சிவகங்கை, மே 17- கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் கொந்தகை தளத்தில் இடைவெளியின்றி முது மக்கள் தாழிகள் நெருக்கமாக கிடைத்திருப்பது ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கீழடியில் பிப்ரவரி 13ஆம் தேதியும், அகரம், கொந்தகையில் மார்ச் 30ஆம் தேதியும் அகழாய்வு பணிகள் தொடங்கின. தொல்லியல்துறை இயக்குநர் சிவானந்தம் தலைமையில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.
கொந்தகை தளத்தில் 7ஆம் கட்ட அகழாய்வின் போது, 9 குழிகள் தோண்டப்பட்டு, 30 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன. 7ஆம் கட்ட அகழாய்வில் கிடைத்த தாழிகள் இடைவெளியுடன் இருந்ததால் முழுமையாகவும், சேதமடையாமலும் இருந்தன.
தாழிகளினுள் உள்ள சுடுமண் பாத்திரங்களும் உருகுலையாமல் கிடைத்தன. 8ஆம் கட்ட அகழாய்வில் இதுபோன்ற இடைவெளியில்லை. நெருக்கமாகவும், தாழிகள் அனைத்தும் சேத மடைந்தும் உள்ளன. இதனால் 2 கட்ட அகழாய் விலும் கிடைத்த தாழிகளுக்குள் காலஇடைவெளி அதிகமாக இருக்கக்கூடும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அத்துடன் இடைவெளி இன்றி தாழிகள் புதைக்கப்பட்டதற்கான காரணத்தையும் ஆய்வு செய்ய உள்ளனர். தற்போது தாழிகளுக்கு இடையே உள்ள தூரத்தை அளவிட்டு பதிவு செய்து வருகின்றனர். அதன்பின் தாழிகளினுள் உள்ள பொருட்களை வெளியே எடுக்கும் பணி தொடங்கும் என்று தெரிகிறது.
சிவகங்கை அருகே பிஜப்பூர் சுல்தான்கள் காலத்திய நாணயங்கள்
சிவகங்கை அருகே அரசனேரி கீழமேடு பேச்சிக்குளம் முனிக்கோவில் பகுதியில் வித்தி யாசமான மூன்று உலோகச் சில்லுகள் கிடைத்தன. இவை செம்பால் செய்யப்பட்டதாக இருந்தாலும் முன்னும் பின்னுமாக அடையாளங்கள் இருந்தன. இதிலுள்ள வேறுபட்ட எழுத்து வடிவத்தை கொண்டு நாணயங்கள் என்பதை உறுதி செய்ய முடிந்தது. இவற்றை ஆய்வு செய்ததில் இவை பிஜப்பூர் சுல்தான்கள் காலத்தவை என்பதை உறுதி செய்ய முடிந்தது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பிஜப்பூரைத் தலைநகராகக் கொண்டு வடக்கு கர்நாடகா பகுதியையும் தெற்கு மகாராட்டிரப் பகுதியையும் 1490லிருந்து 1686 வரை ஆண்டவர்கள் பிஜப்பூர் சுல்தான்கள். 1490இல் பாமினி சுல்தான்களிடம் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு தனியரசாக செயல்பட்டது. யூசுப் அடில் ஷா தொடங்கி 9 அரசர்கள் இப்பகுதியை ஆட்சி செய்தனர். இங்கு கிடைத்த நாணயங்கள் செம்பால் ஆனதோடு அதிக எடை உள்ளதாக உள்ளன. ஒரு நாணயத்தில் தேவநாகரி எழுத்தில் ராஜா என்று எழுதப் பட்டுள்ளது. மற்ற எழுத்துக்கள் பாரசீகத்தில் எழு தப்பட்டுள்ளன.
இவை இப்பகுதி ஆளுகையில் இருந்த மன்னர் களின் நிர்வாகத்திற்கு தொடர்பற்று இருப்பதால் இது வணிகத் தொடர்பிலோ அல்லது இறைவழிப் பயணத்தின் வழியோ வந்திருக்கலாம். மதுரை, தஞ்சாவூர், கரூர், திருநெல்வேலி போன்ற பகுதிகளில் ஆண்டாண்டு காலமாய் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றில் நாணயங்கள் இழுத்து வரப்படு வதும் அவற்றை அரித்து சலித்து எடுப்பதும் பல காலங்களாக தொழிலாகவே நடைபெற்று வந்து உள்ளன. ஆனால் சிவகங்கை போன்ற பகுதிகளில் இவ்வாறான நாணயங்கள் கிடைப்பது அரிது.இவ்வாறு தெரிவித்தனர்.
வெம்பக்கோட்டை அகழாய்வில் தந்தத்தாலான அணிகலன்
வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வில் யானை தந்தத்தால் ஆன அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய அணிகலன் மற்றும் சுடுமண்ணால் ஆன தொங்கட்டான் கண்டறியப் பட்டுள்ளது.
வெம்பக்கோட்டை அருகே வைப்பாற்றின் வடகரையில் அமைந்துள்ள உச்சிமேட்டில் 25 ஏக்கர் பரப்பளவிலான தொல்லியல் மேட்டில் கடந்த மார்ச் 16-ஆம் தேதி முதல் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. முன்னதாக, அகழாய்வில் சுடுமண்ணால் ஆன பகடைக்காய், தக்களி, ஆட்டக்காய்கள், முத்து மணிகள், சங்கு வளையல்கள், சுடு மண்ணால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருள்கள், அழகிய வேலைப் பாடுகளுடன் கூடிய சுடு மண் அகல்விளக்கு கண்டறியப்பட்டன. இந்நிலையில், ஞாயிறன்று அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய யானை தந்தத்தால் செய்யப்பட்ட அணிகலன் மற்றும் சுடுமண்ணால் ஆன தொங்கட்டான் ஆகிய அணிகலன்கள் கண்டறியப்பட்டுள்ளன. யானை தந்தத்தால் செய்யப்பட்ட அணிகலன் 5 சென்டி மீட்டர் நீளமும், 0.8 சென்டிமீட்டர் விட்டமும், 61 கிராம் எடையும் சுடுமண் தொங்கட்டான் 2.2 சென்டிமீட்டர் நீளமும், 1.01 சுற்றளவும் 65 கிராம் எடையும் கொண்டதாக உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக