பக்கங்கள்

திங்கள், 20 நவம்பர், 2017

பரம்பரை பரம்பரையாக என்று சொல்வதன் பொருள்

🖥நாம் - முதல் தலைமுறை,

தந்தை + தாய் - இரண்டாம் தலைமுறை,

பாட்டன் + பாட்டி - மூன்றாம் தலைமுறை,

பூட்டன் + பூட்டி - நான்காம் தலைமுறை,

ஓட்டன் + ஓட்டி - ஐந்தாம் தலைமுறை,

சேயோன் + சேயோள் - ஆறாம் தலைமுறை,

பரன் + பரை - ஏழாம் தலைமுறை,

பரன் + பரை = பரம்பரை

ஒரு தலைமுறை - சராசரியாக 60 வருடங்கள் என்று கொண்டால்,

ஏழு தலைமுறை - 480 வருடங்கள்..

ஈரேழு தலைமுறை - 960 வருடங்கள்..
(கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்கள்)ஆக,

பரம்பரை பரம்பரையாக என்று சொல்வதன் பொருள் ஈரேழு, பதினான்குதலை
முறையாக என்று பொருள் வரும்.

வேறெந்த மொழிகளிலும் இப்படி உறவு முறைகள் இல்லை..

இதுவும் தமிழுக்கு ஒரு தனிச் சிறப்பு!..

*🎯 பகிர்ந்து கொள்ளுங்கள் மக்களும் தெரிந்து கொள்ளட்டும் 🎯*அன்புடன் சபீர் முகம்மது(முகநூல்)

செவ்வாய், 14 நவம்பர், 2017

திருவள்ளுவர் எங்கள் ஞானகுரு திருக்குறள் எங்கள் வேதம்!


இது கேரள ஆச்சரியம்

திருவள்ளுவரை நாம் எந்த அளவு மதிக்கிறோம்? கேரளாவில் அவர் கடவுள். வள்ளுவ மதம் அங்கே வேகமாக வளர்கிறது.

வாழ்க்கைக்கான அத்தனை அறங்களையும் உள்ளடக்கியுள்ள நூல் திருக்குறள். அதை வெறும் மனப்பாடப் பாடலாக பிள்ளைகளுக்கு போதிப்பதைத் தவிர வாழ்க்கையில் கடைப்பிடிக்கும் தமிழர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். ஆனால் கேரளத்தில் திருவள்ளுவர் ஒரு இறைவனாகவே கொண்டாடப்படுகிறார். திருக்குறள் வேதமாக போற்றப்படுகிறது.

கேரளாவின் கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம் பகுதிகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் இருக்கிறது ஆதிபகவான் திருவள்ளுவர் கோயில். திருக்குறளை மந்திரமாக ஓதி சுமார் 60 ஆயிரம் பேர் வள்ளுவரை தெய்வமாக வணங்குகிறார்கள். திருவள்ளுவர் கோயிலை ‘ஞானமடம்’ என்கிறார்கள். கருவறையில் வள்ளுவரின் சிலை அல்லது படம் உள்ளது. வெளியே கல்விளக்குத் தூண். எந்நேரமும் பஞ்சமுக விளக்குகள் எரிகின்றன.

இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களைப் போல வள்ளுவ மதத்தை கேரளாவில் ஸ்தாபித்திருக்கிறார் இடுக்கியை அடுத்த மூவாற்றுப்புழாவைச் சேர்ந்த சிவானந்தர். தனியொரு மனிதராக இதை சாதித்த சிவானந்தர், குடுமியும் தாடியுமாக குட்டி திருவள்ளுவரைப் போலவே இருக்கிறார். ‘தமிழ் நமக்கு அம்மா மொழி. அம்மா மொழியில் வல்லிய கவிதை பாடிய திருவள்ளுவர் ஞானகுரு. திருக்குறள் வேதப்புத்தகம். ஞானமடம், தேவாலயம்’ - இதுதான் வள்ளுவ மதத்தின் உள்ளடக்கம்.

சிவானந்தரின் பெற்றோர் கிறிஸ்தவர்கள். மிகவும் ஏழைப்பட்ட குடும்பம். 8 பிள்ளைகளில் சிவானந்தருக்கு மட்டும் கிறிஸ்தவத்தில் பிடிப்பு இல்லை. ‘‘பூப்பாறை தேயிலைத் தோட்டத்தில 1974ல வேலை செஞ்சேன். அங்க ஒரு தமிழர் டீக்கடை வச்சிருந்தார். அந்தக் கடையில இயேசு, திருவள்ளுவர், புத்தர் படங்களைப் போட்டு ‘உலகத்தைத் திருத்திய உத்தமர்கள்’னு எழுதி இருந்தது.

எனக்கு இயேசுவையும் புத்தரையும் தெரியும். தாடி மீசையோட உக்கார்ந்திருந்த வள்ளுவரை அதுவரை பார்த்ததில்லை. ஆனா, பார்த்ததும் பெரிய மரியாதை வந்துச்சு. கடைக்காரர்கிட்ட விசாரிச்சேன். ‘அவரு எங்க நாட்டில பெரிய புலவர். பேர் திருவள்ளுவர், அவர் எழுதிய திருக்குறள் புகழ்பெற்ற புத்தகம்’னு சொன்னார்.

ஆறு மாதமா கடை கடையா அலைஞ்சேன். கடைசியா வெண்ணைக்குளம் நாராயண குரூப் மலையாளத்தில் மொழிபெயர்த்த திருக்குறள் புத்தகம் கிடைச்சது. ஒரு மாசம் படிச்சேன். நான் தேடுன எல்லாமும் அதில் இருந்தது. அப்பவே வள்ளுவர்தான் ஞானகுருன்னு முடிவு பண்ணிட்டேன். திருவள்ளுவர் படம் வாங்கினேன். 1975 சித்திரை முதல் தேதி, நான் வேலை செஞ்ச சேனாபதி கிராமத்தில திருவள்ளுவர் படத்தை வச்சு வணங்க ஆரம்பிச்சேன். கொஞ்சம் கொஞ்சமா மக்கள் வரத் தொடங்கினாங்க’’ என்கிறார் சிவானந்தர்.

வள்ளுவரை ஏற்றுக் கொண்டவர்கள் அசைவம் சாப்பிடக்கூடாது. மது, புகையிலை பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது. பொய், களவு செய்யக்கூடாது. 33 வருடத்தில் திருவள்ளுவர் சாட்சியாக ஏராளமான காதல் திருமணங்கள் நடந்துள்ளன. சிவானந்தரும் சரஸ்வதியுமே காதல் தம்பதி தான். ‘‘சரஸ்வதிக்கு சங்கிலி வேதனை நோய் இருந்தது. கோயில், குளம்னு அலைஞ்சும் நோய் தீரல. கடைசியா அவளோட அப்பா, எங்க திருவள்ளுவர் கோயிலுக்கு கூட்டி வந்தார். கொஞ்ச நாள்ல நோய் சரியாயிருச்சு. பிறகு வள்ளுவ மதத்துக்கே குடும்பத்தோட வந்துட்டா. ஒரு கட்டத்தில காதல்... கல்யாணம். இப்போ ரெண்டு குழந்தைங்களும் பிறந்தாச்சு’’ - சிரிக்கிறார் சிவானந்தர்.

ஞானமட திருமணத்தில் தாலி இல்லை. மோதிரம் மாற்றுவதும் இல்லை. மடத்தில் இருக்கும் திருமணப் பதிவுப் புத்தகத்தில் பதிவு செய்யப்படும். பெற்றோரும் மடபதியும் வாழ்த்த, இல்லற அதிகாரத்தில் உள்ள திருக்குறள் ஓதப்படும். அவ்வளவே! இறந்தவர்களை அடக்கம் செய்ய தனி இடுகாடு உண்டு. கோயிலில் உடலை வைத்து, நிலையாமை பற்றிய குறள்களை ஓதி, இறப்புப் பதிவேட்டில் பதிவு செய்து புதைக்கிறார்கள்.

‘‘திருவள்ளுவரை நாடி வந்த அனைவரும் ஒடுக்கப்பட்ட மக்கள். அவங்க பிரதான உணவே மாமிசம்தான். கேரளாவில் எருமை மாமிசம்கூட சாப்பிடுவாங்க. சாராயம், கள்ளுன்னு போதைய போட்டுட்டு படுத்துருவாங்க. வள்ளுவர் சொன்னதை ஏத்துக்கிட்டு இப்ப சைவமாகிட்டாங்க. பல ஆயிரம் இளைஞர்கள் போதைப் பழக்கத்தை விட்டொழிச்சு நிம்மதியா வாழுறாங்க’’ என்கிறார் சிவானந்தர்.
ஆனால் ஞானமடங்கள் எழும்பத் தொடங்கியபோது இந்துத்துவ, கிறிஸ்தவ அமைப்புகள் எதிர்த்தன.

மடங்கள் உடைக்கப்பட்டன. மலையாள ஆர்வலர்கள் பலர், ‘தமிழ்நாட்டுக் கவிக்கு கேரளாவில் கோயிலா’ என்று கொதித்தனர். எல்லோருக்கும் பதில் சொன்னார் சிவானந்தர். ‘இன்றைக்கு இருக்கிற மதங்களின் பிதாக்கள் எல்லாம் இந்த நாட்டில் பிறந்தவர்களா? எங்கெங்கோ இருந்து வந்தவர்களை கடவுளின் அவதாரங்களாகவும், வழிகாட்டிகளாகவும் ஏற்றுக்கொண்ட நீங்கள் எங்களைக் குறை சொல்லாதீர்கள்’ என்றார்

கார்த்திகை மாதம் திருவள்ளுவருக்கு மாலை அணியும் திருநாள் நடக்கிறது. சபரிமலை செல்வது போலவே மாலை அணிந்து, 41 நாள் விரதமிருந்து தலைமை ஞானமடமான கூர்மலைக்கு யாத்திரை செல்கிறார்கள். கூர்மலை உச்சியில் பூக்களால் வள்ளுவர் சிலையை அலங்கரித்து வணங்குகிறார்கள்.

ஞானமடங்களின் ஆண்டு விழாக்களும் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. அதிகாலையில் செண்டை மேளம் முழங்க கொடியேற்றப்படும். பச்சைநிறக் கொடியின் நடுவே சிவப்பு வட்டம். இதுதான் வள்ளுவ மதத்தின் கொடி. கொடியேற்றலுக்கு பின் ஜெபம். மதியம் அனைவருக்கும் சம போஜனம். இரவு தாளப்பொலி. ஆண்கள் திருவள்ளுவரை சுமந்து வர, பெண்கள் பச்சை, சிவப்பு உடை அணிந்து பூக்கள் நிரம்பிய தாம்பாளத்தில் விளக்கேற்றி ஊர்வலமாக வருவார்கள். வள்ளுவரையும், திருக்குறளையும் போற்றி 300க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதித் தொகுத்திருக்கிறார்கள். மற்ற நாட்களில் தினமும் இருவேளை ஞானமடத்தில் சமூக ஜெபம் நடத்துகிறார்கள். ஒவ்வொரு மடத்துக்கும் ஒரு மடபதி. சிவப்பு வேட்டி, பச்சை மேலங்கி. இதுவே மடபதியின் சீருடை. மடபதிகளை மக்கள் ‘ஆச்சார்யா’ என்று அழைக்கிறார்கள்.

‘‘71 ஜாதியை சேர்ந்தவுங்க ஞான மடத்தில் அங்கமா இருக்காங்க. இங்க வந்த பின்னாடி யாருக்கும்ஜாதி, மத அடையாளமில்லை. 2015க்குள்ள கேரளாவில் உள்ள அத்தனை கிராமத்திலயும் எங்க ஆதிபகவானுக்கு ஞானமடம் கட்டணும்ங்கிற இலக்கோட செயல்படறோம்’’ என்ற சிவானந்தரை இடைமறித்து, ‘‘உங்களில் எத்தனை பேருக்கு 1330 திருக்குறளும் தெரியும்’’ என்றோம். ‘‘அத்தனை குறளையும் மனப்பாடம் செய்து ஒப்பிச்சு பரிசு வாங்கறதால என்ன பயன்?

அந்த வேதப்புத்தகத்துல உள்ள பத்து குறளை ஆழப் படிச்சு, அந்தக் கருத்துகளை மனசுக்குள்ள வாங்கி, அதன்படி நடந்தாப் போதும்... அதைத்தான் நாங்க படிப்பிக்கிறோம்’’ -பொட்டில் அடித்தது போல் சொல்கிறார் சிவானந்தர். வள்ளுவர் சொன்னதை ஏத்துக்கிட்டு பல ஆயிரம் இளைஞர்கள் போதைப் பழக்கத்தை விட்டொழிச்சு நிம்மதியா வாழுறாங்க மலையாள ஆர்வலர்கள் பலர், ‘தமிழ்நாட்டுக் கவிக்கு கேரளாவில் கோயில்.
- இசை இன்பன்( முகநூல் பக்கம்)15.11.17

திங்கள், 13 நவம்பர், 2017

"ண", "ன" மற்றும் "ந" எங்கெல்லாம் வரும்?

தமிழ் சொல்லி தர பிள்ளைகளுக்கு  சில விளக்கங்கள்...

"ண", "ன" மற்றும் "ந" எங்கெல்லாம் வரும்?
ஒரு எளிய விளக்கம்

மூன்று சுழி “ண”,
ரெண்டு சுழி “ன” மற்றும்
"ந" என்ன வித்தியாசம்?

தமிழ் எழுத்துகளில்
ரெண்டு சுழி "ன" என்பதும், மூன்று சுழி "ண" என்பதெல்லாம் வெறும் பேச்சு வழக்கு.

"ண" இதன் பெயர் டண்ணகரம்,
"ன" இதன் பெயர் றன்னகரம்,
"ந" இதன் பெயர் தந்நகரம் என்பதே சரி.

மண்டபம், கொண்டாட்டம் – என எங்கெல்லாம் இந்த மூன்று சுழி "ணகர" ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து 'ட' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு "டண்ணகரம்" னு பேரு. (சொல்லிப் பாருங்களேன்!)

தென்றல், சென்றான் – என எங்கெல்லாம் இந்த ரெண்டு சுழி "னகர" ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து 'ற' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு "றன்னகரம்" னு பேரு. (சும்மா சொல்லிப்பாருங்க!)

இது ரெண்டும் என்றுமே மாறி வராது..
நினைவில் கொள்க..

மண்டபமா? மன்டபமா? சந்தேகம் வந்தா...
பக்கத்துல 'ட' இருக்கா,
அப்ப இங்க மூன்று சுழி 'ண்' தான் வரும்.
ஏன்னா அது "டண்ணகரம்".

கொன்றானா? கொண்றானா? சந்தேகம் வந்தா...
பக்கத்துல 'ற' இருக்கா
அப்ப இங்க ரெண்டு சுழி 'ன்' தான் வரும்.
ஏன்னா அது "றன்னகரம்"
என்று புரிந்து கொள்ளலாம்.

இதே மாதிரித்தான் 'ந' கரம் என்பதை, "தந்நகரம்" னு சொல்லணும்
ஏன்னா இந்த 'ந்' எழுத்தை அடுத்து
வரக்கூடிய உயிர்மெய் 'த' மட்டுமே. (பந்து, வெந்தயம், மந்தை).

இந்த "ண", "ன" மற்றும் "ந" விளக்கம் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்..........

அருமையான விளக்கம்  இதுவரை பலபேருக்கு தெரியாமல் இருந்தது.
தமிழறிவோம் இதை பலபேருக்கு பகிர்வோம்.