பக்கங்கள்

திங்கள், 27 ஜூலை, 2020

எழுத்தில் சீர்திருத்தம்..



தமிழ்பாஷை எழுத்துக்கள் வெகு காலமாகவே எவ்வித மாறுதலும் இல்லாமல் இருந்து வருகின்றன.

உலகில் உள்ள பாஷைகள் பெரிதும் சப்தம், குறி, வடிவம் எழுத்துக்கள் குறைப்பு, அவசியமான எழுத்துக்கள் சேர்ப்பு ஆகிய காரியங்களால் மாறுதல் அடைந்து கொண்டே வருகின்றன. கால வர்த்தமானங்களுக்கு ஏற்ப பாஷைகளும், சப்தங்களும், உச்சரிப்புகளும், வடிவங்களும் மாறுவது இயல்பேயாகும்.

வார்த்தைகள் கருத்தை வெளியிடுவதற்கு ஏற்பட்டவைகள் என்பது போலவே எழுத்துக்கள் சப்தத்தை உணர்த்த ஏற் பட்டவைகளேயாகும். ஆனால் நம் பண்டிதர்களுக்கு தாராளமாய் அறிவைச் செலுத்த இடமில்லாமல் மதம் பழக்க வழக்கம் ஆகியவைகள் குறுக்கிட்டு விட்டதால், எழுத்துகளுக்கும் அதன் கோடுகளுக்கும், வடிவங்களுக்கும் தத்துவார்த்தம் கற்பிக்க வேண்டிய அவசிய மேற்பட்டு எழுத்துக்களையே தெய்வமாகவும், தெய்வ வடிவமாகவும் கருத வேண்டிய நிலை நம் நாட்டில் ஏற்பட்டு விட்டது.

தற்காலம் எத்தனையோ புதிய பாஷைகள் வந்து நமது தமிழ் பாஷையில் புகுந்து கொண்டன. அவைகளை இனிவிலக்க முடியவே முடியாது. விலக்குவதும் புத்திசாலித் தனமாகாது. அப்பேர்ப்பட்ட வார்த்தைகளைச் சரியானபடி உச்சரிக்க நமக்குப் பழக்கத்தில் எழுத்துக்கள் இல்லாமல் பாஷையையும் உச்சரிப்பு அழகையும் கொலை செய்கின்றோம்.

விஷ்ணு என்பதை விட்டுணு என்றும், விண்டு என்றும் உச்சரிப்பதில் பெருமை அடைகின்றோம். பாஷாபிமானப் பட்டமும் பெறுகின்றோம். அதற்கு இலக்கணம் இருக்கிறது என்கின்றோம். அதோடு சப்தங்கள் மாறி விடுவதால் கருத்தும், அர்த்தமும் மாறுவதில்லை என்று கருதுகின்றோம். அது போலவே சில எழுத்துக்கள் பழைய பழக்கம் வழக்கம் என்பதற்காக மாற்றக்கூடாது என்று இல்லாமல், சவுகரியத் துக்காக மாற்ற வேண்டியது அவசியம் என்றால் அறிஞர்கள் அதற்கு இடம் கொடுத்துத் தான் ஆக வேண்டும்.

சுமார் 70, 80 வருஷ காலத்துக்கு முந்திய பதிப்புகளிலும், எழுத்துகளிலும் ஈ என்கின்ற எழுத்தானது இ எழுத்தையே மேலே சுழித்த வட்ட வடிவத்தில் இருந்து வந்திருக்கிறது. இன்னும் 400,500 வருஷங்களுக்கு முந்தின கல் எழுத்துக்கள் அனேகம் வேறு வடிவத்தில் இருந்திருக்கிறது.

இப்பொழுது அவைகள் மாற்றமடைந்ததற்குக் காரணங்கள் கேட்பாரும் இல்லை; சொல்லுவாரும் இல்லை. அதனால் சப்தமோ, அர்த்தமோ, பாஷையின் அழகோ கெட்டுப் போனதாகக் குறை கூறுவாரும் காணப்பட வில்லை. அதுபோலவே இப்போதும் சில எழுத்துக் களின் வடிவங்களை மாற்ற வேண்டியதும், சில எழுத்துக்களைக் குறைக்க வேண்டியதும்,

சில குறிகளை மாற்ற வேண்டியதும் அவசியம் என்றும், அனுகூலம் என்றும் பட்டால் அதைச் செய்யவேண்டியதுதான் அறிவுடைமையே ஒழிய அதன் தத்துவார்த்தத்துக்கு ஆபத்து வருகின்றதே என்பது அறிவுடை மையாகாது என்பது நமது கருத்து.

ஆகவே இப்போது ணா, றா, னா ஆகிய எழுத்துக்களும் ணை, லை, ளை, னை ஆகிய எழுத்துக்களும், மற்ற கா, நா, ரா முதலாகிய எழுத்துக்களைப் போலும் டை, நை, ழை, முதலிய எழுத்துக்களைப் போலும், ஆகாரத்துக்கு  குறியையும் அய்காரத்துக்கு  குறியையும் பெறாமல் தனி வடிவத்தைக் கொண்டு இருப்பதை மாற்றி ணா, றா, னா, ணை, லை, ளை, னை போல உபயோகித்து பிரசுரிக்கலாம் என்று கருதியிருக்கின்றோம்.

இதன் பயனாய் அச்சு கோர்ப்பதற்கு எழுத்து கேசுகளில் (அறைகளில்) 7 கேசுகள் (அறைகள்) குறைகின்றது என்பதோடு பிள்ளை களுக்கும் இந்த ஏழு எழுத்துகளுக்கு தனிவடிவம் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போகும் சவுகரியம் ஏற்படுகின்றது. இன்னமும் தமிழ் பாஷை எழுத்துக்களில் அனேக மாறுதல்கள் செய்ய வேண்டி இருந்தாலும்,

இப்போதைக்கு இந்தச் சிறு மாறுதலை அனுபவத்திற்குக் கொண்டு வரலாம் என்று கருதி அந்தப்படியாகவே எழுத்துக்களை உபயோகித்து அடுத்தாற்போல் பிரசுரிக்கப் போகும் குடிஅரசு பத்திரிகையைப் பிரசுரிக்கலாம் என்று இருக்கிறோம். இதை வாசகர்களும் மற்றும் தமிழ் பாஷை பத்திரிகைக்காரர்களும், தமிழ் பண்டிதர்களும் ஆதரிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கிறோம்.

- பெரியார்.
 30.12.1934.

சனி, 4 ஜூலை, 2020

‘அய்ந்து எழுத்து!'


கி.பி. 17 ஆம் நூற்றாண்டில் ஒரு நூல் வந்தது. சுவாமிநாத தேசிகர் எழுதிய இலக்கணக் கொத்து என்பதே அந்நூல். இவர் தாண்டவ மூர்த்தி என்பார் மைந் தரும், நன்னூலுக்கு உரை செய்த சங்கர நமச்சிவாயருக்கு ஆசிரி யருமாக இருந்த மயிலேறும் பெருமாள் என்பவரிடம் 12 ஆண்டுகள் தமிழ் கற்றார். செப்பறைப் பதியினராகிய சிவச் செல்வர் கனகசபாபதி என்பவரி டம் வடமொழி கற்றார். மேலும் இவர் திருவாவடுதுறையில் தீட்சை பெற்று பொருள் நூல் பயிற்சியில் புலமை பெற்றார். இவ்வளவு புலமை பெற்ற இவர், சார்பாக நின்றது வைதீகக் கருத்தியலுக்குத் தான்.
தமிழ்நூற் களவிலை அவற்றுள்
ஒன்றே யாயினும் தனித்தமிழ் உண்டோ
அன்றியும் ஐந்தெழுத் தாலொரு பாடையென்
றறையவே நாணுவர் அறிவுடை யோரே
ஆகையால் யானும் அதுவே அறிக
வடமொழி தமிழ்மொழி எனுமிரு மொழியினும்
இலக்கணம் ஒன்றே என்றே எண்ணுக!
என 5 எழுத்துக்களால் ஒரு மொழியா? என தமிழ் மொழியை இவர் குறைத்துக் கூறுகின்றார். மேலும் வடமொழி இல்லாத தனித்தமிழ் நடை இல்லை என் பதையும் சுட்டுகின்றார். இதனால் தமிழுக்கும், வடமொழிக்கும் ஒரே இலக்கணம் என்பதை இவர் நிறுவுகின்றார். இவரின் இக் கூற்றுக்கு காரணமும் இருந்தது.
அக் காலகட்டத்தில் தமிழில் வடமொழிக் கலப்பு மிகுந்திருந் தது. வடமொழியைக் கலந்து எழுதுவது மதிப்பிற்குரிய ஒன் றாகக் கருதப்பட்டது. அன்றைய தமிழ்ப் புலமைவாதிகளிடம் ஏற் பட்ட வடமொழி குறித்த மதிப் பீடே இதற்குக் காரணம். வட மொழி, அதிகார மட்டத்துடன் இணைந்திருந்தது இதற்கு முக் கியக் காரணமாகும். பேரரசு வீழ்ச்சிக்குப் பின் ஏற்பட்ட இம் மாற்றம் வட்டாரக் கடவுள்களை யும், வட்டாரத் தலைமைகளை யும் போற்றும் நிலைக்குப் புலவர் களைத் தள்ளியது. இச்சூழலில் தமிழ்ப் புலமையினர் தங்களைத் தக்க வைத்துக் கொள்ள வட மொழியையும், தமிழையும் இணைத்துப் ‘பா' செய்ய வேண் டிய சூழல் ஏற்பட்டது. மக்கள் அனைவரும் இப்படி வடமொழி கலந்தே பேசினரா என்பதெல் லாம் நடைமுறை எதார்த்தமாக இல்லை. புலமைவாதிகளிடமும், அவர்களை ஆதரிப்பவர்களிட மும் ஏற்பட்ட மாற்றம் தமிழை யும், வடமொழியையும் ஒன்றாக் கியது என்றே கருத வேண்டி யுள்ளது.
(‘‘தமிழகத்தில் வேதக் கல்வி வரலாறு'', பக்கம் 208-209,
சி.இளங்கோ)
வைதீகச் சூழலிலும், அதிகார மட்ட செல்வாக்கும் சேர்ந்துதான் தமிழ் என்னும் ஊற்றில் ஆரிய நஞ்சு கலந்தது என்பது இதன் மூலம் வெளிப்படை.
இதில் சுவாமிநாத தேசிகர் என்னும் ஆரிய அடிமை தனது மேற்கண்ட பாடலில்,
அன்றியும் ஐந்தெழுத் தாலொரு பாடையென்
றறையவே நாணுவர் அறிவுடை யோரே
என்று குறிப்பிடுகின்றார்.
தமிழில் உள்ள ண, ற, ழ, எ, ஒ என்ற அய்ந்து எழுத்துகள் வடமொழியில் இல்லாததா லேயே தமிழ் சிறப்பான மொழி யாகிவிடுமோ என்ற கேள்வியில் நெளியும் கேலியும், காட்டிக் கொடுக்கும் தன்மையையும் காண்க!
- மயிலாடன், 3.7.20, கலி. பூங்குன்றன்

வியாழன், 2 ஜூலை, 2020

இந்தி பேசும் பகுதிகள் எவை?




என்னவவோ ஹிந்தி தேசிய மொழின்னாங்க.... இந்த மேப்பல பாத்து தெரிஞ்சுக்குங்க....

இந்தியாவில் இந்தி பேசுவோர் 40% சதம் கிடையாது... இது தவறான, திரிக்கப்பட்ட தகவல்... உண்மையில் இந்தியாவில் 25 சதவீதம் பேரே தங்கள் தாய்மொழி இந்தி என்று மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது பதிவு செய்திருந்தும், பல சகோதர மொழிகளையும் வேறு மொழிகளையும் பேசுவோரை இந்தி மொழியினராக திட்டமிட்டு தவறாக பதிவு செய்துவருகிறார்கள்.
-பிரகாஷ்.ஜே.பி., முகநூல் பதிவு,21.6.14