பக்கங்கள்

கி.வீரமணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கி.வீரமணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 21 ஜனவரி, 2026

தைப்பொங்கல் – திராவிடர் பண்பாட்டு மீட்டுருவாக்கத் திருவிழா!-கி.வீரமணி


 ‘‘இப்பொங்கல் விழாவின் தத்துவம் என்ன வென்றால் விவசாயத்தையும், வேளாண்மையையும் அடிப்படையாகக் கொண்டு அறுவடை விழாவென்று சொல்லப்படுவதாகும். ஆங்கிலத்தில் ‘‘ஹார்வெஸ்ட் ஃபெஸ்டிவல்’’ என்று சொல்லப்படுவதன் கருத்தும் இதுதான்.’’

‘‘தமிழ் மக்களுக்குப் பாராட்டத்தக்க ஓர் உண்மையான திருநாள் உண்டு என்றால், அது தமிழர் திருநாளாகிய பொங்கல் திருநாள்தான். மற்ற திருநாள் எல்லாம் வைதீகச் சம்பந்தமானது. இந்தத் திருநாள் ஒன்றுதான் பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்டது.’’

– பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்

தைப் பொங்கல் என்ற பொங்கல் விழா – திராவிடர் – தமிழர் திருவிழா – பண்பாட்டு அடிப்படையில் அமைந்தது; பகுத்தறிவு அடிப்படையிலும் பெருமை உடையது. ‘அறுவடைத் திருநாள்’ என்று உலகெங்கும் கொண்டாடும் உழவர் தம் உழைப்பின் வெற்றியை எண்ணி உவகை பொங்கக் கொண்டாடப்படும் உன்னதத் திருவிழா!

திராவிடப் பண்பாடு – மனுதர்ம ஆரியப் பண்பாட்டுக்கு நேர் எதிரானது. எப்படி? ஏன்?

ஆரியப் பண்பாட்டின் அகம் மனுதர்ம சாஸ்திரம்.

அதில், உலகத்தாரின் உயிருக்கே பாதுகாப்பான உணவைத் தரும் வேளாண்மையை எவ்வளவு கொச்சைப்படுத்திக் கூறப்பட்டிருக்கிறது என்பதைப் பாருங்கள்.

‘‘சிலர் பயிரிடுதலை நல்ல தொழில் என்று நினைக்கிறார்கள். அந்தப் பிழைப்பு பெரியோர்களால் நிந்திக்கப்பட்டது; ஏனெனில், இரும்பை முகத்திலே உடைய கலப்பையையும், மண்வெட்டியையும், பூமியையும், பூமியில் உண்டான பல ஜந்துக்களையும் வெட்டுகிறதல்லவா?’’

– (மனு அத்தியாயம் 10; சுலோகம் 84).

இதற்கு முந்தைய சுலோகம் கூறுவதென்ன?

‘‘பிராமணனும், க்ஷத்திரியனும் வைசியன் தொழிலினால் ஜீவித்த போதிலும், அதிக ஹிம்சையுள்ளதாயும், பராதீனமாயும் இருக்கிற பயிரிடுதலை அகத்தியம் நீக்கவேண்டியது.’’ (‘‘அதைச் செய்யாவிட்டால், ஜீவனம் நடக்காத காலத்தில் அதையும் அந்நியனைக் கொண்டு செய்விக்க வேண்டும்‘’ என்பது முன் சுலோகத்தின் கருத்து)

– (மனு அத்தியாயம் 10; சுலோகம் 83).

இதற்கு முன் சுலோகம் கூறுவதென்ன? பார்ப்போமா!

‘‘தன் ஜாதித் தொழில், க்ஷத்திரிய ஜாதித் தொழில் இரண்டினாலும் ஜீவிக்கக் கூடாவிடில் வைசியன் தொழிலான பயிரிடுதல், பசுவைக் காப்பாற்றல், வியாபாரஞ் செய்தல் இவைகளாலும் ஜீவிக்கலாம்.’’

– (மனு அத்தியாயம் 10; சுலோகம் 82).

இந்த சுலோகத்திற்குமுன் உள்ள சுலோகம் (அத்தியாயம் 10, சுலோகம் 81) கூறுவது என்ன?

‘‘பிராமணனுக்கு மேற்சொல்லிய பிரகாரமாக தன் தொழிலினால் ஜீவிக்கக் கூடாத சமயத்தில் கிராமாதிகாரந் தேசாதிகார முதலிய க்ஷத்திரியன் தொழிலினால் ஜீவிக்க வேண்டியது. ஏனென்றால், அது அவனுக்கு அடுத்த ஜாதியின் தொழில் அல்லவா?”

(ஆதாரம்: ‘‘அசல் மனுதர்மம்‘’, பதிப்பு 1919, திருவைந்திரபுரம் – கோமாண்டூர் – இராமாநுஜாசாரியார் – வடமொழி, சமஸ்கிருத பாஷையில் உள்ளது)

பக்கம் 295.

இதன் கருத்து:

  1. பயிரிடுதல் மிகவும் மோசமான தொழில் – நல்ல தொழில் அல்ல.
  2. அவனவன், அவனவன் தொழிலையே செய்யவேண்டும்.
  3. அது முடியாத காலங்களில், தவிர்க்க முடியாத பட்சத்தில் இந்தப் பயிர்த் தொழிலையும் மாற்றிச் செய்து, உயிர்களைக் காப்பாற்றலாம் (வெறுப்புடன் விதிவிலக்கு).

ஆனால், மனித குலத்தையே ஓர் குடும்பமாகப் பார்க்கும் மகத்தான திராவிடர் பண்பு பூத்துக் குலுங்கும் திருக்குறள் – உழவின் சிறப்புபற்றி ஒரு தனி அதிகாரத்தையே – 10 குறள்பாக்களில் படைத்துக் காட்டி – காரண காரிய விளக்கத்துடன் பெருமைப்படுத்துகிறது!

அதிகாரம் 104 – ‘உழவு’ என்ற தலைப்பில்,

‘சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்

உழந்தும் உழவே தலை’ (குறள் 1031)

எனத் தொடங்கி, 10 குறள்பாக்களில் உழவின் சிறப்பை வானளாவிய வகையில் புகழுகிறார் வள்ளுவர்!

ஒரு குலத்துக்கொரு நீதி – தொழில் பேசுகிறது மனு!

மக்களை ஜாதிப் பார்வையால் பிரித்து அளக்கிறது, பிளக்கிறது! – அது ஆரியம்.

ஆனால், திருக்குறளோ இந்தப் பத்துக் குறள்களில் உலகத்தையே – மனித குலத்தையே ஒன்றுபடுத்தி ஒரே அணியாய்ப் பார்த்துப் பெருமைப்பட்டுக் கூறுகிறது என்பதற்கு சான்றுகள்தான் உலகம், உலகம் என்று பலமுறை கூறி, உறுதிப்படுத்தும் பரந்த பார்வை (Inclusiveness). இது திராவிடப் பண்பாடு!

மனுவோ, உழவை சூத்திரர்கள், வைசியர்கள் செய்யும் தொழில் என்று வெறுப்புடன் பார்த்து, உயிர்காப்பதைக்கூட, பின்னுக்குத் தள்ளி, பிளவுபடுத்திப் பிரித்து வைக்கிறது (Exclusiveness). இது ஆரியப் பண்பாடு.

எனவே, திராவிடப் பண்பாட்டுத் திருவிழா – பொங்கல் விழா – உழவர் திருநாள் – அறுவடைத் திருவிழா என்பது அய்யந்திரிபற விளங்குகிறது அல்லவா?

மேலும் எவ்வித தனிச்சிறப்புமற்ற ஆரியப் பண்டிகைகளுக்கு இல்லாத தனிச்சிறப்பு திராவிடப் பண்பாட்டுத் திருவிழாவிற்கு உண்டு. இவ்விழா ஒரு மதம்சார்ந்த விழா (தீபாவளி போல) அல்ல! அனைத்து உழவர்களும், மக்களும் பிறவிபேதமின்றி மகிழ்ந்து நன்றி செலுத்திக் (Thanks giving) கொண்டாடுவதாகும். இயற்கைக்கு – உழைப்போருக்கு – உழைப்பில் உதவிடும் மாடுகளுக்கும், மனிதர்களுக்கும் பேதமின்றி நன்றி பாராட்டும் பேதம் நீக்கிய பெருவிழா – திருவிழா!

தீபாவளி கதை கட்டுக்கதை. புராணக் கதையில்கூட உயிர்க்கொலைகள் – கொலைகளைக் கொண்டாடும் பண்டிகை!

இங்கோ புதுப்பொங்கல்! புத்துலகுக்குத் தெம்பூட்டும் புது வெள்ள மகிழ்ச்சி – புது நம்பிக்கை பூத்துக் குலுங்கும் புத்தெழுச்சித் திருவிழா! பண்பாட்டுப் படையெடுப்பை முறியடித்து, ஜாதி, மத, பேதம் ஒழித்த ‘உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ’ என உலகுக்குப் பறைசாற்றும் அனைவருக்குமான திராவிடத் திருவிழா!

ஆரியப் பண்டிகை மற்ற இந்து மதப் பண்டிகைகள் – அசுரர்களைக் கொன்றனர் தேவர்கள் என்று இனப் போராட்ட மறைவு வைத்த புனைவுகள்தானே!

அது செயற்கை (கற்பனை) – பொங்கல் விழா இயற்கையானது – உண்மையும்கூட!

திராவிடர் இயக்கம் இதனை மீட்டெடுத்து, திராவிடர்தம் திருவிழா என்று பகுத்தறிவுடன் விளக்கி செம்மாந்து நிற்கிறது!

ஆய்வு அறிஞர் பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்கள், மற்றொரு புதிய கோணத்தில் பொங்கல் விழாவை விளக்குகிறார்!

‘‘தமிழர்களின் தனிப்பெரும் திருவிழாவாகத் திகழ்வது தைப் பொங்கல் திருநாள். தேசிய இனத்துக்குரிய அடையாளம் ஒன்றைத் தமிழர்க்கு வழங்கும் திருவிழா இது. சமய எல்லைகளைக் கடந்த திருவிழாவாகவும் இது அமைகிறது.

பிறப்பு, இறப்புத் தீட்டுக்களால் பாதிக்கப்படாத திருவிழா இது என்பது பலர் அறியாத செய்தி. தைப் பொங்கல் நாளன்று ஒரு வீட்டில் இறப்பு நிகழ்ந்தாலும், மிக விரைவாக வீட்டைச் சுத்தம் செய்து, இறந்தவர் உடலை எடுத்துச் சென்றவுடன், தைப் பொங்கல் இடும் வழக்கத்தை நெல்லை மாவட்டத்தில் காணலாம். பொங்கல் திருநாளன்று, திருவிளக்கின் முன் படைக்கும் பொருள்களில் காய்கறிகளும், கிழங்கு வகைகளும் சிறப்பிடம் பெறுகின்றன. இவற்றுள் கிழங்கு வகைகள் (சேனை, சேம்பு, கருணை, சிறுகிழங்கு, பனங்கிழங்கு) பார்ப்பனர்களாலும், பெருங்கோவில்களாலும் காலங்காலமாக விலக்கப்பட்ட உணவு வகைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்சொன்ன இரண்டு செய்திகளாலும் தைப்பொங்கல் தமிழர்களின் திருவிழா என்பதையும், அது பார்ப்பனியப் பண்பாட்டிலிருந்து விலகி நிற்பது என்பதனையும் உணர்ந்து கொள்ளலாம்.’’

– தொ.ப.சி. ‘‘பண்பாட்டு அசைவுகள்’’, நூல் பக்கம் 56)

திராவிடர் இயக்கம் – அறிவு ஆசான் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி, திராவிடர் கழகம், இனமான தமிழ் உணர்வாளர்கள் பொங்கல் விழாவைப் பொலிவுடன் கொண்டாடுவதை – எப்படியெல்லாம் ஒரு பண்பாட்டுப் படையெடுப்பை விரட்டிடும் வீரம் செழிக்கும் விழா என்பதை – பூரித்து வாழ்த்துகிறார் நம் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.

‘‘பத்தன்று; நூறன்று; பன்னூ றன்று;

பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்

புத்தாண்டு, தைம்முதல்நாள், பொங்கல் நன்னாள்,

போற்றி விழாக் கொண்டாடி உன் நலத்தைச்

செத்தவரை மறந்தாலும், மறவா வண்ணம்

செந்தமிழால் வானிலெல்லாம் செதுக்கி வைத்தோம்!

பத்தரை மாற்றுத் தங்கம் ஒளி மாய்ந் தாலும்

பற்றுள்ளத்தில் உன் பழஞ்சீர் மங்கிற் றில்லை.’’

‘‘தமிழகமே, திராவிடமே, தைம்மு தல்நாள்

தன்னில் உன்னை வாயார வாழ்த்து கின்றேன்

அமிழ்தான பாற்பொங்கல் ஆர உண்டே

அதைஒக்கும் தமிழாலே வாழ்த்து கின்றேன்;

எமைஒப்பார் எவருள்ளார்? எம்மை வெல்வார்

இந்நிலத்தில் பிறந்ததில்லை; பிறப்ப தில்லை.

இமைப்போதும் பழிகொண்டு வாழ்ந்த தில்லை

எனும்உணர்வால் வாழ்த்துகின்றேன்; வாய்ப்பேச் சல்ல.”

- விடுதலை நாளேடு, 14.01.26

வியாழன், 27 ஜூன், 2024

தமிழை வளர்த்தனரா பார்ப்பனர்கள்?

 

சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்…


 ஜனவரி 1-15, 2024

தமிழை வளர்த்தனரா பார்ப்பனர்கள்?

நூல் குறிப்பு :
நூல் பெயர் : ‘வெறுக்கத்தக்கதே பிராமணீயம்!’
ஆசிரியர் : கி. வீரமணி
வெளியீடு : திராவிடர் கழக (இயக்க) வெளியீடு
பக்கங்கள் : 160
நன்கொடை
(குறைந்த அளவு) : ரூ.150/-

தமிழுக்காகத் தொண்டு செய்யும் பார்ப்பனர்களைப் பட்டியலிட்டுக் காட்டி  – இவர்களையா எதிர்ப்பது என்று தோள் தட்டுகிறார் திருவாளர் ‘சோ’ ராமசாமி.
பார்ப்பனர்கள் தமிழுக்குத் தொண்டு செய்ததைவிட துரோகம் செய்ததும், இழிவுபடுத்-தியதும் இடைச் செருகல் செய்ததும்தான் அதிகம்!

இவர்கள் பெரிதாக உயர்த்திப் பிடிக்கும் உ.வே.சாமிநாதய்யரே கூட பார்ப்பனர்கள் தமிழுக்குச் செய்து வரும் இழி செயலை வெளிப்படுத்தியிருக்கிறார் என்றால் பலருக்கும் ஆச்சரியமாகக்கூட இருக்கும். ஆனாலும் அவர் கூறியிருக்கிறார் என்பது மட்டுமே உண்மை.
பண்டித மணி மு.கதிரேசன் செட்டியார் அவர்களிடம் உ.வே.சாமிநாதய்யர்வாள் கூறிய இந்தச் செய்தி ‘செந்தமிழ்ச் செல்வி’ இதழில் (ஏப்ரல் 1974) வெளிவந்துள்ளது.
(சிலம்பு 47 – பரல் 9)

“தென் இந்தியாவிலுள்ள பிராமணர் ஒரு வகுப்பாராகவே இருந்து கொண்டு தமிழைத் தாழ்த்தி அடக்கியும், சமஸ்
கிருதத்தை ஆதரித்து உயர்த்தியும் வருகின்றனர் எனவும், சென்னை, அண்ணாமலை என்னும்
இரு பல்கலைக் கழகங்களிலும் பிராமணர் வலுத்த கட்சியாயிருந்து அத்துணை பலமாகத் தமிழுக்குத் தடை செய்து வருவதால், தமிழர்கள் தங்கள் தாய்
மொழியின் நிலையை உயர்த்துவதற்கு ஒன்றுமே செய்ய முடியாதவராயிருக்கின்றனர். பார்ப்பனர்களில் ஒரு சிலர் தமிழருக்கு நீங்காத கடும் வைரிகளாக இருக்கின்றனர்.”

_ இவ்வாறு சொன்னவர் தமிழ்த் தாத்தா என்று கூறப்படும் உ.வே.சா.தான். சாட்சியோ பண்டித மணி மு.கதிரேசன் செட்டியார்.
‘சோ’ கூட்டம் போற்றும் ஒரு பார்ப்பனரே பார்ப்பனர்கள் தமிழுக்குத் தீங்கு விளைவிப்பதுபற்றி விண்டுரைத்தபின் ‘சோ’க்களிடம் பதில் கூறிட என்ன இருக்கிறது?
மற்ற பார்ப்பனர்கள் தமிழுக்குத் துரோகம் செய்கின்றனர் என்று இவ்வாறு கூறும் அதே உ.வே.சாமிநாதய்யர்கூட சங்க இலக்கியங்களில் பார்ப்பனீயத்தை இடைச் செருகல் செய்யத் தயங்கவில்லை என்பதுதான் உண்மை.

புறநானூறு உட்பட்ட சங்க இலக்கியங்களில் இவர் புகுந்து விளையாடிய விவரங்களை பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் “ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்” என்னும் நூலில் விரிவாகவே ஆய்ந்து விவரித்துள்ளார். அதன் ஒரு பகுதி இதோ!

புறநானூற்றில் “ஆன்
முலையறுத்த” – என்று தொடங்கும் 34ஆம் பாட்டில் உள்ள அடிகளில் உள்ள ஒரு சொல்,
யாழ்ப்பாணத்துப் பழைய வெளியீடு ஒன்றில் ‘அறவோர்’ என்று வந்துள்ளது என்று உரையாசிரியர் சிலர் குறித்துள்ளனர். உ.வே.சா. பதிப்பில் அச்சொல் ‘பார்ப்
பார்’ என்று குறிக்கப் பெற்றுள்ளது. பாட வேறுபாடாகக்கூட அச்சொல் இவர் வெளியீட்டில் எழுதப் பெறவில்லை. ‘அறவோர்க்குக் கொடுமை செய்தல் கூடா’தெனும் அறங் கூறும் அவ்வடி, ‘பார்ப் பார்க்குக் கொடுமை செய்தல் கூடா’தென்பதாக இவர் பதிப்பில் காட்டப்பெற்றதும், அதற்குக் ‘கொலைகளில் கொடுமை சான்ற பார்ப்பனக் கொலை’ எனும் காஞ்சிப் புராண அடியை மேற்கோள் காட்டியிருப்பதும், இவ்வாறு பிற ஆரிய உரையாசிரியர்களால் காட்டப்பெற்ற கருத்து மேலும் மேலும் வலியுற வேண்டும் என்னும் உள்நோக்கம் இவருக்கு இருப்பதை நன்கு புலப்படுத்தும். மேலும் அதில் உள்ள 305ஆம் பாட்டில் உள்ள ‘தன்மை’ என்னும் ஒரு

சொல்லுக்கு ‘அவரவர் சாதி இயல்பு’ – _என்று விளக்கம் எழுதியுள்ளார்.
இனி, இவர் உரையுடன் வெளியிட்ட குறுந்தொகை ‘முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்’ எனும் 67ஆம் பாட்டின் உரை விளக்கத்தில் நச்சினார்க்கினியரின் (அவரும் ஒரு பார்ப்பனர்) தொல்காப்பிய உரையைச் சுட்டிக்காட்டி, ‘இப்பாட்டிற் கூறப்படும் உணவு வகையினால் நச்சினார்க்கினியர், பார்ப்பானையும், பார்ப்பனியையும் தலைவராகக் கூறியது எனக் கொண்டனர் போலும். பெரும்பாணாற்றுப் படையில் அந்தணர்மனையில் பாணர் பெறும் உணவைப் பற்றிக் கூறியிருக்கும் பகுதி இங்கே ஆராய்தற்குரியது’ என்றும்,

‘அறிவுடையீரே’ என்று தொடங்கும் குறுந்தொகை 206ஆம் பாட்டின் அடியில், ‘பார்ப்பனப் பாங்கனைப் பன்மையாற் கூறுவது மரபென்று தெரிகின்றது” என்றும்,
“ஆசில் தெருவில்” என்று தொடங்கும் 277ஆம் பாட்டின் சிறப்புரையில், ‘ஆசில்’ (குற்றமற்ற) தெருவென்றும் நாயில் (நாய் இல்லாத) வியன்கடை யென்றும் சிறப்பித்தமையால், இங்கே கூறியது அந்தணர் தெருவென்று ‘தோன்றுகின்றது’ என்றும் எழுதி, ‘பார்ப்பாரிற் கோழியும் நாயும் புகலின்னா’ எனும் (இன்னா 3) அடியையும், ‘அந்தணர் அமுதவுண்டி’ (கம்பர்) எனும் பாட்டடியையும் மேற்கோளாகக் காட்டியுள்ளார். இவர் இவ்வாறு காட்டுவதன் நோக்கம், கழகத் தமிழ் இலக்கியங்களில் ஆங்காங்கே ஆரியக் கருத்துகளை வலியுறுத்திக் காட்ட வேண்டுமென்னும் உட்கோளேயாகும்.

தமிழ் மொழிக்கு மிக உழைத்தவரெனச் சொல்லப் பெறும் உ.வே.சாமிநாதய்யர் தமிழ்மொழியின் தனிச் சிறப்பைப் பலவிடங்களில் தாழ்த்தியுள்ளது கவனிக்கத்தக்கது. கழக நூற்பதிப்புகளுக்காக அவர் ஊர் ஊராய் அலைந்ததும், அவற்றைத் திரட்டி ஆராய்ந்து அச்சிட்டதும் அவர் பெருமையை நன்றியுடனும் நினைக்கப் போதுமான அரிய வினைப்பாடுகள் எனின், அந்நூல்களிலெல்லாம் ஆரிய நச்சுக்கருத்துகளைத் தக்கவிடத்தில் மறவாது வைத்துப் போனதும் இவரின் இயல்பான இனவுணர்வை மறவாதிருக்கச் செய்யும் நினைவாகும். தமிழ்மொழி மேல் இவருக்கு ஒருவகைப் பற்று உளதென்றால், அஃது ஆரியத்தைக் கலப்பதற்கு ஏற்ற ஒரு கருவியாக உள்ளதெனும் மாற்றாந் தாய்ப் பாசமே என்க.

பரிமேலழகர், திருக்குறளை எவ்வாறு தம் இனக் கருத்துகளை ஊன்றுவதற்கு ஏற்ற ஒரு விளைநிலமாக எடுத்துக் கொண்டாரோ, அவ்வாறே உ.வே.சா. கழகப் பதிப்புகளைக் கைக்கொண்டார். இன்றியமையாத சொற்களையெல்லாம் வடமொழியாகவே இவர் பயின்றார். பண்புகள் அல்லது குணங்கள் என்று குறிப்பதால் நிறைவுறாத இவர், குணவிசேடங்கள் என்று குறிப்பதால் மன நிறைவுறுவார். மைசூர் நாடு என்று குறிக்காமல் மைஸுர் ஸமஸ்தானம் என்றே குறிப்பார். மேலும் அரசுக்கட்டில் என்பதைச் சிங்காதனம் என்றும், அமைச்சு என்பதை மந்திரி வேலை என்றும், விண்மீன் என்பதை நட்சத்திரம் என்றும், மருத்துவம் என்பதை வைத்தியம் என்றும், வள்ளல் என்பதை உபகாரி என்றும், இளம் பருவம் என்பதை இளம்பிராயம் என்றும், படிகள் என்பதை பிரதிகள் என்றும், முற்றூட்டு என்பதை ஸர்வமானியம் என்றும், கல்வெட்டு என்பதை சிலாசாசனம் என்றும், சான்று என்பதை ஆதாரம் என்றும், நகைகள் என்பதை ஆபரணங்கள் என்றும் கொடி என்பதை துவசம் என்றும், போர் என்பதை யுத்தம் என்றும், பயன்படுத்துதல் என்பதைப் பிரயோகங்கள் என்றும் பலவாறு வடசொற்களைப் பெய்து எழுதுவதில் இவர் பெருமகிழ்வுற்றதாகத் தெரிகிறது.

அவ்வாறு தமிழ்மொழியோடு வடசொற்களை பெய்து எழுதுவதால் வடமொழியாகிய சமஸ்கிருதத்தின் துணையின்றித் தமிழ் இயங்காது என்பது வலியுறுத்தம் பெறல் வேண்டும் என்பது இவர் கொள்கையாக இருக்கலாம். இவர் இதனை, ஒரு கொள்கையாக வலிந்தே கையாண்டுள்ளார் என்பதற்குப் புறநானூற்றுப் பதிப்பின் உரையின் இயல்பு என்னும் பகுதியில் ‘வடசொல்லாட்சி’ என்னும் தலைப்பிட்டு, அப்புறநானூற்று உரையாசிரியரின் உட்கோளை இவர் கண்டுகொண்டதாக எழுதும் பகுதியே அழுத்தமான சான்றாகும். அப்பகுதியில்,

“இவரது உரைநடை பெரும்பாலும் செந்தமிழ்ச் சொல் நிறைந்ததாக இருப்பினும் ஓரோரிடங்களில் சில தமிழ்ச் சொற்களுக்கு வட சொற்களைக் கொண்டு இவர் பொருள்
எழுதியுள்ளார். கடனென்பதற்குப் பிண்டோதக்-கிரியை யென்றும் மருந்தென்பதற்குப் பரிகாரம் என்றும், ஒளிருமென்பதற்குப் பாடஞ்செய்யும் என்றும் அறம் என்பதற்கு தர்மம் என்றும் பூண்டென்பதற்குப் பரித்தென்றும், ஓம்புதல் என்பதற்குப் பரிகரித்தல் என்றும் கூறும் இடங்களையும் இவற்றைப் போன்ற பிறவற்றையும் காண்க.” – _என்று எழுதியுள்ளார்.

புறநானூற்று உரையாசிரியர் கொண்டதாக இவர் குறிப்பிடும் அதே கொள்கையை இவரும் பின்பற்றியதற்குக் கரணியம் புறநானூற்று உரையாசிரியரையும் ஓர் ஆரியப் பார்ப்பனராகக் காட்டுதல் வேண்டும் என்பதோ, அவ்வாறு எழுதுவதுதான் சிறப்பு என்பதை உணர்த்தல் வேண்டும் என்பதோவாகத்தான் இருக்க வேண்டும். மேலும் பண்டைப் புலவர்களிலோ, முற்றூட்டுப் பெற்ற சிற்றரசர்களிலோ ஆரியர்கள் இருப்பாராயின் அவர்களை மிகவும் சிறந்தவர்களாகக் குறிப்பது இவரின் இனப்பற்றையும், ஓரம் போகிய தன்மையையும் நன்கு காட்டுகின்றது.

சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கவுணியன் விண்ணந்தாயன் என்னும் சிற்றரசனை இவன் “அந்தணத்திலகன்” என்றும் ‘கவுண்டின்னிய கோத்திரத்திற் பிறந்தான்’ என்றும் தேவையற்ற குறிப்புகளை எழுதி வைத்துள்ளார். பாடிய புலவர்கள் குறித்த ஏதேனும் ஒரு சிறு குறிப்பைக் கொண்டே சிலரை இவர் இனத்தவராகக் கொண்டு மகிழும் சிற்றின்ப உணர்ச்சியும் இவருக்கு இருந்திருக்கின்றது. கழகப் புலவர் எருக்காட்டூர்த் தாயங் கண்ணனாரை’ இவர் அந்தணரின் வேள்வித் தீயைப் பாராட்டிக் கூறியிருத்தலால் இவர் அந்தணராகக் கருதப்படுகிறார்’ என்றும் சுள்ளில் ஆத்திரையனார் என்னும் புலவரை ‘ஆத்திரையன்_ அத்திரி குலத்தில் பிறந்தவர்; இவரது பெயர் குடிப்பெயர்; இதனால் இவர் அந்தணராகக் கருதப்படுகிறார்’ என்றும் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனாரை ‘இவர் குலம் ஒருவகை வேதியர் குலமென்பது சிலர் கொள்கை’ என்றும் வேம்பாற்றூர்க்குமரனார் என்னும் புலவரைக் குறிப்பிடுங்கால், ‘வேம்பாற்றூர் என்பது மதுரைக்கு கிழக்கே உள்ள ஓர் ஊர்; வேம்பத்தூரென இக்காலத்து வழங்கும்; குலசேகரச் சதுர்வேதி மங்கலமென்றும் இதனுக்கு ஒரு பெயருண்டென்று சிலாசானத்தால் தெரிகிறது”என்னும் குறிப்பெழுதி, ‘கடைச் சங்க புலவர் காலந்தொடங்கி இன்றுவரை அந்தணர்களே தமிழ்ப் புலவர்களாக இவ்வூரில் விளங்கியிருத்தல் கண்கூடாதலாலும், பெயராலும் இவர் அந்தணராகக் கருதப்படுகிறார்’ என்றும் இன்னும் பலவாறும் இவர் குறிப்புகளைத் தம் இனம்சார்பாக எழுதிக் கொள்வது வழக்கம்.

மேலும், மதுரை வேளாசான் என்னும் புலவர் ஒருவர் எழுதிய புறப்பாடற் குறிப்பைக் கொண்டு “ஒரு வேந்தனிடமிருந்து மற்றொரு வேந்தன்பால் அந்தணன் தூது செல்லுதற்குரியவன் என்பது இவர் பாடலால் தெரிய வருகின்றது” என்று தம் இனத்திற்கு அரசர்கள் கொடுத்ததும் கொடுக்க வேண்டியதுமான ஏற்றத்தையும் மன வேட்கையையும் இவர் வெளிப்படுத்தியிருப்பதைப் பார்த்தால், கழக நூற்பதிப்பு என்னும் கல் தரையில் இவர் தம் இனப் பதிவை எத்துணை ஆழமாகச் செதுக்கி வைத்துள்ளார் என்பது தெற்றெனப் புலப்படும்.

– பாவலரேறு அவர்களின் இத்தகைய ஆதாரப்பூர்வமான ஆய்வுக்கு ‘சோ’விடமிருந்து தக்க மறுப்பு உண்டா?
உ.வே.சா.வைப் பற்றி பார்ப்பனர்கள் விளம்பரப்படுத்துவது குறித்து தந்தை பெரியார் அவர்கள் ‘குடிஅரசு’ (10.3.1935 பக்கம் 3, 4) தலையங்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள்.

“பார்ப்பனர்கள், டாக்டர் சாமிநாதய்யர் விஷயத்தில் இவ்வளவு பிரயாசை எடுத்துக் கொண்டதன் அந்தரங்க நோக்கம் என்ன என்பதை பார்ப்பனரல்லாதார் நன்றாகத் தெரிந்து கொள்ளும்படி வெளிப்படுத்த விரும்பியே இவ்விஷயங்களை எழுத முன் வந்தோம்.
உண்மையில் இந்தப் பார்ப்பனர்கள் தமிழ் பாஷையின் மேலும், தமிழ் அபிவிருத்தியிலும் ஆசையுடையவர்களானால் இந்த டாக்டர் அய்யர் அவர்களை இன்று பார்ப்பனர்கள் கவுரவம் பண்ணுவதற்குக் காரணமாக இருந்த, அவருடைய ஆசிரியரான காலஞ்சென்ற மகா வித்துவான். மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களைப் பற்றியோ, கும்பகோணம் காலேஜில் தமிழாசிரியராக இருந்த காலஞ்சென்ற தியாகராஜச் செட்டியார் அவர்களைப் பற்றியோ குறிப்பிடாமல் இருந்திருக்க முடியாது.

ஆனால் இவர்களைப் பற்றிப் பொது ஜனங்கள் தெரிந்து கொள்ளும்படி செய்யவோ இவர்கள் அய்யர் அவர்களுக்கு செய்த நன்றியை எடுத்துக்காட்டவோ எந்தப் பார்ப்பனரும், எந்தப் பார்ப்பனப் பத்திரிகையும் முன்வரவில்லை.

அன்றியும் தமிழைப் படிப்பாரும், ஆதரிப்பாரும், படிப்போர்க்கு உதவியளிப்பாரும் இல்லாதிருந்த காலத்தில் மதுரையில் தமிழ்ச் சங்கத்தை ஏற்படுத்தி, அதன் பயனையும் பெரும்பாலும் பார்ப்பனர்களே அடையும்படி செய்து அச்சங்கத்தின் வளர்ச்சிக்காகவே சாகும் வரையிலும் உழைத்துக் காலஞ்சென்ற பாண்டித்துரைத் தேவர் அவர்களைப் பற்றி மனதினாலாவது இந்தப் பார்ப்பனர்கள் நினைத்ததுண்டா?

தொல்காப்பியம் போன்ற தமிழ் இலக்கணங்களையும், மற்றும் பல இலக்கியங்களையும் மிகுந்த பிரயாசையுடன் தேடி வெளியிட்ட காலஞ்சென்ற சி.வை.தாமோதரம் பிள்ளை அவர்களைப் பற்றி இந்தப் பார்ப்பனர்கள் ஒரு வார்த்தையேனும் பேசுவதுண்டா?

தற்பொழுது கரந்தைத் தமிழ்ச் சங்கத்தை வைத்து நிர்வகித்து பெரும்பாலும் தனது வாழ்நாளை அதற்காகவே அர்ப்பணம் பண்ணிவரும் தோழர் உமாகேசுவரன் பிள்ளை அவர்களின் முயற்சிகளுக்கு இந்தப் பார்ப்பனர்கள் துணை செய்யாவிட்டாலும்கூட பாதகஞ்செய்யாமல் இருக்க வேண்டும் என்றாவது நினைக்கிறது உண்டா?

உண்மையில் பார்ப்பனர்களுக்குக் கொஞ்சமாவது தமிழ் மொழிக்கும், தமிழ் அபிவிருத்திக்குப் பாடுபட்டவர்களுக்கும், பாடுபடுகின்றவர்களுக்கும் பெருமை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதா என்பதை இதுவரையிலும் சொல்லி வந்ததைக்கொண்டும், மேலே நாம் எடுத்துக்காட்டியவர்களின் ஊழியத்தைச் சிறிதாவது பாராட்டுவதற்கு முயற்சியெடுக்காததைக் கொண்டும் அறிந்திருக்கலாம்!’’ என்று தந்தை பெரியார் குறிப்பிட்டுள்ளார்கள்.
1901இல் மதுரை தமிழ்ச்சங்கம் அமைத்த ஞானியாரடிகள் பிராமணன் என்று சாதிக்கும் அளவுக்கு ‘சோ’வின் ஆத்திரம் அறிவை மழுக்கி இருக்கிறது! ஆதாரங்களைத் தெரிந்து கொள்வதிலும், வெளியிடுவதிலும் அவருக்குள்ள பொறுப்பற்ற தன்மையைத்தான் இது வெளிப்படுத்தும்.

அந்த ஞானியாரடிகள் வேறு யாருமல்லர். தந்தை பெரியாரால் துவக்கப்பட்ட ‘குடிஅரசு’ இதழை (2.5.1925) முதன் முதலில் துவக்கி வைத்தவர் அவர்தான்.
அவர் பார்ப்பனரல்ல_ – வீர சைவ மரபினர் என்று ஆதாரத்துடன் ‘துக்ளக்’குக்கு ஞானியாரடிகள் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் திரு.அ.நா.பாலகிருஷ்ணன் அவர்களால் எழுதப்பட்ட கடிதத்தை ‘துக்ளக்’ வெளியிடவில்லை (ஆதாரம்: ‘சங்கொலி’, 16.2.2001 பக்கம் 8).
‘சோ’வின் அறிவு நாணயத்திற்கு இது ஒன்று போதாதா?

“திரு” என்ற அழகிய தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்துவதில் கூட உ.வே.சா., இரா.இராகவய்யங்கார்கள் போட்ட முட்டுக்கட்டை கொஞ்ச நஞ்சமல்ல! இதுபற்றி பேராசிரியர் முனைவர் சாரதா நம்பி ஆரூரான் அவர்கள் “தனித் தமிழ் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும்” என்ற நூலிலிருந்து “குறளீயம்” இதழில் (1.11.2000) வெளிப்படுத்தியுள்ளார். அதன் விவரம் இதோ!

‘திரு’வை எதிர்த்து தமிழறிஞர் இரா.இராகவய்யங்கார், உ.வே.சாமிநாதய்யர் முதலானோர் எழுதினர். இரா.இராகவய்யங்கார் ‘சுதேசமித்திரன்’ இதழில் ‘திரு’ என்ற சொல் ‘ஸ்ரீ’ என்பதுபோலச் செவிக்கு இன்பம் பயவாது என்றும் ‘திரு’ என்னும் அடையாளமும் உதவாது என்றும் மறுத்தெழுதினார்.
‘திரு” என்பதே தொன்று தொட்ட வழக்கு என நாவலர் ச.சோமசுந்தர பாரதியாரும் ‘மங்கல மொழி ‘திரு’ என பண்டிதமணி கதிரேசஞ்செட்டியாரும் ‘திருவின் பெருமை என’ நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டாரும் எழுதினர். இத்‘திரு’ போராட்டத்தில் தேவநேயப் பாவாணரும் ஈடுபட்டுத் ‘திரு’வின் பழைமையையும் ‘ஸ்ரீ’யின் பிற்பட்ட வரலாற்றையும் ‘திரு’வின் வேர் மூலத்தையும் விளக்கித் ‘திரு’ என்னும் சொல் தென் சொல்லே என்ற கட்டுரை வரைந்தார் என்று “தனித் தமிழ் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும்” என்ற நூலில் கூறப்பட்டுள்ளது.

தமிழில் உள்ள ஒரு சொல்லைப் பயன்படுத்துவதற்குக்கூட தொல்லை கொடுத்தவர்கள்தான் தமிழுக்குத் தொண்டு செய்தவர்களா?
உலகம் போற்றும் உயர் கருத்துகளை வாரி வழங்கிய திருவள்ளுவரைக் கூட இவாள் கொச்சைப்படுத்தாமல் விட்டது கிடையாதே!
உ.வே.சா. அய்யர் The Kural or the Maxims of Thiruvalluvar (1916) என்று ஆங்கிலத்தில் திருக்குறளை மொழிபெயர்த்து இருக்கிறார். அதன் முன்னுரையில்,

…Tradition declares that he was the child of a Brahman father named Bhaghavan and a Pariah mother Adi who had been brought up by another Brahman and given in marriage to Bhaghavan. Six other children are named as the issue of this union, all of whom have debbled in poetry.

“திருவள்ளுவரின் தந்தையார் பகவன் என்ற பார்ப்பனராவார். இவரது தாயார் ஆதி என்கிற பறைச்சி. ஆதியை இன்னொரு பார்ப்பனர் அழைத்து வந்து பகவனுக்கு மணம் முடித்து வைத்தார். ஆதி-_ – பகவன் கூட்டுறவால் திருவள்ளுவரன்றி ஆறு குழந்தைகள் பிறந்தனர். அக்குழந்தைகளுக்குப் பெயர்களும் சூட்டப்பட்டன என்று மரபுவழிச் செய்தியாக சொல்லப்படுவதோடன்றி இதனைக் கவிதையாகவும் எழுதி வைத்துள்ளனர்” என்று எழுதியுள்ளார். ஒரு பாடலில் இக்கருத்தை கபிலனே சொல்லுவதாக அமைந்து இருக்கிறது. அதில்கூட ‘அந்தணர் வளர்க்க யானும் வளர்ந்தேன்’ என்று கடைசி வரி முடிக்கப்பட்டுள்ளது. மேலும் அதே முன்னுரையில்,

“Thiruvalluvar does not treat of the fourth objective separately and Hindus say that he has submitted himself to the orthodox rule that none but a Brahman should be a teacher of spritual truth to mankind”.
அதாவது, “திருவள்ளுவர் நான்காவதான வீட்டுப் பேற்றைப் பற்றி தனியாக ஏதும் கூறவில்லை. மனித குலத்திற்கு ஆன்மிக உண்மைகளைப் பார்ப்பனரைத் தவிர வேறு எவரும் போதிக்கக் கூடாது என்ற பழங்கால வைதிக (வேத) விதிகளுக்கு திருவள்ளுவர் தம்மை உட்படுத்திக் கொண்டார் என்று இந்துக்கள் கூறுகிறார்கள்” என்று எழுதினார்.

(க.திருநாவுக்கரசு அவர்களின் திருக்குறளும்
– திராவிடர் இயக்கமும் – ‘சங்கொலி’, 14.6.1996)

தமிழினத்தின் ஒரு தலைசிறந்த சிந்தனை-வாதியைப் பார்ப்பானுக்குப் பிறந்தவன் என்பதும், ஆன்மிகம் பற்றிப் பேசும் தகுதி ஒரு சூத்திரத் தமிழனுக்குக் கிடையாது; அது பார்ப்பனர்கள் சம்பந்தப்பட்டது என்பதும் பார்ப்பனத் திமிர் அல்லாமல் வேறு என்ன?

பெரிய படிப்பாளி, பன்மொழி அறிஞர் என்று பீற்றிக் கொள்ளும் ஒரு பார்ப்பனரின் தகுதியே இவ்வளவு தரைமட்டமாக இருக்கிறதே – இதற்குச் ‘சோ’வின் பதில் என்ன?

அறிவாளி என்றாலே அவன் பார்ப்பானா-கத்தான் இருக்க முடியும் – அல்லது பார்ப்பானுக்குப் பிறந்தவனாக இருக்க முடியும் என்பதைச் சகித்துக் கொள்ள முடியுமா? இத்தகைய கூட்டத்தை வெறுக்காமல் தான் இருக்க முடியுமா?

தமிழுக்காகப் பாடுபட்டதாகப் பாவனை செய்யும் இந்தப் பார்ப்பனர்களை ஒரு இடத்தில் தட்டினால், அவர்களின் உள்ளுணர்வு என்ன என்பது சட்டென்று புரிந்துவிடும். அதுதான் சமஸ்கிருதம் பற்றியது. எந்தப் பைத்தியக்காரப் பார்ப்பானைக் கேட்டாலும் தமிழை விட சமஸ்கிருதம் தான் உயர்ந்தது என்று கூறுவான்.
பார்ப்பான் வீட்டுப் பெயர்களில் தப்பித் தவறிக்கூட ஒரு தமிழ்ப் பெயரை மருந்துக்கும் காண முடியுமா?

இவ்வளவு பேசும் பார்ப்பனர்கள் தமிழ்நாட்டில் தமிழன் கட்டிய கோயில்களில் தமிழ்மொழி வழிபாட்டு மொழியாக இருக்க வேண்டும் என்று சொல்லிப் பாருங்கள்_ முகம் எண்கோணமாக மாறும்_ – மிளகாயைக் கடித்ததுபோல எரிந்து விழுவார்கள். அதனை எதிர்த்து நீதிமன்றம் போவார்கள்.
ஏன்? இதே ‘சோ’ தமிழ் வழிபாட்டு மொழிபற்றி என்ன எழுதினார்?

“மொழி ஆர்வமா? மத துவேஷமா?” என்று தலைப்பிட்டு தலையங்கமே தீட்டினாரே ‘துக்ளக்’கில் (18.11.1998).
“நம்மைவிட மிக மிகப் பெரியோர்கள்_ நம்மால் கனவிலும் எட்டிப் பிடிக்க முடியாத உன்னதமான நிலையில் உள்ளவர்கள் _ புருஷோத்தமர்கள் இறைவனைத் துதித்து இயற்றிய பாடல்களும், கோத்திரங்களும் பெரும் சக்தி வாய்ந்தவை என்ற நம்பிக்கை ஹிந்துக்களுக்கு உண்டு. ரிஷிகள், துறவிகள், நாயன்மார்கள், ஆழ்வார்கள் போன்ற புண்ணிய சீலர்கள் இயற்றிய துதிகளில் அடங்கியிருக்கும் வார்த்தைகளின் பொருளுக்கு மட்டுமல்ல அந்த சொற்களின் சப்தத்திற்கும்கூட சக்தி உண்டு என்பது நம்பிக்கை. ஆகையால் அப்பெரியோர்களினால் செய்யப்பட்ட துதிகளின் மொழி பெயர்ப்பு, அவற்றின் பொருளைப் புரிந்து கொள்ள உதவுமே தவிர, அவற்றின் புனித சக்தியைப் பாதுகாக்க உதவாது. இதற்குக் காரணம் மொழிகளின் மேன்மையல்ல, ஒலியின் சக்தி**
என்று எழுதியவர்தான் இந்த சோ. இதில் உள்ள ‘சாமர்த்தியம்’ என்ன தெரியுமா?

தாய்மொழி, தமிழ் மொழி என்றெல்லாம் சும்மா பேத்தாதீர்கள் _ – சமஸ்கிருத மொழியில் உள்ள ஒலிக்குத்தான் சக்தி உண்டு _ அதனால்தான் அதனை வழிபாட்டு மொழியாக வைத்துக் கொண்டுள்ளோம்_ – தமிழ் மொழியின் ஒலிக்கு அந்தச் சக்தியெல்லாம் கிடையாது என்பதைச் சுற்றி வளைத்து சாமர்த்தியமாக எழுதுகிறார்.
இன்னும் ஒருபடி மேலே சென்று அது இந்துக்களின் நம்பிக்கையாம்.

விவாதம் கிவாதம் என்று அண்டத்தையே புரட்டுவது போலப் பேசும், எழுதும் இவர் அறிவு ரீதியாக நேர்மையாக விவாதம் புரிய முடியாத ஓர் இடத்தில் நம்பிக்கை என்னும் ஆமை ஓட்டுக்குள் ஓடிப் பதுங்கி விட்டார்.

ஒலிக்குத்தான் சக்தி என்றால், கோயிலுக்குள் குந்த வைக்கப்பட்டுள்ள அந்தக் கடவுளுக்குச் சக்தி இல்லையா என்று கேட்கத் தோன்றலாம்; ஒலியின் மூலம்தான் ஒரு கடவுள் திருப்தி அடைவாரா? அவர் என்ன வெறுப்பு _விருப்பு அற்றவரா? இந்தக் கேள்விகளைக் கேட்கக் கூடாது!
அவர்தான் ஒரே வார்த்தையில் விவாதத்தை முடித்து விட்டாரே_ – “நம்பிக்கை.”

இனிமேல் சோவிடம் உரையாடல் நடத்துபவர்களும், விவாதம் செய்பவர்களும் ‘அது என் நம்பிக்கை!’ என்று கூறி அவர் வாயை அடைத்துவிடலாம். நம்பிக்கை என்று சொல்லிவிட்டால், அதற்கு மேல் தான் விவாதத்துக்கும் அறிவுக்கும் இடம் இருக்க முடியாதே! சோ எப்படிப்பட்ட விவாதப்புலி_ அறிவாளி என்பதற்கு இதுதான் அளவுகோல்!

சோவாக இருந்தாலும் சரி, வேறு எந்தப் பார்ப்பனராக இருந்தாலும் சரி அவர்கள் பற்றெல்லாம் சமஸ்கிருதத்தின் மீதுதான்_ – தமிழ் மீது அல்ல! அதே நேரத்தில் பிழைப்புக்காக மட்டும் அவர்களுக்குத் தமிழ் வேண்டும்.

சிதம்பரம் நடராசர் கோயிலில் ஆறுமுகசாமி என்ற அறுபது வயது முதியவர் திருவாசகம் பாடியதற்காக, கோயில் தீட்சதர் பார்ப்பனர்கள், முதியவர் என்று கூடப் பாராமல் அடித்து உதைத்தார்களே_ – (‘கல்கி’, 4.6.2000).

அது பற்றி ஒரு வரி கண்டித்து எழுதியதுண்டா இந்த சோ?
சோவின் எழுத்துகளில் சாமர்த்தியம் இருக்கலாம்_ – ஆனால் உண்மை எதுவும் இல்லை என்பது மட்டும் உண்மை! அதன் உள்ளீடு எல்லாம் எப்படியும்

பார்ப்பனீயத்தை உயர்த்திப் பிடித்துக் காட்ட வேண்டும் என்பதே! ♦

சனி, 10 நவம்பர், 2018

குறளைக் கீழ்மைப்படுத்துவது நாகசாமி என்ற தனி மனிதனா? - 3

***கலி.பூங்குன்றன்***
மனுதர்மத்தின் சாரம் திருக்குறள் (Tirukkural an Abridgement of Sastras) என்று பார்ப்பன நாகசாமியால் எழுதப்பட்ட ஆங்கில நூலுக்கான மறுப்புக் கூட்டத்தில் திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவருக்கே உரித்தான முறையில் 'நச்சு நச்சு' என்று கொடுத்தார் சாட்டையடி!
வரவேற்புரையாற்றிய திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் குறிப்பிட்ட ஒரு தகவலைத் தெடர்ந்து நாகசாமியை எம்.ஜி.ஆர். மன்னித்தாலும் நாங்கள் மன்னிக்க மாட்டோம் என்றார்.
திராவிடர் கழகத் துணைத் தலைவர் அப்படி என்ன தான் கூறினார்?
எம்.ஜி.ஆர். தொடக்கத்தில் பகுத்தறிவுவாதியாகத்தான் நடந்து கொண்டார். அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டபொழுது பலகீனமானார். பார்ப்பன வட்டாரம் அவரைச் சூழ்ந்து கொண்டுவிட்டது. காஞ்சிப் பெரியவாளை சந்தித்து விட்டு வரலாம் என்று 'ஆனந்த விகடன்' மணியன் சொல்ல, முதல் அமைச்சர் எம்.ஜி.ஆரும் கிளம்பி விட்டார்.
அங்குப் போய் சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியைச் சந்தித்தனர். உடல் நலனை விசாரித்துக் கொண்டனர்.
அப்பொழுது சங்கராச்சாரியார் முதல் அமைச்சரிடம் மூன்று வேண்டுகோள்களை வைத்தார்.
ஒன்று - பல கோயில்களில் ஒருவேளை விளக்குக் கூட ஏற்ற முடியாத நிலை - அதற்கு வழி செய்ய வேண்டும்.
கூட்டத்தில் முக்கிய அறிவிப்பு
நாகசாமியின் திருக்குறள் பற்றிய நூலுக்கு மறுப்பு நூல் ஒன்றை முனைவர் மறைமலை இலக்குவன் எழுதுவார் என்று கூட்டத்தில் அறிவிப்பு.
இரண்டாவது - பழம்பெரும் கோயில்கள் எல்லாம் இடிந்து கிடக்கின்றன. அவற்றையெல்லாம் புதுப்பித்து கும்பாபிசேகம் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டு மூன்றாவதைச் சொல்லுவதற்கு கொஞ்ச நேரம் எடுத்துக் கொண்டார். சிறிது நேரங்கழித்து திருவாய்த் திறந்தார், "நாகசாமியை மன்னிச்சிடுங்கோ!" என்றதும், முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். அதிர்ந்து போனார்.
தொல்லியல் துறை இயக்குநரான நாகசாமி தொல்லியல் துறையின் கண்டுப்பிடிப்புகள், பெறும் புதிய தகவல்களை முதலில் அரசுக்குத் தெரிவிக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல் தானே ஏடுகளுக்குப் பேட்டி கொடுத்து வந்தார். இந்த ஒழுங்கு மீறலுக்குத் தான் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதைத்தான் மன்னிக்க வேண்டும் என்று சங்கராச்சாரியார் சொன்னார் முதல் அமைச்சரிடம்.
(சங்கரமடம் எப்படியெல்லாம் அவாளுக்காக வேலை செய்கிறது பார்த்தீர்களா?)
சற்றுத் தயங்கிய முதல் அமைச்சர் சரி என்று தலையாட்டினார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் (ஆதாரம்: குமுதம் லைஃப், 27.12.2017 பக். 180, 182) சொன்னதைத் தொடர்ந்துதான் பேராசிரியர் சுப.வீ. அவர்கள் நாகசாமியை எம்.ஜி.ஆர். மன்னித்தாலும் நாங்கள் மன்னிக்க முடியாது என்றார்.
நாகசாமி என்ற தனி மனிதன் எழுதிய நூலாக இதனைக் கருத முடியாது. இவர் பின்னணியில் ஒரு வலைப் பின்னல் இருக்கிறது. இதே நாகசாமி 2012இல் Mirror of Tamil and Sanskrit எனும் நூலினை எழுதினார். அதில் பிராமி என்பது பிராமணர்களால் கண்டுபிடிக்கப்பட்டது என்று எழுதினார். பிராமி என்பதால் பிராமணர்களால் கண்டுபிடிக் கப்பட்டது என்பது நல்ல நகைச்சுவை.
5000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியது சமஸ்கிருதம். அதிலிருந்து 2000 ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் திருகுறளை எழுதினாராம். என்ன ஆதாரம் என்றெல்லாம் கேட்டு விடக் கூடாது அவர்களிடம்.
அடுத்து அதே ஆண்டு இன்னொரு நூலையும் எழுதினார். "Tamil Nadu A Land of Vedas" என்பதாகும் அது. தமிழ்நாடு வேத நாடா? (அப்படி என்றால் வேதங்கள் தமிழில் தானே இருக்க வேண்டும்).
திருக்குறளுக்கு நாகசாமி என்ன விளக்கம் எழுதுகிறார்? அறிவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது - என்பது குறள்.
அதற்கு நாகசாமியின் விளக்கம் என்ன தெரியுமா? "பார்ப்பானின் காலைத் தொட்டு வணங்காதவர் சொர்க்கம் போக மாட்டார்கள்" என்று எழுதியுள்ளார்.
அந்தணர் என்றால் பார்ப்பனரா? அந்தணர் என்பவர் யார் என்பதற்குத் திருவள்ளுவர் அழகாக விளக்கம் சொல்லியுள்ளாரே?
அந்தணர் என்போர் அறவோர் மற்று எவ்வுயிர்க்கும்
செந்தண்மைப் பூண் டொழுகலான்.
என்பது தான் அந்தணருக்கு திருவள்ளுவர் சொல்லும்  விளக்கமாகும்.
நாகசாமியின் இந்த நூல் விமர்ச்சிக்கப்படுவதைவிட கொளுத்தப்பட வேண்டும் (பலத்த கர ஒலி).
எல்லாக் குறளுக்கும் விளக்கம் எழுதிய நாகசாமி ஒரே ஒரு குறளுக்கு மட்டும் விளக்கம் எழுதவில்லை.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்
என்ற குறளுக்கு அவரால் ஒன்றும் எழுத முடியவில்லை.
ஒரு செய்தி: திருநாவலூரில் இன்று (7.11.2018) காலை சுந்தரர் கோயில் குடமுழுக்கு தமிழில் நடத்தப்படும் என்று அறிவிப்பு. அதனை எதிர்த்து நீதிமன்றம் செல்லுகிறார்கள். நீதிபதி மகாதேவன் கேட்டார். சுந்தரர் தேவாரத்தை எந்த மொழியில் பாடினார்? 'பித்தா பிறை சூடிய பெருமானே' என்று சுந்தரர் தமிழில் தானே பாடினார் என்று நீதிபதி கேள்விக்குப் பதில் இல்லை.
இன்று காலை தமிழில் அங்கு குடமுழுக்கு நடைபெற்று விட்டது என்று சுப.வீ. சொன்னபோது - ஆரவாரம் மக்களிடையே!
(கரூர் அருகே உள்ள திருமுக்கூடலூர் சிவன் கோயில் குடமுழுக்கு 9.9.2002இல் தமிழில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து காஞ்சி சங்கராச்சாரியார் கூறினார். "நாத்திகம் பேசும் கருணாநிதிக்கு இதில் தலையிட உரிமை இல்லை" என்றார். குடமுழுக்கு செய்த பின்னர் கோயில் நடை இழுத்துச் சாத்தப்பட்டு சுத்திகரிப்பு நடந்தது என்பதை நினைவூட்டுகிறோம்.)
இதில் வேதனை என்னவென்றால் தருமபுரம், திருப்பனந்தாள், திருவாவடுதுறை ஆதினகர்த்தாக்கள் தமிழில் குடமுழுக்கு ஆகமத்துக்கு விரோதம் என்பார்கள்.
("சைவமும் தமிழும் தழைத்தோங்குக" என்ற வாசகங்கள் இந்த ஆதினங்களின் வளாகங்களுக்குள் காணப்படும்).
இந்தியப் பண்பாட்டுக்குரிய நூல் திருக்குறள் என்று எழுதுகிறாரே திருவாளர் நாகசாமி.
இந்தியா முழுவதும் ஒரே பண்பாடா இருக்கிறது? என்ற வினாவை சுப.வீ. தொடுத்தபோது கரஒலி தான்.
கடைசியாக என்ன சொல்லி நூலை முடிக்கிறார் தெரியுமா?
திருகுறள் தானாக எழுதப்பட்டதா? தழுவி எழுதப் பட்டதா? என்பதை எதிர்காலம் முடிவு செய்யும் என்கிறார். அப்படி யென்றால் எதற்கு இப்படியொரு நூல் என்ற சுப.வீ.யின் கேள்வி அர்த்தமுள்ளது.
பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார்
இவர் உரை ஓர் ஆய்வுரையாக அமைந்திருந்தது என்றே சொல்லவேண்டும். நாகசாமி நூலுக்கு ஒரு மறுப்பு நூல் எழுத வேண்டும் என்று தாய் உள்ளக் கனிவோடு ஆசிரியர் பெருந்தகை எனக்கு அன்புக் கட்டளை இட் டுள்ளார் - அந்தப் பணியை விரைவில் முடிப்பேன் என்று சொன்னபோது மிகப் பெரிய வரவேற்பு பார்வையாளர்கள் மத்தியில்.
ஆரியப் பண்பாட்டுக்கு எதிர்ப்புத் தொடங்கிய காலந்தொட்டு அவ்வப்பொழுது எதிர்ப்பு முனைகள் இருந்தபோதிலும் தந்தை பெரியார்தான் அதன் குடலை உருவிக் காயப் போட்டார்.
- நீதிக்கட்சி ஆட்சி பெரியார் வழிகாட்ட காமராசர் ஆட்சி எல்லாம் பெரியார் கொள்கை வழி ஆட்சிகள்தான். வடக்கே வி.பி.சிங் பிரதமராக இருந்து பெரியார் கொள்கையைப் போற்றினார்.
தர்ம சாத்திரங்களை எழுதியவர்கள் பார்ப்பனர்கள். அற நூல்கள் தமிழருக்குரியவை. சமஸ்கிருதத்தில் தர்க்க நூல்கள் உண்டு. அவை எல்லாம் மறைக்கப்பட்டு - தர்ம சாஸ்திரங்கள் என்னும் வருணதர்மத்தை வலியுறுத்தும் நூல்களை தூக்கிக் பிடிக்கக் கூடாது என்றார் பேராசிரியர் மறைமலை இலக்குவனார்.
எழுத்தாளர் பழ.கருப்பையா
எழுத்தாளர் பழ. கருப்பையா அவர்களின் பேச்சு ஒரே கலகலப்புதான். பல வரலாற்றுத் தகவல்களைக் கூறினார்.
2100 ஆண்களுக்கு முன் சிந்து சமவெளி நாகரிகம் தொடர்ந்து பெரியார் காலம் வரை ஆரிய எதிர்ப்புத் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது! பெரியார் காலத் தோடு இந்த இனப் போர் முடியும் என்று எதிர்பார்த்தோம்.  ஆசிரியர் வீரமணி காலத்திலும் தொடர்ந்து கொண்டு தானிருக்கிறது.
தமிழனுக்கு மெய்யியல் இல்லையாம். அதைச் சரி செய்ய வள்ளுவர் வேதங்களிலிருந்து கடன் பெற்று எழுதினாராம்.
இன்றைக்கு நாகசாமிகள் எழுதுகிறார்கள் என்றால் இதற்கு மூலம் பரிமேலழகர்தான். பரிமேலழகர் மிகச் சிறந்த உரை ஆசிரியர்தான். ஆனாலும் பார்ப்பனத் தனத்துடன் பல இடங்களில் நடந்து கொண்டுள்ளார்.
'அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும் விலக்கியன ஒழித்தலுமாம்' என்று பரிமேலழகர் எழுதுகிறார் என்று பழ.கருப்பையா குறிப்பிட்டார்.
ஆரியம் வேறு, திராவிடம் வேறு - இரண்டும் இரு வேறு பண்பாட்டு நிலைப்பாடுகள்.
உயிர்க்கொலை புரிந்து யாகம் நடத்துவது ஆரியம்.
ஆனால் திருவள்ளுவர் நமது தமிழ்ப் பண்பாட்டைச் சேர்ந்தவர் ஆதலால் என்ன பாடுகிறார்?
அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்சொரிந்து உண்ணாமை நன்று.
என்று ஆரியத்துக்கு எதிரான கருத்தை முன் வைக்கிறார் வள்ளுவர்.
(பெரும்புலவர் சீனிவாசன் பல குறள்களைச் சுட்டிக்காட்டி, பரிமேலழகர் தவறான உரையை எழுதியுள்ளதாகக் குறிப்பிடுகிறார். வடமொழி நூல்களைத் தழுவி எழுதியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அந்தக் குறள்களின் எண்ணிக்கையையும் பெரும்புலவர் சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார். 434, 501, 648, 924, 993, காமத்துப் பால், அவதாரிகை 1330 ஆக ஏழு இடங்கள்.
சில இடங்களில் அரசன் புரோகிதர்களைத் துணையாகக் கொள்ள வேண்டும் என பரிமேலழகர் எழுதுகிறார். புரோகிதர்கள் தெய்வத்தால் வரும் குற்றங்களைத் தீர்த்து வைப்பார்களாம். 425, 45, 501 ஆகிய குறள்களுக்கு பரிமேலழகர் இவ்வாறு பொருள் கூறுவதாக புலவர் சீனிவாசன் அவர்கள் குறிப்பிட்டுள்ளது இவ்விடத்தில் சுட்டிக் காட்டத் தகுந்தது.
ஆரிய - திராவிட வேறுபாட்டைச் சுட்டிக் காட்டுவதற்கு உழவுத் தொழிலைப்பற்றி மனுதர்மம் கூறியதையும், திருவள்ளுவர் கூறியதையும் ஒப்பிட்டு காட்டினார் எழுத்தாளர் பழ.கருப்பையா.
பயிர்த் தொழிலைப் பற்றி மனுதர்மம் என்ன சொல்லுகிறது?
"சிலர் பயிரிடுதலை நல்ல தொழிலென்று நினைக் கிறார்கள். அந்தப் பிழைப்புப் பெரியோர்களால் நிந்திக்கப் பட்டது - ஏனெனில் இரும்பை முகத்திலே உடைய கலப்பையும், மண் வெட்டியும் பூமியையும், பூமியிலுண்டான பல பல ஜெந்துக்களையும் வெட்டுகிறதல்லவா!"
மனு அத்தியாயம் 10 சுலோகம் 841
இது ஆரியத் தத்துவம் - கலாச்சாரம்; ஆனால் திருவள்ளுவர் என்ன சொல்லுகிறார்?
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர்
இது திராவிடத் தத்துவம்.
இப்படி இருக்கும்போது திருக்குறள் மனுவின் சாரம் என்று நாகசாமி எழுதுவது எப்படி? பார்ப்பனத் தனம்தானே!
நாகசாமியின் இந்த நூலைப் பற்றி - பார்ப்பன ஆதிக்கப் பண்பாட்டைப் பற்றி எல்லாக் கட்சித் தலைவர்களும் பேச வேண்டும். எல்லாக் கட்சிகளிலும் உள்ள இலக்கிய அணிகளும் கண்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் எழுத்தாளர் பழ.கருப்பையா. அவர் உரை ஒரே கலகலப்பாகவே அமைந்திருந்தது.
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
நாகசாமிக்கு இவ்வளவுப் பச்சையாக தமிழர்களை எதிர்த்து உண்மைக்குப் புறம்பாக பச்சைப் பார்ப்பனத் தனத்துடன் நூல் எழுதும் துணிவு எப்படி வந்தது?
நாகசாமி என்ற ஒரு தனி மனிதர் இப்படியொரு நூலை எழுதியுள்ளார் என்று தவறாகக் கருதக்கூடாது.
திட்டமிட்டே ஒரு வட்டாரம் - ஒரு லாபி இதனைச் செய்கிறது. இந்த வேலையைச் செய்வதற்காகவே கோடிக்கணக்கில் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மனுதர்மத்தையே இந்திய அரசமைப்புச் சட்டமாக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
இந்தத் திராவிட மண்ணை - பெரியார் மண்ணை வேத மண் என்கிறார்கள். அறிஞர் அண்ணா அவர்கள் இந்த மண்ணுக்கு சட்டரீதியாக 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டியுள்ளார். இதனை மாற்றி வேத நாடாக ஆக்கப் பார்க்கிறார்கள் - நாகசாமிகளின் வேலை என்பது இதில் ஒன்றுதான்.
ஏன் ஆங்கிலத்தில் திருக்குறளைப் பற்றிப் பொய்யும், புனை சுருட்டுமாக எழுதுகிறார்? உலகம் பூராவும் பரப்புவதற்குத்தான். பார்ப்பனர்களின் இந்த சூழ்ச்சிகளை எல்லாம் பெரியாரின் ஈரோட்டுக் கண்ணாடி போட்டுப் பார்த்தால்தான் புரியும்.
குறளில் கடவுள் இல்லை, மதம் இல்லை, ஜாதி இல்லை, கோயில் என்ற வார்த்தை இல்லை. சங்க இலக்கியங்களிலும் முப்பால், நாற்பால் கிடையாது.
மனுதர்ம சாஸ்திரத்தில் கடைசிக் கடைசியாக சாஸ்திரத்தின் இரகசியம் சொல்லப்பட்டுள்ளது.
"இந்த சாஸ்திரத்தில் எல்லாத் தருமத்தையும் சொல்லி இராத்தினாலும்,சொல்லப்பட்ட தருமங்களுக்குள் தேச கால பேதத்தால் யாதாவதொரு சந்தேகம் நேரிடுமாதலாலும் அந்த விஷயத்தில்  மேற்சொல்லும் குணமுள்ள பிராமண ருள் எந்தத் தருமத்தை ஏற்படுத்துவார்களோ அதே நிச்சய மான தருமமாகும். (மனு அத்தியாயம் 12, சுலோகம் 108).
இதைவிட பச்சையான பார்ப்பனத்தனம் வேறு ஒன்று இருக்க முடியுமா?
குறளுக்கு மரியாதை வந்துவிடக் கூடாது. குறள் மூலம் தமிழினத்துக்கு சிறப்பு ஏற்பட்டு விடவும் கூடாது.
அதற்கு ஒரே வழி அந்தக் குறள் என்பது மனுதர்மத்தைப் பார்த்துக் காப்பியடித்தது என்று சொல்லிவிட்டால் தீர்ந்தது கதை - இதுதான் பார்ப்பனர்களின் அணுகுமுறை - சூழ்ச்சி முறை என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
(முழு உரை பின்னர்)
- விடுதலை நாளேடு, 10.11.18

திருவள்ளுவரைப் பற்றிப் பார்ப்பனர்கள் (சங்கராச்சாரியார் உட்பட) புரட்டு! (2)

***கலி. பூங்குன்றன்***
உ.வே.சா. பற்றி தந்தை பெரியார் அவர்களின் கணிப்பும் இங்கு எடுத்துக்காட்டத் தகுந்ததாகும்.
"பார்ப்பனர்கள், டாக்டர் சாமிநாதய்யர் விஷயத்தில் இவ்வளவு பிரயாசை எடுத்துக் கொண்டதன் அந்தரங்க நோக்கம் என்ன என்பதை பார்ப்பனரல்லாதார் நன்றாகத் தெரிந்து கொள்ளும்படி வெளிப்படுத்த விரும்பியே இவ்விஷயங்களை எழுத முன் வந்தோம்.
உண்மையில் இந்தப் பார்ப்பனர்கள் தமிழ் பாஷையின் மேலும், தமிழ் அபிவிருத்தியிலும் ஆசையுடையவர் களானால் இந்த டாக்டர் அய்யர் அவர்களை இன்று பார்ப்பனர்கள் கவுரவம் பண்ணுவதற்குக் காரணமாக இருந்த, அவருடைய ஆசிரியரான காலஞ்சென்ற மகா வித்துவான். மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களைப் பற்றியோ, கும்பகோணம் காலேஜில் தமிழாசிரியராக இருந்த காலஞ்சென்ற தியாகராஜச் செட்டியார் அவர்களைப் பற்றியோ குறிப்பிடாமல் இருந்திருக்க முடியாது. ஆனால் இவர்களைப் பற்றிப் பொது ஜனங்கள் தெரிந்து கொள்ளும்படி செய்யவோ இவர்கள் அய்யர் அவர்களுக்குச் செய்த நன்றியை எடுத்துக்காட்டவோ எந்தப் பார்ப்பனரும், எந்தப் பார்ப்பனப் பத்திரிகையும் முன்வரவில்லை.
அன்றியும் தமிழைப் படிப்பாரும், ஆதரிப்பாரும், படிப்போர்க்கு உதவியளிப்பாரும் இல்லாதிருந்த காலத்தில் மதுரையில் தமிழ்ச் சங்கத்தை ஏற்படுத்தி, அதன் பயனையும் பெரும்பாலும் பார்ப்பனர்களே அடையும்படிச் செய்து அச்சங்கத்தின் வளர்ச்சிக்காகவே சாகும் வரையிலும் உழைத்துக் காலஞ்சென்ற பாண்டித்துரைத் தேவர் அவர்களைப் பற்றி மனதினாலாவது இந்தப் பார்ப்பனர்கள் நினைத்ததுண்டா?
தொல்காப்பியம் போன்ற தமிழ் இலக்கணங்களையும், மற்றும் பல இலக்கியங்களையும் மிகுந்த பிரயாசையுடன் தேடி வெளியிட்ட காலஞ்சென்ற சி.வை.தாமோதரம் பிள்ளை அவர்களைப் பற்றி இந்தப் பார்ப்பனர்கள் ஒரு வார்த்தையேனும் பேசுவதுண்டா?
தற்பொழுது கரந்தைத் தமிழ்ச் சங்கத்தை வைத்து நிர்வகித்து பெரும்பாலும் தனது வாழ்நாளை அதற்காகவே அர்ப்பணம் பண்ணிவரும் தோழர் உமாகேசுவரன் பிள்ளை அவர்களின் முயற்சிகளுக்கு இந்தப் பார்ப்பனர்கள் துணை செய்யாவிட்டாலும்கூட, பாதகஞ்செய்யாமல் இருக்க வேண்டும் என்றாவது நினைக்கிறது உண்டா?
உண்மையில் பார்ப்பனர்களுக்குக் கொஞ்சமாவது தமிழ் மொழிக்கும், தமிழ் அபிவிருத்திக்குப் பாடுபட்டவர் களுக்கும், பாடுபடுகின்றவர்களுக்கும் பெருமை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதா என்பதை இதுவரையிலும் சொல்லி வந்ததைக்கொண்டும், மேலே நாம் எடுத்துக்காட்டியவர்களின் ஊழியத்தைச் சிறிதாவது பாராட்டுவதற்கு முயற்சியெடுக்காததைக் கொண்டும் அறிந்திருக்கலாம்!" என்று தந்தை பெரியார் குறிப்பிட் டுள்ளார்கள்.
('குடிஅரசு' 10.3.1935 பக்கம் 3,4)
இதுதான்  தமிழ்  வளர்ப்பில்கூட இன பேதக் கண் ணோட்டம்!
"திரு" என்ற அருந் தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்துவ தில்கூட பார்ப்பனர்களிடத்தில் மல்லுக் கட்ட வேண்டி யிருந்தது.
"திரு"வை எதிர்த்து இரா. இராகவய்யங்கார், உ.வே.சாமி நாதய்யர் முதலானோர் எழுதினர். இரா. இராகவய்யங்கார் "சுதேசமித்திரன்" இதழில் "திரு" என்ற சொல் "ஸ்ரீ" என்பது போலச் செவிக்கு இன்பம் பயவாது என்றும், "திரு" என்னும் அடையாளமும் உதவாதது என்றும் மறுத்தெழுதினார். (பேராசிரியர் சாரதா நம்பி ஆரூரான் அவர்களின் "தனித் தமிழ் இயக்கத்தின் தோற்றமும், வளர்ச்சியும்" மேலும் "குறளீயம்" 1.11.2000).
தமிழில் உள்ள ஓர் அழகிய சொல்லைப் பயன்படுத் துவதற்கு இந்தளவுக்குப் பார்ப்பனர்கள் முட்டுக்கட்டை என்பதைப் புரிந்துகொண்டால் பார்ப்பனர்களின் மனப் பாங்கு எத்தகையது என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாமே.
சென்னை சிறப்பு கூட்டத்தில் வரவேற்புரை ஆற்றிய திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் "துக்ளக்கில்" சோ எழுதிய "வெறுக்கத்தக்கதா பிராமணியம்?" எனும் கட்டுரைத் தொடருக்கு  "உண்மை" இதழில் "வெறுக்கத்தகுந்ததே பிராமணீயம்" எனும் தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் எழுதிய தொடரிலிருந்து ஓர் எடுத்துக்காட்டைக் கூறினார்.
"உலகம் போற்றும் உயர் கருத்துகளை வாரி வழங்கிய திருவள்ளுவரைக் கூட இவாள் கொச்சைப்படுத்தாமல் விட்டது கிடையாதே!
வ.வே.சு. அய்யர் The Kural or the Maxims of Thiruvalluvar (1916) என்று ஆங்கிலத்தில் திருக்குறளை மொழிபெயர்த்து இருக்கிறார். அதன் முன்னுரையில்,
... Tradition declares that he was the child of a Brahman father named Bhaghavan and a Pariah mother Adi who had been brought up by another Brahman and given in marriage to Bhaghavan. Six other children are named as the issue of this union, all of whom have debbled in poetry.

"திருவள்ளுவரின் தந்தையார் பகவன் என்ற பார்ப்பனராவார். இவரது தாயார் ஆதி என்கிற பறைச்சி. ஆதியை இன்னொரு பார்ப்பனர் அழைத்துவந்து பகவ னுக்கு மணம் முடித்து வைத்தார். ஆதி - பகவன் கூட் டுறவால் திருவள்ளுவரன்றி ஆறு குழந்தைகள் பிறந்தனர். அக்குழந்தைகளுக்குப் பெயர்களும் சூட்டப்பட்டன என்று மரபுவழிச் செய்தியாக சொல்லப்படுவதோடன்றி இதனை கவிதையாகவும் எழுதி வைத்துள்ளனர்" என்று எழுதி யுள்ளார். ஒரு பாடலில் இக்கருத்தை கபிலனே சொல்லுவ தாக அமைந்து இருக்கிறது. அதில்கூட "அந்தணர் வளர்க்க யானும் வளர்ந்தேன்" என்று கடைசி வரி முடிக்கப்பட் டுள்ளது. மேலும் அதே முன்னுரையில்,
“Thiruvalluvar does not treat of the fourth objective separately and Hindus say that he has submitted himself to the orthodox rule that none but a Brahman should be a teacher of spritual truth to mankind”.
அதாவது, "திருவள்ளுவர் நான்காவதான வீட்டுப் பேற்றைப் பற்றி தனியாக ஏதும் கூறவில்லை. மனித குலத்திற்கு ஆன்மீக உண்மைகளைப் பார்ப்பனரைத் தவிர வேறு எவரும் போதிக்கக் கூடாது என்ற பழங்கால வைதீக (வேத) விதிகளுக்கு திருவள்ளுவர் தம்மை உட்படுத்திக் கொண்டார் என்று இந்துக்கள் கூறுகிறார்கள்" என்று எழுதினார்."
(க. திருநாவுக்கரசு அவர்களின் "திருக்குறளும்  - திராவிடர் இயக்கமும்" சங்கொலி 14.6.1996)
என்னே பார்ப்பனத்தனம்!
ஜெகத் குரு என்று ஜெகத்துக்கே பறைசாற்றுவார்கள்; இந்தியாவுக்கு மட்டுமல்ல, ஜப்பானுக்கும் இவர்தான் தலைவர். அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சுக்கும் இவர்தான் தலைவராம். (அப்படித்தானா?) ஆனால் மனம்? ஆதி சங்கரரைப் பற்றி  விவேகானந்தர் சொல்லுவதுபோல அவர் வழி வந்த இந்த சங்கராச்சாரியார்களுக்கு குறுகிய புத்திதான் - தான் பிறந்த பார்ப்பன ஜாதி எனும் ஆணவம் கொக்கரிக்கும் - குரூரக் குணம்தான் - தங்கள் மொழியான சமஸ்கிருதத்தின் மீது தாங்கொணா வெறிதான் - கடுகைத் துளைத்து ஏழ்கடலைப் புரட்டிக் குறுகத் தரித்த குறள் என்றார் - குறளைப் பற்றி இடைக்காடர் எனும் புலவர். மதுரைப் பாலாசிரியனார் எனும் புலவரோ,
வெள்ளி வியாழம் விளங்கு இரவி வெண்திங்கள்
பொன் என நீக்கும் புறஇருளைத் - தெள்ளிய
வள்ளுவர் இக்குறள் வெண்பா அகிலத்தோர் உள் இருள் நீக்கும் ஒளி
என்றார்.
இப்படி உலகத்தாரின் உள் இருள் நீக்கும் ஒளியான திருவள்ளுவர் யாத்த திருக்குறளை லோகக் குரு என்று 'லொக் லொக்'கென்று இருமிக் கொண்டு, இறக்கும் தருவாயில் இருக்கும்  பார்ப்பனர்கள்கூட உச்சிமோந்து போற்றுகிறார்களே, அந்த சங்கராச்சாரியார் சந்திரசேக ரேந்திர சரஸ்வதி என்ன சொல்லுகிறார்?
வைணவப் பெண்மணியாகிய ஆண்டாள் என்பவர் பாடியதாகக் கூறப்படும் திருப்பாவையில் இரண்டாவது பாடல், "நாட்காலை நீர் ஆடி" என்று தொடங்குகிறது. அதில் 'செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்று ஓதோம்' என்பது ஒருவரி.
இதற்கு இந்த லோகக் குரு சொன்ன விளக்கம் என்ன தெரியுமா?
"தீய திருக்குறளைச் சென்று ஓத மாட்டோம்" என்று பொருள் சொல்லுகிறார் என்றால் இந்தப் புரோகிதப் பார்ப்பனக் கும்பலை என்னவென்று சொல்லுவது! 'குறளை' என்பதற்கு என்னதான் பொருள்? அய்காரத்தைக் கடைசியாகக் கொண்ட இந்த சொல்லுக்கான பொருள் 'கோள் சொல்லுதல்' என்பதாகும் (மதுரைத் தமிழ் பேரகராதி)
தீக்குறளைச் சென்றோதோம் என்றால் தீமை விளைவிக்கும் கோட் சொற்களைச் சென்று சொல்ல மாட்டோம் என்பதாகும். ஆனால் இந்தக் கோட் சொல்லி குல்லுகப்பட்டர் பாம்பரையோ அர்த்தத்தை அனர்த்தமாக்கி ஆனந்தநடனம் ஆடுகிறதே!
இந்த சூப்பர் சீனியர் சங்கராச்சாரியார் இப்படி சொல்லு கிறார் என்றால் சீனியர் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி தன் பங்குக்கு எதையாவது உளறி வைக்க வேண்டாமா?
மதுரையில் தொழில் அதிபரான பார்ப்பனர் ஒருவருக்கு கைங்கரிய சிரோமணி விருது வழங்க சென்ற இடத்தில் இவர் உதிர்த்த 'உன்னத' மொழி என்ன தெரியுமா?
"திருக்குறளில் உள்ள அறத்துப்பால் கிட்டத்தட்ட பகவத் கீதையின் தமிழாக்கமேயாகும். வாழ்வின் வழிமுறைகளும், குறிக்கோளும் அதில் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்றாரே பார்க்கலாம் ('தினத்தந்தி' 15.4.2004)
"நான்கு வருணங்கள் என்னால் உண்டாக்கப்பட்டவை; அவரவர்களுக்குரிய கருமங்களை அவரவர் மீறாமல் செய்ய வேண்டும். அதனை மாற்றிச் செயல்பட வைக்க அந்த வர்ணதர்ம உற்பத்தியாளனாகிய என்னால்கூட முடியாது." (கீதைஅத்தியாயம் 4 - சுலோகம் 13) இப்படி சொல்லும் கீதையும், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற குறளும் ஒன்றாம்.
பிறவிக்குருடர்கூட இப்படிக்கூறி இப்படி அடையாளப் படுத்த மாட்டான்.
சந்தனமும் - சாணியும் ஒன்று, பாலும் -  பாஷாணமும் ஒன்று என்று சொல்லும் பாழ்ப்புத்தி பார்ப்பனர்களுக்கு மட்டுமே உரித்தான ஏகபோகக் குணம்!
குறள் மனிதநேயத்தின் குணம்! சங்கரமடம் மனித வெறுப்பின் இனம்!! இரண்டும் எதிர்நிலை மனம்!!! இரண்டும் எதிர் நிலை - ஒன்றல்ல - புரிந்து கொள்வீர்!
'திருக்குறளில் உள்ள அறத்துப் பாலை - அதிலும் முதலில் பத்துக் குறள்களை மட்டும் மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்து விட்டு பொருட்பால், காமத்துப் பாலை சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை' என்று காஞ்சி ஜெயேந்திரர் சொன்னதைக் கண்டித்து 2.4.1982 அன்று ஈரோட்டில் திருக்குறளார் வீ. முனுசாமி அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருக்குறள் பேரவை 4ஆம் ஆண்டு விழாவில் தீர்மானமே நிறைவேற்றப்பட்டதே!
"திருவள்ளுவர், பார்ப்பனருக்குப் பிறந்ததால்தான் திருக்குறளை இயற்ற முடிந்ததென்று ஒரு பார்ப்பன வெறியர் பேசியதை க.அயோத்திதாச பண்டிதர் கேள்வி கேட்டு மடக்கிய நிகழ்ச்சி   "நூதன ஜாதிகள் உற்பவ பீடிகை" என்ற சிறு நூலில் காணப்படுகிறது.
அறிஞர் திரு.க. அயோத்திதாச பண்டிதர், இராயப் பேட்டை சாக்கிய பவுத்த சங்கத் தலைவராயிருந்து தொண்டாற்றியவர். 'தமிழன்' என்ற வார இதழை 1907 இல் துவக்கி ஆரியப் பார்ப்பனப் புரட்டுகளை அம்பலப் படுத்தியவர்.
இவர் 'பார்ப்பன வேதாந்த விவரம்' 'வேடப்பார்ப்பனர் வேதாந்த விபரம்' 'நந்தன் சரித்திர விளக்கம்' 'நூதன ஜாதிகள் உற்பவ பீடிகை' "திருவள்ளுவ நாயனார், பறைச்சிக்கும், பார்ப்பானுக்கும் பிறந்தாரென்னும் பொய்க் கதை விபரம்" ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார். அறிஞர் க.அயோத்திதாச பண்டிதர் தலைமை ஏற்று நடத்திய பவுத்த சங்கத்தைப்பற்றி திரு.வி.க. "அவர்கள் சங்கம் எனது மதவெறியைத் தீர்க்கும் மருந்தாயிற்று" என்று போற்றுகிறார்.
1892இல் சென்னையில் மகாஜன சபைக் கூட்டம் சிவநாம சாஸ்திரி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அவர் பேசும்போது "வள்ளுவர் பார்ப்பன விந்துக்குப் பிறந்ததனால்தான் சிறந்த திருக்குறளைப் பாடினார்; சுக்கல-சுரோனிதம் கலப்பரியாது என்று குறிப்பிடும்போது கூட்டத்தில் கேட்டுக் கொண்டிருந்த அறிஞர் க அயோத்திதாச பண்டிதர் எழுந்து நீங்கள் சொல்லியதை நான் ஏற்றுக் கொள்வதென்றால், நான் சில கேள்விகள் கேட்க வேண்டும்" என்றார்.
அதற்கு சிவநாம சாஸ்திரி, "சரி, கேளும்" என்றார்.
"நமது நாட்டில் தீண்டாதவர்கள் என்று இழிவுபடுத்தப் படும் பறையர்கள் என்பவர்கள் கிறித்துவ சங்கத்தார்களின் கருணையால் 'எம்.ஏ.,' 'பி.ஏ.,' படித்துப் பட்டங்களைப் பெற்று உயர் பதவிகளில் அமர்ந்திருக்கிறார்களே? அவர்கள் யார் விந்துக்குப் பிறந்திருப்பார்களென்று எண்ணுகிறீர்" என்றார். அதற்கு சிவநாம சாஸ்திரி ஒன்றும் பதில் கூறாமல் நின்று கொண்டிருந்தார்.
பிறகு அறிஞர் திரு.க. அயோத்திதாச பண்டிதர் தொடர்ந்து "பெருங்குற்றங்களைச் செய்து சிறைச்சாலை களில் அடைக்கப்பட்டிருக்கும் பார்ப்பனர்கள் யார் விந்துக் குப் பிறந்திருப்பார்களென்று நீர் நினைக்கிறீர்" என்று கேட்டார்.
சிவநாம சாஸ்திரி ஒன்றும் பதில் கூறாமல் திருதிரு என்று விழித்துக் கொண்டு நின்றார். அறிஞர் திரு. க.அயோத்திதாச பண்டிதர், "ஏன் பதில் சொல்லாமல் நிற்கிறீர், சொல்லும்," என்று சினந்து கேட்டுக் கொண்டி ருக்கும் பொழுது, கூட்டத்திலிருந்த ஆனரபில், திரு. பி.அரங்கைய நாயுடும், திரு. எம். வீரராகவாச்சாரியாரும் அறிஞர் திரு. க.அயோத்திதாச பண்டிதரை அமைதிப்படுத் தினார்கள்.
திரு. சிவநாம சாஸ்திரியை கூட்டத்திலிருந்தவர்கள் இகழ்ந்து பேசினார்கள். சிவநாம சாஸ்திரி உட்கார்ந்து கொண்டார். பின்னர் மெல்ல கூட்டத்திலிருந்து நழுவி விட்டார்.
இந்த தகவலை "நூதன ஜாதிகள் உற்சவபீடிகை" எனும் நூலிலிருந்து வெளிப்படுத்தியவர் தோழர் சு. ஒளிச்செங்கோ. இத்திசையில் சொல்லிக் கொண்டே போகலாம்.
(நாளையும் உண்டு)
-விடுதலை நாளேடு,9.11.18