பக்கங்கள்

ஞாயிறு, 5 மார்ச், 2023

‘தமிழ்நாடு' எனும் வரலாற்றுப் பொன்னேடும் தந்தை பெரியாரின் அரும் பணியும்

 பதிலடிப் பக்கம்

‘தமிழ்நாடு' எனும் வரலாற்றுப் பொன்னேடும்

தந்தை பெரியாரின் அரும் பணியும்

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., 

சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் 

பதிலடிகளும் வழங்கப்படும்)

பேராசிரியர் ப.காளிமுத்து எம்.ஏ.,பி.எச்.டி

‘தமிழ்நாடு' என்பது தமிழ் மக்களின் உணர்வோடும் உயிரோடும் ஒன்றிக் கலந்த உயிரோவியம்! அது தமிழர்களின் அடையாளச் சின்னம்! அது ‘தமிழகம்' என்றும் 'தமிழ்நிலம்' என்றும், ‘தமிழ்கூறும் நல்உலகம்' என்றும் ‘தென்னாடு' என்றும் தொன்று தொட்டு பல்வேறு சிறப்புப் பெயர்களால் அழைக்கப்பட்டு வந்தது. ஆனால் அதன் வரலாற்றுப் பெயர் ‘தமிழ்நாடு' என்பதுதான் என்பதைப் பழந்தமிழ் இலக்கியங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

‘தமிழ்நாடு' என்னும் பெயர் நம் இன எதிரிகளுக்கு இன்று எரிச்சலூட்டும் பெயர்! அது மட்டுமா? ‘திரா விடம்', தமிழ், தமிழ்நாடு என நம்மை அடையாளப் படுத்தும் அனைத்தும் பார்ப்பனர்க்கு எரிச்சலூட்டுகின் றன. இவை நம் கோட்பாடுகளின் குறியீடுகள்! அத னால் அவர்களுக்கு எரிச்சல்!

1920இல் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 12 பிரிவு களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. பின்னர் அதனை மொழி அடிப்படையில் 21 பிரிவுகளாகப் பிரித்தனர். அவ்வாறு பிரிக்கப்பட்டபோது ஆந்திர, கருநாடக, கேரளக் காங்கிரஸ் கமிட்டிகள் என்று பெயர் பெற்ற போது ‘சென்னை மாநிலக் காங்கிரஸ் கமிட்டி' என்றே தமிழகக் காங்கிரசிற்குப் பெயரிட வேண்டும் என்று பார்ப்பனர்கள் சூழ்ச்சி செய்தனர். அப்போது காங்கிர சில் பார்ப்பனர் ஆதிக்கம் அதிகம்! இந்தச் சூழ்நிலை யில் பெரியார் 1919இல் தன்னைக் காங்கிரசில் இணைத் துக் கொண்டார். ஓராண்டுக் காலத்திற்குள் காங்கிரசில் அசைக்க முடியாத தலைவராகப் பெரியார் உருவெடுத்தார்.

இந்தச் சூழ்நிலையில் 1920இல் காங்கிரசுக் கமிட்டி யின் பெயர் மாற்றம் பற்றிய கருத்துக்கள் முன்வைக்கப் பட்டன. ‘தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி' என்று பெயர் வைப்பதைப் பார்ப்பனர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. 1920இல் மட்டுமல்ல, 1956லும் மொழிவழி  மாநிலங்கள் உருவாக்கப்பட்ட காலத்திலும் ‘தமிழ்நாடு' என்ற பெயரைச் சென்னை மாநிலத்திற்குச் சூட்ட விடாமல் பார்ப்பனர்கள் சூழ்ச்சி செய்தார்கள் என்பதைப் பெரியாரின் அறிக்கைகள் தெளிவுபடுத்துகின்றன.

1920இல் ‘தமிழ்நாடு' காங்கிரஸ் கமிட்டி என்ற பெயர் வைப்பதில் பெரியாரும் அவருடைய நண்பர் களும் வெற்றி பெற்றார்கள்!

ஓர் அரசியல் கட்சிக்குத் ‘தமிழ்நாடு' காங்கிரஸ் என்று பெயர் சூட்டப் பெற்ற முதல் நிகழ்வு இதுதான்.

ஏறக்குறைய முந்நூறு ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழ்நாடு ‘சென்னை ராஜ்ஜியம்' என்ற பெயரைச் சுமந்து கொண்டிருந்தது. இதனை மாற்றக் கருதிய பெரியார் போகுமிடமெல்லாம் ‘தமிழ்நாடு' ‘தமிழ்நாடு' என்று வாய்வலிக்கப் பேசினார்! கைவலிக்க எழுதினார்! ‘தமிழ்நாடு' என்ற பெயரை வழக்காற்றில் கொண்டு வந்து மக்கள் உள்ளங்களில் ஆழமாக வேரூன்ற வைத்தார். ‘தமிழ்நாடு' என்ற இந்த ஒற்றைச் சொல்லால் தமிழ் மக்களை உயிர்த்தெழச் செய்ய முடியும் என்று பெரியார் உறுதியாக நம்பினார்.

2.5.1925இல் வெளிவந்த முதல் ‘குடிஅரசு' இதழ் ‘தமிழ்நாடு' என்ற சொல்லாட்சியைப் பயன்படுத்துவ தோடு அதனைத் ‘தாய்த் திருநாடு' என்று போற்றுவ தைக் காண்கிறோம். அதே இதழில் வெள்ளுடை வேந்தர் தியாகராயரின் மறைவையொட்டி எழுதப் பட்ட இரங்கலுரையில் மூன்று இடங்களில் ‘தமிழ்நாடு' இடம் பெற்றிருக்கிறது. இதனைத் தொடர்ந்து வந்த ‘குடிஅரசு'இதழ்கள் எல்லாவற்றிலும் ‘தமிழ்நாடு' என்ற பெயர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பது குறிப் பிடத்தக்கதாகும்.

1917இல் நீதிக்கட்சியினர் தொடங்கிய ‘திராவிடன்' நாளிதழ், அதன் பத்தாவது ஆண்டில் (1927) விற்பனை சரிந்து இதழ் நின்று விடும் நிலைக்கு வந்து விட்டது. இதனை அறிந்த பெரியார் பெரிதும் வருந்திப் பின் வரும் அறிக்கையை வெளியிட்டார்.

‘தமிழ்நாடு என்பதாக 10 ஜில்லாக்கள் கொண்ட ஒரு நாடு, தமிழ் மக்கள் - அதாவது பார்ப்பனர் அல்லாதார் என்பதாக 2 கோடி மக்களைக் கொண்ட ஒரு சமூகம் தங்கள் முன்னேற்றத்திற்கும் சுயமரியாதைக்கும் விடு தலைக்கும் என்பதாக ஏற்பட்ட ஒரு தமிழ் தினசரி பத்திரிகையை நடத்த முடியாமல் விட்டு விடுவ தென்றால் நமது சமூகத்தின் தாழ்ந்த நிலையைக் காட்ட இதைவிட வேறு ஆதாரம் வேண்டியதில்லை என்றே சொல்லுவோம்." (குடிஅரசு, 6.3.1937)

தமிழ்நாடு அப்போது (1927) பத்து மாவட்டங்களை உள்ளடக்கியதாக இருந்தது. மக்கள் தொகை இரண்டு கோடிப் பேர், அதுவும் பார்ப்பனரல்லாத மக்களாக இரண்டு கோடிப் பேர் வாழ்கிறார்கள்! என்று வரை யறை செய்து தமிழ்நாட்டைப் பற்றிய ஓர் உருவக் காட்சியை நம் உள்ளத்தில் தோற்றுவிக்கிறார் பெரியார்.

தம் (சுய) நினைவின்றி வாழ்ந்த மக்களுக்கு அவர்தம் இனப் பெயரை எடுத்துரைத்துத் தாய்மொழி உணர்ச்சியூட்டி ‘தமிழ்நாடு உன் தாய்த்திருநாடு‘ என்று ஊர்தோறும் முழங்கி மக்கள் நெஞ்சில் தமிழ்நாட்டைப் பதிய வைத்த பெருமை தந்தை பெரியார் அவர்க ளையே சாரும். ‘தமிழ்நாடு' என்பதைப் பற்றி எவரும் பேசாத காலத்தில் பெரியார் தொலைநோக்குப் பார்வையோடு ‘தமிழ்நாட்டை' முன்னெடுத்து முழங்கி வந்தார்.

‘தமிழ்நாடு' என்ற சொல்லாட்சியைக் கேட்டதும் மக்களிடையே ஒரு புத்துணர்ச்சி ஏற்படுவதைப் பெரியாரும் அவர் உருவாக்கிய தலைவர்களும் உணர்ந்து மகிழ்ச்சியடைந்தனர். பெரியார் ஊன்றிய ‘தமிழ்நாடு' என்னும் உணர்ச்சி, முளைத்துச் செழித்து வளர்ந்து அவர் காலத்திலேயே பயன் தந்ததைப் பார்த்து மகிழ்ந்தார் பெரியார்.

1937இல் இராசகோபாலாச்சாரியார் தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தது. ஆச்சாரியார் பள்ளிகளில் ஹிந்தியைக் கட்டாயப் பாடமாக்கினார்.

ஹிந்தி ஆரிய மொழி; அதைக் கட்டாயமாக்கித் திணிக்க நினைப்பது மறைமுகமாக சமஸ்கிருதத்தைத் திணிக்கும் முயற்சிஎன்றும் இது திராவிட மக்கள் மீது ஆரியர்கள் நடத்தும் பண்பாட்டுப் படையெடுப்பு என்றும் பெரியார் கருதினார். தமிழ் மொழி, தமிழர் நாகரிகம், தமிழர் பண்பாடு ஆகியவை ஹிந்தியாலும் சமஸ்கிருதத்தாலும் சீரழிக்கப்பட்டு அழியும் நிலை உருவாகி விடும் என்பதைத் தொலைநோக்குப் பார்வையோடு உணர்ந்து கட்டாய ஹிந்தியை எதிர்த்துக் களம் அமைத்தார் பெரியார். பெரியாரின் அழைப்பை ஏற்று அலை அலையாகத் தமிழ் மக்கள் ஹிந்தி எதிர்ப்புப் போர்க் களத்தில் குதித்தனர்.

ஹிந்தியை எதிர்த்துத் திருச்சியிலிருந்து புறப்பட்ட தமிழர் பெரும் படையை வரவேற்கச் சென்னைக் கடற்கரையில் ஒரு மாபெரும் பொதுக் கூட்டம் நடை பெற்றது. ஓரிலக்கத்திற்கு மேற்பட்டோர் திரண்டிருந்த அக்கூட்டத்தில் பேசும் போதுதான் தந்தை பெரியார் "தமிழ்நாடு தமிழருக்கே" என்று முழங்கினார். பெரியாரின் உள்ளத்தில் அடக்கி வைக்கப்பட்டிருந்த உரிமை உணர்ச்சி அணை உடைத்துப் பாய்ந்த வெள் ளத்தைப் போலப் பீறிட்டுக் கிளம்பியதைக் கேட்ட மக்கள் "தமிழ்நாடு தமிழருக்கே" என்று விண்ணதிர முழங்கினார்கள்.

தமிழ்நாடு தமிழ்நாடு என்று முழங்குவது எதற்காக? இதோ தந்தை பெரியார் 1938இல் விளக்குகிறார்.

"தமிழ்நாட்டுத் தொழில்துறைகள் தமிழனுக்குப் பயன்படவில்லை. இரும்புத் தொழிலில் பம்பாய்க்காரர்; துணித் தொழிலை ஆமதாபாத்காரர்கள் கைப்பற்றிப் பயனடைகிறார்கள் தமிழ்த் தொழிலாளிக்கு இங்கு வேலையில்லை; லேவாதேவித் தொழிலை மார்வாரி நாட்டானும் குஜராத்தி நாட்டானும் ஏகபோக உடை மையாக்கி அவர்கள் கொண்டு போகும் செல்வம் கொஞ்சமா? அவை எப்படிப் போகின்றன என்பதைப் பார்த்தால், தமிழ்க் கூலிகள், தொழிலாளர்கள், ஏழைகள் ஆகியவர்களின் செல்வத்தைக் கையைத் திருகிக் கொண்டு போவதுபோல் மார்வாரிகள் கொண்டு போகிறார்கள். இவ்வாறு ஏமாற்றி வஞ்சித்துத் தேடும் செல்வம் அத்தனையும் பகற்கொள்ளை - வட்டிக் கொள்ளை என்று சொல்லப்படுவது போல் கோடி கோடியாய்ச் சிந்து மாகாணத்திற்குக் கடத்திச் செல்லப்படுகிறது. அதன் பயனாகத் தமிழ்நாட்டில் உள்ள பெரும் பெரும் வர்த்தகர்கள் மிக மோசமான நிலைக்கு வந்து விட்டார்கள். மணல்வீடு கட்டிச் சரிந்து மட்டமாவது போல் தமிழ் வியாபாரிகள் தினம் தினம் கடன்காரராகி - பாப்பராகி - இன்சால்  வென்டாகித் தற்கொலை செய்து கொள்வதும் நாட்டை விட்டு ஓடுவதுமான நிலையில் இருந்து வருகிறார்கள்."

எனவே தோழர்களே! உதைக்கும் காலுக்கு இதுவரை முத்தமிட்டுப் பூசை செய்கிறோம். மலத்தை மனதார முகருகிறோம், மானமிழந்தோம், பஞ்சேந்திரி யங்களின் உணர்ச்சியை இழந்தோம், மாற்றானுக்கு அடிமையாகி வணங்குகிறோம், இதற்குத் தானா தமிழன் உயிர் வாழ வேண்டும்? எழுங்கள்! நம்மை ஏய்த்து அழுத்தி நம் தலைமேல் கால்வைத்து ஏறி மேலே போக வடநாட்டானுக்கும் தமிழனல்லாதவ னுக்கும் நாம் படிக்கல் ஆகிவிட்டோம்.

இனிமேலாவது "தமிழ்நாடு தமிழருக்கே" என்று ஆரவாரம் செய்யுங்கள்.

உங்கள் கைகளில் ‘தமிழ்நாடு தமிழருக்கே' என்று பச்சை குத்திக் கொள்ளுங்கள்!

உங்கள் வீடுதோறும் ‘தமிழ்நாடு தமிழருக்கே' என்ற வாசகத்தை எழுதிப் பதியுங்கள்!

‘தமிழ்நாடு தமிழருக்கே‘ (குடிஅரசு, 23.10.1938)

தந்தை பெரியாரின் இப்போர் முழக்கம் தமிழ் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் எதிரொலித்தது! 1938 டிசம்பரில் சென்னையில் நடந்த தென்னிந்தியர் நல உரிமைச் சங்க (நீதிக்கட்சி) மாநாட்டில் வாசிக்கப்பட்ட பெரியாரின் உரையிலும் ‘தமிழ்நாடு தமிழருக்கே‘ என்ற முழக்கம் இடம் பெற்றிருந்தது. இதற்கு முதல் நாள் வேலூரில் நடந்த தமிழ் மாநாட்டில் தலைமை உரை நிகழ்த்திய சர்.ஏ.டி.பன்னீர்செலவம் ‘தமிழ்நாடு தமிழருக்கே‘ என்பதை விளக்கி உரை நிகழ்த்தினார்.

இதுகுறித்துப் பேராசிரியர் அன்பழகனார் 1947இல் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்.

"தமிழ்நாடு தமிழருக்கே என்ற குரல் இன்று பல திசைகளிலே கேட்கப் பட்டாலும் அதை முதலில் எழுப்பிய பெருமையும் எதிர்ப்புகளுக்கும் ஏளனங்க ளுக்குமிடையே வளர்த்த சிறப்பும் தமிழர் தலைவர் பெரியார் இராமசாமி அவர்களுக்கே உரியதாகும். தோழர் இராசகோபால ஆச்சாரியார் சென்னை மாகாண முதலமைச்சராக அமர்ந்து வடநாட்டு ஹிந்தியை வலுக்கட்டாயமாகத் தமிழ்ச் சேய்களின் வாய்களிலே திணிக்க முயன்றபோது அந்தக் கொடு மையை எதிர்த்துத் தமிழ்ப் பெருங்குடி மக்கள் நடத் திய பெரியதொரு போராட்டத்தில் சிறந்ததொரு விளைவாகத் "தமிழ்நாடு தமிழருக்கே" என்ற உரிமை யொலி அன்று எழுந்தது" (வாழ்க திராவிடம், 2017).

- தொடரும்

பதிலடிப் பக்கம்

பேராசிரியர் ப.காளிமுத்து எம்.ஏ.,பி.எச்.டி

‘தமிழ்நாடு' எனும் வரலாற்றுப் பொன்னேடும்

தந்தை பெரியாரின் அரும் பணியும்

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., 

சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் 

பதிலடிகளும் வழங்கப்படும்)

நேற்றைய (3.2.2023) தொடர்ச்சி...

‘தமிழ்நாடு தமிழருக்கே' என்ற முழக்கத்தை எவருமே எதிர்க்கவில்லையா என்றால் எதிர்க்கத் துணிந்தவர்கள், ஏளனம் செய்தவர்கள் மிகச் சிலரே! பெரியாரே இதைத் தெளிவுப்படுத்துகிறார்:

"தமிழ்நாடு தமிழருக்கே என்பதில் யாருக்காவது அதிருப்தியோ அபிப்பிராய பேதமோ இருப்பதாக இதுவரை நமக்கு எவ்விதத் தகவலோ மறுப்போ வந்தது கிடையாது. பார்ப்பனப் பத்திரிகைகள் சிலவற் றிலும் அவர்களது கூலிகளின் வாய்கள் சிலவற்றிலும் ஏதோ பொருத்தமற்ற கூப்பாடுகள் இரண்டொன்றைக் காணவும் கேட்கவும் நேர்ந்தது. என்றாலும் அதுவும் மறுமுறை கிளம்பினதாகத் தெரியவில்லை. ஒரு பார்ப் பனப் பத்திரிகை மாத்திரம் ‘தமிழ்நாடு தமிழருக்கே' என்றால் ‘எலிவளை எலிகளுக்கே' என்று எழுதிற்று" (தமிழர், தமிழ்நாடு, தமிழர் பண்பாடு, 2011)

இவ்வாறு எலிகளைத் துணைக்கழைத்து ஏளனம் செய்தவர்களும் கேலிச் சித்திரம் தீட்டியவர்களும் எல் லோரும் பார்ப்பனர்களே என்பது குறிப்பிடத்தக்கது.

பெரியார் எதற்காக இவ்வளவு பாடுபட்டார்? தமிழ்நாட்டைத் ‘தாய்த்திருநாடு' என்றாரே ஏன்? ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தண்டனை பெற்றுச் சிறை செல்வதற்கு முன்பாக 30.11.1938 அன்று சென் னையில் நடைபெற்ற கூட்டத்தில் பெரியார் இதற்கு விளக்கம் அளிக்கிறார்:-

1938ஆம் வருடத் தென்னிந்தியர் நல உரிமை சங்க மாநாட்டிற்குப் பிறகு ‘சென்னை மாகாணம்', ‘தமிழ்நாடு' என்று பெருமை பெற்றதென்றால் அது தமிழர்களின் ஒற்றுமையால் என்றிருக்க வேண்டும், மானத்தைக் கருதுங்கள், சுயநலம், பெருமை, பதவி ஆசை முதலிய வைகளைக் கைவிடுங்கள்.

பெரியாரின் பேருரையைக் கேட்க முப்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடியிருந்தார்கள் என்று குடிஅரசு (11.12.1938) கூறுகிறது. சென்னை மாகா ணம் ‘தமிழ்நாடு' என்று தன்னால் பெருமை பெற்றது என்று கூறாமல் தமிழர்களின் ஒற்றுமையால் பெருமை பெற்றது என்று கூறவேண்டும் என்று தன்னடக்கத் தோடு தலைவர் பெரியார் குறிப்பிடுவதை உற்று நோக்குங்கள்!

இதன்பின்னர் 21.11.1939 தொடங்கி 25.11.1939 வரை அய்ந்து நாட்கள் ‘விடுதலை' இதழில் ‘தமிழ்நாடு தமி ழருக்கே' என்ற தலைப்பில் அய்ந்து தலையங்கங்கள் எழுதப்பட்டுள்ளன. இவற்றில் தமிழ்நாடு என்பதற்குத் திராவிட நாடு என்றுதான் பொருள். இது தமிழ்நாடு பிரிவினையைக் கருத்தில் கொண்டு அல்ல என்றும், திராவிட மக்களின் நாகரிகம், பண்பாடு, கலை, தொழில், இலக்கியம் முதலானவை ஆரியர்களின் நாகரிகப் பண்பாடுகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை என் றும் பல்வேறு சான்றுகளோடு பெரியார் விளக்குகிறார். 25.11.1939ஆம் நாள் எழுதப்பட்ட தலையங்கத்தின் முடிவில் "தமிழ்நாடு தமிழருக்கே" என்று மும்முறை எழுதப்பட்டிருக்கிறது.

1956இல் மொழி வழி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட நேரத்தில் கூடத் தமிழ்மொழி வழங்கும் மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்ற பெயர் வைக்கப்படவில்லை. இது பற்றிப் பெரியார் வருந்தி எழுதுகிறார்.

“சுமார் 3 கோடித் தமிழர்கள் வாழும் நாட்டிற்கு அதி காரப் பூர்வமாகத் ‘தமிழ்நாடு’ என்ற பெயர் இல்லை. இராஜ்ய சீரமைப்புக் கமிசன் (State - Reorganisation Commission)  அறிக்கை வெளிவந்தவுடன் நான் பதறிப்போய், பெயரிடு வது பற்றி 12.10.1955இல் விடுதலையில் அறிக்கை வெளியிட் டேன்.”

“திராவிடத்தை அல்லது தமிழ்நாட்டை விட்டு ஆந்திரர், கருநாடகர், மலையாளிகள் பிரிந்து போன பின்புகூட மீதியுள்ள - யாருடைய ஆட்சேபனைக்கும் இடமில்லாத தமிழகத்திற்குத் ‘தமிழ்நாடு’ என்ற பெயர் கூட இருக்கக் கூடாதென்று பார்ப்பானும் வடநாட்டானும் சூழ்ச்சி செய்து இப்போது அந்தப் பெயரையே மறைத்து ஒழித்துப் பிரி வினையில் ‘சென்னை நாடு’ என்று பெயர் கொடுத்திருப் பதாகத் தெரிகிறது.

“இது சகிக்க முடியாத மாபெரும் அக்கிரமமாகும். எந்தத் தமிழனும் அவன் எப்படிப்பட்ட தமிழன் ஆனாலும் இந்த அக்கிரமத்தைச் சகித்துக் கொண்டி ருக்க மாட்டான் என்றே கருதுகிறேன். அப்படி யார் சகித்துக் கொண்டிருந்தாலும் என்னால் சகித்துக் கொண்டிருக்க முடியாது என்ற சொல்ல வேண்டிய வனாக இருக்கிறேன்.”

இதைத் திருத்த தமிழ்நாட்டு மந்திரிகளையும் சென்னை, டில்லி சட்டசபை, கீழ் மேல்சபை அங்கத்தினர்களையும் மிக மிக வணக்கத்தோடு இறைஞ்சி வேண்டிக்கொள்கிறேன்.”

“தமிழ் தமிழ்நாடு என்கிற பெயர்கூட இந் நாட்டுக்கு, சமுதாயத்திற்கு இருக்க இடமில்லாதபடி எதிரிகள் சூழ்ச்சி செய்து வெற்றிபெற்று விட்டார்கள் என்கின்ற நிலைமை ஏற்பட்டு விடுமானால் பிறகு என்னுடையவோ எனது கழகத்தினுடையவோ என்னைப் பின்பற்றும் நண்பர்களுடையவோ வாழ்வு வேறு எதற்காக இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றவில்லை.”

மேற்காணும் அறிக்கை வெளிவந்த விடுதலையின் (11.10.1955) இரண்டாம் பக்கத்தில் ‘சென்னை ராஜ்யமல்ல. ‘தமிழ்நாடு’என்றே கூறுவோம்’ என்று பெரிய எழுத்தில் அச்சிட்டுக் காட்டியிருக்கிறார் பெரியார்! உலக நாடுக ளெல்லாம் மொழியை அடிப்படையாகக் கொண்டே அழைக்கப்படும்போது தமிழ் பேசப்படுகின்ற நாட்டைத் ‘தமிழ்நாடு’ என்று அழைக்காமல் ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்றோ சென்னை நாடு என்றோ அழைப்பதற்குத் தமிழ் மக்கள் வெட்கப்பட வேண்டாமா?

“தமிழர்கள் இனிப் பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் ‘தமிழ்நாடு’ என்றே வழங்கி வர வேண் டும். இயற்கையான, இன உணர்ச்சி, மொழிப்பற்று இல்லாவிட்டாலும் மற்றவர்களைப் பார்த்தாவது திருந்தக் கூடாதா? மற்ற நாடுகளைப் பார்த்தாவது மான உணர்ச்சி பெறக் கூடாதா?”

என்று பெரியார் கேட்கிறார். இது மட்டுமல்லாது தொடர்ந்து நடந்த மாநாடுகளில் எல்லாம் ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்ட வேண்டும் என்ற தீர்மானத்தைப் பெரியார் முன்மொழிந்து உரையாற்றியிருக்கிறார்.

“தமிழர்களே உங்கள் உடலில் இருப்பது ஆரிய இரத்தக் கலப்பில்லாத தனித் தமிழர் இரத்தம் என்று கருதிக்கொள்ளுங்கள். உடனே உங்களுக்குப் புதிய உணர்ச்சி வரும்; புதிய ஊக்கம் வரும்; உங்கள் அறிவு ஒளிபெற்று உங்கள் மனத்தில் படிந்துள்ள தும்பும் தூசியும் விலகி உங்கள் நரம்புகளுக்கும் நாடிகளுக்கும் முறுக்கேறும்; அப்பொழுதே நீங்கள் உண்மைத் தமிழராகி, தமிழ்நாடு தமிழருக்காகி தமிழர் வாழ்வு மானமும் உயர்வும் பெறும் என்று பணிவோடு விண்ணப்பித்துக் கொள்கிறோம்.” (பெரியார் கொட்டிய போர் முரசு)

பெரியாரின் இந்த அறிக்கையைப் படிக்கும் ஒவ்வொரு தமிழனும் வீறு கொண்டெழுவான் என்பது உறுதி.

தமிழ்நாட்டைத் ‘தாய்த் திருநாடு’ என்றும் ‘தமிழ்த் திருநாடு’ என்றும் பலமுறை குறிப்பிடும் பெரியார் தாய்த் திருநாட்டிற்குத் ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்ட வேண்டும் என்று. ‘வணங்கி வேண்டிக் கொள்கிறேன்’ என்றும், ‘வணக்கத்தோடு இறைஞ்சி வேண்டிக் கொள்கிறேன்’ என்றும் வணக்கத்தோடு கேட்டுக் கொள்கிறார். யாருக்கும் தலை வணங்காத பெரியார் ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்ட வேண்டும் என்பதற்காக வணங்கி இறைஞ்சி வேண்டிக் கொள்கிறார்!

தொடர்ந்து ‘தமிழ்நாடு’ என்பதைப் பற்றிப் பெரியார் எப்படிப்பட்ட அணுகுமுறைகளையெல்லாம் கையாண்டார் என்பதைப் பாருங்கள்.

“தமிழ்நாட்டின் பஞ்சப் பகுதியான இராமநாதபுரம் மாவட்டத்தைச் செழிப்படையச் செய்ய மேற்குத் தொடர்ச்சி மலைக்கு மேற்கே வீணாக ஓடிக் கொண்டிருக்கும் பம்பை யாற்றுத் தண்ணீரைக் கிழக்கே திருப்பிவிடும் முயற்சியைத் தமிழ்நாடு ஆட்சியினர் மிக விரைவாகச் செய்யுமாறு இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

“இலங்கையிலிருந்து துரத்தப்படுகிற தமிழ் மக்களுக்கு வேண்டிய வசதிகள் செய்து கொடுக்கும்படி தமிழ்நாடு ஆட்சியாளரையும் மத்திய ஆட்சியையும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.”

“பண்டைக் காலத்தில் உலகமே கண்டு வியக்கும் பேரரசாக விளங்கிய ‘தமிழ்த் திருநாடு’  தமிழ் நாட்டுக்குள் இன்று டில்லி ஹிந்தியைத் திணித்திருக்கிறது. தமிழ்நாட்டில் தமிழுக்குரிய இடங்களையெல்லாம் ஹிந்தி ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.”

“தமிழ்நாடு 400 லட்சம் மக்களைக் கொண்டது...” (மன்னார்குடி மாநாட்டுத் தீர்மானங்கள்.)

“இன்று தமிழ்நாட்டில் சமஸ்கிருதம் என்ற ஒரு மொழி உண்மையிலேயே தேவைதானா?”

“தமிழ்நாட்டின் ஆட்சிப் பொறுப்பு,ஆதிக்கம் முழு வதும் தமிழர்களிடத்திலேதான் இருக்க வேண்டும். தமிழர் கள் என்பது இங்கு தமிழ்நாட்டிலுள்ள ஆரியர் அல்லாத - பார்ப்பனரல்லாதார் ஆகும்.”

இவ்வாறு ‘தமிழ்நாடு தமிழ்நாடு’ என்று போகும் இடமெல்லாம் முழக்கமிட்டு மக்கள் உள்ளங்களில் ‘தமிழ் நாட்டை’ ஆழமாக வேரூன்ற வைத்து வளர்த்தெடுத்தவர் தந்தை பெரியார். அதனால் மக்கள் வழக்காற்றில் மிக இயல்பான - இயற்கையான பேசு பொருளாகத் ‘தமிழ்நாடு’ அமைந்துவிட்டது. பெரியார் அரும்பாடுபட்டுத் ‘தமிழ்நாடு’ என்னும் பெயரை மக்கள் உள்ளங்களில் நிலைநிறுத்திய பிறகு சங்கரலிங்கனார் 12 கோரிக்கைகளோடு தமிழ்நாடு என்று பெயரிட வேண்டும் என்ற கோரிக்கையையும் சேர்த்து உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்தார். அதன் பின்னர் அறிஞர் அண்ணா, மாநிலங்களவையில் பொதுவு டைமைக் கட்சித் தலைவர் புபேஷ்குப்தா, ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்ட வேண்டும் என்று கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்து மிக விரிவாகப் பேசியிருக்கிறார். சென்னைச் சட்டமன்றத்திலும் ‘தமிழ்நாடு’ பெயர் மாற்றத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அது ஏற்கப்படாமையால் எதிர்க் கட்சியினர் வெளிநடப்புச் செய்தனர். இதே காலத்தில் தமிழரசுக் கட்சித் தலைவர் ம.பொ.சி.யும் நாம் தமிழர் கட்சித் தலைவர் சி.பா.ஆதித்தனாரும் இதே கோரிக் கையை வலியுறுத்திப் பேசியுள்ளனர். ஆனால், இதற்காக அவர்கள் வேறு எத்தகைய போராட்டங்களையும் நடத்த வில்லை.

இவையெல்லாம், தந்தை பெரியார் 1920-களிலிருந்து ஏறக்குறைய நாற்பதாண்டுக் காலம் தமிழ்நாட்டைப் பண்படுத்தி விழிப்புணர்ச்சி உண்டாக்கிய பிறகு நடந்த நிகழ்வுகள். பெரியாரைப் பின்பற்றி அறிஞர் அண்ணாவும் தி.மு.கழகத் தலைவர்களும் ‘தமிழ்நாடு’ என்ற பெயரிட வேண்டுமென்று ஓயாமல் முழங்கி வந்தனர்.

‘தமிழரின் மறுமலர்ச்சி’ என்ற ஒரு சிறு நூலில் மட்டும் ஏறக்குறைய 40 இடங்களில் ‘தமிழ்நாடு’ என்ற பொன் னெழுத்துகளை அண்ணா பொறித்திருக்கிறார்! (எ.டு) 

“தமிழ்நாட்டிலே தமிழருடைய மொழியிலே தகாத மொழிகள் கள்ளிபோல் படர்ந்துவிட்டன.”

“தமிழ்நாட்டிலே தமிழனுக்கு வேலை கிடைப்ப தில்லை.”

“தமிழ்நாட்டிலே தமிழ்ப் பாடல் கிடையாது.”

“தமிழ்நாட்டிலே தமிழே இருத்தல் வேண்டும்.”

“தமிழ்நாட்டைப் போலவே எந்த நாட்டிலும் அந்த நாட்டின் மொழியல்லாத வேறு மொழியிலே சங்கீதம் பாடுவதைக் கேட்க முடியாது.”

“தமிழ்நாட்டிலே தமிழ்ப் பாடல்களை வளர்க்க வேண்டும்; தமிழ்ப் பாடல்கள் பாடுவோருக்கு ஆதரவு தர வேண்டும்.”

இவ்வாறு அண்ணாவின் நூல்களைத் திருப்பிய பக்கமெல்லாம்‘தமிழ்நாடு’ காட்சியளிக்கிறது.

1967 வரை தமிழ்நாட்டின் ஆட்சிப் பொறுப்பில் இருந்த காங்கிரசுக் கட்சி, கடைசி வரையில் ‘தமிழ்நாடு’ என்று பெயர் வைப்பதற்கு முரண்பட்டு முற்றுப் பெற்றுவிட்டது. காங்கிரசின் இந்தப் பிடிவாதம் தமிழ்நாடு அரசியலில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்திவிட்டது. 1967 தேர்தலில் காங்கிரஸ் தோற்றுப் போயிற்று. அறிஞர் அண்ணா முதல் அமைச்சர் ஆனார்.

1967 ஜூலை 18ஆம் நாள் சட்டப் பேரவையில் தீர்மானத்தை அண்ணா கொண்டு வந்தார். ‘மெட்ராஸ் ஸ்டேட்’ ((MADRAS STATE) என்ற பெயர் ‘தமிழ்நாடு’ என்று தமிழில் பெயர் மாற்றம் செய்யப்பட்ட தீர்மானம் எவரு டைய எதிர்ப்புமின்றி நிறைவேறியது. அப்போது உரை யாற்றிய அண்ணா,

“இந்த வெற்றி தமிழுக்கும் தமிழருக்கும் தமிழ் வரலாற்றுக்கும் தமிழ்நாட்டுக்கும் கிடைத்த வெற்றி என்ற விதத்தில் நாம் அனைவரும் இந்த வெற்றியில் பங்குகொள்ள வேண்டும்.”

என்று குறிப்பிட்டார். அதன் பின்னர் ‘தமிழ்நாடு’ என்று உரத்த குரலில் அண்ணா முழக்கமிட அவை உறுப்பினர் அனைவரும் எழுந்து நின்று ‘தமிழ்நாடு வாழ்க!’ என்று முழங்கினர். மூன்று முறை ‘தமிழ்நாடு வாழ்க’ என்று அனைவரும் முழங்கினர். 1968ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22ஆம் தேதியன்று நாடாளுமன்றத்திலும் இத்தீர் மானம் எதிர்ப்பின்றி நிறைவேறியது.

‘தமிழ்நாடு அரசு - தலைமைச் செயலகம்’ எனும் புதிய பெயர்ப் பலகை வைக்கப்பட்டது. 1968 டிசம்பர் முதல் நாள் தமிழ் நாடெங்கும் பெயர் மாற்ற வெற்றி விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. சென்னையில் கலை வாணர் அரங்கில் (அப்போது அது பாலர் அரங்கம்) நடை பெற்ற விழாவில் அண்ணா கலந்து கொண்டு உரையாற் றினார். அடையாறு மருத்துவமனையிலிருந்து நேரடியாக விழா அரங்கிற்கு அண்ணா வந்து சேர்ந்தார்.

வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த அந்த விழாவில் அண்ணா, “என் தாய்த்திரு நாட்டிற்குத் ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டக்கூடிய இந்த நேரத்திலே இந்த விழாவிலே கலந்து கொள்ள வேண்டாம் என்று சொன்னார்கள். ஆனால், என் தாய் நாட்டிற்குத் ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டக் கூடிய இந்த விழாவிற்கு நான் வராமல் இருப்பதை விடக் கொடுமை வேறு இருக்க முடியாது. இந்த விழாவிற்கு வராமல் இருந்து இந்த உடல் இருந்து என்ன பயன்? இத்தகைய வாய்ப்பு வாழ்க்கையில் ஒரு முறைதான் வரும். பெற வேண்டும் என்று நினைத்ததைப் பெற்றிருக்கிறோம். அடைய வேண்டியதை நாம் அடைந்திருக்கிறோம்.”

என்ற உணர்ச்சி பொங்க அண்ணா உரையாற்றினார்.

இதனிடையில் ‘தமிழ்நாடு’ என்பதை ஆங்கிலத்தில் எழுதும்போது "TAMIL NAD’ ’ என்றுதான் எழுத வேண்டும்; TAMIL NAD’ ’ என்று எழுதக் கூடாது; ஆங்கில மரபை அப்படியே நாம் பின்பற்ற வேண்டும்; என்ற ராசகோபாலாச் சாரியார் ‘சுயராஜ்யா’ இதழில் தம் எதிர்ப்பை வெளிப்படுத்தி யிருந்தார். இதுகுறித்து சட்டப் பேரவையில் கேள்வி எழுப் பப்பட்டபோது அண்ணா சொன்னார்:- ‘அவர் ஆங்கில மரபைக் காப்பாற்ற நினைக்கிறார்; நான் தமிழ் மரபைக் காப்பாற்ற வேண்டும் என்று விரும்புகிறேன்.”

‘TAMIL NAD’ என்ற ஆச்சாரியாரின் கருத்தை மறுத்து ‘TAMIL NAD’  என்பதுதான் சரியென்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆச்சாரியாருக்குப் பதிலடி கொடுத்து விடுதலையில் எழுதினார். 1920களில் தொடங்கிய ‘தமிழ்நாடு’ பெயர்ப் போராட்டம் இன்றுவரை தொடர்கிறது. ஒன்றை மட்டும் நாம் தெளிவாகத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.

தந்தை பெரியாரின் வேர்வைத் துளிகளாலும் ரத்தத் தினாலும் வரையப் பட்ட ‘தமிழ்நாடு’ எனும் வரலாற்றுப் பொன்னேட்டை மாற்றுவதற்கும் மறைப்பதற்கும் பீகார் பார்ப்பனர்களோ தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களோ செய்யும் முயற்சிகள், ஒற்றைத் தமிழன் உள்ளவரை ஒருபோதும் வெறி அடையா! அயலார் எம் தாய் நிலத்திற்குப் பெயர் சூட்டுவதை உயிரைக் கொடுத்தேனும் தடுப்போம்!

தந்தை பெரியார் வாழ்க! தமிழ்நாடு வாழ்க!

- முற்றும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக