ஒரு கும்பலின் கதை
உ.வே.சா அய்யர் எனும் உடைபட்ட பர்னிச்சர்..
அன்புள்ள கார்த்திக் உ.வெ.சாமிநாத அய்யரை ஏன் தமிழ்தாத்தா என்று அழைக்கிறோம்? இது பற்றின விபரங்களை இணையத்தில் தேடினேன். கிடைக்கவில்லை அதனால் உங்களைக் கேட்கிறேன்.?
மா.கோதண்டம், மங்களாபுரம்.
அன்புள்ள மா.கோ.,
உ.வே.சா; விரித்துச் சொன்னால், உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகன் சாமிநாத அய்யர். பள்ளி கல்லூரிகளில் தமிழ் படித்தவர்கள் கொஞ்சமாவது இவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம். 1855ல் பிறந்து தன் 87 வயது வரை வாழ்ந்தவர் என்பதால் தாத்தா என்று அழைக்கப்பட எல்லா தகுதியும் கொண்டவர். ஆனால், எப்படி சாமிநாத அய்யர் ”தமிழ் தாத்தா” ஆனார் என்ற கேள்வி எனக்கும் எழுந்ததுண்டு!
”உ.வே.சா. தமிழுக்கு நிறைய தொண்டாற்றி இருக்கார். அழிஞ்சு போற நிலையில் இருந்த பழைய தமிழ் நூல்களை எல்லாம் தேடித் திரிஞ்சு சேகரிச்சார், அதுக்கெல்லாம் உரை எழுதினார். அதனால அவரை தமிழ் தாத்தான்னு சொல்றோம்...” என்று பல இடங்களில் இருந்து பதில் வரும்.
சரி, தான் சேகரித்த நூல், சுவடிகளை எல்லாம் என்ன பண்ணினார்.? என்று பார்த்தால், ஆரம்ப காலங்களில் புத்தகங்களாகப் ப்ரிண்ட் போட்டு வியாபாரம் பார்த்திருக்கிறார்.. இப்போது அவை பெசண்ட் நகரில் அவர் பேரிலே உண்டாக்கப்பட்ட லைப்ரரியில் வைத்துப் புரவலர்களால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. சமீபத்திய புரவலர் டி.வி.ராமசுப்பையரின் தினமலர் நாளிதழ் .
சரி, இவரளவுக்கு இவர் காலத்திலே இதே வேலைகளைச் செய்தவர்களை எல்லாம் விட்டுவிட்டு இவர் மட்டும் எப்படி தமிழ் தாத்தானு ஆனார்? என்ற கேள்வி மறுபடியும் ஆக்கிரமித்தது. அதற்கு மிக முக்கியமானதாகச் சொல்லப்படும் காரணம், ”யாருக்குமே கிடைக்காம போயிருக்க வேண்டிய, அய்ம்பெருங் காப்பியங்களிள் ஒன்றான ’சீவக சிந்தாமணி’யை இவரே கண்டுபிடித்துத் தமிழுக்குத் தந்தார்... அதனால்தான் மகாமகோ உபாத்யாயருக்குத் தமிழ் தாத்தா எனப் பட்டம் சூட்டப்பட்டது” என்று பதில் வந்தது.
அதன் பிறகுதான், ரொம்ப நாள் கழித்து ஆய்வாளர் பொ.வேல்சாமி உ.வே.சா-வின் தமிழ் தாத்தா பர்னிச்சரை போட்டு தொம்சம் பண்ணிவிட்டார் என்பதை அவரது ஓர் கட்டுரையின் மூலம் தெரிந்துகொண்டேன். அதாவது, வெள்ளையர் ஆட்சிகாலத்திலே அப்போதிருந்த பள்ளிக்கூடங்களின் தமிழ் பாடத் திட்டத்தில், நாலடியார், திருக்குறள், பெரிய புராணம், கந்தபுராணம், வில்லி பாரதம், நைடதம், நீதிநெறி விளக்கம் எல்லாம் இடம்பெற்றிருக்கின்றன. ரொம்ப முக்கியமான விசயம் சீவக சிந்தாமணியின் பகுதிகள் அந்த பாடத்திட்டத்திலே இடம்பெற்றிருந்தது..
அவர் குறிப்பிடும் 1857 காலகட்டத்தில் உ.வே.சாமிநாத அய்யருக்கு வயசு ரெண்டு. மேலும், 1868-1870ல் அன்றைக்கு இருந்த தமிழ் பி.ஏ பாடத்திட்டத்தில, சீவக சிந்தாமணி , நாமகள் கலம்பகம் நச்சினார்கினியர் உரையோடு இடம்பெற்றிருக்கிறது. அப்போது தாத்தாவுக்கு வயசு பதிமூன்று.
பலர் சொல்கிறதுபோல சீவக சிந்தாமணி மட்டுமில்ல, இளங்கோ எழுதிய சிலப்பதிகாரத்துக்காகவும் அவர் கொஞ்சம் பேர் வாங்கி வைத்திருந்தார். அந்தச் சிலப்பதிகாரம் 1872ல் பி.ஏ பாடத்தில் இடம்பெற்றிருந்தது. அப்போது தாத்தாவுக்கு வயசு பதினேழு.”
உ.வே.சா கிட்டத்தட்ட அந்தக்கால சோ.ராமசாமி போன்றவர், ”யாருக்குமே ஒண்ணுமே தெரியாது; தான் ஒரு புத்திசீவி” என்று தன் தலையைத் தடவிக் கொள்ளும் துடுக்கு கொண்டவர். காரிய புத்தி. அவரது, என் சரித்திரம், பயணக் கட்டுரைகளைப் படித்தால் இந்த குணாம்சத்தைப் பொருத்திப் புரிந்துகொள்ள முடியும்.
ஆனால், கேக்க ஆள் இல்லாத காலத்தில், படிக்க வாய்ப்பு பெறாத மக்களுக்கு இந்த இலக்கியம், பாடப் புஸ்தகம் பத்தின விபரமெல்லாம் தெரிந்திருக்க நியாயமில்லை. அந்த இடைவெளியை நேக்காகப் பயன்படுத்திக் கொண்டு, கேப்பையில நெய் வடிகிற கதையாக, ”இதுவரைக்கும் யாருமே காணாத பொஸ்தகம்”னு நா கூசாமப் பொய்களைச் சொல்லி, அதை நானே கண்டுபிடித்தேன் எனப் பறைசாற்றி, அதற்காகத் தனக்கு தமிழ் தாத்தானு பட்டம் கொடுத்துக் கொண்டவரை இப்போ வரைக்கும் அழுக்கு படாமல் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள்.
இங்கே தமிழ் தாத்தாவோ, மகாகவியோ, தேசியக் கவியோ, அவர்கள் அனைவரையும் ஒரேயொரு நூலே அடையாளங்களாக்கி விடுகிறது.
- திராவிட ஆய்வு -
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக