈற்றிலுடைய சில சொற்களின் முன் வல்லினம் (க, ச, த, ப) வந்தால் இயல்பாகும் என்பதற்கு நன்னூற் பாட்டு ஒன்றுண்டு.

“செய்யிய என்னும் வினையெச்சம் பல்வகைப்

பெயரின் எச்சம் முற்று, ஆறனுருபே

ஆஃறிணைப் பன்மை அம்ம - முன் இயல்பே”

செய்யிய சென்றான் என்பதில் செய்யிய என்பது வினையெச்சம், உண்ணிய, காணிய என்பன முதலியனவும், அவ்வினை யெச் சங்களே! செய்யிய சென்றான், உண்ணிய போனான், காணிய சென்றான் என இயல்பாகும்.

வந்த குதிரை, வருகின்ற குதிரை என்பனவற்றில் உள்ள வந்த, வருகின்ற என்பன குதிரை என்ற பெயரைக் கொண்டு முடிவதால் வந்த, வருகின்ற என்பன பெய ரெச்சங்கள். இவற்றின் முன் வல்லினம் வந்தால் வந்த குதிரை என இயல்பாகும். வந்த, வருகின்ற, போகின்ற, போன என்பன போன்றவையும் பெயரெச்சங்களே.

வந்தன குதிரைகள், வருகின்ற குதிரைகள் என்பன வற்றில் வந்தன, வருகின்ற என்பவை முற்று. வந்தாள், வந்தான், வந்தார், வந்தது எனப் பலமுற்றுக்கள் உள்ளன. அவைகளைப் பற்றி இங்கே பேச்சில்லை.

அகரத்தை இறுதியாக உடைய வந்தன முதலியவை களைப் பற்றித்தானே இங்கே கூற வந்தது.

வந்தன குதிரை இடையில் ஒற்று மிகாது. வந்தன குதிரை என்றே எழுத வேண்டும்.

செய்தன, செய்கின்றன, உண்டன, உண்ணுகின்றன அனைத்தும் முற்றுக்களே!

தன கைகள் என்றது தன்னுடைய நகைகள் என்ற பொருளுடையது. தன என்பதன் இறுதியில் உள்ள ‘அ’ ஆறாம் வேற்றுமையின் பன்மை யுருபு. இதன் முன் வல்லினம் வந்தால் இடையில் ஒற்று மிகாது. தன கைகள் என்று இயல்பாகும். என, உன என்பன அனைத்தும் ஆறாம் உருபைக் கொண்டனவே.

அம்ம கொற்றா என்பது இடைச்சொற் றொடர். அம்ம என்பது வியப்பைக் குறிக்க வரும் இடைச்சொல். இடை யில் ஒற்று மிகாது.

க்கு, ச்சு, ட்டு, த்து, ப்பு, ற்று இவைகளைக் கடைசியில் வைத்துக் கொண்டு வருகின்ற சொற்கள் அனைத்தும் வன்றொடர்க் குற்றியலுகரச் சொற்களே யாகும். சுக்கு, பாக்கு, உப்பு, காப்பு, தச்சு, நீச்சு, பட்டு, பாட்டு, முத்து, கூத்து, புற்று, நேற்று என்பனவும் இவைபோன்ற பிறவும் வன்றொடர்க் குற்றியலுகரச் சொற் களே. இவற்றின் முன் வரும் வல்லெழுத்து மிகும் - எப்படி. - சுக்குத் தின்றான். பாக்குப் போட்டுக் கொண்டான். தச்சுப் பொருள், நீச்சுப் பந்தயம் என. சுக்கு தின்றான் என வரவே வராது. போயிற்றுக் குதிரை என்பதில் போயிற்று என்பதும் வன்றொடர்க் குற்றியலுகரமே. ஆயிற்று, கூவிற்று என்பனவும் அவையே.

ஆயினும் கூப்புகை, நாட்டுபுகழ் என்பன மேற்சொல்லி யதுபோல் மிகாது. கூப்பு கை, நாட்டு புகழ் என இயல் பாகவே இருக்கும். ஏன் எனில்,

கூப்பு கை, நாட்டு புகழ் என்பன வினைத் தொகை நிலைத் தொடர்கள். கூப்புகை என்பது கூப்புகின்ற கை, கூப்பிய கை, கூப்பும் கை என மூன்று காலத்திற்கும் ஒத்து வருவதால் வினைத் தொகை. நாட்டு புகழ் என்பனவும் அப்படியே.

கூப்புக்கை, நாட்டுப்புகழ் என்று போடவே கூடாது.

அங்கு, இங்கு, உங்கு, ஆங்கு, ஈங்கு, ஊங்கு, எங்கு, யாங்கு, ஆண்டு, ஈண்டு, யாண்டு என்பன இடைப்பொரு ளில் வரும், மென்றொடர்க் குற்றியலுகரங்கள். இவை களின் முன் வரும் வல்லினம் மிகும். எப்படி? அங்குக் கண்டான், இங்குச் சேர்ந்தான், ஆண்டுச் சென்றான், ஈண்டுப் போந்தான் என.

“ஆங்கு அவன்தான் அழகு அழித்தான்”

ஒருவர் எழுதிய அகவல் அடி இது.

அகவல் அடியில் நான்கு சீர்கள் வரவேண்டும். இதில் வந்துள்ளனவா எனில் இல்லை. ஏன்?

ஆங்கு + அவன் = ஆங்கவன் என்று புணர வேண்டும். இப்படிப் புணர்த்தவே இரண்டு சீரும் ஒரு சீராகின்றது. அழகு அழித்தான் என்பது அழகழித்தான் எனப் புணரும்.

“ஆங்கவன் தான் அழ கழித்தான்” என்ற மூன்று சீர்தாம் உள்ளன. இன்னும் ஒரு சீர் வேண்டும். எங்கே போவது! பிழைதானே! இந்த அடியை எப்படித் திருத்தி னால் பிழையிராது எனில்,

“ஆங்கே அவன்தான் அழகை அழித்தான்” எனில் பிழை இல்லை .

சொற்களைப் பிரித்து எளிதில் பொருள் விளங்கு வதற்காக எழுதுவதாய் நினைக் கின்றார்கள். பிரித்து எழுதலாம். அதைப் புணர்த்திப் பார்க்கும்போது அளவு குறையக் கூடாது.

இந்தப் பிழைகளைப் புகழ் பெற்றவர் என்று கருதப்படும் கவிஞர்களும் செய்கின் றார்கள்.

மரத்தில் அதோ பார் பறவைக் கூடு

அதுமிக அழகாய் இல்லையா அண்ணே

என்பன அகவல் அடிகள். இவற்றில் முதலடியில் கடைசிச் சொல் கூடு என்பது. அது குற்றியலுகரம். அடுத்த அடியின் முதலிலுள்ள அது என்பதில் உள்ள அகரத்தோடு புணர வேண்டும் கூடு + அது = கூடது என்று. எனவே கூடு என்பதன் - டு இல்லாமற் போகின்றது. கூ மட்டும் மிஞ்சுகிறது.

மரத்தில் அதோ பார் பறவைக் கூ என்றால், கூ மட்டும் ஒரு சீரல்ல. இன்னும் ஓரெழுத்தாவது வேண்டும். மரத்தில் அதோ பார் பறவைக் கூடே என்று திருத்திக் கொண்டால் பிழை நேராது.

- குயில். குரல்: 1. இசை: 43. 31-3-1959

பிழைஇன்றி எழுதுவீர்! (6)

பாட்டு எழுதுவார்க்குச்

சில குறிப்புக்கள்

தன், தான் ஒருமைக்குரியவை.

தம், தாம் பன்மைக்குரியவை.

ஆதலால்,

அவன் என்பதனோடு தன் வரும் (அவன்றன்)

அவர் என்பதனோடு தாம் வரும் (அவர்தாம்)

கீழே தரப்படும் அப்பர் செய்யுளை நோக்குக.

“ஒன்றி யிருந்து நினைமின்கள்

உந்தமக் கூனமில்லை”

“என்றுவந்தாய் என்னும் எம்பெருமான்றன்”

உம் பன்மை, தம் பன்மையாதலால் உடன் வந்தது.

உம் + தம் = உந்தம்.

பெருமான்றன் என்பதில் பெருமான் ஒருமை. தன் ஒருமையாதலின் உடன் வந்தது. பெருமான் + தன் = பெருமான்றன்.

பாட்டு எழுதுவோர் பலர் உந்தன் என்றும் எந்தன் என்றும் எழுதுகின்றார்கள். உன்றன் என்றல்லவா எழுத வேண்டும். என்றன் என்றல்லவா எழுத வேண்டும்?

உந்தம் என்றால் பிழையில்லை. எந்தம் என்றால் பிழையில்லை. எம் பன்மை தம் பன்மை ஆதலின்.

சுக்கு, பேச்சு, பட்டு, முத்து, காப்பு, புற்று என்பன போன்று வரும் சொற்கள் எல்லாம் வன்றொடர்க் குற்றியலுகரங்கள். ஏன்? ஈற்றயலெழுத்தைப் பாருங்கள். அனைத்தும் வல்லெழுத்தே.

சங்கு, பஞ்சு, பண்பு, பந்து, பாம்பு, அன்பு என்பன போன்று வரும் சொற்கள் எல்லாம் மென்றொடர்க் குற்றியலுகரச் சொற்கள். ஏன்? ஈற்றயல் எழுத்து மெல் லெழுத்து!

செய்து, சார்பு, சால்பு, போழ்து, தெள்கு என்பன போன்று வரும். சொற்கள் எல்லாம் இடைத் தொடர்க் குற்றியலுகரங்கள். ஏன்? ஈற்றயலெழுத்து இடையெழுத்து.

அஃது, இஃது, எஃது, இருபஃது என்பன போன்று வரும் சொற்கள் எல்லாம் ஆய்தத் தொடர்க் குற்றியலுகரங்கள். ஏன்? ஈற்றயலெழுத்து ஆய்த எழுத்து.

சகடு, பிகடு, படகு, மதகு, ஒப்பாது, விறகு, பொழுது, பெரிது, சிறிது என்பன போன்று வரும் சொற்கள் எல்லாம் உயிர்த் தொடர்க் குற்றியலுகரச் சொற்கள், ஏன்? ஈற்றயலில் உயிர் எழுத்து.

காசு, சாறு, நாடு, ஏது, ஈபு, ஆறு என்பன போன்று வரும் சொற்கள் எல்லாம் நெடிற்றொடர்க் குற்றிய லுகரங்கள். ஏன்? ஈற்றயலெழுத்துக்கள் நெட்டெழுத்துக்கள்.

ஈற்றயலெழுத்தென்றால் என்ன? சுக்கு என்பதன் ஈற்றெழுத்து கு அதன் அயலெழுத்து க்,

வல்லெழுத்து எவை? க், ச், ட், த், ப், ற் என்ற ஆறும். மெல்லெழுத்தென்றால் எவை? ங், ஞ், ண், ந், ம், ன் என்ற ஆறும். இடையெழுத்தென்றால் எவை? ய், ர், ல், வ், ழ், ள் என்ற ஆறும். ஆய்த எழுத்து ஃ.

உயிர்த் தொடர்க் குற்றியலுகரம் என்பதில் உயிர் என்றது எதை? சகடு என்பதன் ஈற்றயல் எழுத்தாகிய க என்பதை. ஏன் எனில் க் என்றதன்மேல் அ இருக்கிறதே அதைக் குறித்து.

நெடில் எவை? ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ அன்றியும் இவை ஏறியதால் உண்டான கா, கீ, கூ, கே, கௌ முதலிய அனைத்தும் கொள்க.

இதுவரைக்கும் சொல்லியவற்றால் குற்றியலுகரம் இன்னதென்று புரிந்தது.

இனி, அக் குற்றியலுகரச் சொல்லின் முன்வரும் உயிரெழுத்து எப்படியாகும் என்பது கூறப்படும்.

சுக்கு + அரிது = சுக்காது. என்றாகும். சுக்கு என்றதன் ஈற்றிலுள்ளது கு. அதன்மேல் ஏறிய உ மறைந்து விட்டது. சுக், க் மீந்தது. அதன் கடைசி க் மேல் வரும் அ ஏறிக் கொள்ளும். சுக்கரிது என்று ஆனது காண்க..

இதைத்தான் நன்னூல் “உயிர்வரின் உக்குறள் மெய் விட்டு ஓடும் என்றது! எனவே,

சுக்கு + அரிது = சுக்கரிது

சுக்கு + ஆணம் = சுக்காணம்

சுக்கு + இனிது = சுக்கினிது

சுக்கு + ஈவாய் = சுக்கீவாய்

சங்கு + ஒலி = சங்கொலி

சங்கு + ஊதல் = சங்கூதல்

செய்து + அளித்தார் = செய்தளித்தார்

நாடு + அழகு = நாடழகு

நாடு + ஆண்டான் = நாடாண்டான்

அஃது + ஏது = அஃதேது

என்று புணரும்.

பாட்டெழுதுவார் பாட்டெழுதும்போது, சுக்கரிது என்று புணர்த்தே எழுத வேண்டும்; சங்கொலி என்று கூட்டியே எழுத வேண்டும்.

இதை விளக்குவோம். அகவல் எழுத - ஓர் அடிக்கு நான்கு சீர் வேண்டும்.

“திங்கள் எழுந்தது செங்கதிர் மறைந்தது”

பட என்பது நாற்சீர் வந்த அகவலடி. இதுபோன்ற அகவலடி எழுதவரும் பாவாணர் “சங்கு ஒலியும் சாறு ஊற்றம்“ என்று எழுதினால் பிழையாகும். ஏன்? இப்படிப் பிரித்தெழுதலாகாதன்றோ?

சங்கு ஒலியும் என்பன சங்கொலியும் என்றுதான் புணரும்.

“சங்கொ”  ஈரசைச் சொல் போக மீதி “லியும்” என்ற ஓரசைச் சொல்லே இருக்கின்றது. ஓரசைச் சொல் அகவலில் வராதன்றோ ? அதுபோலவே சாறு ஊற்றம் என்பன சானூற் றம் எனப் பிரிதலால் கூறும் ஓரசையாக வந்து அகவலைக் கெடுக்குமன்றோ?

என்று அவர் தாம் வருவார் என்று

அரசி நினைந்து அழுதாள்

அரசன் வரக் கண்டு அகமகிழ்ந்தாளே!

என்பது,

என்றோ அவர்தாம் வருவார் என்றே

அரசி நினைந்தே அழுதாள் அரசன் வரக்கண் டகமகிழ்ந் தாளே! என்றாவது திருத்தப்பட்டால் பிழையறும்.

- குயில்: 9-9-’58

- விடுதலை ஞாயிறு மலர்,7.7.18

பிழைஇன்றி எழுதுவீர்! (13)

இலக்கியப் போட்டி - 4


கட்டமை வில்லாக் காங்கிரஸ் கட்சிச்

சட்டமன் றுறுப்பின் தலைவர் ________

பைத்தியங் கொண்ட ________ ரான

வைத்திய நாதரின் வஞ்சச் சூழ்ச்சி

பலிக்க வில்லை! பச்சைத் திராவிடப்

________ வெற்றி போந்தது. வைத்திய

நாதர் கண்டார் நாண வில்லை.

தோதுறு திராவிடர், சுப்பரா யனையும்

தீமை யில்லாக் ________ ________

ஓமந் தூர்இ ராமசா மிக்குப்

________ ஆக்கப் பார்த்தார்

வகையிலாச் சூழ்ச்சியும் ________ ________

கோடிட்ட இடத்தில் ஏற்ற சொற்களை அமைக்க!

கட்டமை வில்லாக் காங்கிரஸ் கட்சிச்

சட்டமன் றுறுப்பின் தலைவர் தேர்தலில்

பைத்தியங் கொண்ட பார்ப்பன ரான

வைத்திய நாதரின் வஞ்சச் சூழ்ச்சி

பலிக்க வில்லை! பச்சைத் திராவிடப்

புலிக்கே வெற்றி போந்தது. வைத்திய

நாதர் கண்டார் நாண வில்லை.

தோதுறு திராவிடர், சுப்பரா யனையும்

தீமை யில்லாக் காமரா சரையும்

ஓமந் தூர்இ ராமசாமிக்குப்

பகைவர் ஆக்கப் பார்த்தார்

வகையிலாச் சூழ்ச்சியும் மண்ணா யிற்றே.

இலக்கியப் போட்டி - 5

எதுகை

‘முதலெழுத்து ஒன்றி வருவது மோனை’ என்பது முன்னர் அறிவிக்கப்பட்டது. இப்போது எதுகையைப் பற்றி அறிவிப்போம்,

எந்தப் பாவிற்கும் எதுகை அமைந்தி ருப்பது அழகும் சிறப்புமாகும்.

‘அண்ணல் காந்தியார் நுண்ணிய அறிவினர்’ என்பது அகவலடி, இதில் அண் ணல், நுண்ணிய என்பவற்றின் இரண்டாம் எழுத்தாக ண் என்பது ஒன்றி வந்துள்ளது.

இங்ஙனம் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவதற்கே எதுகை என்று பெயர். “போந்த காந்தி ஈந்த உரிமை” என ஒரேயடியில் பல எதுகைவரின் மிகச் சிறப்பு.

‘காந்தி தமது கட்டுரை வழியே

மாந்தர் நடப்பது மாபெருஞ் சிறப்பு’

எனும் இரண்டடிகளின் முதலிலுள்ள காந்தியார், மாந்தர் என்பவற்றின் இரண் டாம் எழுத்தாக ‘ந்’ என்பது ஒன்றி வந்துள்ளது. இங்ஙனம் இரண்டு முதலிய பல அடிகளிலும் எதுகை ஒன்றி வரும். அடிதோறும் ஒன்றிவரின் மிக மிகச் சிறப்பு.

‘வடவரின் வருகையால் வண்டமிழ் மக்களின்

நடைமுறை மாற்றம் நண்ணிய திங்கே’

இதில் வட, நடை என இரண்டாம் எழுத்தாக, ட, டை என்னும் டகர வரிசை ஒன்றி வந்துள்ளது. இங்ஙனம் ட, டா, டி, டீ - ம, மா, மி, மீ என வரும் ஒரு வரிசை எழுத்துக்குள்ளேயே எதுவும் வந்து ஒன்றலாம். இதற்கு ‘வருக்க எதுகை’ என்று பெயர்.

‘நுண்ணிய ஆரியம் நலிவு செய்ததால்

மன்னிய நந்தமிழ் மாண்பு குறைந்தது’

இதில் நண், மண் என இரண்டாம் எழுத்தாக ண், ன் என்னும் மெல்லின எழுத் துக்கள் ஒன்றி வந்துள்ளன. இங்ஙனம் வெவ்வேறு மெல்லின எழுத்துக்களோ அல்லது வெவ்வேறு வல்லின எழுத்துக்களோ, வெவ்வேறு இடையின எழுத்துக்களோ தம்முள் ஒன்றி வருதலும் உண்டு. இதற்கு ‘இன எதுகை’ என்று பெயர்.

மேலும் ‘பாட்டு’ என்பதற்கு எதுகையாகக் ‘கட்டு’ என வருதல் கூடாது. காட்டு எனவே வரவேண்டும். இம் முறையில் எதுகைய மைத்துக் கீழ்வரும் ஆசிரியப்பாவில் கோடிட்ட இடங்களை நிறைக்க.

இந்திவேண்டாம்! வித்வான் ________ சண்முகன்

ஆரியம் வந்தது! ஆங்கிலம் வந்தது!

________ நந்தமிழ் நிலைமை குறைந்தது

கோயிலில் ஆரியர் ________ புக்கனர்

________ மணத்திலும் துன்னினர் அவரே!

வழுத்தும் தமிழின் ________ குன்ற

எழுத்திலும் பேச்சிலும் ________ பிறமொழி

________ ஆண்டதால் அலுவல் களிலெலாம்

நுண்ணிய தாங்கில நாட்டு மொழியே

________ ________ இதேநிலை!

வந்து காப்பீர் வளர்திரா விடரே!

இந்திவேண்டாம்! வித்வான் சுந்தர சண்முகன்

ஆரியம் வந்தது! ஆங்கிலம் வந்தது!

நேரிய நந்தமிழ் நிலைமை குலைந்தது

கோயிலில் ஆரியர் வாயிலாய்ப் புக்கனர்

தூய மணத்திலும் துன்னினர் அவரே!

வழுத்தும் தமிழின் வளப்பம் குன்ற

எழுத்திலும் பேச்சிலும் நுழைத்தனர் பிறமொழி

அன்னியர் ஆண்டதால் அலுவல் களிலெலாம்

நுண்ணிய தாங்கில நாட்டு மொழியே

இந்திவந் தாலும் இதேநிலை!

வந்து காப்பீர் வளர்திரா விடரே!

(நிறைவு)


- விடுதலை ஞாயிறு மலர், 1.9.18