மு.வி.சோமசுந்தரம்
எட்டுப் பக்கங்களே கொண்ட ‘விடுதலை’ இதழ் ஒரு கட்டிக் கரும்பு. அதன் கனிச்சாற்றை நாளும் சுவைத்து, வாழ்நாளை நீட்டிப்பது, சுகமென்றிருந்தாலும், ஒரு சில நாளில் வரும் செய்தி படித்து, தொகுக்க வேண்டும் என்ற எண்ணம், துணிவு துள்ளி எழும். அந்த வகையில் இந்தக் கட்டுரை.
“நிறைகுடம் தளும்பாது” என்று கூறுவது வழக்கில் உள்ள ஒன்று. சென்னை கிண்டி மாளிகையில் உள்ள குடமோ பாதி குடம். அது விட்டுவிட்டு கொதித்து பொய்யாக பொங்கி வழிகிறது. கடமை மறந்து, தன் எல்லைக்கோட்டை உணராமல், உள்ளத்தில் மறைபொருள் வைத்து செயல்படுவதின் விளைவு இது. இதைத்தான் திருவள்ளுவர்,
“செயத்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்” (466)
என்று கூறுகிறார்.
செய்யும் கெடுதலான செயல்கள் எவை என்று பார்த்தால்,
1. திருவள்ளுவர் படத்துக்கு காவியையும் பட்டையையும் தீட்டி களிப்படைவது.
2. அரசின் சொல்லான ‘தமிழ்நாடு’ என்பதை ‘தமிழகம்’ என்ற அச்சிட்டு மகிழ்வது.
3. வள்ளலாரை ‘ஸநாதனத்தின் காவலர்’ என்று வாய் கூசாமல் கூறுவது.
4. அய்யா வைகுண்டரை, விஷ்ணுவின் அவதாரமென்றும், ஸநாதனத்தை சந்தைப்படுத்தியவர் என்று விமர்சிப்பதும் ‘6.3.2024 ‘விடுதலை’ தலையங்கம்)
5. கால்டுவெல், ஜி.யு.போப் போன்றோர்கள் நூல்கள் போலியானவை. பள்ளி அளவு கல்வி கற்காதவர்கள். தமிழ் மக்களின் கலாச்சாரத்தை அழிக்க முற்பட்டனர். (தினகரன், 12.3.2024, ‘விடுதலை’ – 6.3.2024). இவை ஒரு சில (ஆளுநரின் பேச்சில்).
கால்டுவெல், ஜி.யு.போப் பற்றி, மேலே கூறப்பட்டவை, அடித்தளம் அற்றவை, அவதூறானவை, வெறுப்பில் விளைந்தவை என்பதை வெளிப்படுத்தும் முகத்தான் அடுத்து வரும் செய்திகள் தரப்படுகின்றது.
ராபர்ட் கால்டுவெல், பிறந்த தேதி 7.5.1814 மறைந்த தேதி 28.8.1891. அவரின் உடல் இடையாங்குடி தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அவர் அயர்லாந்து நாட்டில் பிறந்து, ஸ்காட்லாந்தில் கல்வி கற்றார். ஆங்கில மொழிப் புலமை பெற்றவர். சமய நூல்களையும், வேறு மொழி நூல்களையும் ஆர்வத்துடன் கற்றார். 1938ஆம் ஆண்டு சமயப் பணி மேற்கொள்ள இந்தியா வந்தார். சென்னையில் ஜனவரி, 8இல் 1938ஆம் ஆண்டிலிருந்து மூன்றாண்டுகள் இருந்தார். சமயப் பணிக்கு ஆங்கிலக் கல்வி பயனுள்ளதாக இருந்தாலும், மக்களின் தாய் மொழி மூலம் செயல்படுவது சிறந்தது என்று எண்ணினார்.
தமிழ்மொழியுடன், தெலுங்கு, மலையாளம், துளு போன்ற மொழிகளுடன் லத்தீன், கிரேக்கம், ஹீப்ரு, ஜெர்மன் போன்ற மொழிகளையும் அறிந்திருந்தார்.
கால்டுவெல் 1300 கி.மீ. நடைப் பயணமாக உதகமண்டலத்திலிருந்து, திருநெல்வேலி வழி 1841ஆம் ஆண்டு இடையாங்குடி கிராமத்திற்கு வந்தார். அவரின் வாழ்க்கை அப்பகுதி மக்களுடன் ஒன்றிப் போயிற்று. அப்பகுதியில் சமய, கல்வி, சமுதாயப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். குறிப்பாக ‘சாணார்’ என்று தாழ்ச்சியாக அழைக்கப்பட்ட நாடார் சமூகம், பொருளாதாரம், சமூக மதிப்பு பெற்று உயர்நிலை எய்த ஆவன செய்வதில் கவனம் செலுத்தினார். அதனால், பார்ப்பனருக்கு என்று இருந்த சமூக நிலைக்கு உயர்ந்தனர்.
அடுத்து, கால்டுவெல் தென்னிந்திய மொழிகளை ஒப்பிட்டு ஆய்வு செய்வதில் ஈடுபாடு கொண்டார் (Scholarly Research). அதன்மூலம் தமிழ் மொழிக்கு நிலைத்த பெருமையான நன்கொடையை வழங்கியுள்ளார். அது ஆங்கிலத்தில் “Comparative Grammar on the Dravidian or South Indian Family of Languages”. இவரின் ஆய்வு மூலம், தென்னிந்திய மொழிகள், சமஸ்கிருதத்தை விடத் தனித்தியங்கும் தகுதி பெற்றவை என்பதை ஞாலம் அறிய முடிந்தது.
தாம்பரம், சென்னை கிறித்துவக் கல்லூரி மேனாள் வரலாற்றுத் துறை பேராசிரியர் திரு.குமாரதாஸ், கால்டுவெல்லின் கடிதங்களையும், எழுத்துகளையும் நூலாகத் தொகுத்துள்ளார். அதன் மூலம் அன்றைய கால சமூக நிலையை அறிய முடிகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் பார்ப்பனர் உள்பட பலர் மதம் மாறினர். ஆழ்வார் திருநகரியில், அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பை ஏற்று கோயில் மண்டபத்தில் அய்ந்து நாள்கள் உரையாற்றினார். உயர்ஜாதியினர் 21 பேர் மதம் மாறினர். இவரின் போற்றப்படும் மொழி ஒப்பியல் இலக்கண நூல் பார்ப்பனரல்லாதார் இயக்கம் தோன்றுவதற்கு அடித்தளம் அமைத்தது என்று திரு.குமாரதாஸ் நூல் கூறுகிறது. “கால்டுவெல் என்றாலே, ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் பார்ப்பன சக்திகளுக்குக் குமட்டிக் கொண்டு வரும். காரணம் புரிகிறதா?” என்று இதைத்தான் 7.5.2023 ‘விடுதலை’ ஒற்றைப் பத்தி குறிப்பிடுள்ளது.
அடுத்து, ஜி.யு.போப்பின், தமிழ் மொழிக்கான அவரின் பங்களிப்பை எடுத்துக் கூறும் வகையில், துறைபோகிய (நீரியல் துறை) பொறியாளரும், சிறந்த தமிழ் ஆர்வளருமான, மறைந்த வா.செ.குழந்தைசாமி கூறுவது: “பணிவுடமை, அருளுடைமை, பொறையுடைமை போன்ற பண்புகள், கிறித்துவம் அல்லாத நாடுகள் போதிக்கவில்லை என்ற எண்ணம் அய்ரோப்பிய கிறித்துவ பிரச்சாரகர்களிடையே நிலவி வந்தது. குறளை 1886ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த தவத்திரு ஜி.யு.போப் இந்த தப்பெண்ணத்தைத் தகர்த்தெறிந்தார்” என்பதாகும்.
சென்னை மற்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகங்களில், ஆங்கில மொழியின் புலமைப் பட்டங்கள் பெற்றவரும் சிறந்த மொழிபெயர்ப்பாளருமாகிய திரு.பி.எஸ்.சுந்தரம் அவர்கள், “மிகவும் ஈடுபாடும் புலமையும் கொண்ட மொழிபெயர்ப்பாளர்களுள், டாக்டர் போப், குறளை, ஒரு மலைப்பாம்பு நீளம் பக்க அளவு வரிகளில் வழங்கும் முறையைத் தேர்ந்தார்.” (The most devoted and learned of the translators, Dr.Pope, chose to render the Kural in lines that extend right across the page like pythons.)
இத்தகையப் பாராட்டுகளுடன், தமிழ் மொழியின் காதலனாக இருந்த டாக்டர் ஜி.யு.போப் 1908இல் காலமானார். அவரின் கல்லறை இங்கிலாந்து நாட்டில் ஆக்ஸ்போர்ட் நகரில் உள்ளது. திராவிடர் கழகத் தலைவர் தகைசால் கி.வீரமணி அவர்கள் இங்கிலாந்து நாட்டில், ஆக்ஸ்போர்ட் தமிழ் சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்த பொங்கல் விழாவில் உரையாற்ற 2004ஆம் ஆண்டு சென்றிருந்தார். ஜி.யு.போப், தமிழ்மொழியின்பால் கொண்டிருந்த பற்றை மதிக்கும் வகையில் 17.1.2004இல் போப்பின் நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்தினார் என்பது தமிழ் தொண்டரைப் போற்றிய ஒரு செயல்.
கால்டுவெல், ஜி.யு.போப், இருவரும் அயல்நாட்டவரே, சமயப் பிரச்சாரப் பணிக்காக இந்தியா வந்தனர். புத்தரின் சீடர்கள் இலங்கை சென்றதும், விவேகானந்தர் சிகாகோ சென்றதும் சமயப் பிரச்சாரமே. அபுதாபி நாராயணக் கோயில் சமயப் பணி சார்ந்ததே.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவராக இருந்து ஓய்வு பெற்ற தமிழறிஞர் திரு.வி.அரசு அவர்கள், ராபர்ட் கால்டுவெல், ஜி.யு.போப் பற்றி பதிவு செய்துள்ள கருத்து:
“ஜி.யு.போப், கால்டுவெல் போன்ற சமயப் பிரச்சாரகர்களின் அர்ப்பணிப்பு ஈடு இணையற்றது. அவர்கள் மக்களைத் தன்னலமற்ற நோக்கில் அணுகி, மக்களின் கலாச்சாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டனர் என்ற பார்வை இருக்கக் கூடாது.”
தமிழ்நாட்டு ஆளுநரின் புரட்டுப் பேச்சு, திசை திருப்பும் பேச்சு போன்றவை அவருக்கு அளிக்கப்பட்ட மதிக்கத்தக்க பதவிக்கும், ஏற்றுக்கொண்ட பொறுப்புகளுக்கும், சிறப்பு சேர்ப்பதாக அமையவில்லை என்ற கருத்து மக்களிடையே எழுகிறது. இதைத்தான் 6.3.2024 தேதியிட்ட ‘விடுதலை’ இதழ் தலையங்கம் சரியாகவே குறிப்பிட்டுள்ளது.
இதனை விளக்குமுகத்தான் திருவள்ளுவர் கூறுவது:
“தலையி னிழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையி னிழிந்த கடை” – 964
(கட்டுரைக்கு ஆதாரம்:
‘தி இந்து’ 9.6.2022, ‘விடுதலை’ 7.5.2023, ‘தமிழின பண்பாட்டுக் கையேடு’)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக