பக்கங்கள்

செவ்வாய், 28 பிப்ரவரி, 2023

ஜெயமோகனின் பித்தலாட்டம்!

 

 - கி.தளபதிராஜ்

அருஞ்சொல் எனும் இணைய தளத்தில்  பத்திரிகையாளர் சமஸ் அவர்களுக்கு  ஜெயமோகன் என்கிற ஒரு எழுத்தாளர் அளித்த பேட்டியில்,  ‘அறைகலன்’ என்ற வார்த்தையை தானே உருவாக்கி அதை தனது வெண்முரசில் பயன்படுத்தியதாக புளுகியதைக் கண்டு பலரும் முகம் சுளிக்கின்றனர். 

கடந்த சில நாட்களாக அவர்மீது கண்டனக்குரல்கள் முகநூல், வாட்ஸ்அப் போன்ற இணையதளப் பதிவுகளில் குவிந்த வண்ணம் இருக்கிறது. ஓரிருவர் இப்பதிவு கண்டு, ஜெயமோகன் மீது ஏன் இவ்வளவு வன்மம் என்றும் கேட்கிறார்கள். ஜெயமோகனின் தொடர் சங்கிப்போக்கை அறிந்தவர்களுக்கே இக் கண்டனக்குரல்களின் உணர்வை புரிந்துகொள்ள முடியும். 

இந்து தமிழ்திசை நாளிதழில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களைப்பற்றிய கட்டுரை வந்த போது மாலன் வகையறாக்கள் எப்படி எதிர்வினையாற்றினார்கள் என்பது தெரிந்ததுதான். அப்போது இந்த ஆசாமி  இந்து நாளிதழை ‘பிஸ்கட்டிற்கு வாலாட்டும் நாய்கள்’ என்று எழுதினார். பத்திரிகையாளர்கள் ஆசைத் தம்பியையும்,செல்வபுவியரசனையும் ‘மொண்ணைகள்’ என்று கேலிசெய்தார். இப்படிப்பட்ட ஒருவருக்கு எதிராக கருத்துகள் எழும்போது, ‘அவரது எழுத்துகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்‘ என சில அப்பாவிகள் சொல்வது அபத்தமாக இருக்கிறது. வைரமுத்து எழுதாததா? அந்த தார்மீகம் அப்போது எங்கே போயிற்று?

தமிழர்களுக்கு நகைச்சுவை உணர்வே கிடையாது என்றவர்  ஜெயமோகன்!

“எம்.ஜி.ஆர், சிவாஜியை கிண்டல் செய்து எழுதினேன். அதை யாரும் ரசிக்கவில்லை. ஒருமுறை கேரளாவில் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது இஸ்லாமியர் உருவர் தன் தராசை ஆற்றில் கழுவிகொண்டிருந்ததைப்பார்த்து உங்க ஆட்கள் நதியையும் விற்க ஆரம்பித்து விட்டார்களா? என்று கமென்ட அடிக்க எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தர்கள். அந்த உணர்வு இங்கே இல்லை.” என்றார்.

(தினமலர்)

எம்ஜி.ஆரையோ, சிவாஜியையோ  ஒரு இஸ்லாமியரையோ கிண்டலடிக்கும் இப்பேர்வழி சங்கராச்சாரிகளை - சங்கிப்பேர்வழிகளை எப்போதேனும் கிண்டலடித்ததுண்டா? இது சரியான துக்ளக்தனம் தானே? இவரை ‘சோ’மாரி என்று அழைக்காமல் வேறு எப்படி அழைப்பது?

வைக்கம் போராட்டத்தில் - “பெரியாரை அழைக்கும் அளவிற்கு, கேரளத்தில் தலைவர்கள் பஞ்சம் ஏற்படவில்லை!” 

என்று எழுதியவர்தான் இந்த மே(ல்)தாவி! 

வைக்கம் போராட்டத்திற்கு தலைமையேற்க பெரியாருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட சூழலை அறிவாரா இவர்!

1924 மார்ச் 30 வைக்கத்தில் போராட்டம் தொடங்குகிறது. போராட்டத்தில் கலந்துகொண்ட கேரளத் தலைவர்கள் கைதுசெய்யப்படுகிறார்கள். தலைமையேற்க தலைவர்களை அனுப்பும்படி காந்தியாரிடம் வேண்டுகோள் வைக்கப்படுகிறது.

வைக்கம் போராட்டத்தை அகில இந்தியப் போராட்டமாக பெரிதுபடுத்த விரும்பாத காந்தியார் தலைவர்கள் யாரையும் அனுப்பவில்லை.

ஏப்ரல் 4ஆம் தேதி கேரளத்திலிருந்து கே.நீலகண்ட நம்பூதிரிபாத், உடனே புறப்பட்டு வரும்படி பெரியாருக்கு தந்தி கொடுத்தார்!

திருச்சி குளித்தலை மாநாட்டில் கலந்துகொள்ள இருந்ததால் அவரால் உடனே புறப்பட இயலவில்லை.

ஏப்ரல் 6 ஆம் தேதி ஜார்ஜ் ஜோசப்பிடமிருந்து அழைப்பு வந்தது.

ஏப்ரல் 12 ஆம் தேதி நம்பூதிரிபாத், “சத்தியாகிரகத்தின் நிலைமையைப் பற்றி யோசிக்க கூட்டம் கூடுவதால் நீங்கள் அவசியம் வரவேண்டும்!” என மீண்டும் பெரியாருக்கு தந்தி அடித்தார்.

அதே சமயம் கொச்சியிலிருந்தும் டி.ஆர்.கிருஷ்ணசாமி அய்யர், “நீங்கள் இங்கு இருக்க வேண்டியது மிகவும் அவசியம். உடனே புறப்பட்டு வாருங்கள்!” என பெரியாருக்குத் தந்தி அனுப்பினார்.

இரவு 7 மணிக்கு பெரியாருக்கு வந்த மற்றொரு தந்தியில், “வைக்கத்தில் நிலைமை பயங்கரமாக இருக்கிறது. தலைவர்கள் எல்லோரும் கைது செய்யப்பட்டு விட்டனர். நானும் வைக்கத்திற்கு புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன். அங்கு நான் கைது செய்யப்படுவதும் நிச்சயம். இயக்கத்திற்கு தலைமை வகித்து நடத்த வாருங்கள். தந்தி மூலம் யோசனை கூறுங்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த சூழலில்தான் பெரியார் வைக்கம் புறப்பட்டார்!

வைக்கம் போராட்டத்தில் பெரியாரும் - காந்தியாரும்!

வைக்கம் போராட்டம் தொடங்கிய காலத்தில் அங்குள்ள வைதீகர்களின் பேச்சைக்கேட்டு சத்தியாகிரகத்தை நிறுத்த ஆலோசனை வழங்கியவர் காந்தியார்!

போராட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டிருந்த ஜார்ஜ் ஜோசப்பை கிறிஸ்த்தவர் என்பதற்காக ஒதுங்கியிருக்கச் சொன்னவர் காந்தியார்.

சத்தியாகிரகிகள் உண்ணாவிரதம் இருந்தபோது அதை கைவிடக்கோரி போராட்டத்தின் வீரியம் குறைய காரணமாயிருந்தவர் காந்தியார்.

“கைது செய்யப்படப்போகிறேன். தலைவர்கள் தேவை!” என ஜார்ஜ் ஜோசப்பும், “எல்லா தலைவர்களும் கைதாகிவிட்டனர். தயவு செய்து யாரையாவது அனுப்புங்கள்!” என கிருஷ்ணசாமியும் காந்தியாருக்கு தந்தி அடித்த நேரத்தில் அதை அகில இந்திய இயக்கமாக மாற்ற மனமில்லாமல் சென்னை மாகாணத்தினர் பார்த்துக்கொள்வார்கள் என முட்டுக்கட்டை போட்டவர் காந்தியார்.

ஒரு கட்டத்தில் மதம் மாற உத்தேசித்தவர்களை கடுமையாக சாடியுள்ளார் காந்தியார்!.

போராட்டக்களத்தில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டபோது அகில இந்திய கமிட்டி உதவி செய்ய இயலாது என கை விரித்தவர் காந்தியார்! ஆனால் இந்தக் கோரிக்கை எழும் முன்பே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியோ பெரியார் மூலமாக 1000 ரூபாய் நிதி திரட்டி அனுப்பி வைத்தது.

காந்தியாருடைய ஒவ்வொரு ஆலோசனையும் அறிவுரையும் சத்தியாகிரகிகளின் கைகளை கட்டிப்போடுவதாகவே அமைந்தது.

இந்தச் சூழலில்தான் கேரளத் தலைவர்களால் பெரியார் அழைக்கப்படுகிறார்.

1924 மார்ச் 30ஆம் தேதி தொடங்கிய போராட்டத்தில் சரியாக 12 நாள் இடைவெளியில் ஏப்ரல் 13இல் வைக்கம் செல்கிறார் பெரியார்.

1924 மார்ச் இறுதியில் தொடங்கிய போராட்டம் 1925 நவம்பர் வரை கிட்டத்திட்ட இரண்டு ஆண்டுகள் நடைபெறுகிறது. தொடர்ந்து போராட்டக் களத்தில் இருந்த பெரியார் இடையில் இரண்டு முறை கைது செய்யப்பட்டு மாதக்கணக்கில் சிறைத்தண்டனை அனுபவிக்கிறார். கடைசி வரைப் போராடி அதன் வெற்றிக்கூட்டத்திலும் பங்கேற்றவர் பெரியார்.

அரசாங்கம் சமாதானம் பேச பெரியாரை ஏற்பாடு செய்யும்படி இராஜாஜிக்கு தூதுவிட இராஜாஜி சாதுர்யமாக அதில் காந்தியாரை நுழைத்துவிட்ட செய்தியும் உண்டு. பெரியாரை பஞ்சாயத்திற்கு விட்டால் அது கோயில் நுழைவில் கொண்டுபோய் விடும் என இராஜாஜி நினைத்திருக்கக் கூடும்!

போராட்ட செய்திகளில் பெரியாரை அப்போதே (1925) ‘வைக்கம் வீரர்’ என்றே எழுதுகிறது நவசக்தி!

வரலாறு இப்படி இருக்க பெரியார்  வைக்கம் வீரரா? என்று நக்கலடித்து பேனாவை நகர்த்தியவர்தான் இந்த பித்தலாட்டப் பேர்வழி!

இவரைப்பற்றி அறிந்தவர்களுக்கு, ‘அறைகலன்’ என்ற சொல் தன்னால் உருவாக்கப்பட்டது என்று இவர் சொல்வதைக்கண்டு ஆச்சரியப்பட வாய்ப்பில்லை.

அறைகலன் என்ற சொல் வழக்கில் வந்தது எப்போது?

ஆட்சிமொழிக் காவலர் என்று பாராட்டப் பெற்ற கீ.இராமலிங்கனார் எழுதிய “தமிழில் எழுதுவோம்“ என்ற நூலிலேயே அறைகலன் என்ற சொல்  உள்ளது. 1978ஆம் ஆண்டு சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தாரால் இந்த நூல் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தவர் அன்றைய அமைச்சர்களில் ஒருவரான ஆர்.எம்.வீரப்பன்!  

அதன்பின் 90 களில் தமிழ் வளர்ச்சித்துறை வெளியிட்ட “ஆட்சிச் சொல்லகராதி” - மணவை முஸ்தபா வெளியிட்ட மருத்துவ அறிவியல் தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி - என பல நூல்களிலும் furniture என்ற ஆங்கில சொல்லுக்கு மாற்றாக ‘அறைகலன்’ என்ற  வார்த்தை அறிமுகப்படுத்தப்பட்டு வணிக நிறுவனங்களிலும் இச்சொல் பல ஆண்டுகளாக புழக்கத்தில் இருப்பதை அறிவோம்.

இப்படி புழக்கத்தில் உள்ள ஒரு சொல்லையே தான் உருவாக்கியதாக ஜம்பமடிக்க முயலும் ஜெயமோகன் போன்றவர்களின் அறிவுநாணயத்தை என்னவென்று சொல்வது?

(கீ.இராமலிங்கனார் எழுதிய தமிழில் எழுதுவோம் நூல் பக்கம் 94)

                      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக