சமஸ்கிருதம் என்பது தனித்தன்மையான ஒரு மொழியல்ல – அது ஒரு கலப்பட மொழியாகும்.
- மின்சாரம்
அடிநாளில் (நீண்டநாளுக்கு முன்) மேற்கு மத்திய ஆசியாவில் வாழ்ந்த நார்டிக் ஆரிய மக்கள் பேசிவந்த மொழியே பலமொழிகள் கலந்து சமஸ்கிருதம் என்பதாக ஆயிற்று. அதாவது, தங்கள் தாயகத்தின் சுற்று வட்டார எல்லை நாடுகளின் மொழிகளான துருக்கி (Turkee) மொழி. ஈரானிய மொழி – பாக்ட்ரினியாவில் குடியேறிய பின் பர்மீரியன் மொழி ஆகியவற்றிலிருந்து தொகுத்த கதம்பமே சமஸ்கிருத மொழி.
மேற்கு மத்திய ஆசியாவில் வசித்த இந்த ஆரியர்கள் பாக்ட்ரினியாவிலிருந்து இரு பிரிவாகப் பிரிந்து, கி.மு. 1350ஆம் ஆண்டு வாக்கில் வடமேற்கிந்தியாவில் குடியேறிய போது இந்தச் சமஸ்கிருத மொழியையும் வடமேற்கிந்தியாவில் புகுத்தினர்.
இவர்கள் வடமேற்கிந்தியாவில் இருமுறை நுழைந்தனர். முதலாவது கி.மு. 1400 வேதகாலம்: இரண்டாவது கி.மு. 58இல் பாக்ட்ரினியா, சாக்டியானா நாடுகளில் கிரேக்க – பாரசீக மொழிக் கலைத் தொடர்புகளின் பலனாக இந்த சமஸ்கிருத மொழி மேற்கண்ட பாரசீக – கிரேக்க மொழிக் கலை இலக்கிய இலக்கணங்களையும் தழுவி மேற்கொண்டு திருத்தப்பெற்றது.
மற்றும் சமஸ்கிருத மொழி இந்தியாவின் லத்தீன் மொழி என்றும் அழைக்கப்பட்டது. ஆல்பன்கெல்ட் மக்கள் மத்திய தரைக்கடல் வட்டாரங்கள் மீது படையெடுத்த போது, இத்தாலிய மக்களிடையே இந்த கெல்ட் மக்கள் திணித்த மொழியே லத்தீன்.
மொழிகளின் பிரிவு
மொழிகள், துரானிய மொழிகள் என்றும், ஆரிய மொழிகளென்றும் இருபெரும் பிரிவுகளைக் கொண்டுள்ளன சமஸ்கிருதம் ஆரிய மொழியினத்தைச் சேர்ந்தது.
‘சமஸ்கிருதம்” என்ற சொல்லின் பொருள். சுத்தப்படுத்தப்பட்டது அல்லது பலவற்றைச் சேர்த்து உருவகப்படுத்தப்பட்டது என்பதாகும்.
மேலும் விளக்க வேண்டுமானால், இது ஹிந்துஸ்தானியில் “சான்ஸ்கிரிட்” என்று உச்சரிக்கப் படுகிறது. இந்த சமஸ்கிருத மொழியாக்கத்தின் பெரும் பகுதியும் அடிப்படை அமைப்பும் மேற்கு மத்திய ஆசியாவில் வழங்கிய ஆரிய மொழியிலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டதாகும். மற்றும் பல நூற்றாண்டுகளாக பல்வேறு நாடுகளில் பல்வேறு மொழிகளுடன் தொடர்பு கொண்டதன் பலனாகப் பிறமொழி அம்சங்கள் பலவற்றை இந்த சமஸ்கிருத மொழியுடன் அவ்வப்போது சேர்த்துக் கொண்டு வந்தனர்.

பொருளுக்கேற்ற பெயர்
வடமேற்கு இந்தியாவில் குடியேறும் வரையில் இந்த ஆரியர்கள். இடைக்காலத்தில் திரிந்த பல்வேறு நாடுகளின் பல்வேறு மொழிக் கலைப்பகுதிகளையும் இச்சமஸ்கிருதத்தில் சேர்த்துக் கொண்டனர்.
சமஸ்த = எல்லாம்;
கிருதி = தொகுக்கப்பட்டது
– என்பதே இதன் பொருள்.
“என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா” என்ற ஆங்கில மொழிப் பேரகராதியின் 13ஆவது தொகுதியில், சமஸ்கிருத மொழி பிறப்பு வரலாறு, டாக்டர் எச்.ஜூலியஸ் எக்லிங் என்பவரால் தரப்பட்டுள்ளது.
(இவர் எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருதப் பேராசிரியராகப் (1875 முதல் 1914 வரை) பணியாற்றியவராவார். ராயல் ஏசியாட்டிக் சொசைட்டியின் செயலாளராகவும் இருந்தவராவார்).
“சமஸ்கிருத மொழி ஆரிய மொழிகளுடன் கொண்டுள்ள தொடர் பையும், பல அம்சங்களில் கிரேக்க மொழியைப் போன்றிருப்பதையும்” இவர் விளக்கியுள்ளார்.
டாக்டர் பிரான்ஸ் பாப் என்பவர். கோதிக் மொழியிலிருந்து பைபிளை வாசித்தபோது கோதிக் மொழியும், சமஸ்கிருத மொழி போன்றே இருப்பதைக் கண்டர்.
(பிரான்ஸ் பாப் (1791-1867) இந்தோ அய்ரோப்பிய மொழிகளைக் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டவர் ஆவார்).
பல மொழிகளின் கலவை
பர்கீஸ் மொழி, ஈரானிய மொழி, பர்மீயன் மொழி, கிரேக்க மொழி ஆகியவற்றின் கூட்டு அவியலே சமஸ்கிருதம்.
கி.மு. 53இல் குசான் வம்சத்தைச் சேர்ந்த கனிஷ்கர் தான் சமஸ்கிருத மொழியை ஓர் உருவுக்குக் கொண்டு வந்தார். இந்த இலட்சணத்தில் தான் இந்திய மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் உட்படப் பார்ப்பனர்கள் வாய்ப்பறை கொட்டுகின்றனர்.
இவ்வளவுக்கும் இந்தியாவில் சமஸ்கிருதம் பேசுவோர் எண்ணிக்கை வெறும் 24821; விழுக்காட்டில் சொல்லப் போனால் இந்திய மக்கள் தொகையில் வெறும் 0.0001 தான்!
- விடுதலை நாளேடு, 9,10.8.25
(மோகன் பகவத்தின் கருத்துக்கு பதிலடியாக வெளியான கட்டுரையின் தொகுப்புகள்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக