– சரவணா இராஜேந்திரன்
தமிழி எழுத்துப் பொறித்த பானை ஓடு ஒன்று தென் அரேபியாவில் உள்ள ஓமனில் கோர்ரோரி (Khor Rori) பகுதியில் சும்குரம் (Sumhuram) என்ற ஊரில் 2006ஆம் ஆண்டுக் கிடைத்தது. அதில் ‘ணந்தை கீரன்’ என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. கி.மு. முதல் நூற்றாண்டுக்கு முந்தையதாகக் கருதப்படும் இது, வரலாற்றில் புதிய பாதையைத் திறந்துள்ளது. தமிழகத்தின் பண்டைக் கடல் வணிகம் எகிப்து -செங்கடல் பகுதிகளுக்கிடையே மட்டுமின்றி அரேபியப் பகுதிகளிலும் நடந்து வந்ததை இது நிறுவுகிறது.
ஓமன் பகுதியில் அகழாய்வு செய்த இத்தாலியக் குழு இந்தப் பானை ஓட்டைக் கண்டெடுத்தது. அகழாய்வில் ஈடுபட்ட அலெக்சியா பாவன் (Alexia Pavan) என்னும் இத்தாலியத் தொல்லியலாளர், “கேரளப் பட்டண இந்தியக் கடல் வணிகமும், தொல்லியல் தொழில்நுட்பமும்” என்ற தலைப்பில் கொச்சியில் நடந்த பன்னாட்டுப் பீங்கான் தொல்பொருள் ஆய்வரங்கில் அதைக் காட்சிப்படுத்தியுள்ளார்.
தொல்லியல் சார்ந்த பன்னாட்டு ஆய்வரங்கில் அந்தப் பானை காட்சிக்கும் வைக்கப்பட்டிருந்தது. கேரள வரலாற்று ஆய்வு மன்ற இயக்குநர் பி.ஜே. செரியனும், இலண்டன் பிரிட்டிஷ் அருங்காட்சியக ரோபர்ட்டா டோம்பரும் இணைந்து ஆய்வரங்கை நடத்தியுள்ளனர்.
புதுவைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் கா. இராசன், இந்தியத் தொல்லியல் துறை மண்டல இயக்குநர் டி. தயாளன், தமிழ்ப் பல்கலைக்கழகத் தொல்லியல் துறைத்தலைவர் வி. செல்வக்குமார் ஆகியோர் மேற்குறிப்பிட்ட பானை ஓட்டைப் பற்றிக் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பானை ஓடு சும்குரம் நகரத்தின் மிக முக்கியமான குடியிருப்புப் பகுதியில் கிடைத்தது. இது சமையல் பாத்திரத்தின் கைப்பிடியாக இருக்கலாம் என்றும், இதன் காலம் கி.மு முதல் நூற்றாண்டுக்குச் சற்று முன்னதாக இருக்கலாம் என்றும் அவ்வாய்வரங்கில் கலந்துகொண்ட முனைவர் பாவன் குறிப்பிட்டுள்ளார்.
அவ்விடத்தில் பேரளவில் தமிழகப் பொருள்களான மணிகள், காசுகள், பானைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவிற்கும் தென் அரேபியக் கடற்கரைக்கும் இருந்த நெருங்கிய உறவை இவை வெளிப்படுத்துகின்றன என்று பாவன் கருதுகிறார்.
பேராசிரியர் கா. இராசன் “ணந்தை கீரன்” என்கிற ஆள் பெயர் இரண்டு கூறுகளைக் கொண்டது என்கிறார். அந்தை எனும் சொல் மூத்தோரைக் குறிக்கும் மரியாதை ஒட்டு. இதைக் குழந்தை சம்பன், அந்தைஅசுதன், கொற்றந்தை எனத் தமிழ்க் கல்வெட்டுகளில் காணலாம்.
கீரன் ஓர் ஆளின் பெயர்.
தமிழ்ச் சங்க காலப் புலவர்களில் 20 பேருக்கு மேல் கீரன் என்ற பெயரில் உள்ளனர். எனவே, உடைந்த பானை ஓட்டில் உள்ள பெயர் புகழ்பெற்ற ஒரு பெருவணிகரின் பெயராக இருக்க வேண்டும் என்று இராசன் கருதுகிறார்.
பொதுவாக இந்தியர்களின் வணிகத் தொடர்பு எகிப்தியப் பகுதிகளுடன் தான் இருந்தது. செங்கடல் துறைமுகங்களான குவெசிர் அல் காதிம் (Quasir al-Qadim), “பெரெனிகே” (Berenike) ஆகியவைதான் இதுவரை ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
காதிம் நகரில் நடந்த அகழாய்வில் கணன் (கண்ணன்), சாதன் (சாத்தன்), ஓரி என்ற பெயர்களைத் தமிழி எழுத்தில் பொறித்த பானை ஓடுகளும், பெரெனிகே நகரில் கொற்றபுமன் (கோற்பூமான்) என்று தமிழி எழுத்தில் பொறித்த பானை ஓடும் கிடைத்துள்ள செய்தி 1990க்கு முன்னரே வெளிவந்தது.
கோரோரி கண்டுபிடிப்பு தென்னிந்தியாவின் மேற்குக் கரையிலிருந்து நடந்த வணிகம், அரேபியா முதலிய நாடுகளுடனும் நிகழ்ந்துள்ளதை நிறுவுகிறது என்கிறார். மணப்பொருள்களான மிளகு, இலவங்கம் முதலியவற்றோடு குதிரை வணிகமும் இந்தப் பகுதியில் அப்போது நடந்திருக்கலாம் என்று இராசன் கருதுகிறார்.
பைசா பல்கலைக்கழகம் மேற்கொண்ட இந்த அகழாய்வுகள் அரேபியப் பகுதிகளுடன் தமிழகம் பண்டைய மணப்பொருள் வணிக உறவுகளோடு, பண்பாட்டு உறவுகளையும் கொண்டிருந்ததை உறுதிப்படுத்துகின்றன என்கிறார்.
தமிழி எழுத்துப் பற்றி நடந்துள்ள ஆய்வுகளை வைத்துப் பார்க்கும்போது கோர்ரோரி எழுத்துப் பொறிப்பு குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது என்கிறார் கேரள வரலாற்று ஆய்வு மன்ற இயக்குநர் முனைவர் செரியன். இந்தக் கல்வெட்டுச் சான்றானது வரலாற்றுக்கு முந்தைய கால (எழுத்து வரலாறு தொடங்கிய கால) ஊழியில் இடம்பிடித்துள்ளதை அவர் சுட்டுகிறார்.
எகிப்துக்கும், அரேபியாவுக்கும் நடுவில் உள்ள செங்கடலின் கரைகளில் உள்ள கோர்மோஸ், பெரெனிகே மற்றும் இலங்கையில் சில இடங்களில் மட்டுமே இந்தியாவுக்கு வெளியே தமிழி பொறிப்புகள் கிடைத்துள்ளன.
இசுலாமுக்கு முந்தைய காலம்…
இந்த வகையில் இசுலாமுக்கு (கிபி 600க்கு) முந்தைய காலத் துறைமுக நகரமாக இருந்த கோர்ரோரி சிறப்பிடம் பெறுகிறது. இது தென் அரேபியாவுக்கும், தமிழகத்திற்கும் இடையேயுள்ள வணிகத் தொடர்பை நிறுவுகிறது என்கிறார் செரியன்.
சும்குரம் துறைமுகம் கி.மு 3-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 4-ஆம் நூற்றாண்டு வரை செயல்பட்டது. தமிழகத்திற்கும், நன்னிலக் கரைப்பகுதி நாடுகளுக்கும் இடையில் நடந்த நெடுந்தூரக் கடல் வணிகத்தில், கிமு முதலாம் நூற்றாண்டு முதல் கி.பி 4ஆம் நூற்றாண்டுகளில் செங்கடல் கரைப் பகுதிகள் மட்டுமின்றித் தென் அரேபியக் கடலோரப் பகுதியும் மெசபதாமியா (சுமேரியா, எலாம்) பகுதியும், அந்தந்தப் பகுதிகளின் பின்புல நாடுகளும் பங்கேற்றன என்பதன் முக்கியமான ஆதாரம் கோர்ரோரி கண்டுபிடிப்பு ஆகும் என்கிறார் செரியன்.
அண்மையில் செரியன் ஓமன் நாட்டில் சும்குரம் (கோர்ரோரி) நகரிலும், அல் பலீத் (Al Baleed) என்னும் இடத்திலும் கள ஆய்வு செய்துள்ளார். இதுவரை பல காரணங்களால் தென் அரேபியப் பகுதியின் நிலவியல்_ பண்பாட்டியல் முக்கியத்துவம் பற்றியும், அப்பகுதிக்கும் தென்னிந்தியாவுக்கும் இடையில் உள்ள உறவுகள் பற்றி ஆய்வு செய்யப்படாதது வருந்துதற்குரியதாகும்.
அப்பழங்கால வணிகம் பற்றிய விரிவான சான்றுகள் தென்னிந்திய இலக்கியங்களில் இல்லாத நிலையில் அகழாய்வுச் சான்றுகளும் ஓரளவிற்கு மாந்தவியல் சான்றுகளும் (எ.கா: தொன்மங்கள்) உதவுகின்றன.
சுட்டபின் பொறித்த எழுத்து…
கோர்ரோரி பானை சுடப்பட்ட பின்னர் தமிழி எழுத்து அதில் பொறிக்கப்பட்டுள்ளது. எனவே அகழாய்வுச் சின்னம் என்ற நோக்கிலும் பொறித்துள்ள செய்தியின் அடிப்படையிலும் இது முக்கியமானதாகும்.
எனவே பிற பகுதிகளில், குறிப்பாகத் தென்னிந்தியாவில் இதையொத்த பிற சான்றுகளைத் தொல்லியல் ஆய்வுகளில் கண்டுபிடிப்பதை நாம் அறைகூவலாக மேற்கொள்ள வேண்டும் என்கிறார் முனைவர் செரியன்.
கேரள வரலாற்று ஆய்வு மன்றம் பிற அமைப்புகளோடு சேர்ந்து எர்ணாகுளம் அருகே பட்டணம் என்னும் இடத்தில் அகழாய்வு செய்து வந்தது. தமிழ்ச் சங்க காலத்தில் வளமிக்க துறைமுகமாக இருந்த முசிறி தான் இந்தப் பட்டணம்.
இந்த அகழாய்வில்தான் இந்தியாவில் வேறெங்கும் இதுவரை கிடைத்திராத அளவுக்குப் பெரும் எண்ணிக்கையில் 3384 மதுச்சாடித் (Torpido Jar) துண்டுகளும், 1720 நீலநிறச் (Turquiose) சில்லுகளும் கிடைத்துள்ளன. தமிழகத்துக்கும் தென் அரேபியப் பகுதிகளுக்கும் இடையில் நடந்த பெரும் வணிக நடவடிக்கைகளை இது சுட்டுகிறது என்கிறார் செரியன்.
தென் அரேபியா, – கோர்ரோரி, – அல்பலீத் பகுதிகள் உள்ளிட்டவை “நறுமண நாடு”கள் என்று அழைக்கப்பட்டன. பட்டணத்தில் அகழ்ந்த பெரும்பாலான பள்ளங்களில் அகில் (Frankincense) துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளமை தென் அரேபியாவுக்கும், பட்டணம் பகுதிக்கும் இருந்த நெருங்கிய உறவை நிறுவுகிறது என்று முடிக்கிறார் செரியன். ♦
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக