நேயன்
தமிழ்நாடு தனிநாடு ஆவதைத் தடுக்கவே பெரியார் திராவிடத்தைக் கையில் எடுத்தார் என்பது எத்தர்கள் பெரியார் மீது சுமத்தும் குற்றச்சாட்டு.
பெரியாரின் 60 ஆண்டு கால அயராத உழைப்பால் விழிப்பும், மானமும், அறிவும், சூடும், சொரணையும், கல்வியும், வேலையும், வருவாயும், வாழ்வும், வசதியும் பெற்றுள்ளவர்கள் சிலர் இன்றைய சூழலில், நான்கு அறைக்குள் உட்கார்ந்து கொண்டு, ஏதோ புதியதைக் கண்டுபிடித்து விட்டோம் என்று பிறர் பாராட்ட வேண்டும் என்ற மலிவு ஆசையில், நுட்பமாக எதையும் ஆராயாது, மேம்புல்லை மேய்ந்து, அதுவும் அங்கொன்று இங்கொன்றுமாய் மேய்ந்து, தங்களை அதிமேதாவியாக எண்ணிக் கொண்டு, இன்றைய நிலையிலிருந்து கருத்துகளைக் கூற முற்படுவது அறியாமை. அதுவும் ஆயுள் முழுவதும் இத்தமிழ்ச் சமுதாயத்தின் மேம்பாட்டுக்காகவே, மூத்திரப் பையோடு மூலை முடுக்கெல்லாம், பழைய காரில் பல்லாயிரக்கணக்கான மைல்கள் பயணம் செய்து, பல்லாயிரக்கணக்கான மணி நேரம் பேசி, தன்னலமற்ற, அப்பழுக்கற்ற, ஒப்பில்லா உயர் பணியாற்றிய ஓர் உலகத் தலைவரைக் கொச்சைப்படுத்த முயன்று, கொச்சையாக எழுதியும் இருப்பது அசல் அயோக்கியத்தனம் ஆகும்.
எத்தர்களுக்கு அறிவு நாணயம் இருப்பின், தங்கள் வாதத்தில் நியாயம் இருப்பின் ஒரே மேடையில் நாள் குறித்து வந்து விடட்டும், நாங்கள் சந்திக்கத் தயார். அதைவிட்டு, அச்சிட்டு எதையும், எவனும் விற்கலாம் என்ற உரிமையைப் பயன்படுத்திக் கொண்டு ஒரு மாபெரும் தலைவரை, தமிழன் தலைமுறை தலைமுறையாய் நன்றி பாராட்ட வேண்டிய தலைவரை ஆழ்ந்த ஆய்வு இன்றி, அரைகுறையாய் அறிந்தவற்றை வைத்து, அனுமானம், ஊடகம், அய்யம் என்ற வகையில் கருத்துகளை வன்மையாகக் கண்டித்து விட்டு, பதிலை அளிக்க விரும்புகிறோம்.
திராவிட நாடு கோரிக்கை ஏன்?
ஆரியப் பார்ப்பனர் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு, மானமும் அறிவும், உரிமையும் உள்ள இனமாகத் திராவிட இனம் இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் திராவிடர் அமைப்புகள் ஏற்பட்டு மக்களிடையே விழிப்பூட்டியதோடு, உரிமைக்காகவும் போராடின.
இந்நிலையில் வடக்கில் ஜின்னா அவர்கள் மத அடிப்படையில் இஸ்லாமியர்கள் பெருமளவில் வாழும் பகுதிகளைப் பாகிஸ்தான் என்று பிரிக்க கோரிக்கை வைத்துப் போராடி, நெருக்கடி கொடுத்துவந்த நிலையில், அதே அடிப்படையில் திராவிட மக்களின் பகுதியான திராவிட நாட்டை (தமிழகம் + கேரளம் + ஆந்திரம் + கர்நாடகம் உள்ளடக்கிய பகுதி) தனிநாடாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையினைப் பெரியார் முன்வைத்தார். அதற்கு ஜின்னாவின் உதவியையும் நாடினார்.
ஜின்னாவின் ஒத்துழைப்பு இன்மையாலும், திராவிடப் பகுதியில் இதற்கான எழுச்சி ஏற்படாததாலும் திராவிட நாடு கோரிக்கை வலுவிழந்தது. அதற்காக எழுச்சி தமிழகத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலுமே இருந்தது. எனவே, திராவிடம் என்பது சென்னை மாகாணம் என்றே எடுத்துக் கொள்ளப்பட்டது.
“தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலிய மொழிகளைத் தாய்மொழியாகப் பேசிவந்த மக்களையே மிகுதியாகக் கொண்ட நாடுகள் இன்று திராவிடம் என்று சொல்லப்படுவதை யாவரும் அறிந்ததே. அந்தத் திராவிடம் என்பது பெரிதும் சென்னை மாகாணமாகவே இருக்கிறதுடன், மற்றும் சிறிது சென்னை மாகாணத்தைத் தொட்ட சுற்றுப்புற நாடாகவும் இருக்கிறது.’’
(ஈ.வெ.ரா. சிந்தனைகள், பக்கம் 731)
“திராவிட நாடு பிரிவினை என்று நாம் என்ன சொல்கிறோம் என்றால், சென்னை மாகாணந்தான் இன்று திராவிட நாட்டு விஸ்தீரண அளவு. விஸ்தீரணத்தின் அளவு கூடுவதும் குறைவதும் நம் சவுகரியத்தைப் பொறுத்தது.’’
(ஏன் வேண்டும் இன்பத் திராவிடம்?,
பக்கம்-25)
“திராவிடர்களுடைய கலை, நாகரிகம், பொருளாதாரம் ஆகியவைகள் முன்னேற்றம் அடைவதற்கு, பாதுகாப்பதற்கு, திராவிடர்களின் அகமாகிய சென்னை மாகாணம், இந்திய மந்திரியின் நேர் பார்வையின்கீழ் ஒரு தனி நாடாகப் பிரிக்கப்பட வேண்டும் என இம்மாநாடு தீர்மானிக்கிறது.’’
(ஈ.வெ.ரா. சிந்தனைகள், பக்கம்-655)
மேற்கண்ட பெரியாரின் கருத்துகள் திராவிடம் என்பது _ திராவிட நாடு என்பது சென்னை மாகாணத்தைக் குறிப்பதாக 1940 வாக்கிலே வந்துவிட்டது. எனவே, திராவிட தேச கோரிக்கை தமிழ்த் தேசிய கோரிக்கை என்பதாக அப்போதே பரிமாணம் பெற்று விட்டது.
1955 ஆம் ஆண்டு வாக்கில் இந்தியா மொழிவாரி மாநிலம் பிரிக்கப்படுவதற்கான பணிகள் தொடங்கியபோது, திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டு, தமிழ்த் தேசிய போராட்டத்திற்கு வந்து விட்டார் பெரியார்.
“பொதுவாக ஆந்திரா பிரிந்ததிலிருந்தே, நாட்டுப் பிரிவினையில் எனக்குக் கவலையில்லாமல் போய்விட்டது. பிறகு கன்னடமும், மலையாளமும் பிரிவதில் இரண்டு மூன்று காரணங்களால், சீக்கிரம் பிரிந்தால் தேவலாம் என்கின்ற எண்ணம் தோன்றி விட்டது.
காரணம்,
1. கன்னடியனுக்கும், மலையாளிக்கும் இனப்பற்றோ, இன சுயமரியாதையோ, பகுத்தறிவு உணர்ச்சியோ இல்லை என்பதாகும். எப்படியெனில், அவர்களுக்கு வருணாசிரம வெறுப்பு கிடையாது. சூத்திரன் என்பது பற்றிய இழிவோ வெட்கமோ கிடையாது. மத, மூட நம்பிக்கையில் ஊறிவிட்டார்கள்.
2. அவர்கள் இருவருக்கும் மத்திய ஆட்சி என்னும் வடவர் ஆட்சிக்குத் தாங்கள் அடிமையாக இருப்பது பற்றியும் அவர்களுக்குச் சிறிதும் கவலையில்லை.’’
_ என்று தமிழ்த் தேசியத்திற்கு (தமிழ்நாடு பிரிவினைக்குப் போராடிய பெரியார், தமிழன் என்ற சொல்லைவிட்டு, திராவிடன் என்ற சொல்லைத் தேர்வு செய்ததற்கான காரணத்தையும் விளக்குகிறார்.
(தொடரும்...)
உண்மை இதழ், மார்ச் 16- 31. 21
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக