சென்னை, செப்.2_ தமிழறிஞர்கள், எல்லைக் காவலர்கள் ஆகியோருக்கு வாழ்நாள் உதவித் தொகை வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி அறிவித்தார்.
சட்டப் பேரவையில் தமிழ் வளர்ச்சித் துறை, பள்ளிக் கல்வித் துறைகளில் மானியக் கோரிக்கை மீது செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவாதங்களுக்கு பதிலளித்து அமைச்சர் கே.சி.வீரமணி வெளியிட்ட பல்வேறு அறிவிப்புகள் வருமாறு:
தமிழ் வளர்ச்சி- தமிழ்ப் பண்பாட்டுக்காக பெரும் தொண்டாற்றிய தமிழறிஞர்கள், எல்லைக் காவலர்கள், மரபுரிமையர்கள் என மொத்தம் 51 பேருக்கு அவர்களின் வாழ்நாள் முழுவதும் உதவித் தொகை வழங்கப்படும்.
இதனால், அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 19.7 லட்சம் கூடுதல் செலவு ஏற்படும். வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ், மாதந்தோறும் உதவித் தொகையாக ரூ. 2,000, மருத்துவப்படி ரூ. 100-ம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின்கீழ், பயன்பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை 30-லிருந்து 50-ஆக உயர்த்தப்படும்.
சொல்வங்கி மய்யம்: புதிதாக உருவாகி வரும் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை உருவாக்கி அவை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். உலக அளவில் ஒரே வகையான தமிழ்ச் சொல்லை பயன்பாட்டுக்குக் கொண்டுவர "சொல் புதிது' என்ற வலைசார் சொல்வங்கி மையம் அமைக்கப்படும். உலகளாவிய தமிழ் அமைப்பு களுக்குத் தமிழ்ப் பணி தொடர்பான செய்திகளை எடுத்துச் செல்ல மின்னிதழ், மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் மூலம் ஏற்படுத்தப்படும் என்றார் வீரமணி.
ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ்
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் திட்டம் நிகழ் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்படும். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஒவ்வொரு பருவத் தேர்வின்போதும் தனித் தனி பதிவு எண் வழங்கும் நடைமுறை இப்போது நடைமுறையில் உள்ளது. ஒரு தேர்வருக்கு ஒரு பதிவு எண் மட்டுமே வழங்கி, அந்தப் பதிவு எண்ணைக் கொண்டே பல பருவங்களிலும் தேர்வு எழுதும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படும்.
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் சார்பில் 100 புதுமை யான கற்பித்தல் முறைகள், 750 கணினி வழிப்பாடப் பொருள்களையும் மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் ஆகியோர் எளிதாகப் பதிவிறக்கம் செய்ய புதிய கற்றல் இணையதளம் தொடங்கப்படும்.
இலவச இணையதள வசதி: கன்னிமாரா பொது நூலகம், 32 மாவட்ட மய்ய நூலகங்களில் உள்ள நூலக உறுப்பினர்கள், போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப் பிக்க இலவச இணையதள வசதி ஏற்படுத்தப்படும்.
-விடுதலை,2.9.15
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக