பக்கங்கள்

புதன், 21 ஜனவரி, 2026

தைப்பொங்கல் – திராவிடர் பண்பாட்டு மீட்டுருவாக்கத் திருவிழா!-கி.வீரமணி


 ‘‘இப்பொங்கல் விழாவின் தத்துவம் என்ன வென்றால் விவசாயத்தையும், வேளாண்மையையும் அடிப்படையாகக் கொண்டு அறுவடை விழாவென்று சொல்லப்படுவதாகும். ஆங்கிலத்தில் ‘‘ஹார்வெஸ்ட் ஃபெஸ்டிவல்’’ என்று சொல்லப்படுவதன் கருத்தும் இதுதான்.’’

‘‘தமிழ் மக்களுக்குப் பாராட்டத்தக்க ஓர் உண்மையான திருநாள் உண்டு என்றால், அது தமிழர் திருநாளாகிய பொங்கல் திருநாள்தான். மற்ற திருநாள் எல்லாம் வைதீகச் சம்பந்தமானது. இந்தத் திருநாள் ஒன்றுதான் பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்டது.’’

– பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்

தைப் பொங்கல் என்ற பொங்கல் விழா – திராவிடர் – தமிழர் திருவிழா – பண்பாட்டு அடிப்படையில் அமைந்தது; பகுத்தறிவு அடிப்படையிலும் பெருமை உடையது. ‘அறுவடைத் திருநாள்’ என்று உலகெங்கும் கொண்டாடும் உழவர் தம் உழைப்பின் வெற்றியை எண்ணி உவகை பொங்கக் கொண்டாடப்படும் உன்னதத் திருவிழா!

திராவிடப் பண்பாடு – மனுதர்ம ஆரியப் பண்பாட்டுக்கு நேர் எதிரானது. எப்படி? ஏன்?

ஆரியப் பண்பாட்டின் அகம் மனுதர்ம சாஸ்திரம்.

அதில், உலகத்தாரின் உயிருக்கே பாதுகாப்பான உணவைத் தரும் வேளாண்மையை எவ்வளவு கொச்சைப்படுத்திக் கூறப்பட்டிருக்கிறது என்பதைப் பாருங்கள்.

‘‘சிலர் பயிரிடுதலை நல்ல தொழில் என்று நினைக்கிறார்கள். அந்தப் பிழைப்பு பெரியோர்களால் நிந்திக்கப்பட்டது; ஏனெனில், இரும்பை முகத்திலே உடைய கலப்பையையும், மண்வெட்டியையும், பூமியையும், பூமியில் உண்டான பல ஜந்துக்களையும் வெட்டுகிறதல்லவா?’’

– (மனு அத்தியாயம் 10; சுலோகம் 84).

இதற்கு முந்தைய சுலோகம் கூறுவதென்ன?

‘‘பிராமணனும், க்ஷத்திரியனும் வைசியன் தொழிலினால் ஜீவித்த போதிலும், அதிக ஹிம்சையுள்ளதாயும், பராதீனமாயும் இருக்கிற பயிரிடுதலை அகத்தியம் நீக்கவேண்டியது.’’ (‘‘அதைச் செய்யாவிட்டால், ஜீவனம் நடக்காத காலத்தில் அதையும் அந்நியனைக் கொண்டு செய்விக்க வேண்டும்‘’ என்பது முன் சுலோகத்தின் கருத்து)

– (மனு அத்தியாயம் 10; சுலோகம் 83).

இதற்கு முன் சுலோகம் கூறுவதென்ன? பார்ப்போமா!

‘‘தன் ஜாதித் தொழில், க்ஷத்திரிய ஜாதித் தொழில் இரண்டினாலும் ஜீவிக்கக் கூடாவிடில் வைசியன் தொழிலான பயிரிடுதல், பசுவைக் காப்பாற்றல், வியாபாரஞ் செய்தல் இவைகளாலும் ஜீவிக்கலாம்.’’

– (மனு அத்தியாயம் 10; சுலோகம் 82).

இந்த சுலோகத்திற்குமுன் உள்ள சுலோகம் (அத்தியாயம் 10, சுலோகம் 81) கூறுவது என்ன?

‘‘பிராமணனுக்கு மேற்சொல்லிய பிரகாரமாக தன் தொழிலினால் ஜீவிக்கக் கூடாத சமயத்தில் கிராமாதிகாரந் தேசாதிகார முதலிய க்ஷத்திரியன் தொழிலினால் ஜீவிக்க வேண்டியது. ஏனென்றால், அது அவனுக்கு அடுத்த ஜாதியின் தொழில் அல்லவா?”

(ஆதாரம்: ‘‘அசல் மனுதர்மம்‘’, பதிப்பு 1919, திருவைந்திரபுரம் – கோமாண்டூர் – இராமாநுஜாசாரியார் – வடமொழி, சமஸ்கிருத பாஷையில் உள்ளது)

பக்கம் 295.

இதன் கருத்து:

  1. பயிரிடுதல் மிகவும் மோசமான தொழில் – நல்ல தொழில் அல்ல.
  2. அவனவன், அவனவன் தொழிலையே செய்யவேண்டும்.
  3. அது முடியாத காலங்களில், தவிர்க்க முடியாத பட்சத்தில் இந்தப் பயிர்த் தொழிலையும் மாற்றிச் செய்து, உயிர்களைக் காப்பாற்றலாம் (வெறுப்புடன் விதிவிலக்கு).

ஆனால், மனித குலத்தையே ஓர் குடும்பமாகப் பார்க்கும் மகத்தான திராவிடர் பண்பு பூத்துக் குலுங்கும் திருக்குறள் – உழவின் சிறப்புபற்றி ஒரு தனி அதிகாரத்தையே – 10 குறள்பாக்களில் படைத்துக் காட்டி – காரண காரிய விளக்கத்துடன் பெருமைப்படுத்துகிறது!

அதிகாரம் 104 – ‘உழவு’ என்ற தலைப்பில்,

‘சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்

உழந்தும் உழவே தலை’ (குறள் 1031)

எனத் தொடங்கி, 10 குறள்பாக்களில் உழவின் சிறப்பை வானளாவிய வகையில் புகழுகிறார் வள்ளுவர்!

ஒரு குலத்துக்கொரு நீதி – தொழில் பேசுகிறது மனு!

மக்களை ஜாதிப் பார்வையால் பிரித்து அளக்கிறது, பிளக்கிறது! – அது ஆரியம்.

ஆனால், திருக்குறளோ இந்தப் பத்துக் குறள்களில் உலகத்தையே – மனித குலத்தையே ஒன்றுபடுத்தி ஒரே அணியாய்ப் பார்த்துப் பெருமைப்பட்டுக் கூறுகிறது என்பதற்கு சான்றுகள்தான் உலகம், உலகம் என்று பலமுறை கூறி, உறுதிப்படுத்தும் பரந்த பார்வை (Inclusiveness). இது திராவிடப் பண்பாடு!

மனுவோ, உழவை சூத்திரர்கள், வைசியர்கள் செய்யும் தொழில் என்று வெறுப்புடன் பார்த்து, உயிர்காப்பதைக்கூட, பின்னுக்குத் தள்ளி, பிளவுபடுத்திப் பிரித்து வைக்கிறது (Exclusiveness). இது ஆரியப் பண்பாடு.

எனவே, திராவிடப் பண்பாட்டுத் திருவிழா – பொங்கல் விழா – உழவர் திருநாள் – அறுவடைத் திருவிழா என்பது அய்யந்திரிபற விளங்குகிறது அல்லவா?

மேலும் எவ்வித தனிச்சிறப்புமற்ற ஆரியப் பண்டிகைகளுக்கு இல்லாத தனிச்சிறப்பு திராவிடப் பண்பாட்டுத் திருவிழாவிற்கு உண்டு. இவ்விழா ஒரு மதம்சார்ந்த விழா (தீபாவளி போல) அல்ல! அனைத்து உழவர்களும், மக்களும் பிறவிபேதமின்றி மகிழ்ந்து நன்றி செலுத்திக் (Thanks giving) கொண்டாடுவதாகும். இயற்கைக்கு – உழைப்போருக்கு – உழைப்பில் உதவிடும் மாடுகளுக்கும், மனிதர்களுக்கும் பேதமின்றி நன்றி பாராட்டும் பேதம் நீக்கிய பெருவிழா – திருவிழா!

தீபாவளி கதை கட்டுக்கதை. புராணக் கதையில்கூட உயிர்க்கொலைகள் – கொலைகளைக் கொண்டாடும் பண்டிகை!

இங்கோ புதுப்பொங்கல்! புத்துலகுக்குத் தெம்பூட்டும் புது வெள்ள மகிழ்ச்சி – புது நம்பிக்கை பூத்துக் குலுங்கும் புத்தெழுச்சித் திருவிழா! பண்பாட்டுப் படையெடுப்பை முறியடித்து, ஜாதி, மத, பேதம் ஒழித்த ‘உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ’ என உலகுக்குப் பறைசாற்றும் அனைவருக்குமான திராவிடத் திருவிழா!

ஆரியப் பண்டிகை மற்ற இந்து மதப் பண்டிகைகள் – அசுரர்களைக் கொன்றனர் தேவர்கள் என்று இனப் போராட்ட மறைவு வைத்த புனைவுகள்தானே!

அது செயற்கை (கற்பனை) – பொங்கல் விழா இயற்கையானது – உண்மையும்கூட!

திராவிடர் இயக்கம் இதனை மீட்டெடுத்து, திராவிடர்தம் திருவிழா என்று பகுத்தறிவுடன் விளக்கி செம்மாந்து நிற்கிறது!

ஆய்வு அறிஞர் பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்கள், மற்றொரு புதிய கோணத்தில் பொங்கல் விழாவை விளக்குகிறார்!

‘‘தமிழர்களின் தனிப்பெரும் திருவிழாவாகத் திகழ்வது தைப் பொங்கல் திருநாள். தேசிய இனத்துக்குரிய அடையாளம் ஒன்றைத் தமிழர்க்கு வழங்கும் திருவிழா இது. சமய எல்லைகளைக் கடந்த திருவிழாவாகவும் இது அமைகிறது.

பிறப்பு, இறப்புத் தீட்டுக்களால் பாதிக்கப்படாத திருவிழா இது என்பது பலர் அறியாத செய்தி. தைப் பொங்கல் நாளன்று ஒரு வீட்டில் இறப்பு நிகழ்ந்தாலும், மிக விரைவாக வீட்டைச் சுத்தம் செய்து, இறந்தவர் உடலை எடுத்துச் சென்றவுடன், தைப் பொங்கல் இடும் வழக்கத்தை நெல்லை மாவட்டத்தில் காணலாம். பொங்கல் திருநாளன்று, திருவிளக்கின் முன் படைக்கும் பொருள்களில் காய்கறிகளும், கிழங்கு வகைகளும் சிறப்பிடம் பெறுகின்றன. இவற்றுள் கிழங்கு வகைகள் (சேனை, சேம்பு, கருணை, சிறுகிழங்கு, பனங்கிழங்கு) பார்ப்பனர்களாலும், பெருங்கோவில்களாலும் காலங்காலமாக விலக்கப்பட்ட உணவு வகைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்சொன்ன இரண்டு செய்திகளாலும் தைப்பொங்கல் தமிழர்களின் திருவிழா என்பதையும், அது பார்ப்பனியப் பண்பாட்டிலிருந்து விலகி நிற்பது என்பதனையும் உணர்ந்து கொள்ளலாம்.’’

– தொ.ப.சி. ‘‘பண்பாட்டு அசைவுகள்’’, நூல் பக்கம் 56)

திராவிடர் இயக்கம் – அறிவு ஆசான் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி, திராவிடர் கழகம், இனமான தமிழ் உணர்வாளர்கள் பொங்கல் விழாவைப் பொலிவுடன் கொண்டாடுவதை – எப்படியெல்லாம் ஒரு பண்பாட்டுப் படையெடுப்பை விரட்டிடும் வீரம் செழிக்கும் விழா என்பதை – பூரித்து வாழ்த்துகிறார் நம் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.

‘‘பத்தன்று; நூறன்று; பன்னூ றன்று;

பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்

புத்தாண்டு, தைம்முதல்நாள், பொங்கல் நன்னாள்,

போற்றி விழாக் கொண்டாடி உன் நலத்தைச்

செத்தவரை மறந்தாலும், மறவா வண்ணம்

செந்தமிழால் வானிலெல்லாம் செதுக்கி வைத்தோம்!

பத்தரை மாற்றுத் தங்கம் ஒளி மாய்ந் தாலும்

பற்றுள்ளத்தில் உன் பழஞ்சீர் மங்கிற் றில்லை.’’

‘‘தமிழகமே, திராவிடமே, தைம்மு தல்நாள்

தன்னில் உன்னை வாயார வாழ்த்து கின்றேன்

அமிழ்தான பாற்பொங்கல் ஆர உண்டே

அதைஒக்கும் தமிழாலே வாழ்த்து கின்றேன்;

எமைஒப்பார் எவருள்ளார்? எம்மை வெல்வார்

இந்நிலத்தில் பிறந்ததில்லை; பிறப்ப தில்லை.

இமைப்போதும் பழிகொண்டு வாழ்ந்த தில்லை

எனும்உணர்வால் வாழ்த்துகின்றேன்; வாய்ப்பேச் சல்ல.”

- விடுதலை நாளேடு, 14.01.26

வெள்ளி, 16 ஜனவரி, 2026

பொள்ளாச்சி துப்பாக்கி சூடு பொய்யா?


பராசக்தி படத்தில் காட்டப்படும் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் பொள்ளாச்சி துப்பாக்கிச்சூடு சம்பவம் நடக்கவே இல்லை எனப் பலர் வாதிடுகின்றனர்.

ஏனென்றால் கூகுளிடம் சென்று பொள்ளாச்சி துப்பாக்கி ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் சூடு தொடர்பான ஆவணங்கள் உண்டா என்றேன். உடனே அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை என அது சாதித்தது.

Anti Hindi Agitation Pollachi Police Gun firing.

இணையம் முழுக்க தேடியதில் இந்தியன் எக்ஸ்பிரஸில் 1965 ல் Feb 13 ஆம் தேதி சனிக்கிழமை அன்று  ஆங்கிலத்தில் வெளிவந்த செய்தி குறிப்பை கண்டறிந்து அதன் செய்தியை முதன் முறையாக இங்கு தொகுத்து இட்டிருக்கிறேன். படித்த அறிந்து பகிர்ந்து உதவவும். இல்லையென்றால் எல்லாமே பொய்யென்று நிரூபணமாகிவிடும்‌ 

"தலைப்பு: கலவரத்தை ஒடுக்க ராணுவம் நடவடிக்கை

(படக்குறிப்பு 2: வியாழக்கிழமையன்று ஆவடிக்கு அருகே வன்முறையாளர்களால் பயணிகள் இறக்கிவிடப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்ட 8 பெட்டிகள் கொண்ட பயணிகள் ரயிலின் எஞ்சிய பாகங்கள் இவை.)

பொள்ளாச்சியில் வன்முறை கும்பலின் வெறியாட்டம்: மீண்டும் போலீஸ் துப்பாக்கிச் சூடு; பலி எண்ணிக்கை 46-ஆக உயர்வு

இயந்திரத் துப்பாக்கிகளுக்கும், போலீஸ் தோட்டாக்களுக்கும் இதுவரை 46 உயிர்கள் பலியாகியுள்ளன. கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் இன்று ராணுவம் களத்தில் இறங்கி நடவடிக்கை எடுத்தது. அங்கு நடத்தப்பட்ட இயந்திரத் துப்பாக்கி மற்றும் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில், நான்கு வயதுக் குழந்தை உட்பட பத்து பேர் பலியாயினர்.

மாநிலத்தின் குறைந்தது 11 இடங்களில் இன்று நடந்த போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் மேலும் 16 பேர் கொல்லப்பட்டனர். பாண்டிச்சேரியில் நேற்று இரவு 4 பேர் கொல்லப்பட்டனர். இதன் மூலம் தற்போதைய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 46-ஆக உயர்ந்துள்ளது.

திருச்சியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவரும், சென்னிமலை, ஜோலார்பேட்டை, திருவொற்றியூர் மற்றும் ஆற்காடு ஆகிய இடங்களில் தலா ஒருவரும் உயிரிழந்தனர்.

மாணவர் இந்தி எதிர்ப்புப் போராட்டக் குழு விடுத்த அழைப்பை ஏற்று மாநிலம் முழுவதும் முழு அடைப்பு (ஹர்த்தால்) கடைபிடிக்கப்பட்ட போதிலும், வட ஆற்காடு மாவட்டத்தில் ஆரணி மற்றும் பேர்ணாம்பட்டு, தஞ்சாவூர் மாவட்டத்தில் அகரமாங்குடி மற்றும் மன்னார்குடி, மதுரை மாவட்டத்தில் கூடலூர் ஆகிய இடங்களில் கலவரங்களும் துப்பாக்கிச் சூடும் அமைதியைக் குலைத்தன.

பொள்ளாச்சியில் ராணுவம்

மத்திய அமைச்சர் திரு. சி. சுப்பிரமணியம் அவர்களின் சொந்த ஊரான பொள்ளாச்சியில், புதன்கிழமையன்று கலவரக்காரர்களைக் கட்டுப்படுத்த போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூடு தோல்வியடைந்தது. நகர் முழுவதும் தீ வைப்புச் சம்பவங்கள் மற்றும் பயங்கரவாதச் செயல்கள் அதிகரித்ததால், கோயம்புத்தூரிலிருந்து 7 லாரிகளில் ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு உடனடியாகக் களத்தில் இறக்கப்பட்டனர். மாநிலத்தில் ராணுவம் வரவழைக்கப்படுவது இதுவே முதல் முறை. அங்கு நடத்தப்பட்ட இயந்திரத் துப்பாக்கி மற்றும் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில், நான்கு வயதுக் குழந்தை உட்பட பத்து பேர் பலியாயினர்.

சென்னையில் (மெட்ராஸ்) ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் உள்ள தொலைபேசி பூத் ஒன்றிற்குத் தீ வைத்த கும்பலைக் கலைக்க, கடந்த இரண்டு நாட்களில் இரண்டாவது முறையாகப் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியது.

திருச்சியில் பதற்றம்

திருச்சியில் பிற்பகலில் இரண்டு முறை துப்பாக்கிச் சூடு நடந்ததையடுத்து, ராணுவம் நகரின் கட்டுப்பாட்டை ஏற்றுக்கொண்டது. அஞ்சல் நிலையத்திற்குத் தீ வைத்த கும்பலைத் தனது வீட்டு வாசலில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த 17 வயதுச் சிறுவன் உட்பட இருவர் இந்தத் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர். மற்றுமொரு இடத்தில் காவல் நிலையம் மற்றும் அஞ்சல் நிலையத்தைத் தாக்கிய கும்பல் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியது.

ரயில்வே மற்றும் பொதுச் சொத்துக்கள் நாசம்

பல புறநகர் ரயில் நிலையங்களில் ரயில்வே கேபின்கள் மற்றும் விலை உயர்ந்த சிக்னல் கருவிகள் அழிக்கப்பட்டுக் கிடந்தன. நேற்றுத் தாக்கப்பட்ட கோடம்பாக்கம் ரயில் நிலையம் இன்றும் தாக்குதலுக்கு உள்ளானது. புறநகர் ரயில் சேவையைச் சீரமைக்கக் குறைந்தது இரண்டு வாரங்களாவது ஆகும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை, தியாகராய நகர் (T.Nagar) பகுதிகளில் தபால் பெட்டிகள் மற்றும் தொலைபேசிப் பெட்டிகள் பெயர்த்து எடுக்கப்பட்டு நடுரோட்டில் தீயிட்டு கொளுத்தப்பட்டன. பல இடங்களில் பேருந்து நிறுத்தக் கம்பங்கள் மற்றும் மின் கம்பங்கள் பிடுங்கப்பட்டுச் சாலைத் தடைகளாகப் பயன்படுத்தப்பட்டன.

கும்பல் ஒன்று என்ஜின் டிரைவர் மற்றும் ஃபயர்மேனைத் தாக்கிவிட்டு நீராவி என்ஜின் மீது கற்களை வீசியது. மற்றொரு கும்பல் பிரபல தமிழ் நாளிதழ் அலுவலகத்தின் மீதும், அதற்கு எதிரே இருந்த அஞ்சல் அலுவலகத்தின் மீதும் கற்களை வீசித் தாக்கியது.

போக்குவரத்து முடக்கம்

பல இடங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பேருந்துகளை மறித்து, பயணிகளை கீழே இறங்கச் செய்துவிட்டு, பேருந்துகளை பணிமனைக்குச் செல்லுமாறு பணித்தனர். வால் டாக்ஸ் சாலையில் அரசுப் பேருந்துகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன; பேருந்துகளுக்குத் தீ வைக்கவும் முயற்சி நடந்தது. கல்வீச்சு சம்பவங்களால் பல பேருந்துகள் சேதமடைந்தன, 6 பேருந்துகள் முழுமையாக அழிக்கப்பட்டன. இதனால் 10 முதல் 30 வரை இயக்கப்பட்ட மிகக் குறைந்த அளவிலான பேருந்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.

மாநகராட்சி தொடக்கப் பள்ளி ஒன்றுக்குத் தீ வைக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினரால் சாலைத் தடைகள் காரணமாக உரிய நேரத்திற்குச் செல்ல முடியவில்லை; அவர்கள் சென்றடைவதற்குள் 4 அல்லது 5 குடிசைகள் எரிந்து நாசமாகின. போலீஸாரைக் கண்டதும் வன்முறையாளர்கள் தப்பியோடினர்.

போராட்டத்தைக் கைவிட மாணவர் சங்கம் முடிவு

தமிழ்நாடு மாணவர் இந்தி எதிர்ப்புப் போராட்டக் குழுவின் செயற்குழு இன்று கூடி, தற்போதைய அனைத்துப் போராட்டங்களையும் நிறுத்தி வைக்கத் தீர்மானித்தது.

அமைதியான முறையில் தொடங்கப்பட்ட போராட்டம் திடீரென வன்முறை மற்றும் ரத்தக் களரியாக மாறியதாலும், இன்று கடைபிடிக்கப்பட்ட முழு அடைப்பு வெற்றி பெற்றதாலும், முன்பு அறிவிக்கப்பட்ட அனைத்துப் போராட்ட நிகழ்ச்சிகளும் முடிவுக்கு வருவதாகக் குழு அறிவித்தது. மாநிலம் முழுவதும் உள்ள மாணவர்களைப் போராட்டத்தைத் தொடர வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டது.

பத்திரிகைகள் மற்றும் முக்கியத் தலைவர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்றும், மத்திய அமைச்சர்கள் திரு. சி. சுப்பிரமணியம் மற்றும் திரு. ஓ.வி. அழகேசன் ஆகியோரின் ராஜினாமா மற்றும் அவர்கள் அளித்த ஒத்துழைப்பு உறுதிமொழியால் ஏற்பட்ட திருப்திகரமான சூழலைக் கருத்தில் கொண்டும் மாணவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

செயற்குழுவின் இந்த முடிவைத் தொடர்ந்து, இன்னும் சில நாட்களில் பொதுக்குழு கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது."

இணையம் இல்லை என்று சொன்னாலும், இது வெறும் கதை அல்ல; நம் முன்னோர்கள் சிந்திய ரத்தம். தன் வீட்டு வாசலில் நின்ற 17 வயதுச் சிறுவன் முதல், விபரம் அறியாத 4 வயதுப் பச்சிளம் குழந்தை வரை, மொழிப் போரில் பலியான உயிர்களுக்கு, கறையான் அரித்த இந்த பழைய காகிதங்களே சாட்சி.

பொள்ளாச்சியில் ராணுவம் இறக்கப்பட்டு, இயந்திரத் துப்பாக்கிகள் சொந்த மக்கள் மீதே முழங்கிய இந்த கோர சம்பவத்தை, 'இப்படி ஒன்று நடக்கவே இல்லை' என்று வரலாறு மறைக்கப் பார்க்கிறது. ஆனால், உண்மையை யாராலும் நிரந்தரமாகப் புதைக்க முடியாது. 1965-ல் சிந்திய ரத்தம் காய்ந்திருக்கலாம், ஆனால் அதன் வடுவும், வலியும் தமிழினத்தின் நினைவில் இருந்து என்றுமே அழியாது.

வரலாறு என்பது வெற்றியாளர்களால் எழுதப்படுவது மட்டுமல்ல; அது இதுபோன்று தேடித் தொகுக்கப்பட வேண்டிய உண்மையும் கூட. ஆவணங்கள் இல்லையெனில், நம் தியாகங்கள் அனைத்தும் நாளடைவில் வெறும் கற்பனைக் கதைகளாகத் திரித்து எழுதப்பட்டுவிடும் போல. மறக்காமல் பகிருங்கள். நன்றி

கட்டுரை: இராஜசேகரன் பாண்டுரங்கன்

#பராசக்தி #Parasakthi #Pollachi #PollachiFiring #Congress #INC #DMK #TVK #tamilcinema #BJP  #indiannationalcongressparty
- பெ. பழனி முகநூல் பதிவு, 15.01.2026