த.மு.யாழ்திலீபன்
தமிழ்நாடு சட்டமன்றதில் ‘’தமிழ்நாடு’’ என்று பெயர் சூட்டப்பட்ட அந்நாள் (18.7.1967) வரலாற்றில் போற்றத்தகுந்த பொன்னாளாகும். ‘’தமிழ்நாடு’’ – என்று முதலமைச்சர் அண்ணா முன்மொழிய, உறுப்பினர்கள் அனைவரும் ‘’வாழ்க’’ என்று மும்முறை வாழ்த்தொலியை எழுப்பினர். ‘’தமிழ்நாடு’’ என்று பெயர் சூட்டப்பட்ட ஜூலை 18அய் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடுவதுதான் வரலாற்று ரீதியாக பொருத்தமானதாக இருக்க முடியும்.
தற்போது ஜூலை 18ஆம் தேதியைத் தமிழ்நாடு நாளாக இனி கொண்டாட அரசாணை 2022இல் வெளியிட்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்பது குறிப்பிடத்தக்கது.
நவம்பர் 1 மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்ட நாள். இதற்காகப் போராடிய, எல்லை மீட்ட அத்துணை தியாகிகளையும், நினைவு கூருவோம் – வீரவணக்கம் செலுத்துவோம்.
இந்திய நாடு சுதந்திரம் பெற்ற பிறகு நாடு முழுவதும் எழுந்த போராட்டங்களைத் தொடர்ந்து 1956 நவம்பர் 1ஆம் தேதி மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. இதனால் ஒன்பது மாநிலங்களாக இருந்த இந்தியா, 14 மாநிலங்களாகவும் 6 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது. அதுவரையில், சென்னை மாகாணத்துக்குள் இருந்த தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசும் மக்கள் பெரும்பான்மையாக இருந்த பகுதிகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு அம்மொழிகள் பேசும் மக்கள் வசித்த பிற நிலப்பகுதிகளோடு இணைக்கப்பட்டு ஆந்திரப்பிரதேசம், கருநாடகம், கேரளம் என்ற மாநிலங்கள் உருவாயின. தமிழ்பேசும் மக்கள் பெரும்பான்மையாக இருந்த பகுதி மெட்ராஸ் மாகாணமாகவே நீடித்தது.
இந்த நிலையில், “மெட்ராஸ் ஸ்டேட்டிலிருந்து பிறமொழி பேசும் பகுதிகள் பிரிந்து சென்ற நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும்“ என 2019இல் அதிமுக அரசு அறிவித்தது.
பல்வேறு அரசியல் கட்சியினர், தமிழ் உணர்வாளர்கள், தமிழ் அறிஞர்கள் நவம்பர் 1ஆம் தேதி எல்லை பிரிந்ததையொட்டி எல்லைப் போராட்டத்தை நினைவுகூரும் நாளாகத்தான் அமையுமே தவிர, தமிழ்நாடு நாளாகக் கொண்டாடுவது பொருத்தமாக இருக்காது என்றும், மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை மாற்றி அண்ணாவால் 1967ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, தமிழ்நாடு என்று பெயரிடப்பட்ட அந்த நாள்தான் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்பட வேண்டும் என்றும், தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
ஆட்சி மாறிய பிறகு, தற்போது ஜூலை 18ஆம் தேதியைத் தமிழ்நாடு நாளாக இனி கொண்டாட அரசாணை 2022இல் வெளியிட்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
1956, நவம்பர் 1ஆம் தேதி முதல், மொழிவாரி மாநிலங்கள் செயல்படும் என்ற அறிவிப்பு நடைமுறைக்கு வந்தது. மற்ற மாநிலங்களுக்கு அவர்கள் விரும்பிய பெயரே சூட்டப்பட்ட நிலையில் தமிழ்நாட்டுக்கு மட்டும் ‘மதராஸ்’ என்ற பெயரே தொடரும் என அறிவித்தது ஒன்றிய அரசு. ராஜாஜியின் ஹிந்தித் திணிப்பை எதிர்த்து திராவிடர் கழகத்தின் தமிழர் பெரும் படை சென்னையை அடைந்த நாளில் 1938இல் திருவல்லிக்கேணி கடற்கரையில் தந்தை பெரியார் அவர்களால் எழுச்சிமிகு பொதுக்கூட்டத்தில் முழங்கப்பட்ட முதல் குரல்தான் ‘’தமிழ்நாடு தமிழருக்கே!’’ என்பதாகும்.
தமிழ்நாட்டிற்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டவேண்டும் என்று 1955 அக்டோபரில் தந்தை பெரியார் கோரிக்கை விடுத்தார். ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்பதை மாற்றி ‘தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி, விருதுநகரைச் சேர்ந்த சங்கரலிங்கனார் 1956, ஜூலை 27ஆம் தேதி பட்டினிப் போராட்டத்தைத் தொடங்கி, 76 நாள் போராட்டத்துக்குப் பிறகு உயிரிழந்தார். சங்கரலிங்கனாரின் மறைவு இந்தப் போராட்டத்துக்குப் புதிய உத்வேகத்தை அளித்தது.
தமிழ்நாடு பெயர் மாற்றம் பற்றி ‘விடுதலை’யில் தொடர்ந்து தந்தை பெரியார் அறிக்கைகள், தலையங்கங்கள் மூலம் வற்புறுத்தியே வந்தார். 1957இல் திமுக முதன்முறையாகச் சட்டமன்றத்துக்குள் நுழைந்தபோதே ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்பது ‘தமிழ்நாடு’ எனப் பெயர் மாற்றப்பட வேண்டும் என்ற தீர்மானத்தோடுதான் நுழைந்தது.
1957, மே 7ஆம் தேதி வாக்கெடுப்புக்கு வந்த திமுக-வின் தீர்மானத்துக்கு 42 பேர் ஆதரவாகவும், 127 பேர் எதிராகவும் வாக்களித்ததை அடுத்து அந்தத் தீர்மானம் தோல்வியடைந்தது. அதன் பிறகு 1961, ஜனவரியில் சோஷலிஸ்ட் கட்சியின் உறுப்பினர் பி.சின்னத்துரை ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்பதை ‘தமிழ்நாடு’ எனப் பெயர் மாற்ற வேண்டுமெனத் தீர்மானம் கொண்டு வந்தபோது, அப்போதைய முதலமைச்சர் காமராஜர் அந்த விவாதத்தைப் பிப்ரவரி வரை ஒத்தி வைத்தார். அதையடுத்து, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சட்டமன்றத்தைத் தொடர்ந்து மூன்று நாள்கள் புறக்கணித்தன. அதன் பிறகு நிர்வாகக் கடிதங்களில் மட்டும் ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்பதற்கு பதிலாக ‘தமிழ்நாடு’ எனக் குறிப்பிட காமராஜர் ஒப்புக்கொண்டார்.
1961இல் ஒன்றுபட்ட மேற்கு வங்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பூபேஷ் குப்தாவும், 1964இல் திமுக உறுப்பினர் இராம.அரங்கண்ணலும் ‘மெட்ராஸ் ஸ்டேட்’ விவகாரம் குறித்து மாநிலங்களவையில் கொண்டு வந்த தீர்மானங்கள் தோற்கடிக்கப்பட்டன.
அதன் பிறகு ‘’தி.மு.கழக ஆட்சி அண்ணா தலைமையில் அமைந்ததன் விளைவாகவே 18.7.1967இல் முதலமைச்சர் அண்ணாவே தனித் தீர்மானம் கொண்டு வந்து, அதை சட்டமாக்கினார் – ஒருமனதாக அச்சட்டம் நிறைவேறியது.
தமிழ்நாடு சட்டமன்றதில் ‘’தமிழ்நாடு’’ என்று பெயர் சூட்டப்பட்ட அந்நாள் (18.7.1967) வரலாற்றில் போற்றத்தகுந்த பொன்னாளாகும். “தமிழ்நாடு” – என்று முதலமைச்சர் அண்ணா முன்மொழிய, உறுப்பினர்கள் அனைவரும் ‘’வாழ்க’’ என்று மும்முறை வாழ்த்தொலியை எழுப்பினர். ‘’தமிழ்நாடு’’ என்று பெயர் சூட்டப்பட்ட ஜூலை 18அய் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடுவதுதான் வரலாற்று ரீதியாக பொருத்தமானதாக இருக்க முடியும்.
தமிழ்நாடு உருவான நாள் என்று, இந்திய ஒன்றியத்தில் இருந்து மதராஸ் மாகாணம் பிரிந்ததை கொண்டாடுவது என்பது பொருந்தாது. அது தெளிவாக தெரிந்தும் கூட எதற்காக மொழிவாரியாக மற்ற மாநிலங்கள் பிரிக்கபட்ட நாளை தமிழ்நாடு நாளாக கொண்டவேண்டும் என்கிறவர்களின் எண்ணம் இதுவாகத்தான் இருக்க முடியும். இங்கே தமிழ்நாடு அண்ணா அவர்களால் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஜூலை 18அய் கொண்டாடினால், அதற்கு முதலில் பெயர் வைக்கச் சொன்னது தந்தை பெரியார் என்றும், அந்த கோரிக்கைக்காக உயிர்நீத்தவர் சங்கரலிங்கனார் என்றும், அந்தக் கோரிக்கையை நிறைவேற்றி தமிழ்நாடு என்று பெயரை சூட்டிய பேரறிஞர் அண்ணாவின் உழைப்பு இளம் தலைமுறைக்கு புலப்பட்டுவிடும் என்பதற்காகவே, அடுத்த தலைமுறையிடம் இந்த வரலாற்றை தெரியப்படுத்தாமல், இருட்டடிப்பு செய்கிற வேலையை இன்றைய தமிழ் தேசியவாதிகளாலும், திட்டமிட்டு நவம்பர் 1ஆம் நாளை கொண்டாடப்படுவதென்பது நடக்கிறது.
இச்செயல் முற்றிலும் பெரியார், அண்ணா, திராவிடர் இயக்கத்தின் மீதான வெறுப்பே தவிர வேறு எதும் இல்லை.
தந்தை பெரியாரையும், அறிஞர் அண்ணாவையும் திராவிட இயக்கத்தவர் என்று தவிர்த்து விட்டாலும் கூட, சங்கரலிங்கனார் தியாகத்தை அவர்கள் எப்போதும் நினைவு கூர்ந்து கொண்டே இருப்பார்கள். ஏனென்றால் அவர் திராவிட இயக்கத்தவர் இல்லை என்ற ஒரே காரணத்திற்காக, ஒருவேளை சங்கரலிங்கனார் திராவிட இயக்கத்தவராக இருந்திருந்தால், அவரையும் அலட்சியப்படுத்தி அவரையும் கைவிட்டு இருப்பார்கள். நல்ல வாய்ப்பாக சங்கரலிங்கனார் காங்கிரஸ் கட்சிக்காரராக இருந்து விட்டார்.
பெரியாரோடும் அண்ணாவோடும் திராவிட இயக்கத்தில் இருந்திருந்தால் இன்றைக்கு சங்கரலிங்கனாரின் நிலைமை என்னவாகி இருக்கும்?
கேரளாவில், மாநிலங்கள் பிரிக்கபட்ட நவம்பர் 1 ஆம் தேதியை “கேரள பிறவி தினம்“ என்ற பெயரில் கொண்டாடுகின்றனர்.
கருநாடகத்தில், ‘ராஜ்யோத்ஸவம் நாள்’ எனக் கொண்டாடுகிறார்கள்.
திமுக இந்த நாளை ‘எல்லைப் போராட்ட தியாகிகள் நாள்’ என்றே கடைப்பிடித்து வருகிறது. தமிழ்நாடு போன்று மற்ற மாநிலங்களிலும் மெட்ராஸ் ஸ்டேட் என்பது இருந்து, அப்பெயரை மாற்ற தனிப்பெயர் சூட்டபட்டிருந்தால் அந்த நாளைத்தான் மாநில நாளாக கொண்டாடி இருப்பார்களே தவிர, அவர்கள் மாநிலத்தில் இருந்து பிற பகுதிகள் பிரிந்த நாளை, மாநிலத்தில் இருந்து பகுதிகள் பிரிந்த (அ) இழந்த நாளாகத்தான் ஏற்றுக்கொண்டிருக்க முடியும். ஆனால் நமது பகுதிகள் இழந்த நாளை “ தமிழ்நாடு நாள் “ என்று கொண்டாடினால், பிறகு போராடி பெயர் சூட்டிய நாளை என்னவென்று கொண்டாடுவது ? பெயர் சூட்டிய நாளை கொண்டாட மனம் வரதாதற்கு காரணம் அது திராவிட முன்னேற்ற கழகம் செய்தது, அண்ணா செய்தார் என்பது தான் – அரசியல் ரீதியான ஒரே பிரச்சினை.
தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய பல பகுதிகளை இழந்தாலும் நாமும் மொழிவாரியாக மாநிலம் பிரிக்கபட்ட நாளை வரவேற்கிறோம். கொண்டாடுகிறோம். நீண்ட வரலாறு கொண்ட தமிழ்நாட்டின் உண்மையை அறிஞர் அண்ணாவின் உழைப்பை மறைக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே கொண்டாடப்படுகிற நாளாக போலி தமிழ் தேசியவாதிகளுக்கும், பெரியாரை ஏற்கிறோம் ஆனால் திராவிடத்தை ஏற்க மாட்டோம் என்கிற, இயக்கங்களுக்கும்தான் நவம்பர் 1 தமிழ்நாடு நாள் உகந்த நாளாக உள்ளது.
1956 நவம்பர் 1 மெட்ராஸிலிருந்து பிற பகுதிகள் பிரிந்த போது தமிழ்தேசியர்களின் தந்தை என்று ம.பொ.சி.யை சொல்லிக்கொள்ளும் தமிழ்தேசிய கட்சிகளும், இயக்கங்களுக்கும் கூட ம.பொ.சி என்ன சொன்னார் என்பதை அறிதல் நன்று. ம.பொ.சி நவம்பர் 1அய் “தமிழரசு நாளாக” கொண்டாடுங்கள் என்று தானே சொன்னார். தமிழரசு நாள் என்றுதான் கொண்டாடினார்கள் அன்றைய தமிழ்தேசியவாதிகள். ஆனால் இன்று வம்படியாக தமிழ்நாடு நாள் நவம்பர் 1 தான் என்று கொண்டாடுவது ஏன் என்று புரிந்தால் சரி. மேலும் 1956 நவம்பர் 1இல் தமிழ்நாடு என்று பெயரும் சூட்டபடவில்லை, அதனால் தான் ம.பொ.சி அவர்களும் தமிழரசு நாள் என்றுதான் சொன்னாரே தவிர தமிழ்நாடு நாள் என்று சொல்லவில்லை. மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்டபோது தமிழ்நாடு என்ற பெயர் முன்பே இருந்திருந்து, பிரிந்திருந்தால் தமிழ்நாடு நாள் என்றுதானே நாமும் கொண்டாடி இருப்போம். மாநிலம் பிரிக்கும் போது தமிழ்நாட்டிற்கு மெட்ராஸ் ஸ்டேட் என்று தான் பெயர். தமிழ்நாடு பெயர் மாற்ற தீர்மானம் சட்டமன்றதில் தோற்கடிக்கப்பட்டு, மீண்டும் அண்ணா தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றிய பின்னர் தானே தமிழ்நாடு.
2019இல் அன்றைய அதிமுக அரசு திமுகவின் சாதனை என்பதால் வீம்புக்கு, பொருந்தாத நவம்பர் 1 தான் தமிழ்நாடு நாள் என்று அறிவித்தது. அதை திராவிட இயக்க எதிர்ப்பாளர்களும், திமுக எதிர்ப்பாளர்களும் பிடித்துக் கொண்டு தொங்குவது எந்த வகையில் நியாயம்.
‘மெட்ராஸ் ஸ்டேட்’டிலிருந்து பிரிந்து ஆந்திரா, கருநாடகா, கேரளா, ஒடிசா மாநிலங்கள் உருவான நாள் நவம்பர் 1. அன்று மெட்ராஸ் ஸ்டேட் தனது பகுதிகளை இழந்த நாள். இன்றைய வடிவில் அன்று மெட்ராஸ் ஸ்டேட் சுருக்கப்பட்டது. சுருக்கப்பட்டதற்கு அல்லது மெட்ராஸ் ஸ்டேட்டிடமிருந்து பிற மாநிலங்கள் பிரிந்து தனி மெட்ராஸான நாளை “தமிழ்நாடு நாள்” என்று கொண்டாடுவது பொருந்தாது. பல ஆண்டுகளாக இது கொண்டாடப்படவும் இல்லை. வேண்டுமானால் “மெட்ராஸ் ஸ்டேட் நாள்” என்று கொண்டாடிக் கொள்ளலாம்.
இதன் அரசியலை உணர்ந்தால் இந்நாளை நாம் கொண்டாடத்தக்கது என்று புரிந்துவிடும். இது தமிழ்நாட்டின் எல்லைப்பரப்பை அபகரித்துக்கொள்ளப்பட்ட சூழ்ச்சி நிறைவேறிய நாள் என்று புரியும்.
தமிழ்நாடு என்று பெயர் வைக்கப்பட்டதில் இருக்கும் அரசியல் சிறப்பு வாய்ந்தது, தியாகம் செறிந்தது, திராவிட அரசியலின் பெயர் சொல்வது, கொண்டாடத்தக்கது. திராவிட அரசியல் ஒவ்வாமையால் வரலாற்றை மாற்றத் துடிக்கும் கும்பல்கள்தான் இந்த வரலாற்று திரிபை கையில் எடுத்துள்ளனர்.
மெட்ராஸ் ஸ்டேட் பிரிக்கப்பட்டு தனி மெட்ராஸ் ஸ்டேட் உருவானது நவம்பர் 1ஆம் தேதி. சென்னை மாகாணத்துக்கு, `தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்டலாம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பெயர் சூட்டிய நாள் 1967, ஜூலை 18ஆம் தேதி. பிறகு `தமிழ்நாடு’ என்று 1969, ஜனவரி 14ஆம் தேதி குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று சட்டவடிவத்தையும் பெற்றது! எனவே தமிழ்நாடு நாள் என்ற பெயரில் நாம் கொண்டாட வேண்டிய நாள் ஜூலை 18 தான்!
தாய்க்குத் தலைமகன் பெயர் சூட்டிய திருநாள் அதுதான்!
திராவிட இயக்கம், தமிழ்நாட்டிற்குத் தமிழ்நாடு என்று அண்ணா அவர்கள் பெயர் சூட்டிப் பெருமையடைய வைத்த நாள் ஜூலை 18. முதன் முதலாக நம் உறுப்பினர்கள் சட்டமன்றதில் ‘தமிழ்நாடு வாழ்க’ என்று முழங்கிய நாள் ஜூலை 18. சங்கரலிங்கனாரின் கனவு மெய்ப்பட்ட நாள் ஜூலை 18. தந்தை பெரியாரின் தமிழ்நாடு போராட்டத்தை வென்றெடுத்த நாள் ஜூலை 18.
அதை விடுத்து மெட்ராஸில் இருந்து சில மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாளோ அல்லது ஒன்றிய அரசு தமிழ்நாடு என்ற பெயருக்கு ஒப்புதல் அளித்த நாளோ நமக்குப் பெருமை சேர்க்காது என்பதே உண்மை. நமது உறுப்பினர்கள் முன்மொழிந்து மகிழ்வடைந்த நாளே நம் பெருமைக்குரிய நாளாக கருத முடியும். ஒருபோதும் திராவிடர் இயக்கம், திராவிட இயக்கத்தைச் சார்ந்த தலைவர்கள், உழைத்தார்கள் அவர்களின் முன்முயற்சியால் இவை கிட்டியது என்பதை வரலாற்று ரீதியாக உண்மையில் கூட ஏற்றுக் கொள்ள மனம் இல்லாத கும்பல்கள் தான் இன்றைக்கு தமிழ்நாட்டு இளைஞர்களை, திசை மாற்றிக் கொண்டிருக்கின்றன.
பெரியாரையும் பெரியாருடைய செயல்பாடுகளையும், அண்ணா உள்ளிட்ட திராவிடர் இயக்கத் தலைவர்களையும் தொடர்ச்சியாக புறக்கணிக்கும் செயலை நேரடியாகவே செய்து வரும் திராவிட ஒவ்வாமை கொண்டவர்களின் அரசியல் இவை.
திராவிடம், திராவிட அரசியலை எதிர்ப்பது என்பது இன்றைய இளையோர்களின் நேர்மைத்தன்மை என்று நம்பவைத்து வரலாறை தெரியப்படுத்தாமல் வெறும் உணர்ச்சியூட்டும் கதைகளை கொண்டாடும் இடத்திற்கு தமிழ்தேசியம் வந்துள்ளது.
அண்ணா சட்டம் நிறைவேற்றிய நாள் தான் நமக்கு சிறப்பூட்டும்! தமிழ் உணர்வூட்டும்!! வாழ்க தமிழ்நாடு நாள்! வாழ்க திராவிட அண்ணா!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக