பக்கங்கள்

செவ்வாய், 26 டிசம்பர், 2017

அழிந்துவரும் மொழிகள்!


இந்தியாவில் தற்போதுள்ள 130 கோடி மக்களால் 780 மொழிகள் பேசப்படுவதாக இந்திய மக்களின் மொழி ஆய்வு நிறுவனம் ((Peoples Linguistic Survey of India) PLSI தெரிவிக்கிறது. தற்போது பேசப்பட்டு வரும் மொழிகளில் குறைந்தது 400 மொழிகள் இன்னும் 50 ஆண்டுகளில் அழிந்துவிடும் நிலையில் இருப்பதாகக் கூறுகிறது.

ஒரு மொழி அழியும்போது அம்மொழி சம்பந்தப்பட்ட அல்லது அம்மொழி பேசும் மக்களால் பாதுகாக்கப்பட்ட கலாச்சாரமும் அழிக்கப்படுகிறது என்று கூறுகிறார் இந்நிறுவனத்தைச் சேர்ந்த திரு. தேவ்வி (Mr.Devy) என்பார்.

இந்நிறுவனத்தைச் சேர்ந்த அறிஞர்களும் ஆசிரியர்களும் இந்தியாவின் மரபுரிமையான பல்வேறுபட்ட கலாச்சாரங்களைப் பாதுகாக்கும் நோக்குடன் இந்தியாவின் பல பகுதிகளிலும் பேசப்படும் மொழிகளைப் பற்றிய தகவல்களை ஆவணப்படுத்தியுள்ளனர். இவற்றில் மிகவும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள மொழிகளாக பழங்குடியின மக்களின் மொழிகளே உள்ளதாகக் கூறுகின்றனர்.

இம்மக்களின் குழந்தைகள் பெரும்பாலும் கல்விக் கூடங்களுக்குச் செல்வதில்லை. அப்படிச் சென்றாலும் அவர்களுக்கு அவர்களின் மொழியில் கல்வி கற்பிக்கப்படாமல் இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளில் ஏதாவதொன்றிலேதான் கற்பிக்கப்படுகிறது.

உதாரணமாக பீகாரில் 1000 ஆண்டுகளுக்கு மேலாகப் பேசப்பட்டுவரும் ஒரு மொழி ‘மைதிலி’ ஆகும். இதைப் போன்று பல்வேறு மொழிகள் உள்ளன என்றாலும் அவை காலத்தை வென்று வாழ்வது கடினமே எனக் கூறுகிறார் அரசியல் அறிஞர் ‘ஆசிஸ் நந்தி’ அவர்கள்.

உலகில் தற்போது உயிருடன் உள்ள 6000 (ஆறாயிரம்) மொழிகளை ஆவணப் படுத்துகின்ற வேலையில், மக்களின் மொழி ஆய்வு நிறுவனம் (PLSI) ஈடுபட்டுள்ளதாகத் திரு. தேவ்வி (Mr.Devy) கூறுகிறார். இந்த ஆவணம் 2025இல் வெளியிடப்படலாம் என்றும் கூறுகிறார்.

- உண்மை இதழ், 1-15.10.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக