பக்கங்கள்

ஞாயிறு, 25 பிப்ரவரி, 2024

தமிழ் உரைநடை வளர்ச்சியில் கிறித்தவம் (முதல் தமிழ் அச்சு நூல்)

 

விடுதலை ஞாயிறு மலர்

தமிழ் மொழி உலகின் மிகப் பழைமையான மொழிகளுள் ஒன்று.உலகில் ‘செம்மொழி’ என்னும் சிறப்பினைப் பெற்ற தேர்ந்த மொழிகளுள் ஒன்றாக தமிழும் போற்றப்படுகிறது.
உலகின் செம்மொழிகள் என்ற நிலையில் கிரேக்கம், சமஸ்கிருதம், இலத்தீன், பாரசீகம், அரபு, எபிரேயம், சீனம், தமிழ் ஆகிய எட்டு மொழிகள் மட்டுமே இதுவரை உள்ளன.
ஒரு மொழியின் இலக்கியங்களின் வளமையை அடிப்படையாகக் கொண்டே செம்மொழி என்னும் சிறப்பினை ஒரு மொழி அடைவதாகக் கூறுகின்றனர்.
தமிழ் மொழியின் தோற்ற காலகட்டத்தை மிகச் சரியாக கணித்துக் கூற இயலாத போதும் சில குறிப்புகளினடிப்படையில் சுமார் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மொழியாக ஏற்கப்படுகிறது.

christian tamil பல்வேறு இலக்கியங்கள், இலக்கணங்கள், நிகண்டுகள், உரைகள், மருத்துவம், கணிதம், வானவியல், வரலாறுகள், பூகோளம் போன்ற கருத்துக்களையுடைய நூல்கள் மிகுந்த மொழி, தமிழ்.
கி.பி.16ஆம் நூற்றாண்டு வரை இவையனைத்தும் செய்யுள் நடையில் இலக்கண மரபுகளோடு மட்டுமே இருந்துவந்த நிலையில் மொழியறிவில் முழுத் தேர்ச்சிப் பெறாதோரால் எளிதாக அறிந்து கொள்ள இயலாத நிலையிலேயே செய்யுள் வடிவிலான படைப்புகள் குவிந்து கிடந்தன. அச்சகங்கள் வரும்முன்னமே அவற்றுள் பெரும்பாலானவை பனையோலைகளில் எழுதப்பட்டு ஏடுகளாக இருந்தன.
இவ்வாறு வெகு காலமாக இலக்கணத்தின் தளைகளுக்குள் கட்டுண்டு கிடந்த நம் தமிழ் மொழி பதினாறாம் நூற்றாண்டிலிருந்து மெல்ல உரைநடை என்னும் தேரினில் வலம்வர தொடங்கியது.
ஆம்… மக்கள் பேசும் மொழிநடைக்கும் செய்யுள் நடைக்கும் இடையே மிகுந்திருந்த வேறுபாடுகளை உரைநடை வடிவம் தகர்த்தது.
உரைநடை வடிவம் என்பது பேச்சு மொழி­யிலேயே எழுதுவதென்ற நிலையில் இருந்தது. இதனால் உரைநடை வடிவத்தை வெறும் எண்ணும் எழுத்தும் கற்ற பாமரர்களாலும் புரிந்து கொள்ள முடிந்தது.

ஆனால் ஒரு குறிப்பிட்ட மொழி பேசும் மக்களிடையேயும் எண்ணற்ற வட்டார வழக்குகள் மொழிச் சார்ந்து இருந்ததை கருத்தில் கொள்ள வேண்டியதிருந்ததால் எழுத்து நடைக்கென்றே உரைநடை வடிவத்தில் பொது நடையொன்று இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
இந்நிலையை தமிழ் மொழி அடைய ஆரம்பகால உரைநடை வளர்ச்சியில் பலதரப்பட்ட குழப்பங்கள் எழுந்தன.
இதற்கிடையே உரைநடை வடிவத்தை ஏற்க விரும்பாத செய்யுள்நடை விரும்பிகளால் எழுத்துலகில் எதிர்ப்புகளாக கண்டனங்களும் அதுசார்ந்த ஏளனப் படைப்புகளும்கூட எழுந்தன.இருப்பினும் அதிகபட்ச மக்களின் உரைநடைவடிவ விருப்பம் மற்றும் அதன் எளிமையால் குறுகியகாலத்தில் உரைநடை வடிவமே வெற்றி பெற்றது. இம்முறையை முதலில் தமிழில் அறிமுகம் செய்யத் துணிந்தவர்கள் அய்ரோப்பிய கிறித்தவ சமயப் பரப்புனர்கள் (மிஷனெரிகள்). அதற்கு முன்பே சில நூல்களுக்கான உரைகள் நமது ஆன்றோர்களால் எழுதப்பட்டிருப்பினும் அந்த உரைகளும் மீண்டும் மீண்டும் பலரால் அவ்வப்போது எளிமையாக்கப்படுமளவில் தான் இருந்து வந்திருக்கின்றன.
இந்நிலையில் சமயக் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடு இந்தியாவிற்கு வந்திருந்த இவர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர். அவர்களுக்கு அதற்குப் பெருந்தடையாக இருந்தது மொழி. பேச்சு மொழியை கற்கவே கடினமாக உணர்ந்த அவர்களால் செய்யுள் நடையைக் கற்பது சாத்தியமற்றதாக உணர்ந்தனர்.

அதேநேரம் அய்ரோப்பிய நாடுகளில் எழுத்து வடிவத்திற்கும் பேச்சுவடிவத்திற்கும் வேறுபாடற்ற உரைநடைவடிவமே நடைமுறையில் இருந்து வந்தது. உரைநடை வடிவில் தான் அவர்களது கல்விமுறையும் இருந்தது. இதனாலேயே தங்களது நாட்டினர் எளிதில் கற்கவும் உலகச் செய்திகளை எளிதில் அறிந்து அறிவைப் பெருக்கிக் கொள்ளவும் முடிந்ததையும் நன்கு அறிந்திருந்தனர்.
இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே கல்வி கற்று அவர்களது அறிவை மேம்படுத்திக் கொண்டு மற்றவர்களை அறியாமைகளுக்குள்ளேயே வைத்திருப்பதை கண்டு வியந்தனர். எனவே அந்நிலையைக் களைய, எழுத்துமொழியை அனைவருக்கும் பொதுவாக்கும் தீவிர முயற்சியில் இறங்கினர்.
இந்நிலையில் தான் இயேசுசபை பாதிரிமார்கள் சமயப்பணிகளுக்கென்று 16 ஆம் நூற்றாண்டில் (1550 – அம்பலக்காடு) அச்சு இயந்திரத்தை கொண்டு வந்தனர் . அங்கு 1578ஆம் ஆண்டு முதன்முதலாக ‘தம்பிரான் வணக்கம்’ என்னும் தமிழ் உரைநடை நூல் அச்சிடப்பட்டது. இதுவே இந்திய மொழிகளில் வெளிவந்த முதல் தமிழ் அச்சு நூல் (மா.சு . சம்பந்தன், அச்சும் பதிப்பும் – 53).
இதனைத் தொடர்ந்து 1579இல் ‘கிறிசித்தியாணி வணக்கம்’ என்ற நூலும் 1586இல் ‘அடியார் வரலாறு’ என்ற நூலும் வெளியாகின. இந்நூல்களை அண்ட்ரிக் அடிகளார் என்ற பாதிரியார் வெளியிட்டார்.

அதன்பிறகு ராபர்ட் டி நோபிளி, வீரமாமுனிவர் போன்றோர் உரைநடையில் பல நூல்களை எழுதினர். அவற்றுள் வீரமாமுனிவர் எழுதிய சதுரகராதி (தமிழ் – தமிழ்) தமிழில் வெளிவந்த முதல் தமிழ் அகராதியாகும். இது செய்யுள் நடையிலிருந்த சொற்களைப் பேச்சு வழக்கிலுள்ள சொல்லாகப் புரிந்து கொள்ள ஏதுவாக இருந்தது.
ஆனாலும் இந்நூல்கள் அனைத்து மக்களிடமும் சென்று சேர்ந்ததாகக் கூற முடியாது. இவை சமயப்பணியாளர்களுக்கான நூல்களாகவே இருந்தன.
அக்காலச் சூழலில் பெரும்பாலான பொதுமக்கள் கல்வியறிவும் வாசிக்கும் பழக்கமும் அற்றவர்களாக இருந்ததும் அதற்கு ஒரு காரணம்.

18ஆம் நூற்றாண்டில் சீர்திருத்தக் (Protestant) கிறித்தவ மிஷனெரிகளின் வரவால்தான் உரைநடை வடிவம் தமிழில் வளரத் தொடங்கியது. சீகன்பால்க் என்ற ஜெர்மன் நாட்டு மிஷனெரி (1706) தஞ்சைக்கு அருகிலுள்ள தரங்கம்பாடியில் அச்சுக் கூடம் அமைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கான புத்தகங்களை அச்சிட்டு வாசிப்பை அனைவரும் விரும்பச் செய்தார். அதன் பிறகே தமிழ் மெல்ல மெல்ல பனையோலைகளிலிருந்து வெளியேறி அச்சேறி அமர்ந்தது.
ஆனால், 19ஆம் நூற்றாண்டில் தான் தமிழ் உரைநடை வடிவம் மிக வேகமான வளர்ச்சியடைந்து. ஆண்டி முதல் அரசன் வரை தமிழ் எழுத்துக்களை விழிகளால் தீண்டி மனத்தால் முத்தமிட்டனர். கருத்துப் பரிமாற்றங்களும் தொலைதூரச் செய்திகளும் அறிவியல் கண்ணோட்டங்களும், சமய நெறிமுறைகளும் மக்களின் மனக்கதவுகளை உடைத்துக் கொண்டு அறி­விற்குள் புகுந்தன.!

இதற்கு முதன்மையான காரணம் அனைத்துத்தரப்பு மக்களாலும், கல்வியின் பயன்பாடு உணரப்பட்டு கல்வியைப் பெற விளைந்ததுதான். அதற்கு கிறித்தவ சமயப்பரப்புனர்கள் அதிக அளவில் உந்துதலாக இருந்திருக்கின்றனர். அவர்கள் கல்விக் கூடங்களை ஏற்படுத்தி ஜாதி மத பேதமின்றி அனைவருக்குள்ளும் கல்வியை புகுத்தினர். எனவே அதற்கான அச்சு நூல்கள் அதிகளவில் அச்சிடப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
மிஷனெரிமார்கள் சமயப் பணிகளோடு கல்விப்பணியில் தீவிரமாக இறங்கினர். அதுவும் ஏனோ தானோவென்று வெறுமனே எண்ணையும் எழுத்தையும் மட்டுமே கற்பிக்க விரும்பாமல்,தங்களது அய்ரோப்பிய முறை கல்வியை அப்படியே வழங்கிட முயன்றனர். இந்தியர்கள் முழுமையான கல்வியறிவைப் பெற்று அறிவில் சிறக்க வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டனர்.

எனவே மொழிப்பாடத்தோடு, கணிதம், மற்றும் பூகோள நூல், நாட்டு வரலாறு, உலக வரலாறு, உடலியல் நூல், விலங்குகள், தாவரங்கள் குறித்த நூல்கள் போன்ற அறிவியல் நூல்களையும் கற்பித்தனர். இதற்கான உரைநடை நூல்களையும் அவர்களே எழுதி அச்சிட்டனர். ஏற்கெனவே தமிழில் இருந்த உண்மைக்குப் புறம்பான கற்பனைக் கதைகளை உடையதாக இருந்தனவற்றை சுட்டிக்காட்டி மெய்யறிவைப் புகுத்த விளைந்தனர்.
உண்மையான அறிவியல் நூல்களைக் கற்றுத் தேர்ந்த அய்ரோப்பிய மிஷனெரிகளுக்கு இது வியப்பை ஏற்படுத்தினாலும் உண்மையை நம்மவர்களுக்குள் புகுத்த அவர்கள் தயங்கியதில்லை. இந்த அறியாமையகற்றும் பணிகளுக்கு உரைநடையின் துணை அவர்களுக்கு பேருதவியாக இருந்தது.
1818இல் மிஷனெரி ரேனியஸ் ஏற்படுத்திய ‘துண்டுப் பிரசுரம் மற்றும் சமய நூல்கள் சங்கம்’ (Madras Tract and Religious Book Society) என்ற நிறுவனத்தின் மூலம் துண்டுத் தாள்களில் சமயக் கருத்துக்கள் மட்டுமல்லாமல் விழிப்புணர்வு தகவல்களும் அச்சிடப்பட்டு பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கச் செய்ததால் அச்செழுத்துக்களை அறிமுகம் செய்ததோடு வாசிக்கும் ஆர்வத்தையும் கல்வியின் மீது நாட்டத்தையும் பரவலாக ஏற்படுத்தியது.

கல்வி அய்ரோப்பியர்களால் பொதுவுடமையாகி­யிருந்த அதே காலகட்டத்தில் இந்த உரைநடை வடிவிலான துண்டுப் பிரதிகள் மக்கள் மனதில் அதிகளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது எனலாம். இச்சங்கத்தின் மூலம் தான் 1831ஆம் ஆண்டு ‘தமிழ்த் தாள்’ (Tamil Magazine) என்னும் உரை நடைவடிவிலான முதல் மாத இதழ் சென்னையில் வெளியிடப்பட்டதாக மயிலை வேங்கடசாமி குறிப்பிட்டுள்ளார் (கிறிஸ்தவமும் தமிழும்-44).
ரேனியஸ் மிஷனெரி கல்வியறிவு இல்லாத மக்களுக்கு இந்தத் துண்டுப் பிரதிகளை வாசித்துக் காட்டவும் தான் பயிற்றுவித்த மாணவர்களைக் கிராமங்களுக்குள் அனுப்பி சிறந்த கருத்துக்களை உற்று கவனிக்கும் மனப்பான்மையை ஏற்படுத்தினார். இதன் மூலம் மக்கள் தாங்களாகவே வாசிக்க வேண்டும் என்ற உந்துதலையடைந்திருக்க வேண்டும் என்பதில் அய்யமில்லை.

தமிழ் உரைநடை வடிவை செம்மைப் படுத்தியதிலும் கிறித்தவ மிஷனெரிகளின் பங்கே முதன்மையானது. ரேனியஸ் தான் உரைநடை வடிவத் தமிழில் முதன் முதலாக வார்த்தைகளுக்கு இடையில் இடைவெளி விட்டு எழுதும் பழக்கத்தை கொண்டுவந்தவர். (சிட்னி சுதந்திரன், பரிசுத்த வேதாகமம் ஒரு வரலாற்று கண்ணோட்டம்- 39) . மேலும் இவரே முதன் முதலாகத் தமிழில் நிறுத்தற் குறியீடுகளைப் பயன்படுத்தியவர் (த.எஸ்தர் நான்சி பியூலா. தமிழில் விவிலிய மொழிப் பெயர்ப்புகள் ஓர் ஒப்பாய்வு-164)

இவருக்குப் பிறகு வந்த மிஷனெரிகளும் தமிழை பொதுமைப் படுத்தும் பணிகளை அதிக அளவில் மேற்கொண்டதனால் தான் இன்று உரைநடை வடிவில் உள்ளத்தில் தோன்றுவதையெல்லாம் முறைப்படுத்தி எழுத்துக்களாக்கி படைப்புக்களை தமிழ்க்கடலில் துளிகளாக்கிக் கொண்டிருக்கின்றனர்.
பிற மொழிகளின் உயர்ந்த படைப்புகளையும் எளிதில் உரைநடையாக்கம் செய்து கருத்துக்களை உடனுக்குடன் பெற முடிகிறது.
கிறித்தவ புனிதநூலான விவிலியம் இந்திய மொழிகளிலேயே தமிழில் தான் முதன்முதலில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கதாகும். இம்மொழிபெயர்ப்பு பணியினால் தமிழ் உரைநடை வடிவம் அதிக அளவில் மெருகேறியது. தமிழில் கலந்து எழுதப்பட்ட வடமொழிச் சொற்களை நீக்கி அதற்கு இணையான தமிழ் சொற்களை பயன்படுத்தியும் புதிய சமயச் சொற்களை உருவாக்கியும் சந்திப் பிழைகளின்றியும் எழுதக் கற்பித்து தமிழின் செழுமையை மேலும் மேலும் வளமையாக்கினர்.

அதிலும் 1838இல் இந்தியாவிற்கு சமயப் பணிக்கென்று வந்திறங்கிய ‘கால்டுவெல்’ என்னும் பேராளுமை தமிழ் மொழிக்குக் கிடைத்த மாபெரும் கொடை. இவர் தமிழ் என்பது திராவிடம் என்ற ஒரு மொழிக் குடும்பத்தின் தாய் என்றும், சம்ஸ்கிருதத்தின் வேரிலிருந்து அது முற்றிலும் வேறுபட்டதென்றும், சம்ஸ்கிருதத்தின் உறவின்றியே அது தனித்தியங்கும் திறனைப் பெற்றுள்ளதென்றும் ஒப்பீட்டாய்ந்து கூறியதை அறிவுலகம் அறிந்து மதித்தது. கால்டுவெல்லின் ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற நூல் 1856இல் இங்கிலாந்தில் வெளிடப்பட்ட பின்னர்தான் தமிழ் மொழி, செம்மொழி என்னும் மாபெரும் தகுதிக்கான தொடக்கப்பாதையைப் பெற்றது.
தமிழ் உரைநடை வடிவத்தைத் தொடங்கியும் வளர்த்தும் மங்காப் புகழடையச் செய்த கிறித்தவச் சமயப்பணியாளர்களின் மொழிப்பற்றை இன்றைய தலைமுறையினரும் தொடர்ந்து செழுமையாக்க வேண்டியது அவசியம்.
நன்றி : “உங்கள் நூலகம்” – டிசம்பர் 2023

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக