• Viduthalai
ஊட்டியில் தமிழர் தலைவர் பேட்டி
ஊட்டி, நவ.2 தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட வேண்டியது நவம்பர் ஒன்றா? ஜூலை 18 ஆம் நாளா? துணைவேந்தர்கள் நியமனம் ஆளுநரைச் சார்ந்ததா? போன்ற கேள்விகளுக்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பதிலளித்தார்.
நேற்று (1.11.2021) காலை ஊட்டிக்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார்.
அவ்விவரம் வருமாறு:
தமிழ்நாடு நாள் என்று அரசு அறிவித்திருப்பது குறித்து...
செய்தியாளர்: நவம்பர் ஒன்றாம் தேதி தமிழ்நாடு தினத்தை கொண்டாடவேண்டும் என்று அரசியல் கட்சியைச் சேர்ந்த சிலர் சொல்கிறார்கள்; ஆனால், ஜூலை 18 ஆம் தேதி கொண்டாடுவோம் என்று அரசு அறிவித்திருக்கிறதே?
தமிழர் தலைவர்: ஏற்கெ னவே கடந்த ஆண்டே அவர்கள் அதை அறிவித்தவுடன், திராவிடர் கழகம் முன்பே இதுபற்றி சொல்லியிருக்கிறது.
தமிழ்நாடு நாள் - என் றைக்குத் தமிழ்நாடு என்று அறிவிக்கப்பட்டதோ, அன்றைய தினத்தை தமிழ்நாடு நாள் என்று கொண்டாடுவதுதான் உரிய முறையில் பொருத்த மானதாக இருக்கும்.
காரணம் என்னவென் றால், 1956, நவம்பர் ஒன்றாம் தேதி வந்தது மாநிலங்கள் சீரமைப்பு - மொழி வழி மாநிலங்கள். சென்னை ராஜ் ஜியம் என்றுதான் இருந்தது. அதிலிருந்து சில பகுதிகள் நீக்கப்பட்டன; சில பகுதிகள் இணைக்கப்பட்டன.
ஆகவே, முழுக்க முழுக்க அண்ணா அவர்கள் 1963 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபொழுது, ''Call My State as Tamil Nadu'' என்று மிக அழகாக, ஆணித்தரமாக வாதம் செய்தார்.
1961ஆம் ஆண்டிலேயே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் முதன் மையானவராக இருந்த பூபேஷ் குப்தா அவர்கள், சென்னை ராஜ்ஜியம் பிரிந்தவுடன், ''தமிழ்நாடு'' என்று அதற்குப் பெயர் இல்லை - வெறும் சென்னை ராஜ்ஜியமாக இருக்கிறது என்று சொன்னார்.
''தமிழ்நாடு'' என்று பெயர் சூட்டப்படவேண்டும் என்று 1956 இல் சொன்னார் தந்தை பெரியார்!
அதற்கு முன்பே 1956 இல் தந்தை பெரியார், ''தமிழ்நாடு'' என்று பெயர் சூட்டப்படவேண்டும் என்பதை முதன்முதலில் வலியுறுத்தினார்.
எனவே, பெரியார் வலியுறுத்தி, வடக்கேயும் மாநிலங்களவையில் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, வங்காளத்தைச் சேர்ந்த பூபேஷ் குப்தா அவர்கள் தமிழ்நாடு என்று பெயர் வைக்குமாறு கோரியதை அன்றைக்கு ஒன்றிய அரசினர் ஒப்புக் கொள்ள வில்லை.
மாநிலங்களவைக்குச் சென்றவுடன் அண்ணா அவர்கள் 1963 ஆம் ஆண்டு சொன்னதையும் அவர்கள் ஏற்கவில்லை.
அதே அண்ணா அவர்கள் முதலமைச்சரான பிறகு, 18.7.1967 இல் தெளிவாக தமிழ்நாடு என்று சட்டம் கொண்டு வந்து பெயர் மாற்றம் செய்தார். அப்படி செய்ததோடு மட்டுமல்ல, சட்டப்பேரவை வரலாற்றிலேயே ''தமிழ்நாடு'' என்று மூன்று முறை முதலமைச்சர் அண்ணா அவர்கள் சொல்ல, ''வாழ்க, வாழ்க வாழ்க'' என்று அத்தனை சட்டப்பேரவை உறுப்பினர்களும் கட்சி வேறுபாடின்றி சொல்லி அன்றிலிருந்து தமிழ்நாடு என்று பெயர் வந்தது.
எனவேதான், தமிழ்நாடு நாள் என்று கொண்டாடுகின்ற நேரத்தில், ''தமிழ்நாடு'' என்று என்றைக்குப் பெயர் சூட்டப்பட்டதோ, அன்றைய நாளைத்தான் கொண்டாடவேண்டும்.
மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதை நவம்பர் ஒன்றாம் தேதியில் கொண்டாடலாம்.
எல்லைப் போராட்ட வீரர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய்!
எல்லையில் சில பகுதிகள் சேர்க்கப்பட போராடிய எல்லைப் போராட்ட வீரர்களுக்கு நன்றி செலுத்தலாம். தமிழ்நாடு அரசு, அவர்களுக்கு ஓய்வூதியம் கொடுத்திருக்கிறது; அவர்களை சிறப்பாகக் கவுரவப்படுத்தவேண்டும் என்பதற்காக, ஒரு லட்சம் ரூபாயை நம்முடைய 'சமூகநீதிக்கான சரித்திர நாயகர்' இந்தியாவின் முதலமைச்சர்களில், முதல் முதலமைச்சர் என்கிற சிறப்போடு இருக்கின்ற மு.க.ஸ்டாலின் அவர்கள் அதை செய்திருக்கிறார்கள்.
ஆகவே, இரண்டும் முரண்பாடல்ல. ஜூலை 18 ஆம் தேதிதான் தமிழ்நாடு நாள் என்று வரலாற்று ரீதியாக கொண்டாடப்படும் என்று சொன்னது சரியான முடிவு. ஆகவே, மாநிலங்கள் சீரமைப்புக்கான நாளே அவர்கள் தரப்பில் கூறப்படும் நவம்பர் ஒன்றாம் தேதியாகும்.
எனவே, சென்னை ராஜ்ஜியம் பிறந்தது என்று சொல்லி, நவம்பர் ஒன்றாம் தேதியைக் கொண்டாடினால் சரி. ஆனால், தமிழ்நாடு நாள் என்று கொண்டாடவேண்டும் என்றால், இன்றைய தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள ஜூலை 18 ஆம் தேதிதான் சரியானது என்பது எங்களைப் போன்றவர்களுடைய உறுதியான கருத்தாகும்.
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.
(பேட்டியின் முதல்பகுதி)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக