பக்கங்கள்

ஞாயிறு, 15 டிசம்பர், 2024

மலையாள மொழி தோன்றிய வரலாறு

மொழிப் பிறந்த கதை - தமிழும் மலையாளமும்

மலையாளம் என்ற சொல், தொடக்கத்தில் நாட்டின் பெயராக மட்டுமே வழங்கியது. மொழிக்கு முதலில் மலையாண்ம' அல்லது மலையாய்மா' என்ற பெயர் வழங்கி வந்தது.

காலப்போக்கில் மலையாளம் என்ற நாட்டின் பெயரே மொழியின் பெயராகவும் நிலைத்து விட்டது. சிலர் 'மலையாண்ம' என்பதற்கு 'பழைய மலையாள மொழி' என்றும் பொருள் கொள்கின்றனர்.

மலையாள மொழியின் தோற்றம் குறித்துப் பல்வேறு கருத்துகள் அறிஞர்களிடையே நிலவுகின்றன.

"கேரள பாணினியம் ' என்ற சிறந்த ஆராய்ச்சி நுாலில் இராஜராஜவர்மா அவர்கள் தம் கருத்தை தெரிவித்துள்ளார்கள்.

அவரது கருத்தின் சுருக்கம்:

மலைநாடாகிய மலையாளத்தின் பழங்குடி மக்கள் தமிழர்களே! அவர்களது மொழி தமிழாகவே இருந்தது.

''செய்யுள் மொழி' என்றும் 'வாய் மொழி' என்றும் உள்ள வேறுபாடு, வழக்கிலுள்ள எல்லா மொழிகளிலும் உள்ளது போன்று தமிழிலும் இருந்தது. செய்யுள் மொழிக்குச் செந்தமிழ் என்றும் நாடோடி மொழிக்குக் 'கொடுந்தமிழ்' என்றும் தமிழ் நூலாசிரியர்கள் பெயரிட்டிருக்கின்றனர். அவ்வாறு அமைந்த பலவகைக் கொடுந்தமிழ்களில் ஒன்று 'மலையாளம்'.

தற்கால மலையாளத்தில், வடமொழியின் ஆதிக்கம் நுழைந்து வலுப்பெற்றது ஆனால் மலையாள மொழிகள் அடிப்படையும் மேற்கூரையும் இன்றும் தமிழாய் ஆனவைதாம்.

மணிப்பிரவாள நடை

வடமொழியின் கலப்பினால், வடமொழியிலிருந்து சொற்களைக் கடன் வாங்கியும் வடமொழி வாக்கியங்களையும் அணிமுறைகளையும் ஏற்றும், சமஸ்கிருதத்திலிருந்து வேற்றுமை உருபுகளையும் வினைமுற்றுகளையும்,இடைச் சொற்களையும் தத்தெடுத்துச் சேர்த்தும் 'மணிப்பிரவாளம்' எனப் புதிய வடிவை உண்டாக்கினர்.இவ்வகைக் கலப்பெல்லாம், செய்யுள் மொழியையே பாதித்தது; உலக வழக்கு மொழியைப் பாதித்து விடவில்லை.

மணிப்பிரவாள மலையாளத்தில், வடமொழியின் மிகுதியைக் கண்டு மயங்கித் தலைசிறந்த நுாலாசிரியர்கள் சமஸ்கிருதத்தில் திராவிடம் கலந்து உருவாகிய மொழியே மலையாளமாகும் என்று கருதுகின்றனர். ஆனால், அவ்வாறு கருதுவதற்கு இடமில்லை.

ஏனெனில், மொழியில் வாக்கிய முறை, உருவமைப்பு, மரபுச் சொற்றொடர் ஆகியவை மாறவில்லை.

சமஸ்கிருதத்திலிருந்து சொற்களைக் கடன் வாங்கியது கூட, சில இன்றியமையாத தேவைகளுக்கும் வெறும் ஆடம்பரத்திற்குமேயாகும்.

மக்கள் பேச்சு மொழியில் வழங்கும் சொற்களில், வட மொழிக்கும் திராவிடத்திற்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்பது சிந்தனைக்குரியது.

மலையாளம் தமிழின் கிளை மொழி! கொடுந்தமிழே, மலையாளம்!

மலையாளம், தமிழிலிருந்து வேறுபட்டுத் தனிமொழி என்ற நிலையை எந்தக் காலத்தில் அடைந்தது என்றும் அதற்கான காரணங்கள் யாவை என்றும் நாம் சிந்தித்தல் வேண்டும்.

எல்லா மொழிகளுக்கும் சுவை வேறுபாடு காரணமாக, வட்டார வேறுபாடுகள் வருவது உண்டு. மலையாளத்திலேயே இப்பொழுது இடைநாட்டு மலையாளம் தவிர, தெற்கத்திய மொழி - வடக்கத்திய மொழி என்றும் இருவகை வேறுபாடுகள் உள்ளன.

தமிழ்நாட்டிலும்

தென்பாண்டி, குட்டம், குடம்,கற்கா, வேண், பூழி, பன்றி அருவா, அதன் வடக்கு - நன்றாய சீதம் மலைநாடு, புனநாடு, செந்தமிழ்சேர் தமிழ் பன்னிரு நாட்டெண்.

என்ற பாடலின்படி பன்னிரண்டு நாட்டுப் பிரிவுகள் வழக்கில் இருந்தன.அந்தப் பகுதிகளில், வட்டார மாறுபாடுகள் மொழி உச்சரிப்பின் அடிப்படையில் ஏற்பட்டிருந்தன.

அந்நாளில் மதுரையில் வழங்கிய மொழிக்குச் 'செந்தமிழ்' என்றும், மேற்கூறிய பன்னிரண்டு நாடுகளில் வழங்கி வந்த மொழிக்குக் 'கொடுந்தமிழ்' என்றும், தமிழ் நூலாசிரியர்கள் பெயர் கொடுத்திருந்தனர். மேற்கூறிய பன்னிரண்டு நாடுகளில் குட்டம்,குடம்,கற்கா, வேண், பூழி ஆகிய ஐந்தும் இன்றைய கேரள மாநிலத்தில் உள்ளவை.

இந்த ஐந்து நாடுகளிலும் வழங்கிய கொடுந்தமிழ் மொழியே பின்னர் மலையாளமாக வளர்ந்தது.

மலையாள மொழிக்கு மூன்று பெருங்கால நிலைகளைக் கொள்ளலாம். கொல்லம் ஆண்டின் தொடக்க காலமாகிய கி.பி.825-க்குப் பின்னர், மலையாளம் ஒரு சுதந்திர மொழியின் நிலைமையை எய்திற்று.

கொல்லம் ஆண்டிற்கு முன்னுள்ள காலத்தைத் தாயாகிய தமிழின் அல்லது மூலத்திராவிட மொழியின் கருவில் வதிந்திருந்த காலமாகக் கணக்கிட்டால் அக்காலத்தின் தொடக்கத்தில் தோன்றியவைதாம்; பதிற்றுப் பத்து போன்ற சங்ககால நூல்கள் என்பது விளங்கும். அவை கேரளத்தில் வாழ்ந்தவர்களால் இயற்றப்பட்டன.

கொல்லம் ஆண்டுக்குப் பின்

கேரள மொழி வரலாற்றின் மூன்று பகுதிகள்:

1. முற்கால நிலை - குழந்தை நிலை - கொடுந்தமிழ்க் காலம் கொல்லம் ஆண்டு 1 முதல் 500 வரை (கி.பி. 825 - 1325)

2. இடைக்கால நிலை - குமரி நிலை - மலையாண்மைக் காலம் - கொல்லம் ஆண்டு 500-க்குப் பின் (கி.பி. 1325-1625)

3. தற்கால நிலை - யௌவனநிலை -மலையாளக் காலம் கொல்லம் ஆண்டு 800 முதல் இன்று வரை (கி.பி. 1625 - முதல் இன்று வரை)

கொடுந்தமிழாய்ப் பிறந்த கேரள மொழி, 500 ஆண்டுகாலம் குழந்தைப் பருவத்திற்கு ஒத்த கொடுந்தமிழ் நிலையில் இருந்தது.அதில் பாதிக்கு மேற்பட்ட காலம், குமரிப் பருவமாகிய, 'மலையாண்மை' என்று கூறப்படும் நிலையில் வளர்ந்து வாழ்ந்தது. யௌவனப் பருவத்தில் 'மலையாளம்'என்ற பெயரைப் பெற்றிருக்கிறது.

மலையாளத்தைத் தமிழிலிருந்து வேறுபடுத்திச் சுதந்திர மொழியாக்கி விடுவதற்கு உற்சாகம் தந்தது, சமஸ்கிருதம்.

எனினும், அதற்குக் குழந்தைப் பருவத்தில் அதிக உரிமை பாராட்ட முடியவில்லை. குழந்தையின் காப்பாளப் பதவி தமிழுக்கே இருந்தது. தமிழ் என்ற விகுதி சேர்த்து, கருந்தமிழ் என்ற பெயரே அந்நிலைக்கு வழங்கப்பட்டது.

அதனால்தான் அக்காலத்தில் தமிழோடுள்ள தொடர்பு தேயவும், சமஸ்கிருதத்தோடுள்ள தொடர்பு பெருகவும் செய்தன. அக்காலங்களில் இயற்றப்பட்டுள்ள நுால்கள் மிகக் குறைவாகவே நமக்கு கிடைத்துள்ளன.

பத்திரகாளிப்பாட்டில் சில பகுதிகள், சில பழைய கீர்த்தனங்கள் ஆகியவையெல்லாம் கருந்தமிழ்க் காலப் பகுதியின் தொடக்கத்தில் எழுந்தவை. இராமசரிதம் அதன் இறுதியில் எழுந்த காவியமாக இருக்கலாம்.

'மலையாண்மை' என்ற காலப் பகுதியில் குமரிப் பருவத்திற்கு ஏற்ப உரிமை மீறல் காணப்படுகின்றது. தனக்கிருந்த காப்பாளர் என்ற நிலையை, தமிழ் தானாகவே விட்டுவிடவில்லை. ஆனால் சமஸ்கிருதம் அக்காப்பாளர் நிலை தனக்குத் தானென்று பலாத்காரமாக எடுத்துக் கொள்ளத் தொடங்கியது.

இந்த உரிமை மீறல் நிலையில் இருந்துதான், மணிப்பிரவாளக் கவிதைகள் தோன்றியிருக்க வேண்டும். தமிழ்க் காப்பியங்களின் பிரசாரம் குறைந்து, நாட்டு மொழியின் வேறுபாடு தோன்றத் தோன்ற செந்தமிழின் பொருளை உணர்வது பொது மக்களுக்கு இயலாததாகி விட்டது.

நெருக்கடியில் பிறந்த 'மணிப் பிரவாளம்'

சமஸ்கிருதத்தின் புதுமையும், பெருமையும் காவிய நயமுணர்வோரைக் கவர்ந்தன. அரசர்களும் நம்பூதிரிகளும் சமஸ்கிருதத்தை ஆதரித்தனர். கொடுந்தமிழாகிய நாட்டு மொழியை ஆதரிக்கவில்லை.ஆனால், நாட்டு மொழியோடு வேற்று மொழியாகிய சமஸ்கிருதத்திலே கவிதை இயற்றினால் கேட்டு இன்புற ஆட்கள் குறைவாகவே அமைந்தனர். இந்நிலையில் இரண்டும் கலந்த கவிதைக்காக, ஒரு மொழியைச் செயற்கையாக உண்டாக்க வேண்டியதைத் தவிர, வேறு வழியில்லாமல் போய்விட்டது. அந்த நெருக்கடியில் பிறந்ததுதான், மணிப்பிரவாள மொழி.

சமஸ்கிருதக் கவிஞர்களால் மணிப்பிரவாளக் கவிதை இயற்ற முடியும். அதனால் தொடக்கத்தில் மணிப்பிரவாள நுாலாசிரியர்களெல்லாரும் நம்பூதிரிகளாய் அமைந்தனர். அவர்கள் சமஸ்கிருத இலக்கணத்தைப் போன்று யாப்பையும் நாட்டு மொழியில் தோற்றுவித்தனர்.

'உண்ணு நீலி சந்தேசம்' 'சந்திரோத்சவம்' 'சம்புகள்' ஆகியவை சமஸ்கிருத யாப்பில் அமைந்த மிகச் சிறந்த நுால்களாகும்.

வடமொழியில் சுலோகத்தை அமைத்து விட்டு அங்கு மிங்கும் ஒன்றிரண்டு மலையாள நாட்டு மொழிச் சொற்களை வழங்கினால் சுலோகம் முழுவதும் மணிப்பிரவாளம் ஆகிவிடும்.

இடைக்காலக் கட்டத்திலுள்ள மணிப்பிரவாளக் கவிஞர்களில் 'செலுசேரி' ஒருவர் மாத்திரமே, சமஸ்கிருத வெறியில்லாமல் நாட்டு மொழியை ஆதரித்தார். இக்காலக் கட்டத்தில்தான் 'தச்சொள்ளிப் பாட்டு' முதலிய சில நுால்கள் சமஸ்கிருதத் தொடர்பு சிறிதும் இல்லாமல் எழுந்தன.

இரண்டாவது கட்டமாக, கேரள மொழி பருவம் நிறைந்தது; தனித்து நிற்கும் ஆற்றல் பெற்றது. அதனால் ஒரு காப்பாளனின் கீழ் அடங்கியிருக்கும் நிலை தானாக நீங்கியது. யௌவனப் பருவத்தை அடைந்த நிலையில் மேல் துணைக்கு வேண்டியவர் காப்பாளர் அல்லர்; கணவனே ஆவான்!

திராவிடக் குலப் பெண்ணாகிய திருவளர்ச் செல்வி கேரள மொழி, ஆரிய குலத்தின் முதல்வனாகிய சமஸ்கிருத மணமகனைச் சுயம்வரக் கணவனாகப் பெற்று விளங்கினாள்.இந்த மங்கல நிகழ்ச்சியை, அல்லது திருமணத்தை வேண்டியவாறு சிந்தித்து அழகுற நடத்தியவர், துஞ்சத்து ராமாநுஜன் எழுத்தச்சன் என்ற பெரும்புலவர் ஆவார்.

மலையாளப் பெண்ணுக்குப் பழமையான தமிழ் நெடுங்கணக்கு என்னும் சட்டை சிறிதும் மனநிறைவை அளிக்கவில்லை. கேரளத் திருமண மரபில் 'உடை அணிவித்தல்' என்பது முக்கிய சடங்கு.

மொழிகளுக்கு உடையாக விளங்குவது, நெடுங்கணக்கு,

அதனால், மலையாளமொழி சமஸ்கிருதமாகிய ஆரிய எழுத்துகளை இக்காலத்தில் ஏற்றுக் கொண்டது. தமிழ் நெடுங்கணக்கு மாறியதோடு, மலையாளத்தின் புறவேடமும் முழுமையாக வேறுபட்டது.

எஸ்.வையாபுரிப் பிள்ளையின் கருத்து

தமிழிலிருந்து மலையாளம் 10-ஆம் நுநூற்றாண்டில் பிரியத் தொடங்கியது. தமிழ்மொழி மூன்று நிலைகளையுடையது.

அவை பண்டைத் தமிழ் நிலை, இடைக்காலத் தமிழ் நிலை, தற்காலத் தமிழ் நிலை என்பன.

பண்டைத் தமிழை, சங்க இலக்கியங்களைக் கொண்டும் தொல்காப்பிய இலக்கணங்களைக் கொண்டும் அறியலாம்.

இடைக்காலத் தமிழை தேவாரம்,திவ்யப்பிரபந்தம், சிந்தாமணி முதலிய இலக்கியங்களைக் கொண்டும் வீர சோழியம்,நன்னுால் முதலிய இலக்கணங்களைக் கொண்டும் அறியலாம்.

தற்காலத் தமிழை நன்னுாலுக்குப் பிற்பட்ட இலக்கியங்களைக் கொண்டும் பேச்சு வழக்குத் தமிழைக் கொண்டும் அறிய வேண்டியுள்ளது என்று எஸ்.வையாபுரிப் பிள்ளைகூறுகிறார்.

இந்த மூன்று நிலைகளில் எந்த நிலையுடன் பழைய மலையாள மொழி ஒத்து இருக்கிறது என்பதைப் பற்றிய அவருடைய கருத்து சிந்தனைக்குரியது.

பிற்காலச் சொற்கள்

பிரான், சிரி, தங்கம் என்ற சொற்களே பண்டைத் தமிழிற் கிடையா.முதலிரண்டு சொற்கள் இடைக்காலத் தமிழ் இலக்கியங்களில் அருகித் தோன்றி, அக்காலத்தின் இறுதியிலுள்ள இலக்கியங்களில் சற்று மிகுதியாகக் காணப்படுகின்றன.

'தங்கம்' மிகப் பிற்பட்ட சொல். 16-ஆம் நுாற்றாண்டில் தோன்றிய சூடாமணி நிகண்டிற்கூட, இச்சொல் காணப்படவில்லை. மலையாளத்தில் 'நளசரிதம்' என்ற நுாலில் இச்சொற்கள் வருகின்றன. பொதுப்பட நோக்கினால் மலையாள பழைய இலக்கியங்களில் காணும் சொற்களில் பெரும்பாலானவும், இடைக்காலப் பிற்காலத் தமிழ் இலக்கியங்களில் வந்துள்ளனவேயாகும்.

இல்லம் என்ற சொல்,மலையாளத்தில் அதிகமாக வழங்கப்படுகிறது. ஆனால், தமிழில் இது பிற்கால வழக்கு; சங்க காலத்தில் 'இல்' என்றே உள்ளது. 'இல்லடுக்களன்' என்பது புறநானுாறு, இல்லம் என்ற சொல்லை அப்பர் வழங்குகிறார். இப்பிற்பட்ட சொல் வழக்கே மலையாளத்தில் காணப்படுவது.

இங்ஙனம் இடைக்காலத்து இறுதியில் தோன்றிய தமிழ்ச்சொல் வடிவங்கள் பழைய மலையாள இலக்கியத்தில் காணப்படுகின்றன.

ஒலி மாற்றம்

மொழிகளில் மிகவும் பழமையான சொற்கள், 'ஸர்வ நாமங்கள்' என்று சொல்லப்படுகிற மூவிடப் பெயர்களும் ஒன்று முதலிய எண்ணுப் பெயர்களும் ஆம். மூவிடப் பெயர்களில் 'யான்' என்பது தன்மை ஒருமைக்குரிய பண்டைத் தமிழ்; நான் என்பது இடைக்காலத்தே தோன்றி நாளடைவில் வழக்கில் மிகுந்த இன்றையச் சொல்லாகி விட்டது.

இப்படித் திரிந்த தன்மைப் பெயரே, மலையாளத்தில் ராமசரிதத்தில் 'ஞான்' என வருகிறது. நான் என்பது ஒலி மாற்றத்தால் திரிந்து 'ஞான்' என வருதல் இங்கு அறியத்தக்கது. நாலு - ஞாலு; நாலுதல் - ஞாலுதல் முதலிய சொற்களை நோக்குக.

எண்ணுக்குரிய பெயர்களில் ஒன்று என்பது ஒந்து என மலையாளத்தில் வரும். இது இடைக்காலத்தின் இறுதியில், பேச்சு வழக்குத் தமிழிலிருந்து தோன்றிய வடிவமாகும். இதுபோன்ற பல சொற்கள் உள்ளன. 'முந்நு' 'சுந்துகாலி' முதலியவற்றைக் கூறுவர்.

இவையாவும் தமிழ்ச் சொற்கள் ஒலிமாறி விளைந்த, மலையாளச் சொற்களே.

சொல் அமைதி- இடைநிலை

'அறிவிக்கின்றேன்' என்ற சொல்லில் உள்ள 'கின்று' என்னும் இடைநிலை, தொல்காப்பியத்திற் கூறப்படவில்லை. சங்க இலக்கியங்களிலும் காணப்படவில்லை.

இடைக்காலத்து இறுதியில் உள்ள இலக்கியங்களிலும் 13-ஆம் நுாற்றாண்டில் தோன்றிய நன்னுாலிலும் காணப்படுகின்றது.

மலையாளத்தில் இவ்வினைச் சொல் 'அறிவிக்கிந்நேன்' என வழங்கப்படுகிறது; ஒன்று- ஒந்நு என வருதல் போல், 'கின்றேன்' என்பது 'கிந்நே' என வந்தமையும் வெளிப்படை.

இதனால், இடைக்காலத்து இறுதியிலுள்ள தமிழ் வினைமுற்றின் அமைதியே பழைய மலையாளத்தில் காணப்படுகிறது என்பதை அறியலாம்.

மொழி நடை

இடைக்கால இறுதியில் மலையாள வாக்கியங்கள் கூர்மையாய் அமைந்து, பேச்சு, வழக்கைப் பெரும்பாலும் ஒட்டிச் செல்கின்றன. கம்பன் செய்யுளையும், ராமசரிதத்தையும் ஒப்பு நோக்கினால், ஒத்திருக்கின்றன. மொழிநடை ஈரிடத்திலும்

எனவே, இடைக் காலத்தின் இறுதியிலுள்ள எளிய தமிழ் நடையைச் சார்ந்து தோன்றியதே, பழைய மலையாளப் பாட்டுகளின் நடையென்பது விளங்கும்.

செய்யுள் அமைதி

மலையாளத்திலுள்ள பழைய நுாலாகிய 'ராமசரிதம்'பாட்டு என்ற முறையில் அமைந்ததாகும். இது பிற்காலத் தமிழ் இலக்கியத்தையொட்டி அமைந்தது என்று உறுதியாகக் கூறலாம்.

ராமசரிதப் பாட்டில் ஈ வண்ணம், ஒரிக்கால், இப்பொழ் முதலிய மலையாளச் சொற்கள் தமிழ் வடிவத்திலேயே உள்ளனசாசன காலம்

தமிழிலிருந்து மலையாளம் வேறுபடத் தொடங்கிய காலத்தை சாசனங்கள் மூலம் ஒருவாறு வரையறுத்தல் கூடும்.

வேறொரு பழைய சாசனம் கவியூரில் உள்ளது. அதன் காலம் கி.பி.950. இதில் பேச்சு வழக்குத் தமிழும், 'சேந்தன்' முதலிய தமிழொலி மாறிய மலையாள வடிவங்களும் காணப்படுகின்றன.

நல்ல தமிழில் எழுதிய சேர நாட்டுக் கவிஞர்கள்

இக்காலத்திற்கு முன்பு, ஒலி மாற்றம் முதலிய நேர்ந்தமைக்கு யாதொரு சான்றுமில்லை. நேர்மாறாக இதற்கு முன்புள்ள சேரநாட்டுக் கவிஞர்கள் அனைவரும் நல்ல தமிழிலேயே இயற்றியுள்ளனர்.

குலசேகர ஆழ்வார், சேரமான் பெருமாள் நாயனார், சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகள் முதலியோரைக் குறிக்கலாம்.

மலையாள நாட்டில் இன்றும் வழங்கும் சங்ககாலத் தமிழ்ச் சொற்கள்

சங்க காலத்திற்குச் செல்வோமானால் 'பதிற்றுப்பத்து' என்ற தொகை நுாலைக் காண்கின்றோம். சங்கச் செய்யுட்களில் வந்துள்ள ஒரு சில சொற்கள் இன்றும் மலையாள நாட்டில் வழங்கி வருகின்றன. தமிழ் மொழிக்குரிய வட்டெழுத்துகளே, மலையாள நாட்டில் பூர்வ காலத்தில் கையாளப்பட்டு வந்தன. அங்குள்ள சாசனங்கள் அனைத்தும், தமிழ் மொழியிலேயே அமைந்துள்ளன.

இவை, தமிழ் மொழியே பண்டைக் காலத்தில் இந்நாட்டில் வழக்கத்திலிருந்தென்பதைப் புலப்படுத்தும். பழைய மலையாளக் கவிஞர்கள் தமது மொழியைத் 'தமிழ்' என்ற பெயரிலேயே அழைக்கின்றனர். இராமப் பணிக்கன் தமது பிரம்மாண்ட புராண மொழி பெயர்ப்பைக் குறித்து, 'இதாஞான் தமிழாய்க் கொண்டறியிக்கிந்நேன்' என்று கூறியுள்ளார்.மலையாளத்தின் தாய் மொழி தமிழே

சொற்கள், சொல் வடிவம், ஒலிமாற்றம், சொற்களின் அமைப்பு, சொற்பொருள் மொழியின் நடை, செய்யுள் அமைதி, சாஸன இலக்கியம், மலையாள நாட்டினர் இயற்றிய பூர்வ இலக்கியங்கள், எழுத்து வரலாறு, மலையாளக் கவிஞர்கள் கருத்து முதலிய பல துறைகளையும் நோக்கினால், இடைக்கால இறுதியில் உள்ள தமிழிலிருந்து கி.பி. 10-शुपं நுாற்றாண்டளவிலே பழைய மலையாள மொழி தோன்றத் தொடங்கியதென்று ஐயமின்றிக் கூறலாம்.

இதனால் தமிழும் மலையாளமும், தாயும் மகளும் என்ற தொடர்புடையன என்பது தெளிவாகும்.

கேரள கெஸட்டரின் ஆசிரியர்

அரூர் இராமச்சந்திரன் நாயர் கருத்து

மலையாள மொழி, எழுத்து மொழியாக கி.பி. 11-ஆம் நுாற்றாண்டிலிருந்துதான் வழக்கில் வந்தது. அல்புர்னி என்ற முகமதிய அறிஞர் முகமது கஜினியின் அரசவை அறிஞராகத் திகழ்ந்தவர்.

அவர் 11-ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் மலபாரைப் பற்றிக் கூறுகையில், 'இந்த நாட்டில் வெற்றிலை ஏராளமாகக் கிடைக்கிறது. இந்நாட்டில் வெள்ளி மற்றும் தங்க நாணயங்கள் அதிகம் புழக்கத்தில் இருக்கின்றன. அந்த நாணயங்களை வெளிநாடுகளுக்கு அவர்கள் ஏற்றுமதி செய்வதில்லை. இம்மக்கள் கலப்படமாக ஒரு மொழியைப் பேசுகின்றனர்' என்று எழுதியுள்ளார்.

இதிலிருந்து மலையாள மொழி இக்காலக் கட்டத்தில் பிரிந்து தனிமொழியாகவில்லை என்று எண்ணத் தோன்றுகிறது.

அடுத்தபடியாக 'மார்க்கோபோலோ' என்ற மாலுமி கி.பி.1280-ஆம் ஆண்டு மலபாருக்கு விஜயம் செய்து விட்டு 'மலபார் மக்களுக்குத் தனியாக ஒரு மொழி இருக்கிறது. அவர்களுக்குத் தனி அரசன் உள்ளான். அந்த அரசன் ஒருவருக்கும் கப்பம் செலுத்துவதில்லை' என்று கூறியுள்ளார்.

அண்மைக்கால போர்த்துக்கீசிய ஆசிரியர்கள் மலையாள மொழிக்கு 'மலையாமா' என்று பெயர் கொடுத்துள்ளார். இக்கருத்தை எடுத்துக் கொண்டால் மலையாள மொழிஇக்காலக் கட்டத்தில் தமிழிலிருந்து பிரிந்து தனித்தன்மை பெற்றுத் தனி மொழியாகி விட்டது என்பதை உணரலாம்.

கேரளத்தில் கிடைத்துள்ள செப்பேடுகளிலும், கல்வெட்டுகளிமுள்ள மொழி செந்தமிழுடன் மிக நெருங்கி இருப்பதை உணரலாம். மலையாளத்திற்குரிய சில சொற்களை, இக்கல்வெட்டில் காண முடிகின்றது. எட்டு, ஒன்பது நுாற்றாண்டுகளில் எழுதப்பட்டுள்ள சிரியன் கிறித்துவச் செப்பேடுகளைச் செந்தமிழின் அறிவு இல்லாமல் படிக்க முடியாது.

மலையாள மொழியின் ஆரம்ப காலத்தில் எழுதப்பட்ட ‘ராம சரிதம்' பெரும்பாலும் தமிழைப் போன்றே உள்ளது. மேலும் அய்யப்பிள்ள ஆசானின் இராம கிருஷ்ணப்பாட்டு கண்ணாசப்பணிக்கரின் இராமாயணம், பய்யனுார் பாட்டோலை மற்றும் நம்பூதிரிகளின் யாத்திரைக் களிப்பாட்டுகள் ஆகியவை தமிழை ஒத்தே காணப்படுகின்றன.

'ஆதி காலத்தில் கல்வெட்டுகள், மற்றும் செப்பேடுகளில் வட்டெழுத்தே பயன்படுத்தப்பட்டுள்ளது. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலம் வரை, மலையாள மொழியில் தமிழ் எண்களே பயன்படுத்தப்பட்டன. இக்காலங்களைக் கொண்டு மலையாளம் தமிழின் கிளை மொழி என்றே எண்ணத் தோன்றுகிறது. காலக் கிரமத்தில் தமிழின் செல்வாக்கு குறைந்த போது மலையாளம் வளர்ச்சியடைந்து தனித்தன்மை அடைந்துவிட்டது.

மலையாள மொழியைத் தமிழனாலும் தமிழை மலையாளிகளாலும் சிரமமின்றிப் புரிந்து கொள்ள முடிகின்றது என்பதை வைத்தே இந்த இரு மொழிகளுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை உணர முடியும்.

பேராசிரியர்

இளங்குளம் குஞ்சன்பிள்ளை கருத்து

வடமொழியும் செந்தமிழும் கலந்து உருவானதே மலையாளம். நம்பூதிரிகள் கேரளத்திற்கு வரும்போது தமிழே பேசப்பட்டது.

இந்த மொழியின் வளர்ச்சியைக் கல்வெட்டுகளிலிருந்தும், இராம சரிதத்திலிருந்தும் அறியலாம். மலையாள மொழியை முதலில் நம்பூதிரிகளே எழுத முயன்றனர். மலையாள மொழி வளர்ச்சிக்கு அவர்களே காரண கர்த்தாக்களாவர்.இந்திய அரசின் முன்னாள் தலைமைக் கல்வெட்டியலாளர் கே.ஜி.கிருஷ்ணன்

பத்தாம் நுாற்றாண்டுக் கல்வெட்டுகளில் 'இடைக்காலத் தமிழ்' வழங்கப்படும் தமிழ் மொழியுள்ளது. இந்த இடைக்காலத் தமிழிலிருந்து தான் மலையாள மொழி தோன்றியது.

''கேரளத்திலும் தமிழ் நாட்டிலும் கிடைத்துள்ள பத்தாம் நுாற்றாண்டுக் கல்வெட்டுகள் பலவற்றை ஒப்புநோக்கும் போது இரண்டிலும் காணப்படும் சொற்றொடரின் அடிப்படை வடிவம் ஒன்றே எனலாம்.

இக்கல்வெட்டுகளில் வட்டார மொழிக்குரிய சில சிறப்புத் தன்மைகளையும் இவர் குறிப்பிட்டுள்ளார்.

மொழிக்கும், வட்டார மொழிக்கும் உள்ள வேறுபாடுகளைக் கடந்து கேரளக் கல்வெட்டுகள் தமிழ் மொழியில் அமைந்தன என்றே கூற வேண்டும்.

உள்ளூர் மொழியில் இலக்கியம் என்று கூறத்தக்க ஒன்றும் இக்காலக் கட்டத்தில் மேற்குக் கரையில் தோன்றவில்லை.

கல்வெட்டுகளில் காணப்படும் வட்டார வழக்குகளும், பேச்சு வழக்குகளும் மொழியில் ஒன்றிப் போய், வட்டார மொழி என்ற நிலையிலிருந்து மலையாளம் என்ற தனிமொழி மாறுபட்டுத் தோன்றியது.

ஒவ்வொரு பகுதியிலும் எழுவாய் முதல் பயனிலை வரையிலும் உள்ள சொல் அமைப்பு, தனித்துவம் பெற்றுள்ள பாங்கினைக் கேரளாவைத் தவிர வெளியில் எங்கும் காண முடியாது. எனவே மலையாளம் என்பது தனி மொழியாக 12-ஆம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் உருவெடுத்தது என முடிவு செய்யலாம்.

கால்டுவெல் அவர்களின் கோட்பாடு

மலையாளம், தமிழின் மிகப் பண்டைய கிளை மொழியாகும். வினைச்சொல் பயன்பாட்டிலும், ஏற்றுக் கொண்டுள்ள ஏராளமான சமஸ்கிருதச் சொற்களினாலும் தற்போது மலையாளம் தமிழிலிருந்து வேறுபட்டு நிற்கின்றது. அது திராவிட மொழிக் குடும்பத்தின் தனிப்பட்ட உறுப்பினர் என்று கருதுவதை விடத் தமிழின் வட்டார மொழி வடிவம் என்றே கருதலாம்." (நூலிலிருந்து)

"பிற்காலத் தமிழ் வட்டெழுத்து" - இரா. கிருஷ்ண மூர்த்தி

கல்வெட்டுகள் தொடர்பான நூல்கள்: https://www.heritager.in/product-category/books/tamil/history/inscriptions/
-பகுத்தறிவாளர்கள் vs. மதவாதிகள்
முகநூல் பதிவிலிருந்து..

ஞாயிறு, 8 டிசம்பர், 2024

ஒன்பதா? தொண்டா?

சங்க இலக்கியப் பாடல்களில் உள்ள எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பரிபாடல் என்ற நூலில் பாடியுள்ள புலவர்களில் ஒருவரான 
 'கடுவன் இளவெயினனார்' என்பவர் பாடிய பாடல் ஒன்றில் 

“பாழெனக் காலெனப் பாகென ஒன்றென 
இரண்டென மூன்றென நான்கென ஐந்தென
ஆரென ஏழென எட்டென தொண்டென
நால்வகை ஊழிஎண் நவிற்றும் சிறப்பினை” என்று இப்படி
கூறுகிறார்.

 "0” என்பது தொடங்கி காலென 1/4, பாகெனத் தொடங்கி  1/2, 1,2,3,4,5,6,7,8,9  எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. (பாழ்-0)

தற்போது நாம் 9 என்பதை ஒன்பது என்று கூறுகிறோம்; ஆனால் அந்த புலவரோ 'தொண்டு' என கூறுகிறார்.
அப்பொழுது ஒன்பது என்பதற்கு 'தொணடு' என்றுதான் கூறி வந்திருக்கின்றனர்.