காளையார்கோவில், நவ.4- காளையார் கோவில் பாண்டியன் கோட்டையில் 2 ஆயிரம் ஆண்டு பழைமையான தமிழ் எழுத்துகள் பொறித்த பானையோடு கண்டுபிடிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் பாண்டியன் கோட்டையில் 2 ஆயிரம் ஆண்டு பழைமையான தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு சிவகங்கை தொல்நடைக் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர் காளிராசா கூறியதாவது: பாண்டியன்கோட்டை பகுதியில் மேற்பரப்பில் கிடந்த ஓட்டை எடுத்து சுத்தம் செய்து பார்த்ததில் அது 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானையோடு என்பது உறுதி செய்யப் பட்டது. கீழடியில் வெட்டப்பட்டுள்ள அகழாய்வு குழிகளைப்போல, இதன் இரண்டு புறங்களிலும் மண் அடுக் குகளும் பானை ஓட்டு எச்சங்களும் உடைந்த நிலையில் அரைகுறையான பானைகளும் காணப்படுகின்றன.
இந்த வாய்க்காலில் தான் தமிழ் எழுத்து பொறித்த பானையோடு கிடைக்கப் பெற்றுள்ளது. தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓட்டில், கருப்பிலும் சிவப்பிலும் எழுத்துப்பொறிப்பு காணப்படுகிறது, பானை ஓட்டின் உட்புறம் முழுமையாக கரிய நிறமாக உள்ளது. இந்த ஓடு 7 செமீ அகலமும் ஏழரை செ.மீ உயரமும் உடையதாக உள்ளது. அய்ந்து எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளன, மோ, ச, ர, ப, ன் ஆகிய தமிழி எழுத்துகள் வெளிப்படையாக தெரிகின்றன.
எழுத்துகள் தெளிவுற வாசிப்ப தற்காக தொல்லியல் அறிஞர்களின் பார்வைக்கு அனுப்பப்பட்டதில் அவர்கள் அய்ந்து எழுத்துகள் மோ, ச, ர, ப, ன் போன்று வெளிப்படையாக தெரிந்தாலும் ர என்கிற எழுத்து ‘த’ வாக இருக்கலாம். சற்று ஒரு கோடு சிதைவுற்று இருக்கலாம். மோசதப[ன்] மோசிதப[ன்] என்று இருந்திருக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் சங்க காலத்திலே மோசிகீரன் என்ற பெயர் வழக்கில் உள்ளதால் மோசிதபன் என்று கருதவும் இடம் உண்டு. முறையான அகழாய்வை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மேற்கொண்டால் காளையார்கோவி லின் தொன்மையும், பாண்டியர்களின் கோட்டை கட்டுமானங்களும் தமிழ் நாட்டின் தொன்மையும் வெளிப்படும். இவ்வாறு கூறினார். காளையார்கோவில் பாண்டியன் கோட்டையில் கிடைக்கப் பெற்ற தமிழ் எழுத்துப் பொறித்த பானை ஓட்டை, அதன் தொன்மை, பெருமை, பாதுகாப்பும் கருதி சிவகங்கை அரசு அருங்காட்சியகத்தில் ஒப் படைக்க சிவகங்கை தொல்நடைக்குழு முடிவு செய்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக