• Viduthalai
2017 - முதல் 2020 வரையிலான மூன்று ஆண்டுகளில் ஒன்றிய அரசு சமஸ்கிருதத்தின் வளர்ச்சிக்காக மட்டும் ரூ.683.84 கோடி செலவிட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையா ளம், கன்னடம் மற்றும் ஒடியா ஆகிய மற்ற செம்மொழிகளின் வளர்ச்சிக்கு மொத்தமாக ரூ.29 கோடி செலவிட்டுள்ளது. இந்தப் புள்ளி விவரம் அரசாலேயே வெளியிடப்பட்டிருக்கிறது.
இது நம் கண் முன் தெரிகிற கணக்கு. ஆனால் கண்ணுக்குத் தெரியாத கணக்கிற்கு அளவே இல்லை. இது புதிய வழக்கமும் அல்ல. வரலாற்றுக் காலந்தொட்டு யார் ஆட்சியில் இருந்தாலும் சமஸ்கிருத வளர்ச்சியும், அதன்மூலம் பார்ப்பனர்கள் வளர்ச்சியுமே வழக்கமான ஒன்றாக இருக்கிறது.
அரசர்கள் காலத்தில் இவர்கள் வேத பாடசாலைகளுக்குப் பெற்ற தானங்களும், நிலங்களும் செல்வமும் கல்வெட்டுகளில் காணக் கிடைக்கின்றன.
கிடைத்திருக்கும் கல்வெட்டுகளில் சொல்லப்படும் கணக்கே மலைப்பைத் தருகிறதென்றால், கிடைக்கப்பெறாத கல்வெட்டுகளும் செப்பேடுகளும் கணக்கின்றி கொடுக்கப் பட்ட தானங்களும் எவ்வளவு இருக்கும் என்று எண்ணிப் பார்க்கவே கடினமாக இருக்கிறது.
முகலாயர் ஆட்சி ஆகட்டும், ஆங்கிலேயேர் ஆட்சி ஆகட்டும் பார்ப்பனர்கள் காட்டில் மழைதான். அன்றாவது அரசர்களிடமிருந்தோ, செல்வந்தர்களிடமிருந்தோ தானமோ, தர்மமோ பெற வேண்டிய நிலை இருந்தது. அது அவர்களுக்குக் கை வந்த கலை என்றாலும், இன்னொருவர் கையைத்தான் எதிர்பார்க்க வேண்டியிருந்தது.
ஆனால், இன்று அவர்களே ஆட்சி அதிகாரங்களை நேரடியாகத் தங்கள் கைகளில் வைத்திருக்கிறார்கள். இனி அவர்களுக்கு ஏன் மற்றவர்கள் தானமும் தர்மமும் கொடுக்க வேண்டும்?
இது கடவுளின் பெயரால், தேவ பாஷை என்னும் மாய பிம்பம் உருவாக்கப்பட்டுத் தொடரும் கொள்ளையாகும். இதில் மக்களின் பணம் கொள்ளையடிக்கப்படுவது மட்டுமன்று, சுரண்டப்பட்ட மக்கள் இழிவுக்கும் உள்ளாகின்றனர். மக்கள் மொழி நீச பாஷையாக இருக்கிறது. தங்கள் பணத்தைப் பெற்றுக்கொண்டே தங்கள் மொழியையே இழிவுபடுத்தும் அவலநிலை உலகில் எந்த சமூகத்திலும் காணப்பெறாதது.
தமிழுக்காக மட்டுமல்ல, இந்திய ஒன்றியத்தின் அனைத்து மொழிகளின் உரிமைகளுக்காகவும் திராவிட இயக்கம்தான் தொடர்ந்து மொழிப்போர்களை நடத்தி வருகிறது. திராவிடமே, நீச பாஷைகள் ஆக்கப்பட்ட மொழிகளுக்கு இருக்கும் ஒரே சுடரொளி!
- மா.உதயகுமார்
நன்றி: கருஞ்சட்டை தமிழர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக