திராவிடம் தமிழர்க்கு எதிரானதா?- மஞ்சை வசந்தன்
திராவிடம் தமிழர்க்கு எதிரானது என்று மோசடிப் பிரச்சாரம் செய்யும் போக்கு ம.பொ.சி. காலத்திலேயே தொடங்கிவிட்டது. திராவிடத்தை எதிர்ப்பவர் இருவகை. ஒன்று, ஆரியத்திற்கு சேவகம் செய்யும் தமிழர்கள். அவர்கள் உண்மை நன்கு தெரிந்தும் ஆரியத்தை ஆதரிக்க வேண்டும், அதன் மூலம் அவர்களின் விசுவாசியாகக் காட்டிக்கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டுச் செயல்படுகின்றவர்கள். இரண்டு, திராவிடம் என்றால் என்ன, அதன் வரலாறு என்ன என்று அறியாது, ஆரிய அடிவருடிகள் பரப்பும் பொய்க் குற்றச்சாட்டுகளை நம்பிச் செயல்படுகிறவர்கள்.
முதலில் தமிழர், திராவிடர் என்ற இரண்டின் வரலாற்று உண்மையை மிகச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
அதாவது, ஆரியர்கள் இந்தியாவிற்குள் பிழைப்பிற்காக நுழைந்து பரவி வாழத் தலைப்படுவதற்கு முன்னமேயே, கிழக்காசிய நாடுகளில் வாழ்ந்த தொல்குடி மக்கள் தமிழர்கள். உலகில் மற்ற மக்கள் நாகரிகம் பெறுவதற்கு முன்பே நகர நாகரிக வாழ்வை வாழ்ந்தவர்கள் தமிழர்கள்.
ஆரியர்கள் வருவதற்குமுன் இம்மண்ணில் முழுக்க முழுக்க தமிழர்களே வாழ்ந்தனர். ஆரியர்கள் இம்மண்ணில் நுழைந்தபோது அவர்களுக்கென்று எழுத்து வடிவிலான மொழி இல்லை.
எச்.ஜி.வெல்ஸ் என்னும் அறிஞரும், ‘ஆரியர்கள் நாகரிகமடைந்த மக்களுடன் தொடர்பு கொள்ளும்வரை அவர்களுக்கென்று எழுத்து முறை இருந்ததில்லை’ என்று ‘A Short history of the World’ என்னும் நூலில் குறிப்பிடுகிறார்.
கி.மு.முதல் நூற்றாண்டு வரை கல்வெட்டு களிலும் நாணயங்களிலும், பிற தொல்லியல் ஆதாரங்களிலும் காணப்படாமலிருந்த சமற்கிருதம் கி.மு. முதல் நூற்றாண்டு முதல் பிராகிருத எழுத்துகளால் எழுதப்பட்டும், கி.பி. 350க்குப் பின் பிராகிருத இலக்கியத்தை மொழிபெயர்த்தும் வளர்ந்தது. இந்த மொழிபெயர்ப்புக் காலத்தில்தான் இந்திய மரபுப் புராணங்களும், இராமாயணம், மகாபாரதம் போன்ற காப்பியங்களும் திருத்திச் சமற்கிருத மொழியில் வெளியிடப்பட்டன. (ஆதாரம்: இந்திய வரலாற்றுத் தொகுதி 162_3 பாரதீய வித்யாபவன் வெளியீடு _ சார்ஜ் எல்.ஆர்ட்டின் _ ஆரிய மொழி, திராவிட மொழி மரபுகளின் ஒப்பாய்வு நூல்.)
சமற்கிருத மொழியின் தோற்றம், அமைப்புப் பற்றி ஆராய்ந்த கால்வின் கெபார்ட் (Calvin Kephart) ‘‘இந்தியாவின் பழைய மொழி எதற்கும் சமஸ்கிருதம் தாய் அல்லவென்றும், அது பழைய இந்திய மொழிக் கூறுகளின் கலப்பால் பிற்காலத்தில் தோன்றி வளர்ந்த மொழி என்றும் விளக்கிக் காட்டியிருக்கிறார்.
மத்திய தேசத்தினர் பேசி வந்த மொழி சூரசேனி. இச்சூரசேனியே பின்னர் மத்திய தேசத் திருந்திய ஆரிய மொழியாக மாறுதலடைந்தது. அதுவே மேலும் மேலும் செம்மை செய்யப்பட்டு முறையான இலக்கண அமைப்புடையதாகப் பின்னர் மாறியதன் காரணத்தால், சமற்கிருதம் என்று பெயர் பெற்றது.
இந்திரமால் பகவான்ஜி என்னும் சமண அறிஞர் பழைய பிராகிருத மொழிகள் பழங்காலத்தில் சிறந்து விளங்கின என்றும் அவற்றின் போலி உருவங்களே சமற்கிருத மொழி என்றும் கூறுகிறார்.
ஆதலின், பிராகிருத மொழியிலிருந்துதான் சமற்கிருதம் தோன்றியது. சமற்கிருதத் திலிருந்து பிராகிருத மொழிகள் தோன்றவில்லை.
பிராகிருதம், பாலிமொழி என்பவை தொன்மைத் தமிழே !
கி.பி.10இலிருந்து கி.பி.15க்குள் வழங்கிய பேச்சு மொழிகளாயிருந்த சில பிராகிருத மொழிகளிலிருந்து அபப்பிராம்ச மொழிகள் தோன்றின. சூரசேனியிலிருந்து மேற்கு இந்தி, ராஜஸ்தானி, குஜராத்தியும்; மகாராட்டிரி யிலிருந்து மராத்தியும்; மாகத்தியிலிருந்து வங்காளி, பீகாரி, அசாமி, ஒரியாவும்; அர்த்தமாகதியிலிருந்து கிழக்கு இந்தியும்; பைசாசியிலிருந்து இந்தியும் தோன்றின.
ஆனால், கி.மு. பத்தாவது நூற்றாண்டிற்கு முன்பிருந்தே தமிழ் எழுத்தும், நெடுங்கணக்கும் பெற்றிருந்ததாக எஸ்.கே.சாட்டர்சி போன்ற அறிஞர்கள் கூறுவர்.
பிராகிருதியில் தமிழ் போல் அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஒ, ஓ உயிரெழுத்துகள் உள்ளன.
தமிழ் எ, ஒ போன்ற குறில்கள் பிராகிருதியில் உண்டு. சொல் உச்சரிப்பு முறையில் பிராகிருதம் முழுவதும் தமிழோடு ஒத்திருக்கிறது. சில எடுத்துக்காட்டுகள்:
தமிழ் பிராகிருதம்
அச்சன் அஜ்ஜ
அத்தன் அத்த
அத்தை அத்தா
அப்பன் அப்ப
இதோ இதோ
செட்டி சேட்டி
எனவே, இவை இரண்டு மொழிகளும் தொன்மைத் தமிழே.
பாவாணர், வடமொழி அய்ந்து நிலைகளில் உருவானது என்கிறார். அதன் முதன்நிலை தெலுங்கு அல்லது தென் திராவிடம். இரண்டாம் நிலை பிராகிருதம் அல்லது வட திராவிடம். மூன்றாம் நிலை கீழையாரியம். வேத ஆரியரின் முன்னோர் வடகோகித்தானத் திலிருந்த போது (தற்கால ஈரான்) பேசிய மொழியே கீழையாரியம். இம்மொழி கிரேக்கத்திற்கு மிக நெருக்கமாய் இருந்தது. நான்காம் நிலை வேதமொழி. வேத ஆரியர் வடநாட்டில் சிறுபான்மையினராய் இருந்ததால் வடநாட்டுத் திராவிடருடன் கலந்து தங்கள் முன்னோர் மொழியை மறந்துவிட்டனர். வேதங்கள் ஆரியர் இந்தியாவுக்கு வந்து பல நூற்றாண்டுகள் சென்ற பிறகே இயற்றப்பட்டதால் வேதமொழி பிராகிருதம் என்னும் வடதிராவிடச் சொற்கள் கலந்தது. வேதமொழியின் சொற்றொடரமைப்பு தமிழ் முறையைத் தழுவியது.
தேவ நேயப் பாவாணர்
தமிழின் தொன்மை வடிவமான சூரசேனி என்னும் பிராகிருத மொழி, கலப்பு குறைந்து காணப்பட்டதால் ஆரியர் அதைச் செம்மைப்படுத்திச் சமற்கிருதம் (செம்மை செய்யப்பட்டது) என்கிற பெயரைக் கொடுத்து அக்காலத்தில் வாழ்ந்த மக்களின் கருத்துகளை எல்லாம் நூல்கள் வடிவில் அம்மொழியில் எழுதி வைத்தனர். அவர்களுக்குப் பின் வந்த அறிஞர்களும், அம்மொழியிலேயே எழுத ஆரம்பித்ததால் சமற்கிருத நூல்கள் நாளடைவில் பெருகி அவற்றிற்குச் சிறப்புகள் பல உண்டாயின.
அய்ந்தாம் நிலை சமற்கிருதம். வேதமொழியும் ஆயிரக்கணக்கான தென்சொற்களும் கலந்ததே சமற்கிருதம்.
ஆரியர் தென்னாடு வந்து தமிழரோடு தொடர்பு கொண்ட பின்பே தமிழ் எழுத்தைப்பின்பற்றிக் கிரந்த எழுத்தையும், தேவநாகரி
யையும் கி.பி.மூன்றாம் நூற்றாண்டிற்குப் பின்னரே அமைத்துக் கொண்டனர்.
வரலாற்று ஆசிரியர்களான எச்.வி. சீனிவாசமூர்த்தி, ஆர்.இராமகிருஷ்ணன் போன்றோர் சாதவாகனருடைய கல்வெட்டுகள் பிராகிருதியிலும், பிராமி எழுத்துகளிலும் இருந்தனவென்றும், சமற்கிருத மொழி கல்வெட்டுகளில் புகுந்தது கி.பி.நான்காவது அல்லது அய்ந்தாவது நூற்றாண்டுகளில்தான் என்றும் கூறுவர்.
டி.ஆர்.சேஷ அய்யங்காரும் இதே கருத்தைத் தெரிவிக்கிறார். (Dravidian India – Prof. Sesha Aiyangar).
ஸ்டென்கொனோவ், பர்ரோ போன்றவர்களும் சமஸ்கிருதத்தில் திராவிடச் சொற்கள் அதிக அளவில் இருப்பதைச் சுட்டிக்காட்டுவர்.
எமினோ, சட்டர்ஜி, முயல் ப்லோக் போன்றவர்கள் சமற்கிருதம் திராவிட முறையைத் தழுவி வினையெச்சங்கள், வினையாலணையும் பெயர்களைப் பயன்படுத்தி யிருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர்.
தமிழ் வார்த்தைகளை சமஸ்கிருத வார்த்தைகளாக்கல்
ஆரிய பார்ப்பனர்கள் தமிழ் எழுத்துகளுக்குப் பதிலாக சமஸ்கிருத எழுத்துகளை மாற்றிப்போட்டு சமஸ்கிருத வார்த்தைகளை உருவாக்கினர்.
சுரம் என்ற தூயத் தமிழ்ச்சொல்லை ஜுரமாக்கினர்.
சுரம் என்பது ‘சுர்’ என்ற தமிழ் வேர்ச் சொல்லிலிருந்து வந்தது. சுர் என்றால் சுடுதல்.
சலம் என்ற தமிழ்ச் சொல்லை ஜலம் என்று சமஸ்கிருதமயமாக்கினர்.
‘சலம்’ என்பது நீர் சலசல வென்று ஓடுவதால் வந்த காரணப் பெயர்.
சலம் என்பதை ஜலம் என்று சமஸ்கிருத மயமாக்கினர்.
பன்கயம் என்ற தூய தமிழ்ச் சொல்லை பங்கஜம் ஆக்கினர்.
பன்கயம் என்பது பல இதழ்களை உடையது என்பது பொருள். தாமரை பல இதழ்களை உடையதால் அது பன்கயம் எனப்பட்டது. அதில் எழுதுவதை மாற்றி பங்கஜம் என்ற சமஸ்கிருத சொல்லாக்கினர்.
குருதி ஆயம் என்ற தமிழ் வார்த்தையை ஹிருதயம் என்று சமஸ்கிருதமாக்கினர். குருதி ஆயம் என்றால் குருதி சேரும் இடம். இதயத்தில் குருதி சேர்வதால் அதற்கு குருதி ஆயம் என்று தமிழில் அழைக்கப்பட்டது. அதை ஹிருதயம் என்று மாற்றி சமஸ்கிருதம் ஆக்கினர்.
இப்படி தமிழிலிருந்து சமஸ்கிருதத்தை உருவாக்கினர். சமஸ்கிருதத்தில் இவற்றிற்கு வேர்ச் சொல் கிடையாது என்பதை ஆய்வில் கொள்ள வேண்டும்.
இடவல மாற்றம் (Mirror Method)
கண்ணாடியில் இடதுவலமாகத் தெரியும். அதேபோல் தமிழ் எழுத்துகளை இடவலமாகத திருப்பிப் போட்டு சமஸ்கிருதமாக்கினர்.
அரசு என்று தூய தமிழ் சொல்லை இடவலமாற்ற முறையில் ராஜ் என்று சமஸ்கிருதமாக்கினர்.
அரசு என்பதில் முதல் இரு எழுத்துகளை இடவலமாக மாற்றினால் ரஅசு என்று ஆகும். முதல் எழுத்தை நெடில் ஆக்கி ராசு என்று ஆக்கி பின் சு _ ஜீ என்று மாற்றி ராஜீ _ ராஜ் என்று ஆக்கினர்.
அரசன் என்ற தூய தமிழ்ச் சொல்லை இதே முறையில் ராஜன் என்று ஆக்கினர்.
அரசன் _ என்பதை இடவலமாக மாற்றி ராஅசன் என்றாக்கி ‘ச’ எழுதுவதை ஜ வாக்கி ராஜன் என்றாக்கினர். இவ்வாறே அறமன் என்பதை ராமன் என்றும் அறவாணன் என்பதை ராவணன் என்றும் ஆக்கினர்.
சிலர், வேதங்கள் 2500 ஆண்டு பழமையானவை. அவை சமஸ்கிருதத்தில் இருப்பதால் சமஸ்கிருதம் 2500 ஆண்டுகள் பழைய மொழி என்கின்றனர். ஆனால் இது அறியாமை.
வேதமொழி சமஸ்கிருதம் அல்ல!
ஆரியர் இந்தியாவுக்கு வந்தபோது அவர்களிடம் எழுத்தும் இல்லை; எழுத்து வடிவான இலக்கியமும் இல்லை.
தமிழே வேத மொழிக்கு முந்தையது என்பதை மலையாளத்தில் சட்டம்பி அடிகள் 1901ஆம் ஆண்டில் ‘ஆதிபால’ என்னும் நூலில் நிலைநிறுத்தி இருக்கிறார். பாணினி நூற்பாக்களைத் தொல்காப்பிய நூற்பாக்களோடு மேற்கோள்காட்டி தமிழே முந்தையது என்றார்.
ஈரானியம் மற்றும் பிற மொழிகளிலிருந்து 20 சதவிகித சொற்களும், தமிழில் இருந்து 60 சதவிகித சொற்களும் வேத மொழியில் கலந்தன. எனவே, வேதமொழி சமஸ்கிருதம் அல்ல.
வேத மொழி சந்தஸ் என்கிறார் சங்கராச்சாரி. சந்தம் என்பதன் திரிபே சந்தஸ். ஆக, அதுவும் தமிழிலிருந்து வந்ததே!
உலக மொழிகளிலேயே 9 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட எழுத்துச் சான்றுடைய மொழி தமிழ் என நிறுவப்பட்டுள்ளது.
ஆரியர்கள் சமஸ்கிருதத்தை உருவாக்கிய பின், தமிழோடு சமஸ்கிருதம் பெருமளவில் கலந்து, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உருவாயிற்று.
அதன்பின் இஸ்லாமியர்கள் இந்தியாவிற்குள் வந்தபின் உருதுமொழி, தமிழ், சமஸ்கிருதம் மூன்றும் கலந்து ஹிந்தி, குஜராத்தி, பீகாரி போன்ற மொழிகள் உருவாயின.
திராவிடம் என்ற சொல்
எப்படி வந்தது?
திராவிடம் என்பது ஒரு நாளில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட சொல் அல்ல. அது எப்படி உருவானது என்பதை கீழே படித்தறியுங்கள்.
1. மகாவம்சம் என்ற பாலி இலக்கியத்தில் வரும் தமிள (Damila) என்ற சொல் தமிழைக் குறிக்கிறது.
2. ஸ்வேதாம்பர சைனர் என்ற பிராகிருதி இலக்கியத்திலும் தமிள என்ற சொல் காணப்படுகிறது.
தமிட என்ற சொல் சைனர்களின் பிராகிருத மொழி. இலக்கியத்தில் தவிள என்றும், ஆரம்பக் காலச் சமற்கிருத இலக்கியங்களில் தவிட என்றும் குறிக்கப்படுகிறது. பிற்காலத்தில் சமற்கிருதம் இந்தியாவில் நன்கு வேரூன்றிய காலத்தில் தமிள, தமிட ஆகிய சொற்கள் த்ரமிள, த்ரமிட என்று சமற்கிருத உச்சரிப்பைப் பெற்றன. இதற்கு ஆதாரமாகப் பின்வரும் எடுத்துக்காட்டுகளைக் கூறலாம்.
3. த்ரமிள என்ற சொல் வட இந்தியாவில் பாதாமி அருகில் உள்ள மகா கூடத்துக் கற்றூண்களில் காணப்படுகிறது. இத்தூண்கள் கி.பி. 597-608இல் செதுக்கப்பட்டவை. இச்சொல் பழைய மலையாள, சமற்கிருத புராணங்களிலும், தாராநாத்தின் புத்தமத வரலாற்றிலும் காணப்படுகிறது.
4. த்ராவிள என்ற சொல் சைனக் கணங்கள் என்ற நூலிலும் காணப்படுகிறது.
5. த்ரமிட என்ற சொல் தமிழ்த் திருவாய்
மொழியின் சமற்கிருத மொழிபெயர்ப்பிலும் காணப்படுகிறது. பிரம்ம சூத்திரத்துக்கு உரை எழுதிய ஒருவரைக் குறிப்பிடும் போது இராமானுஜர் த்ரமிட என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார்.
திராவிட என்ற சொல் தமிழை மட்டும் குறிப்பதற்கான சான்றுகளாவன :
கி.பி. 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பவுத்த மகாயான நூலாகிய லலித விஸ்தாரத்தில் புத்தர் கற்ற பல மொழிகளில் அய்ந்தாவதாகத் த்ராவிடி என்று தமிழ் குறிக்கப்பட்டுள்ளது.
கி.பி.6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வராகமிகிரர் தம் நூலில் த்ரவிட என்று தமிழைக் குறிப்பிட்டிருக்கிறார்.
கி.பி.7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குமாரில பட்டரின் தந்திர வர்த்திகாவில் திராவிடாந்திர பாஷா அல்லது திராவிட பாஷா என்ற சொற்றொடர்கள் காணப்படுகின்றன. இவை முறையே தமிழ், தெலுங்கையும் அல்லது தமிழ் மற்ற திராவிட மொழிகளையும் குறிக்கின்றன. பின்னாளில் இடப்பெயராகவும் ஆனது.
சமண ஆகம நூலாகிய சுருதாவதாரம் என்னும் சமஸ்கிருத நூலின் ஆசிரியராகிய பூதபலி குறித்து தஸ்தௌ பூதபலிரபி மதுராயாம் த்ரவிட தேஸான்
என்ற குறிப்பு வருகிறது. இங்கு த்ரவிட என்ற சொல் தமிழ் என்ற பொருள் தருகிறது.
ஒரு சிவனடியாரைப் பற்றிக் (திருஞான சம்பந்தரை) குறிப்பிடுகையில் கி.பி.ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆதிசங்கரர் திராவிட சிசு என்ற சொற்றொடரைப் பயன்படுத்தியிருக்கிறார்.
கி.பி. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த நாகேஷ் என்பவர் தமிழ் என்ற பொருளில் திராவிட பாஷா என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார்.
தமிழ் ஆழ்வார்களின் பாடல்கள் திராவிட வேதம் என்றும் குறிக்கப்பட்டிருக்கின்றன.
கி.பி.9ஆம் நூற்றாண்டில் காஞ்சியை ஆண்ட நந்திவர்மன் தமிழ் மன்னர்களைத் திராவிட மன்னர்கள் என்று குறிப்பிட்டிருக்கின்றான்.
திராவிடம் என்பது
இடத்தையும் குறித்தது.
கி.பி.14ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கங்கா தேவியால் இயற்றப்பட்ட மதுர விசயம் என்ற சமஸ்கிருத நூல் தமிழகத்தைத் திராவிட தேசம் என்றும், தமிழ் மன்னர்களைத் திரமிள அரசர்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறது.
மகாபாரதத்தில் இரு முறை சில சத்திரிய இனத்தினர் விரிசாலர் (சூத்திரர்) ஆக ஆக்கப்பட்டனர் என்று வருகிறது. சூத்திர இனத்தவராகப் புன்ராகர், ஓட்ரர், திராவிடர், காம்போஜர், யவனர், சாகர், பரதர், பகால்வர், சீனர், கிராடர், தாதர், கார் போன்றவர்கள் குறிப்பிடப்படுகிறார்கள். தென்னிந்திய இனத்தைக் குறிப்பிடத் திராவிட என்ற சொல் வருவதால் இது தமிழரை மட்டும் குறிக்காமல் திராவிட இனம் முழுவதையும் குறிக்கிறது.
மனு ஸ்ம்ரிதியிலும் இந்த இரண்டு இனங்கள் குறிக்கப்படுகின்றன. இங்கும் திராவிட என்ற சொல் பொதுவாகத் தென்னிந்தியரைக் குறிக்கிறது.
பாகவதம் என்ற நூலில் சத்திய விரதன் திராவிடபதி என்று அழைக்கப்படுகிறான். இங்குத் திராவிட என்ற சொல் தென்னிந்திய முழுவதையும் குறிக்கிறது.
கி.பி.14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த லீலா திலகம் என்ற மலையாள இலக்கண நூலில் திராவிட என்ற சொல் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கைக் குறிக்கிறது.
மேலே கூறப்பட்ட சான்றுகளிலிருந்து திராவிட(ம்) என்ற சொல் பழங்காலத்தில் தமிழை மட்டும் குறித்தது என்றும், கன்னடம், மலையாளம் போன்ற மொழிகள் தோன்றிய பிறகு தென்னிந்திய முக்கிய நான்கு மொழிகளையும் குறிக்க ஆரம்பித்தது என்றும் தெரிய வருகிறது. தற்காலத்தில் திராவிட என்ற சொல் தமிழிலிருந்து பிரிந்த தொடர்புடைய மொழிகள் அனைத்தையும் குறிக்கிறது.
மேலும், ‘திராவிடம்’ என்பது சமஸ்கிருத சொல் என்பது தப்பான கருத்து. அவ்வாறு கூறுவது அறியாமை. யார் அவ்வாறு கூறினாலும் அது தப்பு!
ஆக, திராவிடம் என்பது தமிழ் என்பதன் திரிபேயாகும். திராவிடம் என்பதும் தமிழ் என்பதும் ஒன்றுதான் எனும்போது தமிழர் என்று அழைப்பது தானே சிறப்பு! ஏன் திராவிடர் என்று அழைக்க வேண்டும்? என்ற கேள்வி சரியானது, நேர்மையானது. எனவே, அதன் காரணத்தை நாம் நுட்பமாகப் பார்க்கவேண்டும்.
திராவிடர் என்று கூறுவது ஏன்?
தமிழர் என்றால் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் மட்டுமே தமிழர் என்பது வரலாற்றுப் பிழையாகும். அப்படி அழைப்பது சரியும் அன்று. காரணம், இன்றைக்கு மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஒரியா, வங்காளி, மராட்டி, ஹிந்தி போன்ற மொழிகள் பேசக்கூடியவர்கள், ஆரியர்கள் வருகைக்கு முன் தமிழ் பேசிய தமிழர்கள். கடைசியில் 400 ஆண்டுகளுக்கு முன் தமிழோடு சமஸ்கிருதம் சேர்ந்து உருவான மொழி மலையாளம். 400 ஆண்டுகளுக்கு முன் கேரளா மக்கள் தமிழ் பேசிய தமிழர்கள், சேர நாட்டினர். இன்றைக்கு தமிழ் திரிந்து மலையாளம் ஆனதால் அவர்கள் தமிழர்கள் இல்லையென்று ஆகிவிடுவார்களா?
தற்போது மலையாளம் பேசினாலும் கேரள மக்கள் தொல் தமிழர்கள்தானே! ஆனால், அவர்களுடைய மொழி மலையாளமாய் திரிந்ததால் அவர்களை இப்போது தமிழர்கள் என்று அழைக்க இயலாது. எனவே, அவர்களும் தமிழ் இனத்தவரே என்பதை உறுதி செய்ய, அவர்களைத் திராவிடர் என்று அழைக்கிறோம்.
திரிந்தவர்களை திரிபு சொல்லால் அழைக்கிறோம்
தமிழ் என்பதன் திரிபே திராவிடம்; தமிழரின் திரிபே மலையாளி, தெலுங்கர், கன்னடர், மராட்டியர், வங்காளிகள் போன்றோர். எனவே, அவர்கள் தமிழரிலிருந்து திரிந்த இனத்தவர் என்பதால் அவர்களைக் குறிக்க தமிழிலிருந்து திரிந்த திராவிடர் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம்.
மொழி மாறினாலும்
இனம் மாறாது
மொழியால் இன்றைக்கு அவர்கள் மாறி நின்றாலும், இனத்தால் அவர்கள் தமிழர்கள். மொழி மாறியதால் அவர்கள் இனம் மாறாது. அவர்கள் தமிழரின் மரபினர். ஆரியர்கள்தான் இனத்தால் மாறுபட்டவர்கள்; வேறுபட்டவர்கள். அவர்கள் தமிழ் பேசினாலும் இனத்தால் அவர்கள் தமிழர்கள் அல்ல. அவர்கள் இனத்தால் ஆரியர்கள்.
தமிழர் யார் என்பதற்கு என்ன அளவுகோல்?
சில அரை வேக்காடுகள், “நாங்கள் தமிழர்கள். திராவிடர் என்பதற்கு என்ன வரையறை?” என்கின்றனர். இந்திய மண்ணின் தொல்குடி மரபினர் அனைவரும் திராவிடர் என்று கூறிவிட முடியும்; வரையறுக்க முடியும். ஆனால் தமிழர் என்தற்கு என்ன வரையறை?
ஒருவர் சொல்கிறார் 1956க்கு முன் தமிழ்நாட்டில் வாழ்பவர்களின் வாரிசுகள் தமிழர்கள் என்கிறார்?
இன்னொருவர் தமிழ் பேசுகிறவர்கள் தமிழர்கள் என்கிறார்.
இந்தக் கிறுக்கர்கள்தான் கலைஞரை தமிழர் இல்லை என்கின்றனர். பாரதியாரை தமிழர் என்கின்றனர். சிந்தித்துப் பாருங்கள்.
தமிழரா? திராவிடரா?
தெற்காசியா முழுவதும் வாழ்ந்த தமிழர்கள் அனைவரும் ஆதிகாலத்தில் தமிழ்தான் பேசினர். ஆனால், சமஸ்கிருதம், உருது போன்ற மொழிகள் கலந்து பலமொழிகளாய் தமிழ் திரிந்து போக, தமிழினத்தவர் மொழி அடிப்படையில் மொழியின் பெயரால் அழைக்கப்பட்டனர். தற்போதைய தமிழ் நாட்டில் வாழும் தமிழர்களைத் தவிர மற்ற தமிழ் மரபினரின் மொழி தமிழ் இல்லாமல் மாற, தமிழ்நாட்டில் மட்டும் மொழி திரிபு (சமஸ்கிருத ஆதிக்கம் அதிகம் நிகழமையால்) ஏற்படாமல், தமிழ் திரியாமல் நின்றது. ஓரளவு சமஸ்கிருத கலப்போடு தப்பியது. அதனால், தமிழ்நாட்டில் வாழ்ந்த தமிழ் இனத்தவர்க்கு மட்டும் தமிழ்மொழியானது.
மொழியடிப்படையில் மட்டுமே இனம் பிரித்தால் தமிழ்நாட்டில் வாழும் தமிழர் மட்டுமே தமிழர் என்றாகும். மற்ற மாநிலங்களில் வாழும் தமிழினத்தவர் தமிழினம் இல்லையென்றாகிவிடும். எனவே, அவர்களும் தொல் தமிழ் இனத்தவர்களே என்பதைக் குறிக்கவே தமிழர் மரபினர் அனைவரும் திராவிடர் என்ற இனச் சொல்லால் அழைக்கிறோம்.
போலித் தமிழ்த் தேசியம் பேசுகின்றவர்கள் வாதப்படி, 400 ஆண்டுகளுக்கு முன் தமிழ் பேசிய, சேர நாட்டு மக்கள் மொழி திரிந்து மலையாளம் பேசுவதால், தமிழர்கள் இல்லையென்றாகும். அது சரியா? இளங்கோ அடிகள் தமிழர் இல்லையா? அவர் வழி வந்த சேரர்கள் தமிழர் இல்லையா? அவர்கள் மலையாளம் பேசுவதால் தமிழர் என்று அழைக்க முடியாத நிலையில்தான், இனப்பெயரான திராவிடர் என்று அழைக்கிறோம். எனவே திராவிடர் என்பது தமிழ்நாட்டு தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து தொல் தமிழர்க்கும் உரிய பொதுவான இனக் குறியீட்டுச் சொல் என்பதே உண்மை!
திராவிடம் இனமா? இடமா?
திராவிடர் வாழும் பகுதி என்பதைக் குறிப்பது திராவிடம். திராவிடர் என்பது இனப்பெயர், திராவிடம் என்பது அவர்கள் வாழும் இடம் பகுதி.
திராவிட் என்று ஆரிய பார்ப்பனர் அழைக்கப்படுவது ஏன்?
ஆரியர்களின் ஊடுருவல் பெரும்பாலும் வடமாநிலங்களில் அதிகம் நிகழ, தமிழர்கள் தென்னிந்தியப் பகுதியில் ஒதுங்கினர். எனவே தமிழர் பகுதி திராவிடம் எனப்பட்டது. அப்பகுதியில் வாழும் ஆரிய பார்ப்பனர்களை வடஇந்தியாவில் வாழ்வோர், திராவிட் என்று அழைத்தனர். மாறாக திராவிட் என்பது ஆரியர்க்குரிய இனச் சொல் அல்ல. அது ஆரியர் வாழும் இடச்சொல்.
திராவிடம் என்பது
தமிழர்க்கு எதிரானதா?
திராவிடர் என்பது பெரியாரால் திட்டமிட்டுத் திணிக்கப்பட்டது அல்ல. அது வரலாற்று அடிப்படையில் நெடிய வரலாறு கொண்டது. பெரியாருக்கு முன் அயோத்திதாச பண்டிதர் திராவிடர் என்ற சொல்லைப் பயன்படுத்தி இனஉணர்வு கொள்ளச் செய்ததோடு, ஆரிய ஆதிக்கத்திற்கு எதிராய்ப் போராடியுள்ளார். பெரியார் தமிழர் கழகம் என்று பெயர் வைக்க முயன்றாலும், அதில் பார்ப்பனர் நுழைவர் என்பதால், இனக் குறியீடாக திராவிடர் என்ற சொல்லைத் தேர்வு செய்தார்.
ஆனால், நம் மாநிலத்திற்குப் பெயர் சூட்ட போராடியபோது தமிழ்நாடு என்று பெயர் சூட்டச் சொன்னார். இங்குதான் இரண்டிற்குமுள்ள வேறுபாட்டை, உயரிய நோக்கை உண்மை நோக்கைப் புரிந்து கொள்ள வேண்டும்.
அயோத்தி தாச பண்டிதர்
தமிழர்களைத் திராவிடர்கள் என்று அழைப்பதால்தான் இந்த தமிழினம் ஒடுக்கப்பட்டது, தாழ்ந்து போனது என்று ஒரு தப்பான குற்றச்சாட்டைச் சிலர் வைக்கின்றனர்.
தமிழர் என்பது இனப்பெயரானால், தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களை மட்டுமே குறித்து, கிழக்காசியப் பகுதி முழுவதும் வாழ்ந்த தமிழினம் சுருக்கப்பட்டுவிடும். மொழியால் திரிந்து வாழ்ந்தாலும் இனத்தால் தொல் தமிழினம் என்பதைக் குறிக்க ‘திராவிடர்’ என்று அழைத்தால் இனம் பரந்து விரியும்.
எனவே மொழியால் தமிழர்; இனத்தால் திராவிடர் என்பதே சரியானது; உண்மையானது; பாதுகாப்பானது, உரிமை தருவது, உயர்வு தருவது.
திராவிடமா? ஆரியமா?
என்பதே சரியானது
இந்தியாவைப் பொறுத்தவரை தொல் தமிழர்கள் இன்றைக்கு பல்வேறு மொழி பேசும் மக்களாய் பிரிந்து நிற்பதால், மொழி அடிப்படையில் அவர்களை அணுகாது, பண்பாட்டு, கோட்பாட்டு அடிப்படையில் அணுகவேண்டும். அப்படி அணுகினால், திராவிடமா? ஆரியமா? என்று நிற்கும். எல்லோருக்கும் எல்லாமும், சமத்துவம் என்பது திராவிடம். ஏற்றத்தாழ்வு, உரிமை மறுப்பு, பிறவி பேதம், ஆதிக்கம், ஒற்றைக் கலாச்சாரம் என்பது ஆரியம் இதில் எது நிலை பெறவேண்டும், ஆளவேண்டும் என்ற அணுகுமுறையே சரியானது. அதுவே 95% மக்களின் உரிமைக்கும், உயர்விற்கும், அதிகாரத்திற்கும் உதவும். எனவே திராவிடம் என்பது தமிழர்க்கு எதிரானது அல்ல. அது தமிழர்க்கு உயர்வளிப்பது; சிறப்பளிப்பது.