பார்ப்பனர் நாகசாமியின் ஆங்கில நூலுக்குப் பதிலடி!
க.கலைமணி
“எதிர்த்து அழிக்கமுடியாத ஆரியம் அணைத்து அழித்துவிடும்.’’ அவ்வாறே பவுத்தத்தை அழித்தார்கள். திருக்குறளை அணைத்து தமது மனுதர்மச் சிந்தனைகளைப் புகுத்தும் முயற்சியில் முன்பு பரிமேலழகர் இருந்தார். அப்பணியை மேற்கொண்டுள்ளார் மேனாள் தொல்பொருள் ஆய்வுத் துறை இயக்குநர் நாகசாமி என்ற பார்ப்பனர். அவர் “திருக்குறள் மனுதர்மத்தின் சாரம்’’ கருத்தை உள்ளடக்கிய ஆங்கிலத்தில் நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். பார்ப்பனர் நாகசாமியின் இந்த விஷமத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னைப் பெரியார் திடலில் 7.11.2018 அன்று மாலை 7 மணிக்கு சிறப்புப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் வரவேற்புரையாற்றினார். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை வகித்தார். முனைவர் மறைமலை இலக்குவனார், எழுத்தாளர் பழ.கருப்பையா, திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுபவீரபாண்டியன் ஆகியோர் உரையாற்றினர். மன்றத்தின் மாநிலத் துணைத் தலைவர் கோ.ஒளிவண்ணன் நன்றி கூறினார்.
சுபவீ அவர்கள், அந்தணர் என்ற சொல்லுக்கு நாகசாமி எழுதியுள்ளதை விளக்கி வேறு குறளில் வள்ளுவர் கூறும் விளக்கத்தையும் கூறினார். நாகசாமியின் இந்த நூல் விமர்ச்சிக்கப்படுவதைவிட கொளுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார், உரை ஓர் ஆய்வுரையாக அமைந்திருந்தது என்றே சொல்லவேண்டும். “நாகசாமி நூலுக்கு ஒரு மறுப்பு நூல் எழுத வேண்டும் என்று தாய் உள்ளக் கனிவோடு ஆசிரியர் பெருந்தகை எனக்கு அன்புக் கட்டளை இட்டுள்ளார். அந்தப் பணியை விரைவில் முடிப்பேன் என்று சொன்னபோது மிகப் பெரிய வரவேற்பு பார்வையாளர்கள் மத்தியில். தர்ம சாத்திரங்களை எழுதியவர்கள் பார்ப்பனர்கள். அற நூல்கள் தமிழருக்குரியவை. சமஸ்-கிருதத்தில் தர்க்க நூல்கள் உண்டு. அவை எல்லாம் மறைக்கப்பட்டு தர்ம சாஸ்திரங்கள் என்னும் வருணதர்மத்தை வலியுறுத்தும் நூல்களை தூக்கிக் பிடிக்கக் கூடாது’’ என்றார் பேராசிரியர் மறைமலை இலக்குவனார்.
எழுத்தாளர் பழ. கருப்பையா அவர்கள், “இன்றைக்கு நாகசாமிகள் எழுதுகிறார்கள் என்றால் இதற்கு மூலம் பரிமேலழகர்தான். பரிமேலழகர் பார்ப்பனத்தனத்துடன் பல இடங்களில் நடந்து கொண்டுள்ளார். நாகசாமியின் இந்த நூலைப் பற்றி _ பார்ப்பன ஆதிக்கப் பண்பாட்டைப் பற்றி எல்லாக் கட்சித் தலைவர்களும் பேச வேண்டும். எல்லாக் கட்சிகளிலும் உள்ள இலக்கிய அணிகளும் கண்டிக்க வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தமது உரையில் “நாகசாமிக்கு இவ்வளவு பச்சையாகத் தமிழர்களை எதிர்த்து உண்மைக்குப் புறம்பாக பச்சைப் பார்ப்பனத் தனத்துடன் நூல் எழுதும் துணிவு எப்படி வந்தது? நாகசாமி என்ற ஒரு தனி மனிதர் இப்படியொரு நூலை எழுதியுள்ளார் என்று தவறாகக் கருதக்கூடாது. திட்டமிட்டே ஒரு வட்டாரம் _ ஒரு லாபி இதனைச் செய்கிறது. இந்த வேலையைச் செய்வதற்காகவே கோடிக்கணக்கில் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்-பட்டுள்ளது. ஏன் ஆங்கிலத்தில் திருக்குறளைப் பற்றிப் பொய்யும், புனை சுருட்டுமாக எழுதுகிறார்? உலகம் பூராவும் பரப்புவதற்குத்தான். பார்ப்பனர்களின் இந்தச் சூழ்ச்சிகளை எல்லாம் பெரியாரின் ஈரோட்டுக் கண்ணாடி போட்டுப் பார்த்தால்-தான் புரியும்.
குறளில் கடவுள் இல்லை, மதம் இல்லை, ஜாதி இல்லை, கோயில் என்ற வார்த்தை இல்லை. சங்க இலக்கியங்களிலும் முப்பால், நாற்பால் கிடையாது. குறளுக்கு மரியாதை வந்துவிடக் கூடாது. குறள் மூலம் தமிழினத்துக்கு சிறப்பு ஏற்பட்டு விடவும் கூடாது. அதற்கு ஒரே வழி அந்தக் குறள் என்பது மனுதர்மத்தைப் பார்த்துக் காப்பியடித்தது என்று சொல்லிவிட்டால் தீர்ந்தது கதை _ இதுதான் பார்ப்பனர்களின் அணுகுமுறை _ சூழ்ச்சி முறை’’ என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
- உண்மை இதழ், 16-30.11.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக