பக்கங்கள்

வியாழன், 14 டிசம்பர், 2017

தமிழ் மொழியை காட்டுமிராண்டி மொழி என்றாரா பெரியார்?

PERIYAR FAQS

தமிழ் மொழியை காட்டுமிராண்டி மொழி என்றாரா பெரியார்?

ஆம். அவர் சொன்னதைப் புரிந்துக் கொள்ள அந்தக் காலச் சூழலையும் பார்க்க வேண்டும். எங்கும் கம்ப ராமாயண, பெரிய புராண, கந்த புராண முன்னெடுப்புக்கள், சொற்பொழிவுகள் நடந்து கொண்டிருந்த காலம் அது. தமிழ் என்றாலே இது போன்ற புராணங்களே என்னும் நிலை இருந்தது. வடமொழி தமிழில் கலந்து அத்தோடு ஆரிய நால்வருணப் பாகுபாட்டுமுறையும் இலக்கியத்திலும் இலக்கணத்திலும் ஆழ்ந்த தாக்கத்தைச் செலுத்தி வந்தமையை தமிழ் வரலாறு காட்டுகிறது. சங்க இலக்கியங்களைவிடப் புளுகுப் புராணங்களும், வழுநிறைந்த இதிகாசங்களும் பெருமை வாய்ந்தவையெனத் தமிழ்ப்புலவர்களே தலையில் வைத்துக் கொண்டாடும் மனப்போக்கு வேரூன்றிவிட்ட காலத்தில்தான் பெரியார் வருகிறார்.தொன்மங்களைச் சிதைத்து போலித் தரவுகளையும் , புராணக் குப்பைகளையும் சேர்ப்பதை எதிர்த்தார். போலியாய் ஒரு கதையைக் கூறி அதன் மூலம் மொழிக்குப் பெருமை வருவதைக் கண்டித்தார். மொழியில் அறிவியல் தரவுகள் குறைந்து போய் புராணக் குப்பைகள் நிறைந்து வருவதைக் கண்டித்து "தமிழில் ஆரீயம் புகுந்ததால் தான், மற்ற மக்களையெல்லாம் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலத்தில் கப்பலோட்டி வாணிகம் நடத்திய தமிழர் மரபில், இன்று ஒரு நியூட்டன் தோன்ற முடியவில்லை. ஒரு எடிசன் தோன்ற முடியவில்லை. ஒரு மார்க்கோனி தோன்ற முடியவில்லை என்பதை அறிந்து கொள்ள வேண்டும். தமிழைப் புதுமொழியாக்கச் சகல முயற்சிகளும் எடுத்துக் கொள்ள வேண்டும். " என்றார். தமிழ் ஏன் சிறந்தது என்ற கேள்விக்கு " அது என் தாய்மொழிப் பற்றுதலுக்காக என்று அல்ல. அது என் நாட்டு மொழி என்பதற்காக அல்ல. சிவ பெருமானால் பேசப்பட்டது என்பதற்காக அல்ல. அகத்திய முனிவரால் திருத்தப்பட்ட தென்பதற்காக அல்ல. மந்திர சக்தி நிறைந்தது. எலும்புக் கூட்டைப் பெண்ணாக்கிக் கொடுக்கும் என்பதற்காக அல்ல. பின் எதற்காக? இந்திய நாட்டுப் பிற எம் மொழியையும் விடத் தமிழ், நாகரீகம் பெற்று விளங்குகிறது. தூய தமிழ் பேசுதல் மற்ற வேறுமொழிச் சொற்களை நீக்கிப் பேசுவதால் நம்மிடையேயுள்ள இழிவுகள் நீங்குவதோடு மேலும் மேலும் நன்மையடைவோம் என்பதோடு நம் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப நம் மொழி அமைந்திருக்கிறது." என்று கூறி கலப்பிலாதத் தனித் தமிழ் பேசச் சொன்னார். தமிழ் மொழியிலிருந்து மதத்தைப் பிரித்து விட்டால் சங்க காலத் தமிழ் கிடைக்கும் என்றார் பெரியார். "தமிழும் ஒரு காலத்தில் உயர்ந்த மொழியாகத்தான் இருந்தது. இன்று அது வட மொழிக்கலப்பால் இடது கைப்போல் பிற்படுத்தப் பட்டது. இந்நோய்க்கு முக்கிய காரணம் மதச் சார்புடையோரிடம் தமிழ் மொழி சிக்கிக் கொண்டதுதான். தமிழில் இருந்து சைவத்தையும் ஆரியத்தையும் போக்கிவிட்டால் நம்மை அறியாமலே நமக்குப் பழந்தமிழ் கிடைத்து விடும். மதத்திற்கு ஆதாரமாயிருந்து வருவன வெல்லாம் வடமொழி நூல்களே ஒழிய தமிழ் மொழி நூல்களில் தற்சமயம் நம் நாட்டில் இருந்து வரும் மதத்திற்கு எவ்வித ஆதாரமும் இல்லையயன்பது இங்கு கவனிக் கத்தக்கது." பாவாணரின் மாணவரும், தமிழ்த் தேசியத் தந்தையுமான பாவலரேறு பெருஞ்சித்திரனார் பெரியாரின் இந்தக் கூற்றுக்குச் சரியான விளக்கம் தருகிறார்.
-Tamil Rajendran முகநூல் பதிவு,13.12.!7

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக